Saturday, April 30, 2005

மரங்களும் விழுதுகளும்

பத்மா, துளசி மற்றும் தாரா இவர்கள் பதிவுகளில் வயதானவர்கள் - முதியோர் இல்லத்தின் அவசியம் என்ற பிரச்சனை விவாதிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான். அவர்கள் சொல்வது எல்லாமே ஓரளவு யதார்த்தம். இருந்தாலும் மயிலாடுதுறை சிவா பாட்டிக்கு எழுதிய பதிவைப் படித்தீர்களா? மூன்றாவது தலைமுறைக்கு இருக்கும் இந்தப் பிரியமும் பிணைப்பும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தாத்தா / பாட்டி - அதுவும் மூன்று வாரங்கள் - பிக்னிக், கல்யாணம், கோவில் இதெல்லாம் போய் பாக்கி மிஞ்சும் ஓரிரண்டு நாள் பழக்கம் மட்டுமே - என்று சந்திக்கும்போது இருக்குமா?

பெற்றோர்கள் சேர்ந்து வாழ வேண்டுமா இல்லை சுதந்திரமாக அவர்கள் / நாம் இருக்க வேண்டுமா என்பதற்கு என்னைப் பொறுத்தவரை இன்னும் சமாதானமாக பதில் கிடைக்கவில்லை. எல்லாவிதமான விவாதங்களிலும் ஓரளவு உண்மை இருக்கதான் செய்கிறது.

என் கேள்வி இதுதான் :

நன்றாக இருக்கும்போது சுதந்திரமாக இருந்துவிட்டு பின்னர் வயோதிகத்தினால் உடம்பு முடியாமல் மகன் அல்லது மகள் வீட்டில் வந்து உட்காரும்போது அவர்களிடம் பேரன் பேத்திகளுக்கு / மருமகன் அல்லது மருமகளுக்கு / மூன்றாம் தலைமுறையினருக்கு, திடீரென்று பிணைப்பு / கரிசனம் / ஒட்டுதல் எல்லாம் இயல்பாக வருமா? கடமை என்று பொறுத்துப் போவதை நான் இங்கே சொல்லவில்லை.

இயல்பாக பாசம் என்று ஒன்று பொங்குமே? அதைப் பற்றி சொல்கிறேன். தினம், தினம் பள்ளியிலிருந்து ஓடி வந்து "பாட்டி இன்னிக்கு ஸ்கூல்லே என்ன ஆச்சு தெரியுமா" என்பதில் ஆரம்பித்து குழந்தைகளோடு சேர்ந்து வளரும் பாட்டி தாத்தாக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பல வருடங்கள் தனியாக சுதந்திரமாக இருந்துவிட்டு முடியாமையால். இயலாமையால், ஓரிடத்தில் அண்டி வாழும்போது அங்கே இயல்பான ஒட்டுதலும் புரிந்துணர்வும் இருக்குமா? வந்தவர்களுக்கும் எங்கேயோ வந்தாற்போல் நிலத்தில் விழுந்த மீனாக தவிப்பு. இருப்பவர்களுக்கும் தங்கள் வாழ்க்கை முறையில் யாரோ நுழைந்தாற்போல் ஒரு சங்கடம். சேர்ந்தே இருந்திருந்தால் இப்படி இருக்காதோ? மன வித்தியாசங்கள் இருந்தாலும் வெளிப்படையாக பேசி தெளிவு படுத்திக் கொண்டு திட்டினால் திட்டி, சிரித்தால் சேர்ந்து சிரித்து.... நல்லது கெட்டது பகிர்ந்து, இணைந்து வாழ மனம் பண்பட்டுப் போகுமோ?

சேர்ந்து இருந்தாலே மனக்கசப்பு வந்துவிடும் என்று பயப்படுகிறோம். உண்மையில்லாமல் இல்லை. ஆனால் நான், என்னுடையது, நான்தான் அல்லது என்னுடையதுதான் சிறந்தது - one upmanship போன்றவற்றை தவிர்த்து சேர்ந்து வாழ பழகிக் கொண்டால் குடும்பம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படி சேர்ந்து வாழும் என் உறவினர் ஒருவர் சொல்லுவார்: மருமகள் அவள் வழி அவளுக்கு. என் வழி எனக்கு. முடிந்தவரை நாங்கள் (பெற்றோர்கள்) அவர்கள் வாழ்க்கை முறையில் அனாவசியமாக தலையிடுவதில்லை. அவர்களும் எங்கள் சௌகரிய / அசௌகரியங்களை விமரிசிப்பதில்லை. இணைகோடுகளாக செல்லும் தண்டவாளம் மாதிரி அவரவர் பாதையில் அவரவருக்கு Space கொடுத்துக் கொண்டு செல்கிறோம் என்பார். இப்போது பேரன்கள் பேத்திகள் என்று துபாய், அமெரிக்கா, நியூசிலாந்து என்று அவரவர் பிரியமாக அழைக்க இவர்கள் அவ்வப்போது பயணம் சென்று கொண்டிருக்கின்றனர்.

இவர்களைப் பார்க்கும்போது மனசில் நிறைய நம்பிக்கை வருகிறது. வயதான காலத்தில் நிச்சயம் விழுதுகளைச் சார்ந்து இருக்கவே விழைவார்கள். பணத்தால் / உடலால் அல்ல - மனசில் விழும் சொல்லத்தெரியாத ஒரு பயத்தினால்..... நம்முடையது என்று இருக்கும் பந்தத்தின் அருகில் இருக்கவே விரும்புவார்கள். தைரியமாக, அமைதியாக இருக்கும் விதிவிலக்கான பெரியவர்கள் இருக்கலாம். ஆனாலும் பெரும்பாலோர் தன் விழுதுகளுடன் இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஒரே ஊரில் இருக்கும்போது அதிகம் பிர்ச்சனையில்லை. பெரியவர்கள் இருக்கும் இடத்துக்கு பக்கத்திலேயே பிள்ளைகள் /பெண்களும் ஜாகை அமைத்துக் கொண்டால் சுதந்திரத்திற்கு சுதந்திரம் ஆயிற்று. தினம் சந்திக்க முடிவதால் ஒட்டுதலுக்கு ஒட்டுதலும் ஆயிற்று. பேரன் பேத்திகள் பாட்டி / தாத்தா வீட்டுக்கும் தங்கள் வீட்டுக்குமாக பாலம் அமைத்துக் கொண்டிருப்பார்கள்.

சிங்கப்பூரில் இப்படி பெற்றோர் வீட்டுக்கு அருகில் வீடு அமைத்துக் கொள்ளும் தம்பதியினருக்கு வீடு வாங்குவதில் சலுகையும் உண்டு. என்னைக் கேட்டால் இப்படி அமைந்தால் இது உன்னதம். ஆனால் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு பிள்ளைகள் செல்லும்போது பல பெற்றோருக்கு கூட இருப்பது முடியாத நிலை. அவ்வளவு ஏன்? இந்தியாவிலேயே டில்லி / கல்கத்தா என்று பிள்ளைகள் சென்று விடும்போது சென்னைப் பெற்றோர் சென்னையிலேயே இருக்கதான் பிரியப்படுகிறார்கள். "என் பூஜை, கோயில், நண்பர்கள் இதெல்லாம் விட்டுவிட்டு அங்கே தூர தேசத்தில் என்னால் எப்படி இருக்க முடியும்? " என்பது கேட்டுக் கேட்டு, பழகிப்போன விளக்கம். அமெரிக்காவாகட்டும், டில்லி கல்கத்தாவாகட்டும், வெளியூர் சென்றுவிட்ட பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் என்பவர்கள் வருடம் ஒரு முறை சந்திக்கும் - பிக்னிக், கல்யாணம், கோவில்கள், நண்பர்கள் என்று போன நேரம் போக பாக்கி நேரத்தில் சந்திக்கும் உறவுகளாகதான் ஆகிவிடும்.

வெளியூர்களுக்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டு வாழ பெரியவர்கள் கற்றுக் கொள்ளாத பட்சத்தில், பிள்ளை / மகள் ஊருக்கு செய்யும் ஆறு மாத விஜயங்களும் விரைவில் அலுத்துவிடும். " ஊரில் என் குடிசையே எனக்கு வசதி" என்று கிளம்பி விடுவார்கள். எல்லாம் உடம்பில் தென்பு இருக்கும் வரையில். பிறகு உடல் உபாதைகளுக்கு பணம் கொடுத்து உதவிக்கு ஏற்பாடு செய்து கொண்டாலும், மனம் விழுதுகளின் அருகாமைக்கு ஏங்க ஆரம்பித்துவிடும்.

இந்த நிலையில்தான் பல வயதானவர்கள் முதியோர் இல்லங்களுக்கு போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. "இல்லம்" Home என்றாலே மனதில் ஏதோ நெருடுகிறது இல்லையா? இதைத் தவிர்க்க இன்று பல கட்டிட அமைப்பாளர்கள் முதியோர்களுக்கான எல்லா வசதிகளும் நிறைந்த "அபார்ட்மெண்ட்கள்" என்று விளம்பரப்படுத்தி விற்க ஆரம்பித்துள்ளார்கள். டாக்டர், ஆஸ்பத்திரி, என்று பல வசதிகளும் எளிதாக கிடைக்கும் வகையில் இருக்கும் இந்த அபார்ட்மெண்டுகள் இன்று பிரபலமாகி வருகின்றன.

டில்லியில் இப்படிதான் ஹிமான்ஷ¤ ரத் என்பவர் 8 வருடங்கள் முன்பு " AgeWell" என்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். தங்களிடம் பண வசதி நிறைய இருந்தும் இப்படி பிள்ளைகள் வெளியூர்களில் இருக்கும் நிலையில் தனிமையில் சிரமப்படும் முதியவர்களுக்காக என்றே ஆரம்பித்தார். " Helpage போன்ற அமைப்புகளில் இந்த மாதிரி வசதி உள்ள முதியோர்கள் இருக்க விருப்பபட மாட்டார்கள். முதியோர் இல்லம் என்ற சொல்லே நம் சமூகத்தில் ஏதோ, ஏழ்மை /ஒதுக்கப்படவர்கள் என்று ஒரு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வெளியூர்களுக்கு சென்று வாழப் பிரியப்படாமலும், அதே சம்யம் வெளியூர்களில் இருக்கும் தங்கள் பிள்ளைகளை தங்களுக்கு அருகே வந்துவிடும்படி வற்புறுத்தாமலும் அமைதியாக காலத்தைக் கழிக்க நினைக்கும் இவர்களுக்கு பல சம்யம் துணையும் தேவைப்படுகிறது. இந்த மாதிரி சமயங்களில் துணைக்குப் போக என்றே நாங்கள் எங்கள் மெம்பர்களுக்கு பழக்குகிறோம். -சினிமா, பாட்டு கச்சேரி, டாக்டர் என்று இபப்டி வயதானவர்களுடன் துணைக்கு போக நாங்கள் பீஸ் (Fees) வசூலிக்கிறோம் - தேவையின் நேரத்தைப் பொறுத்து. பணம் கொடுத்து இபப்டி பல சேவைகளைப் பெற்றூகொள்ள இன்றைய வசதியான முதியோர்கள் தயங்குவதில்லை." என்று என் அன்றைய பேட்டியில் கூறியிருந்தார். இன்று அவர் அமைப்பு எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் அவரைப் பற்றி இப்போது தேடியபோது இந்தத் தளம் கிடைத்தது. குடைந்து பாருங்கள்.

நானும் என் நண்பர்கள் சிலரும் கூட இப்படி ஒரு யோசனையை பலமாக சிந்திப்பதுண்டு. Old Age Home என்றால்தான் ஏதோ போல் இருக்கிறது. ஓர் பல அடுக்கு கட்டிடத்தில் பல முதியோர்கள் தங்கள் வீட்டிலேயே இருக்கலாம். அங்கே இப்படி AgeWell போன்ற பணம் அளித்து பெறப்படும் சேவைகள் - வெளியே செல்ல துணை, பேச்சுதுணை, கச்சேரிக்கு துணை, டிரைவர், வாகனம், Indoor விளையாட்டு கூடங்கள், இணையான நண்பர்கள், தினம் வந்து போகும் மருத்துவர்கள், அருகிலேயே ஆஸ்பத்திரி, 24 மணி நேரமும் வளாகத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ், காலாற நடக்க தோட்டம், ஜிம், தினம் வெளியூரில் இருக்கும் பிள்ளைகள் குடும்பத்துடன் அரட்டை அடிக்க வசதியாக இணைய வசதிகள், இப்படி எங்கள் கனவு கட்டிடம் இருக்கிறது. இங்கே வயதானவர்கள் மட்டும் என்றில்லை. மற்ற குடும்பங்களும் இருக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், ஆபீசுக்கு ஓடும் இளைஞர்கள் என்ற சாதாரண குடும்ப சூழலும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதோ முதியோர்கள் Reservation வனம் மாதிரி தனிமையுணர்வு வந்து விடும்.

இப்படி யோசனை செய்யும்போதே திடீரென்று ஒரு யதார்த்தம் மனசில் வந்து போயிற்று. இன்று சென்னையே இப்படி ஒரு பெரிய முதியோர்கள் அபார்ட்மெண்ட் போல் ஆகிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது. நடுத்தர குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் குழந்தைகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில் பல முதியோர்கள் தனியாகதான் இருக்கிறார்கள். ஆனால், அக்கம் பக்கம் இருப்பவர்கள், தூரத்து சொந்தம் எல்லாம் அவசரத்துக்கு ஓடி வந்து கைகொடுக்கும் மனம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். சென்னையின் மகத்துவம் இது என்றும் தோன்றிற்று.

இருந்தாலும் AgeWell போன்ற அமைப்பும் என் கனவு கட்டிடமும் இன்று இங்கே ரொம்ப அவசியம்.

Wednesday, April 20, 2005

ஒரு நிகழ்வு, இரு வேறு காலக் கட்டங்கள்.

".......... நடந்து முடிந்த பாகிஸ்தான், இந்திய தலைவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடியவில்லை. இரு தரப்பிலும் அதிருப்தி. சின்ன சின்ன சங்கேதங்கள், வார்த்தைப் பிரயோகம் போன்றவை முரண்பட்ட நிலையைப் பிரதிபலித்தன. முஷாரப் இந்த முறை சுத்தமாக வாங்கிப் போக மட்டுமே வந்துள்ளார்; கொடுக்கத் தயாராக இல்லை......"

முஷார·பின் இந்த வார விஜயம் பற்றி பரவலாக ஒட்டு மொத்த ஊடகங்களும் நல்ல விதமாக பேசும்போது நான் எப்படி இப்படி எதிர்மறையாக கூறுகிறேன் என்று வியக்காதீர்கள். 2001 ல் ஆக்ரா மாநாட்டுக்காக அவர் வந்திருந்தபோது நடந்த செய்திகளைப் பற்றி சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு எழுதியக் கட்டுரையில் இருந்து எடுத்த துண்டு அது.

" டில்லியிலிருந்து எண்ணக்குறிப்புகள்" என்று நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த அந்த வாரப் பத்தியில், ஆக்ரா மாநாடு தோல்வியடைந்ததற்கு இரு தரப்பிலும் சரியான அணுகு முறை இல்லாததும் ஒரு காரணம் என்று எழுதியிருந்தேன். இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் ஒரு லயம் இழைவதும், மறைவதும் தனி மனிதர்களுக்கிடையே இருப்பதுபோல் பல விதங்களில் அணுகுமுறையைப் பொறுத்து இருக்கிறது ; சிறு சிறு செயல்கள், சின்ன சின்ன அசைவுகள், சொற்கள், இவை அனுப்பும் சங்கேதங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் இந்த முறை, இந்த இரு தரப்பிலும் சங்கேதங்கள் - body language, மற்றும் நல்லுறவுக்கான மனமார்ந்த விழைவு என்று பலவிதங்களிலும் சரியான அணுகு முறை இருந்தது. ஊடகங்களைக் கவருவதில் முஷார·ப் என்றுமே மன்னர். இந்த முறையும் அவர் ஏமாற்றவில்லை. "இந்த முறை நான் வித்தியாசமான மனதுடன் வந்துள்ளேன்" ( I have come with a new heart) என்று சத்தியம் செய்யாத குறையாக கூறியது முதல், கமல் நாத் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியவுடன் தன் காமராவை உடனே எடுத்துக் கொடுத்தது வரை நமது ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளார்.

இந்த முறை பாகிஸ்தான் அதிபரின் வருகையைப் பற்றி வந்த செய்தியெல்லாவற்றையும் படிக்கும்போதும் பார்க்கும்போதும் 2001, ஆக்ரா மாநாட்டின் அப்பட்டமான தோல்வி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது. அன்றைய முஷார·பின் அணுகுமுறையில் ஒரு hostile பார்வை இருந்தது. பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்பே காஷ்மீர்தான் முக்கியப் பிரச்சனை; அதில் தீர்வு தெரிந்தால்தான் மற்ற எந்த உறவுக்கும் வழிகோல முடியும் என்ற ரீதியில் பேசினார். ஒரு உடன்பாடு கையெழுத்து இடும் சம்யத்தில் இரு தரப்பிலும் வார்த்தை பிரயோகம் பற்றி பலத்த வேறுபாடு இருந்தது.

இந்த முறை, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் மற்ற முக்கிய தலைவர்களையும் - சோனியா, வாஜ்பாய், அத்வானி - சந்தித்து சென்றிருக்கிறார். காஷ்மீர் பிரச்சனை இப்போதைக்கு அப்படியெல்லாம் தீர்ந்துவிடாது; நாளை யாருடன் கைகுலுக்க வேண்டியிருக்குமோ, எதற்கும் இப்போதே ஒரு தனிமனிதராக நட்புறவு ( Personal Rapport) காண்பித்து நல்லுறவு பாதை போட்டு வைத்துக்கொள்ளலாமே என்ற ஒரு புரிந்துணர்வு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் முஷார·பின் அணுகுமுறையில் இது ஒரு நல்ல மாற்றம். காஷ்மீரையும் பேசிக்கொண்டே பக்கவாட்டில் மற்ற உறவுகள் மேம்படவும் வழி செய்ய முடியும் என்ற நம் நிலைப்பாடோடு ஒத்துக்கொள்கிறாரே! " காஷ்மீர் பிரச்சனை தலைவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்; காஷ்மீரைப் பொறுத்தவரையில் தன் அணுகுமுறை தற்போது ஒரே முனையாக ( "unifocal" ) இல்லையென்று அவர் கூறியுள்ளதும் முக்கியமான மனமாற்றம் என்றே தோன்றுகிறது. முஷாரா·ப் யதார்த்தத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டரா? அல்லது அவருடைய Public Relations உத்திகளில் இதுவும் ஒன்றா? என்னுடைய Die-hard positive மனசு முதலில் சொன்னதையே தேர்வு செய்கிறது.

Wednesday, April 13, 2005

சார்.... தபால்...

சில நாள் முன்பு பாலாஜி -பாரி தபால்காரர் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அந்தப் பதிவு ஏற்படுத்திய நினைவோட்டம் இது.

கொரியர் சேவைகள், கணினி, செல்போன் என்று மாறிவரும் தொழில் நுட்ப யுகத்தில் தபால் துறை எப்படி சமாளிக்கிறது என்று நான் சில சமயம் யோசிப்பதுண்டு - என் சகோதரியிடமிருந்து சில மாதங்கள் முன்பு ஒரு கடிதம் வரும் வரையில்! தொலைபேசியிலேயே எல்லா விஷய்ங்களும் பேசிவிடுவதால் கடிதம் என்ற பழக்கமே எங்களிடையே விட்டுப் போயிருந்தது. ஆனால் ஒரு முறை கணினி உபயோகிக்க முடியாமல், ஆனாலும் போனில் பேசிய சமாசாரங்கள் தவிர எழுத வேண்டிய விஷயங்கள் இருந்ததால் அவள் ஒரு தபால் துறை கவரில் - பழுப்பு நிறத்தில் ஓரத்தில் ஸ்டாம்பு பதிந்து இருக்குமே, ஞாபகம் இருக்கா? - நாலு பக்கம் எழுதி அனுப்பினாள். அந்தக் கவரைப் பார்த்தபோதே எனக்கு வினோதமாக இருந்தது. எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு கவரைப் பார்த்து ! சில சமயம் வயதான வீட்டுப் பெரியவர்களிடமிரூந்து இப்போதும் நாலு வரி எழுதி கார்டு வரும். தபால் துறை வாழ்க என்று சொல்ல வைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள். சில வயதானவர்களுடன் கடிதம்தான் சரியான தொடர்பு கொள்ள சௌகரியமான சாதனம். தொலைபேசியில் பேச அவர்களுக்கு அவ்வளவு வசதியாக ( Comfortable) இருப்பதில்லை. தொலைபேசி என்பது ஏதோ தந்திபோல் அவசரத்திற்குதான் என்ற எண்ணம் பலருக்கு இன்னும் இருக்கிறது. ( டெலிபோன் பில்லைப் பார்த்தால் இவர்கள் எண்ணமே தேவலாம் !)

வெளியூர்களிலிருந்தபோது எழுபதுகளில் ஆப்பிரிகாவில் நாங்கள் இருந்த சர்க்கரை ஆலை குடியிருப்பில் வெளி நாட்டுக்குப் பேச வேண்டுமென்றால் தொழிற்சாலையில் அலுவலகத்துக்குள் போய்தான் டிரங்க் கால் போட வேண்டும். சென்னை நம்பரைக் கொடுத்து தொடர்புக்கு " விண்ணப்பித்துவிட்டு" காத்திருப்போம். சில சமயம் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கூட ஆகும் - call materialise ஆவதற்கு. சில சமயம் கிடைக்காமலும் ஏமாற்றத்தோடு திரும்புவோம். அப்படியே கால் கிடைத்தாலும், சத்தம் தெளிவாக இருக்காது - ஹலோ / ஹலோ என்று கூவுவதிலேயே பாதி நேரம் ஓடிவிடும். அப்போதெல்லாம் - ஏதோ குரல் கேட்கதான் தோலைபேசியே தவிர, மற்றபடி விஷயங்கள் கடிதங்கள் மூலம்தான் பரிமாறிகொள்ளப்படும். எனக்கு கடிதம் எழுத என்றே, தேசீய பறவை படம் போட்ட வெளிர் நீல வெளி நாட்டு கவர்களை அப்பா சென்னையில் நிறைய வாங்கி தயாராக வைத்திருப்பார். குறைந்தது 10 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு பக்கமிருந்தும் கடிதங்கள் போய்க் கொண்டிருக்க வேண்டும் - அதுவும் உங்கள் "......" தேதியிட்ட கடிதம் கிடைத்தது என்ற வரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதே போல் நாங்கள் எழுதும் கடிதங்களிலும் கட்டாயம் தேதி இருக்க வேண்டும். ஒரு முறை தேதி போடாமல் கடிதம் எழுதிவிட்டு அப்பாவிடமிருந்து பதில் கடிதத்தில் - உன் தேதி போடாத கடிதம் கிடைத்தது என்று பதில் வரும். கடிதம் வந்தவுடன் முதலில் எழுதிய தேதியைப் பார்ப்பார். தாமதமாக வந்ததோ, தபால்துறை அன்றைக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளும். இங்க பார், அருணா "..........." தேதியில் எழுதின கடிதம் இப்போதான் சாவகாசமாக இன்று வந்திருக்கு என்று அம்மாவிடம் அங்கலாய்ப்பார்.

கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தபோதெல்லாம்கூட இதே கதைதான். அம்மாவிடமிருந்து வாரம் தவறாமல் எண்ணி பத்தே வரிகளில் கடிதம் / போஸ்ட் கார்ட், வந்துவிடும் - ".....கட்டாயம் வாரா வாரம் கடிதம் எழுத மறக்காதே" என்ற பின்குறிப்புடன். ( கூடவே மறக்காதே லிஸ்டில் டானிக் சாப்பிடு, எண்ணெய் தேய்த்துக்கொள்; ஒழுங்காக பாடத்தில் கவனம் செலுத்து; போன்ற அறிவுரைகள் தவறாமல் இருக்கும். அம்மா, அப்பா மாதிரி இந்தக் கடிதம் எழுதும் பழக்கம் வெகு நாள் எனக்கும் இருந்தது. படிக்கும் காலங்களில் யார் யாருக்கு எப்போ எழுதினேன் / பதில் எழுதிவிட்டேனா என்று ஒரு அட்டவணையே போட்டு வைத்திருப்பேன். அப்புறம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

என் தாத்தா ஒருவர் இப்படிதான் நிறைய கடிதங்கள் எழுதுவார். ஒரு போஸ்ட் கார்டில் ( கட்டாயம் போஸ்ட்கார்டுதான். இன்லாண்ட் கவரெல்லாம் நினைக்ககூட மாட்டார் "எதுக்கு வேஸ்ட்? ஒரு கார்டு போட்டால் போறாதா?" அந்தக் கார்டிலேயே அத்தனை குடும்ப விஷயமும் அடங்கிவிடும். நுணுக்கி நுணுக்கி சின்ன எழுத்தில்.

அப்பாவுக்கு கடைசி வரை தொலைபேசியில் பேசுவது சௌகரியமாகவே இல்லை. டில்லியிலிருந்து சென்னைக்கு பேசும்போது அம்மாவிடம் கதையளந்துவிட்டு, அப்பாவிடம் கொடுங்கள் என்றால், போனை வாங்கி எண்ணி இரண்டு வார்த்தைதான் பேசுவார். " பேசாமல் கடிதம் எழுதேம்மா... நானும் நிதானமாக படிப்பேன் இல்லையா?" என்பார். என் சோம்பேறித்தனம் அவருக்கு சற்று அலுப்பாக இருந்ததோ என்னவோ; ஒரு முறை சிரித்துக் கொண்டே சொன்னார் - "பக்கம் பக்கமாக பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுகிறாய். உட்கார்ந்து கடிதம் எழுத முடியவில்லையே உனக்கு" ! அவ்வளவுதான். எனக்கு நன்றாகவே உறைத்தது. அதானே, போனில்தான் பேசுகிறோமே என்று நினைத்துக் கொண்டு என்ன மடத்தனம் செய்கிறோம்? கடிதம் எழுதினால் வைத்துக் கொண்டு நிதானமாக படிப்பார் இல்லையா? அதன் பிறகு மீண்டும் அவ்வப்போது கடிதம் எழுத ஆரம்பித்தபின்தான் எனக்கும் நிம்மதியாக இருந்தது.

இன்று தபால் துறையின் பெரிய வருமானம், அச்சு மற்றும் எலக்டிரானிக் ஊடகங்களின் "உங்கள் கேள்விகளை/ பதில்களை / விடைகளை ஒரு கார்டில் எழுதிப்போடுங்கள்" என்று வரும் அறிவிப்புகள், மற்றும் பெருவாரியான Junk Mail என்று நாம் குறிப்பிடும் விளம்பர வகை தபால்கள் போன்றவைதான். இந்த தொழில் நுட்ப காலத்தில் தபால் துறை ஒன்றும் பின் தங்கிவிடவில்லை என்பதே ஒரு மகிழ்ச்சி தரும் அம்சம். நிறைய தொழில் நுட்பம் புகுத்தியிருக்கிறார்கள். ஈ போஸ்ட் - கணினி /இணைய வசதி இல்லாதவர்கள் கூட ஈ மெயில் எழுத பெற்றுக்கொல்ள வசதியாக ஆரம்பிக்கப்பட்ட சேவை - போன்ற சேவைகள் மூலம் தபால் துறையை நவீனப்படுத்தல் வேகமாக நடந்து கொண்டுள்ளது. பெரும்பாலும் சார்டிங் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டன. ஒரு திறமையான சார்ட்டர் ஒரு மணி நேரத்தில் 1000 கடிதங்கள் பிரித்து தொகுப்பார் என்றால் பிரிக்கும் இயந்திரங்கள் 30,000 கடிதங்களை அதே நேரத்தில் செய்யும். ஆனால் இதற்காக அதிகம் ஆட்குறைப்பு செய்யப்படவில்லை. பதிலாக வேறு பிரிவுகளில் அவர்கள் இயங்க பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படும் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

India Post இந்தியா முழுவதும் ஒரு வருடத்தில் 1575 கோடி தபால்கள் அனுப்புகிறது. 155,618 போஸ்ட் ஆபீஸ்கள் இயங்குகின்றன - அண்டார்டிகாவில் உள்பட. அண்டார்டிகாவில் முதன் முதலில் "மைத்திரி" என்ற இந்திய ஆராய்ச்சி நிலையம் அமைத்தவர்களுள் ஒருவரை டில்லியில் பேட்டி காண சென்றபோது அவர் முதலில் எனக்கு கொடுத்தது அந்த ஆராய்ச்சி நிலையம் போஸ்ட் ஆபீஸ் முத்திரை தாங்கிய முதல் நாள் கவர். கிராமப்புறங்களில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் எண்ணிக்கை 139,081. மூலை முடுக்கெல்லாம் இருக்கும் தபால் பெட்டிகள் எண்ணிக்கை 564,701. மொத்தம் 4.2 லட்சம் பேர் தபால் துறையில் வேலை செய்கிறார்கள். இன்னும் 3 லட்சம் பேர் உபரியாக ( extra departmental ) வேலை செய்கிறார்கள். ராணுவம், ரயில் நிர்வாகம், இவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப்பெரிய படியளப்பவர் / எஜமானர் தபால்துறைதான்.

அதுசரி, கடிதங்கள் / கடிதம் எழுதும் பழக்கம் இன்று மியூஸியத்தில் வைக்கும் நிலையில் தபால் துறை எப்படி உயிர் வாழுகிறது? வணிகத் துறை இன்று தபால் துறைக்கு பெருமளவில் உதவுகிறது. வீட்டு வாசலில் தொங்கும் நம் தபால்பெட்டியை நிரப்புவது எல்லாவிதமான வணிக சம்பந்தமான விளம்பர உத்திகள். விதம் விதமாக பத்திரிகைகள் இன்று சந்தாவை அதிகரிக்க சலுகைகள் பல்விதங்களில் கொடுக்க, இங்கே தபால்காரர் நம் வீட்டுக்கு பல முறை வருகிறார். கடையில் வாங்குவதைவிட வருடச் சந்தாவில் பல பத்திரிகைகள் லாபமாக இருக்கே ! தவிர, டன் டன்னாக அச்சில் வெளியாவது எல்லாம் எப்படியோ எங்கேயோ நம்மை வந்து அடைய வேண்டுமில்லையா? இதில் தபால் துறை பெரும்பங்கு வகிக்கிறது. தவிர இருக்கவே இருக்கிறது தொலைகாட்சி / பத்த்ரிகைகள், ரேடியோ போன்ற ஊடகங்களின் போட்டிகள் வகையறா. இதிலும் கணிசமான போக்குவரத்து தபால் துறைக்கு கிடைக்கிறது.

இதெல்லாம் போக இன்று தபால் துறை ஒரு வங்கி மாதிரி இயங்க ஆரம்பித்துவிட்டது. இவர்கள் தளத்தில் போய்ப் பாருங்கள். ஒரு நிதி நிர்வாகத்தின் அத்தனை பிரிவுகளும் உள்ளன. இன்சுரன்ஸ் உள்பட. போதாதற்கு இப்போதெல்லாம் மிகப் பாதுகாப்பான, வங்கிகளைவிடவும் அதிக வட்டி கிடைக்கும் முதலீட்டு அமைப்பாக இருப்பது போஸ்ட் ஆபீஸ் பத்திரங்கள்தாம். நிறைய பென்ஷன்காரர்கள் தங்கள் ரிடையர்மெண்ட் பணத்தை கண்ணை மூடிக்கொண்டு போஸ்ட் ஆபீஸில் போட்டு விடுகிறார்கள்.

தவிர, வருமானத்தை உயர்த்த, மூலை முடுக்கில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ்களில் வணிகக் கடைகளை கூட அமைக்கலாமா என்ற யோசனையும் இருப்பதாக எங்கோ படித்தேன். ஆனால் அதற்கு முதலில் போஸ்ட் ஆபீஸ் கட்டிடங்களை கவனிக்க வேண்டும் இன்றும் பெரும்பாலான போஸ்ட் ஆபீஸ்கள் படு பழசான விக்டோரியா காலத்து கட்டிடங்களிலேயே இயங்குகின்றன. சமீபத்தில் அதிசயமாக எப்போதோ சென்னையில் பொழியும் மழையில், பூக்கடை போஸ்ட் ஆபீஸின் கோலத்தை ஹிந்து வெளியிட்டு இருந்தது. ஒழுகும் கூரை, சிதிலமாகிப்போன சுவர், சேறும் சக்தியுமாக நுழைவாயில் - வாடிக்கையாளர்களும், போஸ்ட் ஆபீஸில் வேலைசெய்பவர்களும் படும் கஷ்டத்தைப் படம் போட்டுக் காட்டிய மறு நாள் போஸ்ட் ஆபீஸ்கள் கட்டிடங்களை புதுப்பிக்க பணம் ஒதுக்கப்பட்ட செய்தி வந்தது. இதேபோல் கீழ்ப்பாக்கத்தில் Flowers Road போஸ்ட் ஆபீஸ¤க்கு சமீபத்தில் போனபோது பல கணினிகள் ஒரு மூலையில் பெட்டிகள் கூட பிரிக்கப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விசாரித்ததில் போஸ்ட் ஆபீஸ் கணினி மயமாக்கல் முயற்சியின் முதல் அத்தியாயம் என்று புரிந்தது. " கட்டிடம் மிகப் பழசுங்க. இந்த மாடர்ன் சாமான்களெல்லாம் வைக்க ஏத்தாற்போல் புதுப்பிக்கணும் அல்லது இடம் மாற வேண்டும். அந்தக் காலத்தில் வாடகைக்கு எடுத்த இடம் இது. புது இடம் மாறலாம் என்றால் அதிகம் வாடகை ஆகிறது. எப்போ இடம் மாற்றம் வருமோ அல்லது கட்டிடம்தான் புதுப்பிக்க படுமோ தெரியவில்லை," என்று அங்கே வேலை செய்யும் ஒருவர் கூறினார். உயர்ந்த கூரையில் காரைகள் பெயர்ந்து, ஒட்டடைகள் படர்ந்து ஜன்னலில் அருகில் இருக்கும் மரத்தின் வேர் / கிளைகள் உள்ளே எட்டிப் பார்க்க, கண்ணாடி உடைந்த ஜன்னல் ஒன்றில் "சிங்கப்பூர் போஸ்ட்" முத்திரை தாங்கிய சாக்குப் பை ஒன்று பாதி மறைத்திருக்க, ( ஹ்ம்ம்.... இதிலும் ஓசியாக வந்த சாக்குதானா கிடைத்தது?) போஸ்ட் ஆபீஸ் சீர்திருத்தம் எப்போதான் இடம் பெறும் என்ற கவலையைக் கொண்டு வந்தது.

போஸ்ட் ஆபீஸ் நிர்வாகத்தில் நிறைய புதுமைகளைக் கொண்டுவருவது இருக்கட்டும்; இப்போதைக்கு இந்தத் துறை ரூ. 1500 கோடிகள் நஷ்டத்தில்தான் இயங்குகிறது.

ஒரு போஸ்ட் கார்டுக்கு ஆகும் செலவு 336 பைசாஇதில் வருமானம் - 25 பைசா. நிகர நஷ்டம் 311. அல்லது ஒரு கார்டுக்கு அரசு அளிக்கும் தள்ளுபடி (subsidy) 311 என்றும் வைத்துக் கொள்ளலாம்.

ஆனாலும் நஷ்ட அளவைக் குறைக்க பல திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன - தனியார் துறைக்கு பாதி வேலைகளைப் பகிர்ந்து கொள்வது, நிறைய வியாபாரம் இல்லாத போஸ்ட் ஆபீஸ்களை எடுத்துவிட்டு, அடிப்படை ஸ்டாம்பு, கவர் விற்பனைகளை சாதாரண கடைகளில் விற்க அனுமதி அளிப்பது போன்ற திட்டங்கள். பின்னே? தபால் துறையும் ஒரு நாள் காலத்திற்கேற்ப ஜீன்ஸ¤க்கு மாற வேண்டாமா?

Saturday, April 02, 2005

இதை எழுதும் போது போப்பாண்டவரின் நிலை "கவலைக்கிடமாக" என்ற அறிவிப்பில்தான் இருக்கிறது. அவ்வப்போது நினைவிழக்கிறார். மற்றபடி கோமாவில் விழவில்லை என்கிறது வாடிகன்.

பலவருடமாக கோமாவில் இருந்து பெற்றோரும் கணவரும் எதிர் முனைகளில் வாதாட, ஒரு வழியாக இரண்டு நாள் முன்பு மறைந்த Schiavo வின் நினைவு வருகிறது. தான் இறுதியை நெருங்கிவிட்டோம் என்று தோன்றிய பிறகு போப்பாண்டவர் தனக்கு சிகிச்சை ஏதும் தேவையில்லை என்று மறுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகாமல் தன் இடத்திலேயே இருக்க முடிவு செய்துவிட்டார். ஒரு வேளை அவர் கோமாவில் முழுக நேர்ந்தால் அவருக்கு உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் செய்வார்களா? அல்லது ஒரு முயற்சியும் செய்ய மாட்டார்களா? முந்தையது என்றால் இத்தனை நாளும் வாடிகன் ஆதரித்து வந்த கொள்கையாகும். பின்னது என்றால் வாடிகன் மிகவும் எதிர்த்த கொள்கையாகும் இல்லையா?

தான் ஆஸ்பத்திரி போக வேண்டாம் என்று முடிவெடுத்த சமயம் ஒரு வேளை போப்பாண்டவருக்கு தோன்றியிருக்குமோ - Schiavo வும் கோமாவில் இருந்தாலும் அமைதியாக தொந்தரவில்லாமல் மறைய வேண்டும் என்றுதான் நினைத்திருப்பாள் என்று நினைத்திருப்பாரோ?

வயது ஒரு கேள்வியே அல்ல. மருத்துவ எல்லைகளின்படி தான் பிழைக்க வாய்ப்பில்லை என்று அறிந்தபின்னர் அவர் சிகிச்சை தேவையீலை என்று முடிவெடுத்தார். Schiavo விஷயத்தில் வருடக்கணக்கில் சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் மருத்துவ எல்லைகளைத் தாண்டிய நிலையில் அந்தப் பெண்ணும் தன் விருப்பத்தை சொல்லக் கூடிய நிலையில் இருந்திருந்தால் அவரைப் போல் ஒரு முடிவைதான் சொல்லியிருப்பாளோ?

தெரியவில்லை.

புரியவில்லை.

ஆனாலும் பல விதங்களில் John Paul II, பெருவாரியாக மக்களைக் கவர்ந்தவர். 400 சொச்சம் வருடங்களுக்குப் பிறகு இத்தாலியர் அல்லாத முதல் போப்பாணடவர். மக்களிடையே வெகு இயல்பாக பழகி அவர்கள் மனங்களை வென்றவர். தன்னைச் சுட முயற்சித்த ஒருவனை சிறையில் கண்டு சாதாரண நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சகஜமாக பேசும் புகைப்படம் ஒன்றைக் கண்டபோது அவரின் இந்தப் பண்பும் அன்பும் மனதைத் தொட்டது.

ஆனாலும் அபார்ஷன், பெண்களுக்கு மதச் சடங்குகளில் / சர்ச்சுகளில் சம உரிமை மறுப்பு, போன்ற விஷயங்களால் பெண் உரிமைவாதிகளுக்கு இவரிடம் மகா கோபம். இன்று பிபிசி பேட்டியில், Catholics for Free Choice என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அழுத்தமாக கூறினார்: " அவர் எவ்வளவோ நல்லது செய்துள்ளார் மறுக்கவில்லை. நானும் இந்த இரண்டு மூன்று நாட்கள் அவரைப் பற்றி எதுவும் வன்மையாக ஏதும் சொல்ல மனம் வராது. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். Lots of people are suffering and they are suffering, BECAUSE of the Church. Not INSPITE of the Church." இவ்வளவு ஆணித்திரமாக இவர் கூறக் காரணம் என்ன என்று கூகிளினேன். இந்த அமைப்பைப் பற்றி தகவல்கள் இருந்தாலும் இவர் குறிப்பிடுகிற அந்த Sufferings" என்ன என்று முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இதன் நடுவே புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றி ஹிந்துவில் இந்தக் கட்டுரை நன்றாக அலசியுள்ளது. எல்லாக் கார்டினல்களும் தாங்கள் தேர்ந்தெடுத்தபின் அந்தக் காகிதங்களை எரிய விடுவார்களாம். புகைபோக்கியில் வெளியே புகை கறுப்பாக வெளி வந்தால் போப்பாண்டவர் தேர்வு எதுவும் முடிவாகவில்லை என்று அர்த்தமாம். தேர்வு வெற்றிகரமாக நடந்துவிட்டால் எரிவதில் ஏதோ ஒரு பொடியைச் சேர்த்து புகை வெள்ளையாக வெளியே வரும்படி செய்வார்களாம் !

Tuesday, March 29, 2005

சென்ற பதிவில், இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள மசோதா பற்றி எனக்கு எழுந்த சந்தேகங்கள் பற்றி கூறியிருந்தேன். இவற்றிற்கு பதில் தேட இங்கே சென்னையில் வக்கீலாக பணியாற்றும் - காப்புரிமைகள் விவகாரம் இவரது சிறப்பு துறைகளில் ஒன்று - திரு. A.A. மோஹன் அவர்களுடன் பேசினேன். அவருடன் பேசியதிலிருந்தும், இணையம் மற்றும் செய்தித்தாள்களை அலசியதிலிருந்தும் கிடைத்த விளக்கங்களை கேள்வி - பதிலாக கொடுத்திருக்கிறேன்.

1. இந்த காப்புரிமை சட்டத்தினால் நமது விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வெளி நாடுகளில் காப்புரிமை செய்வதன் மூலம் ஒரு பன்னாட்டு அங்கீகாரமும், முதலீடும் கிடைக்கும் என்று கமல் நாத் கூறியுள்ளார். நாம் இங்கே ஒரு மருந்து கண்டுபிடித்து அதன் அடிப்படையில் மருந்துகள் உற்பத்தி செய்து, அந்த product ஐ காப்புரிமை செய்ய முடியுமா?

பதில்: முடியும். ஆனால் பன்னாட்டு காப்புரிமை என்று எதுவும் கிடையாது. நம் நாட்டில் காப்புரிமை வாங்கியிருந்தாலும் வெளி நாட்டில் அந்தப் பொருளுக்கு அவர்கள் நாட்டு சட்டங்கள்படி காப்புரிமை பெற வேண்டும். பொதுவாக Patent வாங்க பிற நாட்டில் நிறைய செலவாகும். சில சிறிய நிறுவனங்களால் இப்படி பணம் செலவழிக்க வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி செலவு செய்து வெளி நாட்டில் காப்புரிமை வாங்காது விட்டுவிட்டால், பிறகு நம் பொருளைக் காப்பியடித்து அங்கே யாராவது உற்பத்தி செய்யும்போது கையைப் பிசைந்து கொண்டு வேடிக்கை பார்க்க நேரும். அதனால் இங்கேதான் காப்புரிமை வாங்கியாச்சே; உலகத்தில் யாரும் இனி இதைக் காப்பியடிக்க முடியாது என்று நினைத்து அசிரத்தையாக இருக்கக் கூடாது.

2. கட்டாய லைஸென்ஸ் இந்திய நிறுவனங்களுக்கு எந்த விதத்தில் அனுகூலமாக இருக்கும்?

பதில் : வெளி நாட்டு நிறுவனம் தயாரிக்கும், காப்புரிமையுள்ள அத்தியாவசியமான மருந்து ஒன்று இங்கே ஒரு நிறுவனம் தயாரிக்க விரும்பி அதற்குத் தேவையான தயாரிக்க அடிப்படை வசதிகள்/ கட்டுமானங்கள் இருந்தால், ஓரளவு நியாயமான ராயல்டி கொடுத்துவிட்டு இங்கே தயாரிக்க முடியும்.

3. புதிய கண்டுபிடிப்புக்கு மட்டும்தான் காப்புரிமை. சிறிய மாற்றங்களுடன் மறுபடி அறிமுகப்படுத்தும் பொருட்களுக்கல்ல. இந்தச் சட்டத்தின் பயன்?
பதில்: ஒரு மருந்து சந்தையில் நம்பர் ஒன்றாக இருக்கும் நிலையில் அதன் காப்புரிமை காலாவதிகிறது என்று வையுங்கள். உடனே அதற்கு சற்று முன்னால் தயாரிப்பில் சின்ன மாற்றங்கள் செய்து அந்தப் "புது" படைப்பின் பேரில் புது காப்புரிமை பெறுகின்றன மேல் நாடுகளில் சில நிறுவனங்கள். நம் நாட்டில் அதுபோல் கண் துடைப்புகளுக்கு சான்சே இல்லாமல் இப்படி ஒரு விதியைக் கொண்டு வந்தாயிற்று. உண்மையிலேயே சிறப்பான, விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிக்கும் உண்மையான வெளி நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு இதன் மூலம் இங்கே ஒரு பாதுகாப்பு கிடைக்கிறது.
4. காப்புரிமை பெற்ற மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். - ராயல்டி கொடுத்துவிட்டு. ஆனாலும் விலையேறாது என்கிறார் அமைச்சர். அது எப்படி?

பதில்: ஒன்று, இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பல இப்போதும் காப்புரிமைப் பிரச்சனைக்கு அப்பால்தான் இருக்கின்றன. அப்படியே காப்புரிமை இருக்கும் மருந்துகளைத் தயாரிக்கவும் ராயல்டி கொடுத்துவிட்டு எப்போதும்போல் தயாரித்து விற்க தடையேதும் இல்லை. மருந்துகளின் விலை சாதாரன மக்களால் கொடுக்க முடியாத அளவு ஏறாது. ஏனென்றால் நம் நாட்டில் மருந்துகள் விலையை நிர்ணயம் செய்ய Drug Price Control Order என்ற அமைப்பு இருக்கிறது. சாமான்யர்களால் கொடுக்க முடியாத அளவு விலையேறாமல் பார்த்துக்கொள்வது இதன் பொறுப்பு. இப்போது இந்த காப்புரிமை விஷயத்தில் ஒரு சரியான சட்டம் அமுலுக்கு கொண்டு வந்ததால் அடிப்படையில் WTO வுக்கு கொடுத்த உடன்படிக்கையின்படி TRIP complaiant ஆக இருக்கிறோம். அதே சமயம் நாம் நம் மக்களுக்கு விலையேறாமல் தடுக்க தேவையான பாதுகாப்புகளும் வைத்துள்ளோம் !!! :-)

5. மென்பொருட்கள் விஷயத்தில் குழப்பம் சற்று அதிகமாகவே இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்பு பிஸினஸ் லைன் தினசரியின் செய்திபடி பொதிந்த மென்பொருட்களுக்கு காப்புரிமை உண்டு. ".... The amended Bill provides for product patent in drugs, agri products and embedded software while patentability of plants remains outside the purview of the proposed Act..." - The Business Line dated March 23. 2005. Passage from the Lead story on the front page. ஆனால் இன்று எகனாமிக் டைம்சில் 3ம் பக்கத்தில் உள்ள ET in the Classroom பகுதியின்படி, "......The Bill has dropped the provision allowing patents for a computer programme's technical applications to the industry or its combination with hardware as those used in mobile phones....." ET March 28th.

என் குழப்பம் தீரவில்லை. embedded softwar க்கு காப்புரிமை உண்டா இல்லையா? மோஹனைக் கேட்டேன்.

" இந்த விஷயம் தற்போது வந்துள்ள திருத்தப்பட்ட மசோதாவில் தெளிவாக இல்லைதான். ஏற்கனவே டிசம்பரில் அறிவித்திருந்த "ordinance" இதைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது - Industrial applications, technical applications to the industry, இவற்றில் பயன்படுத்தபப்டும் மென்பொருளுக்கு காப்ப்புரிமை உண்டு என்பதை. ஆனால் இப்போது திருத்தப்பட்ட சட்டத்தில் இப்படி தெளிவாக இல்லை. எந்த மாதிரியான மென்பொருளுக்கு காப்புரிமை உண்டு என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. embedded என்ற வார்த்தைப் பிரயோகம் அதில் இல்லை. இதனால் காப்புரிமைக்கு விண்ணப்பம் கொடுக்கும் நிறுவனங்களின் விண்ணப்பத்த்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்துதான் முடிவு எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். Case by case அடிப்படையில் கொடுக்கப்படலாம். முடிவெடுக்க வேண்டிய அதிகாரியின் தீர்மானத்தைப் பொறுத்தது." என்றார் அவர்.
வரும் நாட்களில் குழப்பங்கள் தெளிகிறதா என்று பார்க்கலாம்.

Thursday, March 24, 2005

காப்புரிமை சமாசாரத்தை சந்திரன் தன் பதிவில் நன்றாக விவரித்துள்ளார். நான் மறுபடி அடிப்படைகளை விவரிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இன்னும் சிறிது கூடுதல் பின்புலம் விவரங்கள்:

  • 1995ல் WTO மாநாட்டில் செய்துகொண்ட பல உடன்படிக்கைகளில் 10 வருடத்தில், TRIPS ( Trade Related aspects of Intellectual Property Rights) விதிகளின்படி, முறையாக நாம் ஒரு காப்புரிமை சட்டம் வைத்துக்கொள்வோம் என்று ஒப்புக்கொண்டுள்ளோம்.
  • காப்புரிமை சட்டம் சரியாக இல்லாத நிலையில் நம்மை ஒரு தபால பெட்டி முறையை வைத்துக்கொள்ளும்படி மற்ற நாடுகள் வலியுறித்தின. அதாவது அவர்கள் ஒரு பொருளுக்கு காப்புரிமை இந்தியாவில் தேவை என்பதற்கான வேண்டுகோள் விடுத்து முன் பதிவு செய்வார்களாம். நாம் நிதானமாக 10 வருடம் கழித்து நமது சட்டம் கொண்டுவரும்போது இவர்கள் வரிசையில் வைத்து இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்கள். அதாவது இடம் ரிஸர்வ் செய்ய கைக்குட்டை, பேப்பர் போட்டுவைப்பதுபோல. ஆனால் நாம் இந்த தபால் பெட்டி முறைக்கு பல வருடங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அமெரிக்கா இதை ஆட்சிபித்தபோது, நம்மிடம் ஓரளவு காப்புரிமை கோரல்களுக்காக ஒரு நிர்வாக வழிமுறைகள் உள்ளன; அதே போதும் என்று சொல்லிவிட்டோம். தவிர, இந்த மாதிரி தபால் பெட்டி அப்ளிகேஷன்களெல்லாம் நமது காப்புரிமை வழக்குகளில் நம் இந்திய கோர்ட்டுகளில் செல்லுபடியாகாது. அதனால் இது தேவையில்லை என்று சொல்லிவிட்டோம். தபால் பெட்டியோ இல்லையோ, மருந்து காப்புரிமைகளுக்காக மட்டுமே 1996 லேயே 896 அப்ளிகேஷன்கள் வந்திருந்ததாக தெரிகிறது. தற்போதைய எண்ணிக்கை தெரியாது.
  • இப்போது காப்புரிமை அமுலுக்கு வந்துவிட்டதால் இந்த பழைய அப்ளிகேஷன்களை முதலில் பரிசீலனை செய்ய வேண்டும்.


சந்திரன் குறிப்பிட்டுள்ள அந்த ரைஸ்டெக் சமாசாரம் நடந்தது 1998ல். அந்த சமயத்தில் நான் சிங்கப்பூர் பிஸினஸ் டைம்ஸ் தினசரிக்கு டில்லியிலிருந்து கொண்டு செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தேன். இந்த சர்ச்சை வெளிவந்தபோது அன்றைய Centre for Scientific and Industrial Research தலைமை அதிகாரி, மஷேல்கர், Activist வந்தனா சிவா இருவருமே இந்த அரிசி சமாசாரம் அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனையாக உருவாகாது; ஆனால் நாம் எவ்வளவு தூரம் நம் பாரம்பரிய உணவு வகைகள் பயிரிடுவதற்கான உரிமைகளைக் காப்பாற்றிகொள்வதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை என்ற ரீதியில்தான் என்னிடம் பேசும்போது குறிப்பிட்டனர். சொல்லப்போனால் அந்த சமயங்களில் இப்படி அமெரிக்க நிறுவனங்கள், வேப்பிலை, மஞ்சள், பிறகு அரிசி என்று ஒன்றன் மீது ஒன்றாக ஏதோ ஒரு விதத்தில் patent வைக்க முற்பட்டது ஒரு விதத்தில் நாம் உஷாராக இருக்க உதவியது என்பேன். ஆனால் அதே சமயம், அட, நம்ம பாட்டி சொன்ன கைவைத்தியம்தானே.. வேப்பிலை அரைத்துப் போட்டால் போச்சு என்று பல விதங்களில் உபயோகித்து கொண்டு இருக்காமல், பல பாரம்பரிய செடிகள், தாவர வகைகளின், மூலிகைகளின் உபயோகம் பலவற்றையும் முறைப்படி நாம் patent செய்ய வேண்டியது இப்போது மிகவும் அவசியமாகிறது என்று மஷேல்கர் குறிப்பாக விவரித்தார்.
அதாவது, வேப்பிலை என்பது உலகமெங்கும் விளையும் ஒரு தாவரம். நாம் வேப்பிலைக்கு உரிமை கொண்டாட முடியாது. ஆனால் அந்த வேப்பிலைக்கு காயத்தை ஆற்றும் சக்தியோ அலல்து, பூஞ்சக்காளான் வராமல் தடுக்கும் சக்தியோ, வயிற்றுப்புண் நீக்கும் சக்தியோ இருப்பதை நாம் அறிந்திருந்தோமானால், பாட்டி சொன்ன வைத்தியம் என்று பேசாமல் வீட்டோடு உபயோகித்துக் கொண்டு இருக்காமல், அந்த சக்திகள் இருப்பதாக சொல்லும் பழைய ஆதாரங்களை நாம் தயாராக வைத்துக் கொண்டு உடனே காப்புரிமை செய்ய வேண்டும். இதற்கு பழைய சித்தர் பாட்டுகள், நாட்டுப் பாடல்கள் என்று ஆதரங்களை சேர்ப்பதில் / சேர்க்க ஊக்குவிப்பதில் கடந்த சில வருடங்களாக CSIR கவனம் செலுத்தியுள்ளது.


அதேபோல் தாவர வகை எனும்போது Geographical Appalations Act என்று ஒன்று உண்டு. அதாவது இப்போது சீலிநாட்டில் விளையும் ஒரு குறிப்பிட்ட திராட்சைப் பழம் அந்த பகுதிக்கு சிறப்பானது. அதேபோல் ஜெர்மனியில் விளையும் ஒரு குறிப்பிட்ட திராட்சையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒயினுக்கும், பீருக்கும் அந்த நாடு இந்த Geographical Appellations Act கொண்டு வர முனைந்தது. ஒரு குறிப்பிட்ட தாவர வகை அந்தப் பகுதியில் இருக்கும் சீதோஷ்ண நிலையினால்தான் அல்லது வேறு ஒரு பூகோள சிறப்பினால்தான் அந்த சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது என்று நிரூபிக்கும் எந்தத் தாவர வகையையும் தன் Geographical Appellations Act கீழ் ஒரு நாடு பதிந்து கொள்ளலாம். வட இந்திய பாஸ்மதி, டார்ஜிலிங் தேயிலை, இதெல்லாம் இதன் கீழ் வரும்.


சரி. இந்த விஷயம் அப்புறம். முதலில் இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள மசோதா பற்றி எனக்கு எழுந்த சந்தேகங்கள்:

  • இந்த காப்புரிமை சட்டத்தினால் நமது விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் வெளி நாடுகளில் காப்புரிமை செய்வதன் மூலம் ஒரு பன்னாட்டு அங்கீகாரமும், முதலீடும் கிடைக்கும் என்று கமல் நாத் கூறியுள்ளார். என் சந்தேகம். உதாரணமாக வேப்பிலைக்கு குடலை சுத்தம் செய்யும் சக்தி உள்ளது என்று நம் ஆராய்ச்சியாளர் ஒருவர் அமெரிக்காவில் இந்த குறிப்பிட்ட குணத்துக்கு காப்புரிமை வாங்க முடியுமா? வாங்கி அதன் அடிப்படையில் மருந்துகள் உற்பத்தி செய்து, அந்த product ஐ காப்புரிமை செய்ய முடியுமா?
  • புதிய கண்டுபிடிப்புகளுக்கு மட்டும்தான் காப்புரிமை அளிக்கபப்டும். ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ஒரு பொருளின் ஒரு புதிய அம்சத்திற்கு கிடையாது. இத்தனை நாளும் சாப்பிட்டு வந்த பாராசாட்டமால் மாத்திரைகளுக்கு புதிதாக கேன்ஸர் குணபப்டுத்தும் தன்மை இருப்பதாக இந்தியர் ஒருவர் கண்டுபிடித்தால் அதற்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற முடியுமா?
  • காப்புரிமை பெற்ற மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரித்து மற்ற நாடுகளுக்கு எற்றுமதி செய்யலாம். - ராயல்டி கொடுத்துவிட்டு. ஆனாலும் விலையேறாது என்கிறார் அமைச்சர். அது எப்படி?
  • இந்தியாவில் காப்புரிமைக்காக போடப்படும் மனுக்களின் மீது ஆட்சேபம் தெரிவித்து காப்புரிமை பெறுவதைத் தடுக்க இடம் உள்ளது. காப்புரிமை பெறும் முன், பெற்ற பின்னரும் கூட. என்றும் சொல்லுகிறார். இது நல்ல சேதியாக இருக்கிறது. அதேபோல், கட்டாய உரிமம் என்ற முறையில் அத்யாவசியமான generic மருந்துகள் தயாரித்து சந்தையில் விற்கவும் வழி உள்ளது.
  • இந்த காப்புரிமைச் சட்டத்தில் தாவர வகைகள் இடம் பெறவில்லை. ஓ, அதான் green Brigade அமைதியாக இருக்கிறதோ? மசோதா பாஸ் ஆகி இரண்டு நாளாகியும் இன்னும் எதிர்ப்பு குரல்கள் கேட்கவில்லையே என்று பார்த்தேன் :-)


தொடரும் :-)

பி.கு: Wings On Fire போன பதிவில் பின்னூட்டத்தில் பொதிந்த மென்பொருளுக்கு காப்புரிமை கிடையாது என்று நான் சொல்லியிருந்தது சரியல்ல என்றார். அவர் சொல்வது இப்போது சரி. ஏனென்றால் மசோதா திருத்தங்கள் இடம்பெறும் முன் வந்த டிவி Ticker செய்தியில் முதலில் அப்படி போட்டிருந்தது. இப்போது திருத்தப்பட்ட மசோதாவில் பொதிந்த மென்பொருளுக்கு காப்புரிமை உண்டு.

Tuesday, March 22, 2005

ரொம்ப நாளாக இந்த காப்புரிமை சமாசாரத்தை இந்தியா ஒத்திப் போட்டு வந்தது. உலக வர்த்தக அமைப்பின் உடன்படிக்கைபடி, கடந்த ஜனவரி 1 ந் தேதி இதை நாம் நிறைவேற்றியிருக்க வேண்டும். கடந்த பல மாநாடுகளில் இந்தியாவின் மீது இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகளுக்கு ஒரு கடுப்பு இருந்து கொண்டே இருந்தது. குறிப்பாக மருந்து உற்பத்தியில் அங்கே உற்பத்தியாகும் மருந்துகளை நாம் இங்கே அபப்டியே உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் அதற்கு காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனத்திடமிருந்து அதற்கு உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு மருந்தை அப்படியே இங்கே உற்பத்தி செய்யாமல், செய்யும் முறைகளை நமக்கேற்றவாறு சில மாற்றங்கள் செய்து நாம் இங்கே உற்பத்தி செய்தால் அதற்கு original காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை. அதாவது ஒரு முடிவான பொருளுக்குதான் காப்புரிமை, அதன் செய்முறைகளுக்கல்ல என்ற வாதத்தின் அடிப்படையில் பல வெளிநாட்டு மருந்துகள் இங்கே உற்பத்தி செய்யப்பட்டு சகாயமான விலைக்கு கிடைத்து வந்தது. இந்த Pharma சமாசாரம் ஒரு பகுதிதான். இன்னும் இதில் எவ்வளவோ சாதக / பாதகங்கள் உள்ளன.

இப்போதுதான் டிவியில் ஓடும் செய்திக் குறிப்பைப் பார்த்துவிட்டு வருகிறேன். ஹார்ட்வேரில் பதிக்கப்பட்ட மென்பொருளுக்கு காப்புரிமை கிடையாதாம். Embedded software. எனக்குப் புரிந்த அளவில் இது இந்திய மென்பொருள் துறையை மிகவும் பாதிக்கும் என்று தோன்றுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே நாம் பெரும்பாலும் இந்த embedded software செய்வதில்தாம் வேகமாக முன்னேறியுள்ளோம். தற்போது செல்போன்களில், டிவி, போட்டோ என்று உலகத்தையே அடக்கி உற்பத்தி செய்யும் நிலையில் இதற்கு தேவையான மென்பொருள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள்தாம் முதல் நிலையில் உள்ளன. இது மாதிரி இன்னும் எத்தனையோ சரக்குகளின் "குடலுக்குள்ளே" பொதிந்திருப்பது இந்திய நிறுவனங்களின் மென்பொருட்கள்.

மூன்றாவதாக விவசாய சம்பந்தமான காப்புரிமைகள். இதுவும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் சர்ச்சைக்குள்ளான விஷயம். இப்போதே வந்தனா சிவாவின் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்துவிட்டது :-)

தற்போது பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள - முதலில் எதிர்த்த இடதுசாரிகள் ஓரளவு இப்போது ஏற்றுகொண்ட - இந்த மசோதாவில் என்ன இருக்கிறது என்பதை இனிதான் சற்று கண்ணில் பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும்.

கூடிய விரைவில் வருகிறேன் - எனக்கு புரிந்த அளவு விஷய்ங்களுடன். மற்ற பதிவுகளும் இதைப் பற்றி அலச தயாராக இருந்தால் கலந்து கொள்கிறேன்.

Sunday, March 13, 2005

சில நாட்கள் முன்பு எனக்கு ஒரு சினேகிதியிடமிருந்து ஈமெயில் வந்திருந்தது. அது ஒரு கூட்டு கடிதம் ( Mass mail). அதை அப்படியே தமிழில் கொடுத்துள்ளேன். இத்துடன் இந்த மகளிர் வாரம் நிறைவு பெறுகிறது :-)

Andy Rooney என்கிற CBSன் 60 நிமிஷம் என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எழுதுவதாக இந்த கடிதம் தொடங்குகிறது.

over to Andy !

முப்பது வயது மேற்பட்ட பெண்கள் எனக்கு பிடிக்கும். அவர்கள் நடு நிசியில் உங்களை எழுப்பி " என்ன யோசனை?" என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அவளுக்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் அதில் அக்கறையில்ல.லை. 30 வயதுக்கு மேலுள்ள பெண் தனக்கு பிடிக்காத விளையாட்டை முணுமுணுத்துக் கொண்டே பார்க்கவும் மாட்டாள். அவளுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் செய்வாள். அது ஓரளவு நன்றகவே இருக்கும். 30 வயதுக்க்கு மேலான பென்ணுக்கு தான் யார், தனக்கு என்ன வேண்டும் என்ன பிடிக்கும், பிடிக்காது என்று திட்டவட்டமாக தெரிந்திருக்கும். அவள் பெரும்பாலும் பிறர் - குறிப்பாக நீங்கள் - அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சற்றும் கவலைப் படமாட்டாள்.
அதோடில்லை. இந்த பெண்கள் சற்று அதிகமாகவே புகழுவார்கள். - புகழப்படுபவர்களுக்கு தகுதி உள்ளதோ இல்லையோ ! இருந்தாலும் எங்கே யாரை எவ்வளாவு புகழ வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும் ! ஒரு ரெஸ்டாரெண்ட் போகும்போது அல்லது சினிமா பார்க்கும்போது அனாகரிகமாக கத்தி அமர்க்களம் பன்ண மாட்டாள். தன் பெண் சினேதிகளிடன் கணவரை அறிமுகபப்டுத்தும்போது தயக்கமில்லாமல் செய்வாள். அவளுக்கு மற்ற இளம் பெண்கள் போல் கணவனைப் பற்றி அனாவசிய பயம் இருக்காது. இன்னொரு காரணம், அவளுக்கு அவளுடைய சினேகிதகள் மேல் நிறைய நம்பிகை உண்டு. !!!!
*******
இந்த கடிதத்தைப் பார்த்ததும் இன்று நிறைய இளைஞர்கள் தனியாக இருப்பதை விரும்புகிறார்கள் என்று எப்போதோ படித்த புள்ளி விவரம் நினைவுக்கு வந்தது. கல்யாணமாவது கத்தரிக்காயாவது? சுதந்திரமாக இருப்பதைவிட்டுவிட்டு...? என்று நினைக்கும் கூட்டம் அதிகமாகிறது என்று கேள்விபட்டேன். இதைப் பற்றி இனி அடுத்த வாரம். தற்போதைக்கு விடை பெறுகிறேன்.

Friday, March 11, 2005

டில்லியில் இருந்த சமயம் அது. ஒரு பேட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். பேட்டி காண வேண்டியவர் ஒரு ஓவியர். வங்காளப் பெண். அவரைப் பற்றி பின்புலன் விஷயங்கள் சேகரிக்கும்போது அறிந்து கொண்ட ஒரு விஷயம் மனதில் கொஞ்சம் நெருடிக் கொண்டிருந்தது. ஒரு மாதிரி விலாசம் தேடி அவர் வீட்டுக்கு சரியான நேரத்திற்கு சென்று விட்டேன். ஆனால் வாசலில் இருந்த கேட்டைத் திறக்குமுன் மனசுக்குள் ஒரு சின்ன கலக்கம். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேன். அமைதியாக எல்லா வீடுகள் மாதிரிதான் இருந்தது. திறந்து உள்ளே போய் காலிங்க் பெல்லை அமுக்கியதும் கதவைத் திறந்தது அவரேதான். பார்க்கவும் சாதாரணமாகதான் ஒரு சூரிதார் அணிந்திருந்தார். வேறு வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை. அறையை சுற்றி நோட்டம் விட்டேன். ஒரு ஓவியர் வீடு என்று தெரிந்தது. கலை வண்ணம் மிக்க அலங்காரம். மற்றபடி நான் கேள்விபட்ட சமாசாரத்திற்கான அடையாளம் ஏதுமில்லை.

சற்று யோசித்தவாறே அமர்ந்தவளிடம் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் வேலையாள். பேட்டிக்கு சுருதி சேர்க்கும் வண்ணம் ஏதேதோ சம்பிரதாயமாக பேச ஆரம்பித்தவள், சட்டென்று வாய் தவறி மனதில் தொங்கிக் கொண்டு, தொண்டைக் குழியில் மாட்டிக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டேவிட்டேன்.

" நீங்கள் ஒரு சூன்யக்காரி என்று கேள்விபட்டேனே...."

கட கடவென்று சிரித்தார் அவர். " கரெக்ட்.. ஓ, அதனால்தான் கொஞ்சம் தயங்கினாற்போல் இருக்கிறீர்களா? சூன்யக்காரி என்றால், துடைப்பத்தின் மேல் ஏறி வருவேன் என்று எதிர்பார்த்தீர்களா?" என்று சிரித்து என்னுடன் இயல்பாக உரையாடத் தொடங்கியவுடன் என் உதறல் கொஞ்சம் நின்றது. நாற்காலியில் நன்றாக உட்கார்ந்து கொண்டு ஓவியம் பற்றிய பேட்டியைத் தொடங்கினேன். (சூன்யக் கலை பற்றி அப்புறம்..)

இப்ஸிதா ராய். ஓவியர். இந்தியாவின் முதல் 21ம் நூற்றாண்டு மாடர்ன் சூன்யக்காரி. தொழில் முறையில் சூன்யக் கலையில் படித்து தேர்ந்தவர். இந்தக் கலையைப் பற்றி Beloved Witch, Sacred Evil போன்ற புத்தகங்கள் எழுதியுள்ளார்.
சென்ற வாரம் எகனாமிக் டைம்ஸ் பத்த்ரிகையின் ஒரு துணை பதிப்பில், நடிகை சரிதா சூன்யக்காரியாக நடிக்கப்போவதாக செய்தி வெளி வந்திருந்தது. அந்தப் படம் இந்த இப்சிதா ராயின் Sacred Ecil என்கிற புத்தகத்தில் வரும் ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையா க வைத்து எடுக்கப்படுகிறது. தான் எப்படி இந்த துறைக்கு வந்தார், சூன்யக் கலையின் சிறப்புகள் என்று தன் அனுபவங்களையும் தான் ஈடுபட்ட சில குறிப்பிட்ட சூன்ய நிகழ்ச்சிகளையும் புத்தகமாக எழுதியுள்ளார். டில்லியில் அப்போது சூன்ய வகுப்புகளும் எடுத்து வந்தார். - 1994 ம் வருடம் என்று நினைக்கிறேன்.

அவரிடம் பேசினதெல்லாம் இப்போது அவ்வளவாக நினைவில்லை. அந்த பேட்டி வெளியான அந்த பழைய இதழும் இப்போது என்னிடம் காணவில்லை. ( மாயமாய் மறைந்ததோ??!!!)

ஆனால் வெகு நாட்களுக்குப் பிறகு இவர் பெயரைப் பத்த்ரிகையில் படித்ததும் எனக்கு அவரை சந்திக்க சென்ற அந்த நாள் நினைவிற்கு வந்துவிட்டது. அவர் கூறிய சில விஷயங்கள் - என் நினைவிலிருந்து தோண்ட முடிந்தவரை :-)

" சூன்யம் என்பது ஒரு சிறப்பான கலை. இந்த வித்தையின் வெற்றி, அடிப்படையில் பஞ்ச பூதங்களின் சக்தியை ஆக்கபூர்வமாக ஒருமுனைப்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது. இதன் மூலம் பல வியாதிகளையும் குணபப்டுத்த முடியும். அடிப்படையில் இது ஒரு அறிவு சம்பந்தமான துறை. எவரையும் துன்புறுத்த வேண்டும் என்று யாரும் இதை உருவாக்கவில்லை." இந்த ரீதியில் இருந்தது அவர் பேசியது.
கிட்டதட்ட இந்த பேட்டிக்காக இவரை சந்தித்த அடுத்த சில நாட்களில் இன்னொரு வேலை வந்தது. சேஜோ சிங் என்ற பெண் witch hunt என்ற பெயரில் இந்திய கிராமங்களில் "வேண்டாத" பெண்கள் துன்புறுத்துவது பற்றி ஒரு டாகுமெண்டரி படம் எடுத்திருந்தார். இந்தப் படத்தையும் பார்த்து இவரையும் பேட்டி காணும் வேலை.

பீஹார், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இன்றும் சூன்யக்காரிகள் என்று பெயர் சூட்டபட்டு பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று இந்தப் படம் விரிவாக விளக்கியது. சூன்யக் காரிகள் என்று அழைக்கப்பட்டு ஊர் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு இருக்கும் மூன்று பெண்களின் பேட்டிகளும், இந்த சூன்யக்காரிகளை "குணமாக்கும்" ( நம்ம ஊர் பேய் விரட்டுதல்???) பூசாரி ஒருவரின் பேட்டியும் இதில் இருந்தது. ஒரு பெண்ணின் கணவர் விட்டுச் சென்ற நிலம் அவர் பெயரில் இருப்பதை அபகரிக்க நினைக்கும் உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணிற்கு சூன்யக்காரி பட்டம் கட்டி "தண்டிக்கப்படுகிறார்." இப்படி பழி சுமத்தபப்ட்ட பெண்ணிற்கு யாராவது ஆதரவாக பேசினல் அவர்களும் தண்டிக்கபப்டுவார்கள். சில சம்யம் குடும்பமே "சூன்யக் குடும்பம்" என்று தண்டிக்கப்படுமாம். இவர்களிடமிருந்து தண்டனையாக அதிகமாக பணம் செலுத்த வைப்பது, அவர்களால் முடியாவிட்டால் ஊரிலிருந்து தள்ளி வைப்பது, அடித்து துன்புறுத்துவது என்று இவர்கள் படும் இன்னல்கள் பல. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், வறுமை அதிகமாகும்போதெல்லாம் இப்படி சூன்யகாரி வேட்டையும் அதிகமாகிறதாம். தாங்கள் படும் கஷ்டங்களுக்கு யார் மேல் பழி போடலாம் என்று தேடுவது மனித இயல்பு. இதன் அடிப்படையில்தான் இந்த சூன்யக்காரிகள் வேட்டை நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து, படமும் எடுத்த சேஜோ சிங் கூறினார். சில சம்யம் இந்தக் கொடுமைகளைக் கண்டும் காணாதது மாதிரி பஞ்சாயத்தும் போலீசும் இருக்கின்றன என்றார். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நகர்புறங்களில் ஒரு மாதிரி என்றால் கிராமப்புறங்களில் இன்னொரு வகை.

இந்தப் படம் எடுக்கப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. இன்று நிலைமை எப்படி இருக்கிறது? அந்த சேஜோ சிங்கையும், இப்சிதா ராயையும் மறுபடி கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இளம் தலைமுறை செய்தியாளர்கள் யாராவது ரெடியா?
ஷோபா டேவின் நாவல்களில் ஒன்று கூட படித்தது கிடையாது. பொதுவாக அவர் புதினங்களுக்கு வரும் விமரிசனங்களைப் படித்தே அவற்றை பற்றி தெரிந்துவிடுவதால் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்ததில்லை.
ஆனால் ஷோபா டே என்கிற பெண் எனக்கு சுவாரசியமானவர். அவர் பத்திரிகைகளில் எழுதும் பத்திகளையும், பேட்டிகளில் அவர் கருத்துக்களையும் பொதுவாக படிப்பேன். மாடலாக ஆரம்பித்து, ஸ்டார் டஸ்ட்டில் ஹிந்தி சினிமா நட்சத்திரங்களைப் பற்றி "பூனை" போல் பத்திகள் எழுதி எழுபதுகளில் டஸ்ட் ( புழுதி :-) ) கிளப்பியவர். நான் அதைச் சொல்லவில்லை. ஆனால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, "Society", Celebrity, என்று பத்த்ரிகை உலகில் ஆசிரியராக முன்னிலைப் படுத்திக் கொண்டது, பிறகு எழுத்தாளராக உருவாகியது என்று வளர்ந்தவர் - முடிந்தவரை மேல் பூச்சுக்கள் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் இயல்பாக இருப்பதாக இவரைப் பார்த்தால் தோன்றும். மேல் தட்ட வர்க்கத்துடன் - ஆங்கில தின்சரிகளின் மூன்றாம் பக்கம் பிரசுரமாகும் பார்ட்டிகள், முக்கிய பிரமுகர்கள் என்று இவர் வளைய வந்தாலும், இவற்றுக்கப்பால் ஒரு வெளிப்படையான வாழ்க்கை வாழ்பவர். ஒளிவு மறைவு இல்லாமல் மனசில் பட்டதை சொல்வது ரசிக்கும்படி இருக்கும். இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் இவர் எழுதும் கதைகளில் ஏனோ தானோவென்று வாழும் பெண் பாத்திரங்கள் இருந்தாலும், விவாகரத்து, கூடா நட்பு என்று இந்திய பண்பாட்டுக்கு முரணாக பல அம்சங்கள் இருந்தாலும் இவருக்கு உண்மையில் திருமண வாழ்க்கையிலும் குடும்பம், தாய் போன்ற செண்டிமெண்ட் சமாசாரங்களிலும் மிகவும் பிடிப்பு உண்டு; நம்பிக்கை உண்டு. குறைந்த பட்சம் அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் வெகு முனைப்பாக இருப்பார். பேசாப்பொருளாக இருந்த பல விஷயங்களைப் பேசப் பல பெண்கள் தயங்குவதால் அவர்கள் சார்பாக தான் குரல் கொடுப்பதாக சொல்லியிருக்கும் இவர் இவற்றையெல்லாம் வியாபார நோக்குடனே எழுதுகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால் யாருக்குதான் பணம் சம்பாதிக்க பிடிக்காது? நான் ஒன்றும் சமூக சேவகி அல்ல என்ற ரீதியில் விமரிசங்களை அலட்சியம் செய்துவிடுவார்.

இவர் படைக்கும் கதாபாத்திரங்களிலிருந்து, இவர் கதை அமைக்கும் சூழல்களிலிருந்து இவர் மாறுபட்டவர் என்று ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்த இவர் மிக முயல்கிறார் என்று எனக்கு தோன்றும். மத்தியதர குடும்பத்து நெறிகள்தாம் தான் இன்றும் மதிப்பது என்பது அவர் அடிக்கடி சொல்லும் விளக்கம். எழுபதுகளில் அவர் மறுமணம் புரிந்து கொண்டு, உன் குழந்தைகள், என் குழந்தைகள் நம் குழந்தைகள் என்று 6 குழந்தைகளுடன் பெரிய கூட்டுக் குடும்பத்தை இவர் அமைத்தபோது அது பெரிதும் அலசப்பட்டது. விவாகரத்து, மறு மணம் என்பவை கசப்பான அனுபமாக இல்லாமலும் இருக்கலாம் என்று வாழ்ந்து காட்டுவது என்று முடிவெடுத்தவர் போல் இருக்கும் இவரைக் கவனித்தால். மறுமணம் புரிந்த பின்னர் ஒரு நல்ல மனைவியாகவும், பிறகு ஒரு நல்ல தாயாக தன் 6 குழந்தைகளுடன் ( 2 +2+2) உள்ள தன் பிணைப்பை பற்றி இவர் பேசாத பேட்டி இருக்காது. இவருடைய " Speed Post" Letters to my children, என்கிற புத்தகம் ஒரு அம்மா தன் குழந்தைகளுடன் தோழி போன்று எப்படி சினேகமாய், பக்க பலமாய், இருக்க வேண்டும் என்ற தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார். சில சமயம் இவர் இப்படியெல்லாம் தன்னை ஒரு குடும்பத்தலைவியாக, தாயாக, மனைவியாக முன்னிலைப் படுத்த ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார் என்று தோன்றும்.

இப்போது இவர் புதிதாக இன்னொரு நாவல் எழுதுவதில் முனைந்துள்ளார். கரு? "குடும்பம் ஒரு ஸ்தாபனம்" !! ஏன் இப்படி குடும்பம் என்கிர கருத்துக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள் என்றால், "நாடு, இனம், மொழி இவையெல்லாவற்றையும் கடந்து காலங்காலமாக தொன்றுதொட்டு மனித இனம் முழுக்க ஒரே மாத்ரியாக நெறியுடன் கட்டுகோப்பாக இருக்கும் வேறு ஏதாவது அமைப்பு ஒன்று காட்டுங்கள் பார்க்கலாம். இத்தனை காலமும் அழியாது உலகம் முழுக்க இன்னும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றால் இந்த ஸ்தாபனத்தில் நிச்சயம் ஏதோ அருமை இருக்க வேண்டும் " என்கிறார் !!

மொத்தத்தில் இவரைப் பற்றி இவர் கதைகள் மற்றும் இவர் வாழும் சமூக சூழல் காரணமாக இவரைப் பற்றி எழுந்துள்ள பிம்பத்திற்கும், தான் உண்மையில் இவற்றிலிருந்து வேறுபட்டவர் என்று இவர் அவ்வப்போது ஸ்தாபிக்க முயலுவதுமாக - ஷோபா டே ஒரு சுவாரசியமான கலவை.

Thursday, March 10, 2005

வெள்ளைமாளிகையில் ஒரு வலைப் பதிவாளர் !

மாய்ந்து மாய்ந்து வலைப் பதிந்து என்ன லாபம் என்று எப்போதாவது தோன்றினால் தொய்ந்து போகாதீர்கள். யார் கண்டார்கள் ஒரு நாள் ராஷ்டிரபதி பவனின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களில் ஒருவராக மாறலாம். அப்படிதான் அமெரிக்காவில், காரட் க்ரா·ப் (Garret Graff) என்ற ஒரு வலைப் பதிவாளர் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் ஒயிட் ஹவுஸில் நுழைந்து தகவல் சேகரிக்க அனுமதி பெற்றுவிட்டார். ஒரு வலைப் பதிவாளர் இப்படி அங்கீகாரம் பெறுவது இதுவே முதல் முறை. என்ற இவர் பதிவில் வாஷிங்டனில் நடக்கும் ஊடக் துறை வம்புகள் செய்திகள் இவைதாம் பிரதானம். இந்தச் செய்தியைப் படித்தவுடன் இந்தப் பதிவை எட்டிப் பார்த்தேன். வடிவமைப்பு, உள்ளே செய்திகள் எல்லாம் சிறப்பாகதான் இருக்கு. பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவைப் பொதுவாக ஒரு போக்குவரத்து சந்திப்பு என்று நான் நினைப்பேன். பல வலைப்பதிவாளர்களும் வந்து போகும் இடம் என்பதால். க்ரா·பின் பதிவு சுவாரசியமாக இருக்கிறது. விளம்பரங்கள், அவசியமான சுட்டிகள், வேலை வாய்ப்பு என்று களை கட்டி அமைந்துள்ளது.
வலைப் பதிவுகள் இந்தியாவில் இன்னும் அவ்வளவு கவனம் பெறவில்லை என்றாலும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. எகனாமிக் டைம்சில் கட்டுரை முதலில் வெளியானதுக்கு பிறகு கூட Main Stream media வில் இந்தியப் பதிவாளர்களைப் பற்றி அதிகம் ஊடகங்களில் பற்றி காணோம். ஆனால் நேற்று ஹிந்துவின் மெட்ரோ பிளஸில் ஒரு கட்டுரை வந்துள்ளது. ( இன்னும் இணைய பதிப்பில் சுட்டி கிடைக்கவில்லை.) சென்னையில் வரும் supplement பத்திரிகையில் தமிழ் பதிவாளர்களைப் பற்றி ஒரு வரி இருக்க வேண்டாமோ? இல்லையே...! அதுசரி. தமிழ் பத்திரிகைகளே பதிவுகளைப் பற்றி கண்டு கொள்வதில்லையே? நானூற்றி சொச்சம் பேர் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்; பலவித எண்ணங்கள் பதிவாகின்றன. சத்தம் போடாமல் ஒரு நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்பது ஆச்சரியமாகதான் இருக்கிறது.

Wednesday, March 09, 2005

நேற்று மார்கெட் போகும்போது அப்படியே சலவை நிலையம் போகும் வேலையும் இருந்தது. அங்கே இருக்கும் பெண் எப்போதும் நான் துணிகளைக் கொடுக்கும்போதும் வாங்கும்போதும் மௌனமாக கடமையாக - இயந்திரம் போல் செய்வார். நேற்று நான் போகும்போது அவர் முகத்தில் ஒரு புன்னகை. புது புடவைக் உடுத்திக்கொண்டு முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது. நானும் சிரித்துக் கொண்டே "என்ன, Women's Day" என்று கொண்டாட்ட மூடில் இருக்கிறீர்களா என்று பேச்சு கொடுத்தேன். அவரும் சிரித்துக் கொண்டே, கொண்டாட்டம்லாம் சரிதான் ஆனா, நம்மை யாராவது மதிச்சால்தானேங்க கொண்டாட்டம் எல்லாம்," என்று இயல்பாக கூற வந்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார். எனக்கு அவர் ஏதோ சொல்ல நினைப்பதுபோல் பட்டது... அவருடைய எண்ணச் சிதற்கள் கீழே விழும்போதே பிடித்துவிடும் ஆர்வத்தில் "என்ன சொன்னீங்க..."? என்று மறுபடி வினவும்போது அவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டார். அந்தக் கடையை அவரும் அவரது கணவருன்தான் நடத்துகிறார்கள். அவரது கணவர் கௌண்டர் பின்னாடி இருந்த அறையில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் பெண் சொல்ல வந்ததை ஏன் முழுங்கினார் என்று புரிந்துவிட்டது. அவர் என்ன சொல்ல வந்தார் என்று உங்களுக்கும் அவர் கோடி காட்டிய ஒரு வரியிலேயே புரிந்திருக்கும்.
பத்மா அரவிந்த், என் நேற்றைய பதிவிற்கு அளித்த தன் பின்னூட்டத்தில், பெண்கள் இன்னல்படும் நிகழ்ச்சிகள் பலவற்றை சுட்டி காட்டி, நான் முன்னே சொல்லியிருந்த "ஆண்கள் மாற்றம்" எல்லாம் பரவாலாக இல்லை; மிகச் சிறிய சதவிகிதம்தான் அபப்டி மாற்றங்கள் நிக்ழந்துள்ளன என்று எழுதியுள்ளார். அவருக்கு என் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் கருத்தையே இங்கும் முன் வைக்கிறேன். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அநியாயங்கள் இன்னும் பல இடங்களில் நடக்கின்றன என்பதாலேயே கண் முன்னால் தெரியும் நல்ல மாற்றங்களையும் அங்கீகரிக்க வேண்டும் இல்லையா ? சந்திரவதனா குறிப்பிட்டமாதிரி இன்றைய இளம் தலைமுறையில் மாற்றங்கள் இயல்பாகவே தெரிகிறது. மேலே சொன்ன லாண்டிரி பெண் பெண்கள் கணவனிடமிருந்து ஒரு " மதிப்பை", மரியாதையை எதிர்பார்க்கிறார்கள் என்று புரிகிறது. அது கிடைக்கவில்லை என்று அவர் உணருகிறார். "காலத்தின் கட்டாயத்தினால்", இன்று அவர் கௌண்டர் முன் நின்று கணவருக்கு இணையாக வேலை செய்தாலும் அவரை, அவர் எண்ணங்களை மதித்து நாலு வார்த்தை பேச ஆள் இல்லை என்று அவருள் ஒரு வருத்தம் தென்பட்டது. நான் மேலே கேட்ட கெள்விக்கு மழுப்பலாக சமாளித்தார். லேடீச் டே என்றால் நாங்க தெரிஞ்ச சினேகிதங்க ஒருவருக்கொருவர் இனிப்பு பகிர்ந்து கொள்வோம். ஆனால் அப்படி ஒன்றும் எனக்கு நிறைய சினேகிதிகளும் இல்லை, " என்றார்.

எனக்கு அவர் குடும்பத்தை தெரியாது. ஆனால் நிச்சயமாக அவருக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அவர் தன் மனைவியை இன்னும் சமமாக பாவிப்பார் என்பது என் ஊகம். மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் மில்லி மீட்டர் அளவாவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமூக மாற்றங்கள் பொதுவாக கலாசாரம், சரித்திர பிண்ணனி, என்று இப்படி பல வேர்களைப் பொறுத்து நிகழ்கிறது. பெண்களை தாழ்வாக நினைக்கும் சமூகப் பார்வை பழைய ஆசிய பழங்குடி மக்களிடமும் ஆப்பிரிக்க பழங்குடியினரிடமும் கிடையாது. அங்கே தாய் முறைதான் வம்சாவளி. ஆனால் ஜப்பானில் இன்னும் பெண்களுக்கு சம உரிமை அரிது. பல அலுவலகங்களில் இன்றும் தேநீர் தயாரித்து கொடுப்பது போன்ற உபசரிப்பு வேலைகள் பெண் சக பெண் ஊழியர்களால் செய்யப் படுகின்றன என்று கேள்விபட்டேன். ( ஜப்பானில் இருக்கும் பதிவாளர்கள் அவர்கள் அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ) பொதுவாக குடும்பங்களிலும் நம் பழைய தலைமுறை மாதிரி பெண்களை ஒடுக்கும் நிறைய பழக்கங்கள் உண்டு. ( கெய்ஷா பெண்மணிகள் ஒரு உதாரணம்)

நடுவில் வரும் சில கலாசார தாக்கங்கள் எப்படி ஒரு சமூகத்தின் பார்வையை மாற்றுகின்றன என்பதற்கு ஜப்பானும் ஒரு உதாரணம். ஜப்பானில், பல வருடங்களுக்கு முன்னர் அரச குடும்பத்தின் பெண் வாரிசுகள் நாட்டை ஆண்டதாக சரித்திரம் இருந்தாலும் நடுவில் எப்போதோ அரசியல் சாசனத்தில் பெண் வாரிசுகள் அரசியாக முடியாது என்ற ஒரு கட்டுபாடு எப்படியோ இடம் பெற்றுவிட்டது. அதன்படி, இன்று ஜப்பானிய அரசியல் சாசனப்படி, இளவரசர் நருஹிட்டோவின் மகள் ராணியாக ஆள முடியாது. இன்று ஜப்பானின் அரசு குடும்பத்தில் வேறு ஆண் வாரிசுகளே இல்லாத நிலையில் இளவரசர் நருஹிட்டோவிற்கு அடுத்து யார் மகுடம் சூட்டுவது என்ற ஒரு கேள்வி எழும். இதற்கு வழி காண அரச குடும்பத்து பாட்டி ஒருவர் பெண் வாரிசுகள் அரசியாகலாம் என்று அரசியல் சாசனத்தை மாற்றும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் ஏற்கனவே ஜப்பானின் சரித்திரத்தில் 8 அரசிகள் ஆண்டதை மேற்கோள் காட்டுகிறார்.

ஜப்பானில் மறுமுறை சரித்திரம் எழுதப்படும் என்று நம்புவோம். நம் ஊரில் மேலே சொன்ன சலவை நிலையப் பெண் போன்றவர்கள் உண்மையாகவே தாங்கள் மதிக்கப் படுவதாக என்ணும் நாள் விரைவில் வரும் என்றும் நம்புவோம்.

Tuesday, March 08, 2005

பெண்கள் தின வாழ்த்துக்கள் :-)

சக பெண் பதிவாளர்களுக்கும் வாசகிகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் :-)

காலத்தின் போக்கில் மனிதர்கள் மாறும் விதம் எப்போதுமே சுவாரசியமானதுதான். நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்று சற்று திரும்பி நம் சென்ற தலைமுறைகளைப் பார்த்தால் புரியும்.

என் தாத்தா பாட்டியை பெயர் சொல்லி அழைத்தது இல்லை என்று சொல்லுவார்கள். இன்னும் எனக்குத் தெரிந்த பழைய தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பெயர் சொல்லி அழைத்தது இல்லை. மனைவியை அழைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் வார்த்தைகள் - "ஏய்", "இந்தா", "இங்கே வா", "அடியே", "டீ....." மனுஷி, "அவ", "ம்".... இன்னும் சில. அந்த கடைசியில் சொன்ன "ம்" க்கு கூட எத்தனை சக்தி தெரியுமோ? ஒரு கனைப்பு, ஒரு உறுமல், என்று மனைவியை அழைக்கும் "வார்த்தைகள்" பல உண்டு. சின்ன தாத்தா ஒருவர் தன் மனைவியை "இந்தா" என்று அழைக்கும் தொனியிலேயெ அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்று பாட்டிக்கு புரிந்து போய்விடுமாம். கடுப்பாக, சாந்தமாக, கோபமாக, எரிச்சலாக, அன்பாக ( எப்போவாவது) என்று அந்த "இந்தா" வில் ஆயிரம் உணர்வு வெளிப்பாடு இருக்குமாம். எப்போதும் மனைவியிடம் ஒரு கடு கடு முகத்துடன்தான் பேசுவாராம். ஏன்? ஆங்....அதெப்படி? கணவன் மனவி தங்கள் அன்பை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வது மகா குற்றமாயிற்றே? முகத்தில் கொஞ்சூண்டு சிரிப்புடன் பேசினாலே பெண்டாட்டிதாசன் என்று சொல்லிவிடுவார்களே....? அப்புறம் ஆண் என்கிற இமேஜ் என்ன ஆவது? தவிர இப்படி உருட்டி, மடக்கி கொஞ்சம் முறுக்காக இருந்தால்தான் "அவர்கள்" ஒரு "நிலையில்" இருப்பார்கள். "கொஞ்சம் இடம் கொடுத்தால் போச்சு. இவர்களுக்கு அதிகாரம் தலைக்கு ஏறிடும்." இது பரவலாக அந்த தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பற்றி சொல்லும் கமெண்ட். விதி விலக்குகள் உண்டு.. எங்கள் குடும்பத்திலேயே கூட. ஆனால் விதிவிலக்கு என்றுதான் சொல்கிறேன். பரவலாக மனைவி என்பவள் தன் உடமை, தனக்கு அடிபணிந்தவள், அடிபணிய கடமைப் பட்டவள் என்ற மனப்பான்மை ஓங்கியிருந்த காலம் அது. வேறொரு தாத்தா பாட்டி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட கருப்பு/ வெள்ளை புகைப்படம் ஒன்றை அந்த தாத்தாவின் சந்ததியினரின் வீட்டில் பார்த்தபோது தோன்றிற்று. போட்டோவில் பாட்டியின் முகத்திலும் தாத்தாவின் முகத்திலும் " Cheese" சொல்லும் அளவு புன்னகை ! எப்போதும் மனைவியிடம் கடுகடுக்கும் அவருக்கு எப்படி அன்று முகத்தில் புன்னகை வந்தது என்று எனக்கு ஒரு எக்குத் தப்பாய் ஒரு கேள்வி தோன்றும். சரிதான், அதுவும் போட்டோ என்கிற "சாஸ்திர" கட்டுபாட்டிற்கு உடன் பட்டிருப்பார் என்று நானே பதிலும் சொல்லிக் கொள்வேன்.

இன்னொரு நண்பர் வீட்டில் பெரியப்பா ஒருவர். வீட்டில் எல்லோரும் அரட்டை, ஆட்டம் என்று கொட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த பெரியப்பாவின் வண்டி சத்தம் வாசலில் கேட்டதுமே அவரவர் சிட்டாய் மூலைகளுக்கு பறந்துபோய் ரொம்ப மும்முரமாய் "வேலை" பார்ப்பார்கள். இவருக்கு மெள்ளவே பேசத்தெரியாது. எப்பவும் மிரட்டலும் அதிகாரமும்தாம். ஆனால் இவ்ருடைய மனைவி நேர் எதிர். நகைச்சுவையொழுக பேசுவார். சிரிக்க சிரிக்க வீட்டு சமாசாரங்கள் பேசுவார் என்று சொல்வார்கள். நன்றாக பாடவும் பாடுவார். ஆனால் தனக்குள்ளேயேதான். தாத்தா காதில் விழாமல். ஊக்கம் கொடுத்திருந்தால் பெரிய பாடகியாகவே வந்திருப்பார். இன்னொரு பழைய தலைமுறை உறவினர், மருமகளுடன் கூட நேருக்கு நேர் பேச மாட்டார். மருமகள் என்பவள் வீட்டில் ஏவலுக்கு இன்னொரு ஆள். இதை இங்கே வை; அதை கொண்டுவா... தோட்டக்காரன் வந்தானா? என்று கேள்விகள், கட்டளைகள் பொதுவாக இருக்கும். யாரைச் சொல்கிறார் என்று மருமகள் புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் தவிர, பெண்களின் பிரத்தியேக இயற்கை உபாதை நாட்களில் இந்த மாதிரி பழைய தலைமுறை சம்பிரதாயம் இருக்கும் வீடுகளில் பெண்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. மாட்டுத் தொழுவம்தான் இருப்பிடம். ஊர்வன, நெளிவன எப்போ வந்து தாக்குமோ என்று பயந்த வண்ணம் பகல் பொழுது கழியும். சில வீடுகளில் பெரிய மனது பண்ணி இரவு வேளைகளில் மட்டும் பின் பக்க தாழ்வாரத்தில் இடம் கிடைக்கும். வீட்டு ஆண்கள் இந்த சமயத்தில் தீட்டு பெண்களைப் பார்க்ககூட மாட்டார்கள். மாமியார் அல்லது வீட்டில் மற்ற பெண்கள் நாலடி தூரத்தில் வைக்கும் சாப்பாடு பெரும்பாலும் பரிதாப நிலையில் இருக்கும். முறுக்கு போன்ற திண்பண்டங்கள் கிரிகெட் பால் கணக்கில் விட்டெறியப்படும்போது சாமர்த்தியம் இருந்தால் கேட்ச் பிடித்துக் கொள்ளலாம்.

சரி, மேடையில் திரை மாறுகிறது. வருடம் 2000 சொச்சம். மேலே சொன்ன உறவினர்களின் அடுத்த தலைமுறை குடும்பங்களைப் பார்க்கிறேன். அவர்களுடைய மகன்கள், மகள்கள் என்று குடும்பம் விரிந்துள்ளது. ஆனால் பார்வையில்தாம் எவ்வளவு வித்தியாசம்? அறுபது வயதாகும் குடும்பத் தலைவர் தன் மனைவியுடனும், மருமகளுடனும் தோழமையுடன் பேசுகிறார். சினிமா, அரசியல் என்று வீட்டுப் பெண்களும் ஆண்களும் ஒன்று சேரும்போது கலகலவென்று சபை கூடுகிறது. மன வித்தியாசங்கள் இல்லாமல் இல்லை. அவையும் நேருக்கு நேர் பேசப்பட்டு சரிபடுத்தப் படுகிறது.

வெளியில் ரயில் பயணம் செய்யும்போது அடிக்கடி கன்ணில் படும் ஒரு காட்சி. மனைவிக்கு அனுசரனையாக கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் இளம் கணவர்கள். இரவு குழந்தை அழும்போது தன்னிச்சையாக நீ படுத்துக்கோ, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் கணவர்கள். முகம் சுளிக்காமல் குழந்தை ஈரம் செய்தால் துணி மாற்றி பால் கரைத்து.... வெளியில் ஓடிப்போய் பழம் பிஸ்கெட் வாங்கி... மனைவிக்கு பிடிக்கும் என்று தேடிப் போய் பெண்கள் பத்திரிகை வாங்கி.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்... சில சமயம் மனசு நெகிழ்ந்துதான் போகிறது.

ஆண்கள்தாம் எவ்வளவு மாறிவிட்டனர் ?? !!

மகளிர் தினத்தில் மாறி வரும் ஆண்களுக்கு ஒரு "ஓ" போட வேண்டாமா? :-)

Monday, March 07, 2005

கைதட்டலோ / அழுகிய தக்காளியோ........ :-)

வலைப் பதிவுகளைத் தொடர்ந்து இந்த 22 மாதங்களாக கவனித்து வருபவள் என்ற முறையில் சில அடிப்படை என்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
சென்ற வாரம் கண்ணன் எழுதியிருந்தார் - மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதினாலும் யார் படிக்கிறார்கள் என்றே தெரிவதில்லை; பின்னூட்டங்கள் வருவதில்லை என்று எழுதியிருந்தார். அவ்வளவுதான்; ஊதிய தணல் நெருப்பாய் எரிவதுபோல் மட மடவென்று அந்த பதிவுக்கு போட்டி போட்டுக் கொண்டு பின்னூட்டம் வந்து சேர்ந்தது. பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ, நாம் எழுதுவதை சிலர் - பல சம்யம் பலர் - படிக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. மீனா சொன்னதுபோல் பின்னூட்டம் விடாமல் இருக்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். கருத்து பெட்டி காலியாக இருக்கே என்று மனம் சோர்ந்துவிடாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே அல்லது, கருமமே கண்ணாயினார் என்பதுபோல் நம் மனதில் தோன்றுவதை உடனுக்குடன் எழுதி விண்வெளியில் நமது குடிலில் போட்டுவிட வேண்டும். கண்காட்சி மாதிரி ஸ்டால் போட்டச்சு என்றால் அதை அழகுறவும் ஆரோக்கியமானதுமாக வைத்துக் கொள்வது நம் வேலை. அதனால் இடையில் அவ்வப்போது தொய்ந்து போகாமல் எழுதுவது முக்கியம். என்ன எழுதுவது, எது, எப்படி, ஏன் என்பனவெல்லாம் தானே இயல்பாக வரும். இன்று சிக்கல் பதிவில், தமிழ்ப்பாம்புவின் ஒரு நோக்கு ( observation) சுவாரசியமாக இருந்தது. பல பதிவுகளின் தலைப்பில் பதிவாளர்களுக்கு தங்களைப் பற்றி தாங்களே சொல்லிக்கொள்வதிலிருக்கும் தயக்கம் வெளிப்படுவதாகவும், இது தமிழர்களுக்கே உரித்தான ஒரு இயல்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
என் நோக்கில் நம்முடைய இன்னொரு இயல்பான செயல் சட்டென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதுதான். உலகின் பல மூலைகளில் இருந்தாலும் முன் பின் பார்த்தறியாமல் இருந்தாலும் ஒரு சினேக பாவம் பல பதிவுகளில் / பின்னூட்டங்களில் இழையூடுகிறது. சீண்டல்களும், நகைச்சுவையும் பதிவுகளுக்கு சுவாரசியம் கூட்டுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது சில சமயம் அளவு மீறி குழந்தைத் தனமாக ஆகிவிடாமலும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சி வசப்படுதலும் தமிழர்கள் குணம். பதிவுகளும் இதை ஓரளவு பிரதிபலிக்கின்றன. இங்கும் எழுதும்போது சுய கட்டுப்பாடு ஓரளவு இருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகத்தில் எள்ளி நகையாடுதலோ பிறரை புண்படுத்தும் வகையிலோ இருப்பதை தவிர்க்கலாமே. அப்போது பூக்களின் வாசம் இன்னும் மேன்மையாக இருக்கும்.

திசைகளின் வாரந்தோறும் பூ வாசம் என்று அந்தந்த வாரத்து பூக்களிலிருந்து சிலவற்றை மாதிரிக்கு காட்டும் பணி வேறு இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளது. இது இன்னும் நிறைய பேரை வலை பதிய தூண்டும் என்று நினைக்கிறேன். இதனால் வரும் நாளில் பதிவுகள் அருவியாக பெருகி விழும்போது, ஒருவருக்கொருவர் மற்ற பதிவுகளைப் படித்து ரசித்து நம் எழுத்துக்கும் மெருகூட்டுவது வலைப் பதிவுகளின் பரிணாம வளர்ச்சிக்கு உதவும்.
பதிவுகளை பலவாறு வகைப் படுத்தலாம். சொந்த அபிப்பிராயங்கள் - எல்லாத் துறையிலும் ; பயனுள்ள செய்திகள் / கற்றுக் கொள்ளத்தக்கவை; அனுபவம் பகிர்தல்; மற்றும் நகைச்சுவை அல்லது just fun and entertainment. இந்த நான்கு பெரிய வகையினுள் பல கிளைகளும் உண்டு - அரசியல், சினிமா, வாழ்க்கை, கலாசாரம், நாட்டு நடப்பு, சமூக இயல், பாஷன், அலங்காரம், உணவு, என்று எத்தனையோ வகை. பல புதிய பதிவுகளில் இப்படி நிறைய வித்தியாசமான அம்சங்களைக் காண்கிறேன். ஒரு missing விஷயம் பாஷன், அலங்காரம், உடை போன்ற life style சமாசாரங்கள். தமிழர்களுக்கு இவற்றில் ஆர்வம் கொஞ்சம் கம்மியோ?? பாண்டிபஜாரையும் உஸ்மான் ரோடையும் வலம் வந்தால் அப்படி தெரியவில்லையே ? :-)

சில பதிவுகளில் என்ன எழுதுவது என்ற ஒரு குழப்பம் காணபப்டுகிறது. எதையோ எழுத வேண்டும் என்று பக்கத்தை நிரப்பாமல், தான் என்ன சொல்ல விரும்புகிறோம் என்று மனசுக்குள் தெளிவாக்கிக் கொண்டு பிறகு எழுதினால் எழுத்தில் ஒரு கூர்மை இருக்கும். அதேபோல் என்ன எழுதுவது என்று விஷயத்துக்கும் ரொம்ப யோசிக்க வேண்டாம். தினம் நாம் எதிர்படும் - கண்ட, கேட்ட, அறிந்துகொண்ட விஷயங்களையே எளிமையாக சுவாரசியமாக எழுதலாம். ஆனால் எந்த விஷய்மானாலும் அதில் ஒரு பிடிப்போடு கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு எழுதினால் அதில் ஆழம் இருக்கும். எழுதும்போதே உங்களை ஒரு வாசகராக நினைத்துக் கொள்வது ஒரு நல்ல உத்தி. குஷ்வந் சிங் அடிக்கடி சொல்லுவார். " நான் எதைப் படிக்க விரும்புகிறேனோ அதைத் தான் எழுதுவேன்." என்று. அதேபோல் எழுதும் விதத்தில் craft க்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நெடு நாள் விவாதம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எழுதுவதில் ஒரு விஷயம்/ செய்தி பகிர்தல் இருக்கா என்பதும் எழுதும் விதத்தில் படிப்பவர்களோடு ஒரு இணைப்பு அல்லது தொடர்பு ( RELATE) ஏற்படுத்த முடிகிறதா என்று பார்ப்பேன். craft எனக்கு அவ்வளவு முக்கியமாக படாது - நல்ல craft ஆக இருந்து படிப்பவர்களிடம் அது ஒரு தொடர்பு ஏற்படுத்தவில்லையென்றால் அந்த CRAFT வியர்த்தமே. அதுபோல் எழுதும்போதே யாருடன் பேசுகிறீர்கள், யார் படிப்பார்கள் என்று மனசில் ஒரு பிம்பம் வைத்துக் கொண்டு "பேசுங்கள்". பின்னூட்டம் வருவது மட்டுமே ஒரு பதிவுக்கு முக்கியம் அல்ல. அதேபோல், என்ன மாதிரி எழுதினால் பின்னூட்டம் வரும் என்று நினைத்துக் கொண்டு எதையோ தொடர்பில்லாமல், ஆழமில்லாமல் எழுதுவதும் உசிதமல்ல - என் பார்வையில்.

என் பதிவுகளில் மேலே கூறியவற்றை முழுவதுமாக பின்பற்றுகிறேனா என்பது படிப்பவர்களின் பார்வையைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரையில் அச்சு ஊடகத்தில் எழுதும்போது நான் பின்பற்றும் அதே சுய விதிகளைதான் பதிவுகளிலும் பின்பற்ற முயலுகிறேன். ஒரு வித்தியாசம் - பதிவுகள், மேடை நாடகம் மாதிரி. உடனுக்குடன் கைதட்டலோ / அழுகிய தக்காளியோ கிடைத்துவிடும். இதர ஊடகங்களில் சற்று நிதானமாகவே உணர முடியும் :-)
கிரிகெட் மேட்ச் நடக்கும்போது பெரிதாக தொங்கும் ஸ்கோர் பலகையைப் பார்த்தால் எண்கள் அவ்வப்போது ஸ்லோ மோஷனில் மெல்ல மாறிக்கொண்டிருக்கும். இருந்தார்ப்போலிருந்து திடீரென்று எண்கள் வேகமாக பட படவென்று மாறும். ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது என்று புரிந்து போகும்.

அதுதான் நடந்து கொண்டு இருக்கு தமிழ் மணம் தளத்தில் இப்போது. நான் வேலை செய்யும்போது தமிழ் மணம் தளம் சிறிது படுத்தி ( minimise) எப்போதும் கீழே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும். அரை மணிக்கு ஒரு முறை - சில சமயம் கால் மணிக்கு ஒரு முறை எடுத்து பார்க்கும்போது நிச்சயம் ஏதாவது சில பதிவுகள் இற்றை படுத்தப் பட்டிருக்கும். இடது ஓரம் புதிய பதிவுகள் ஏதாவது முளைத்திருக்கும். கிடு கிடுவென்று இந்த கௌண்டர்கள் நகருவதைப் பார்த்தால் ஒரே பிரமிப்பாக இருக்கும். புதுப்பித்த பதிவுகள் வேகமாக கீழே இறங்கி புதியனவைக்கு இடம் கொடுத்து conveyer belt மாதிரி நகர்ந்து கொண்டிருக்கும்.

இப்போது மாதிரிதான் இருக்கிறது. சென்ற வருடம் மார்ச் மாதம் வலைப்பூ ஆசிரியராக இருந்தது. அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டதா என்று மனசுக்குள் ஒரு குட்டி ஆச்சரியம்.

சென்ற வருடம் இந்த மகளிர் வாரத்தில் ( அப்போதுதான் பதிவுகள் 100 என்ற இலக்கத்தைத் தாண்டி மெல்ல நடை போட்டுக்கொண்டிருந்தது.) எழுதியிருந்தேன்; அடுத்த முறை நான் ஆசிரியராகும்போது ஆயிரம் பதிவுகளை வலம் வரும்படி இருக்க வேண்டும் என்று. ( இந்த பழைய வலைப்பூக்கு சுட்டி முகப்பில் எங்காவது கொடுக்கலாமே ?)

எழுதும்போதே, "16 ம் பெற்று பெரும் வாழ் அல்லது 100 ஆயுசு... என்றெல்லாம் வாழ்த்துவதுபோல், ஏதோ ஒரு வாய் வார்த்தையாக, ஆயிரம் என்று சொல்வதாகதான் எனக்கு தோன்றிற்று. ஒரு வருடத்தில் ஆயிரம் பதிவா..? சான்ஸே இல்லை - இன்னொரு 100 வந்தாலே பெரிய சாதனை அது என்றுதான் எண்ணினேன்.

ஆனால் இப்போது ஆயிரத்தில் பாதியை வேகமாக நெருங்குகிறது தமிழ் பதிவுகளின் எண்ணிக்கை. இந்திய மொழிகளில் அதிகம் பதிவுகள் உள்ள மொழி தமிழ். மற்ற எந்த மொழிகளிலும் தமிழ்மணம் போல் பதிவுகளை ஒருங்கிணைக்கும் சேவை கிடையாது. பொதுவாக எல்லா மொழிகளிலுமே பதிவாளர்கள் ஆங்காங்கே பரவலாகதான் இருக்கிறார்கள். தங்களுக்கு பரிச்சயமான பதிவுகளுக்கு மட்டும் மேய்வதுதான் வழக்கம் - எப்போதாவது தொடர்பு சுட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பல்வேறு பதிவுகளை நிதானமாக மேய்வதும் வழக்கம். ஆனால் இந்த ஒரு குடையின் கீழ் உத்தியால் நிறைய பதிவாளர்கள் கவனம் பெறுகிறார்கள். இன்னும் பல புது பதிவாளர்களை இது காந்தம் போல் ஈர்க்கிறது.

இன்று வலைப்பூ ஆசிரியர் என்பது நட்சத்திர பதிவு என்றாகியுள்ளது. மதியும் காசியும் ஒளி வெள்ளம் அலைகளின் மேல் விழவேண்டும் என்று தீர்மானித்து எனக்கு அன்புக்கட்டளையும் இட்டுவிட்டனர். எனவே, அடியேன்தான் இந்த வாரம் உங்களுடன் பயணம் செய்யப்போகிறேன். 408 பதிவுகளையும் இந்த ஒரு வாரத்தில் படிக்க முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும் நிச்சயம் பரவலாக உங்களுடன் சேர்ந்து வலம் வரலாமென்றிருக்கிறேன். எங்கே, Fasten Your Seat Belts...... :-)

தகவல் கசிவு?? - செய்தி????

உங்களுக்கு பின்சோ·பிஸ் ( கற்பனை பெயர் என்று பார்த்தாலே தெரியுது இல்லே?) நிறுவனத்தில் ஒரு நண்பர் இருக்கிறார் என்று வையுங்கள். நீங்களும் அவரும் காபி கிளப்பில் ( நிஜம் காபி கிளப்) அரட்டை அடிக்கும்போது ஒரு புது தயாரிப்பு வருவதைப் பற்றி தெரிவிக்கிறார். நீங்கள் உடனே வீட்டுக்கு வந்து அதை உங்கள் பதிவில் பதிக்கிறீர்கள்.

இப்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பு ரகசியம் வெளியே வந்துவிட்டது என்று சொல்லி அந்த நிறுவனம் உங்களுக்கு அந்த தயாரிப்பு பற்றிய விவரங்களைக் கொடுத்தது யார் என்று கேட்டு வழக்கு தொடரமுடியுமா?

உங்களுக்கு தகவல் கொடுத்தவரைக் "காட்டிக் கொடுக்க" சொல்லி உங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு அந்த நிறுவனம் முறையிடலாமா?
இங்கே முடியுமா இல்லையா தெரியாது. ஆனால், அமெரிக்காவில். சிலிகான் பள்ளத்தாக்கு பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு இணைய பத்திரிகைகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. காரணம். இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான "அஸ்டிராய்ட்" பற்றிய விவரங்கள் இந்த இணைய பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. இவர்களுக்கு இப்படி உள் தகவலை கசிய செய்தவர்களை அடையாளம் காட்டும்படி வழக்கு. இன்னும் திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கப்படவில்லையென்றாலும் இங்கே நீதியரசர் ஓரளவு ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். அந்த நிறுவனத்தின் தயாரிப்பு பற்றி முன்கூட்டியே கசிய செய்தவர்கள் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்று.

இது பத்திரிகை சுதந்திரத்தை பாதிப்பதாக அந்த இணைய பத்திரிகைகளின் சார்பில் வாதாடும் Electronic Frontier Foundation என்கிற டிஜிடல் உரிமை பாதுகாப்பாளர்கள் சங்கம் கூறுகிறது. பொதுவாக செய்தி சேகரிப்பவர்கள் தங்கள் தகவல் ஆதாரங்களை வெளியே சொல்ல மாட்டார்கள். அது பொதுவாக பத்திரிகை தர்மமுமல்ல. ( சென்ற வருடம் இந்தியாவில் Draconian law என்று விமரிசிக்கப்பட்ட "பொடா" சட்டத்தில் இந்த அம்சம் -அரசாங்கத்துக்கு தேவையிருந்தால் செய்தியாளர்கள் தங்கள் தகவல் தருபவர்களை; ஆதாரங்களை வெளிக்காட்ட வேண்டும் என்ற பகுதி பெரிய எதிர்ப்புக்குள்ளானது நினைவிருக்கா?) கலிபோர்னியாவில் இதர ஊடகங்களில் இருக்கும் பத்திரிகையாளர்களின், எழுத்து மற்றும் செய்தி சேகரிக்கும் சுதந்திரத்தை வலியுறுத்தும் சட்டம், (First Amendment and the California Shield Law) இணைய பத்திரிகைகளுக்கும், வலை பதிவுகளுக்கும் சம அளவுகோலில் பின்பற்ற பட வேண்டும் என்கிறார்கள் இந்த டிஜிடல் உரிமை பாதுகாப்பாளர்கள் சங்கத்தினர்.
"செய்தியாளர்களின் உயிர் நாடியே தகவல் கொடுப்பவர்கள்தாம். இவர்களைக் காட்டிக் கொடு என்பது எப்படி நியாயமாகும்? செய்தியாளர் என்றால் எல்லாரும் ஒன்றுதான் - அச்சு மற்றும் எலெக்டிரானிக் ஊடகங்கள் மற்றும் இணையம் சார்ந்தவைகள். அவர்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? இணைய பதிப்பு என்றால் மட்டமா என்ன? நீதிமன்றங்கள், தகவல் தருபவர்களின் நம்பிக்கைக்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்" என்பது இவர்கள் வாதம்.

இந்த வழக்கு, இணைய செய்தி ஊடகங்கள் மேலும் வலைப்பதிவாளர்களின் மேலும் ஒளிபாய்ச்சுகிறது. இதர ஊடகங்களின் செய்தியாளர்கள் போல் இந்த இனைய செய்தியாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழில் முறை பத்திரியாளர்களா? கேள்விகள் சுழல ஆரம்பித்துவிட்டன.

வழக்கு தொடரப்பட்ட இணைய ஊடகங்களுக்காக வாதாடும் Electronic Frontier Foundation உறுப்பினர் ஒருவர் கூறுவதுபோல், இது ஒரு நுழைவாயிலில் உள்ள விஷயம். உள்ளேயும் அனுமதிக்கப்படலாம், வெளியேயும் தள்ளப்படலாம். அபப்டி உள்ளே அனுமதிக்கப்பட்டால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த தயாரிப்பு ரகசியம் கசிவின் மூல ஆதாரம் தேடும் அவசியம் எவ்வளவு தூரம் முக்கியம் என்று நீதிபதிகளால் ஆராயப்படும். அப்படி ஒரு வேளை First Amendment and the California Shield Law கீழ் இணைய ஊடகங்கள் அனுமதிக்கபப்டவில்லையென்றால், அவை இந்த சோதனைக்கு ஆளாக வேண்டிய அவசியமே இல்லை. அதாவது இவர்கள் தொழில்முறை செய்தி ஊடகங்களல்ல; சும்மா பொழுது போகாதவர்கள் வேலை ( கையெழுத்து பத்திரிகை???!) என்று விட்டு விடலாம். ஆனால் அப்படி விடவும் முடியாது. ஏனென்றால் ஆப்பிளின் தலைவர் ஸ்டீவ் இந்த இணைய பத்திரிகையின் ஆசிரியருக்கு ஒரு தொழிமுறை பத்திரிகையாளர் தகுதியையே இதுவரை அளித்துள்ளார் - ஸ்பெஷலாக பேட்டி கொடுத்தது உள்பட..
பத்த்ரிகையாளர்கள் யாராயிருந்தாலும் - தொழில்முறையோ, அல்லது இணையமோ - ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு ரகசியங்கள் பற்றி தகவல்கள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை என்பது ஆப்பிள் நிறுவன அதிகாரியின் ஆணித்திரமான வாதம். தயாரிப்பு தகவல் முன்கூட்டியே கசிவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் போட்டி தயாரிப்புகள் தயாரித்து, சந்தையில் முன்கூட்டியே வெளிக்கொண்டுவரும் அபாயம் உள்ளது என்கிறார் இவர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதியோ இந்த நிறுவன தகவல் கசிவு, ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியக் கசிவுக்கு சமானம் என்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? என்பது இவர் கேள்வி.
ஆப்பிளின் தகவல் கசிவுக்கு இணைய பதிப்புகள் மட்டுமே காரணமா அலல்து அதன் மற்ற ஊழியர்கள் கூட காரணமாக இருந்திருக்கலாமா என்று சரிவர ஆராயமல் ஊருக்கு முன்னால் முதல் காரியமாக பத்திரிகை சுதந்திரத்தின் மேல் கைவைக்க கூடாது என்று இந்த இணையத் தளங்களின் வக்கீல் சாடுகிறார்.

தீர்ப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்னுள் நிறைய கேள்விகள்? நீதிபதி சொல்வதுபோல் ஒரு நிறுவனத்தின் தொழில் ரகசியம் ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியம் போல் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? முன்கூட்டியே தயாரிப்பு செய்தியை இணைய தளம் வெளியிட்டது தவறா சரியா? அதை எதிர்க்கும் வழக்கு மூலம் பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறதா? அச்சு ஊடகங்களில் இந்த கசிவு வந்திருந்தால் எப்படி அணுகியிருக்கப்படும்? பத்திரிகை சுதந்திரத்துக்கும், எழுத்து / பேச்சு சுதந்திரத்துக்கும் காப்புரிமை / ஒரு நிறுவனத்தின் ரகசியங்களைப் பாதுகாத்தல் இவற்றுக்கும் இடையே இருக்கும் லக்ஷ்மண் கோடு என்ன?
என்ன இருந்தாலும் தொழில் ரகசியம் கசிந்தது தவறுதான் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் அதற்கு இணையதளம் எப்படி பொறுப்பாகும்? அதன் வேலை செய்தி தருவது. அதையும் முந்தி தருவது. கிடைத்த தகவலை உடனே வெளியிடாமல் எப்படி இருக்க முடியும்? ஒரு பாரம்பரிய அச்சு அல்லது டிவி ஊடக அமைப்பு வெளியிட்டால் அது செய்தி; இணைய அமைப்பு வெளியிட்டால் அது ரகசியத் தகவல் கசிவா?

The onus lies with the company to protect its trade secrets. என்று நினைத்தேன். கூடவே இன்னொரு குரல்: ஒரு வேளை பரந்த நன்மை ( larger good) கருதி செய்தியாளர்கள் தாங்களாகவே எதைச் சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று ஒரு நெறியைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளே ஒரு அசரீரி. நான் எதற்கு செவி சாய்க்க வேண்டும் என்று யோசிக்கிறேன்.

ம்ம்ம்....... நாட்டு பாதுகாப்பு ரகசியத்தையும் தனி நிறுவன ரகசியத்தையும் ஒரே தராசில் வைக்க முடியாது. ஒன்று நாட்டு நலன் மற்றொன்று வணிக லாபம். பின்னது வெளி வந்தால் செய்தி. முன்னது வெளி வந்தால் தேசீய ரகசிய கசிவு. அதனால் ஒரு வணிக நிறுவனத்தின் தகவலை வெளியிட்டதன் மூலம் இணைய தள செய்தியாளர்கள் நெறி பிறழவில்லை; தவறு ஏதும் செய்யவில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. I rest my case.

அடுத்த வாரம் க்யூபர்டினோ ( வழக்கு விசாரிக்கப்படும் ஊர்) நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்று பார்க்கலாம்.

My blogger link is not working properly. So here are the links again.

http://www.siliconvalley.com/mld/siliconvalley/11059168.htm

http://www.siliconvalley.com/mld/siliconvalley/11049112.htm

Monday, February 28, 2005

இந்த பட்ஜெட்டில் எனக்கு சந்தோஷமே. பெரும்பாலோர் அப்படிதான் நினைப்பார்கள். டிவி நிருபர்கள் மைக்கைத் தூக்கிக்கொண்டு பொது மக்களிடம் கேட்கும்போது பெரும்பாலானவர்கள் - " சமையல் காஸ், பெட்ரோல் விலை ஏறாது; சந்தோஷம் " என்பார்கள்.

ஆனால் இந்த பட்ஜெட்டில் எல்லோரையும்விட கிரெடிட் கார்ட் நிறுவனங்களுக்கு அதிக சந்தோஷம் இருக்கப்போகிறது. புதிய பட்ஜெட் அறிவிப்பினால் இனி எல்லோரும் நிறைய கிரெடிட் கார்ட் உபயோகிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பட்ஜெட் அறிக்கையில் ஒன்று ஒன்றாக சிதம்பரம் சொல்லிக்கொண்டு வந்தபோது சென்ற தடவையில் அறிவித்ததில் அதிகம் மாற்றம் இல்லை என்று தோன்றிற்று. என்னடா இது சர்ச்சைக்கு இடமில்லாமல் செய்கிறாரே, அதெப்படி, என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கிராமப்புர மற்றும் கட்டுமான வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு, நெசவுத்தொழிலுக்கு கன இயந்திரங்கள் இறக்குமதி செய்ய வரி சலுகை, நீர் பாசனத்துக்கு 400 கோடி, விவசாயத்திற்கு சலுகை / மான்யம் ரூ. 16000 கோடிகளுக்கு மேல் என்று எல்லாம் சரியாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரி வசூலிப்பில் அதிகம் மாற்றம் இல்லை. ஆனால் திட்டங்கள் பல உள்ளன. இந்த நிலையில் ரூ. 6000 கோடி வரவு வரும் என்று வேறு சொல்கிறார். எங்கே பூனை என்று தேடினேன். வந்தது கடைசியில். வங்கிகளில் ஒரு நாளில் ரூ. 10000க்கு மேல் பணம் எடுப்பவர்கள் 1 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்றாரே பார்க்கலாம். பார்லிமெண்டில் ஒரே அமளி. நகைக்கடைக்கு போய் 50,000 ரூபாய்க்கு ஒரு நெக்லஸ் வாங்கினீர்களானால், வழியில் வங்கியிலிருந்து பணம் எடுத்து கொடுத்துவிடலாம் என்று கணக்கு போட்டீர்களானால், மறக்காமல் 50,050 எடுங்கள். வங்கியிலிருந்து, ஒரு நாளில் எடுக்கப்படும் ஒவ்வொரு ரூ. 10,000 க்கும் .01 சதவிகிதம் வரி உண்டு. இதைத் தவிர்க்க வேண்டுமானால் கிரெடிட் கார்ட் அல்லது காசோலை உபயோகிக்க வேண்டும்.

பார்லிமெண்டில் எழுந்த அமளியின் எதிரொலி இன்னும் இரண்டு நாட்களாவது நாடெங்கும் அலசப்படும். வருடாவருடம் ஏதாவது கலாட்டா எழுந்து ஏதாவது ஒரு அறிவிப்பு வாபஸ் பெறப்படும். இந்த முறை இந்த அறிவிப்பு வாபஸ் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று விழைகிறேன். பெரிய செலவினங்கள் எல்லாம் கணக்கில் கொண்டுவரப்பட்டு கறுப்பு பணத்தை வேரிலேயே தாக்கலாம் என்பது நிதியமைச்சரின் எண்ணம். பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கேள்விகள் கேட்கபட்டபோது, " 10000 ரூபாயை எடுக்க ஆட்டோவில் ஆள் அனுப்பினாலும் குறைந்தது 20 ரூபாய் ஆகும். வெளி ஊர் காசோலை என்றால் கமிஷன் ஆகும். இதனால் இந்த பத்து ரூபாய் கூட கொடுக்க வேண்டியுல்ளதே என்று யாரும் வருந்தப்போவதில்லை. நானும் இந்த .01 சதவிகிதம் மூலம் பெரிதாக வருமானத்தை எதிர்பார்த்து இப்படி செய்யவில்லை. ஒரு கணக்கு tax trail இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எதிர்ப்பவர்கள் கவலையும் அதுவே" என்று சிரித்தவாறே விளக்கினார்.


என்னைப் பொறுத்தவரை இது சூப்பர் ஐடியா. இதுபோல், இன்னொரு நல்ல யோசனையும் உள்ளது. தற்போது வருமான வரிக்காக கணக்கு காண்பிக்க வைத்திருக்கும் ஆறில் ஒன்று என்ற விதியில் ( அதாவது வீடு, கார், வெளி நாட்டு பயணம், செல்போன், கிரெடிட் கார்ட் மற்றும் ரூ. 25000 வருட சந்தாக்கு மேல் இருக்கும் கிளப் உறுப்பினர் இதில் எது ஒன்று இருந்தாலும் வருமான கணக்கு காண்பிக்க வேண்டும்) செல் போன் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் மின்சார கட்டணம் வருடத்திற்கு ரூ. 50000 க்கு மேல் உள்ளவர்கள் இந்த லிஸ்டில் உண்டு. ஒரு வீட்டின் செலவினங்களின் மூலம் வருமானத்தை அளக்கும் யோசனை மிக கெட்டிக்கார கணக்கு. வரி வசூலிப்பில் நூதன யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரச்சனைகளின் ஆதாரத்தில் தாக்கும் திட்டங்கள்.
அப்புறம் அந்த ரூ. 50000 நகை வாங்கும்போது ஏதாவது பெரிய கம்பெனி முத்திரையா (Branded) என்று பாருங்கள். ஏனெனில் இனி Branded நகைக்கு தனியாக 2 % வரி உண்டு. சாதாரண இமிடேஷனுக்கு அல்லது சாதாரண brand அல்லாத நகைக்கு எக்ஸைஸ் வரி 8 % ஆக குறைந்துள்ளது. Branded என்றால் 10%.
வருமான வரி சீரக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை பதிவின் பின்னூட்டத்தில் வருமான வரியில் மாற்றங்கள் தேவை என்று நாராயண் கேட்டது பாதி நடந்துவிட்டது :-) அவருக்கு பதில் எழுதுகையில், "ஒரு லட்சம் -( ஒரு லட்சம் மட்டுமே, மேலே ஒரு பைசா கூடாது (!) - வருமானம் உள்ளவர்கள் பாடு தேவலை. கொஞ்சம் மேலே போச்சோ... ஸ்லேப் கணக்கு, ரிவர்ஸ் கியரில் போய் ரூ. 50001லிருந்து ஆரம்பித்துவிடுகிறது. 50000 - 60000; @ 10% plus அடுத்த ஸ்லேப் - 60001 - 1,50,000; @ 20% ; என்று சுளையாக தாளிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தேன். இனி அப்படியிருக்காது. ஒட்டு மொத்தமாக அடிமட்ட விலக்கு 1 லட்சம் என்று ஆகிவிட்டது. அதனால் 1 லட்சத்து 10 என்று வருமானம் காண்பித்தால் ரிவர்ஸில் 50000 லிருந்து ஆரம்பிக்காமல் நேரடியாக 1,50,000 வரை ஒரே சீராக 10 % வரி. 1,50,000 லிருந்து 2,50,000 வரை 20 %. அதற்கு மேல் 30%.
பெண்களுக்கான வருமான வரி exemption ரூ. 1. 25 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 1. 50 லட்சம்.

கிராமப்புறங்களில் 60 லட்சம் வீடுகள் அமைக்க திட்டம். கிராமப்புறம், விவசாயம், கட்டுமான வேலைகள் என்று முக்கிய விஷயங்களில் நிறைய கவனம் காட்டியுள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே சமயம் நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு வசதிகள் ஏதும் குறிப்பாக தென்படவில்லை. அதுவும் மும்பாயில் சமீபத்தில் குடிசைப் பகுதிகள் தகர்க்கப்ட்டதைப் பார்த்தபோது நகரங்களில் குடியேறி பலவிதங்களில் இன்னல்படுபவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் இருக்க இடம், என்று அடிப்படை வசதிகள் கிடைக்க வழி அரசு செய்ய வேண்டும் என்று தோன்றிற்று.

கூடிய விரைவில் ஸ்டான்·போர்ட், ஹார்வேர்ட் போன்ற பல்கலைகழகங்கள் செல்பவர்கள் இனி பெங்களூர் செல்லத் தொடங்குவார்கள். அங்கு இருக்கும் Indian Institute of Science உலக தரம் வாய்ந்ததாக மாற்ற, ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் கடனுதவி அதிகரிக்கவும் பொதுவாக நுண்கடனுதவி நல்ல முறையில் பரவவும் திட்டங்கள் உள்ளன. இவற்றைபற்றி தேவையுள்ளவர்களுக்கு இன்னும் தெளிவாக விளக்கவும் நுண்கடன்கள் பெற உதவிகள் செய்யவும் வங்கிகள் ஒத்துழைக்கும்படி அறிவுறுத்தபப்ட்டுள்ளன. இந்த வகையில் வங்கியுடனும் நுண்கடன் பெறுபவர்களுக்கு இடையே பரஸ்பரம் உதவ நுண் கடனுதவி அளிக்கும் நிறுவனங்களை - Banking Coreespondents என்ற பெயரில் வணிக வங்கிகள் தங்கள் பிரதிநிதியாக அமைத்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு உடனுக்குடன் தோன்றிய எண்ணங்கள் இவை. மிச்சம் விஷயங்கள் பிறகு.

விரிவான விவரங்களுக்கு இங்கே சில சுட்டிகள்.

Saturday, February 26, 2005

இன்று HeadLines Today - இந்தியா டுடே க்ரூப்பின் TV வார்ப்பு - சேனலில் இந்தியா டுடே என்க்ளேவ் நிகழ்ச்சியில் நம்ம (!!! - இல்லையா பின்னே? இவரும் இவரது வீட்டுக்காரரும் இந்தியாவுக்கு ரொம்ப சினேகிதமாச்சுங்களே... ) ஹில்லாரியின் பேச்சையும், தொடர்ந்து, கேள்வி பதில் பகுதியையும் பார்த்தேன். நிச்சயம் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் தகுதி உள்ளவர். இந்தியாவின் முதன்மை தொழிலதிபர்களும் இளைய தலைமுறை அரசியல்வாதிகளும் பங்கு கொண்ட நிகழ்ச்சியில் கேள்விகளும் அவரை எதிர்கால ஜனாதிபதியாகவே நினைத்து முன் வைக்கப்பட்டன.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் வேலையை ஹில்லாரி பிரமாதமாக செய்தார். சந்தைகளைத் திறக்க சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகள் விவசாயம் போன்றவற்றில் இன்னும் protectionist ஆக இருப்பதேன் என்று டிராக்டர் வியாபாரம் செய்யும் ஆனந்த் மகேந்திரா கேட்டபோது, " இந்தியா போன்ற நாடுகளும் அப்படி இருக்கும்போது அமெரிக்கா இருப்பதில் தவறென்ன என்று கேள்வியைத் திருப்பி போட்டுவிட்டு சமாளித்தார். ஆனால், அவுட் ஸோர்சிங் விஷ்யத்தில் அவர் சொன்னது பொதுவாக அனைத்து நாடுகளுமே கடைபிடிக்க வேண்டிய நல்ல பாலிஸி. தன் நாட்டை ஆள்பவர்களுக்கு அவர் சொன்ன அறிவுரையை நாமும் பரிசீலனை செய்யலாம். அவர் கூறியது: " அவுட் ஸோர்ஸிங்கினால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு குறைகிறதே என்று அதைத் தடுக்காமல் இன்னும் விரிந்த மனப்பான்மையோடு இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும் என்றார். உதாரணமாக புதுசு புதுசாக வித்தியாசமான துறைகளில் இன்னும் எப்படி வேலை வாய்ப்பை உருவாக்கலாம் என்றுதான் ஒரு அரசு யோசிக்க வேண்டுமே ஒழிய, உலகப் பொருளாதாரத்தில் ஒரு துறை வளர்வதைத் தடுக்கும் வகையில் முட்டுகட்டைகள் போடுவது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது என்பது அவர் கருத்து.

வெல்டன் ஹில்லாரி. இதைத்தான் நானும் ரொம்ப நாளாக சொல்லிவருகிறேன். :-)

Friday, February 25, 2005


Zoom in and observe :-) Posted by Hello

சில சமயம் சில போட்டோக்கள் நம் கவனத்தை சட்டென்று ஈர்க்கும். நான் ஒரு தொழில்முறை போட்டோகிரபர் அல்ல. அமெச்சூர் வகையிலும் சேர்த்தியில்லை. ஆனால் அவ்வப்போ வெளியில் போறபோது கேமிராவும் கூட வரும். ஏதோ கண் போன போக்கில் சுட்டுக் கொண்டிருப்பேன் - வீட்டு ஆல்பத்துக்காக. 34 வருடங்கள் முன்பு படிப்பு முடிந்து பத்திரிகையாளர் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தபோது அப்பா /அம்மா உபயோகித்துக்கொண்டிருந்த பழைய "ஆக்·பா" காமிராவில் அப்பாவின் " How to Make Good Pictures" ( Black & White - Kodak Manual for Amateur Photographers - எந்த வருடப் பதிப்பு என்று அதில் போட்டிருக்கவில்லை; நிச்சயம் கலர் உலகம் வருவதற்கு பல வருடங்கள் முன்னால்) என்ற புத்தகம்தான் குரு. அருமையான புத்தகம். பிரமாதமான கறுப்பு வெள்ளை போட்டோக்கள். இன்று பார்த்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.
நிழல் படம் என்று நினைத்துக்கொண்டு என் மேஜையருகே இருக்கும் கண்ணாடி பெயிண்டிங், வரவேற்பறையில் கோணலாக போட்ட நாற்காலி, அரையிருட்டில் செடி என்று எதையோ எடுத்துக் கொண்டிருப்பேன். எத்தனை வருடம் ஆனாலும், இன்றுவரை முழு திருப்தியாக ஒரு படம் எடுக்கவில்லை என்று தோன்றுகிறது.

இருந்தாலும் நல்ல படங்கள் கண்களில் தென்படும்போது ஒரு உற்சாகம் வந்து தொற்றிக்கொள்ளும். இங்கே இருக்கும் படம் ஒன்றும் பிரமாதமானதல்ல. இருந்தாலும் இந்த விளம்பரம் பார்த்தவுடன் என்னை கவர்ந்தது ; யோசிக்க வைத்தது. இதில் பெரிதாக கருத்தோ கதையோ இல்லை. சொல்லப்போனால், ஸ்டேட் பேங்கில் கார் லோன் வாங்க சொல்லி தூண்டும் இந்த விளம்பரம் அதற்கு உதாரணமாக காட்டுவது பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியில் வரிசையாக தெரியும் கார்கள் - சகல சௌகரியங்களுடன் கூடிய ஸ்டேட் பேங்க் லோன் வாங்கி நீங்கள் மற்றவர்களைவிட பல கிலோமீட்டர் முன்னால் போகிறீர்கள் என்பது இந்த விளம்பர copy சொல்கிறது. ரொம்ப Plain.
ஆனால் என் கவனம் விளம்பர வாசகம் அல்ல. போட்டோ. கார் உள்ளிருந்து வெளியே தெரியும் சாலை out of focus ல் - சற்று மங்கலாக தெரியும்படி எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உள்ளே rear view கண்ணாடியில் நல்ல தெளிவாக பின்னால் வரும் கார்கள். கொஞ்ச நேரம் எனக்கு புரியவில்லை. எப்படி இதை எடுத்திருப்பார்கள் என்று யோசிக்க வைத்தது. கண்ணடியில் தெரியும் பிம்பங்களை குவியத்தில் வைத்து எடுத்திருக்கிறார்கள். அதனால் எதிரே விரியும் சாலை, குவியத்திற்கு அப்பால் போய் கலங்கலாக தெரிகிறது. இல்லை, ஒரு வேளை தனித்தனியே எடுத்து போட்டோ ஷாப் வகையறா செய்திருப்பார்களா? கொஞ்ச நேரம் யோசித்ததில் முந்தைய வகையாயிருக்கும் என்று முடிவுக்கு வந்தேன். என் ஊகம் சரிதானா?

Wednesday, February 23, 2005

இந்திய பத்திரிகையுலகில் பட்ஜெட் ஜுரம் வந்தாச்சு கடந்த இரண்டு வாரமாக எகனாமிக் டைம்ஸ் அலசல்கள் / எதிர்பார்ப்புகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பிஸினஸ் டுடே, நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு சென்ற பட்ஜெட் திட்டங்கள் நன்றாகவே செயல்பட்டிருப்பதாக சொல்லி மதிப்பீடு " A" கொடுத்துள்ளது.
சரி.

இப்போது பிஸனஸ் டுடேயின் சென்ற பட்ஜெட் ப்ரோகிரஸ் ரிபோர்ட்:

சென்ற பட்ஜெட்டில் அறிவிப்புகளும், அறிவிப்புகள் நடைமுறையில் செயல்பட்டவிதமும்.

( கூடவே இந்த மதிப்பீடுகள் பற்றி அலைகளின் மதிப்பீடு :-) )

  • Common Minimum Programmeல் ஒப்புக்கொண்ட திட்டங்களுக்கான செலவு ரூ. 10,000 கோடிகள்.

    ரூ. 12,000 கோடிகள் வரவு காண்பிக்கப்பட்டுள்ளது.


அலைகள்: ஓகே. பாஸ் :-)

அனைவருக்கும் அடிப்படை கல்வியளிக்க வசதி:

கல்விக்கான உபரி வரி 2 சதவிகிதம் போட்டதில் ரூ. 4000 -5000 கோடிகள் வருவாய் வந்துள்ளது. ( என்னுடைய சென்ற பட்ஜெட் பற்றிய ஜூலை 10, 2004, பதிவில் இதன் முலம் வரக்கூடிய வருவாய் ரூ. 2500 கோடிகள் என்று எதிர்பார்க்கப்படுவதாக எழுதியுள்ளேன் )

அலைகள்: ரொம்ப சந்தோஷம். ஆனால் அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய இந்த வருவாய் எப்படி செலவழிக்கப்பட்டது என்பது தெரியாமல் திட்டத்தின் அடிப்படை நோக்கம் சக்ஸஸ் என்று எப்படி சொல்ல முடியும்?

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் ஒருவருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு கொடுக்கும் திட்டம்.

"வேலைக்கான உணவு" ( Food for work) என்ற திட்டம் இந்தியாவின் மிக வறுமையான 150 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. National employment Guarantee Act என்ற சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

அலைகள்: முதல் சமாசாரம் கேட்க நன்றாக இருக்கிறது. நல்ல ஆரம்பம். பின்னது? ஹ்ம்ம்.. இன்னுமொரு சட்டம் /திட்டம். எவ்வளவு தூரம் செயல்பாட்டில் நோக்கை இது அடைய உதவும் என்று பொறுத்திரூந்து பார்க்க வேண்டும்.

நிதி சமாசாரத்தில் அதிக கவனம். இதில் சீர்திருத்தங்கள்.

வருவாய் பற்றாக்குறை, 2009க்குள் ஜீரோ லெவலுக்கு வருவதற்கு உதவும் வண்ணம் Fiscal Responsibility and Budget Management Act என்ற சட்ட அறிவிப்பு.

அலைகள்: மேலே சொன்னதே இதற்கும் - இன்னொரு அறிவிப்பு. ரிஸல்ட்டுக்கான நேரம் இன்னும் வரவில்லை.

விவசாயத்திற்கான கடனுதவி இன்னும் மூன்று வருடங்களில் இரண்டு மடங்காக வேண்டும்.

விவசாயக் கடனுதவி 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அலைகள்: பரவாயில்லை. இந்த போக்கு தொடர்ந்தால், மூன்று வருடத்தில் இலக்கை எட்டிவிடும்.

கட்டுமான வேலைகளில் இன்னும் அதிக முனைப்பு.

தேசீய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ரூ. 1, 72,000 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அலைகள்; அதெப்படி? நெடுஞ்சாலை மட்டுமே அடிப்படை கட்டுமான துறையாகுமா? துறைமுக வசதி, மின்சாரம், போன்ற கட்டுமான துறைகள்? மற்ற அடிப்படை வாழ்க்கை தேவைகளான தண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்றவை?

நிதி பங்கீடு இன்னும் பரவலாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும்.

12 வது நிதி கமிஷனில் மாநிலங்களின் வரி பங்கு ஒரு சதவிகிதப் புள்ளி ( one percentage point) உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ. 15,000 கோடிகள் கிடைக்கும்.

அலைகள்: OHT :-) over head transmission - அதாவது, அவ்வளவா புரியாத சமாசாரங்க :-)
தொலைத் தொடர்பு மற்றும் இன்ஷ¥ரன்ஸ் இவற்றில் அந்நி¢ய முதலீடு வரம்பு உயர்த்தப்படும்.

.......பட்டது. தொலைத் தொடர்பில் 74 சதவிகிதமாக.

அலைகள்: அப்பழுக்கு சொல்ல முடியாத செயல்பாடு.

பொதுத் துறையை புதுப்பிக்க ஒரு போர்ட் உருவாக்கப்படும்; NTPC யில் கொஞ்சம் பங்குகள் விற்கப்படும்.

போர்ட் உருவாக்கப்பட்டது. என் டி பி சி யில் 5 சதவிகிதம் பங்குகள் விற்கப்பட்டது.

அலைகள்: மேலே சொன்னதே.

முதலீட்டு துறை உருவாக்கப்படும்.

......பட்டது; ரத்தன் டாடா தலைமையில்.

அலைகள்: ஓகே. குறையன்றுமில்லை. இந்த போர்ட்கள், கமிஷன்கள் இத்தியாதி அமைப்புகள் எல்லாம் எப்படி அவை நியமிக்கப்பட்ட இலக்கை நோக்கி செயல்படுகின்றன என்று ஆய்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் அவற்றை கவனிக்க வேண்டும். இன்னும் மதிப்பீட்டு நேரம் வரவில்லை.

சிறப்பு பொருளாதார வட்டங்களை ( Specail Economic Zones) ஒழுங்குபடுத்த ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படும்.

....பட்டது. ஆனால் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையில் உள்ளது.

அலைகள்: மதிப்பீட்டுக்கு இன்னும் தயாராகாத அம்சம்.

Friday, February 18, 2005

ரேடியோ கேட்கும் வழக்கம் FM அலைவரிசைகளின் வரவிற்கு பிறகு அதிகரித்துள்ளது - ( அல்லது ரசிகர்கள் கூடுவதனால் புதிய அலைவரிசைகள் கூடியுள்ளனவா ?! ) புதுசாக சாடிலைட் ரேடியோக்கள் வேறு வந்துள்ளன.

ரேடியோ நிறுவனம் எதுவாக இருந்தாலும் எல்லா அலைவரிசைகளிலும் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்ட்ட நிகழ்ச்சிகள், சுவாரசியமாக தொகுக்கும் தொகுப்பாளர்கள் என்றுதான் 24 மணி நேர நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. சாலையில் போக்குவரத்து நிலை, விஞ்ஞானம், வினா விடை, போன் செய்து பேசும் நிகழ்ச்சிகள் என்று விதம் விதமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் நானும் இப்படி ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. விவித பாரதியை முடுக்கிவிட்டால் போரடிக்கும் வேலைகளும் வேகமாக முடிந்துவிடும். அதனால் வேலைகளை ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்வேன். நான் பள்ளியில் / கல்லூரியில் படிக்கும்போது டிவி கிடையாதே. ரேடியோதான் ( அல்லது சினிமா தியேட்டர்) பிரதான பொழுதுபோக்கு. ( தெருவில் பாண்டி விளையாட்டு தவிர :-) பள்ளியில் காலை பிரேயரில் வரிசையில் நிற்கும்போது முந்தைய நாள் கேட்ட பாடல்களைப் பற்றி தோழிகளோடு பகிர்ந்து கொள்வது ரொம்ப முக்கியம். "அந்தப் பாடலைக் கேட்டாயா?இதைக் கேட்டாயா?" என்று ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும்போது ஏதோ நாமே இசையமைத்தாற்போல் திருப்தி.

இப்போது மறுபடி அந்த மாதிரி ரேடியோ கேட்கும் வழக்கம் வந்துள்ளது என்று தோன்றுகிறது - நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் ரசிகர்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது. போன் செய்து பங்கேற்கும் நிகழ்ச்சியில் பலர் தங்கள் கருத்துக்கள், விருப்பங்களை நன்றாகவே வெளிப்படுத்ஹ்டுகிறார்கள். முன்பை விட ரேடியோ என்கிர இந்த மீடியம் இப்போது அதிகம் interactive ஆக இருக்கிறது. நேயர்கள் பங்கேற்பு அதிகம் இருக்கிறது.

இப்படிதான்சென்ற வாரம் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம். (எந்த அலைவரிசை என்று நினைவில்லை) Professional அலல்து மேற்படிப்பு படிப்பவர்கள் கட்டாயம் ( குறிப்பாக பெண்கள்) அந்தப் படிப்பிற்கு ஏற்றாற்போல் வேலை செய்யதான் வேண்டுமா? வெறும் ஆர்வத்துக்காக ஒரு படிப்பைப் படிக்கலாமா கூடாதா என்பது கேள்வி.
நிறைய நேயர்கள் பலவிதங்களில் தங்கள் கருத்துகக்ளை வெளிப்படுத்தினார்கள். கூடும் / கூடாது என்று. என்னை யோசிக்க வைத்த விஷயம் தொகுப்பாளரின் கருத்து எவ்வளவு தூரம் இந்த மாதிரி விவாதங்களில் வெளிப்பட வேண்டும் என்பது. பொதுவாக இந்த மாதிரி விவாதங்களில் இரு விதமான கருத்துக்களும் சரியாக இருக்கும் நிலை இருக்கும். தொகுப்பாளர் தன் கருத்தையும் சொல்லலாம். ஆனால் ஒரு judgemental பாவனையோடு அதுதான் சரி என்ற தொனி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தொகுப்பாளர் தன் கருத்தை சற்று அதிகமாகவே வலியுறுத்தினார் என்று தோன்றியது. அவரவர் ஆர்வத்துக்கு ஏற்றாற்போல் படித்தபின் தேவையில்லை என்றால் தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; அந்தத் துறையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என வெறும் ஆர்வத்தினால் அந்தப் படிப்பு படிப்பதில் தவறில்லை என்ற கருத்தை ஒரு நேயர் வெளியிட்டார். அதற்கு பதிலளித்த தொகுப்பாளர், மேற்படிப்பு அல்லது தொழில் கல்வி படிப்பவர்கள் அதை " வீணாக்குவது" கூடாது; அதைத் தொழில் முறையில் பயன்படுத்தியே ஆக வேண்டும்; படித்த கல்வியை இப்படி "வீணாக்குவதற்கு" பதிலாக அந்தச் செலவு வேறு யாருக்காவது உபயோகப்பட்டிருக்கலாமே என்ற தொனியில் பேசினார். "இது என் கருத்து மட்டுமே" என்ற ரீதியில் அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.

தொழில் கல்வி மற்றும் உயர் கல்விக்கு பல்கலைகழகங்களில் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும்போது ஒருவரின் கல்விக்காக செலவழிக்கப்படும் resources அந்தக் கல்வியின் பயன் சரியான முறையில் சமூகத்தை சேர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் பார்க்கும்போது, ஒரு துறையில் இயற்கையான ஆர்வத்தோடும் உந்துதலோடும் கல்வி கற்பதே சிறந்தது.

வேலை மெனக்கெட்டு இஞ்சினீயர், டாக்டர் என்று படித்துவிட்டு அந்த அறிவை பிறருக்கு உபயோகமாக பயன்படுத்தாமல் சும்மாயிருப்பது தவறு என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம், கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கோ அல்லது சமூக சேவை செய்வதற்கோ மட்டுமல்ல; கல்வி கற்பதே ஒரு இனிமையான அனுபவம் என்றும் என் மனதுக்குப் படுகிறது. இதைப் படித்து இப்படியாக வேண்டும்" என்ற ஒரு "முடிவினை" நோக்கி கல்வி பயிலுவதைவிட, ஒரு குறிப்பிட்ட துறையில் ஆர்வத்தோடு கற்கும் அனுபவம் முக்கியம். இந்த இயற்கையான ஆர்வம்தான் நாளடைவில் ஒரு சமூகத்தில் creativity, innovation போன்ற புதிய பாதைகளுக்கு வழி கோலும் என்று நான் நினைக்கிறேன்.

Thursday, February 17, 2005

கலிபோர்னியாவில் மகன் வீட்டில் இருந்தபோது சில பர்னிச்சர் வாங்க நினைத்தோம். இகியா, "ஆபீஸ் மாக்ஸ்" என்று ஏறி இறங்கிவிட்டு, இன்னும் மலிவாக எங்கு கிடைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்தோம். ( ஹ்ம்ம்.. எங்கே போனால் என்ன, இந்த "மலிவா வாங்கணும் என்கிற புத்தி மட்டும் போக மாட்டேங்குதே? :-))

சரிதான்; மலிவாதான் வேண்டுமென்றால் craigslist.com போய் தேடுங்கள் என்று மகன் சொல்லிவிட்டான். நானும் விடுவதாயில்லை. அங்கே தேட ஆரம்பித்தேன். அம்மாடி... என்ன மாதிரியான ரேஞ்சுலே எவ்வளவு சாமான்கள்! நாய்க்குட்டி, பூனையிலிருந்து, கார்கள், வீடுகள் என்று அத்தனையும் ஒரே தளத்தில்! எல்லாம் used goods :-) உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு பொறுக்கலாம். இந்த தளத்தை மேய்ந்தபோது சுவாரசியமாக இருந்தது. பேனாவிலிருந்து மனைவி / கணவன் வரை எல்லாவற்றிற்கும் இங்கே தேவை லிஸ்ட் இருந்தது. வெளியே போய் சாப்பிட போரடித்தால் வீட்டுக்கு சப்ளை செய்பவர் யாரென்று தேடி ஆர்டர் செய்யலாம். இசைப் பயிற்சியா? விதம் விதமாக வகுப்புகள். தோட்ட வேலையா? எக்கச்சக்க சாமான்கள். மொத்தத்தில் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் தேட / வாங்க /விற்க. e -bay அல்லது Bazee.com போல்தான். ஆனாலும் கலிபோர்னியாவில் இது ரொம்ப பாபுலர். 12 நாடுகளில், 92 நகரங்களில், 7. 5 மில்லியன் வாடிக்கையாளர்கள். ஒவ்வொரு மாதமும் 4 மில்லியன் கிளாசிபைட் விளம்பரங்கள்; 100,000 வேலை வாய்ப்பு விளம்பரங்கள்; என்று பிரமாதமாக வளர்ந்து வருகிறது. e-bay க்கு இதில் ஓரளவு பங்கு உண்டாம்.

அதுசரி. இப்போ என்ன இந்த கிரெய்க்ஸ்லிஸ்ட் சமாசாரம் இங்கே?

அதுவா? இந்த தளம் இன்று நம்ம பெங்களுர் வரை எட்டுகிறது என்று பிஸனஸ் டுடே செய்தி ஒன்று சொல்கிறது. பெங்களூரில் வீடு, டிவி, பூனை, நாய், மற்றும் தட்டு முட்டு சாமான்கள் வாங்க / விற்க !!

இதில் ஒருவர் விளம்பரம் கொடுத்துள்ளார். "...எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். இந்தியர் ஒருவரை காதலித்து மணம் புரிய விரும்புகிறேன். இந்தியாவுக்கு விரைவில் வர இருக்கிறேன். போட்டோ அனுப்புங்கள்..." இந்த ரீதியில் !!

ஏற்கனவே "Are you Bangalored?" என்ற BPO வை கண்டிக்கும் வாசகம் அச்சு செய்த டீ ஷர்ட்டுகள் அங்கே பிரபலம். இப்போ இப்படி! பெங்களூரில் வியாபாரத் தொடர்பு இருப்பவர்களுக்கு சௌகரியமாக இந்த விளம்பரங்களும் !
இதுபோல், யாஹ¥ வரை படங்களில் இப்போ இந்திய நகரங்கள் சிலவும் உண்டு என்று கேள்விபட்டேன். ஆனால் யாஹ¥ மேப்ஸ் தளத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை. யாருக்காவது விவரம் தெரியுமா?

Wednesday, February 09, 2005

நேபாளத்தில் மன்னர் ஆட்சியைப் பிரகடனப்படுத்திவிட்டு, பத்திரிகைகள் சுதந்திரத்தையும் ஒடுக்கியுள்ளார். அரசுக்கு எதிராக எதுவும் வெளியிட முடியாத நிலையில் பத்திரிகைகள் நூதன விதத்தில் தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றன என்று இந்த செய்தி சொல்கிறது.

தங்கள் தலையங்கங்களில், பாலே நடனம், Archery, மரம் நடுதல், காலுறையை ( socks) சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம், போன்ற சமாசாரங்களைப் பற்றி எழுகின்றனவாம் ! :-) இது ஒரு விதமான Satire என்று சொல்லும் ராஜேந்திர தஹால் என்கிற ஒரு பத்த்ரிகையாசிரியர், "இதுவும் ஒரு வகையில் எங்கள் அதிருப்தையையும் எதிர்ப்பையும் காட்டும் வழி" என்கிறாராம் ! சுவாரசியமான வழிதான். சரியான நெத்தியடி நக்கல் !! ஆனால் இதெல்லாம் மன்னருக்கு உறைக்குமா என்ன? இன்று ஹிந்திவில் மன்னர் ஆட்சியைக் கைபற்றியது சரிதான் என்று சில வாசகர்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். வருத்தமாக இருந்தது. ஜனநாயக முறைகளில் ஒரு அரசைத் தண்டிக்க வழி இருக்கும்போது இப்படி இவர்கள் நம்பிக்கையிழக்கலாமா என்று தோன்றியது. இந்தியா ஏன் பூடான் அரசின் மன்னர் ஆட்சியைப் பற்றி விமரிசனம் ஒன்றும் சொல்லவில்லை என்று ஒருவர் கேட்டிருந்தார். ஒன்று மன்னர் ஆட்சி என்பது அங்கே பெயருக்குதானே தவிர உண்மையில் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுகக்ப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரும்பான்மையான அதிகாரங்களை தன் மந்திரிசபையிடம்தான் கொடுத்துள்ளார். வம்சாவளியின் காரணமாக தான் மன்னராக பொறுபேற்றிருந்தாலும் தன் நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்று விரும்பி 2001ல் இதற்கு ஒரு திட்டம் ஆரம்பித்துள்ளார். இதன் படி இன்னும் சில வருடங்களில் இவர் தன் மன்னர் பதவியை துறந்து நாட்டில் தேர்தல் வைத்து அரசை அமைக்க வேண்டும். 1981லிருந்தே இதற்கு அஸ்திவாரம் போட ஆரம்பித்துவிட்டார். 1998ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் ஒரு பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு, இரண்டுக்கு மூன்று என்கிற விதத்தில் வாக்களிக்கபட்டு மன்னரை அகற்றும் முழும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது வேறு சமாசாரம்.

மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான இந்த வரைபடம் இந்த வருடம் அறிவிக்கப்படும் என்று இங்கே நமது குடியரசு தின விழாவிற்கு வந்தபோது நமது பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

2003 முதல், கிராமங்களில் மக்களால், தேர்தல் முறையிலேயே தலைவர்கள் தேர்ந்தெடுகப்படுகின்றனர். தவிர, அரசுக்கு எதிராக மக்கள் பொது நல வழக்கு தொடரவும் சுதந்திரம் உண்டு.

இந்த நாட்டின் முக்கால்வாசி வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியாதான் கொடை வள்ளல். பதிலுக்கு தங்கள் வெளியுறவு விஷயங்களில் பூடான் இந்தியாவைக் கலந்தாலோசிக்க வேண்டும் - 1949ல் கொண்ட உடன்படிக்கையின்படி. இப்படி நகமும் சதையுமாக இருந்தாலும் மன்னர் எங்கே "அந்தப் பக்கம்" ( அதாங்க, அவங்க பக்கத்தில் இருக்கும் இன்னொரு giant சீனா) சாய்ந்துவிடுவாறோ என்று நமக்கு எப்பவும் உள்ளே ஒரு கலக்கம். நமது எல்லைப் பாதுகாப்புக்கு இவரது சுமூக உறவு மிக முக்கியம்.

பூடான் மன்னர் ஆட்சிக்கு பல விதங்களில் விமரிசனங்கள் இல்லாமலில்லை. அகதிகள் விஷ்யம் பெரும் தலைவலி. அருகில் இருக்கும் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் இவற்றிலிருந்து குடியேறியவர்கள் அதிகம். 1988ல் பூடான் அரசு குடியேறிகளைத் தவிர்க்க /தடுக்க ஒரு முடிவெடுத்தது. இதன்படி 1958க்கு பிறகு வந்தவர்களுக்கு பூடான் குடியுரிமை மறுக்கப்பட்டது. இதன் காரணமாக நிறைய நேபாளிகள் வெளியேறுபடி ஆயிற்று. ஆனால் நேபாளம் இவர்களை ஏற்க மறுத்தது - அவர்கள் பூடான் பிரஜைகள் என்று கூறி. இப்போது இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் யு. என் கட்டியுள்ள முகாம்களில் வாழ்பவர்கள் எண்ணிக்கை, சுமார், 100,000. இந்த விஷயத்தில் பூடான் அரசு இன்னும் சற்று கருணையோடு இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் வரைபடத்தில் ஒரு புள்ளி அளவுகூட இல்லாத நிலப்பரப்பைக் கொண்ட கடுகளவேயான நாடு, அண்டை நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளைத் தடுக்க முயற்சிப்பதில் என்ன தவறு? அமெரிக்கா, சிங்கப்பூர் என்று அவரவர் தன் நாட்டு நிலப்பரப்பில் குடியேறிகள் அதிகம் நுழைந்துவிடாமல் தற்காத்துக்கொள்ளவில்லையா? எல்லோருமே இந்தியா போல் இருந்துவிடுகிறார்களா? டில்லி, கல்கத்தா, சென்னை என்று ஆங்காங்கே அகதிகள் குடியிருப்புகளைப் (வெறும் முகாம்கள் இல்லை!) பராமரித்துக் கொண்டு? மன்னரின் காபினெட்டில் Drukpa என்ற அவரது மதப் பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்பதிலிருந்து Drukpa கலாசாரத்தை - பக்கூ என்ற உடை அணியச்செய்வது போன்றவை- மக்கள் மீது திணிக்கிறார் என்பது வரை நிறைய விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் கூட்டிக் கழித்து பார்த்தால், இவர் ஒரு ஜனநாயக மன்னர் என்பது என் அபிப்பிராயம் - இவர் உண்மையிலேயே மன்னர் ஆட்சிக்கு முடிவுரை கூறும் திட்டத்தை நிறைவேற்றி, தனக்குப் பின் தன் மகன்களில் ஒருவருக்கு பட்டம் சூட்டாமல் இருப்பாரானால், நிஜமாகவே சரித்திரத்தில் இடம் பெறுவார்.

பி.கு: பத்து குழந்தைகள் ( இதிலே அஞ்சு; அதிலே அஞ்சு) பிறந்தபிறகு இவரது திருமணம் நடந்தது. 1988ல் இவரது நான்கு (ஆமாம், நான்கு!!!) மனைவியருடன் நடைபெற்ற இந்த திருமண விருந்தாளிகளில் பட்டியலில் நாங்களும் இருந்தோம். அந்த நால்வரும் சகோதரிகள் என்று சொன்னார்கள். மன்னர் திருமணத்தின்போது இளவரசர்களும் இளவரசிகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் மூத்த இளவரசர் என் மகனின் கிளாஸ்மேட். - அட இதை இப்போ சொல்லியே ஆக வேண்டுமா? :-) ஹ்ம்ம்.... names drop செய்யும் ஆசை யாரை விட்டது? :-)

Sunday, February 06, 2005

எல்லோரும் சேர்ந்து மூச்சு பிடித்துக் கொண்டு பலமாக இழுத்தார்கள். ஹ்ம்ம்.... நகர்ந்தால்தானே? மேலிருந்து ஒருவர் ஏதோ சைகை காண்பித்தார். எல்லோரும் நின்றார்கள்;

மறுபடி ஒரு சைகை. ஹ்ம்ம்.... எல்லோரும் இழுத்தார்கள்....ம்ஹ¤ம்.. நகருவதாக தெரியவில்லை. மறுபடி நின்றது.

இன்னொரு ஒரு பெரிய தம் பிடித்து இழு..இழு...இழுத்தார்கள். ஒரு இஞ்ச் நகர்ந்திருக்கும்; மறுபடி நின்றாகிவிட்டது. அடுத்த சைகையில் இன்னும் பலமாக...இழு..இழூ.. நகரு..நகரு.... பெண்கள், முடியாதவர்கள் நகந்து ஓரமா நில்லுங்க... எல்லோரும் ஓடி வரும்போது அடிபடுவீர்கள்...... இன்னும் கொஞ்சம் ..ஹ்ம்ம்.. இழுங்க.....சட்டென்று நகர ஆரம்பித்துவிட்டது. ஹோவென்று எல்லோரும் கையைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். மறுபடி ஒரு பெரிய சைகை, எல்லோரும் கூடி இழுக்க........

............தேர் நகர்ந்தது.

ஊர் கூடி தேர் இழுப்பது என்பார்களே.. அது என்ன என்று இன்று அனுபவித்தேன். எப்போதோ சிறு வயதில் கிராமத்தில் தேர் விழாவிற்கு போனதாக ஞாபகம். பின்னர் ரொம்ப நாள் கழித்து சென்ற வருடம் தான்தோன்றி மலையில் தேர் புறப்படத் தயாராக இருந்தபோது மேலே ஏறிச் சென்று சுவாமியை சேவித்தோம்.

இன்னிக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேர். கோவிலை முழுவதும் சென்ற வருடம் புனருத்தாரணம் செய்திருந்தார்கள். தேர் மட்டும் பழசாக இருப்பானேன்? ஒரு வருடத்திற்குள் தேரையும் புதுப்பித்து இன்று புறப்பாடும் ஆகிவிட்டது. பலவித நிறங்களில் கைவேலை செய்த துணித் தோரணங்கள், அலங்காரச் சிலைகள், மரவேலைப்பாடுகள்ளென்று அமர்க்களமாக இருந்தது தேர்.

காலை ஏழுமணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். ரொம்ப தாமதம் இல்லாமல் 7.20க்கு பூஜையெல்லாம் முடித்து நகர்த்த ஆரம்பித்தார்கள். தேர் சக்கரங்கள் முன் நான்கு மரப்பலகைகள் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருந்தன. முட்டு கொடுத்து ஏற்றுவதற்கு என்று ஊகித்துக் கொண்டேன். இரும்பு வடம் நீளமாக தரையில் கிடந்ததை மேலிருந்து அர்ச்சகர் சைகை செய்ததும் தூக்கி எடுத்து வைத்துக் கொண்டார்கள். நான் சும்மா பேருக்குத் தொட்டுப் பார்த்துவிட்டு வந்து ஓரமாக நின்றுகொண்டுவிட்டேன். கும்பல் அலைமோதியது. முதல் முதல் வடத்தை தூக்கி நகர்த்த ஆரம்பித்தவுடன் உடனே தேர், பஸ் மாதிரி நகர்ந்து விடுமாக்கும் என்று நினைத்தேன். இரண்டு மூன்று முறை எல்லோரும் கோஷமிட்டுக் கொண்டு இழுத்தும் இஞ்ச் கூட நகராதபோதுதான் தேரின் அளவையும், கனத்தையும் அனுமானம் செய்ய முடிந்தது. இத்தனைக்கும் இந்த புதுப்பித்த தேர் பழைய தேரைவிட சற்று சின்னதாக அமைத்திருப்பதாக பக்கத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த காலத்தில் இன்னும் பலசாலிகளாக இருந்திருப்பார்கள். இழுத்தவுடன் தேர் நகர்ந்திருக்கும். ஆனால் இன்றைய தலைமுறை fast food தலைமுறையாயிற்றே....:-)

ஆனால் ஆரம்பம்தான் இப்படி. தேர் சற்று நகர்ந்து மரப்பல்கைகளைத் தாண்டியவுடன் momentum ( தமிழில் என்ன சொல்வது ??!!) பிடிக்க ஆரம்பித்து வேகமாக எல்லோரும் இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.

அவ்வளவுதான். தோரணங்கள் அழகாக அசைந்தாட, ஒயிலாக தேரில் பார்த்தசாரதி வீதி வலம் வர ஆரம்பித்தார். சுமாராக ஒரு மணி நேரத்திற்கும் ஆயிற்று திரும்ப தேர் நிலையில் வந்து நிற்க.

இன்று கும்பலில் என்னை யோசிக்க வைத்த ஒரு விஷயம். நிறைய இளம் முகங்களைக் கண்டேன். "ஏன் அம்மா, அப்பா வரவில்லையா" என்று யாரோ ஒருவர் ஒரு இளைஞரிடம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. இவர் பதில். " இல்லே.. இவ்வளவு கார்த்தாலே எழுந்து கிளம்ப முடியாது அவர்களால்..." !!! கோவில் = வயதானவர்கள் ??!!

வாகன ஓட்டுனர் சிலையைப் பார்த்தால் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டிய பார்த்தசாரதி மாதிரிதான் இருந்தது. அப்படியானல் உள்ளே இருந்த மூர்த்தி யாராக இருக்கும். விசாரித்து பின்னர் எழுதுகிறேன். இல்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Friday, February 04, 2005

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எளிமையான வாழ்வு ஒரு தடையா?

சாமான்கள் நிறைய வாங்குவது, தேவைக்கு மேல் கண்ணில் கண்டதையெல்லாம் வாங்குவது என்பது பொதுவாக நல்ல வாழ்க்கை முறை அல்ல என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் இன்று நாம் காண்பது சந்தைப் பொருளாதாரம்; ஏகப்பட்ட நுகர்வோர் பொருட்கள். முன்பெல்லாம் ஏதாவது வீட்டிற்கு சாமான் வாங்கினால் அது வாழ் நாள் முழுக்க வைத்திருப்பதுதான் வழக்கம். அதனலேயே நல்ல தேக்கு மரங்களில் நாற்காலிகள் என்ற ரீதியில் காலத்தால் சீக்கிரம் தேய்மானம் பெறாத சாமான்களை வாங்குவார்கள். "ஆயுசுக்கும் வர வேண்டாமா?" என்பதுதான் அன்றைய சிந்தனை. பல வருடங்கள் முன்பு நாங்கள் பம்பாயில் ( அன்று அது பம்பாய்தானே) இருந்தபோது ஒரு உறவினர் வீட்டில் சோபா செட் வாங்கினார். அப்போது யாரோ அவரிடம் "என்னப்பா, பம்பாயிலேயேதான் இருக்கப் போறியா" என்றார். இவர் பதில்: "ஆமாம் சோபா செட் வாங்கியாச்சு. இங்கயே செட்டில் ஆனமாதிரிதான்!" என்றார். 30 வருடங்கள் முன்பு சோபா செட் வாங்கிவிட்டால் அது ஒரு பெரிய முதலீடு. இன்று இப்படி சொல்ல முடியுமா? அதேபோல் டிவி. அன்று ஒரு டிவி வாங்கும்போது ஏதோ சாதித்த உணர்வு. துடைத்து துடைத்து மாய்ந்துவிடுவோம். இன்றோ வீட்டுக்கு குறைந்தது இரண்டு டிவி. அதுவும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மாடல் மாற்றிக் கொண்டு. கார்கள், வாஷிங் மெஷின்கள், விதம் விதமாக துணி மணிகள் - ஒரு குடும்பத்தில் இப்படிப் பெருகும் சாமான்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முன்பெல்லாம் ஒரு பொருள் வாங்கினால் அது முழுக்க அதன் தேய்மானம் வரைக்கும் உபயோகப்படுத்திவிட்டுதான் தூக்கியெறிவோம். அப்புறமும் கூட recycle என்ற முறையில் அந்தப் பொருளை கடைசி வரை இன்னும் எப்படி உபயோக்க்கிலலாம் என்று பார்ப்போம். பழையப் பட்டுப் புடவைகள் திரைச்சீலையாகும்; சில துணிகள் சோபா கவராகும்; படு கந்தல் ஆகிவிட்டால் அப்புறமும் விடாமல் துடைக்கும் கந்தல் துணியாகப் பயன்படும். இன்று பழைய உடைகள் அவ்வப்போது அங்கங்கே தானம் கொடுக்கப்பட்டுவிடுகிறது. (முன்பெல்லாம் தெருவில் விற்கும் பழைய பேண்ட் - பிளாஸ்டிக் சாமான் வியாபாரம் இப்போ அவ்வளவா காணோமே!) சுனாமிக்குப் பின் குவிந்த பழைய துணிகளே ஒரு சாட்சி. ஒரு சாமான் ரிப்பேராகிவிட்டால், பழுது பார்ப்பது கிடையாது. தூக்கிப் போட்டுவிட்டு வேற புதிதாக லேட்டஸ்ட் மாடல் வாங்கிவிடுகிறோம். தயாரிப்பாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நுகர்வோர் சாமான்களை உற்பத்தி செய்து தல்ளுகிறார்கள். இதில் எக்கச்சக்க போட்டி என்பதால் ஒருவரை விட ஒருவர் விலை குறைத்தோ அல்லது அதிக வசதிகள் செய்து கொடுத்தோ நுகர்வோரை இழுக்கப் பார்க்கிறார்கள்.
இப்படி நுகர்வோர் சாமான்கள் சந்தையில் குவியக் குவிய மக்கள் வாங்குகிறார்கள் - வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். தொழில் உற்பத்தி அதிகரிக்க வேண்டியுள்ளது. உற்பத்தி அதிகரிக்கும்போது நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடைகிறது. தவிர வேலை வாய்ப்பு கூடுகிறது.
சரி. ஆனால் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரு வேளை நாம் பழைய மாதிரி எளிமையான வாழ்க்கை முறைக்கு சென்று விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாமான்கள் விற்பனையாகாது. (ஹ்ம்ம்... அப்படி கூட ஆகுமா என்ன?!!) விற்பனையில்லையென்றால் தொழில் உற்பத்தி மங்கிவிடும். உற்பத்தி மங்கினால் பொருளாதாரமும் சுருங்கிவிடும்?? உற்பத்தியும் மங்கக் கூடாது. ஆனால் அதே சமயம் நுகர்வோர் கலாசாரம் பெருகுவதையும் ஊக்குவிக்கக்கூடாது. வேலை வாய்ப்பும் கூட வேண்டும். என்ன வழி?
எனக்குத் தோன்றியது என்னவென்றால் கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிதண்ணீர் போன்ற வளர்ச்சித் திட்டங்களிலும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் முதலீடு / உற்பத்தி அதிகமாவது ஊக்குவிக்கப் பட வேண்டும். தொழில் நுட்பம் மற்றும் பல்விதமான சேவைகளில் ( Financial servcices, IT, bio tech related ) வித்தியாசமான துறைகளில் உற்பத்தி / முதலீடு செய்யலாம்; உலக வர்த்தக ஸ்தாபன உடன்பாட்டின்படி, அங்கத்தினர் அனைவரும் நெசவு உற்பத்திக்களுக்கான இறக்குமதி quotaவை நிறுத்த வேண்டும். இது நாள்வரை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வாங்கும் நெசவு உற்பத்திகளுக்கு உச்சவரம்பு வைத்திருந்தன. இதன்படி அந்த வருடத்திற்கான உச்ச வரம்பைத் தாண்டி நம் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முடியாது. ஆனால் இந்த வருடம் ஜனவரி ஒன்றிலிருந்து உலக வர்த்த உடன்பாட்டுப்படி அந்த நாடுகள் இந்த உச்ச வரம்பை அகற்ற வேண்டும்.
இதனால் இந்தியா போன்ற நாடுகளின் நெசவு ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு. இன்னும் ஐந்து வருடங்களில் 100 டாலர் பில்லியன் வருவாய் வரக்கூடிய தொழிலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் நம் நெசவு உற்பத்தியோ அப்படி பெரிய அளவில் ஏற்றுமதி செய்யுமளவு அதிகரிக்கவில்லை. சொல்லபோனால், பழைய உச்சவரம்பு இருந்த நாளிலேயே, அந்த உச்ச வரம்பு அளவைத் தொடும் அளவு கூட நம் உற்பத்தி இருந்ததில்லை. இந்த நிலையில் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கி அமெரிக்க /ஐரோப்பிய சந்தைகளை பிடிப்பதில் முனைந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் இங்கே இரண்டு தரப்பு வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஒன்று நெசவுத்தொழிலில் பெரும் இயந்திரங்களை உபயோகித்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதி சந்தையைப் பெருக்க வேண்டும் என்பவர்கள் ஒரு புறம். மறுபுறம், அப்படி பெரிய அளவில் தானியங்கி இயந்திரங்கள் உபயோகப்படுத்தும்போது உற்பத்தி பெருகலாம்; ஆனால் வேலை வாய்ப்பு குறைகிறது என்பது இன்னொரு சாரார் வாதம். இரண்டிலும் நியாயம் இருப்பதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்பத்தியும் பெருக வேண்டும்; வேலை வாய்ப்பும் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு Mass Production என்பதற்கு பதிலாக Production by massess என்று இருக்க வேண்டும் என்கிறார்கள். என்னதான் அதிகம் பேர்களை ஈடுபடுத்தினாலும் இயந்திரங்களின் வேகத்திற்கும் / துல்லியத்துக்கும் மனிதர்களால் முடியுமா? உற்பத்தி செலவும் அதிகமாக இருக்குமே? சீனா போன்ற நாடுகள் விற்கும் விலைக்கு ஈடுகட்ட முடியுமா? இல்லையென்றால், ஏற்றுமதிக்கான நல்ல வாய்ப்பை விட வேண்டி வருமா?

எனக்குத் தோன்றிய ஒரு எண்ணம். சீனா போன்ற நாடுகளின் போட்டிக்கு ஏற்ற மாதிரி நம் நெசவு உற்பத்தியையும் / தரத்தையும் அதிகரிக்க வேண்டும் - Mass production மூலமாக. ( 100 மில்லியன் வேலை வாய்ப்புகள் கூடும் என்று இந்த செய்தி சொல்கிறது) அதே சமயம், நெசவுத் தொழில் போன்ற பாரம்பரிய துறைகளில் வேலை வாய்ப்பு குறைவதால் மற்ற புதிய துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கப் பட வேண்டும். ஒரு நெசவுக் குடும்பத்தில் ஒருவருக்காவது நல்ல கல்வி பெறும் சூழ்நிலை அளிக்கப்பட்டு வேறு வித்தியாசமான தொழிலில் திறமை வளர செய்ய வேண்டும். தொழில்நுட்பம், Bio-tech, என்று அறிவு சார்ந்த தொழில்களும், Financial services, கல்வி, சுகாதாரம், ஹோட்டல் மற்றும் சுற்றுலா போன்ற சேவை (Services sector) சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு அவற்றில் நெசவு போன்ற பாரம்பரிய தொழில் செய்த குடும்பங்களுக்கு ஒரு மாற்று தொழில் கற்று தரப்பட வேண்டும்.

இது விஷயமாக உங்களுக்கு ஏதும் யோசனைகள் உள்ளதா?

பி.கு: வேற ஒண்ணுமில்லை. பட்ஜெட் வருகிறதே...:-)