Wednesday, February 23, 2005

இந்திய பத்திரிகையுலகில் பட்ஜெட் ஜுரம் வந்தாச்சு கடந்த இரண்டு வாரமாக எகனாமிக் டைம்ஸ் அலசல்கள் / எதிர்பார்ப்புகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பிஸினஸ் டுடே, நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு சென்ற பட்ஜெட் திட்டங்கள் நன்றாகவே செயல்பட்டிருப்பதாக சொல்லி மதிப்பீடு " A" கொடுத்துள்ளது.
சரி.

இப்போது பிஸனஸ் டுடேயின் சென்ற பட்ஜெட் ப்ரோகிரஸ் ரிபோர்ட்:

சென்ற பட்ஜெட்டில் அறிவிப்புகளும், அறிவிப்புகள் நடைமுறையில் செயல்பட்டவிதமும்.

( கூடவே இந்த மதிப்பீடுகள் பற்றி அலைகளின் மதிப்பீடு :-) )

  • Common Minimum Programmeல் ஒப்புக்கொண்ட திட்டங்களுக்கான செலவு ரூ. 10,000 கோடிகள்.

    ரூ. 12,000 கோடிகள் வரவு காண்பிக்கப்பட்டுள்ளது.


அலைகள்: ஓகே. பாஸ் :-)

அனைவருக்கும் அடிப்படை கல்வியளிக்க வசதி:

கல்விக்கான உபரி வரி 2 சதவிகிதம் போட்டதில் ரூ. 4000 -5000 கோடிகள் வருவாய் வந்துள்ளது. ( என்னுடைய சென்ற பட்ஜெட் பற்றிய ஜூலை 10, 2004, பதிவில் இதன் முலம் வரக்கூடிய வருவாய் ரூ. 2500 கோடிகள் என்று எதிர்பார்க்கப்படுவதாக எழுதியுள்ளேன் )

அலைகள்: ரொம்ப சந்தோஷம். ஆனால் அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய இந்த வருவாய் எப்படி செலவழிக்கப்பட்டது என்பது தெரியாமல் திட்டத்தின் அடிப்படை நோக்கம் சக்ஸஸ் என்று எப்படி சொல்ல முடியும்?

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் ஒருவருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு கொடுக்கும் திட்டம்.

"வேலைக்கான உணவு" ( Food for work) என்ற திட்டம் இந்தியாவின் மிக வறுமையான 150 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. National employment Guarantee Act என்ற சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

அலைகள்: முதல் சமாசாரம் கேட்க நன்றாக இருக்கிறது. நல்ல ஆரம்பம். பின்னது? ஹ்ம்ம்.. இன்னுமொரு சட்டம் /திட்டம். எவ்வளவு தூரம் செயல்பாட்டில் நோக்கை இது அடைய உதவும் என்று பொறுத்திரூந்து பார்க்க வேண்டும்.

நிதி சமாசாரத்தில் அதிக கவனம். இதில் சீர்திருத்தங்கள்.

வருவாய் பற்றாக்குறை, 2009க்குள் ஜீரோ லெவலுக்கு வருவதற்கு உதவும் வண்ணம் Fiscal Responsibility and Budget Management Act என்ற சட்ட அறிவிப்பு.

அலைகள்: மேலே சொன்னதே இதற்கும் - இன்னொரு அறிவிப்பு. ரிஸல்ட்டுக்கான நேரம் இன்னும் வரவில்லை.

விவசாயத்திற்கான கடனுதவி இன்னும் மூன்று வருடங்களில் இரண்டு மடங்காக வேண்டும்.

விவசாயக் கடனுதவி 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அலைகள்: பரவாயில்லை. இந்த போக்கு தொடர்ந்தால், மூன்று வருடத்தில் இலக்கை எட்டிவிடும்.

கட்டுமான வேலைகளில் இன்னும் அதிக முனைப்பு.

தேசீய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ரூ. 1, 72,000 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அலைகள்; அதெப்படி? நெடுஞ்சாலை மட்டுமே அடிப்படை கட்டுமான துறையாகுமா? துறைமுக வசதி, மின்சாரம், போன்ற கட்டுமான துறைகள்? மற்ற அடிப்படை வாழ்க்கை தேவைகளான தண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்றவை?

நிதி பங்கீடு இன்னும் பரவலாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும்.

12 வது நிதி கமிஷனில் மாநிலங்களின் வரி பங்கு ஒரு சதவிகிதப் புள்ளி ( one percentage point) உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ. 15,000 கோடிகள் கிடைக்கும்.

அலைகள்: OHT :-) over head transmission - அதாவது, அவ்வளவா புரியாத சமாசாரங்க :-)
தொலைத் தொடர்பு மற்றும் இன்ஷ¥ரன்ஸ் இவற்றில் அந்நி¢ய முதலீடு வரம்பு உயர்த்தப்படும்.

.......பட்டது. தொலைத் தொடர்பில் 74 சதவிகிதமாக.

அலைகள்: அப்பழுக்கு சொல்ல முடியாத செயல்பாடு.

பொதுத் துறையை புதுப்பிக்க ஒரு போர்ட் உருவாக்கப்படும்; NTPC யில் கொஞ்சம் பங்குகள் விற்கப்படும்.

போர்ட் உருவாக்கப்பட்டது. என் டி பி சி யில் 5 சதவிகிதம் பங்குகள் விற்கப்பட்டது.

அலைகள்: மேலே சொன்னதே.

முதலீட்டு துறை உருவாக்கப்படும்.

......பட்டது; ரத்தன் டாடா தலைமையில்.

அலைகள்: ஓகே. குறையன்றுமில்லை. இந்த போர்ட்கள், கமிஷன்கள் இத்தியாதி அமைப்புகள் எல்லாம் எப்படி அவை நியமிக்கப்பட்ட இலக்கை நோக்கி செயல்படுகின்றன என்று ஆய்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் அவற்றை கவனிக்க வேண்டும். இன்னும் மதிப்பீட்டு நேரம் வரவில்லை.

சிறப்பு பொருளாதார வட்டங்களை ( Specail Economic Zones) ஒழுங்குபடுத்த ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படும்.

....பட்டது. ஆனால் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையில் உள்ளது.

அலைகள்: மதிப்பீட்டுக்கு இன்னும் தயாராகாத அம்சம்.

3 comments:

Narain Rajagopalan said...

1.சென்ற பட்ஜெட்டில் அறிவித்த இரும்பு எஃகு வரியினை குறைக்கலாம். உலகசந்தையில் தரமான இரும்பிற்கு சந்தை அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.

2. வருமான வரி உச்சவரம்பை 1,50,000 என ஆக்குதல் நலம் என்று தோன்றுகிறது. இப்போது உள்ள பல்வேறுவிதமான் ஸ்லாபுகளை தூக்கி பழைய பேப்பர்காரனுக்கு போட்டுவிட்டு, பேசாமல் 10%,20%, 25% என உயர்த்தலாம். இதில் இன்னொரு கொடுமையையும் நீக்க வேண்டும். 100,000 வரை வரி கிடையாது ஆனால், 110,000 யாயிருந்தால், நீங்கள் கட்டவேண்டிய வரித்தொகை 9,000 ரூபாய் என்று நினைக்கிறேன். இது அநியாயம். அதைவிட 1 - 3 லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் வெறும் 10% மட்டுமே வரி கட்ட வேண்டுமென்று சொன்னால், நிறைய பேர் ஏமாற்றாமல் இருப்பார்கள். குறைந்த வரிப்பணம் என்பதால், அரசுக்கு நிரம்ப வருவாயும் கிடைக்கும்.

3. மதிப்பு கூட்டு வரி ஒரே சீராக விதிக்கப்பட்டால்,ஏகப்பட்ட பிற வரிகளை சீரமைக்க முடியும். WTO-வின் கையெழுத்துப்படி, இந்தியா தமது இறக்குமதியின் மீதான வரிகளை 0% கொண்டு வருதல் அவசியமாகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், டிவி, பிரிட்ஜ், கணினி விலைகள் குறைய ஆரம்பிக்கும் வாய்ப்புள்ளது.

இன்னமும் நிறைய மாற்றங்களை உள்ளடக்க வேண்டியதிருக்கிறது.

நன்றாக பதிந்திருக்கீறிர்கள். இன்னமும், விரிவாய் அலசுங்கள்.

Aruna Srinivasan said...

செய்கிறேன், நாராயண்; 28ந் தேதிக்குப் பிறகு :-)

அதுசரி. இப்போவும் வருமான வரி ஸ்லேப் 10; 20; 30 என்று மூன்றுதானே இருக்கு? 50000 - 60000; @ 10%

60001 - 1,50,000; @ 20%

1,50,000 - மேலே @ 30%

ஆனால் நீங்கள் சொல்வதுபோல் ஒரு லட்சம் -( ஒரு லட்சம் மட்டுமே, மேலே ஒரு பைசா கூடாது (!) - வருமானம் உள்ளவர்கள் பாடு தேவலை. கொஞ்சம் மேலே போச்சோ... ஸ்லேப் கணக்கு, ரிவர்ஸ் கியரில் போய் ரூ. 50001லிருந்து ஆரம்பித்துவிடுகிறது. 50000 - 60000; @ 10% plus அடுத்த ஸ்லேப் - 60001 - 1,50,000; @ 20% ; என்று சுளையாக தாளிக்க வேண்டும். மேலோட்டமாக பார்த்தால் அநியாயமாகதான் இருக்கு. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் ஒரேயடியாக 1 - 3 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 10% மட்டுமே....?!!! நடக்கிற காரியமா?! அப்புறம், குறைந்த பட்ச விலக்கும் 1,50,000 வரை உயர்த்த வேண்டும் என்று வேறு ஆசைப்படுகிறீர்கள். பிறகு சிதம்பரம் செலவுக்கு எங்கே போவார்? "100 நாள் வேலைவாய்ப்பு", கட்டுமான வேலைகளில் இன்னும் முனைப்பு, போன்ற ஏற்கனவே அறிவித்த திட்டங்கள், இந்த வருடம் அறிவிக்கப்போகிற திட்டங்கள், என்று வரிசையாக அவரை பயமுறுத்துமே? எனக்கென்னவோ இந்த முறை வருமான வரியில் அவர் ஏதும் கைவைப்பார் என்று தோன்றவில்லை. இருந்தாலும் ஒரு விஷயம் எனக்கு புரிவதேயில்லை. விவசாயத்தை வருமான வரியில் இழுக்க வேண்டாம். சரி. ஆனால் பணக்கார விவசாயிகளிடம் வரி வசூலிப்பதில் என்ன கஷ்டம்? தனவ்ந்தர்களான தொழிலதிபர்கள் போல விவசாய நிலச்சுவான்தாரர்களை ஏன் வரி வலைக்குள் கொண்டுவரக்கூடாது? விவசாயம் என்பது இன்னும் அரசியல் நோக்கிலேயே பார்க்கப்படுகிறது - யார் பதவியிலிருந்தாலும்.

சேவைகள் சற்று பணம் வரக்கூடிய பகுதி. சென்ற வருடம் பந்தல் போடுபவர்கள், டிராவல் ஏஜண்ட்கள் என்று சில சேவைகள் புதிதாக வரிவலையில் சேர்க்கப்பட்டன. இந்த வருடம் இன்னும் புதிதாக ஏதாவது சேருமா என்று பார்க்க வேண்டும்.

விதம் விதமாக மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும் விற்பனைவரிக்கு பதிலாக, சங்கிலித் தொடர் போல், உற்பத்தியாளர்கள் ஒரு பொருளுக்கு தாங்கள் வாங்கும்போது செலுத்தும் வரியின் கணக்கை தாங்கள் விற்கும் பொருளில் காட்டி சரிகட்டும் வசதி, மதிப்பு கூட்டு வரி முறையில் இருப்பதால் இது விற்பவர்கள், வாங்குபவர்கள் இருவருக்குமே நல்லது. கடைசி படிகட்டில் இருக்கும் நுகர்வோர் ( நாம்பதான், வேறு யார்? :-) ) இதனால் பயன்பெறுவார்கள்.

Narain Rajagopalan said...

அருணா, வருமான வரியின் மூலம் இந்தியாவின் கஜானாவுக்கு வந்து சேரும் தொகை மிக சொற்பம். என்னைப் பொறுத்தவரை மக்களின் செலவு செய்யும் திறனை உயர்த்துதல் மிக அவசியம். அதன் மூலம் சந்தையை விரிவாக்க, மேம்படுத்த இயலும். சந்தை விரிவடைந்தால், பொருட்களின் தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால், உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரித்தால், உற்பத்தி செலவு குறையும் [scale of produces leads to lower cost of production]உற்பத்தி செலவு குறைந்தால், தரமான பொருட்களை ஏற்றுமதி செய்ய இயலும், யூரோவிலோ, அமெரிக்க டாலரிலோ ஏற்றுமதி செய்யும்போது, அன்னிய கையிருப்பு அதிகரிக்கும். அதன் மூலம் நாம் நினைக்கும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை திறம்பட நடத்த இயலும். இதற்கெல்லாம் மிக அவசியமான விசயம், மக்கள் பொருட்கள் வாங்குதலில், சேவையை உபயோகித்தலில் பணம் செலவழிக்க வேண்டும். அதற்கு, கையிருப்பில் காசு இருக்க வேண்டும். அதனால் தான், வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இதைத் தாண்டி, ஒட்டு மொத்த இந்திய வரி வருமானத்தில் வருமான வரியின் பங்கு மிக குறைச்சல், சில வருடங்களில் வருமான வரியினை கொஞ்சம் கொஞ்சமாய் ஒழித்து கட்டிவிடலாம் அரபு நாடுகளைப் போல. கொஞ்சம் அதிரடியாக இருந்தாலும், நீண்ட நாள் செலவினங்களை கணக்கில்கொண்டு பார்க்கும்போது இது உதவும் என்றே தோன்றுகிறது.

உதாரணத்திற்கு, 1,30,000 சம்பாதிப்பவரின் நிலையை யோசியுங்கள். அவரின் மாத வருமானம் 10,000+, இதில் அவர் வரியாக செலுத்த வேண்டியது 15,000 ரூபாய்கள். ஆக அவரின் நிகர வரவு வரி போக 1,15,000 ரூபாய்கள். இவ்வாறு இருக்கையில் எவர் தான் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள். அதைவிடுத்து இந்த வரி பணத்தினை விடுவித்தால், 15,000 ரூபாய்க்கு, ஒரு பிரிட்ஜோ, டிவிடி ப்ளேயரோ அல்லது தன் மகன்/மகளுக்கு இரு சக்கர வாகனமோ வாங்கி தரலாம். இவையனைத்துக்கும், தொடர்ந்து உபயோகிக்க செலவு செய்தல் அவசியம் [பெட்ரோல், டிவிடி...] இதன் மூலம் ஒரு சந்தையினையும் தேவையையும் அவரின் வீட்டில் உருவாக்கலாம்.

இருசக்கர வாகனத்தை எடுத்து கொள்வோம். பெட்ரோல் போட வேண்டும். [பெட்ரோலிய நிறுவனங்கள், பெட்ரோல் ஸ்டேஷன்கள், பெட்ரோலிய பொருட்கள், ரியல் எஸ்டேட், கருவிகள் உற்பத்தி, வேலைவாய்ப்பு]வண்டியை சர்வீஸ் விட வேண்டும் [ சேவை வேலை வாய்ப்புகள், வண்டியின் உதிரி பாகங்களின் உற்பத்தி, ப்ரான்செய்ஸி வாய்ப்புகள், வேலை வாய்ப்பு - தெருவோர மெக்கானிக்கிலிருந்து, படித்து சேவை மையங்களில் வேலை செய்வோர் வரை] பல இடங்களுக்கு இலகுவாக சென்று வர இயலும். இதன் மூலம் பார்வை விரிவாகிறது. சில பொருட்கள் இங்கே சல்லிசாக கிடைக்குமென்று தெரிந்தால், அங்கே போய் வாங்க இயலும். அதன்மூலம் வேறு பொருட்களின் விற்பனையும், சந்தையும் உயரும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.