Monday, February 28, 2005

இந்த பட்ஜெட்டில் எனக்கு சந்தோஷமே. பெரும்பாலோர் அப்படிதான் நினைப்பார்கள். டிவி நிருபர்கள் மைக்கைத் தூக்கிக்கொண்டு பொது மக்களிடம் கேட்கும்போது பெரும்பாலானவர்கள் - " சமையல் காஸ், பெட்ரோல் விலை ஏறாது; சந்தோஷம் " என்பார்கள்.

ஆனால் இந்த பட்ஜெட்டில் எல்லோரையும்விட கிரெடிட் கார்ட் நிறுவனங்களுக்கு அதிக சந்தோஷம் இருக்கப்போகிறது. புதிய பட்ஜெட் அறிவிப்பினால் இனி எல்லோரும் நிறைய கிரெடிட் கார்ட் உபயோகிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பட்ஜெட் அறிக்கையில் ஒன்று ஒன்றாக சிதம்பரம் சொல்லிக்கொண்டு வந்தபோது சென்ற தடவையில் அறிவித்ததில் அதிகம் மாற்றம் இல்லை என்று தோன்றிற்று. என்னடா இது சர்ச்சைக்கு இடமில்லாமல் செய்கிறாரே, அதெப்படி, என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கிராமப்புர மற்றும் கட்டுமான வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு, நெசவுத்தொழிலுக்கு கன இயந்திரங்கள் இறக்குமதி செய்ய வரி சலுகை, நீர் பாசனத்துக்கு 400 கோடி, விவசாயத்திற்கு சலுகை / மான்யம் ரூ. 16000 கோடிகளுக்கு மேல் என்று எல்லாம் சரியாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரி வசூலிப்பில் அதிகம் மாற்றம் இல்லை. ஆனால் திட்டங்கள் பல உள்ளன. இந்த நிலையில் ரூ. 6000 கோடி வரவு வரும் என்று வேறு சொல்கிறார். எங்கே பூனை என்று தேடினேன். வந்தது கடைசியில். வங்கிகளில் ஒரு நாளில் ரூ. 10000க்கு மேல் பணம் எடுப்பவர்கள் 1 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்றாரே பார்க்கலாம். பார்லிமெண்டில் ஒரே அமளி. நகைக்கடைக்கு போய் 50,000 ரூபாய்க்கு ஒரு நெக்லஸ் வாங்கினீர்களானால், வழியில் வங்கியிலிருந்து பணம் எடுத்து கொடுத்துவிடலாம் என்று கணக்கு போட்டீர்களானால், மறக்காமல் 50,050 எடுங்கள். வங்கியிலிருந்து, ஒரு நாளில் எடுக்கப்படும் ஒவ்வொரு ரூ. 10,000 க்கும் .01 சதவிகிதம் வரி உண்டு. இதைத் தவிர்க்க வேண்டுமானால் கிரெடிட் கார்ட் அல்லது காசோலை உபயோகிக்க வேண்டும்.

பார்லிமெண்டில் எழுந்த அமளியின் எதிரொலி இன்னும் இரண்டு நாட்களாவது நாடெங்கும் அலசப்படும். வருடாவருடம் ஏதாவது கலாட்டா எழுந்து ஏதாவது ஒரு அறிவிப்பு வாபஸ் பெறப்படும். இந்த முறை இந்த அறிவிப்பு வாபஸ் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று விழைகிறேன். பெரிய செலவினங்கள் எல்லாம் கணக்கில் கொண்டுவரப்பட்டு கறுப்பு பணத்தை வேரிலேயே தாக்கலாம் என்பது நிதியமைச்சரின் எண்ணம். பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கேள்விகள் கேட்கபட்டபோது, " 10000 ரூபாயை எடுக்க ஆட்டோவில் ஆள் அனுப்பினாலும் குறைந்தது 20 ரூபாய் ஆகும். வெளி ஊர் காசோலை என்றால் கமிஷன் ஆகும். இதனால் இந்த பத்து ரூபாய் கூட கொடுக்க வேண்டியுல்ளதே என்று யாரும் வருந்தப்போவதில்லை. நானும் இந்த .01 சதவிகிதம் மூலம் பெரிதாக வருமானத்தை எதிர்பார்த்து இப்படி செய்யவில்லை. ஒரு கணக்கு tax trail இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எதிர்ப்பவர்கள் கவலையும் அதுவே" என்று சிரித்தவாறே விளக்கினார்.


என்னைப் பொறுத்தவரை இது சூப்பர் ஐடியா. இதுபோல், இன்னொரு நல்ல யோசனையும் உள்ளது. தற்போது வருமான வரிக்காக கணக்கு காண்பிக்க வைத்திருக்கும் ஆறில் ஒன்று என்ற விதியில் ( அதாவது வீடு, கார், வெளி நாட்டு பயணம், செல்போன், கிரெடிட் கார்ட் மற்றும் ரூ. 25000 வருட சந்தாக்கு மேல் இருக்கும் கிளப் உறுப்பினர் இதில் எது ஒன்று இருந்தாலும் வருமான கணக்கு காண்பிக்க வேண்டும்) செல் போன் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் மின்சார கட்டணம் வருடத்திற்கு ரூ. 50000 க்கு மேல் உள்ளவர்கள் இந்த லிஸ்டில் உண்டு. ஒரு வீட்டின் செலவினங்களின் மூலம் வருமானத்தை அளக்கும் யோசனை மிக கெட்டிக்கார கணக்கு. வரி வசூலிப்பில் நூதன யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரச்சனைகளின் ஆதாரத்தில் தாக்கும் திட்டங்கள்.
அப்புறம் அந்த ரூ. 50000 நகை வாங்கும்போது ஏதாவது பெரிய கம்பெனி முத்திரையா (Branded) என்று பாருங்கள். ஏனெனில் இனி Branded நகைக்கு தனியாக 2 % வரி உண்டு. சாதாரண இமிடேஷனுக்கு அல்லது சாதாரண brand அல்லாத நகைக்கு எக்ஸைஸ் வரி 8 % ஆக குறைந்துள்ளது. Branded என்றால் 10%.
வருமான வரி சீரக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை பதிவின் பின்னூட்டத்தில் வருமான வரியில் மாற்றங்கள் தேவை என்று நாராயண் கேட்டது பாதி நடந்துவிட்டது :-) அவருக்கு பதில் எழுதுகையில், "ஒரு லட்சம் -( ஒரு லட்சம் மட்டுமே, மேலே ஒரு பைசா கூடாது (!) - வருமானம் உள்ளவர்கள் பாடு தேவலை. கொஞ்சம் மேலே போச்சோ... ஸ்லேப் கணக்கு, ரிவர்ஸ் கியரில் போய் ரூ. 50001லிருந்து ஆரம்பித்துவிடுகிறது. 50000 - 60000; @ 10% plus அடுத்த ஸ்லேப் - 60001 - 1,50,000; @ 20% ; என்று சுளையாக தாளிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தேன். இனி அப்படியிருக்காது. ஒட்டு மொத்தமாக அடிமட்ட விலக்கு 1 லட்சம் என்று ஆகிவிட்டது. அதனால் 1 லட்சத்து 10 என்று வருமானம் காண்பித்தால் ரிவர்ஸில் 50000 லிருந்து ஆரம்பிக்காமல் நேரடியாக 1,50,000 வரை ஒரே சீராக 10 % வரி. 1,50,000 லிருந்து 2,50,000 வரை 20 %. அதற்கு மேல் 30%.
பெண்களுக்கான வருமான வரி exemption ரூ. 1. 25 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 1. 50 லட்சம்.

கிராமப்புறங்களில் 60 லட்சம் வீடுகள் அமைக்க திட்டம். கிராமப்புறம், விவசாயம், கட்டுமான வேலைகள் என்று முக்கிய விஷயங்களில் நிறைய கவனம் காட்டியுள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே சமயம் நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு வசதிகள் ஏதும் குறிப்பாக தென்படவில்லை. அதுவும் மும்பாயில் சமீபத்தில் குடிசைப் பகுதிகள் தகர்க்கப்ட்டதைப் பார்த்தபோது நகரங்களில் குடியேறி பலவிதங்களில் இன்னல்படுபவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் இருக்க இடம், என்று அடிப்படை வசதிகள் கிடைக்க வழி அரசு செய்ய வேண்டும் என்று தோன்றிற்று.

கூடிய விரைவில் ஸ்டான்·போர்ட், ஹார்வேர்ட் போன்ற பல்கலைகழகங்கள் செல்பவர்கள் இனி பெங்களூர் செல்லத் தொடங்குவார்கள். அங்கு இருக்கும் Indian Institute of Science உலக தரம் வாய்ந்ததாக மாற்ற, ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் கடனுதவி அதிகரிக்கவும் பொதுவாக நுண்கடனுதவி நல்ல முறையில் பரவவும் திட்டங்கள் உள்ளன. இவற்றைபற்றி தேவையுள்ளவர்களுக்கு இன்னும் தெளிவாக விளக்கவும் நுண்கடன்கள் பெற உதவிகள் செய்யவும் வங்கிகள் ஒத்துழைக்கும்படி அறிவுறுத்தபப்ட்டுள்ளன. இந்த வகையில் வங்கியுடனும் நுண்கடன் பெறுபவர்களுக்கு இடையே பரஸ்பரம் உதவ நுண் கடனுதவி அளிக்கும் நிறுவனங்களை - Banking Coreespondents என்ற பெயரில் வணிக வங்கிகள் தங்கள் பிரதிநிதியாக அமைத்துக்கொள்ளலாம்.
இப்போதைக்கு உடனுக்குடன் தோன்றிய எண்ணங்கள் இவை. மிச்சம் விஷயங்கள் பிறகு.

விரிவான விவரங்களுக்கு இங்கே சில சுட்டிகள்.

5 comments:

ராம்கி said...

ஏற்கனவே வங்கி சேமிப்பிற்கான வட்டி விகிதம் ஏகத்துக்கும் குறைவாக இருக்கிறது. இந்நிலையில் போட்டிருக்கும் பணத்தை எடுக்கக்கூட பத்துரூபா அழவேண்டுமென்றால் சாமானியர்களுக்கு முக்கியமா சிறு வியாபாரிகளுக்கு கொஞ்சம் கஷ்டமான காரியம்.

இன்னொரு புதுசு கண்ணா புதுசு, சேவை வரி விலக்கு. நான்கு லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானமில்லாத தொழில் செய்பவர்களுக்கு விலக்காம். இப்போ எல்லோரும் எந்த இடமா இருந்தாலும் பொதுமக்கள்கிட்டேர்ந்து சர்வீஸ் சார்ஜ் வாங்கிடறாங்க.. இனிமே யாருக்கெல்லாம் நான்கு லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருக்கும் எப்படி கணக்கு பண்ணி, கண்டு பிடிச்சு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கிறது. சர்வீஸ் சார்ஜை பொறுத்த வரை யாருக்கும் இப்போதைக்கு விலக்கு கொடுக்காம இருக்கிறதுதான் நல்லது.

ஆனால், இன்கம்டாக்ஸ் விஷயத்தில் செய்திருக்கும் சீர்திருத்தங்கள் நல்ல விஷயம்.

Narain said...

நான் இங்கே பதிந்ததை யார் PCயிடம் சொன்னது ? ;-) மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் நாம் செய்யும் அடிப்படை தவறு முழுவதுமாக மாறிவிடவில்லை. கெல்கர் குழுவின் அறிவுறுத்தல்கள் படி, குறைந்த பட்ச வரி விலக்கு 1,50,000-யாக இருத்தல் அவசியம் என்று தோன்றுகிறது. பார்ப்போம் PC 2006-லாவது அதை செய்கிறாரா என்று.

இந்த 0.01% கணக்கு வாபஸ் வாங்கப்படும் என்று நினைக்கிறேன். ஏனெனில், இதன்மூலம், நாம் திரும்பவும் பாட்டா நிலைமைக்கு போய்விடுவோம். கடைகள் இனி எல்லோருமே 9,990 மட்டுமே எனப் போட்டு கல்லா கட்டுவார்கள். இனி ஏடிஎமில் எவரும் 10,000 ரூபாய் எடுக்க போவதில்லை, அதற்கு பதிலாக, இரண்டு முறை பரிவர்த்தனை செய்வார்கள் (உதா. 9,000 + 1000 ) நிறைய பேப்பர்களை வீணாக்கலாம்.

நெடுஞ்சாலைகள் தாண்டி, கிராமப்புற சாலைகளைப் பற்றிய குறிப்பு மிக முக்கியமானது. இதன் மூலம் நல்ல சாலைகளும்,அதன்மூலம் வர்த்தக்மும் கிராமங்களில் நிறையவே எட்டிப்பார்க்கும் சாத்தியங்கள் அதிகரிக்கும்.

83,000 கோடி ரூபாய்கள் ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. "பெரியண்ணா"-வாக நிலைநிறுத்தி கொள்ளும் முயற்சிகளில் இது மிகவும் முக்கியமானது. சென்ற ஆண்டை விட சுமார், 6,000 கோடிகள் அதிகம். இவ்வாறு வருடாவருடம் ஏறிக்கொண்டே போகும் ராணுவசெலவீனங்களுக்கான அக்கவுண்டபிலிட்டி என்ன என்பது வாஜ்பாய்க்கும், மன் மோகன் சிங்கிற்கும் மட்டுமே வெளிச்சம்.

சேவை வரிகள் என்னைப் பொறுத்தவரை ஆசியாவிலேயே அதிகமாய் இருப்பது இங்கே தான். சற்றே ரிச்சி தெருவிற்கோ / உஸ்மான் சாலைக்கோ போய் பாருங்கள், ரசீது இல்லாமல் எத்தனை மக்கள் பொருட்கள் வாங்குகிறார்கள் என்று. நிறைய சேவைகளை வரிவிதிப்பிற்க்குள் கொண்டு வருவதில் ஆட்சபணைகளில்லை. ஆனால், 8% சேவை வரி, அதனை தாண்டி, சேவை கூட்டு வரி என்று மொத்தமாய் 10.2% வந்து நிற்கிறது. 100 ரூபாய்க்கு பொருள் வாங்கினால், வரி மட்டுமே 10.20 காசுகள் எனில் எந்த நிறுவனம் சரியாக கணக்கு காட்டும் என்பதை யோசிக்கவேண்டும். 4% மேல் இருக்கும் எந்த வரிக்கும் மதிப்பில்லை [ஏய்ப்பார்கள் ]என்பது தான் உலக நியதி.

இரண்டொரு நாட்களில் விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

இராதாகிருஷ்ணன் said...

தமிழ்சசியின் பதிவிற்கு எழுதிய பின்னூட்டத்தையே இங்கும் இடுகிறேன்.
//வங்கியில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு 10 ரூபாய் வரிச் செலுத்த வேண்டும்// இதுதான் எதற்கென்று புரியவில்லை. பொதுமக்கள் பெரும்பாலோர் இதை எதிர்க்கக்கூடுமாதலால், அரசு இவ்வறிவிப்பை ஒருவேளை திரும்பப் பெற்றுக்கொள்ளக்கூடும்; பெற்றுக்கொள்ளவேண்டுமென்பேன்.

maalan said...

என்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னதையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன.நாள் முழுவதும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். வாழ்நாளில் கணினியைக் கண்ணால் பார்க்காதவர்களும் இருக்கிறார்கள். எழுத்துலகில் நோபல் பரிசு புக்கர் பரிசு, புலிட்சர் பரிசு ஆகிய சர்வதேச பரிசுகளை வென்றவர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருக்கிறார்கள். தன்னுடைய பெயரையைக் கூட எழுதத் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். ஒரு கப் காபிக்கு 40 ரூபாய் கொடுக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். 40 ரூபாய் சம்பாதிக்க ஒருநாள் முழுக்க உழைக்க வேண்டியவர்களும் இருக்கிறார்கள். ஒரு தலைவலிக்கு உடல் முழுக்க ஸ்கேன் செய்து பார்த்துவிடும் வசதிகள் நகர்புறத்தில் உண்டு. உயிர் போகும் நிலையில் கூட மருத்துவ வசதிகள் இல்லாத கிராமங்களும் உண்டு.

இந்த இரண்டாவது இந்தியாவைப் பற்றி படித்தவர்கள் கவலைப்படுவதில்லை. பட்ஜெட் என்று வந்தால் வருமானவரி குறையுமா? வங்கி டெபாசிட்டிற்கு வட்டி கூடுமா? டெலிவிஷன் பெட்டிக்கு விலை குறையுமா என்றுதான் நடுத்தர வர்க்கம் கவலைப்படுகிறது.

இந்த பட்ஜெட் கிராமப்புற வளர்ச்சிக்கு உந்துதல் தர முனைகிறது. வெறும் வளர்ச்சி என்று பொத்தாம் பொதுவில் பேசாமல், இத்தனை வீடுகள், இத்தனை டெலிபோன்கள், இத்தனை ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனம், இத்தனை பேர் குடியிருக்கும் கிராமங்களுக்கு சாலைகள் என்று பேசுகிறது. அதை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது. ஒரு திட்டத்தை (Project) வணிக நிறுவனங்கள் அணுகுவதைப் போல
அணுகுகிறது.
ஆனால்-
இந்தத் திட்டங்களை மாநில அரசின் வழியாகத்தான் நிறைவேற்ற முடியும். நம் அரசமைப்பு அப்படி. மாநில அரசுகள் இதை அரசியலாக்கினால் இது குட்டிச்சுவராக வாய்ப்புண்டு. இதில் பஞ்சாயத்துக்களை ஈடுபடுத்தப்போவதாக சொல்லியிருக்கிறார். நல்ல எண்ணம். நேரடியாகவே பஞ்சாயத்துக்கள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கலாம். ஆனால் அதை அரசியல் கட்சிகள் அனுமதிக்காது.

இந்தியாவின் பிரசினை delivery at the last mile. கடைசிக் கைக்கு எப்படி ரொட்டியை கடத்துவது என்பதைக் குறித்து பேசுகிறோம், பேசுகிறோம், பேசிக்கொண்டே இருக்கிறோம். போன பட்ஜெட்டில் நி.அ இதைப் பற்றி பேசினார். இந்த முறையும் சில வார்த்தைகள் சொன்னார். civil society அரசுக்கு இதைப்பற்றி ஆலோசனை சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். ("Civil society should also engage Government in a healthy debate on the efficiency of the delivery mechanism."-FM Budget speech para 100)
பிரதமர் தரமான நடைமுறைப்படுத்தல் (Quality implementation) பற்றி மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். சிலமாதங்களுக்கு முன் இந்தியா முழுவதிலும் உள்ள IAS அதிகாரிகளை அழைத்துப் பேசினார். இப்போது நி.அ "At the same time, I must caution that outlays do not necessarily mean outcomes. The people of the country are concerned with outcomes." என்கிறார். எல்லோருக்கும் பிரசினை என்னவென்ரு தெரிந்திருக்கிறது. தீர்வு என்னவென்றுதான் தெரியவில்லை.

இந்த பட்ஜெட்டின் இன்னொரு ஆக்கபூர்வமான அம்சம் நுண்கடனுக்கு அரசு அளிக்க முன் வந்திருக்கும் ஊக்கம். வங்கிகளோடு நுண்கடன் அமைப்புகளுக்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவை வெளிநாட்டில் நிதி திரட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பற்றி மேலும் அறிந்து கொள்ள அருணா ஸ்ரீநிவாசனின் இம்மாத திசைகள் கட்டுரையைப் பார்க்கவும்.

அருணா, நீங்கள் சொல்வது போல 50000 செலவுக்கு 50050 எடுக்க வேண்டியதில்லை. அந்த 50 ரூபாயை உங்கள் கணக்கிலிருந்து எடுத்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியது வங்கிகளின் பொறுப்பு. அவர்கள் வேலைப் பளுதான் கூடும்.

இதைக் கொண்டு கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் என்பது அபத்தம். இது கறுப்புப் பணம் அதிகரிக்கத்தான் உதவும். என்னைப் போன்ற மாதக் கூலிகளின் (salaried class ஐத்தான் சொல்கிறேன்) சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துப்படுகிறது. நான் செலவிற்கு அங்கிருந்தான் பணம் எடுக்கமுடியும். ஆனால் வணிகர்கள் பணத்தை வங்கியில் செலுத்தாமல், கல்லாவிலிருந்தே செலவுக்கு எடுத்துத் தரமுடியும். எனவே அவர்கள் கையில் ரொக்கமாகவே பணம் வைத்துக் கொள்ளத் தலைப்படுவார்கள். ரொக்கமாகவே பரிவர்த்தனை நடக்கும். இதுதான் கறுப்புப் பணம் உருவாவதன் ஆரம்பம். வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமல்ல, உங்களது Fixed Deposit முதிர்வடைந்து அதைப் பணமாகப் பெறுவது என்றால் கூட இந்த வரியை செலுத்த வேண்டும்.

அறிவியல் புனகதைகளில் வருவது போல அரசாங்கம் முதுகிற்குப் பின் நின்று கண்காணிக்க முற்படுகிறது என்று நான் சந்தேகப்படுகிறேன்.Yes! the big brother is watching! அண்மையில் பங்குகள் வாங்குவதற்கு ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பங்குகள் வாங்குபவரின் விரல் ரேகைகள் பதிந்து கொள்ளப்பட்டு, புகைப்படத்துடன் ஒரு அட்டையும் எண்ணும் வழங்கப்பட்டது.((MAPIN) இந்த அட்டை இருந்தால்தான் பங்குகள் வாங்கவோ விற்கவோமுடியும். இப்போது வங்கிகளில் 10000 ரூக்கு மேல் dd வாங்க வேண்டுமானால் முகவரி, PAN எண் எல்லாம் கொடுக்க வேண்டும்.இவற்றின் தொடர்ச்சிதான் இந்த வரி விதிப்பு முறை என நான் சந்தேகப்படுகிறேன்.

ஏற்கனவே செல்போன் மூலம் நம் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் நம் அந்தரங்களைப் பறித்துக் கொள்கிறதோ? கண்ணாடிச் சுவர்களால் ஆன அறைக்குள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கிறோமோ?

இந்த பட்ஜெட்டின் இன்னொரு ஆக்கபூர்வமான அம்சம் நுண்கடனுக்கு அரசு அளிக்க முன் வந்திருக்கும் ஊக்கம். வங்கிகளோடு நுண்கடன் அமைப்புகளுக்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அவை வெளிநாட்டில் நிதி திரட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நுண்கடன் பற்றி மேலும் அறிந்து கொள்ள அருணா ஸ்ரீநிவாசனின் இம்மாத திசைகள் கட்டுரையைப் பார்க்கவும்.விரிவான விமர்சனத்திற்கு என் வலைப்பதிவு 'என் ஜன்னலுக்கு வெளியே' வைப் பார்க்கவும் (http://jannal.blogspot.com)

Aruna Srinivasan said...

ரஜனி ராம்கி, நாராயண், ராதாகிருஷ்ணன், மாலன், கூல் டவுன்...கூல் டவுன்..... நாட்டில் எல்லோருமாக சேர்ந்து "போட்டுத்தாக்கியதில்" ©, இந்த வங்கியில் ரூ. 10,000 பணம் எடுக்க ரூ. 10 வரி சமாசாரத்தில் மாறுதல் வரும் அல்லது வாபஸ் பெறப்படும் என்று இன்றைய செய்திகள் கூறுகின்றன. அதனால், கூல்...ரிலேக்ஸ்... :-)