Monday, February 26, 2007

லாலுஜி, மிக்க நன்றிஜி :-)

ஒரு காலத்துலே ஏகமா நஷ்ட்டத்துலே இருந்தாங்க.

இந்த வருடம் ரூபாய் 20,000 கோடி லாபமாம். போன வருடத்தை விட இந்த வருடம் நிறைய விலைக்குறைப்பு வேறு. எப்படிங்க இப்படி லாபம் காட்டுறீங்க? ஆனாலும், நம்பள மாதிரி சாதாரணவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். இதெல்லாம் விட எனக்கு என்ன ரொம்ப சந்தோஷ்ம்னா.... 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 தட்டு வண்டியிலே கீழ் இருக்கை /படுக்கை வசதி ஒதுக்கப்படுமாம்.

இந்த ஒரு விஷயத்துக்காக,

ரயில் மந்திரி லாலுஜி, மிக்க நன்றிஜி :-) ஒவ்வொருதடவை ரயில் பயணம் ரிசர்வேஷன் செய்யும்போதும் மேல்தட்டுதான் கிடைத்தது என்று செய்துவிட்டு, அங்கே போய் - சின்ன பசங்ககிட்ட அய்யா, அம்மான்னு கெஞ்சி கீழ் இருக்கையை கேட்டு வாங்கி - ஹ்ம்ம் இனி இந்த தர்ம சங்கடம் இல்லே... ஒரு வேளை லாலுஜி குடும்பத்துலேயும் யாருக்காவது முழங்கால் மூட்டு வலி இருக்குமோ??? :-)

பின்னால் சேர்த்தது.

திரு அளித்த கருத்துக்கு பதில் எழுத ஆரம்பித்த விஷயம் இன்னும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று தோன்றியதால்டைங்கே மீண்டும் கொஞ்சம் சேர்த்து இருக்கிறேன்.

சென்டிரல் ரயில்வே ஸ்டேஷன் சமீபத்துலே போயிருக்கீங்களா? ஓரளவு சுத்தமாகவே இருக்கு - பிளாட்பாரங்கள் மட்டும். ஆனா வெளியே இன்னும் சகிக்க முடியாமல்தான் இருக்கு. அதுவும் அந்த கூவம் பாலம் அருகில். வாலாஜா சாலை பக்க நுழைவாயில் போன்ற இடங்கள். ரயில் பாதைகள் - ஹ்ம்ம்.. கேட்கவே வேண்டாம்.

ரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செய்பவர்கள்தாம் ஆகட்டும், பிளாஸ்டிக் கவர்கள், மிஞ்சிய காப்பி, இன்னும் வகையறா, வகையறா - நின்ற இடத்திலேயே கொட்டுவதைப் பார்க்கும்போது.... நற..நற... ( என் பற்கள் உடையும் சப்தம் கேட்டதா?)

சென்ற வாரம் இபப்டித்தான் பெங்களூரில் என் அருகில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன் தான் குடித்துக்கொண்டிருந்த பிளாஸ்டிக் காபி கப்பை நடந்து போய் ரயில் பாதை இடுக்கில் போட்டுவிட்டு வந்தான். என் அருகில் மீண்டும் அமர்ந்து செல் போனில் பேசியவனை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தேன். பெங்களூரில்லேதோ IT நிறுவனத்தில் வேலை செய்பவராக இருக்கும் என்று தோன்றியது. பல நாடுகள் பயணம் செய்திருப்பார். அங்கேயெல்லாம் இப்படி போட்டு இருப்பாரா என்று தோன்றியது. அடுத்த வினாடி அவரிடம் பேச ஆரம்பித்து விட்டேன். " உங்களுக்கு ஒரு வேண்டுகோள்." என்றேன்.

"ஆங். சொல்லுங்க."

" நீங்க இப்ப காபி கப்பை ரயில் பாதை இடுக்கிலே போட்டதை பார்த்தேன். வெளி நாட்டுலே இப்படி செய்து இருப்பீங்களா? தயவு செய்து இனிமே இதுபோல் செய்யாதீங்க. இதுபோல் யாராவது செய்வதை நீங்கள் பார்த்தாலும் இனிமேல் நீங்கள் தடுக்க ஆரம்பியுங்கள்" என்றேன்.

அவருக்கு ஒரு வினாடி துணுக்கென்று இருந்தாலும் அடுத்த கணம் மென்மையாக சிரித்து மன்னிப்பு கோரினார். இனி எப்படியிருப்பாரோ தெரியாது. குறைந்த பட்சம் அடுத்த முறை காபி குடித்தவுடன் அவர் கை கொஞ்சம் தயங்கும். குப்பைத்தொட்டி இல்லாத இடங்களில் ஒரு பிளாஸ்டிக் பையை நம் கைப்பையில் வைத்திருந்தால் உள்ளே போட்டுக்கொண்டு, பின்னர் குப்பைத்தொட்டி கண்களில் பட்டதும் போடலாமே?

ரயில்களில் ( பல சம்யங்களில் விமான நிலையங்களிலும் கூட) கழிவறைகளிலிருந்து வரும் துர்நாற்றம் நம் மனசை நோகச்செய்து விடும். நிர்வாகங்கள்தாம் இந்த இடங்கள் பராமரிப்பிற்கு காரணம் என்றாலும் ஓரளவு நம் ஜனங்களும் காரணமே. ஆரம்பக் கல்விக்கூடங்களில் எதைக் கற்றுக்கொடுக்கிறார்களோ இல்லையோ, அடிப்படை சுத்த/பத்த விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். கழிவறைகளே இல்லாமல் இருக்கும் நம் சிற்றூர்களிலும் மற்றும் நகர்ப் புறங்களில் வசதி குறைவானவர்கள் இருக்கும் இடங்களிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுத்தத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சுலப் மற்றும் எக்ஸ்னோரா போன்ற தொண்டூழிய அமைப்புகள் செய்யும் சேவைகள் பிரபலப்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு நகர / கிராம வட்டத்திலும் இவை போன்ற அமைப்புகள் ஏற்பட வேண்டும். பொது இடங்களில், குறிப்பாக உணவுப் பண்டங்கள் விற்கப்படும் இடங்களின் அருகாமையில், பொது வாகனங்களில் நிறைய குப்பைத்தொட்டி இருக்க வேண்டும்.

இன்னும் நிறைய "டும்" போட்டுக்கொண்டே போகலாம்.

மற்றொரு விஷயம் - நம் ஊர் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நம் சாமான்களை நாமே தள்ளிக்கொண்டு போக வசதியாக ஓரளவு நல்ல தரை. ஆனால் வெளியே வந்ததும் வாகனங்கள் நிற்கும் இடத்துக்கு போக ரொம்ப தூரம் போக வேண்டும் - அதுவும் வழியெல்லாம் குண்டும் குழியும். இதை தவிர்க்க ஆரம்பத்திலேயே உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நம்மூரில் பொது இடங்களில் வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களுக்காக தனி வசதி - ramp - இருப்பதேயில்லை. பிளாட்பாரங்களுக்கு போக படியேறிதான் போக வேண்டும். சறுக்கு பாதை இல்லாமல் சாமானை தூக்கிக்கொண்டு போவது வேதனை. ஆங்காங்கே " Disabled" என்று பெயர் பலகை மட்டும் இருக்கும் - கழிவுக்கூடம், சில ரயில் பெட்டிகள் என்று. ஆனால் அந்த ரயில் பெட்டியில் ஏறுவதற்கு ஏற்றாற்போல் ramp இருக்காது. இப்போதெல்லாம் புதுக் கட்டிடங்களில் ramp வைக்கிறார்கள். ஆனால் இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு பெற்றவர்களின் சௌகரியத்திற்காக நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப தூரம்.

மேலே குறிப்பிட்ட பல "வேண்டும்"கள் லாலுஜியின் கண்களில் பட வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். :-)

ஆனாலும், எங்கேயோ இன்னும் இப்படி குறைகள் இருந்தாலும், உலகிலேயே அதிகம் பேர் பயணம் செய்யும் ஒரு ரயில் நிர்வாகம் இத்தனை தூரம் சமாளிப்பதே பெரிய விஷயம்தான்.