Monday, January 31, 2005

சசியின் டைரி பதிவில், அழிந்து கொண்டிருக்கும் தமிழக வரலாறு என்று எழுதியிருந்தார். அவர் கவலையில் நியாயம் இருக்கிறது. இந்த வாரம் ஹிந்துவில் வந்த கட்டுரை நல்ல யோசனைகளைக் கொடுத்துள்ளது. இந்தப் புகழ் பெற்ற பயணக் கட்டுரையாளர்கள் இருவரும் ( இந்தியர்தாம்) நம் கண்காட்சியகங்களை, நமது பாரம்பரியமும், சரித்திரமும் நன்றாக விளங்கும் வண்ணம் மாற்றியமைக்க வேண்டும் என்று எழுதியுள்ளனர் - மற்ற நாடுகளில் உள்ள கண்காட்சியகங்களை மேற்கோள் காட்டி. ஒரு முறை மதுரை கண்காட்சியகத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் தூசியும் தும்பையுமாய், கிழிந்த கோலத்தில், அழுக்காய் வைத்திருந்த நிலையைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினேன். மதுரையில் மட்டுமல்ல. பல இடங்களில் நமது கண்காட்சியகங்கள் மிக பரிதாபமான நிலையில்தாம் உள்ளன. மைசூரில் அரண்மனை வைத்திருந்த விதத்தைப் பார்த்தபோதும் என் மனதில் இப்படிதான் ஓர் ஆயசம் வந்து உட்கார்ந்து கொண்டது. தமிழ்நாட்டு அரண்மனைகள் எந்த நிலையில் உள்ளன?
எதிர்கால தலைமுறையினருக்கு - ஏன், இன்றைய தலைமுறைக்கே கூட - நமது சரித்திரம் தெரிந்திருப்பது அவசியம். இது பாடப்புத்தகங்களினால் அல்ல. இந்த மாதிரி கண்காட்சியகங்களினால் சரித்திரத்தையும் விஞ்ஞான உண்மைகளையும் நன்றாக மனதில் பதிய வைக்க முடியும். இந்தக் கட்டுரையாளர்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லியிருப்பதுபோல் மகாபலிபுரட்தில் சிற்ப வேலைப் பாதியில் நின்றதற்கு "கடல் கொந்தளிப்பும்" ஒரு காரணமாக இருக்கலாமோ?

கற்சிற்பங்களில் உள்ள "கங்கையின்" வருகை இதைத்தான் குறிக்கிறதோ என்ற கேள்வி யோசிக்க வைக்கிறது. ஏற்கனவே பூம்புகார் "கடல் கொண்டதும் சுனாமியாக இருக்கலாம் என்ற சிந்தனை சுழன்றுகொண்டிருக்கிறது. இப்படி ஒரு வேளை பல சரித்திர அனுபவங்கள் இருந்தும் இன்றைய தலைமுறையான நமக்கு இதைப் பற்றி தெரியாமல் போய்விட்டதே. யாரோ ஒரு பேட்டியில் சொன்னார்; "சுனாமி வருகிறது என்றால், "எங்கே..எங்கே.. என்று கடற்கரைக்கு வேடிக்கைப் பார்க்க போவார்கள் நம்ம ஜனங்கள்" - சரித்திர அறியாமை அழிய வேண்டுமானால் கண்காட்சியகங்களின் தரம் உயர்வது - சரித்திர உண்மைகள் மக்களை சென்றடையும் வண்ணம் செய்வது மிக முக்கியம். தொழில் நுட்ப வசதிகள் உள்ள இந்த காலத்தில் சரித்திரங்களை நிஜம் போல் காட்டுவது கஷ்டமில்லையே? முப்பரிமாண சித்தரிப்புகள் சுவாரசியமாகவும் இருக்கும் நெஞ்சில் நீண்டு நிற்கும்.

Museum என்றவுடனே, " அதாங்க, அந்த செத்த காலேஜ்" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று அருங்காட்சியகங்கள் இருக்கும் நிலையைச் சரியாக சித்தரிக்கும் பெயர் !!

Sunday, January 30, 2005

மகாத்மா காந்திஜி நினைவு நாள்

இன்று ஜனவரி 30. மகாத்மாவிற்கு தேசம் அஞ்சலி செலுத்தியது.

இன்று தேசத்தில் இதெல்லாமும் நடந்தன.

பாபரி மஸ்ஜித் தாக்குதல் 10 மாதம் திட்டமிட்டு செய்யப்பட்டதென்று பழைய உளவுத்துறை அதிகாரி கூறுகிறார்.

பீஹாரில் இன்னொரு பள்ளிச்சிறுவன் காணவில்லை

காஞ்சி வழக்கில் மேலும் தகவல்கள்.

ஹெலிகாப்டரில் குண்டு. நாக்ஸல்பாரி வன்முறை

அபு சலாமை போர்சுகல் அரசு வெளியேற்றுவதன் மூலம், 1993ல் மும்பாய் குண்டு வெடிப்பு தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் போலீஸ் விசாரணக்கு ஆளாக நேரிடும் - செய்தி.

ஆலடி அருணா கொலை வழக்கில் கல்லூரி நிறுவனர் கைது.

அஹிம்சைவாதி அமரர் அண்ணல் காந்திஜிக்கு சமர்ப்பணம். ஹே ராம் !

பி.கு: இந்தப் பதிவின் பாரத்தை மகாத்மாவினால் தாங்க முடியவில்லை போலிருக்கிறது. சரியாகப் பதிப்பிக்க முடியாமல் பலமுறை முயன்று இங்கே பதிந்துள்ளேன்.

Saturday, January 29, 2005

காலையில் காபி சாப்பிடும்போது கையில் செய்தித்தாளை வைத்துக் கொண்டு படிக்கும் அனுபவம் இருக்கிறதே அதற்கு இணை ஏதும் கிடையாது. ( காலையில் காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டு கணினி முன்னால் உட்காருபவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.) செய்திகளைப் பக்கம் பக்கமாக அலசி நிதானமாக டேபிளில் பரத்தி வைத்துக் கொண்டு அல்லது தரையில் உட்கார்ந்து கொண்டு படிப்பது சுவாரசியம்தான். சாப்பாடு தயாராகிவிட்டதா? பரவாயில்லை. பேப்பரை நாலாக மடித்து டேபிளில் தட்டுப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே படிக்கலாம். அட வெளியே செல்ல நேரமாகிவிட்டதா? அதனால் என்ன? அந்தப் பேப்பரை அப்படியே மடித்து கையில் சுருட்டிக்கொண்டு ( கஷ்கத்தில் அடக்கி கொண்டு?) புறப்பட வேண்டியதுதான். பஸ்ஸில் / ஆட்டோவில் / காரில் ( அதாவது ஓட்டுனர் சீட்டில் வேறு ஒருவர் இருக்கும்போது !) செல்லும்போது விட்ட இடத்திலிரூந்து தொடரலாம். படித்துமுடித்துவிட்டால், சமயத்தில் இது விரித்து உட்காரவும் பயன் படும். ரயில் பயணங்களில் துடைக்கும் "துணி"யாகவும் பயன்படும். மின்சாரத் தடங்கல் போன்ற தொழில் நுட்ப தடங்கல்கள் எதுவும் குறுக்கிடாமல் செய்திகளை உள் வாங்கிக்கொள்ளலாம். நினைத்தபோதெல்லாம் திரும்பத் திரும்ப படிக்கலாம். கண்கள் இரண்டாம் பத்தியைப் படிக்கும்போதே பக்கத்து பக்கத்தில் கொட்டை எழுத்தில் உள்ள வேறு செய்திக்குத் தாவலாம். ( எலியை அமுக்கிவிட்டு "இறங்குமா" இறங்காதா" என்று ஸ்கிரீனையே முறைத்துக் கொண்டிராமல்...!) வாசலில் பேப்பர்காரர் போடும் பேப்பரை எடுத்துவருவதோடு நம்ம வேலை முடிந்தது. இதெல்லாவற்றையும்விட கருப்பு வெள்ளையாக அச்சில் படிக்கும்போது நிறைய விஷ்யங்கள் இன்னும் நன்றாக புரிகிறார்போல் இருக்கு. ஹ்ம்ம்... இப்படியெல்லாம் எழுதியதால் மூத்த தலைமுறை லிஸ்டில் சேர நானும் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்! நான் இன்னும் கணினி வழி செய்திகளைதான் பெரும்பாலும் நம்பியிருக்கிறேன்.

இருந்தாலும் இன்று - ஜனவரி 29 - Newspaper day என்று கொட்டையாக செய்த்தாளில் போட்டிருக்கிறார்களே. குறைந்த பட்சம் ஒரு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி நீடூழி வாழ்க என்று சொல்ல வேண்டாமா? அதான் செய்தித்தாளின் மகிமையை மேலே அப்படி சிலாகித்துள்ளேன்.

செய்தித்தாளின் மகிமை இன்னும் பல வருஷங்களுக்கு மங்காது என்று 9 வருடம் முன்பு சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் கூட பேசப்பட்டது. (Asian Newspaper Publishers Conference). இதைப் பற்றிய என் பழைய செய்தி ஒன்றை இங்கே மறுபதிப்பு செய்துள்ளேன்.

அந்தக் காலத்திலேயே, செய்திதாள் என்பது காணாமல் போயிடுமா என்றெல்லாம் கவலைப் பட்டார்கள். அதெல்லாம் ஆகாது என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்கள். செய்தித்தாள் ஏன் அவ்வளவு சீக்கிரம் மறையாது என்று சிங்கப்பூரில் அன்று பேசியவர்கள் சொல்லிக்கொண்ட காரணங்களில் எது சரியோ இல்லையோ ஒன்று மட்டும் சத்தியம். அதுதான் செய்தியின் விலை. மிஞ்சிப் போனால் 2 அல்ல்து 3 ரூபாயில் பக்கம் பக்கமாக செய்திகள் வீட்டு வாசலில் வந்து விழும்போது, அதே பக்கங்களை இணையத் தொடர்புக்கும் கணினிக்கும் செலவழிக்க அவ்வளவு சுலபமாக மனசு வந்துடுமா? உலகெங்கிலும் இன்னும் செய்தித்தாள்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க இது ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

இதே மாநாட்டில் Online Newspaper காலமும் காலாவதியாகி, செய்தி என்பது பாக்கெட்டில் போட்டுக்கொண்டு விரும்பிய இடத்தில் சௌகரியமாக எடுத்துக் கொண்டு போக, உட்கார்ந்து படிக்க தோதாக ( நம்ம அச்சு செய்தித்தாள் மாதிரி !) ஒரு குட்டி மாத்திரை சைஸ் உருவத்தில் இருக்கும் என்று அப்பவே தொழில் நுட்ப வாத்யார்கள் எல்லாம் சொன்னார்கள். அந்த ஆரூடம் எல்லாம் இப்போ என்ன ஆச்சு என்று தெரியலை. செய்திதாளுக்கு இணையாக Online Newspapers அதே ஆரோக்கியத்தோடு சுற்றி கொண்டிருக்கிறது. நேரம், சௌகரியம், இடம், தேவை, இவற்றைப் பொறுத்து இரண்டுக்கும் தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தண்டவாளம் போல் இரண்டும் சம வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இன்னும் பல தலைமுறைகளுக்கு ஓடும் என்பது என் ஆருடம் :-)
வழக்கம்போல் தாமதமாகவே சில பதிவுகளைப் படிக்கிறேன். இருந்தாலும் இது ரொம்பவே லேட்டு :-)

பிராமணத் தமிழ் எப்படி - ஏன், என்ற உஷாவின் கேள்வி சுவாரசியமானதுதான். சொல்லப்போனால் இந்தக் கேள்வி எல்லா வட்டாரத் தமிழுக்குமே பொருந்தும் இல்லையா? மதுரைத் தமிழ், திருநெல்வேலி தமிழ், சென்னை தமிழ் - இப்படி அந்தந்த வட்டாரங்களில் உபயோகிக்கப்படும் வார்த்தைப் பிரயோகத்தின், மூலம் எது என்று தேடுவது போல்தான் இந்த "மொழியின்" மூலம் தேடுவதும். ஆனாலும், அதெப்படி இந்தக் குறிப்பிட்ட சமூகத்தினர் தாங்கள் இருக்கும் வட்டாரத் தமிழின் தாக்கம் இல்லாமல் தாங்கள் பேசும் dialect ஐ விடாமல் பேசுகிறார்கள் என்று ஒரு கேள்வி எழுவதிலும் தவறேதுமில்லை. இந்த ஆராய்ச்சியில் என் தலையையும் சற்று நுழைத்ததில் என் மூளைக்கு எட்டியது -
இரண்டு காரணங்கள் :

1. இது ஒரு பழக்கப்பட்டுப் போன தாய்மொழி ஆகிவிட்டதால், குறைந்த பட்சம் தங்கள் வீட்டுக்குள் இந்த "மொழியில்" பேசுவது இயற்கை. வெளி நாட்டிலிருந்தாலும் நாம் சந்திக்கும்போது நமக்குள் தமிழ்தானே பேசுகிறோம்? அந்த ஊர் மொழியில் அல்லவே? ஆனால், இதுவும் பல குடும்பங்களில் வேறுபடும். டில்லியில் வளர்ந்த என் பிள்ளைகள் பெரும்பாலும் இந்தியில் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் பழகும் சூழ்நிலையின் தாக்கம் அது. ஆனாலும் வீட்டில் எங்களுடன் தமிழ்தான் - அதுவும் "பிராமணத் தமிழ்". ஏனெனில் அது தாய்மொழியாகிவிட்டது. டில்லியிலிருந்து அவ்வப்போது சென்னை வரும்போது இங்கே அக்கம்பக்கத்து வீட்டார்களுடன் நான் பேசும் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது என்பார்கள். " சென்னை வரும்போது மட்டும் திடீரென்று நீங்கள் வித்தியாசமான தமிழ் பேசுகிறீர்களே, ஏன்?" என்று அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது கேட்பார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் வீட்டில் நாங்கள் பேசும் தமிழ் மட்டும்தான். "வேறு" தமிழ் எதுவும் கேட்டதில்லை. இதனால் வந்த குழப்பம். பிறகு புரிந்து கொண்டார்கள் - மற்ற மொழிகளில் உள்ளதுபோல் தமிழில் இதுவும் ஒரு dialect என்று. கல்லூரியும் இவர்கள் வடக்கிலேயே படித்ததால் இவர்களுக்கு மற்ற தமிழ் dialect ல் பேச சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் என் உறவினர் பையன் ஒருவனுக்கு எக்கச்சக்க குழப்பம் நேர்ந்தது. டில்லியில் வளர்ந்த அவனுக்கு சென்னைப் பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது. இங்கு வந்து சில நாட்கள் அவன் சென்னை தமிழுக்கும் தான் பழகியிருக்கும் "பிராமணத் தமிழுக்கும்" இடையே திணறிகொண்டிருந்தான். "ஆத்துக்கு போயிட்டு வரேன்", "நன்னாயிருக்கு", "படிச்சிண்டு இருக்கேன்" என்ற ரீதியில் அவன் பேசும்போது கல்லூரி நண்பர்கள் எக்கச்சக்கமாக அவனை கலாய்த்தார்கள். " ஆத்துலே குளத்திலே எல்லாம் போகாதேடா என்றார்கள்; பெண் லெக்சரர் ஒருவரை "லெக்சரர் சொல்றா" என்ற போது, " என்னடா லெக்சரரை மரியாதை இல்லாமல் சொல்கிறாய் என்றனர். விடுமுறைக்கு டில்லி போகும்போதெல்லாம் அம்மாவிடம் கதை கதையாக சொல்வான். ஆனால் ஒரு வருடத்தில் ஓரளவு சென்னை தமிழ் அவனுக்கு பழகிவிட்டது. இப்போதெல்லாம் டில்லியில் அவன் அம்மாவிடமும் இதர உறவினர்களிடம் முழுக்க முழுக்க சென்னை தமிழே பேச ஆரம்பித்துவிட்டான். அவன் முன்பு பழகியிரூந்த " பிராமண மொழி" போயே போச்சு. இப்போது அவனை கலாய்ப்பது அவனது உறவினர்கள் - தங்கள் "மொழியில்" பேசாமல் லோக்கல் தமிழில் பேசுகிறானே என்று. இதேபோல் சிறுவர்களாக இருந்தபோது நாங்களும் - என் சகோதரரும் சகோதரியும் - இந்த மொழி வித்தியாசத்தில் மாட்டிகொண்டிருக்கிறோம். ஆனால் எங்களுக்கு சட்டென்று மொழி மாற்றி பேசுவதும் பழகிவிட்டது. டில்லியில், வெளியே ஹிந்தியும் வீட்டில் தமிழும் பேசுவது போல. மொத்தத்தில் பிராமணத் தமிழ் என்பது ஒரு dialect. அவ்வளவுதான். இதை ஜாதி கண்ணோட்டத்தில் பார்ப்பது அவசியமில்லை.

2. இந்த பேச்சு மொழிக்கு காரணம் சமஸ்கிருத மொழியின் தாக்கமும் எழுத்து தமிழின் தாக்கமுமாக இருக்கலாம் என்பது என் ஊகம். பழங்காலத்தில் அந்தணர்களின் முக்கிய வேலை மந்திரங்கள் ஓதுவதுதான் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் படிப்பு என்பது சமஸ்கிருதமும் எழுத்து தமிழும்தான். படிக்கும் மொழியின் கலப்பு பேச்சு வழக்கிலும் கலந்திருக்கலாம். கீழ் வரும் வார்த்தைப் பிரயோகங்களைச் சற்று கவனித்தால் நான் சொல்ல வருவது புரியும்.அகம் - வீடு ( ஆம் அல்லது ஆத்து என்று பிறகு மருவியது) தீர்த்தம் / தூத்தம் / தேர்த்தம் - தண்ணீர் அதேபோல் "செய்துகொண்டு இருக்கிறேன்" என்ற எழுத்து தமிழை வேகமாக சொல்லும்போது நாளடைவில் "கொ" மறைந்து வெறும் "ண்டு" வில் நின்றிருக்கலாம். செய்து கொண்டு இருக்கிறேன் - வேகமாக சொல்லிப் பாருங்கள்..? "செய்துண்டு"; "செய்ஞ்சுண்டு"....... நன்றாக இருக்கிறது - நன்றா இருக்கு - நன்னா இருக்கு.
வைஷ்ணவத் தமிழில் சாப்பிடும் எதுவுமே அமுதுதான் :-) சாற்றமுது - சாறு - அமுது ( ரசம். - தக்காளி மற்றும் பருப்பின் ரசம்? ) திருக்கண்ணமுது - திருக்கண்ணன் - அமுது. கண்ணனுக்குப் பிடித்தது / படைத்தது என்பதால் இருக்குமோ? கரமேது - கறி ( கறிகாய்??) - அமுது

3. உஷா எழுப்பிய அடுத்த கேள்வி - ஏன் மற்ற மொழி பேசும் அந்தணர்களிடம் ஏன் இப்படி ஒரு பிராமண dialect இல்லை? அடிப்படையில் எழுதும் மொழிக்கும் பேச்சு மொழிக்கும் அதிக வித்தியாசம் இருக்கும் மொழி தமிழ்தான். ( ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மனிய மொழி என்று கேள்வி - அப்படியா? ) ஹிந்தி போன்ற மொழிகளில் ஓரளவு எழுதுவதும் உச்சரிப்பும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். அதனால் அந்த மொழி அந்தணர்களுக்கு ஒரு வேளை தாங்கள் படிக்கும் மொழிக்கும் பேசும் மொழிக்கும் அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்திருக்கலாம். இது என் ஊகம்.

தவிர இந்திய மொழிகள் அனைத்துக்குமே சமச்கிருதமும் தமிழும்தான் ஆதிமுலம் என்று சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதன்படி பார்த்தால் நான் முதலில் கூறியதுபோல் கற்கும் மொழியின் தாக்கம் அதிகமாகவே ஆரம்ப கால தமிழ் அந்தணர்களிடம் இருந்திருக்கலாம். அதுவே மருவி பின்னர் "பிராமண மொழியாக" மாறியிருக்கலாம்.

ஆக்கப்பூர்வமான மாற்று கருத்துக்களை வரவேற்கிறேன்.

விவாதம் எண் இரண்டு: சமீபத்தில் இந்தப் பேட்டியைப் படித்தேன். இதில் ".....சினிமா தமிழைவிட்டு விலகி பலகாலமாகிவிட்டது." என்ற கருத்தை சினிமா பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் - Any takers? :-)

Wednesday, January 26, 2005

கடந்த வியாழன்று ஹிந்து பேப்பரைத் திறந்தவுடனேயே ஒரு பெண்ணின் படம் மனசில் ஒரு துள்ளலைக் கொண்டு வந்தது. காதில் இரண்டு காதணிகள்; மூக்கில் ஒன்று; கழுத்தில் போட்டிருந்த குட்டி சங்கிலி காற்றில் தூக்கி நிற்கிறது; உதட்டை மெல்லக் கவ்வியவாறு இரண்டு கைகளாலும் மட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தார். கண்களில் ஒரு குறுகுறுப்பு; மலர்ச்சி; தன்னம்பிக்கை தெறித்தது. (( ஹ்ம்... ஹிந்துவின் இணைய பக்கத்தில் போட்டோ இல்லாமல் செய்தி. ஆனாலும் குடைந்ததில் சுமாராக ஒன்று கிடைத்தது. )

ஆனால் அன்று பேப்பரில் அந்த படத்தைப் பார்த்தவுடனேயே ஏது இந்திய பெண் போலிருக்கே; டென்னிஸ் விளையாட்டில் ஏதும் இந்தியப் பெண் பெயர் இதுவரை என் கண்களில் படவில்லையே ( விளையாட்டு சமாசாரங்களில் நான் ஒரு ஞான சூன்யம் என்பது தெரிந்த விஷ்யம் என்றாலும் அவ்வப்போது இப்படி தலைப்பு செய்திகளில் வரும் பெயர்கள் கவனத்தைக் கவரும்) என்று யோசித்தபடியே செய்தியைப் படித்தேன். சரிதான் இந்தியப் பெண்தான். சானியா மிர்ஸா. அப்புறம் இந்த வாரம் முழுக்க இந்தப் பெண்தான் என் ஹீரோயின். டிவியில் செய்தி/ பேட்டி வந்தபோதெல்லாம் ஓடி வந்து கவனித்தேன். சும்மா சொல்லக் கூடாது. டென்னிஸ் விளையாட்டு நுட்பங்களெல்லாம் தெரியாது. ஆனால் இந்தப் பெண்ணின் ஆளுமை / தன்னம்பிக்கை முகத்தில் ஒரு தேஜஸ் - இதெல்லாம் இவர் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறார் என்று சொல்கிறது. விம்பிள்டன் ரொம்ப தூரம் இல்லை :-)

**** **** ****

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். Hewlett-Packard தலைமை அதிகாரி, Carly Fiorinaவை
HP Board சற்று ஓரங்கட்ட பார்ப்பதாக. உலகில் இன்று சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக கருதப் படும் இவர் வேலைக்கும் ஆபத்தா என்று வியப்பாக இருந்தது. இவரையும் இன்னும் சில பெண் தலைமையதிகாரிகள் பற்றியும் படிக்கும்போதெல்லாம் பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் கண்ணாடிக் கூரை சரிந்துகொண்டு இருக்கிறது என்று எனக்குள் ஒரு உவகை வரும். ஆனால் இந்தச் செய்தியைப் படித்தவுடன் ஏதேது அத்தனை எளிதில் கண்ணாடி கூரை தகறாது போலிருக்கே என்று தோன்றிற்று.

போதாதற்கு இந்த ஹார்வேட் பல்கலைகழக தலைவர் வேறு பெண்களுக்கு அவ்வளவாக விஞ்ஞான அறிவு போதாது என்று கூறியுள்ளார். எனக்கு வர கோபத்தில்......grr..grr..... யாரோ எதையோ சொல்லிவிட்டுப் போகட்டுமே என்று விடத் தோன்றவில்லை. அதுவும் இபப்டி ஒரு உயரிய பதவியில் உள்ளவர்களெல்லாம் இப்படி பொறுப்பில்லாமல் உளறினால் எப்படி? இந்தச் செய்தியை எழுதிய பாலாஜி, மேரி கியூரி அம்மையாரை உதாரணம் காட்டியுள்ளார். அதுசரி. அது அந்தக் காலம். இப்ப சமீபத்து பெண்களில் யார் யாரை அடையாளம் காட்டலாம் என்று எண்ண ஆரம்பித்தேன். முதலில் ஞாபகம் வந்தது கிரண் மஜும்தார். ( சில சமயம் நம்ம மூளை கூகிள் மாதிரி வேலை செய்யும் போலிருக்கு. சமீபத்து நிகழ்ச்சிகள்தாம் டாப் லேயர்லே ரிலீஸ் ஆகிறது.) அப்புறம் யோசித்தேன்; brewing technology படித்துவிட்டு எதேச்சையாக பயோ டெக் தொழிலில் நுழைந்த கிரணை ஒரு விஞ்ஞானி என்று சொல்வது சரியா என்று. ஆனால் தொழில் நுட்பம் என்பதும் விஞ்ஞானத்தின் ஒரு அங்கமே என்று என்னுள் ஒரு விளக்கமும் கூடவே எழுந்தது. (விஞ்ஞானியோ இல்லையோ, இன்று இவர் இந்தியாவில் richest பெண் - அதோடு இன்றைக்கு அவருக்கு ஒரு பத்ம விருதை அறிவித்து இந்திய அரசும் அவரை கௌரவித்துவிட்டது.

சரி.... அப்புறம் இன்னும் பெண் விஞ்ஞானிகள்.....? கூகிள் கொடுத்த லிஸ்ட்டுகளில் இது கவனத்தை ஈர்த்தது.

இதில் இந்திய பெண் விஞ்ஞானிகள்..... ம்ம்.....பொறுங்கள் இதோ தேடிப் பார்த்து சொல்கிறேன்...!!!

பி.கு. அதுசரி.. இந்த பாலாஜி நரசிம்மன் யாருங்க? நம்ம வலைப் பதிவாளர்கள் அரங்கிலே யாராவது....??

பி.கு - 2. அவ்வப்போது சில பதிவுகளில் ற்,ர, ல,ள, போன்றவைகள் திருத்தப்படுகின்றன; அல்லது மெய்யெழுத்து எங்கே வர வேண்டும் / வேண்டாம் என்றெல்லாம் இலக்கண வகுப்புகள் நடக்கின்றன. இங்கேயும் அப்படி "நக்கீர" பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டினால் என் தமிழும் சற்று பிழைக்கும் :-)

Wednesday, January 19, 2005

தைப் பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ... புதுப் பதிவுகள் பிறக்கும் போலிருக்கிறது. நேற்றுதான் முத்துவின் பதிவைப் பற்றி சொன்னேன். இன்று மாலன். மைக்ரோசாப்டின் புது வரவான "spaces" ல் ஒரு Space எடுத்துக் கொண்டுவிட்டார். அதுசரி ஏற்கனவே அவருடைய ஜன்னலில் தூசி படிந்திருக்கு போலிருக்கே என்றால் - அது வேறு இது வேறு என்றார். சரி இதில் அப்படி என்னதான் இருக்கு என்று எட்டிப் பார்த்தால்தானே புரிகிறது. வழக்கம்போல் ஒரு சுவாரசியமான சர்ச்சைக்கு கொக்கி போட்டுள்ளார். இவர் எழுப்பியுள்ள கேள்விக்கு என் பதில் " ஆமாம் ; இல்லை ! இரண்டுமே! ஒரு சமுகத்தின் பார்வைகள் அமையும் விதத்தில் எந்த அளவு டிவி, சினிமா, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களுக்கு பங்கு இருக்கிறது என்பது நெய் / தொன்னை அல்லது முட்டை / கோழிக்குஞ்சு போன்ற சமாசாரம். சமூகத்தின் பார்வைகளைதான் ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. அதே சமயம் நிழலில் வரும் பாத்திரங்களை அல்லது "தத்துவங்களைப்" பார்த்து பார்வைகளும் மாறுகின்றன என்பதும் நிஜமே. ஆனால் சமூகப்பர்வைகள் மாறுகின்றன என்று குற்றம் சாட்டி ஒட்டு மொத்தமாக ஊடகங்களைப் பழி சொல்வதும் சரியல்ல. எத்தனைதான் பார்த்தாலும் படித்தாலும் கேட்டாலும், வள்ளுவரின் " எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு." என்ற அறிவுரையைப் பின்பற்றிக் கொண்டிருந்தால் சுசி. கணேசன் எழுப்பியுள்ள கவலைக்கும் இடம் இருந்திருக்காது. இருந்தாலும் இப்படி நிஜமாகவே ஒரு நகர்ப் புறத்தில் நடந்தால் - யார் கண்டார்கள் ? மக்கள் விவேகமாகவே, யதார்த்தமாகவே எடுத்துக்கொள்வார்களோ என்னவோ?

பார்வைகள், பார்க்கும் நபர்களின் மன முதிர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது.

இதன் நடுவே "மெய்ப்பொருள்" காண்பதன் / தேடுவதின் அவசியம் மறுபடி வந்துவிட்டது. 2002 பிப்ரவரியில் குஜராத் / கோத்ராவில் நடந்த "ரயில்" சம்பவத்தை ஆய்வதற்கு நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிட்டியின் Interim report வந்துள்ளது. அது விபத்துதான் - விஷமிகளால் திட்டமிட்டு நடத்தப்ட்ட செயல் அல்ல என்று அந்த அறிக்கை சொல்லுகிறது. எதிர்பார்த்தாற்போல் பிஜேபி வட்டாரங்களிலிருந்து எதிர் வாதங்களும் வந்துள்ளன.

ஆர். கே லஷ்மணின் திருவாளர் பொதுஜனம் கணக்காக நான் மதில் மேல் உட்கார்ந்து கொண்டு இரண்டு வாதங்களையும் படித்துக் கொண்டிருந்தபோது பானர்ஜி அறிக்கையில் இருந்த ஒரு வரி சட்டென்று யோசிக்க வைத்தது. ".....On the basis of available evidence, the committee found it unbelievable that 'kar sevaks' ( to the extent of 90 percent of the total occupants) armed with 'trisuls', would allow to get themsleves burnt without a murmur by miscreant acitivity - like a person entering the S-6 coach from outside and setting it on fire...".

எல்லோரும் விழித்திருந்த காலை வேளை அது. 60 லிட்டர் பெட்ரோல் ஊற்றப்பட்டது என்று மோடி அரசில் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு கூறியிருந்தது. என் மனதில் எழுந்த கேள்வி; 60 லிட்டர் முழுவதும் ஊற்ற எவ்வளவு நேரம் பிடிக்கும்? அத்தனை நேரமும் அங்கேயிருந்தவர்கள் எப்படி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்? தீய நோக்கோடு ஒருவன் உள்ளே நுழைந்து பெட்ரோல் ஊற்ற ஆரம்பித்தவுடனேயே ( பெட்ரோல் வாசனையே சந்தேகப் பட வைத்திருக்குமே?) அவனை எதிர்த்திருக்க மாட்டார்களோ? அல்லது பெண்கள், குழந்தைகளை மட்டுமாவது வெளியே தப்பிக்க வைத்து இருக்க மாட்டார்களோ? பிழைத்து வெளி வந்தவர்கள் சொன்ன விஷயங்கள் என்ன?

பானர்ஜி அறிக்கையின் வாதத்தில் உண்மையிருக்கலாம்; அல்லது திட்டமிட்ட செயலாகவும் இருக்கலாமோ? ஹ்ம்ம்.... உண்மை ஆணித்திரமாக நிரூபிக்கப் படும் வரையில் இவை பதிலில்லாக் கேள்விகளாகவே இருக்கும்.


Tuesday, January 18, 2005

முரசு அஞ்சல் முத்து நெடுமாறனிடமிருந்து இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. அவரும் ஒரு வலைப் பதிவு தொடங்கிவிட்டார் !! கடந்த 15ந் தேதி அன்று அவரது நிறுவனத்தின் படைப்பான கைத் தொலைப்பேசியில் தமிழ் குறுந்செய்தி சேவை தொடங்கியது. சேவை தொடங்கிய செய்தி வெளி வந்த சற்று நேரத்திலேயே உலகின் பல பகுதிகளிலிருந்தும் அவருக்கு வேண்டுகள்கள் வர ஆரம்பித்துவிட்டனவாம் - தங்கள் செல்போன்களில் எப்படி இந்த சேவையை உபயோகிப்பது என்று.

எல்லோருக்கும் பொதுவாக விரைவில் சரியான விவரங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்ற என்ணத்தில் ஒரு வலைப் பதிவை தொடங்கிவிட்டார். ரொம்ப நாட்களுக்கு முன்னரே அவரையும் ஒரு வலைப் பதிவு ஆரம்பிக்க சொல்லிக் கொண்டு இருந்தேன். பரவாயில்லை. இப்படி தொழில் நுட்ப ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் அவசியம் அவரையும் ஒரு பதிவு ஆரம்பிக்க வைத்துவிட்டதே :-)

செல்லினம் என்று பெயர் சூட்டப்பட்டு கவிஞர் வைரமுத்து அவர்களால் தொடங்கப் பெற்ற இந்த சேவையைப் பற்றி இந்த வலைப் பதிவில் படியுங்கள்.

Wednesday, January 05, 2005

இன்று காலையில் உறவினர் ஒருவரை சென்டிரல் ஸ்டேஷனில் விடச் செல்லும்போது வழக்கம்போல் பீச் ரோடில் சென்றோம். சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த சாலை இது. நீண்ட அகலமான பாதை என்பதோடு கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே போவது நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களில் ஒன்று. இன்றும் சாந்தோம் அருகில் வந்தவுடன் ஜன்னல் ஓரமாக நெருங்கி உட்கார்ந்து கடலைப் பார்க்க ஆரம்பித்தவுடன் சட்டென்று ஏதோ வித்தியாசமாக உறைத்தது. கடற்கரை சாலையிலிருந்து எங்கோ தூரத்தில் கடலும் அதற்கு முன்னால் பரந்த மணலும்தான் என் மனதில் பதிந்து போன காட்சி. ஆனால் இப்போது கடல் அலைகள் சட்டென்று நெருங்கி வீசிக்கொண்டிருந்தது. குத்து மதிப்பாக கண்களை பழக்கமான தூரத்தில் ஓடவிட்டவளுக்கு இது ஒரு ஷாக். ரயில் நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது காரை காந்தி சிலைக்கு அருகில் நிறுத்திவிட்டு சற்று நடக்க ஆரம்பித்தோம்.

சுனாமிக்குப் பின் இப்போதுதான் முதல் முறையாக கடற்கரைப் பக்கம் செல்லுகிறேன். பத்து நாட்களாக சுனாமியின் விளைவுகளைப் படித்தும் தொலைக் காட்சியில் பார்த்தும் இருந்தாலும் இன்று நேரில் இந்த கடலின் அருகாமையைப் பார்த்தபோது சட்டென்று முதுகுத் தண்டில் சிலீரென்றது. நான் எப்போதும் பெரிதும் ரசிக்கும் கடல் அலைகள் இன்று மனதில் ஏனோ ஒரு பயத்தைத் தோற்றுவித்தன. நானா அப்படி பொங்கி எழுந்தேன்? என்று ஒன்றும் தெரியாத அப்பாவியாக இன்று அலைகள் வழக்கம்போல் எழும்பிய வண்ணம் இருந்தன. கடற்கரையில் ஆங்காங்கே பலர் முன் போல் நடந்து கொண்டும் உடற்பயிற்சி செய்து கொண்டும் இருந்தனர்.

கடல் நன்றாகவே முன்னுக்கு வந்திருந்தது. வழக்கமாக கால் புதையும் மண்ணில் பத்து நாட்களுக்குப் பிறகும் இன்னும் ஈரம். காந்தி சிலையின் கீழ் இருக்கும் பூங்காவில் அலைகள் வந்து போன அடையாள்ம். உப்பு படிந்த நடைபாதை / சாலை - எல்லாம் நடந்து முடிந்த பிரளயத்திற்கு மௌன சாட்சிகள்.
காலை மணி 6.40. கிட்டதட்ட இதே நேரம் பத்து நாட்கள் முன்பு...... எங்களைப் போல் இன்னும் சிலரும் கடலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் - மௌனமாக - கண்களில் மிரட்சியோடு. உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த ஒருவர் அலைகள் தாக்கிய விதத்தை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.
மனசில் சொல்லத்தெரியாத சங்கடம் வந்து உட்கார்ந்து கொண்டது. எவ்வளவு பேர் எப்படி எல்லாம் தவித்தார்களோ? அதுவும் எங்கேயோ வெளியில் சுற்றிவிட்டு ஊர் திரும்பி இப்படி பார்க்கும்போது நம் மக்கள், நம் ஊர் என்று மனதில் ஒரு பரிவு அதிகமாகவே இருந்ததை உணர்ந்தேன். பூமியின் பெரும்பகுதியைத் தாக்கிய ஒரு விளைவில், இப்படி தோன்றுவது ஒரு சுய நலமான எண்ணமாக இருக்கலாம். ஆனாலும் இயற்கையின் சீற்றம் நம் வீட்டு வாசலில் வந்து இடிக்கும்போது......?