Monday, December 18, 2006

இமாலயத்தில் ஒரு சிம்மாசனம்

என் பழைய - 1986 - 89 - ஆல்பத்திலிருந்து சில படங்கள்.




பூடானின் தலைநகரம் திம்புவின் ஒரே பிரதான வீதி. ( உலகிலேயே டிராபிக் சிக்னல் இல்லாத ஒரே தலைநகரம்). கடல் மட்டத்திலிருந்து 7656 அடி உயரத்தில் உள்ளது.

________________________________

திம்புவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான டிசைனில் - பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு இருக்க இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அழகான பூக்களும் - புத்த மத அடையாளங்களும் பல நிறங்களில் வரையப் பட்டிருக்கும். இங்கே பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் ஒரு சிறப்பு - அவை யாவும் ஆணிகள் இல்லாமலேயே எழுப்பப்பட்டுள்ளன.
____________________________________


திம்புவின் Central Business District
________________________________


ஒரு பனிப்படர்ந்த மலையின் மேலே..... நின்று கொண்டிருப்பது? சாட்சாத் நானேதான் :-)
________________________________


குறுக்கும் நெடுக்கும் சள சளவென்று குளுமையாக ஓடிக்கொண்டிருக்கும் "திம்பு சூ". சூ என்றால் ஜோங்கா (Dzonka) மொழியில் நதி.
_________________________________



ஒரு தேசீய அணி வகுப்பு. தேசீய மற்றும் மத சம்பந்தமான விழாக்களில் இபடி பொது இடங்களில் அணிவகுப்பு அல்லது பாரம்பரிய நடனங்களில் மக்கள் பங்கு கொள்வது சகஜம். பெண்களுக்கு இங்கே முன்னுரிமை. பெண் வழி வாரிசு முறை. ஆணும் பெண்ணும் ஒன்றுக்கும் மேற்பட்டோரை மணப்பது இயல்பான வழக்கம் இந்த சமூகத்தில். குழந்தைகள் பிறந்த பின்பு திருமணம் செய்துகொள்வதும் உண்டு. இங்கே இவை இயல்பான சமூக வழக்கம். இன்று ஓரளவு மாறி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
______________________________________



மோரீஷியஸ் அதிபர் 1986ல் பூடானுக்கு வருகை தந்தபோது.

_________________________________________

வில், அம்பு விளையாட்டு முக்கிய தேசீய விளையாட்டு. ஞாயிற்றுக் கிழமையானால் அவரவர் வில், அம்பு சகிதம் மைதானம் பக்கம் கிளம்பிவிடுவார்கள். பாரம்பரிய உடை அவசியம். ( கனமாக, நடுக்கும் குளிருக்கு இதமாக நன்றாகதான் இருக்கும்). உல்லாசப்பயணிகள் வருகை கட்டுப்படுத்தபட்டு உள்ளது. இதர நாடுகளில் பாரம்பரியம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை கவனித்து, மன்னர் தீர்மானமாக தன் நாட்டின் இயற்கையும் பாரம்பரியமும் அழிந்து விடாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது.

_________________________________

ஞாயிறு தோறும் கூடும் சந்தை - காய்கறிகளிலிருந்து, குளிர் உடைகள், மற்றும் வீட்டுக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் சந்தையில் பேரம் பேசி வாங்கலாம்.

அதுசரி, ஏன் திடீரென்று பூடான் படங்கள் இங்கே?


நேற்றைய செய்தி: பூடானின் அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக் தன் மகனுக்கு அரியணையை கொடுத்துவிட்டார்.

"முக்கியமான" கொசுறு செய்தி: புதிய அரசர் நாம்கேல் வாங்சுக், திம்புவில் லுங்டன்ஜாம்பா (Lungtenzampa Junior High School ) பள்ளியில் என் இளைய மகனின் வகுப்புத்தோழன்(ர்). :-)

மனம் பின்னோக்கி அசைபோட...... விளைவு - இந்த படங்கள். இந்த டிஜிடல் காலத்திலும், 1970களில் வாங்கிய யாஷிகா காமிராவிற்கு இணை இல்லை - என்னைப் பொறுத்தவரையில் :-)

Wednesday, December 13, 2006

பந்தா இல்லாத சிந்தனையாளர்

" எனக்கு பதினைந்து வயதாக இருக்கும்போது என் அம்மாவிடம் சொன்னேன். " நான் பெரியவனாக ஆனதும் என்னவாக ஆகப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டேன். ஒரு எழுத்தாளாராகதான் ஆகப்போகிறேன்."

என் அம்மாவுக்கு உடனே கவலை வந்துவிட்டது. " என் செல்லமே... உன் அப்பா ஒரு இஞ்சினீயர். ரொம்ப யதார்த்தமானவர். வாழ்க்கையைப் பற்றியும் உலகைப் பற்றியும் தீர்க்கமான பார்வை கொண்டவர். அதுசரி. ஒரு எழுத்தாளர் ஆவது என்றால் என்ன அர்த்தம் என்றாவது உனக்கு புரியுமா?"

" இதில் புரிய என்ன இருக்கு? எழுத்தாளர் என்றால் புத்தகங்கள் எழுதுபவர்."

" உன் மாமா ஒரு டாக்டர். அவர் கூட புத்தகங்கள் எழுதுவார். நீ கூட உருப்படியா ஒரு இஞ்சினீயருக்கு படி. அதன் பின் நீ எப்போ வேணுமானாலும் புத்தகம் எழுதலாம்."

" இல்லேம்மா... நான் ஒரு எழுத்தாளனாக வேண்டும். புத்தகங்கள் எழுதும் இஞ்சினீயராக இல்லை."

" சரி. நீ எப்போவாவது ஒரு எழுத்தாளரை சந்தித்து இருக்கிறாயா?"

"இல்லயே... வெறும் போட்டோக்களில்தாம் பார்த்து இருக்கிறேன்."

"சரிதான். எழுத்தாளர் என்றால் என்னன்னு கூட தெரியாம எழுத்தாளன் ஆகணும்னு ஆசைப்பட்டாயானால் அதெப்படி?" என்று சொல்லிவிட்டார்.

அம்மா கேட்ட கேள்விகளுக்கு விடை தேடி நான் ஒரு எழுத்தாளன் ஆக என்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். 1960களின் ஆரம்பத்தில் என் ஆராய்ச்சிகளின் முடிவில் எனக்கு தெரிய வந்த தகுதிகள்:

  1. ஒரு எழுத்தாளனின் முதல் தகுதி அவர் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். தலை வாராமல் எப்போதுமே கலைந்து இருக்க வேண்டும். சீப்பையே பார்த்து இருக்கக்கூடாது. முகத்தில் எப்போதும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு சிடு சிடுவென்று எதைப் பற்றியாவது குறை சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். பாதி நேரம் முகத்தில் சோகம் அப்பி இருக்க வேண்டும். வாழ் நாளில் பெரும்பகுதி ஏதாவது ஒரு மதுபான கிளப்பில் இவரைப் போலவே தலை கலைந்த சிடு சிடுவென்ற சக எழுத்தாளர்களுடன் எதைப் பற்றியாவது விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டும். ரொம்ப "ஆழமான" சமாசாரங்கள் பேசுவார். எப்போதுமே அவரிடம் தன்னுடைய அடுத்த புத்த்தகத்துக்கான பிரமாதமான ஐடியா இருக்கும் ஆனால் சமீபத்தில் வெளி வந்த தன் புத்தகம் அவருக்கு பிடிக்காது.

  2. அவரது சம காலத்து தலைமுறையினரால் புரிந்து கொள்ள முடியாதவராக இருப்பது ஒரு எழுத்தாளனின் தலையாய கடமையாகும். பெரிய விஷயங்களை புரிந்து கொள்ளாத ஒரு தலைமுறையில் தான் பிறந்து விட்டோம் என்பதில் அவருக்கு கடுகளவும் சந்தேகமில்லை. தப்பித்தவறி தான் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டோமானால் தான் ஒரு "மேதை" என்று தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவருக்கு தெரியும். எழுதியதை திருத்தி பலமுறை மாற்றி எழுதுவார். நம்மைப்போல் சாதாரண மனிதர்கள் அகராதியில் 3000 வார்த்தைகள் உபயோகித்தோமானால் நம்ப எழுத்தாளர் இதில் ஒன்றைக் கூட உபயோகிக்க மாட்டார்; ஏனென்றால் நம்ம ஆள் சாதாரணமானவர் இல்லையே? அகராதியில் இன்னும் பாக்கி 189,000 வார்த்தைகள் இருக்கின்றனவே... அவற்றையெல்லாம் பிரயோக்கிக்காமல் என்ன எழுத்தாளன் அப்புறம்?

  3. ஒரு எழுத்தாளர்தான் மற்றொரு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கூட அவருக்கு சக எழுத்தாளர்கள் மேல் ஒரு கடுப்பு இருக்கதான் செய்யும். சரித்திரத்தில் இடம் பிடிக்க தன்னுடன் போட்டியிடுகிறார்களே? ஆக மொத்தம் நம்ம எழுத்தாளரும் அவரது சகாக்களும் உலகிலேயே ரொம்ப குழப்பமான புத்தகம் எழுதுவதில் முனைந்துள்ளார்கள். யார் ஜெயிக்கிறார்களோ அவர் " யாருமே புரிந்து கொள்ளவே முடியாத" புத்தகம் எழுதிய பெருமையை வென்றவர்.

  4. ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதற்கு நம் எழுத்தாளர் சில வார்த்தைகளை எடுத்து விடுவார் - semiotics, epistemology. neoconcretism ... என்று வாயில் கூழாங்கல்லைப் போட்டு பயிற்சி செய்து உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். மற்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்க வேண்டுமென்றே, திடீரென்று "ஐன்ஸ்டின் ஒரு முட்டாள்" என்பார். அல்லது " டால்ஸ்டாய் பூர்ஷ்வாக்களின் கோமாளி" என்று விமரிசிப்பார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சியாக இருக்கும். இருந்தாலும் இந்த "செய்தி" சூடு பிடிக்க தொடங்கும். Relativity என்ற சித்தாந்தம் சுத்த உளறல் ; டால்டாய் ரஷ்யாவின் மேட்டுகுடியினரின் ஆதரவாளர் என்ற ரீதியில் எல்லோரும் பேசத் தொடங்குவார்கள்.

  5. யாராவது பெண்ண்ணின் கவனம் தன் பக்கம் திரும்ப, அறிமுகத்தின் போது தான் ஒரு எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வார். மேஜையில் கைதுடைக்கும் நாப்கின் மீது ஏதாவது "கவிதை" கிறுக்குவார். நம்புங்கள். இந்த யுக்தி பிரமாதமாக வேலை செய்யும்.

  6. இவருடைய பின்புலம் காரணமாக பத்திரிகைகளில் இலக்கிய விமர்சகர் வேலை இவருக்கு எளிதாக வந்து சேரும். உடனே சக எழுத்தாள நண்பர்களின் புத்தகங்களை தாராளமாக பாராட்டி எழுதுவார்.....

  7. என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற யாராவது கேட்டுவிட்டால் போதும்; யாருமே கேள்விப்பட்டிராத புத்தகத்தின் பெயரைக் கூறுவார்.

  8. பொதுவாக நம்ம எழுத்தாளருக்கும் அவரது சகாக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரே புத்தகம், ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய " Ulysses" இந்த புத்தகத்தை பற்றி மட்டும் எந்த எழுத்தாளரும் தப்பித்தவறி கூட குறை சொல்லி விமர்சித்துவிட மாட்டார்கள். ஆனால் எவராவது இதில் என்னதான் இருக்கிறது என்று கேட்டுவிடக் கூடாது. ஏனென்றால் இந்த புத்தகத்தை இவர் படித்துள்ளாரா என்று சந்தேகிக்கும் அளவு பதில் சொல்ல திணறிப் போய் விடுவார்.


இப்படியெல்லாம் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை என் அம்மாவிடம் போய் சொன்னேன். கேட்டுவிட்டு - " நீ இஞ்சினீயர் ஆவதே சுலபம் போலிருக்கு. தவிர, முக்கியமாக நீ மூக்குக் கண்ணாடி அணிவதில்லை. அதனால் இந்த வேலை உனக்கு சரிவராது." என்றார்.


ஆனாலும், கலைந்த தலையும், சட்டை பாக்கெட்டில் Gauloise சிகரெட்டும் தவிர என் கையில் ஒரு நாடகக் கதை இருந்தது - ( " நான் பார்த்த மேடை நாடகங்களிலேயே இதுவரை இத்தனை அபத்தமானதை பார்த்ததேயில்லை" என்று ஒரு விமர்சகர் " நல்ல வார்த்தை" அருளியிருந்தார். ) - மேதாவிப் புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன்; அந்த "Ulysses" புத்தகத்தையும் படித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன்.


இந்த சமயத்தில்தான் ஒரு மேடைப் பாடகர் தன் பாடல்களுக்கு ஏற்ற மாதிரி கவிதைகள் எழுதித்தரச் சொன்னார். வருவாய் வரும் வழி புரிந்ததும் எழுத்தாளனாக சரித்திரத்தில் இடம் பெறும் ஆராய்ச்சி, ஆசையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு நானும் இதர சாதாரண மக்களைப் போல் பிழைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.


இப்படி நான் தேர்ந்தெடுத்த வழியால், சட்டை மாற்றுவதைவிட வேகமாக வேலைகள் மாறி பல ஊர்கள் நாடுகள் மாறினேன். அப்படி ஆற்று நீரோட்டமாக பலவிதங்களில் ஓடிய என் வாழ்க்கையில் நான் கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபங்கள்தாம், இதோ அடுத்து வரும் பக்கங்களில்....."


பாலோ கோல்ஹோ ( Paulo Coelho)


இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவராக கருதப்படும் Paulo Coelho எழுதிய " Alchemist " என்ற புத்தகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை படித்ததில்லை. அவர் "Ulysses" பற்றி சொல்வதுபோல் ஒரு பாலோ கோல்ஹோ படிக்காமல் நாமெல்லாம் எப்படி எழுத்து துறையில் இருக்க முடியும் என்று தோன்றியதுண்டு. ஒரு முறை புத்தகக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும்போது அந்த புத்தகத்தை வாங்க எடுத்துவிட்டு திரும்பும்போது அவரது புதிய புத்தகமான " Like the Flowing River " கண்ணில் பட்டது. உடனே அதை வாங்கிவிட்டேன். அதில் இருந்த முன்னுரைதான் மேலே உள்ள பகுதி.


எழுத்தாளர்களை இவ்வளவு சதாய்க்கும் ( இது தமிழ் வார்த்தைதானே!! மூலம் அறிய ஆவல்!) பாலோ கோல்ஹோ இன்று பெரிய எழுத்தாளர். உள் பக்க அட்டையில் உள்ள அவரது படத்தில், முகத்தில் மூக்குக் கண்ணாடியில்லை; தலை கலைந்து இருக்கவில்லை ( முடி இருந்தால்தானே? முக்கால் வழுக்கை :-) ) மற்றபடி அவரது எழுத்து நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு நன்றாகவே புரிகிறது. ஒரு நண்பருடன் நம் வீட்டு கூடத்தில் உட்கார்ந்து பேசுவது போல் எளிய, இயல்பான, ஒரு அந்நியோன்னமான நடை.. படிக்கும்போது அகராதியைத் தேட வேண்டாம். சொல்லும் விஷயங்களில் பளீரென்று அனுபவம் பேசுகிறது; தத்துவங்கள் - வாழ்க்கையின் பல நிதர்சனங்கள் அனாயாசமாக, அதே சமயம் "காவியுடை" அணியாமல் வந்து விழுகின்றன. பந்தா இல்லாத சிந்தனையாளர். சிந்திக்க வைக்கும் - இதம் அளிக்கும் சிந்தனைகள்.


மற்றபடி எழுத்தாளர்களுக்கான "தகுதிகள்" அவரது ஆராய்ச்சியின்படி அவருக்கு இருக்கிறதோ இல்லையோ, முன்னுரையில் உள்ள அவரது கையெழுத்துக்கு நிறையவே இருக்கிறது. வாங்கிப் படித்துதான் பாருங்களேன்.