Monday, March 07, 2005

கிரிகெட் மேட்ச் நடக்கும்போது பெரிதாக தொங்கும் ஸ்கோர் பலகையைப் பார்த்தால் எண்கள் அவ்வப்போது ஸ்லோ மோஷனில் மெல்ல மாறிக்கொண்டிருக்கும். இருந்தார்ப்போலிருந்து திடீரென்று எண்கள் வேகமாக பட படவென்று மாறும். ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது என்று புரிந்து போகும்.

அதுதான் நடந்து கொண்டு இருக்கு தமிழ் மணம் தளத்தில் இப்போது. நான் வேலை செய்யும்போது தமிழ் மணம் தளம் சிறிது படுத்தி ( minimise) எப்போதும் கீழே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும். அரை மணிக்கு ஒரு முறை - சில சமயம் கால் மணிக்கு ஒரு முறை எடுத்து பார்க்கும்போது நிச்சயம் ஏதாவது சில பதிவுகள் இற்றை படுத்தப் பட்டிருக்கும். இடது ஓரம் புதிய பதிவுகள் ஏதாவது முளைத்திருக்கும். கிடு கிடுவென்று இந்த கௌண்டர்கள் நகருவதைப் பார்த்தால் ஒரே பிரமிப்பாக இருக்கும். புதுப்பித்த பதிவுகள் வேகமாக கீழே இறங்கி புதியனவைக்கு இடம் கொடுத்து conveyer belt மாதிரி நகர்ந்து கொண்டிருக்கும்.

இப்போது மாதிரிதான் இருக்கிறது. சென்ற வருடம் மார்ச் மாதம் வலைப்பூ ஆசிரியராக இருந்தது. அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டதா என்று மனசுக்குள் ஒரு குட்டி ஆச்சரியம்.

சென்ற வருடம் இந்த மகளிர் வாரத்தில் ( அப்போதுதான் பதிவுகள் 100 என்ற இலக்கத்தைத் தாண்டி மெல்ல நடை போட்டுக்கொண்டிருந்தது.) எழுதியிருந்தேன்; அடுத்த முறை நான் ஆசிரியராகும்போது ஆயிரம் பதிவுகளை வலம் வரும்படி இருக்க வேண்டும் என்று. ( இந்த பழைய வலைப்பூக்கு சுட்டி முகப்பில் எங்காவது கொடுக்கலாமே ?)

எழுதும்போதே, "16 ம் பெற்று பெரும் வாழ் அல்லது 100 ஆயுசு... என்றெல்லாம் வாழ்த்துவதுபோல், ஏதோ ஒரு வாய் வார்த்தையாக, ஆயிரம் என்று சொல்வதாகதான் எனக்கு தோன்றிற்று. ஒரு வருடத்தில் ஆயிரம் பதிவா..? சான்ஸே இல்லை - இன்னொரு 100 வந்தாலே பெரிய சாதனை அது என்றுதான் எண்ணினேன்.

ஆனால் இப்போது ஆயிரத்தில் பாதியை வேகமாக நெருங்குகிறது தமிழ் பதிவுகளின் எண்ணிக்கை. இந்திய மொழிகளில் அதிகம் பதிவுகள் உள்ள மொழி தமிழ். மற்ற எந்த மொழிகளிலும் தமிழ்மணம் போல் பதிவுகளை ஒருங்கிணைக்கும் சேவை கிடையாது. பொதுவாக எல்லா மொழிகளிலுமே பதிவாளர்கள் ஆங்காங்கே பரவலாகதான் இருக்கிறார்கள். தங்களுக்கு பரிச்சயமான பதிவுகளுக்கு மட்டும் மேய்வதுதான் வழக்கம் - எப்போதாவது தொடர்பு சுட்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பல்வேறு பதிவுகளை நிதானமாக மேய்வதும் வழக்கம். ஆனால் இந்த ஒரு குடையின் கீழ் உத்தியால் நிறைய பதிவாளர்கள் கவனம் பெறுகிறார்கள். இன்னும் பல புது பதிவாளர்களை இது காந்தம் போல் ஈர்க்கிறது.

இன்று வலைப்பூ ஆசிரியர் என்பது நட்சத்திர பதிவு என்றாகியுள்ளது. மதியும் காசியும் ஒளி வெள்ளம் அலைகளின் மேல் விழவேண்டும் என்று தீர்மானித்து எனக்கு அன்புக்கட்டளையும் இட்டுவிட்டனர். எனவே, அடியேன்தான் இந்த வாரம் உங்களுடன் பயணம் செய்யப்போகிறேன். 408 பதிவுகளையும் இந்த ஒரு வாரத்தில் படிக்க முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது. இருந்தாலும் நிச்சயம் பரவலாக உங்களுடன் சேர்ந்து வலம் வரலாமென்றிருக்கிறேன். எங்கே, Fasten Your Seat Belts...... :-)

3 comments:

suratha yarlvanan said...

///தமிழ் மணம் தளம் சிறிது படுத்தி ( minimise) எப்போதும் கீழே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும். அரை மணிக்கு ஒரு முறை - சில சமயம் கால் மணிக்கு ஒரு முறை எடுத்து பார்க்கும்போது நிச்சயம் ஏதாவது சில பதிவுகள் இற்றை படுத்தப் பட்டிருக்கும். இடது ஓரம் புதிய பதிவுகள் ஏதாவது முளைத்திருக்கும். கிடு கிடுவென்று இந்த கௌண்டர்கள் நகருவதைப் பார்த்தால் ஒரே பிரமிப்பாக இருக்கும். புதுப்பித்த பதிவுகள் வேகமாக கீழே இறங்கி புதியனவைக்கு இடம் கொடுத்து conveyer belt மாதிரி நகர்ந்து கொண்டிருக்கும்.///

நானும் இதேபோல்தான் படிப்பதுண்டு.
/conveyer belt மாதிரி நகர்ந்து கொண்டிருக்கும்/ நல்ல உவமை

Kasi Arumugam said...

அருணா,

உங்க புண்ணியத்தில் சென்ற வருட 'இந்த வாரம்' போய்ப் பார்த்தேன். அடேங்கப்பா, அந்த வாரம் ரொம்ப முக்கியமான வாரம், உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் கூட. அன்றுதான் நானும் வலைப்பூ உதவியாளர் வேலைக்கு சேர்ந்தது, ஆர்வம் மேலீட்டால், இன்று தமிழ்மணமாய் நிற்கும் தளத்துக்கு அடிப்படையாக இருந்த தரவுத்தளம் அமைத்து அனைவரையும் அழைத்தது...

நீங்கள் சொன்னபடி பழைய வலைப்பூக்களுக்குத் தொடுப்புக் கொடுத்தாச்சு. கூடவே ப்ளாக்ஸ்பாட்டில் சேமிக்கப்படும் பட்டியலுக்கும் கொடுத்துள்ளேன். புதியவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

உங்க தொழில்நுட்ப ஆலோசகரைக் கேட்டு தமிழ்மணம் கொடுத்த மறுமொழி நிலவரம் பரிமாறும் புதிய நிரல்துண்டைப் போட்டுக்கொள்ளுங்கள்;-) இன்னும் பழையதாக இருக்கிறது. அது இங்கே கிடைக்கும்அன்புடன்,
-காசி

Aruna Srinivasan said...

நன்றி சுரதா. தினம் உங்களைத்தான் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். நான் தமிழில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் பொங்குதமிழில் முதலில் ஏற்றி யூனிக்கோடாக மாற்றிவிட்டுதானே அரங்கேறுகிறது ? :-)

காசி, நீங்கள் உடனே பழைய வலைப்பூக்கு லிங்க் கொடுத்துவிடுவீர்கள் என்று தெரியும். மறந்துவிட்டீர்கள் என்று தோன்றிற்று. அதான் அப்படி ஞாபகப்படுத்தினேன் :-) நன்றி. அப்புறம் அந்த தொழில் நுட்ப ஆலோசகர் உதவி..? நீங்களும் மதியும்தான்... ஓகே இன்று அது என்ன என்று முயன்று பார்க்கிறேன்... முடியாவிட்டால் மன்றத்தில் ஒரு குரல் கொடுத்தால் ஆபத்பாந்தவன் யாராவது வர மாட்டார்களா?