மாய்ந்து மாய்ந்து வலைப் பதிந்து என்ன லாபம் என்று எப்போதாவது தோன்றினால் தொய்ந்து போகாதீர்கள். யார் கண்டார்கள் ஒரு நாள் ராஷ்டிரபதி பவனின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களில் ஒருவராக மாறலாம். அப்படிதான் அமெரிக்காவில், காரட் க்ரா·ப் (Garret Graff) என்ற ஒரு வலைப் பதிவாளர் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் ஒயிட் ஹவுஸில் நுழைந்து தகவல் சேகரிக்க அனுமதி பெற்றுவிட்டார். ஒரு வலைப் பதிவாளர் இப்படி அங்கீகாரம் பெறுவது இதுவே முதல் முறை. என்ற இவர் பதிவில் வாஷிங்டனில் நடக்கும் ஊடக் துறை வம்புகள் செய்திகள் இவைதாம் பிரதானம். இந்தச் செய்தியைப் படித்தவுடன் இந்தப் பதிவை எட்டிப் பார்த்தேன். வடிவமைப்பு, உள்ளே செய்திகள் எல்லாம் சிறப்பாகதான் இருக்கு. பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவைப் பொதுவாக ஒரு போக்குவரத்து சந்திப்பு என்று நான் நினைப்பேன். பல வலைப்பதிவாளர்களும் வந்து போகும் இடம் என்பதால். க்ரா·பின் பதிவு சுவாரசியமாக இருக்கிறது. விளம்பரங்கள், அவசியமான சுட்டிகள், வேலை வாய்ப்பு என்று களை கட்டி அமைந்துள்ளது.
வலைப் பதிவுகள் இந்தியாவில் இன்னும் அவ்வளவு கவனம் பெறவில்லை என்றாலும் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றன. எகனாமிக் டைம்சில் கட்டுரை முதலில் வெளியானதுக்கு பிறகு கூட Main Stream media வில் இந்தியப் பதிவாளர்களைப் பற்றி அதிகம் ஊடகங்களில் பற்றி காணோம். ஆனால் நேற்று ஹிந்துவின் மெட்ரோ பிளஸில் ஒரு கட்டுரை வந்துள்ளது. ( இன்னும் இணைய பதிப்பில் சுட்டி கிடைக்கவில்லை.) சென்னையில் வரும் supplement பத்திரிகையில் தமிழ் பதிவாளர்களைப் பற்றி ஒரு வரி இருக்க வேண்டாமோ? இல்லையே...! அதுசரி. தமிழ் பத்திரிகைகளே பதிவுகளைப் பற்றி கண்டு கொள்வதில்லையே? நானூற்றி சொச்சம் பேர் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்; பலவித எண்ணங்கள் பதிவாகின்றன. சத்தம் போடாமல் ஒரு நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்பது ஆச்சரியமாகதான் இருக்கிறது.
Thursday, March 10, 2005
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உங்களின் இந்த பக்கம் வியாழன் மாலை 3.41க்கு (IST) நான் பார்த்தபோது, கலைந்து காணப்படுகிறது. உங்கள் தகவலுக்காக இதைச் சொல்கிறேன். இதைப் பார்த்தபின் சரி செய்துவிட்டு, இந்த comment பகுதியை நீக்கிவிடலாம்.
தமிழ் பத்திரிகைகள் எதுவும் வலைப் பதிவுகளை கண்டு கொள்ளவில்லை என்ற உங்கள் கவலை உணர்கிறேன். ஆனால் யதார்த்தம் என்ற ஒன்றை நாமும் உணர வேண்டும். நான் அறிந்தவரையில் தமிழ் பத்திரிகையாளர்கள் இரண்டு ரகம்.
ஒரு இனம் போதுமான சம்பளம் பெற்று, தங்கள் வாழ்க்கையை தற்போது இருக்கும் பத்திரிகையிலேயே கடத்தி, காலத்தைத் தள்ளிவிடும் நினைவில் இருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் புதிய தேடல்களை மறந்து பலகாலம் ஆகிறது.
மீதியாட்களுக்கு இணையத்தின் ஆரம்ப காலத்தில் font download பிரச்னைகள் இன்னும் மனப்பதிவில் இருந்து அகலவில்லை. அதை நினைத்துக் கொண்டே இணையத்தை அணுக யோசனையோடு இருக்கிறார்கள். Tech. phobia.
இரண்டாவது இனம் - வாழ்க்கையை நகர்த்திச் செல்ல போதுமான சம்பள வருவாய் இன்றி, அதற்கான தேடலகளில் போராடிக் கொண்டிருப்பது. இவர்களுக்கு பத்திரிகை அலுவலகம், வீடு இரண்டிலும் கணிணி வசதியில்லை. அதனால் இவர்களை பற்றி பேசுவது நியாயமில்லாதது.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு இனம்தான் அல்லது இரண்டிலும் சேர்த்துப் பார்க்க இயலாத ஒரு சின்ன எண்ணிக்கையிலானவர்கள்தான் பெரும்பாலும் இணையம் பற்றி, அதன் இன்றைய நிலை பற்றித் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர்கள் யாரும் நிறுவனத்தில் முடிவுக்கு நெருக்கமான இடத்தில் இல்லாதததால் அவர்களால் ஒரு அடையாளத்தை உண்டாக்க முடியாத நிலை என்பது என் கருத்து.
எனினும், இலக்கியவாதிகள் எப்படி ஒரு காலத்தில் அங்கிகாரம் இல்லாமல் இருந்து, இன்று திரும்பி பார்க்கப்படுகிறார்களோ, அது போல ஒரு நிலை வரும். அதற்கு முன் சிறுபத்திரிகையாளர்கள் இதை கையில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். காத்திருப்போம்.
- சந்திரன்.
இதை நான் எழுதவேண்டுமென்று நினைத்தேன். இதழாளராகவும், வலைப்பதிவராகவும் உள்ள உங்களைப் (நீங்கள், மாலன், சந்திரன்) போன்றோர்வர்களை எழுதச்சொல்லி எழுதலாம் என்றிருந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த தெய்வம் மாதிரி இருவர் முன்வந்திருக்கிறீர்கள்.
இங்கு (அமெரிக்காவில்) இதழியலில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்திருப்பதை மாய்ந்து, மாய்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
1. ஐம்பது ஆண்டுகளாக செய்தியாளராக, அதில் 24 ஆண்டுகளாக CBS News ன் News Anchor (செய்தி நங்கூரம்?) கொடிகட்டிப் பறந்த Dan Rather நேற்றோடு அதிலிருந்து விடைபெற்றார். அவருடைய இந்த முடிவுக்குக் காரணம் வலைப்பதிவர்கள், சரியாகச் சொல்லப்போனால் வலதுசாரி சனாதானிகள். ஜார்ஜ் புஷ் டெக்சாஸ் தேசிய வான்காப்புப் படையில் சலுகை பெற்றதான கதையில் சந்தேகத்துக்கிடமான சில ஆதாரங்களை ராதர் முன்வைக்க அடுத்த ஓரிரு மணி நேரத்தில் வலைப்பதிவர்கள் அக்கடிதங்கள் அந்த காலகட்டத்தின் தட்டச்சு தொழில் நுட்பத்தைப் பிரதிபலிக்காததை, அவற்றின் நம்பகத்தன்மையைக் குறித்து கேள்வியெழுப்பி ராதரின் வேலைக்கு உலை வைத்தார்கள்.
2. வெள்ளை மாளிகை அனுமதி வழங்கி, தனக்குத் தோதாக கேள்விகள் கேட்கவைத்த ஒரு வலைப்பதிவர் இதழாளரே இல்லை என்பது பின்னர் தெரியவந்தது. பின் யார் வேண்டுமானாலும் இதுபோன்ற அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று வெள்ளை மாளிகை சப்பைக்கட்டு கட்ட, Garret Graff அதை சோதித்துப் பார்க்கும் முயற்சியில் இந்த அனுமதி பெற்றிருக்கிறார். அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை என்ற தொனியில் நேற்று ஒரு வானொலி பேட்டியில் கூறினார்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஊடகவியலாளர்களிடமும், அரசியல் நோக்கர்களிடமும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அதில் முக்கியமானது மரபுசார்ந்த இதழியலுக்கு வலைப்பதிவு இதழியல் பதிலியாகுமா என்பது.
இதுபற்றி இந்தியச் சூழலில் ஒரே நேரத்தில் இதழாளராகவும், வலைப்பதிவாரகவும் உள்ள உங்களைப் (மாலன், அருணா, சந்திரன், மனுஷ்யபுத்திரன்) போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இணைய இலக்கியத்தைப் பற்றி ஏற்கனவே சில எழுத்தாளர்கள் (பாரா, ஜெயமோகன், சுஜாதா) எதிர்மறையாக எழுதியிருக்கிறார்கள்.
மு. சுந்தரமூர்த்தி
சந்திரன், சுந்தர மூர்த்தி, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இந்தியாவில் பதிவுகளின் நிலைக்கு இங்கே ஒரு உதாரணம் உள்ளது. இந்தப் பதிவை ஆரம்பித்தவர் ஊடகங்களை கவனிக்கும் ஒரு ஊடகமாக ஆரம்பித்தார். பின்னர் கட்டுபடியாகவில்லை என்று நிறுத்தினார். பின்னர் மறுபடி சில மாதங்கள் முன்பு ஆரம்பித்தவர் இப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் மோதியதில் மறுபடி மூடுகிறார். இவரது பழைய அவதாரத்தில் சில பதிவுகளைப் படித்துள்ளேன். ஆக்கப் பூர்வமான செய்திகளுடன் கொஞ்சம் ஊடக வம்பும் சேர்த்தே இருந்தது. ஆனாலும் Traditional ஊடகங்களிடையே தனிபட்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் இந்த மீடியா வலைப் பதிவுக்கு ஒரு வரவேற்பு இருந்தது. இது மறுபடி புனர் ஜென்மம் எடுத்தபோதும் பலரிடம் வரவேற்பு இருந்தது.
தமிழில் உள்ளதுபோல்தான் ஆங்கில பதிவுகளுக்கும் பெரிய ஊடக நிறுவனங்களிடமிருந்து ஒரு எதிர்மறை கருத்துக்கள் நிலவுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த பதிவிற்கு உலை வைத்திருப்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு பக்கம் பெரிய ஊடகங்களின் பெரிய அண்ணாத் தனமான மன நிலையை ( attitude) இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்றாலும் இன்னொரு பக்கம், பதிவுகளின் பலம் பற்றிய சாத்தியக் கூறுகளை முன் வைக்கிறது.
இருந்தாலும் பதிவுகள் ஒரு பொறுப்புள்ள, acountabaility உள்ள ஊடகங்களாக மாறும்போதுதான் அவை மாற்று ஊடகங்கள் என்ற நிலையை எட்ட முடியும். இப்போதைக்கு ஏதோ பொழுது போகாதவர்கள் வேலை என்ற அளவில்தான் இந்திய பதிவுகள் பார்க்கபப்டுகின்றன. பதிவுகளில் எழுதுபவர்களும் இணையத்தில் எழுதுபவர்களும் அச்சு ஊடகத்தில் எழுத இடம் இல்லாததால் இணையத்தில் எழுதிகிறார்கள் என்ற மனோபாவம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இது மாற வேண்டுமானால், பதிவுகளும் இன்னும் சற்று பொறுப்போடு செயல்பட வேண்டும். பதிவாளர்கள் தாங்கள் எழுதுவதில் இன்னும் அக்கறையையும் பொறுப்புணர்ச்சியும், accountabilityயையும் காண்பிக்க வேண்டும். அமெரிக்க பதிவாளர்கள் Dan Rather விஷயத்தில் காட்டிய alertness இங்கும் வரும் - கூடிய சீக்கிரமே, என்று நம்புகிறேன்.
"......இந்தியாவில் பதிவுகளின் நிலைக்கு இங்கே ஒரு உதாரணம் உள்ளது."
மேலே உள்ள இந்த வரிக்கு கொடுத்திருக்க வேண்டிய சுட்டிகள்:
http://mediaah.blogspot.com/
http://www.petitiononline.com/mediaahp/petition.html
http://indusnexus.com/
http://presstalk.blogspot.com/
Post a Comment