Monday, March 07, 2005

தகவல் கசிவு?? - செய்தி????

உங்களுக்கு பின்சோ·பிஸ் ( கற்பனை பெயர் என்று பார்த்தாலே தெரியுது இல்லே?) நிறுவனத்தில் ஒரு நண்பர் இருக்கிறார் என்று வையுங்கள். நீங்களும் அவரும் காபி கிளப்பில் ( நிஜம் காபி கிளப்) அரட்டை அடிக்கும்போது ஒரு புது தயாரிப்பு வருவதைப் பற்றி தெரிவிக்கிறார். நீங்கள் உடனே வீட்டுக்கு வந்து அதை உங்கள் பதிவில் பதிக்கிறீர்கள்.

இப்போது அந்த நிறுவனத்தின் தயாரிப்பு ரகசியம் வெளியே வந்துவிட்டது என்று சொல்லி அந்த நிறுவனம் உங்களுக்கு அந்த தயாரிப்பு பற்றிய விவரங்களைக் கொடுத்தது யார் என்று கேட்டு வழக்கு தொடரமுடியுமா?

உங்களுக்கு தகவல் கொடுத்தவரைக் "காட்டிக் கொடுக்க" சொல்லி உங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு அந்த நிறுவனம் முறையிடலாமா?
இங்கே முடியுமா இல்லையா தெரியாது. ஆனால், அமெரிக்காவில். சிலிகான் பள்ளத்தாக்கு பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு இணைய பத்திரிகைகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. காரணம். இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பான "அஸ்டிராய்ட்" பற்றிய விவரங்கள் இந்த இணைய பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. இவர்களுக்கு இப்படி உள் தகவலை கசிய செய்தவர்களை அடையாளம் காட்டும்படி வழக்கு. இன்னும் திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கப்படவில்லையென்றாலும் இங்கே நீதியரசர் ஓரளவு ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். அந்த நிறுவனத்தின் தயாரிப்பு பற்றி முன்கூட்டியே கசிய செய்தவர்கள் விவரம் வெளியிடப்பட வேண்டும் என்று.

இது பத்திரிகை சுதந்திரத்தை பாதிப்பதாக அந்த இணைய பத்திரிகைகளின் சார்பில் வாதாடும் Electronic Frontier Foundation என்கிற டிஜிடல் உரிமை பாதுகாப்பாளர்கள் சங்கம் கூறுகிறது. பொதுவாக செய்தி சேகரிப்பவர்கள் தங்கள் தகவல் ஆதாரங்களை வெளியே சொல்ல மாட்டார்கள். அது பொதுவாக பத்திரிகை தர்மமுமல்ல. ( சென்ற வருடம் இந்தியாவில் Draconian law என்று விமரிசிக்கப்பட்ட "பொடா" சட்டத்தில் இந்த அம்சம் -அரசாங்கத்துக்கு தேவையிருந்தால் செய்தியாளர்கள் தங்கள் தகவல் தருபவர்களை; ஆதாரங்களை வெளிக்காட்ட வேண்டும் என்ற பகுதி பெரிய எதிர்ப்புக்குள்ளானது நினைவிருக்கா?) கலிபோர்னியாவில் இதர ஊடகங்களில் இருக்கும் பத்திரிகையாளர்களின், எழுத்து மற்றும் செய்தி சேகரிக்கும் சுதந்திரத்தை வலியுறுத்தும் சட்டம், (First Amendment and the California Shield Law) இணைய பத்திரிகைகளுக்கும், வலை பதிவுகளுக்கும் சம அளவுகோலில் பின்பற்ற பட வேண்டும் என்கிறார்கள் இந்த டிஜிடல் உரிமை பாதுகாப்பாளர்கள் சங்கத்தினர்.
"செய்தியாளர்களின் உயிர் நாடியே தகவல் கொடுப்பவர்கள்தாம். இவர்களைக் காட்டிக் கொடு என்பது எப்படி நியாயமாகும்? செய்தியாளர் என்றால் எல்லாரும் ஒன்றுதான் - அச்சு மற்றும் எலெக்டிரானிக் ஊடகங்கள் மற்றும் இணையம் சார்ந்தவைகள். அவர்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? இணைய பதிப்பு என்றால் மட்டமா என்ன? நீதிமன்றங்கள், தகவல் தருபவர்களின் நம்பிக்கைக்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்" என்பது இவர்கள் வாதம்.

இந்த வழக்கு, இணைய செய்தி ஊடகங்கள் மேலும் வலைப்பதிவாளர்களின் மேலும் ஒளிபாய்ச்சுகிறது. இதர ஊடகங்களின் செய்தியாளர்கள் போல் இந்த இனைய செய்தியாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழில் முறை பத்திரியாளர்களா? கேள்விகள் சுழல ஆரம்பித்துவிட்டன.

வழக்கு தொடரப்பட்ட இணைய ஊடகங்களுக்காக வாதாடும் Electronic Frontier Foundation உறுப்பினர் ஒருவர் கூறுவதுபோல், இது ஒரு நுழைவாயிலில் உள்ள விஷயம். உள்ளேயும் அனுமதிக்கப்படலாம், வெளியேயும் தள்ளப்படலாம். அபப்டி உள்ளே அனுமதிக்கப்பட்டால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த தயாரிப்பு ரகசியம் கசிவின் மூல ஆதாரம் தேடும் அவசியம் எவ்வளவு தூரம் முக்கியம் என்று நீதிபதிகளால் ஆராயப்படும். அப்படி ஒரு வேளை First Amendment and the California Shield Law கீழ் இணைய ஊடகங்கள் அனுமதிக்கபப்டவில்லையென்றால், அவை இந்த சோதனைக்கு ஆளாக வேண்டிய அவசியமே இல்லை. அதாவது இவர்கள் தொழில்முறை செய்தி ஊடகங்களல்ல; சும்மா பொழுது போகாதவர்கள் வேலை ( கையெழுத்து பத்திரிகை???!) என்று விட்டு விடலாம். ஆனால் அப்படி விடவும் முடியாது. ஏனென்றால் ஆப்பிளின் தலைவர் ஸ்டீவ் இந்த இணைய பத்திரிகையின் ஆசிரியருக்கு ஒரு தொழிமுறை பத்திரிகையாளர் தகுதியையே இதுவரை அளித்துள்ளார் - ஸ்பெஷலாக பேட்டி கொடுத்தது உள்பட..
பத்த்ரிகையாளர்கள் யாராயிருந்தாலும் - தொழில்முறையோ, அல்லது இணையமோ - ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு ரகசியங்கள் பற்றி தகவல்கள் தெரிந்து கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை என்பது ஆப்பிள் நிறுவன அதிகாரியின் ஆணித்திரமான வாதம். தயாரிப்பு தகவல் முன்கூட்டியே கசிவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் போட்டி தயாரிப்புகள் தயாரித்து, சந்தையில் முன்கூட்டியே வெளிக்கொண்டுவரும் அபாயம் உள்ளது என்கிறார் இவர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதியோ இந்த நிறுவன தகவல் கசிவு, ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியக் கசிவுக்கு சமானம் என்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? என்பது இவர் கேள்வி.
ஆப்பிளின் தகவல் கசிவுக்கு இணைய பதிப்புகள் மட்டுமே காரணமா அலல்து அதன் மற்ற ஊழியர்கள் கூட காரணமாக இருந்திருக்கலாமா என்று சரிவர ஆராயமல் ஊருக்கு முன்னால் முதல் காரியமாக பத்திரிகை சுதந்திரத்தின் மேல் கைவைக்க கூடாது என்று இந்த இணையத் தளங்களின் வக்கீல் சாடுகிறார்.

தீர்ப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்னுள் நிறைய கேள்விகள்? நீதிபதி சொல்வதுபோல் ஒரு நிறுவனத்தின் தொழில் ரகசியம் ஒரு நாட்டின் பாதுகாப்பு ரகசியம் போல் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? முன்கூட்டியே தயாரிப்பு செய்தியை இணைய தளம் வெளியிட்டது தவறா சரியா? அதை எதிர்க்கும் வழக்கு மூலம் பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகிறதா? அச்சு ஊடகங்களில் இந்த கசிவு வந்திருந்தால் எப்படி அணுகியிருக்கப்படும்? பத்திரிகை சுதந்திரத்துக்கும், எழுத்து / பேச்சு சுதந்திரத்துக்கும் காப்புரிமை / ஒரு நிறுவனத்தின் ரகசியங்களைப் பாதுகாத்தல் இவற்றுக்கும் இடையே இருக்கும் லக்ஷ்மண் கோடு என்ன?
என்ன இருந்தாலும் தொழில் ரகசியம் கசிந்தது தவறுதான் என்று எனக்கு தோன்றுகிறது. ஆனால் அதற்கு இணையதளம் எப்படி பொறுப்பாகும்? அதன் வேலை செய்தி தருவது. அதையும் முந்தி தருவது. கிடைத்த தகவலை உடனே வெளியிடாமல் எப்படி இருக்க முடியும்? ஒரு பாரம்பரிய அச்சு அல்லது டிவி ஊடக அமைப்பு வெளியிட்டால் அது செய்தி; இணைய அமைப்பு வெளியிட்டால் அது ரகசியத் தகவல் கசிவா?

The onus lies with the company to protect its trade secrets. என்று நினைத்தேன். கூடவே இன்னொரு குரல்: ஒரு வேளை பரந்த நன்மை ( larger good) கருதி செய்தியாளர்கள் தாங்களாகவே எதைச் சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று ஒரு நெறியைப் பின்பற்ற வேண்டும் என்று உள்ளே ஒரு அசரீரி. நான் எதற்கு செவி சாய்க்க வேண்டும் என்று யோசிக்கிறேன்.

ம்ம்ம்....... நாட்டு பாதுகாப்பு ரகசியத்தையும் தனி நிறுவன ரகசியத்தையும் ஒரே தராசில் வைக்க முடியாது. ஒன்று நாட்டு நலன் மற்றொன்று வணிக லாபம். பின்னது வெளி வந்தால் செய்தி. முன்னது வெளி வந்தால் தேசீய ரகசிய கசிவு. அதனால் ஒரு வணிக நிறுவனத்தின் தகவலை வெளியிட்டதன் மூலம் இணைய தள செய்தியாளர்கள் நெறி பிறழவில்லை; தவறு ஏதும் செய்யவில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. I rest my case.

அடுத்த வாரம் க்யூபர்டினோ ( வழக்கு விசாரிக்கப்படும் ஊர்) நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்று பார்க்கலாம்.

My blogger link is not working properly. So here are the links again.

http://www.siliconvalley.com/mld/siliconvalley/11059168.htm

http://www.siliconvalley.com/mld/siliconvalley/11049112.htm

3 comments:

நாலாவது கண் said...

அதே துறையைச் சார்ந்த இளையவன் என்பதால், தங்களை 'அக்கா!' என்று குறிப்பிடுவதைக் கோபிக்க மாட்டீர்கள் என்று எண்ணிக் கொண்டு,

'உங்களது சந்தேகமும், அதையொட்டிய இறுதி முடிவும் சரியே' என்று எனக்குத் தோன்றினாலும், எங்களைப் போன்ற இளையவர்களுக்கு புதிய சந்தேகத்தைக் கிளப்பி விட்டீர்களே!

தாங்கள் சொல்வதுபடி பத்திரிகையாளனின் வேலை - 'செய்தி' என்று அவன் நினைத்த தகவல் பற்றி எழுதுவதுதான். 'ரகசியம்' என்றால் அதைப் பாதுகாப்பது - நாடானாலும், நிறுவனமானாலும் அவரவரது கடமை. ரகசியத்தை பாதுகாக்க இயலாதவர்களை அந்த பொறுப்பில், தகுதியில் வைக்காமல் இருப்பது - நாடு அல்லது, அந்த நிறுவனத்தின் பொறுப்பு என்றே கருதுகிறேன். செய்தி கிட்டியவன் அதை 'எழுதக் கூடாது' என்று ethically முடிவு எடுப்பது, அவன் தனிப்பட்ட விஷயம். ஆனால் அதைத் தாண்டி எழுதத் துணிந்தால், அவனைக் குறை சொல்லக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்தியாவிலேயே கூட போஃபர்ஸோ, கார்கில் போரின்போது coffin வாங்கியதோ... வேறு மற்ற ஊழல் பற்றியோ செய்தி கிட்டியபோது இந்திய ராணுவ தளவாடம் பற்றிய செய்தி என்று எண்ணி, அதைத் தொட.... பின்னர் நமது நாட்டின் ராணுவ ரகசியங்கள் பலவும் வௌதச்சத்துக்கு வரலாம் என்று எண்ணி எழுதக் கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா... அப்படி எழுதியவர் மீது நாட்டின் ரகசியம் தொடர்பானதை வௌதயிட்டார் என்று நடவடிக்கை எடுக்க முடியுமா? அல்லது அதை சொன்னவரைக் காட்டிக் கொடுக்கச் சொல்ல முடியுமா?

இப்படியான தகவலை 'இவர் எழுதக் கூடும்' என தகவலைப் பரிமாறிக் கொள்பவர்கள்தான் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைத்தான் நாடும், நிறுவனமும் பொறுப்பில் வைக்க வேண்டும் என்று சொல்வதுதானே சரி! ஆனால் நல்லவேளை! அமெரிக்காவில் ஜனநாயகப்படி வழக்கு நடக்கிறது. தாங்கள் 'திசைகள்' மார்ச் இதழில் எழுதிய கட்டுரையில் போல, விசாரணை கூட இல்லாமல் 'கைது' என்று இறங்கக்கூடுமோ சில முஸ்லீம் நாடுகளில் என்று தோன்றுகிறது. இது போன்ற விஷயங்கள் தாதாக்கள் கைக்குப் போகாமல் இருக்கின்றனவே, அதுதான் நிம்மதியளிக்கிறது.

- சந்திரன்

மன்னை மாதேவன் said...

//தயாரிப்பு தகவல் முன்கூட்டியே கசிவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் போட்டி தயாரிப்புகள் தயாரித்து, சந்தையில் முன்கூட்டியே வெளிக்கொண்டுவரும் அபாயம் உள்ளது//

மற்ற எல்லா கடமை - உரிமை விவாதங்களைக்காட்டிலும், ஒதுக்கிவிட முடியாத அம்சமாக எனக்கு தோன்றுவது மேற்கூறப்படும் காரணமே. எந்த நிறுவனமும் பெரும் பொருளாதார உள்ளீட்டோடுதான் தங்கள் புதிய ஆய்வு மற்றும் உற்பத்தியை மேற்கொள்கின்றன. இன்றைய போட்டிமிக்க சந்தை பொருளாதாரத்தில் மிக கவனத்துடன் அனுகவேண்டிய விவாதம் இது. “ஒருவரின் உரிமை கைவீசல் - அடுத்தவர் மூக்கை உரசிவிடாதவரை” என்று உரிமையை பற்றி விளையாட்டாக கூறப்படுவது உண்டு. எவ்வாறாயினும் ஆவலுடன் இறுதி தீர்ப்புக்கு காத்திருப்போம். தீர்ப்பையும் தாங்களே வலைஞர்களுக்கு தருவீர்கள் தானே!

Aruna Srinivasan said...

சந்திரன், மகாதேவன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. Twilight area என்று சொல்வார்களே அதுபோல் சில விஷயங்களில் இதுதான் சரி என்று ஆணித்திரமாக கூறமுடியாது. அந்த வகைதான் இந்த சமாசாரமும். சமயத்துக்கு ஏற்றாற்போல், எது பொது நலம் என்ற ஒரு நோக்கோடு முடிவுகள் எடுக்க வேண்டும். இங்கேயும் பொது நலம் என்று சொல்லும்போது "எந்த" அல்லது "யாருடைய" பொது நலம் என்பதும் மூக்கியம். என் பார்வையில் பொது நலமாக இருப்பது உங்கள் பார்வையில் இருக்காது. vice versa. அமெரிக்க நீதிபதி என்னதான் சொல்கிறார் என்று பார்க்கலாம். எதற்கும் இந்த சிலிகான் தளத்தை கவனித்து வருவோம்.