Tuesday, October 02, 2007

காந்திஜி & கஸ்தூரி பா

வளரும் காலத்தில் நமக்கு கிடைக்கும் சில வாசிப்புகள், சில சந்திப்புகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி பல விதங்களில் நம் எண்ணங்களையும் கொள்கைகளையும் உருவாக்குகிறது அல்லவா? அந்த வகையில் காந்திஜியின் "சத்திய சோதனை" பள்ளியில் படிக்கும் காலத்தில் படித்தது. பின்னர், அப்பா 1963ல் சேவாகிராமம் போயிருந்தபோது வாங்கி வந்த "எமது பா" என்கிற கஸ்தூரி பா பற்றிய இரண்டு புத்தகங்கள் - (சுசீலா நய்யார் எழுதியது - தமிழாக்கம், கோ. கிருஷ்ணமூர்த்தி - சர்வோதயப் பிரசுரம் ) இன்றும் என் சிந்தனைகளின் வேரில் இவர்களின் தாக்கம் ஆழமாக இருக்கிறது. குறிப்பாக, கஸ்தூரி பா. காந்திஜியின் அதே அளவு பிடிவாதமும் கருணையும் கொண்டவர்.

சுய சரிதத்தில், பா விடம் தான் நடந்து கொண்ட கடுமையான தருணங்களை காந்திஜி எழுதியிருப்பதைப் படிக்கும்போது, " எப்படி காந்திஜி இந்த மாதிரி இருந்தார்!!" என்று எண்ணத் தோன்றியதுண்டு. ஆனால், தன் தவறுகளை அவர் வெளிப்படையாக சொல்லக் காரணம் - தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒரு பக்கம்; மறு பக்கம் தன் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் என்றவர் தன் வாழ்க்கையில் தன் தவறுகள் மூலம் தான் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்கள் பிறருக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்ற சிந்தனையும் கூட.

காந்திஜியின் கொள்கைகளில் பா வும் சளைத்தவரில்லை. ஆனால் இன்று நினைக்கும்போது கஸ்தூரி பாவின் மற்ற குணங்களும் சுவாரசியமாக இருக்கின்றன. காந்திஜி போன்ற பிடிவாத, கோபக்காரராக இருந்த கணவருக்கு ஈடு கொடுத்து வாழ்க்கையை லாவகமாக வாழ்ந்தவர். அதே சமயம் தன் உரிமையை நிலை நாட்டுவதில் அசர மாட்டார். "எமது பா" என்ற புத்தகத்தில் பாவின் இந்த சுதந்திரத் தன்மையையும், தனக்குச் சரியென்று மனசில் பட்டதை கணவரிடம் அவ்வப்போது அழுத்தமாக எடுத்துச்சொல்வதும் வழக்கம் என்று சுசீலா நய்யார் குறிப்பிடுகிறார்.

"... அதிகம் எழுத்தறிவில்லாதிருந்தபோதும், அவர் (கஸ்தூரி பா) தன் சுதந்திரத்தின் மதிப்பை உணராதிருந்தவரல்ல என்பது தெளிவு... யாருக்கும் அஞ்சி தன் மனம்போல் நடவாமல் இருந்தவர் அல்ல..."

கல்யாணம் ஆன புதிதில் காந்திஜி தன் மனைவி அனுமதியின்றி எங்கும் வெளியில் போகக்கூடாது என்று கட்டுப்படுத்தியிருந்தார். "மனைவியின் தூய்மையை சந்தேகிக்க காரணம் எதுவும் இல்லை. ஆனால் பொறாமை காரணத்தை எங்கே தேடப்போகிறது?என் மனைவி எங்கே போகிறாள் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்...." என்ற ரீதியில் தன் பொறாமைக் குணத்தை சுயசரிதையில் விவரித்துள்ளார். ஆனால் கஸ்தூரி பா தான் போக விரும்பும் இடங்களுக்கு அவர் இஷ்ட்டப்படி போய்க்கொண்டுதான் இருந்தார். " நான் அடக்க அடக்க அவள் அதிகம் மீறிக்கொண்டு கிளம்பவே நான் அதிகம் ஆத்திரம் கொண்டேன்." காந்திஜி விவரிக்கிறார்.

தன் இஷ்ட்டப்படி பா வெளியே போய் வந்தாலும் கணவரின் ஆத்திரத்தையும் கோபத்தையும் பொறுமையாக சமாளித்தார்.

அன்று தன் பொறாமைக் குணத்தால் இப்படி மனைவியை அடக்கினாலும், பின்னர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் காலமும் வந்தது என்று விவரிக்கும் காந்திஜி, தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ".... கஸ்தூரிபாய் தன் இஷ்டம்போல் நடந்து கொண்டதில் குற்றம் ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன். மனதில் கல்மிஷம் ஏதும் இல்லாத பெண் சுவாமி தரிசனத்திற்கோ, யாரையேனும் பார்க்கவோ போகும் விஷயத்தில் எதற்காகப் பிறருடைய உத்தரவுக்குப் பணிய வேண்டும்? நான் அவளுக்கு உத்தரவு இடலாமென்றால் அவள் மட்டும் ஏன் எனக்கு இடக்கூடாது? ஆனால் இந்த விஷயம் இப்போதுதான் புரிகிறது...."

இப்படிச் சின்ன சின்னதாக அவர்கள் இருவரின் வாழ்க்கைகளில் நிறைய பாடங்கள்.

அதேபோல் காந்திஜியின் அஹிம்சை வழி தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்தது என்பது சரித்திரம். உலகெங்கும் இன்று அஹிம்சை வழி பிரபலமாகிவிட்டது. அக்டோபர் 2 ந் தேதி, உலக அஹிம்சை தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐ. நா. சபை அறிவித்துள்ளது.

ஆனால் அவரது சுயசரிதையை ஆழமாகப் படித்தால் ஆரம்ப நாட்களிலேயே சில சம்பவங்களில் - குறிப்பாக இங்கிலாந்து போன விஷயத்தில் - இதற்கான மனோபக்குவம் அவருக்கு வந்துவிட்டது என்று புரியும்.

தென்னாப்பிரிக்காவுக்கு முன்னரே அஹிம்சை தத்துவத்தின் அறிகுறிகள் அவர் வாழ்க்கையில் ஏற்பட்டது எங்கே என்று பார்க்கலாம்.

அவர் வெளி நாட்டுப் பிரயாணம் செய்ததைக் குறித்து, அவர் சாதியினரிடையே பலத்த புயல் எழுந்தது. ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் காலத்தில் கடல் கடந்து பயணம் செய்வது கூடாது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி அப்படி யாராவது போனால் அவர்களை சாதியிலிருந்து வெளியேற்றுவதும் அவர்கள் உறவை மற்றவர்கள் துண்டிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. காந்திஜிக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது.

ஆனால் இதை அவர் எதிர்கொண்ட விதமே தனி.

அவருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம் - சுய சரிதையிலிருந்து :

".... நான் வெளி நாட்டுப்பயணம் செய்ததைக் குறித்து என் சாதியாரிடையே எழுந்த புயல், இன்னும் இருந்து கொண்டே இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில் ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக்கொண்டு விட்டனர். மற்றக் கட்சியினரோ, எனக்கு விதித்திருந்த சாதிக்கடுப்பாட்டை நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர். முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக்குக்கு அழைத்துச் சென்றார். அங்கே புண்ணிய நதியில் நீராடச் செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும், சாதியாருக்கு ஒரு விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனல் என்னிடம் சகோதருக்கு இருந்த அன்போ எல்லையற்றது. அதேபோல் எனக்கும் அவரிடம் எனக்கு பக்தி உண்டு. ஆகையால் அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து அவர் விரும்பியபடியெல்லாம் யந்திரம்போல் செய்தேன். இவ்விதம் என்னை சாதியில் சேர்த்துக்கொள்ளும் பிரச்சனை ஒருவாறு தீர்ந்தது.

என்னைச் சாதியில் சேர்த்துக்கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நான் முயலவே இல்லை. அக்கட்சியின் தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத்தோன்றவும் இல்லை.அவர்களில் சிலர் என்ன வெறுத்தனர். ஆனாலும் அவர்கள் மனம் புண்படும் காரியம் எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். சாதிக்கட்டுபாடு சம்பந்தமான விதிமுறைகளையெல்லாம் மதித்து நடந்து கொண்டேன். அந்தக் கட்டுப்பாடுகளின்படி, என் மாமனார், மாமியார், தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாரும் எனக்குச் சாப்பாடு போடக்கூடாது. ஆகையால் அவர்களில் யார் வீட்டிலும் நான் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இந்தக் கட்டுப்பாட்டை ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர்.
பகிரங்கமாக செய்யாததை ரகசியமாக செய்வது என் இயல்புக்கே நேர் விரோதமானது.


இவ்விதம் என் மீது குறை கூறுவதற்கே கொஞ்சமும் இடம் கொடாமல் நான் நடந்து கொண்டதன் பலனாக எனக்குச் சாதித்தொல்லை ஏற்படுவதற்கே சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. அது மாத்திரம் அல்ல. என்னைச் சாதியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவனாக இன்னும் கருதிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து கொண்டார்கள். சாதிக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பாராமலேயே என் தொழிலிலும் அவர்கள் உதவி செய்தனர்.

இந்த நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திட நம்பிக்கை. சாதியில் என்னைச் சேர்த்துக்கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி செய்திருந்தால், சாதியை இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட முயன்றிருந்தால், சாதியாருக்கு நான் ஆத்திரத்தை மூட்டியிருப்பின், அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்கு பதில் செய்திருப்பார்கள். இங்கிலாந்திலிருந்து நான் திரும்பியதும் புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்கு பதிலாக, நான் கிளர்ச்சிச் சூழலில் சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்கொள்வதற்கு உடந்தையாகவும் இருந்திருப்பேன்..........."

சில நாட்கள் முன்பு புத்தக அலமாரியை ஒழுங்கு படுத்தும்போது இந்தப் புத்தகங்கள் கண்ணில் பட்டன. பக்கங்கள் மங்கிப் போயிருந்தாலும் தொட்டவுடன் பழைய ஞாபகங்களும் கூடவே எட்டிப் பார்த்தன. "சத்திய சோதனை" புத்தகத்தின் உள்பக்கம் என் அண்ணன் தன் பெயரை விதம் விதமாக எழுதிப்பழகியிருப்பான். கடந்து போன நாட்கள் மனதில் நிழலாட, புத்தகங்களைப் படிக்கலானேன்.

மீண்டும் அலமாரியில் வைக்கும்போது, அவ்வப்போது இப்படிப் பழையப் புத்தகங்களைப் புரட்டுவது அவசியமென்று தோன்றியது.

நம் வாழ்க்கையையே நின்று திரும்பிப்பார்ப்பது போல....

13 comments:

பாலராஜன்கீதா said...

31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று (26 அக்டோபர்) வந்துள்ள ஆனந்தவிகடன் இதழில் விகடன் புக் கிளப் பக்கம் 117ல் தாங்கள் எழுதிய "அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31" புத்தகம் (விகடன் பிரசுரம்) பற்றிய சிறு குறிப்பு வந்துள்ளது.

வாழ்த்துகள்.
:-)))

Aruna Srinivasan said...

பார்த்துவிட்டேன் பாலராஜன் கீதா. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
நீங்களும் புத்தகம் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். :-)மேலாண்மை / நிர்வாக இயல் பற்றி தமிழில் அதிகம் புத்தகங்கள் இல்லை. வாசகர்கள் இதை எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிய ஆவல்.

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

Vi said...

அஹிம்சை என்ற நெறிமுறை காந்தியடிகளுக்கு முன்னும் இருந்தது. ஆனால் காந்தியடிகள் மூலம் வெளிச்சமிட்டு காட்டப்பட்டது. அவரால் அது சரியான நேரத்தில் சரியான முறையில் (சுதந்திர போராட்டத்தில்) பயன்படுத்தப்பட்டது.

காந்தியடிகளின் சத்திய சோதனை சுயசரிதம் இல்லையானால், அஹிம்சை தத்துவத்தை அத்துணை எளிதாக புரிந்து கொண்டிருக்க முடியாது என்பது என் கருத்து. அத்தகைய சுயசரிதத்தை தூசி தட்டி இருக்கும் தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

Aruna Srinivasan said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி விவேதா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

காந்தி என்ற தனிமனிதர் மஹாத்மா ஆவதற்கு முற்றிலும் தகுதியானவரே;ஆயினும் காந்தி என்ற ஒரு அரசியல்/தேச சுதந்திரப் போர் தலைவர் சரியான வழியில் செயலாற்றியிருக்கிறாரா என்பது மிகவும் விவாதத்துக்குரிய விதயமே.
ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் ஆரம்பித்தார்,ஏன் நிறுத்தினார் போன்றவை அரசியல் தலைவராக அவர் ஒரு குழப்பவாதியாக இருந்தாரோ என்ற சந்தேகம் பலருக்கும்(எனக்கும்) உண்டு...
ஆயினும் ஒரு நாடறிந்த மனிதர்,தலைவர் எவ்விதம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்கு சத்தியசோதனை ஒரு சிறந்த உரைகல்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

காந்தியடிகள் உண்மையை எழுதியால்தான் அவர் மகாத்மாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். தங்கள் கட்டுரைகளை சிங்கப்பூர் தமிழ் முரசில் படித்திருக்கிறேன். விரும்பிப் படிப்பது வழக்கம்.

நன்றி!
அன்புடன்,
ஜோதிபாரதி.
www.jothibharathi.blogspot.com

Aruna Srinivasan said...

காந்தி அப்படி என்ன செய்துவிட்டார் என்ற கேள்விகள் எழும் இந்தக் காலத்திலும் அவரது நற்பண்புகளை மதிக்கும் வார்த்தைகள் இதமாக இருக்கின்றன. நன்றி, ஜோதிபாரதி.

அறிவன் கருத்துக்கு நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Kannan said...

வணக்கம். உங்கள் பதிவுகளின் வீச்சு மேலும் அதிகமாக, சமயம் கிடைக்கும் பொழுது Tamil Wiki என்ற தமிழ் விக்கி தளத்திற்கு வருகை தந்து, தங்களது சிந்தனைகளை, கதைகளை, கவிதைகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். அத்துடன் உங்கள் இணைய தளத்தின் முகவரியை மறக்காமல் இணைக்கவும்.

நம் தமிழ் விக்கி தளத்தை மேம்படுத்த ஆலோசனைகள் உண்டெனில் அதையும் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

மாதங்கி said...

மேலாண்மை பற்றிய ங்கள் புத்தகம் இங்கு நூலகத்தில் படித்தேன்
வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள்.

காந்தி-பா-சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாடக நூல் இங்கு நூலகத்தில் உள்ளது.

மாதங்கி said...

மேலாண்மை பற்றிய ங்கள் புத்தகம் இங்கு நூலகத்தில் படித்தேன்
வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள்.

காந்தி-பா-சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாடக நூல் இங்கு நூலகத்தில் உள்ளது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.