மன்மோஹன் சிங் தளர்வதாக இல்லை; இடதுசாரியும் விடுவதாயில்லை. அரசைக் கவிழ்ப்பது நோக்கமில்லை என்று சொல்லும் இடதுசாரி, ஒரு வேளை "விட்டுகொடுத்து" விட்டாலும், அணு ஒப்பந்தம் அமுலுக்கு வந்தாலும் ஒப்பந்தக் காலமான 40 வருடம் ( கொசுறு 10 வருடக்காலமாம்) சொச்சத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நமது நாட்டில் அல்லது உலகளவில் வரும் என்று தெரியாது.
வெற்றிகரமாக - மன்மோஹன் சிங்க் நம்பிக்கை வைப்பது போல் -இந்தியாவுக்கு ஆதாயமாகவும் இருக்கலாம். அல்லது இடதுசாரி கவலைப்படுவது போல் நாம் அணு சோதனை செய்ய நேர்ந்தால், அதன் காரணமாக ஒப்பந்த முறிவும் ஏற்படலாம்.
Hyde Act காரணம் காட்டி அமெரிக்காவும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம்; இந்தியாவும் தன் காரணங்களைச் சொல்லி எப்போது வேண்டுமானாலும் விடுபடலாம். ஒப்பந்த முறிவுக்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால், இதனால் விளைவுகள் என்ன? இரு நாடுகளுக்கும் பாதகங்கள் என்ன? முறிக்கும் நிலை வரை இரு நாடுகளுமே போகுமா? அப்படி நேர்ந்தால், அமெரிக்கா திருப்பித் தரச் சொன்னாலும் இந்தியா, தான் பெற்றுக்கொண்டவற்றை திருப்ப வேண்டிய அவசியமில்லா சூழ்நிலை என்ன, என்று பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் சொல்கிறார். "...Under a worst-case scenario where the U.S. ignores its obligation to ensure the continuous operation of Indian reactors, presumably citing the Hyde Act, India would be under no obligation to entertain an American request for the return of nuclear items...."
ஏன், எப்படி என்று இவர் இங்கே விவரிக்கிறார்.
மற்றொரு பக்கம், இப்படி வெளியிலிருந்து பெறப்படும் உதவிகள் மூலம் - அமைக்க இருக்கும் நான்கு புதிய அணு சக்தி ஆலைகள், இந்தியாவுக்கு மேலும் 30,000 MW சக்தி உற்பத்தி செய்யும் என்று நேற்று வந்த செய்தி கூறுகிறது. என் பார்வையில் இதுவும் ஒரு முக்கிய கோணம். 16 வது Electric Power Survey கொடுத்த அறிக்கையின்படி, 2000 -01 ல் மொத்தம் 1,01630 MW சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதில் நிலக்கரி மூலம் ( Thermal ) - 72,359 MW;
தண்ணீர் சக்தி மூலம் ( Hydel) - 25,142 MW;
அணு சக்தி மூலம் - 2,860 MW;
காற்று மூலம் (Wind power) - 1,269 MW.
( சூரிய சக்தி பெருமளவில் உற்பத்தி செய்யப்படவில்லை - அல்லது குறிப்பிடப்படவில்லை)
ஆக, உற்பத்தி முழுவதுமான கணக்கில் அணு சக்தி மூலம் கிடைத்தது வெறும் 3 சதவிகிதத்திற்கும் கீழ். இப்போது வெளியுதவிகள் மூலம் இந்த உற்பத்தி அதிகரிக்கலாம் - நேற்றைய செய்தியின்படி 30000 MW. இருந்தாலும் மொத்த உற்பத்தியில் அணு சக்தியின் பங்கு மிகக் குறைந்த சதவிகிதம்தான் தேறும்.
இந்த இத்தணூண்டு அளவு கிடைக்கும் சக்திக்காகவா ஒரு அரசாங்கமே ஊசலாடும் அளவு விவாதம் இடம் பெறுகிறது என்று தோன்றுகிறது. இதுக்காக ஏன் நம் அரசு உயிரைப் பிடித்துக்கொண்டு போராடுகிறது என்ற கேள்வி எழுகிறது. ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த விடைகளும், என் கேள்விகளும்.
இந்தியாவில் என்றல்ல; உலகம் முழுவதிலும் அணு மூலம் கிடைக்கும் சக்தி 3 சதவிகிதம் மட்டுமே. இயற்கையை மூலதனமாக வைத்து உருவாக்கப்படும் சக்திதான் பெரும்பாலும் இதுவரை உலகை இயக்குகிறது. நாளுக்கு நாள் சக்தியின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. சக்தியின் தேவை நமக்கு அதிகரிக்கும் அளவு இயற்கையும் வேகமாக வற்றாத ஊற்றாக நமக்கு சக்தியை அள்ளி அளிக்க வேண்டும்.
ஆனால் நிஜம் அப்படி இல்லை. இந்தியா உள்பட உலகெங்கிலும் இயற்கை மூலம் கிடைக்கும் சக்தி வறண்டு விடும் அபாயம் இருக்கிறது.
பெருமளவு தண்ணீர் மின்சாரம் உற்பத்தி செய்ய, பெரும் அணைகள் கட்ட வேண்டும் - பல மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களை இடம் பெயர்த்து செய்ய வேண்டிய அவசியம் - இது நடைமுறையில் கடினமான ஒன்று. மாற்று வழி - சிறு அணைகள் - அப்போதும் மக்கள் இடப்பெயற்சி அவசியம் - தவிர இப்படிபட்ட சிறு அணைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கடுகளவே. நம் ராட்சச தேவைகளுக்கு பற்றாது. பெரும் வாளியை நிரப்ப, ஸ்பூனால் மொண்டுவிட்டு நிரப்பும் கதை. கடைசி பட்ச அபாயம், எதிர்காலத்தில் நீர் வறட்சியும் ஏற்படலாம். காற்றின் மூலம் கிடைக்கும் சக்தியும் மிகக் குறைச்சலே - ஆனால் இந்தக் கோணத்தில் அதிக பட்ச உற்பத்தி செய்யும் வழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது அவசியம்.
ஆனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உற்பத்தியில் ஒரு முக்கிய குறை - அவை சீசன் பொருத்தது எப்போதும் ஒரே சீராக இராது.
இயற்கை வழியாக சக்தி உற்பத்தி செய்யப்படும் மற்றொரு வழி - நிலக்கரி - அதாவது Thermal Power. இன்று இதன் மூலம்தான் அதிக பட்சம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் நிலக்கரி அட்சயப் பாத்திரம் இல்லை. ஒரு நாள் முழுக்க சுரண்டிவிடுவோம். அப்புறம்??
ஆக, நாளடைவில் இயற்கையும் வறண்டு, மனிதன் வேறு மாற்று வழிகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாற்று வழிகளில் ஒன்றுதான் அணு சக்தி. இப்போதிலிருந்தே இதையும் பலப்படுத்தி, இயற்கை மூலம் உற்பத்தி செய்வதை - இயற்கையைச் சுரண்டும் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி உபயோகித்தால், இயற்கை வழிகளை / வளங்களை இன்னும் சில காலம் இழுக்கலாம். அல்லது, இயற்கையும் கொஞ்சம் இளைப்பாறி, தன்னைப் புதுப்பித்துக்கொண்டு நமக்கு வளம் தரலாம்.
ஆக, நம் தேசீய / வெளியுறவு கொள்கைகளை பாதிக்காத ( பாதிக்கவில்லை என்று பிரதமர் உறுதியாகச் சொல்கிறார் ) வகையிலும், இதர சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கவனம் எடுத்துக்கொண்டும் அணு சக்தி உற்பத்தியை பெருக்க முடிந்தால் ஒரு தூரதிருஷ்டி பார்வையில் நமக்கு அது ஆதாயமே.
Friday, August 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Good compilation. All the best.
என்னை கேட்டால் இந்த ஒப்பந்தமே தேவை அற்றது. அமெரிக்க உதவி இல்லாம இத்தனை நாளாக வளரவில்லையா அணுசக்தி துறையில்!
குளோபல் வார்மிங் ல் பெரும்பகுதி நமது அனல் மின் நிலையங்களால் தான் அதிக வெப்பம் உண்டாகிறது என்கிறார்கள். அதற்கு உரிய வழி அணு
சக்தி மின் நிலையங்கள் தான். ஆனால் குண்டு பல்பு ஒழிப்பு, ஹைட்ரஜன் எரிபொருளை பரவலாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் அணுசக்தி தேவையை குறைக்கலாம்.
Post a Comment