உலகமயமாக்கல், மற்றும் உலக வர்த்தக அமைப்பு என்பதெல்லாம் இன்று ஓரளவு நிரந்தரமாகவும் - பிடிக்கிறதோ இல்லையோ, யதார்த்தம் என்று பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள அல்லது சகித்துக்கொள்ளப்பட்ட விஷயமாகி விட்டது.
சரி என்று வாதிடுபவர்களும், சரியல்ல என்று வாதிடுபவர்களும் இன்னும் நிறைய எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அமெரிக்க எழுத்தாளர்களான Paul Krugman & Thomas Friedman போன்றவர்கள், " உலகமயமாக்கல் சரிதான்; ஆனாலும் இன்னும் புரிபடலையே;" என்கிற ரீதியில் எழுதி / பேசி வருகிறார்கள். நம்முரில் சுவாமிநாதன் அங்கலேசுவர அய்யர், குருசரண்தாஸ் போன்றவர்கள் ஆணித்திரமாக ஆதரிக்கிறார்கள்.
என்னைப்பொறுத்தவரை, உலக நாடுகளிடையே வேற்றுமையில்லாமல் பாரபட்சம், தடைகள் போன்றவை இல்லாமல் ஒருவருக்கொருவர், பண்டைய நாட்களைப்போல வணிகம் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் உலகமயமாக்கலை ஆதரிக்கிறேன் என்று முன்பே விளக்கமாக கூறியுள்ளேன். இந்த சுட்டியில் - அக்டோபர் 3 ந் தேதி, 2003 - பதிவில் உள்ளது.
இதன் நடுவில் நேற்று Globalization And its Discontents என்ற புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். 2001ம் ஆண்டு பொருளாதாரத்திற்கு நோபல் விருது வாங்கிய ஜோஸப் ஸ்டிகிளிட்ஸ் - Joseph E Stiglitz - எழுதியது. உலக மயமாக்கலின் நன்மைகள் பரவலாக ஏழைகளை சென்றடையவில்லை என்ற ரீதியில் எழுதியிருந்தார்.
இபப்டி பலவிதங்களிலும் இன்னும் விவாதங்கள் தொடரும் நிலையில் நேற்று வந்த செய்தி ஒன்று என்னைக் கவலைக்குள்ளாக்கியது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெசவு வகைகள் சிலவற்றுக்கு அமெரிக்கா கோட்டாக் கட்டுப்பாடு வைக்கப்போகிறது, என்ற செய்தி. சீன இறக்குமதிகள் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பிரச்சனையாகிவிட்டதால். ( நமக்குத் தெரிந்த விஷயமாயிற்றே?)
ஹிந்துவின் அமெரிக்க நிருபர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி விவரமாக எழுதியிருந்தார். எகனாமிக் டைம்சில் ஏஜன்ஸி செய்தி.
உலக வர்த்தக அமைப்பின் விதிகள்படி, நெசவு - Textile - கோட்டா முறை கடந்த ஜனவரி 1 ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. உறுப்பு நாடான அமெரிக்கா இப்போது எப்படி திடீரென்று இபப்டி ஒரு தடை / கட்டுப்பாடு, சக உறுப்பினர் நாட்டுக்கு விதிக்க முடியும்? அப்பட்டமாக விதிகளை மீறலாமா? அது
அழுகுணி ஆட்டம் இல்லையோ என்று கேள்விகள் என்னுள்.
என்ன ஆயிற்று என்றால், ஜனவரி 1 ந்தேதி, கோட்டா தடைகள் நீங்கியவுடன் சீனாவிலிருந்து அமெரிக்காவில் எக்கச்சக்கமாக இறக்குமதி ஆயிற்றாம். மலிவாக வந்து குவிந்ததில் உள்ளூர் சரக்கிற்கு வாங்குவார் இல்லாமல் போய், உள்ளூர் தயாரிப்பாளர்கள் அரசிடம் முறையிட்டுள்ளனர். Committee for the Implementation of Textile Agreement என்கிற அரசு சார்ந்த அமைப்பு இந்தக் கட்டுபாட்டை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. மூன்று வருடங்கள் முன்பு சீனா, உலக வர்த்தக அமைப்பில் சேருவதற்கு முன்பு அமெரிக்கா - சீனாவிடையே 1997ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டதாம். அந்த இரு நாட்டு உடன்படிக்கையின்படி, 2008 வரையில் சீனாவிலிருந்து அமெரிக்காவினுள் இறக்குமதியாகும் நெசவு வகைகளின் எண்ணிக்கை திடீரென்று அளவுக்கு அதிகமாக, உள்ளூர் தொழிலுக்கு பாதகம் ஏற்படும் வகையில் குவியுமேயானால், அதை மட்டுப்படுத்தி உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சம தளம் ( level playing field) ஏற்படுத்த அமெரிக்கா கோட்டா முறையைக் கொண்டுவரலாமாம். உலக அமைப்பில் நுழைவதற்கு முன் ஏற்பட்ட Bilateral உடன்பாடு ஒன்று உறுப்பினர்களை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தும் என்பது எனக்கும் புரியவில்லை.
இதை அப்படியே சீனா நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. உலக அமைப்பின் Dispute settlement மன்றத்தில் முறையிடப்போகிறது. முடிவு எப்படி போகும் என்று பார்க்க வேண்டும். உலக அமைப்பின் பற்களுக்கு சக்தி உண்டா இல்லையா என்பதை உணருவதற்கு இந்த வழக்கு ஒரு உரை கல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த நிலையில் மற்ற உறுப்பினர் நாடுகள் இதை வெறும் அமெரிக்கா - சீனா தகராறு என்று மட்டுமே தள்ளி நின்று வேடிக்கை பார்க்குமா அல்லது உலக அமைப்பின் விதிகள் சுற்றி வளைத்து மீறப்படுகின்றன என்று எதிர்ப்பு குரல் கொடுப்பார்களா? மூன்று வருடம் முன்பு தோஹா மாநாட்டிலும் சரி, கடந்த கன்கூன் மாநாட்டிலும் சரி; வளரும் நாடுகள் ஒன்றாக சேர்ந்து இருந்தது வளர்ந்த நாடுகள் தங்களுக்கு சாதகமாகவே முடிவெடுக்கும் நிலையை தடுக்கும் ஒரு பெரும் வலிமையாக இருந்தது. இனியும் தொடர்ந்து அப்படியே பாரபட்சம் இல்லாத நேர்மையான உலக வணிகம் - உலக நாடுகள் - சம தள அரங்கில் விளையாடும் சூழ்நிலை உருவாகும்படி விழிப்போடு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
பிகு: - சீன இறக்குமதிக்கு கோட்டா, என்றால் இதில் லாபம் இந்தியாவிற்கே என்ற இன்னொரு செய்தியையும் பார்த்தேன். இந்தக் குளிர் காய்தல் மனோபாவம் எனக்கு உகந்ததல்ல. இன்று சீனா என்றால் நாளை இந்தியா என்ற நிலையில், கிடைத்த வரையில் லாபம் என்றா பார்ப்பார்கள்? பரந்த அளவில் விதி முறைகள் அனுசரிக்கப்டுகிறதா என்றல்லவா பார்க்க வேண்டும்?
பி. கு. 2. இதன் நடுவில், ஹிந்துவில் தான் எழுதும் பத்தியில்..... மன்னிக்கவும் :-) - நியூயார்க் டைம்சில் தான் எழுதும் பத்தியில் Thomas Friedman தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா, சீனா பிலிப்பைன்ஸ், போன்ற நாடுகள் முன்னேறுகையில் அமெரிக்கா கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது என்று எழுதியிருந்தார். இவர் கவலைப் படுவதிலும், தகவல் தொழில் நுட்பத்தில் நாம் தனிப்பெரும் சக்தி என்று நாம் சொல்லிக்கொள்வதிலும் அர்த்தமில்லயோ என்று தோன்றுகிறது. - இந்த வார எகானமிஸ்டில் வந்த ஒரு ஆய்வைப் பார்த்தால்.
E-business எனப்படும் மின் வணிகம் செய்வதற்கு இந்தப் பத்திரிகையின் ஆய்வுக்குழு, ( Economist Intelligence Unit) " e-readiness என்று ஒரு ஆய்வு நடத்துகிறது. இப்படி இணைய வழி வணிகம் நடத்த, e- readiness உள்ள 65 நாடுகளை இதுப் பட்டியலிட்டுள்ளது. இந்த ஆய்வின் படி அந்தந்த நாடுகளில் மக்களிடையே அகலப்பாட்டை வசதி, சாதாரண, மற்றும் செல் தொலைப்பேசி வசதி இவைப் பரவலாக உள்ளதா எனவும், அரசுக் கட்டுப்பாடுகள் எவ்வளவு தூரம் அனுசரணையக உள்ளன என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன்படி டென்மார்க் முதலிடம். அமெரிக்கா இரண்டாவது. மூன்று ஸ்வீடன். நான்கு ஸ்விட்சர்லாந்து.
சரி, எங்கே நம் ஆசிய தகவல் தொழில் நுட்ப புலி(ள்ளி)கள் ??
இந்தியா 49 வது இடம். சீனா 54 வது இடம் ( கொஞ்சம் சந்தோஷம் இங்கவாவது சீனாவைவிட சற்று முன்னாடி இருக்கோமே?) இந்தோனேஷியா கடைசி - 60 வது இடம். பிலிப்பைன்ஸ் காணவே காணோம்.
"தகவல் தொழில் நுட்ப சக்தியாக இருந்தாலும் இந்தியா, 49 வது இடத்தில்தான் இருக்கிறது" என்று இந்த ஆய்வுக் குறிப்பாக கூறியிருக்கிறது.
Monday, May 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
LEVEL PLAYING FIELD? U R DAY DREAMING
Post a Comment