மூன்று மூத்த பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்கள், தங்கள் வயதை / முதுமைப் பற்றி, தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி நினைவு கூறும் சில கோணங்களை சமீபத்தில் அடுத்தடுத்து படிக்க நேர்ந்தது. மூவர் சொல்லியிருந்ததிலிருந்தும் வரிசையாகக் கீழே கொடுக்கிறேன்.
" என் நிலை இப்படியாகும் என்று நான் நினைத்ததேயில்லை. ஒரு முழுமையான வாழ்க்கை - பிரமாதமான வாழ்க்கை எனக்கு அமைந்துள்ளது. உலகின் பல இடங்களுக்கு இந்தக் கால்கள் என்னை அழைத்துச் சென்றுள்ளன. இந்தக் கால்கள்தாம் என்னை பிரசித்தி பெற்ற Great Wall of China மேல் அழைத்துச் சென்றன. ஆனால் இன்னிக்குப் பாருங்களேன், இப்படி உபயோகமில்லாமல் செயலிழந்து இருக்கின்றன."
*** *** ***
" என் அம்மாவின் நினைவு நாள் அன்று நாங்கள் ஒன்றாக சேர்ந்து நினைவு கூறுவோம். ஏன் இத்தனை வருடம் கழித்தும் இப்படி செய்கிறோம் என்று நான் சிந்திப்பதுண்டு. சொல்லப்போனால் என் பெற்றோர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என் வயதான இந்தக் காலத்தில் அவர்களுடைய நினைவுகள் கூட மங்கிக்கொண்டிருக்கின்றன - போட்டோக்களும் எப்போதாவது அவர்கள் எங்கள் கனவுகளில் வருவது மட்டுமே இப்போது அவர்களை நினைவூட்டுகின்றன. என் அப்பா இறந்தபோது இருந்த வயதைவிட எனக்கு இப்போது வயதாகிவிட்டது. சில சமயம் வேடிக்கையாக எனக்குத் தோன்றும் : இன்று என் முன் அவர்கள் வந்து நின்றால் பெற்றோரைவிட வயதான பிள்ளையை அவர்கள் சந்திக்க நேரும். இறந்தவர்களின் கடைசி வயதிலேயே அவர்கள் எங்கேனும் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால்....."
*** *** ***
" மே மாதம் மூன்றாம்தேதி எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்......."
*** *** ***
கடைசியில் சொல்லியிருக்கும் வரிகள் யாருடையது என்று ஊகித்திருப்பீர்கள். பலரைப் போல் சுஜாதாவின் சென்ற வாரக் கற்றதும் பெற்றதும் என்னையும் நெகிழ்த்தியது. மேலே கோடிக்காட்டியிருந்த வரிகளில் ஆரம்பித்து மெரினாவில் பார்த்த தாத்தாவுடன் உரையாடல், பிறகு "ஆபிச்சுவரி" பற்றி நகைச்சுவை கலந்த யதார்த்தம், என்று ஒவ்வொரு வரியையும் உணர்ந்து எழுதியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில் பத்திரிகைகளில் பத்திகள் எழுதுவது ஒரு சுகமான அவஸ்தை. சில சமயம் என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து பத்திரிகைக்கு அனுப்ப வேண்டிய கெடு நெருக்கும்போதும் ஒரு ஐடியாவும் வராமல் அவஸ்தையாக இருக்கும். பத்திரிகை அலுவலகத்திலிருந்து நாசூக்காக ஒரு நினைவூட்டி வரும்போது, வாராவாரம் / மாதாமாதம், இந்த பிரசவ அவஸ்தை வேண்டாம்; இதோடு பத்தியை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற வரையில் யோசனை போகும். இந்த சமயத்தில் திடீரென்று எங்கிருந்தோ ஐடியா வந்து ஹலோ சொல்லும். அதோடில்லை; அழகாக வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கொட்டிவிட்டு போகும். சில சமயம் பல நாட்களாக மனசுக்குள் வைத்து ரிகர்ஸல் செய்து திட்டம் போட்டு வடித்த கட்டுரையை விட இந்த திடீர் ஐடியாக்கள் மிக நன்றாக, இயல்பாக அமைந்து போகும். அதுபோல், சுஜாதா இந்தக் கட்டுரையை ரொம்ப நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து எழுதினாரா அல்லது நான் சொன்னதுபோல் எதேச்சையாக, மனசில் ஏதோ தோன்றி இப்படி எழுதினாரா என்று தெரியாது. ஆனால் படிக்கும்போது மனசில் எங்கேயோ ஒரு இழையை முடுக்கிவிட்டது என்னவோ நிஜம். கடந்த பல வருடங்களாகப் புனைகதைகள் படிப்பதில் என் நாட்டம் குறைந்துவிட்டதால், சுஜாதாவின் சமீபத்து கதைகள் என் கவனத்தில் வரவில்லை. ஆனால் அவரது "கற்றதும் பெற்றதும்" முடிந்தவரை படித்துவிடுகிறேன்.
மற்ற இரண்டு பேரில், சீன சுவரைப் பற்றி பேசியவர் கார்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண். சமீபத்தில் அவருக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்த சமயத்தில் ஆங்காங்கே அவரது பேட்டிகள் நிறைய கண்ணில் பட்டது. அதில் ஒன்றில் அவரது உடல் நிலைபற்றி - ஒரு stroke ல் இடது பக்கம் செயலிழந்துள்ள - சிகிச்சையினால் ஓரளவே குணப்படுத்த முடிந்த - அவரது காலைச் சுட்டிக் காட்டி ) பேச்சு வாக்கில் குறிப்பிட்டுள்ளார். இன்றும் இவர் தொடர்ந்து திருவாளர் பொதுஜனத்தை நம்மிடையே மௌனமாக உலாவ விட்டுக்கொண்டிருக்கிறார். சில சமயம் என்னுள் தோன்றும் எப்போதாவது திருவாளர் பொதுஜனம் வாயைத் திறப்பாரா என்று. மேலே நான் குறிப்பிட்டிருந்த பேட்டியில் அவர் இவ்வளவு காலம் தொடர்ந்து இந்தத் துறையில் வெற்றிகரமாக இருப்பதற்கு நம் அரசியல்வாதிகளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் லாலு பிரசாத் கார்ட்டூன் முகத்திற்காகவே பிறந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். ஒரு முறை மொரார்ஜி தேசாய் கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மணை எப்படி ஒரு வழிக்கு கொண்டுவருவது என்பதற்காகவே ஒரு காபினெட் மீட்டிங் போட்டாராம். முன்பு எப்போதோ படித்துள்ளேன். லக்ஷ்மணுக்கு காக்கைகள் மிகவும் பிடிக்கும். பல கார்ட்டூன்களில் பொதுஜனம் போல் எங்காவது ஒரு காக்கையும் உட்கார்ந்திருக்கும்.
ஆர்.கே லக்ஷ்மண், தினமும் தன் கார்ட்டூன்கள் மூலம் என் பல காலைப் பொழுதுகளை கலகலவென்று ஆக்கியுள்ளார் - ஒரு சில கீற்றுகளில், கோடுகளில், இந்தியாவின் நிதர்சனத்தை பளீரென்று வெளிச்சம் போட்டு காட்டி; அதையும் யாரையும் நோகடிக்காமல்; அதேசமயம் உண்மை ஆழமாக மனதில் படும்படி; எளிமையாக சொல்லியிருப்பது போல் இருந்தாலும் நினைத்து நினைத்து நாள் முழுதும் ரசித்து சிரிக்கும்படி.....போரிபந்தர் கிழவி (Old lady of Boribunder) என்று சொல்லப்படும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவர் என்று நான் நினைப்பதுண்டு.
அடுத்து, பெற்றோரை நினைவு கூர்ந்தவர் எழுத்தாளர் /பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங். டில்லியில் இருந்தபோது எல்லாப் பத்திரிகைகள், மற்றும் பேப்பர்களிலிருந்தும் இவர் எட்டிப் பார்ப்பார். நான் சென்னை வந்தபிறகு அவர் எழுதும் பத்திரிகைகள் நான் அதிகம் படிக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. புத்தகக் கடைகளில் அட்டைகளில் பார்ப்பதோடு சரி. எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கைவிட, பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங்கிற்கு என் ஓட்டு அதிகம். இவரது கட்டுரைகள் மற்றும் பத்திகள் - இப்போதெல்லாம் அவ்வப்போது பயணங்களில், பெங்களூரின் டெக்கான் ஹெரால்ட், டில்லியின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்றவை கண்களில் படும்போது - நான் ரசித்து படிப்பவை. இந்தப் பதிவை எழுதத் தூண்டியதும் நேற்று அப்படி ஒரு டெக்கான் ஹெரால்ட் கையில் கிடைத்து, இந்தப் பத்திரிகையில் வந்துள்ள இவருடைய பத்தியை படிக்க நேர்ந்ததுதான்.
விவரம் தெரிந்து பத்திரிகைகள், செய்தித்தாள், என்று படிக்கும் காலத்திலிருந்து மூவரின் படைப்புகளையும் ரசித்து வந்துள்ளேன். மூவருமே அவரவர் துறையில் முன்னோடிகள். மூவருமே 50 வருடங்களுக்கு மேலாக ஒரு அசுர வேகத்தில் prolific ஆக (மானாவாரியாக?) படைத்துக் கொண்டிருப்பவர்கள். மூவரின் படைப்புகளும் பல சமயங்களில் என்னை அசத்தியுள்ளன - அசத்திக்கொண்டிருக்கின்றன.
சரி இவர்கள் இப்போது திடீரென்று ஒன்றாக ஏன் என் Spotlight ல் வந்தார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். இவர்களின் கருத்துக்கள் கிட்டதட்ட ஒரே சமயத்தில் எதேச்சையாக நேர்ந்ததா? அல்லது எனக்கும் வயதாகிக்கொண்டு வருகிறதா ? எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்படி முதுமை பேசும் வாக்கியங்கள் பட்டும் என் கண்களில் படுகிறதோ?
தெரியவில்லை.
ஆனால், இதை எழுதி முடிக்கும்போது என்னுள் ஒரு அசரீரி : " வயதாகிவிட்டது. அதனால் இப்போதெல்லாம் நிறைய எழுதாமல் ரிடையராகிறேன் என்று அடிக்கடி சொல்கிறாயே...? இப்போது என்ன சொல்கிறாய்? "
நான் ஏன் வாயைத் திறக்கிறேன்? :-)
Sunday, May 08, 2005
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
அருணா, நல்ல பதிவு.
இதை நான் கூட உணர்ந்திருக்கிறேன். திட்டம் போட்டு எழுதுகிறவற்றை விடவும், திடீரென்று உணர்ச்சி வேகத்தில் ( நிதானமிழக்காமல்) எழுதுபவை, சிறப்பாக அமைந்து விடும், பல சமயங்களில்.
உங்களுக்கு பிடிச்ச 'பத்தி'யாளர் டாப் டென் கவுண்ட் டவுன் ஒண்ணு போடுங்களேன்.துபவை, சிறப்பாக அமைந்து விடும், பல சமயங்களில்.
உங்களுக்கு பிடிச்ச 'பத்தி'யாளர் டாப் டென் கவுண்ட் டவுன் ஒண்ணு போடுங்களேன்.்.
previous comment was mine
பதிவை மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்க (ஃபயர்பாக்ஸ் உலாவியில்) பின்னூட்டப் பெட்டிக்கு வந்துவிட்டது. பதிவு நன்றாக இருந்தது.
பிரகாஷ், இதென்ன? கேள்வி - பதில் பகுதிகளில் வரும் கேள்வி மாதிரி ஒன்று கேட்கிறீர்களே? சரி. நானும் அதே தொனியில் பதில் சொல்கிறேன். " எனக்குப் பிடித்த பத்தியாளர்களா? என்னை வம்பில் மாட்டப் பார்க்கிறீர்களே ஐயா? :-) மாட்ட மாட்டேனே? :-)
இராதாகிருஷ்ணன், அடிக்கடி இப்படி கைத்தவறி ஓட்டுப்போடுவீர்கள் என்று நம்புகிறேன் :-)
Don't you think aging is as interesting as growing? : ) : )
The posting was thought provoking..
thanks,
anbudan, Jayanthi Sankar
ஜெயந்தி, நீங்கள் சொல்வது ரொம்பசரி. சுஜாதா அவ்வப்போது தன் sciatica, போன்ற உடல் பிரச்சனைகளையும் நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொண்டு போகிறாரே; அதுபோல் யதார்த்தமாகவும் வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் என்று இயல்பாகவும் எடுத்துக்கொண்டு முதுமையை எதிர்நோக்கும்போது நீங்கள் சொல்வதுபோல் அதுவும் சுவாரசியமானதுதான். On lighter vein - என் அடுத்த புத்தகத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். "இயல்பாக முதுமையை ரசிப்பது எப்படி? " :-) -அதுசரி; எழுதிக்கொண்டிருக்கும், பறை சாற்றி அறிவித்த நாவல் என்னாச்சு? அதாங்க, அடுத்த புத்தகத்தின் தலைப்பு இப்படி.... நாவலை முடிக்கும்போது இந்தத் தலைப்புக்கு முழுவதுமாக தயாராகிவிடமாட்டேனா? :-)
அருணா.
நல்ல பதிவுங்க அருணா
செல்வநாயகி.
இப்படிப்பட்ட பதிவை சிந்திக்க உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? அருமை!!
அன்புடன் / தாசரதி
நன்றி செல்வா. ( ஓகேதானே? :-) ) தோழியர் பதிவு சில நாட்களாக ஏனோ என் கணினியில் சுத்தமாக வரவில்லை. cannot find server என்றே வருகிறது. அதனால் உங்கள் பதிவுகளை கொஞ்ச நாளாக படிக்க முடியவில்லை. பிரச்சனை சரியானதும், சேர்த்து படித்துவிடுவேன் :-)
தாசரதி, அதெல்லாம் தொழில் ரகசியம் :-) அதுசரி, நீங்கள் இன்னும் 53 ஐ எட்டவில்லை என்று நினைக்கிறேன். எட்டுங்கள், இதுக்கும் மேலே சிந்திக்க ஆரம்பித்துவிடுவீர்கள் :-) இந்தப் பதிவை ரசித்ததற்கு நன்றி.
test
அருணா : பிஎஸ்என்எல் data one சேவையை உபயோகிப்பவர்களுக்கு, இந்தச் சிக்கல் வருகிறது ( எனக்கு அதே கதைதான்). புகார் செய்திருக்கிறேன். தற்காலிகமாக ப்ராக்ஸி உபயோகிக்கலாம். உதாரணமாக, http://www.proxify.org/ என்ற இணையத்தளத்துக்குச் சென்று அங்கிருந்து, yarl.net இணையத்தளங்களைப் படிக்கலாம்.
Post a Comment