Friday, February 18, 2005

ரேடியோ கேட்கும் வழக்கம் FM அலைவரிசைகளின் வரவிற்கு பிறகு அதிகரித்துள்ளது - ( அல்லது ரசிகர்கள் கூடுவதனால் புதிய அலைவரிசைகள் கூடியுள்ளனவா ?! ) புதுசாக சாடிலைட் ரேடியோக்கள் வேறு வந்துள்ளன.

ரேடியோ நிறுவனம் எதுவாக இருந்தாலும் எல்லா அலைவரிசைகளிலும் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்ட்ட நிகழ்ச்சிகள், சுவாரசியமாக தொகுக்கும் தொகுப்பாளர்கள் என்றுதான் 24 மணி நேர நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. சாலையில் போக்குவரத்து நிலை, விஞ்ஞானம், வினா விடை, போன் செய்து பேசும் நிகழ்ச்சிகள் என்று விதம் விதமாக இருக்கின்றன. ஒரு காலத்தில் நானும் இப்படி ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. விவித பாரதியை முடுக்கிவிட்டால் போரடிக்கும் வேலைகளும் வேகமாக முடிந்துவிடும். அதனால் வேலைகளை ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்வேன். நான் பள்ளியில் / கல்லூரியில் படிக்கும்போது டிவி கிடையாதே. ரேடியோதான் ( அல்லது சினிமா தியேட்டர்) பிரதான பொழுதுபோக்கு. ( தெருவில் பாண்டி விளையாட்டு தவிர :-) பள்ளியில் காலை பிரேயரில் வரிசையில் நிற்கும்போது முந்தைய நாள் கேட்ட பாடல்களைப் பற்றி தோழிகளோடு பகிர்ந்து கொள்வது ரொம்ப முக்கியம். "அந்தப் பாடலைக் கேட்டாயா?இதைக் கேட்டாயா?" என்று ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும்போது ஏதோ நாமே இசையமைத்தாற்போல் திருப்தி.

இப்போது மறுபடி அந்த மாதிரி ரேடியோ கேட்கும் வழக்கம் வந்துள்ளது என்று தோன்றுகிறது - நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் ரசிகர்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது. போன் செய்து பங்கேற்கும் நிகழ்ச்சியில் பலர் தங்கள் கருத்துக்கள், விருப்பங்களை நன்றாகவே வெளிப்படுத்ஹ்டுகிறார்கள். முன்பை விட ரேடியோ என்கிர இந்த மீடியம் இப்போது அதிகம் interactive ஆக இருக்கிறது. நேயர்கள் பங்கேற்பு அதிகம் இருக்கிறது.

இப்படிதான்சென்ற வாரம் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம். (எந்த அலைவரிசை என்று நினைவில்லை) Professional அலல்து மேற்படிப்பு படிப்பவர்கள் கட்டாயம் ( குறிப்பாக பெண்கள்) அந்தப் படிப்பிற்கு ஏற்றாற்போல் வேலை செய்யதான் வேண்டுமா? வெறும் ஆர்வத்துக்காக ஒரு படிப்பைப் படிக்கலாமா கூடாதா என்பது கேள்வி.
நிறைய நேயர்கள் பலவிதங்களில் தங்கள் கருத்துகக்ளை வெளிப்படுத்தினார்கள். கூடும் / கூடாது என்று. என்னை யோசிக்க வைத்த விஷயம் தொகுப்பாளரின் கருத்து எவ்வளவு தூரம் இந்த மாதிரி விவாதங்களில் வெளிப்பட வேண்டும் என்பது. பொதுவாக இந்த மாதிரி விவாதங்களில் இரு விதமான கருத்துக்களும் சரியாக இருக்கும் நிலை இருக்கும். தொகுப்பாளர் தன் கருத்தையும் சொல்லலாம். ஆனால் ஒரு judgemental பாவனையோடு அதுதான் சரி என்ற தொனி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தொகுப்பாளர் தன் கருத்தை சற்று அதிகமாகவே வலியுறுத்தினார் என்று தோன்றியது. அவரவர் ஆர்வத்துக்கு ஏற்றாற்போல் படித்தபின் தேவையில்லை என்றால் தொழில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; அந்தத் துறையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என வெறும் ஆர்வத்தினால் அந்தப் படிப்பு படிப்பதில் தவறில்லை என்ற கருத்தை ஒரு நேயர் வெளியிட்டார். அதற்கு பதிலளித்த தொகுப்பாளர், மேற்படிப்பு அல்லது தொழில் கல்வி படிப்பவர்கள் அதை " வீணாக்குவது" கூடாது; அதைத் தொழில் முறையில் பயன்படுத்தியே ஆக வேண்டும்; படித்த கல்வியை இப்படி "வீணாக்குவதற்கு" பதிலாக அந்தச் செலவு வேறு யாருக்காவது உபயோகப்பட்டிருக்கலாமே என்ற தொனியில் பேசினார். "இது என் கருத்து மட்டுமே" என்ற ரீதியில் அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றியது.

தொழில் கல்வி மற்றும் உயர் கல்விக்கு பல்கலைகழகங்களில் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும்போது ஒருவரின் கல்விக்காக செலவழிக்கப்படும் resources அந்தக் கல்வியின் பயன் சரியான முறையில் சமூகத்தை சேர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் பார்க்கும்போது, ஒரு துறையில் இயற்கையான ஆர்வத்தோடும் உந்துதலோடும் கல்வி கற்பதே சிறந்தது.

வேலை மெனக்கெட்டு இஞ்சினீயர், டாக்டர் என்று படித்துவிட்டு அந்த அறிவை பிறருக்கு உபயோகமாக பயன்படுத்தாமல் சும்மாயிருப்பது தவறு என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம், கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கோ அல்லது சமூக சேவை செய்வதற்கோ மட்டுமல்ல; கல்வி கற்பதே ஒரு இனிமையான அனுபவம் என்றும் என் மனதுக்குப் படுகிறது. இதைப் படித்து இப்படியாக வேண்டும்" என்ற ஒரு "முடிவினை" நோக்கி கல்வி பயிலுவதைவிட, ஒரு குறிப்பிட்ட துறையில் ஆர்வத்தோடு கற்கும் அனுபவம் முக்கியம். இந்த இயற்கையான ஆர்வம்தான் நாளடைவில் ஒரு சமூகத்தில் creativity, innovation போன்ற புதிய பாதைகளுக்கு வழி கோலும் என்று நான் நினைக்கிறேன்.

3 comments:

Jayaprakash Sampath said...

//வேலை மெனக்கெட்டு இஞ்சினீயர், டாக்டர் என்று படித்துவிட்டு அந்த அறிவை பிறருக்கு உபயோகமாக பயன்படுத்தாமல் சும்மாயிருப்பது தவறு என்றுதான் தோன்றுகிறது//

ஒரு வகையில் நீங்க சொல்றது கரக்ட். நான் பள்ளியில் படித்த போது, பிரசன்னா என்று ஒருத்தன்(ர்) எனக்கு ரெண்டு வருஷம் சீனியர். பின்னாளில் கிதார் பிரசன்னா என்று பிரபலமாக ஆகிவிட்டா(ர்)ன். மொத்த ஸ்கூலுக்கும் கிட்டதட்ட ஹீரோ மாதிரி. கல்சுரல்ஸ் எல்லாம் களை கட்டும். பள்ளி இறுதி முடித்து விட்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இசையில் கவனம் செலுத்துவானாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிரபலமான இசைக்கலைஞன் ஆகிவிட்டான் என்பது ஏழெட்டு வருஷங்களுக்குப் பின் தான் தெரிய வந்தது. நடுவிலே என்ன செய்து கொண்டிருந்தான் என்று பார்த்தால், ஐஐடியில் நேவல் ஆர்கிடெக்சர் படித்துக் கொண்டிருந்திருக்கிறான். முடித்து , டிகிரி சர்ட்டிபிகேட்டை பெட்டியில் வைத்து பூட்டி விட்டு இசை பக்கம் திரும்பி விட்டான். இது போல நிறைய பிரபலமான/பிரபலமில்லா பல உதாரணங்கள் இருக்கின்றது. இது ஒரு எக்ஸ்ட்ரீம் என்றால், எஞ்சினியர் டாக்டர் என்று படித்து விட்டு, சிவில் சர்வீஸில் உள்ளே நுழைந்து, அமைச்சர்களுக்கு சல்யூட் அடிக்கிற ப்யூரோக்ரட்டுகள் இன்னொரு எக்ஸ்ட்ரீம் :-)

Aruna Srinivasan said...

பிரகாஷ், உங்கள் நண்பர் செய்தது தவறு என்று கூறமுடியாது. இதைத்தான் கடைசியில் எழுதினேன். நேவல் ஆர்க்கிடெக்சர் துறையில் அவருக்கு இயற்கையாக உள்ள ஆர்வத்தினால் படித்திருந்தாரானால் அவர் செய்தது நியாயமே. என்னதான் அவரது கல்வி வீணாகிவிட்டது என்று நாம் குறைபட்டாலும். தனி மனிதனின் தேடலைதான் அவர் உணர்த்துகிறார். இந்த தேடல்தான் ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி கோலும். நாம் - குறிப்பாக இந்தியர்கள் /ஆசியாவில் உள்ளவர்கள் - பொதுவாக ஏதேனும் வேலை வாய்ப்பை நோக்கியே கல்வியை வகுத்துக்கொள்வதால், இந்த "தேடல்" மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள முடியாமல் போகிறதோ என்ற கவலையும் எனக்கு உண்டு. புதிய விஞ்ஞான / தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் கடந்த காலங்களில் இங்கிருந்து அதிகம் இல்லையே? எங்கேயோ ஒரு சர் சி.வி.ராமன், ஒரு சந்திரசேகர் என்று அத்தி பூத்தாற்போல்தானே இருந்தது?
ஆனால் அதே சமயம் இன்று கணினி மென்பொருள் மற்றும் கலை /இசை என்று வரும்போது நாம் நிறைய பிரகாசிக்கிறோமே...? இதன் காரணம் இந்த துறைகளில் "வேலை வாய்ப்பு" என்ற உந்துதலைவிட ஒரு இயற்கையான " தேடலில்" ஆழ்ந்து போனதால் இருக்குமோ?

யோசிக்க வேண்டிய விஷயம்தான் :-)

Voice on Wings said...

அருணா, உங்கள் இன்றைய (Mar 7th)பதிவும் அருமை. இந்த பதிவும்தான்.

நானும் பொறியியல் படித்துவிட்டு இன்று விற்பனைத் துறையில் பொருப் பேற்றுள்ளேன். இதனால் எனக்கு மனவருத்தமெதுவும் கிடையாது. எனது உழைப்பால், விற்பனைத் திறனால் பல பொறியியல் வல்லுனர்கள் வேலை பெறுகிறார்கள். அந்த வரையில் நான் படித்த கல்வி உதவுகிறது.

icarus, happy to hear that you are Guitar Prasanna's school mate. In case you dint know, he's become an international star :) Check his website: http://www.guitarprasanna.com Frankly, i think he has made a wise decision winding up his engg. career.