இன்று CNN IBN ல் ஒரு நிகழ்ச்சிப் பார்க்க நேர்ந்தது. All the President's Children.
குடியரசு தினத்தை ஒட்டி, ஜனாதிபதி அப்துல்கலாமுடன் நிறைய பள்ளி மாணவர்களை அழைத்துப் பேச வைத்துள்ளார்கள். ஸ்ரீநகர், கௌஹாத்தி, போபால் என்று பல இடங்களிலும் வீடியோ தொடர்பு ஏற்படுத்திப் பேச வைத்துள்ளார்கள். சுவாரசியமாக இருந்தது.
மாணவர்களோடு உரையாடுவது எப்போதுமே ஜனாதிபதிக்குப் பிடித்த விஷயம் என்பதை அவரே பல முறை கூறுவது வழக்கம். தில்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள பரந்த இடத்தில் மேடைப் போட்டு இந்த இளையத் தலைமுறைக் கூட்டம். நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. மாணவர்கள் சரமாரியாகக் கேட்டதில் சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் கூறிய ஒரு பதில்: (கேள்வி என்ன என்பது சரியாக நினைவில்லை) " அரசியல் என்பது கொஞ்சம் அரசியல் - நிறைய நாட்டுக்கான வளர்ச்சி வேலைகள் என்று இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் 30 சதவிகிதம் அரசியலிலும், பாக்கி 70 சதவிகிதம் வளர்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் என்றவர் அதோடு நிறுத்தாமல், தொடர்ந்து "ஆனால் நிறைய அரசியலும் வளர்ச்சி வேலைகள் குறைச்சல் சதவிகிதம் என்று இருந்தார்களென்றால்...." என்று சிரித்தபடியே, கண்களில் குறும்பும் மிளிர, இழுத்தார். Tongue in Cheek Observation? :-)
ஒரு மாணவர் கேட்டார். ஜனாதிபதியான பின் நீங்கள் நினைத்தவற்றை நிறைவேற்றியுள்ளீர்களா? அப்துல்கலாம்: " இரண்டு விஷயங்கள் திருப்தியாக நிறைவேறியுள்ளன. ஒன்று என் 2020 திட்டப்படி இந்தியா வளர்ந்த நாடாக ஆக வேண்டும் என்ற என் கனவை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இரண்டாவது, நிறைய இளஞர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். இளைஞர்களிடம் நான் நம்பிக்கை வைப்பதற்கு மூன்று காரணங்கள். ஒன்று, அவர்களுக்கு பொதுவாகவே நம்பிக்கை அதிகம். செய்ய முடியும் என்ற நம்பிக்கை. இரண்டாவது, அவர்கள் மனதில் இன்னும் நிறைய பாதிப்புகள் ஏற்படாமல், மனதில் அதிகம் பாரபட்சம் ( Bias) இல்லாமல் இருக்கிறார்கள். மூன்றாவது அவர்களின் உற்சாகம். முன்னேற்றத்திற்கு உற்சாகம் மிக அவசியம். அது இளைஞர்களிடம் இருக்கிறது." கேட்க நிறைவாக இருந்தது.
இன்னொரு முக்கியமான கேள்வியும் பதிலும். ஒரு மாணவிக் கேட்டார். "பலவிதக் கலாசாரங்கள் வெளியிலிருந்து எங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்போது எப்படி இந்தியா தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு உலக அரங்கில் முன்னேறவும் முடியும்?" ஜனாதிபதியின் பதில் சற்று ஆழமாக, வித்தியாசமான அவதானிப்பாக இருந்தது. " நீங்கள் எப்படிபட்டக் கலாசாரத்தில் சூழ்ந்திருந்தாலும் நம் மரபணுவிலேயே ஒரு நெறி இருக்கிறது. There is a genetic value in our system. வெளியில் - நடை உடைகளில் எவ்வளவுதான் மாறினாலும், இந்தியர்களுக்கு என்று இருக்கும் இந்த மரபணு நெறிகள் நமக்கு சரியான / வெற்றிகரமானப் பாதையை வகுக்கும்."
Genetic value system ? சிந்திக்கத் தூண்டிய ஒரு கோணம்.
ஊழலை ஒழிக்க அவர் சொல்லும் வழி: " 50 மில்லியன் வீடுகள் / குடும்பங்கள் இருக்கின்றன என்று வையுங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உங்களைப் போன்ற குழந்தைகள் தங்கள் அப்பா /அம்மாவிடம் " லஞ்சமே வாங்காதீர்கள்" ஊழல் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தால் பெரியவர்கள் மனம் திருந்த மாட்டார்களா? என்ன குழந்தைகளா, வேண்டுகோள் விடுப்பீர்கள்தானே?" என்று கேட்டவுடன், வழக்கம்போல் மாணவர்கள் கோரஸாக ஆமாம் போட்டார்கள். குழந்தைகள் என்றில்லை. சில சம்யம் பெரியவர்கள் கூட்டத்திலும் இப்படி கேள்வி கேட்டு கோரஸாக பதில் வாங்கும் அவரது ஸ்டைல் நமக்கு இன்று நன்றாகவே பழகிவிட்டது.
விளம்பர இடைவேளையில் அப்துல்கலாம் Quotes காண்பித்தார்கள். என்னைக் கவர்ந்த ஒன்று: "சிந்தித்தல் என்பது உங்களுடைய முதன்மையான முதலீடாக / சொத்தாக இருக்க வேண்டும். சிந்திக்காமல் செயல்படும் எந்தத் தனிமனிதரும், எந்த நிர்வாகமும் முன்னேறவே முடியாது."
இளைஞர்களிடையேயும் அப்துல்கலாம் என்றால் ஒரு அபிமானம் இருக்கவே செய்கிறது. அவரது வார்த்தைகள் மட்டும் இளையத்தலைமுறையினரிடம் முழுமையாக சென்றடையுமானால் 2020 வருடத்திற்குள், 2020 பார்வை சாத்தியமே.
Saturday, January 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
"2020 பார்வை" நிகழ்ச்சி பற்றிய நல்லதொரு பதிவு. அதிர்ஷ்ட வசமாக நான் நிகழ்ச்சியின் சுமார் கடைசி 20 நிமிட ஒளிபரப்பைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். பதிவிற்கு நன்றி!
குழந்தைகளும் எவ்வளவு ஆர்வத்துடன் பங்கு பெறுகிறார்கள் குடைந்து குடைந்து கேள்வி கேட்கிறார்கள் ; கவனித்தீர்களா உமா ? btw, அலைகள் உங்களை வரவேற்கிறது :-)
மிக நல்ல பதிவு. நன்றி.
Post a Comment