Monday, May 30, 2005

சுவைகள் பலவிதம்....

சாலையில் வேகமாக போகும்போது சட்டென்று அது நம் கண்ணில் படும். உருண்டையாக, முக்கால்வாசி கருப்பாக, கொஞ்சமாக மேல் பாகத்தில் பழுப்புடன். போகிற போக்கில் கண்களில் பட்ட அது, மூளையை விரைவாக எட்டி, "ஓ, வந்துவிட்டதா? இது அதுதானா? இல்லையென்றால் வேறு எதையோ பார்த்துவிட்டு கற்பனை பண்ணிக்கிறோமா? என்று அடுத்து கொஞ்சமாக சந்தேகம் வரும். இருக்காது. இது என்ன மாசம்? ஆமாம், வெயில் சீசன் ஆரம்பிச்சாச்சு. அது "அதுவாகதான்" இருக்கும் என்று நமக்குள் ஒரு கணக்குப் போட்டு ஊர்ஜிதம் செய்துகொள்வோம். அடுத்த முறை எங்கே போனாலும் பிளாட்பார்ம் - சரி; நடைபாதை - மீதே கண்ணெல்லாம் இருக்கும். ஹ்ம்..ஹ¤ம்.. தென்படவில்லையே? அந்த சாலைக்கேப் போனால் கிடைத்துவிடும் என்று அடுத்த முறை மயிலாப்பூருக்கு திருவான்மியூர் "வழியாக" வண்டியை ஓட்டுவோம்.

ஆங்... இதோ இருக்கே... நான் தான் சொன்னேனே.. அது இதுதான் என்று... அப்புறம் என்ன... வண்டியை ஒரு ரிவர்ஸ் எடுத்து, திருப்பி, மெள்ளமாக ஓரத்தில் நிறுத்தி, "எவ்வளவுங்க?" என்று விலை பேசி, குவியல் குவியலாக இருப்பதிலிருந்து ஒவ்வொன்றாக அவர் /அவள் தோல் சீவி, மேலேயிருந்து ஒவ்வொரு ஓட்டையிலிருந்தும் லாவகமாக - மெள்ள..மெள்ள..- அவர்/அவள் எடுக்கும்போதே ஐயோ உடைந்து விடப்போகிறதே என்று நம் மனம் பதைக்க, ... அப்பாடி... வெளியே எடுத்து ஒவ்வொன்றாக ஒரு குட்டி பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்ததை அலுங்காமல் ஜாக்கிரதையாக வீட்டுக்கு எடுத்துவந்து உடனே ஜாக்கிரதையாக நல்ல தண்ணீரில் மெள்ள கழுவி, அதே ஜாக்கிரதையுடன் லாவகமாக - பாத்து...பாத்து... உடைஞ்சிடப்போகிறது.. என்று பக்கத்தில் குரல்கள்......மேலே மட்டும் கொஞ்சமாக ஓட்டை செய்து... சர்...உறிஞ்.... இது என்ன... சே... தண்ணியே இல்லை..... ரொம்ப முத்தல்.... சரி அடுத்தது....? ஆங்... இது பரவாயில்லை...ம்ம்..... என்ன ஒரு சுவை / இனிமை/ குளிர்ச்சி? வெயிலில் நுங்கு சாப்பிடும் சுவை இருக்கே.. இது நிஜமாகவே Bliss. அப்பாடா.... இந்த சீசனுக்குத் தேடித்தேடி நுங்கு சாப்பிட்டாச்சு.... மிஞ்சிப்போனால் இன்னும் ஒரு மாசம் சீசன் இருக்கும். ஆனால் என்ன செய்வது? இந்த வாரக் கடைசியில் ஊருக்குப் போகணும். நுங்கை விட என் மகன்கள் முக்கியமாச்சே :-)

ஆமாங்கோ.... மறுபடி ஊருக்குப் போகிறேன் - வேறு எங்கே? கலிபோர்னியாதான். ஸான்பிரான்ஸிஸ்கோ / சான் ஹோஸே பக்கம் யாராவது வந்தீர்களென்றால் எனக்கு ஒரு மெயில் arunas (at) gmail dot com தட்டி விடுங்கோ. கண்டிப்பா சந்திக்கலாம்.

அப்பாடா...கொஞ்ச நாளைக்கு நிம்மதி என்று நினைத்துவிடாதீர்கள். இங்கே வலைப் பதிவுகள் பக்கம் வராம இருப்பேனா? கட்டாயம் வந்து கொண்டிருப்பேன். - அவ்வப்போது தலைக்காட்டுவேன். பேசற விஷயம்தான் மயிலாப்பூருக்கு பதிலாக ஸான் ஹோசே மெர்குரி நியுஸ் சமாசாரமாக இருக்கும் :-)

பி.கு: நாளையோடு "அலைகள்" ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிகிறது. ஹிந்து போன்ற பத்திரிகைகளில் வருவதுபோல் This day That Age" என்று பழசை எடுத்துப் போட வேண்டும் போல் இருக்கு. ஆனால் பாருங்க, வலைப்பதிவுகள், வலைப்பூக்கள் என்றழைக்கப்பட்ட "திரேதாயுகத்தில்" நான் டிஸ்கியில் அடித்து அப்படியே பிரசுரித்துக் கொண்டிருந்தேன். யூனிக்கோடுக்கு மாற்றாமல். அதனால் என் பழைய பதிவுகள் சதுரம் சதுரமாக இருக்கும். கொஞ்சம் பொறுங்க - ஒரு நாள் எல்லாத்தையும் யூனிக்கோடில் மாற்றிவிடுகிறேன். மூன்றாம் வருடம் முடியும்போது ( எவ்வளவு நம்பிக்கை எனக்கு? மூன்று வருடத்தைத் தொடுவேன் என்று!? ) "அந்த நாள் ஞாபகம் வந்ததே" என்று எடுத்துப் போட்டுவிடலாம். :-)

இப்போதைக்கு, மதி எழுதியிருந்ததை அப்படியே இங்கே "டிட்டோ" போட்டுவிடக் கை துருதுருவென்கிறது. ஆனாலும் அவங்க சொன்னது என் விஷய்த்திலும் உண்மைதாங்க. வலைப்பதிவுகள் என்று எழுத, மற்றும் படிக்க ஆரம்பத்ததிலிருந்து நிறைய நட்புகள், அலசல்கள், ஞானோதயங்கள், என்று என் லாபக் கணக்கு விரிந்து கொண்டேயிருக்கிறது.

இங்கே அலைகளில் வந்து, அடிக்கடி அல்லது அவ்வப்போது, அல்லது எப்போதாவது காலை நனைத்துவிட்டுப் போகும் அனைவருக்கும் என் நன்றி. எட்டிப்பார்க்காமலேயே இருப்பவர்களுக்கும் நன்றி - என்றாவது நீங்கள் கட்டாயம் எட்டிப்பார்த்து அலைகளை ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் :-)

Saturday, May 28, 2005

செந்தில்குமார்... தொடர்ச்சி...

சென்றப் பதிவில் செந்தில்குமார் பற்றி எழுதிய விஷயம் ஒரு விதத்தில் இதமாக இருந்தது என்றால், விழுந்துள்ள பின்னூட்டங்களும் நட்சத்திரங்களும் அதேபோல் நம்மைப் பற்றி ஒரு நிறைவைக் கொடுக்கிறது. பிறருக்கு உதவ நினைக்கும் உள்ளங்கள் எங்கேயும் எப்போதும் உண்டு என்பதற்கு இங்கே இன்னொரு ஆதாரம். பின்னூட்டம் அளித்த, செல்வநாயகி, ஜோஸ்லின், கண்ணன், வீ.எம், மற்றும் நட்சத்திரத்தில் ஓட்டுப் போட்ட, மனதில் ஈரத்துடன் படித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் செய்தியை நான் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மாலன்தான் முக்கிய காரணம். செய்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இங்கே தமிழ் மணத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற யோசனையை முதலில் சொன்னது அவர்தான். இவ்வளவு பேரின் ஆக்கப்பூர்வமான என்ண அலைகளுக்கு "அலைகள்" ஒரு கருவியாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இப்போது செல்வா சொன்ன விஷயத்துக்கு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

செந்தில் குமாரின் நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் ஒரு மாணவர் குழுவாக இயங்குகிறார்கள். செந்தில்குமார் தவிர, ஏற்கனவே சில உடல் சவால் உள்ள மாணவர்களுக்கு இப்படி பணம் திரட்டி உதவி செய்துள்ளார்கள் - கல்லூரி வளாகத்துள் சென்று வர ஸ்கூட்டிகள் வாங்கிக்கொடுத்து. ஆனாலும் "மாணவர்களாக இருப்பதால் நாங்கள் பணத்தை நேரடியாக கையாளத் தயங்குகிறோம். Madras ENT Charity Trust போன்ற பொது அமைப்பின் மூலம் பணம் திரட்டினால் பின்னால் எங்களுக்கு ஏதும் வம்பு வராது என்று நினைக்கிறோம். ஆனாலும் செந்தில் குமார் பேருக்கு நேரடியாக அனுப்புவதில் ஏதும் பிரச்சனையில்லையென்று நினைக்கிறேன்" என்று சொல்லி, சற்று நேரத்தில் அந்த நண்பர் - அவர் பெயர், ராமசுப்பிரமணியன் - செந்தில்குமாரிடம் விசாரித்துவிட்டு அவர் முகவரியைக் கொடுத்தார். விவரம் கீழே:

Draft in Favour of C. Senthilkumar

Address:
S/O. R. Chandran
ChettickulamValavanthi Kombai (Via)
Kalappannaicken Paati (Post)
Namakkal -Pin: 637404
Phone: 04286 - 241322

Wednesday, May 25, 2005

நம்பிக்கை ஒளி...!

இவர் பள்ளியில் படித்தது தமிழ் மீடியம். இப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்டிரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆங்கில வழியில் பயிலுவது, எல்லா தமிழ் மீடியம் மாணவர்களுக்கும் போல் சற்று கடினமானதுதான். ஆனால் செந்தில்குமாருக்கு ஒரு கூடுதல் சவால். இவருக்கு காது கேளாது. வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதே முடியாது. உதட்டசைவைப் பார்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் ஆங்கிலம் வேறு.

ஆனால் என்ன? இவருக்கு "உடுக்கை இழந்தவன் கைபோல...." உதவும் அருமையான நண்பர்கள் இருக்கிறார்களே? இவருக்கு நடுநிசி வரை உட்கார்ந்து தமிழில் பாடங்கள் விளக்கி சொல்லிக்கொடுத்து உதவுகிறார்கள். இதனால் தன் உடலில் உள்ள இயற்கையான சவால்கள், ஆங்கிலத்தில் தடுமாற்றம் இவற்றையெல்லாம் மீறி கல்லூரி¢ பரிட்சையில் செந்தில்குமார் 10க்கு 7.5 சதவிகிதம் என்ற அளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சில சமயம் சில விஷய்ங்கள் படிக்கும்போது மனசில் சட்டென்று ஒரு உலகமே பிரகாசமாகிவிடுவதுபோல் இருக்கும். அப்படி இருந்தது இதைப் படிக்கும்போது. ஜாதி மத சச்சரவுகள், அரசியல் தகராறுகள், இன்னும் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ இடைஞ்சல்கள், சங்கடங்கள் என்று இருந்தாலும், நம் மனசில் எதிர்காலம் பற்றி நம்பிக்கையைக் கொண்டுவருவது இந்த மாதிரி செய்திகள்தாம். குறிப்பாக இளைஞர்களின் இந்த மாதிரியான பரந்த மனப்பான்மையையும், விசால நோக்கையும் பற்றி படிக்கும்போதெல்லாம் மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.

செந்தில்குமார் நாமக்கல் பக்கத்தில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து படிக்க வந்துள்ளார். குடும்பத்தில் இவர்தான் முதன் முதலாக மேல்படிப்பு படிக்கக் வந்துள்ளார். பத்து வயதிலேயே காது கேளாமல் போய்விட்டபோதிலும் இவரது தந்தை இவரை பொறியியல் படிக்க ஊக்குவித்துள்ளார்.

படிக்க உதவி செய்த நண்பர்கள், இப்போது செந்தில்குமாரின் உடல் குறைக்கு சிகிச்சையளிக்கவும் உதவ முற்பட்டுள்ளார்கள். இதற்கு உத்தேசமாகரூபாய் 5.7 லட்சம் ஆகுமாம். நண்பர்கள் ரூ. 3 லட்சம் வரை சேர்த்துவிட்டார்கள். கடைசி வருட மாணவர்கள் தாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது கட்டிய டெபாஸிட் தொகையைத் திரும்பப் பெற்ற்றவுடன் அதையும் கொடுத்து உதவியுள்ளார்கள். இந்த ஆபரேஷனை செய்யப்போகும் Madras ENT Research Foundation Charity Trust அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ. 95000 வேண்டாம் என்று சொல்லிவிட்டது.
கிராமத்திலிருந்து வந்து, அதில் உடலின் சவாலும் சேர்ந்து கொண்ட ஒரு நண்பனுக்கு வாழ்க்கையில் முன்னேற உதவும் இந்த பொறியியல் கல்லூரி மாணவர்களின் மனிதம் மனதை மிகவும் நெகிழ்விக்கிறது.
இந்த உதவியில் வலைப்பதிவாளர்களும் சேர்ந்து கொள்ளலாமே?

Those interested in supporting the initiative can send cheques in favour of the Madras ENT Research Foundation Charitable Trust payable at Chennai (No. 15, P.S. Sivasamy Salai, Mylapore Chennai - 600 004). The donations are exempt from income tax. For details, contact 98841 28586.

Monday, May 23, 2005

வலைப்பதிவாளர்களுக்கு அங்கீகாரம்; அரசு வேலை!! ??

அமெரிக்காவில் மழை, இடியென்றால், இங்கேயும் மேக மூட்டம், மழை, இடி, என்று வர வேண்டாமா?

வந்துவிட்டது. இணையப் பத்திரிகையாளர்களுக்கும், வலைப் பதிவாளர்களுக்கும் இந்திய அரசு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இப்போதான் அங்கே அமெரிக்காவில் வலைப் பதிவாளர்களெல்லாம் ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருக்கிறார்களே. அதுபோல் இங்கும் பதிவாளர்கள் பலம் பெறுவதாக அரசு நினைக்க ஆரம்பித்துவிட்டது. ஜன நாயகத்தின் குரல் கேட்க இன்னொரு முழங்கி.

என் முந்தைய மார்ச் மாத பதிவொன்றில் எழுதியது போல், செல்வநாயகி தன் தோழியர் பதிவொன்றில் எழுதியதுபோல், உண்மையாகவே கூடிய விரைவில் நடக்கலாம். ஆனாலும் இவ்வலவு சீக்கிரம் ஆகுமென்று எதிர்பார்க்கவில்லை. அதுசரி; சீக்கிரம் நடந்துவிடும் என்று நான் கனவு காண்பதும் கொஞ்சம் மிகைதான். இப்போதான் இப்படி ஒரு எண்ணம் இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இது எப்படி, எப்போது, எந்த விதத்தில் செயலாக்கப்படும் என்பது பெரிய கேள்வி. அப்படி வலைப் பதிவாளர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது என்று ஆரம்பித்தால் என்ன மாதிரியான அடிப்படையில் தேர்வு செய்வார்கள்? மொழி? ஆங்கிலம் மட்டுமா? மாநில மொழிகள் உண்டா?

ஹ்ம்ம்.. என் கேள்விகளுக்கும் விரைவில் விளக்கம் வரும் என்று நம்புகிறேன்.
ஆனால் எவ்வளவு தூரம் இங்கேயுள்ள பதிவாளர்கள் பொதுப் பிரச்சனைகளில் அக்கறை காண்பிக்கிறார்கள் என்று இன்னும் தெளிவாகவில்லை. டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் மோதிய "Mediah!" பதிவு சற்று கவனத்தை ஈர்த்தது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த மோதலுக்குப் பின், இப்போது அந்த சூடு காணாமல் போய்விட்டது.

இங்கே சுட்டி கொடுக்கப்பட்ட செய்தியின் படி, இந்திய அரசு வலைப் பதிவாளர்களுக்கும் இணையச் செய்தியாளர்களுக்கும் Press information Bureau வின் அங்கீகாரம் வழங்குவதுடன், அரசு வேலைகளும் கொடுக்கப்போகிறார்களாம்.
எங்கே, நம் பதிவாளர்களெல்லாம் ரெடியா? மாற்று ஊடகத்தன்மை தமிழ் மணத்தில் இன்னும் நிறையப் பிரதிபலிக்கலாம் என்பது என் என்ணம். அந்தந்த ஊர்களில் நடக்கும் சம்பவங்கள், சமூக இயல்புகள், போன்றவை இன்னும் வரலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பதிவாளர்கள் இருந்தால் ஆங்காங்கே நடக்கும், கவனிக்கும் செய்திகளை/ ஊர் நடப்புகளை பதியும்போது கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது, இணையம் /பதிவுகள், பூகோளக் கட்டுப்பாடுகள் இன்றி, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுக்கும்.

Saturday, May 21, 2005

அங்கவஸ்திரமும் டையும் !! இன்னொரு படத்தையும் பாருங்கள்.இன்று ஹிந்திவில் வந்த செய்திப்படங்கள். இவற்றைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். தமிழ் வாரப் பத்திரிகைகளின் ஸ்டைலில் சொல்வதானால், இந்த இரண்டு படங்களுக்கும் பொருந்துகிறாற்போல் ஒரு தலைப்பு தேர்ந்தெடுங்கள் பார்க்கலாம் :-)

பி.கு: இரண்டு படங்களையும் ஒரே பதிவில் போட முயன்றேன். வரவில்லை. மூன்று தனிப் பதிவுகளாக வந்துள்ளன. இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்க்க அலைகளின் முகப்புக்குப் போய் தனியாக இரண்டு பதிவில் வெளியாகியுள்ள போட்டோக்களைப் பார்க்க வேண்டும். போட்டோவை ஏற்ற நான் bloggerbot உபயோக்கிறேன். எப்படி இரண்டு போட்டோவையும் ஒரே பதிவில் போட்டு, குறிப்பையும் எழுதுவது என்பதை இன்னும் தேடித்தேடி கற்றுக் கொண்டிருக்கிறேன்.

எப்படி இதைச் செய்வது என்று யாராவது சொல்ல முடியுமா?

! Posted by Hello

Posted by Hello

Friday, May 20, 2005

வலைப்பதிவுகள் அமெரிக்காவில் எவ்வளவு தூரம் சக்தி வாய்ந்தனவாக / alternate ஊடகமாக இருக்கின்றன என்பதற்கு நேற்றைய செய்தியில் இன்னொரு உதாரணம். இதில் என்ன சங்கடமென்றால் இந்த முறை மாட்டிக்கொண்டது நம்ம ஊர் பெண் இந்திரா நூயி. ஆமாம் பெப்ஸியின் தலைமை அதிகாரி. சென்னையிலே பிறந்து வளர்ந்து, நம்ம மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜுலே படிச்சவர்.

இந்த செய்தியை படித்தபின் எனக்கு இவர் பேசியது பெரிய குற்றமாக தோன்றவில்லை; அமெரிக்காவை அவர் குறை சொல்வதுபோலவும் இல்லை. நீங்களும் படித்துப் பாருங்களேன் !!

Monday, May 16, 2005

அழுகுணி ஆட்டம் ??

உலகமயமாக்கல், மற்றும் உலக வர்த்தக அமைப்பு என்பதெல்லாம் இன்று ஓரளவு நிரந்தரமாகவும் - பிடிக்கிறதோ இல்லையோ, யதார்த்தம் என்று பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள அல்லது சகித்துக்கொள்ளப்பட்ட விஷயமாகி விட்டது.

சரி என்று வாதிடுபவர்களும், சரியல்ல என்று வாதிடுபவர்களும் இன்னும் நிறைய எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அமெரிக்க எழுத்தாளர்களான Paul Krugman & Thomas Friedman போன்றவர்கள், " உலகமயமாக்கல் சரிதான்; ஆனாலும் இன்னும் புரிபடலையே;" என்கிற ரீதியில் எழுதி / பேசி வருகிறார்கள். நம்முரில் சுவாமிநாதன் அங்கலேசுவர அய்யர், குருசரண்தாஸ் போன்றவர்கள் ஆணித்திரமாக ஆதரிக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை, உலக நாடுகளிடையே வேற்றுமையில்லாமல் பாரபட்சம், தடைகள் போன்றவை இல்லாமல் ஒருவருக்கொருவர், பண்டைய நாட்களைப்போல வணிகம் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் உலகமயமாக்கலை ஆதரிக்கிறேன் என்று முன்பே விளக்கமாக கூறியுள்ளேன். இந்த சுட்டியில் - அக்டோபர் 3 ந் தேதி, 2003 - பதிவில் உள்ளது.

இதன் நடுவில் நேற்று Globalization And its Discontents என்ற புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். 2001ம் ஆண்டு பொருளாதாரத்திற்கு நோபல் விருது வாங்கிய ஜோஸப் ஸ்டிகிளிட்ஸ் - Joseph E Stiglitz - எழுதியது. உலக மயமாக்கலின் நன்மைகள் பரவலாக ஏழைகளை சென்றடையவில்லை என்ற ரீதியில் எழுதியிருந்தார்.

இபப்டி பலவிதங்களிலும் இன்னும் விவாதங்கள் தொடரும் நிலையில் நேற்று வந்த செய்தி ஒன்று என்னைக் கவலைக்குள்ளாக்கியது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெசவு வகைகள் சிலவற்றுக்கு அமெரிக்கா கோட்டாக் கட்டுப்பாடு வைக்கப்போகிறது, என்ற செய்தி. சீன இறக்குமதிகள் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பிரச்சனையாகிவிட்டதால். ( நமக்குத் தெரிந்த விஷயமாயிற்றே?)

ஹிந்துவின் அமெரிக்க நிருபர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி விவரமாக எழுதியிருந்தார். எகனாமிக் டைம்சில் ஏஜன்ஸி செய்தி.
உலக வர்த்தக அமைப்பின் விதிகள்படி, நெசவு - Textile - கோட்டா முறை கடந்த ஜனவரி 1 ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. உறுப்பு நாடான அமெரிக்கா இப்போது எப்படி திடீரென்று இபப்டி ஒரு தடை / கட்டுப்பாடு, சக உறுப்பினர் நாட்டுக்கு விதிக்க முடியும்? அப்பட்டமாக விதிகளை மீறலாமா? அது
அழுகுணி ஆட்டம் இல்லையோ என்று கேள்விகள் என்னுள்.

என்ன ஆயிற்று என்றால், ஜனவரி 1 ந்தேதி, கோட்டா தடைகள் நீங்கியவுடன் சீனாவிலிருந்து அமெரிக்காவில் எக்கச்சக்கமாக இறக்குமதி ஆயிற்றாம். மலிவாக வந்து குவிந்ததில் உள்ளூர் சரக்கிற்கு வாங்குவார் இல்லாமல் போய், உள்ளூர் தயாரிப்பாளர்கள் அரசிடம் முறையிட்டுள்ளனர். Committee for the Implementation of Textile Agreement என்கிற அரசு சார்ந்த அமைப்பு இந்தக் கட்டுபாட்டை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. மூன்று வருடங்கள் முன்பு சீனா, உலக வர்த்தக அமைப்பில் சேருவதற்கு முன்பு அமெரிக்கா - சீனாவிடையே 1997ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டதாம். அந்த இரு நாட்டு உடன்படிக்கையின்படி, 2008 வரையில் சீனாவிலிருந்து அமெரிக்காவினுள் இறக்குமதியாகும் நெசவு வகைகளின் எண்ணிக்கை திடீரென்று அளவுக்கு அதிகமாக, உள்ளூர் தொழிலுக்கு பாதகம் ஏற்படும் வகையில் குவியுமேயானால், அதை மட்டுப்படுத்தி உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சம தளம் ( level playing field) ஏற்படுத்த அமெரிக்கா கோட்டா முறையைக் கொண்டுவரலாமாம். உலக அமைப்பில் நுழைவதற்கு முன் ஏற்பட்ட Bilateral உடன்பாடு ஒன்று உறுப்பினர்களை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தும் என்பது எனக்கும் புரியவில்லை.

இதை அப்படியே சீனா நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. உலக அமைப்பின் Dispute settlement மன்றத்தில் முறையிடப்போகிறது. முடிவு எப்படி போகும் என்று பார்க்க வேண்டும். உலக அமைப்பின் பற்களுக்கு சக்தி உண்டா இல்லையா என்பதை உணருவதற்கு இந்த வழக்கு ஒரு உரை கல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நிலையில் மற்ற உறுப்பினர் நாடுகள் இதை வெறும் அமெரிக்கா - சீனா தகராறு என்று மட்டுமே தள்ளி நின்று வேடிக்கை பார்க்குமா அல்லது உலக அமைப்பின் விதிகள் சுற்றி வளைத்து மீறப்படுகின்றன என்று எதிர்ப்பு குரல் கொடுப்பார்களா? மூன்று வருடம் முன்பு தோஹா மாநாட்டிலும் சரி, கடந்த கன்கூன் மாநாட்டிலும் சரி; வளரும் நாடுகள் ஒன்றாக சேர்ந்து இருந்தது வளர்ந்த நாடுகள் தங்களுக்கு சாதகமாகவே முடிவெடுக்கும் நிலையை தடுக்கும் ஒரு பெரும் வலிமையாக இருந்தது. இனியும் தொடர்ந்து அப்படியே பாரபட்சம் இல்லாத நேர்மையான உலக வணிகம் - உலக நாடுகள் - சம தள அரங்கில் விளையாடும் சூழ்நிலை உருவாகும்படி விழிப்போடு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

பிகு: - சீன இறக்குமதிக்கு கோட்டா, என்றால் இதில் லாபம் இந்தியாவிற்கே என்ற இன்னொரு செய்தியையும் பார்த்தேன். இந்தக் குளிர் காய்தல் மனோபாவம் எனக்கு உகந்ததல்ல. இன்று சீனா என்றால் நாளை இந்தியா என்ற நிலையில், கிடைத்த வரையில் லாபம் என்றா பார்ப்பார்கள்? பரந்த அளவில் விதி முறைகள் அனுசரிக்கப்டுகிறதா என்றல்லவா பார்க்க வேண்டும்?

பி. கு. 2. இதன் நடுவில், ஹிந்துவில் தான் எழுதும் பத்தியில்..... மன்னிக்கவும் :-) - நியூயார்க் டைம்சில் தான் எழுதும் பத்தியில் Thomas Friedman தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா, சீனா பிலிப்பைன்ஸ், போன்ற நாடுகள் முன்னேறுகையில் அமெரிக்கா கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது என்று எழுதியிருந்தார். இவர் கவலைப் படுவதிலும், தகவல் தொழில் நுட்பத்தில் நாம் தனிப்பெரும் சக்தி என்று நாம் சொல்லிக்கொள்வதிலும் அர்த்தமில்லயோ என்று தோன்றுகிறது. - இந்த வார எகானமிஸ்டில் வந்த ஒரு ஆய்வைப் பார்த்தால்.

E-business எனப்படும் மின் வணிகம் செய்வதற்கு இந்தப் பத்திரிகையின் ஆய்வுக்குழு, ( Economist Intelligence Unit) " e-readiness என்று ஒரு ஆய்வு நடத்துகிறது. இப்படி இணைய வழி வணிகம் நடத்த, e- readiness உள்ள 65 நாடுகளை இதுப் பட்டியலிட்டுள்ளது. இந்த ஆய்வின் படி அந்தந்த நாடுகளில் மக்களிடையே அகலப்பாட்டை வசதி, சாதாரண, மற்றும் செல் தொலைப்பேசி வசதி இவைப் பரவலாக உள்ளதா எனவும், அரசுக் கட்டுப்பாடுகள் எவ்வளவு தூரம் அனுசரணையக உள்ளன என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன்படி டென்மார்க் முதலிடம். அமெரிக்கா இரண்டாவது. மூன்று ஸ்வீடன். நான்கு ஸ்விட்சர்லாந்து.

சரி, எங்கே நம் ஆசிய தகவல் தொழில் நுட்ப புலி(ள்ளி)கள் ??

இந்தியா 49 வது இடம். சீனா 54 வது இடம் ( கொஞ்சம் சந்தோஷம் இங்கவாவது சீனாவைவிட சற்று முன்னாடி இருக்கோமே?) இந்தோனேஷியா கடைசி - 60 வது இடம். பிலிப்பைன்ஸ் காணவே காணோம்.

"தகவல் தொழில் நுட்ப சக்தியாக இருந்தாலும் இந்தியா, 49 வது இடத்தில்தான் இருக்கிறது" என்று இந்த ஆய்வுக் குறிப்பாக கூறியிருக்கிறது.

Wednesday, May 11, 2005

இரண்டு நாள் முன்பு வெங்கட் பதிவில் நடசத்திரங்கள், பரிந்துரைகள் என்று நிறைய கருத்து பரிமாற்றங்கள் இருந்தன. அப்போதான் எனக்குத் தோன்றியது காசி இவற்றையெல்லாம் வடிவமைக்கும்போது " தடுத்து நிறுத்துக" என்று ஒரு வட்டமும் வைச்சிருந்தாரே... அதை யாரும் உபயோகித்தே பார்க்கவில்லையே என்று தோன்றியது. நட்சத்திரங்களில் குத்து விடுகிறார்போல் இந்த குறுக்குக் கோடு போட்ட வட்டத்தில் குத்தினால் என்ன ஆகும் என்று பார்க்கவே இந்த சோதனை. சோதனை என்றால் அது நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் இல்லையா? அதான் இந்தப் பதிவு. :-)

Sunday, May 08, 2005

மூன்று மூத்த பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்கள், தங்கள் வயதை / முதுமைப் பற்றி, தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி நினைவு கூறும் சில கோணங்களை சமீபத்தில் அடுத்தடுத்து படிக்க நேர்ந்தது. மூவர் சொல்லியிருந்ததிலிருந்தும் வரிசையாகக் கீழே கொடுக்கிறேன்.

" என் நிலை இப்படியாகும் என்று நான் நினைத்ததேயில்லை. ஒரு முழுமையான வாழ்க்கை - பிரமாதமான வாழ்க்கை எனக்கு அமைந்துள்ளது. உலகின் பல இடங்களுக்கு இந்தக் கால்கள் என்னை அழைத்துச் சென்றுள்ளன. இந்தக் கால்கள்தாம் என்னை பிரசித்தி பெற்ற Great Wall of China மேல் அழைத்துச் சென்றன. ஆனால் இன்னிக்குப் பாருங்களேன், இப்படி உபயோகமில்லாமல் செயலிழந்து இருக்கின்றன."

*** *** ***

" என் அம்மாவின் நினைவு நாள் அன்று நாங்கள் ஒன்றாக சேர்ந்து நினைவு கூறுவோம். ஏன் இத்தனை வருடம் கழித்தும் இப்படி செய்கிறோம் என்று நான் சிந்திப்பதுண்டு. சொல்லப்போனால் என் பெற்றோர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என் வயதான இந்தக் காலத்தில் அவர்களுடைய நினைவுகள் கூட மங்கிக்கொண்டிருக்கின்றன - போட்டோக்களும் எப்போதாவது அவர்கள் எங்கள் கனவுகளில் வருவது மட்டுமே இப்போது அவர்களை நினைவூட்டுகின்றன. என் அப்பா இறந்தபோது இருந்த வயதைவிட எனக்கு இப்போது வயதாகிவிட்டது. சில சமயம் வேடிக்கையாக எனக்குத் தோன்றும் : இன்று என் முன் அவர்கள் வந்து நின்றால் பெற்றோரைவிட வயதான பிள்ளையை அவர்கள் சந்திக்க நேரும். இறந்தவர்களின் கடைசி வயதிலேயே அவர்கள் எங்கேனும் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால்....."

*** *** ***

" மே மாதம் மூன்றாம்தேதி எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்......."

*** *** ***

கடைசியில் சொல்லியிருக்கும் வரிகள் யாருடையது என்று ஊகித்திருப்பீர்கள். பலரைப் போல் சுஜாதாவின் சென்ற வாரக் கற்றதும் பெற்றதும் என்னையும் நெகிழ்த்தியது. மேலே கோடிக்காட்டியிருந்த வரிகளில் ஆரம்பித்து மெரினாவில் பார்த்த தாத்தாவுடன் உரையாடல், பிறகு "ஆபிச்சுவரி" பற்றி நகைச்சுவை கலந்த யதார்த்தம், என்று ஒவ்வொரு வரியையும் உணர்ந்து எழுதியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில் பத்திரிகைகளில் பத்திகள் எழுதுவது ஒரு சுகமான அவஸ்தை. சில சமயம் என்ன எழுதுவது என்று யோசித்து யோசித்து பத்திரிகைக்கு அனுப்ப வேண்டிய கெடு நெருக்கும்போதும் ஒரு ஐடியாவும் வராமல் அவஸ்தையாக இருக்கும். பத்திரிகை அலுவலகத்திலிருந்து நாசூக்காக ஒரு நினைவூட்டி வரும்போது, வாராவாரம் / மாதாமாதம், இந்த பிரசவ அவஸ்தை வேண்டாம்; இதோடு பத்தியை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற வரையில் யோசனை போகும். இந்த சமயத்தில் திடீரென்று எங்கிருந்தோ ஐடியா வந்து ஹலோ சொல்லும். அதோடில்லை; அழகாக வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கொட்டிவிட்டு போகும். சில சமயம் பல நாட்களாக மனசுக்குள் வைத்து ரிகர்ஸல் செய்து திட்டம் போட்டு வடித்த கட்டுரையை விட இந்த திடீர் ஐடியாக்கள் மிக நன்றாக, இயல்பாக அமைந்து போகும். அதுபோல், சுஜாதா இந்தக் கட்டுரையை ரொம்ப நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து எழுதினாரா அல்லது நான் சொன்னதுபோல் எதேச்சையாக, மனசில் ஏதோ தோன்றி இப்படி எழுதினாரா என்று தெரியாது. ஆனால் படிக்கும்போது மனசில் எங்கேயோ ஒரு இழையை முடுக்கிவிட்டது என்னவோ நிஜம். கடந்த பல வருடங்களாகப் புனைகதைகள் படிப்பதில் என் நாட்டம் குறைந்துவிட்டதால், சுஜாதாவின் சமீபத்து கதைகள் என் கவனத்தில் வரவில்லை. ஆனால் அவரது "கற்றதும் பெற்றதும்" முடிந்தவரை படித்துவிடுகிறேன்.

மற்ற இரண்டு பேரில், சீன சுவரைப் பற்றி பேசியவர் கார்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண். சமீபத்தில் அவருக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்த சமயத்தில் ஆங்காங்கே அவரது பேட்டிகள் நிறைய கண்ணில் பட்டது. அதில் ஒன்றில் அவரது உடல் நிலைபற்றி - ஒரு stroke ல் இடது பக்கம் செயலிழந்துள்ள - சிகிச்சையினால் ஓரளவே குணப்படுத்த முடிந்த - அவரது காலைச் சுட்டிக் காட்டி ) பேச்சு வாக்கில் குறிப்பிட்டுள்ளார். இன்றும் இவர் தொடர்ந்து திருவாளர் பொதுஜனத்தை நம்மிடையே மௌனமாக உலாவ விட்டுக்கொண்டிருக்கிறார். சில சமயம் என்னுள் தோன்றும் எப்போதாவது திருவாளர் பொதுஜனம் வாயைத் திறப்பாரா என்று. மேலே நான் குறிப்பிட்டிருந்த பேட்டியில் அவர் இவ்வளவு காலம் தொடர்ந்து இந்தத் துறையில் வெற்றிகரமாக இருப்பதற்கு நம் அரசியல்வாதிகளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் லாலு பிரசாத் கார்ட்டூன் முகத்திற்காகவே பிறந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். ஒரு முறை மொரார்ஜி தேசாய் கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மணை எப்படி ஒரு வழிக்கு கொண்டுவருவது என்பதற்காகவே ஒரு காபினெட் மீட்டிங் போட்டாராம். முன்பு எப்போதோ படித்துள்ளேன். லக்ஷ்மணுக்கு காக்கைகள் மிகவும் பிடிக்கும். பல கார்ட்டூன்களில் பொதுஜனம் போல் எங்காவது ஒரு காக்கையும் உட்கார்ந்திருக்கும்.

ஆர்.கே லக்ஷ்மண், தினமும் தன் கார்ட்டூன்கள் மூலம் என் பல காலைப் பொழுதுகளை கலகலவென்று ஆக்கியுள்ளார் - ஒரு சில கீற்றுகளில், கோடுகளில், இந்தியாவின் நிதர்சனத்தை பளீரென்று வெளிச்சம் போட்டு காட்டி; அதையும் யாரையும் நோகடிக்காமல்; அதேசமயம் உண்மை ஆழமாக மனதில் படும்படி; எளிமையாக சொல்லியிருப்பது போல் இருந்தாலும் நினைத்து நினைத்து நாள் முழுதும் ரசித்து சிரிக்கும்படி.....போரிபந்தர் கிழவி (Old lady of Boribunder) என்று சொல்லப்படும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவர் என்று நான் நினைப்பதுண்டு.

அடுத்து, பெற்றோரை நினைவு கூர்ந்தவர் எழுத்தாளர் /பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங். டில்லியில் இருந்தபோது எல்லாப் பத்திரிகைகள், மற்றும் பேப்பர்களிலிருந்தும் இவர் எட்டிப் பார்ப்பார். நான் சென்னை வந்தபிறகு அவர் எழுதும் பத்திரிகைகள் நான் அதிகம் படிக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. புத்தகக் கடைகளில் அட்டைகளில் பார்ப்பதோடு சரி. எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கைவிட, பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங்கிற்கு என் ஓட்டு அதிகம். இவரது கட்டுரைகள் மற்றும் பத்திகள் - இப்போதெல்லாம் அவ்வப்போது பயணங்களில், பெங்களூரின் டெக்கான் ஹெரால்ட், டில்லியின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்றவை கண்களில் படும்போது - நான் ரசித்து படிப்பவை. இந்தப் பதிவை எழுதத் தூண்டியதும் நேற்று அப்படி ஒரு டெக்கான் ஹெரால்ட் கையில் கிடைத்து, இந்தப் பத்திரிகையில் வந்துள்ள இவருடைய பத்தியை படிக்க நேர்ந்ததுதான்.

விவரம் தெரிந்து பத்திரிகைகள், செய்தித்தாள், என்று படிக்கும் காலத்திலிருந்து மூவரின் படைப்புகளையும் ரசித்து வந்துள்ளேன். மூவருமே அவரவர் துறையில் முன்னோடிகள். மூவருமே 50 வருடங்களுக்கு மேலாக ஒரு அசுர வேகத்தில் prolific ஆக (மானாவாரியாக?) படைத்துக் கொண்டிருப்பவர்கள். மூவரின் படைப்புகளும் பல சமயங்களில் என்னை அசத்தியுள்ளன - அசத்திக்கொண்டிருக்கின்றன.

சரி இவர்கள் இப்போது திடீரென்று ஒன்றாக ஏன் என் Spotlight ல் வந்தார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். இவர்களின் கருத்துக்கள் கிட்டதட்ட ஒரே சமயத்தில் எதேச்சையாக நேர்ந்ததா? அல்லது எனக்கும் வயதாகிக்கொண்டு வருகிறதா ? எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்படி முதுமை பேசும் வாக்கியங்கள் பட்டும் என் கண்களில் படுகிறதோ?

தெரியவில்லை.

ஆனால், இதை எழுதி முடிக்கும்போது என்னுள் ஒரு அசரீரி : " வயதாகிவிட்டது. அதனால் இப்போதெல்லாம் நிறைய எழுதாமல் ரிடையராகிறேன் என்று அடிக்கடி சொல்கிறாயே...? இப்போது என்ன சொல்கிறாய்? "

நான் ஏன் வாயைத் திறக்கிறேன்? :-)

Friday, May 06, 2005

Back To The Future ?!

PSLV C-6 இரண்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏற்றியது பற்றி பெருமைப் படத்தெரியவில்லையே நமக்கு என்று அல்வாசிட்டி தன் பதிவில் வருத்தப்பட்டிருந்தார். ரொம்ப சரி. நானுமே பத்ரியின் பதிவில் போகிற போக்கில் குறிப்பிட்டிருந்தேனே தவிர, பெரிதாக இந்த விஷயத்தைத் தொடவில்லை. ஒரு வேளை ராக்கெட் விடுவது நமக்கு பஸ் விடுவது மாதிரி பழகிவிட்டதோ என்னவோ?

இது ஒருபக்கம் இருக்கட்டும். இன்று படித்த செய்தி ஒன்று மூளைக்குள் குடை குடையென்று குடைகிறது. ஸ்பீல்பெர்க் சமாசாரம். Back to the Future என்ற தலைப்பிட்டு வந்த இந்த செய்தியின்படி அமெரிக்காவில் MIT யில் படிக்கும் அமல் துரை என்பவர் பாஸ்டனில் ஒரு வினோத கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். உலகிலேயே முதல் முறையாக Time Traveller மாநாடு ஒன்றை இவர் நடத்துகிறார். எதிர்காலத்தில் இருப்பவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளாராம். வரும் சனிக்கிழமையன்று - அதாவது நாளைக்கு - MIT வளாகத்தில் இரவு 8 மணிக்கு இந்த எதிர்கால மனிதர்களை வந்து கூடும்படி இவரது அழைப்பு தெரிவிக்கிறது.

சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. இப்படியும் நடக்குமா? இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் என்றாவது ? இதன் சாத்தியக்கூறுகள் என்ன? இது ஏதோ இயற்பியல் சமாசாரம் என்றும் கூறுகிறார்கள். விஷயம் தெரிந்தவர்கள் யாராவது தயவுசெய்து விளக்க முடியுமா?

எப்போதோ Chariots of the Gods புத்தகத்தைப் படித்துவிட்டு இப்படிதான் சாலையில் இருக்கும் பிள்ளையார்களையெல்லாம் பார்த்து, வேறு கிரகத்திலிருந்து / எதிர்காலத்திலிருந்து வந்தவரோ என்று பார்க்க ஆரம்பித்தேன். பிறகு Terminator, Back To the Future போன்ற படங்களில் இந்த Time Travel பற்றி பார்த்து கொஞ்சமாக குழம்பினேன்.

இப்போது இது. சுத்தமாக குழப்பம்.

Thursday, May 05, 2005

தினமும் படிப்பதிலும், பார்ப்பதிலும், கேள்விப்படுவதிலும் ஏதாவது மனதில் கருத்து தோன்றிக்கொண்டே இருக்கும் இல்லையா? பல சமயங்களில் எல்லாவற்றையும் எழுத நேரம் இருக்காது. ( சோம்பேறித்தனம் வேறு விஷயம்) ஆனால் இன்று இந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் இதைக் கட்டாயம் பதிய வேண்டும் என்று உடனே உட்கார்ந்துவிட்டேன். "அலைகளின்" Cannes Golden Lion விருது என்று அவ்வப்போது ஏதாவது விளம்பரத்தை சிலாகித்து சொல்வேன் இல்லையா?

என் இந்த வாரத்து தேர்வு இது. ஆனால் விளம்பரத்தின் சிறப்புக்காகவோ விளம்பர உத்திக்காகவோ இல்லை. ஆனால் அது முன்மொழியும் அந்த சிறப்பான மனித நேய யோசனைக்காக. இங்கே மனிதாபிமான என்ற வார்த்தையைத் தவிர்த்துள்ளேன். ஏனென்றால் உடல் ஊனமுற்றோர்களுக்காக உதவி செய்வது என்பது சில சமயம் "பரிதாபப்பட்டு செய்வது போல இருக்கும். அது அவர்கள் தன்மானத்தை பாதிக்கலாம். ஆனால் அவர்களின் திறமையை அங்கீகரித்து, அவர்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் வேலை தருவது என்பது இயற்கையால் பாதிக்கபப்ட்டவர்கள் மனம் நோகாது தன் சொந்தக் கால்களில் நின்று மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யும்தொரு நல்ல யோசனை. மனிதர்களை அவர்கள் திறமைக்காக மதிக்கும் சிறப்பான யோசனை. இந்தியாவில் பல நிறுவனங்கள் இன்று இப்படி உடல் பலவீனத்தைப் பெரிது படுத்தாமல் திறமைக்காக வேலை கொடுக்கின்றன. Gail அதில் ஒன்று. இந்த விளம்பரத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரி தன் சக அதிகாரியுடன் உரையாடுவதாக காண்பிக்கிறது. ஒருவர் physically challenged என்று பின்குறிப்பு குறிப்பிடுகிறது. இப்படிபட்ட நேர்மறையான முன் உதாரணங்கள், உடல் பாதிப்புகள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு தடையே அல்ல என்ற தன்னம்பிக்கையை மற்றவர்களிடமும் பரப்பும்.

அதுசரி - இந்த வார்த்தைக்கு - physically challenged - தமிழில் என்ன சொல்லலாம்? உடல் ஊனமுற்றவர் என்ற வார்த்தையை உபயோகிக்க மனம் சங்கடப்படுகிறது.

ஆங்கிலத்தில் handicapped என்ற வார்த்தை இன்று உபயோகிக்கப்படுவதில்லை. இந்த handicap என்ற வார்த்தை எப்படி வந்ததாம் தெரியுமா? 18ம் நூற்றாண்டில் குதிரை ரேஸில் குதிரையின் வேகத்தைத் தடுக்க வாயில் கனமாக ஏதாவது கட்டித் தொங்க விடுவார்களாம். பிறகு 19 ம் நூற்றாண்டில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் எதற்கும் ஒரு வாய் வார்த்தையாக இப்படி சொல்ல ஆரம்பித்தார்கள். வெப்ஸ்டர் அகராதியில் hand in cap என்று விளக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. இயலாதவர்கள் கையில் தொப்பியை வைத்து தானம் கேட்கும் நிலையையும் இந்த வார்த்தை குறிப்பிட்டு இருக்கலாம். எப்படியிருந்தாலும், ஆங்கிலத்தில் இன்று handicapped என்று சொல்வது அநாகரிகம்.

Hirday Posted by Hello

Tuesday, May 03, 2005

திசைகள் மே மாத இதழ் வெளிவந்துவிட்டது. இந்த முறை வித்தியாசமான சிறப்புப் பகுதி.

அன்புடன் பகுதியில் மாலன் இப்படி கூறுகிறார். "........அரசியல்வாதிகள் என்று வரலாறு அடையாளமிட்டிருப்பவர்களுக்குள் மென்மையான கவி மனம் ஒன்று இருந்ததுண்டு.அரசியலில் இருந்து உள்முகமாகப் பார்வையைத் திருப்பி இளைப்பாறும் நிழலாக அது அவர்களுக்கு உதவியதுண்டு...............அரசியல்வாதிகளை இலக்கியத்தின் பால் இழுத்து வருவது எது? அரசியலின் வெப்பமா?.............." என்று கூறி ஜவஹர்லால் நேரு, மாசேதுங், வாஜ்பாய் என்று பலரை உதாரணமாக காட்டியுள்ளார்.

இந்த சிறப்புப் பகுதி பற்றி என்னுடைய விமரிசனம் ஒன்றுமில்லை. சரித்திர நாயகர்களின் படைப்புகளைப் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? இருந்தாலும் கவிதை என்றாலே கிலோமீட்டர் கணக்கில் ஓடிவிடும் எனக்கு சில கவிதைகள் பிடித்து இருக்கிறது. மொழி பெயர்க்கப்படும் கவிதைகள் பற்றி பொதுவாகவே எனக்கு ஒரு சந்தேகம். கவிதையின் 50 சதவிகித அழகு வார்த்தைப் பிரயோகத்தில் உள்ளது. அப்படி பார்க்கும்போது கவிதைகளை மொழிபெயர்ப்பவர்களுக்கும் நிறையவே பாராட்டு போய்ச் சேர வேண்டும் இல்லையோ? அந்த விதத்தில் வ. கீதா, கண்ணன், ராஜதுரை மற்றும் யாரெல்லாம் மொழிபெயர்த்தார்களோ அவர்களுக்கும் பாராட்டுகள்.

இதுபோல் கிரிக்கெட்டிற்கும் எனக்கும் உள்ள "நெருக்கம்" பற்றியும் இங்கே வழக்கமாக "அலைகளில்" வந்து கால் நனைத்து போகிறவர்களுக்கு தெரியும். ஆனாலும் அப்துல் ஜப்பாரின் நகைச்சுவையான ஆரம்பம் இந்தக் கட்டுரையைப் படிக்க வைத்தது. அருமையான ரசிகர். அக்கு வேறு ஆணி வேறாக போட்டு அலசியிருக்கிறார்.

தவிர பத்மா அரவிந்தின் பயணக் கட்டுரை. அவருடைய வழக்கமான இயல்பான நடையில் நன்றாக இருக்கிறது. "அழகிய கட்டிடங்களும் மலைகளும் கண்ணைக்கவர.............." ...... "வந்தபோது பார்த்த அதே கட்டிடங்கள், அருவிகள் எதுவும் தெரியவில்லை........" என்ற இந்த இரு சொற்றொடர்களுக்கு நடுவே அவர் விவரித்துள்ள அனுபவம் கசப்பானது. இந்தியா திரும்பியபின், " எத்தனை மோசமானதாக இருந்தாலும் ஜனநாயகம் அருமையானது என்பது மட்டும் நிச்சயமாக புரிந்தது" என்று முடிக்கிறார். இது ரொம்ப நிஜம்.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட குறுந்தகடு பற்றிய தகவல்கள் - சர்ச்சைகள் உள்பட. - அடங்கிய கட்டுரை.

மற்றபடி வழக்கமான தொடர்கள் - சிங்கப்பூரில் ரெ. கார்திகேசுக்கான விழா, தமிழ்நாட்டுக்கலைக்கோயில்கள்.

அதுசரி; முகங்கள் என்று ஒரு பகுதி ஆரம்பித்துள்ளாரே மாலன். அது ஏதோ வம்பை விலைக்கு வாங்கியே ஆவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டாற்போல் இருக்கிறது. திசைகளில் இது தேவையா?