Saturday, December 11, 2004

மதம் பற்றி பள்ளி வகுப்புகளில் சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை!!

இதென்ன மறுபடி முரளி மனோகர் ஜோஷி சமாசாரம் போலிருக்கிறதே... அவர் மீண்டும் எப்போ கல்வி அமைச்சர் ஆனார் என்று ஆச்சரியப்படாதீர்கள். ஒரு மாறுதலுக்காக இந்த முறை இந்த மதம் v/s கல்வி விவாதம் அமெரிக்க நகரங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரணமாக இங்கே உள்ளூர் தினசரிகளில் 99.99 சதவிகிதம் உள்ளூர் சமாசாரங்கள்தாம் இடம் பெறும். வெளி நாடு என்றால் ஐரோப்பா கண்டம். மிஞ்சிப்போனால் சீனா / எப்பவாவது பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான். இந்தியா? மதக் கலவரங்கள் அல்லது பூகம்பம் நடக்கும்போது மட்டும்.

இங்கு வந்து பல நாட்கள் தினசரியைப் புரட்டுவது சில நிமிடங்களில் முடிந்து விடும். உள்ளூர் சமாசாரங்கள் எனக்கு சம்பந்தம் இல்லை என்று கொஞ்சம் தள்ளி நின்று விடுவேன். எந்த ஊர் / நாடு போனாலும் பொதுவாக அந்த இடங்களின் தினசரிகளில் இரண்டு பகுதிகளை மேய்வேன். ஒன்று, classified விளம்பரங்கள். மற்றொன்று வாசகர் கடிதங்கள். ஒரு சமூகத்தின் நடப்பு நிலையை அப்படியே பிரதிபலிப்பவை இவை என்பது என் எண்ணம். நாயைக் காணவில்லை என்ற விளம்பரமும் என் மகளை எங்காவது பார்த்தால் இந்த நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரமும் அருகருகே இருக்கும்போது - பலமுறை நாய் விளம்பரம் பெரிதாக அக்கறையோடு; மகள் விளம்பரம் சின்னதாக ஏனோதானோவென்று - நம் மனதில் ஏதோ இடிக்கும். பக்கம் பக்கமாக கலர் கலராக கார் விளம்பரங்கள். அடுத்து வீடு. அடுத்து நுகர்வோர் பொருள்கள் - மனாவாரியாக.
இதன் நடுவில் அசுவாரசியமாக தினசரியைப் புரட்டியவளை இந்த மதம் v/s கல்வி செய்தி எழுந்து உட்கார வைத்தது.

நடந்தது இதுதான். இங்கே, Cupertino என்ற பக்கத்து ஊரில் உள்ள ஒரு சரித்திர பள்ளி ஆசிரியர் - பெயர், வில்லியம்ஸ்- அமெரிக்க சரித்திரத்தில் கடவுளுக்கு முக்கிய பங்கு உண்டு; அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது என்ற ரீதியில் சரித்திர உதாரணங்களை எடுத்து காட்டி விளக்கியுள்ளார். இது இந்தப் பகுதியில் இருக்கும் பல கிறிஸ்துவர் அல்லாத பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தவுடன் அவர் வில்லியம்ஸிடம் கடவுள் பற்றி குறிப்பிடும் சரித்திர கோப்புகளைத் தன் பாடத்திட்டத்திலிருந்து எடுத்துவிடும்படி சொல்லியிருக்கிறார். வில்லியம்ஸ் உடனே கோர்ட்டுக்குப் போய்விட்டார். அரசியல் சாசனத்தைப் பற்றி முழுமையாக தன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாமல் பள்ளி நிர்வாகம் தன் அடிப்படை உரிமையைத் தடுப்பதாக அவரது வழக்கு.

இதுதான் விஷயம். வில்லியம்ஸ் செய்ததில் தவறேதும் இல்லை என்று ஒரு சாராரும், அதெப்படி அவர் வகுப்பில் கடவுள் நம்பிக்கையை புகுத்தலாம்? அவர் ஒரு கிறித்துவர்; அதனால் தன் கிறிஸ்துவ மதத்தைத் தன் மாணவர்களிடம் பரப்ப இப்படி ஒரு வழியைக் கையாளுகிரார்; இது கிறிச்துவர் அல்லாத மற்ற மதத்தவர்களை மிகவும் பாதிக்கிறது" என்று மற்றொரு சாராரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலெழுந்தவாரியாக கிடைத்த விவரங்களை வைத்துப் பார்த்தால் வில்லியம்ஸ் செய்ததில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை. அமெரிக்க சாசனத்தை உருவாக்கிய தலைவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அதை சரித்திர உண்மையாக சொல்வதில் தவறேதும் எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் அமெரிக்க சரித்திரத்தில் / அரசியலில் இந்தக் கடவுள் நம்பிக்கை ஆழமாகவே இருக்கிறது. இங்கே எல்லா வணிக இடங்களிலும் உபயோகிக்கப்படும் Quarter - கால் சென்ட் - நாணயத்தில், டாலர் நோட்டுகளில், ஜியார்ஜ் வாஷிங்டன் படம் போட்டு பக்கத்தில் "Liberty" என்ற சொல்லும், " In God we Trust" என்ற அவரது வாக்கியம் பொறித்துள்ளது. வில்லியம்ஸ், அமெரிக்க சரித்திரத்தை இப்படி விரிவாக விளக்குவதற்காக கடவுள் பற்றி பேசியிருக்கலாம்.

ஆனால் சில பெற்றோர்கள் சொல்வது போல் நிஜமாகவே தம் மாணவர்களின் மத நம்பிக்கையில் ஊடுருவும் வகையில் அவர் நடந்து கொண்டிருந்தால் அது attempting to influence / or propagating one religion - என்ற வகையில் கண்டிக்கத் தக்கதே. இது விஷ்யமாக பலர் எழுதியதில் Bill Evers ( இவர் Mercury News தினசரியில் எழுதியதைத் தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தால், 9.12.04.தேதியிட்ட செய்தித்தாளைப் பாருங்கள்.) என்ற Educationist சொல்வதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. இவர் சொல்வது போல், மதம் பற்றி வகுப்புகளில் பேசுவது வேறு. மதத்தைக் கல்வியில் புகுத்துவது வேறு.

முந்தையது அறிவு சார்ந்த விஷயதானம். மற்றது, மதப் பிரசாரம். இரண்டுக்குமுள்ள வேறுபாடு நமக்கு நன்றாகவே தெரியுமே? வில்லியம்ஸ் இதில் எதைச் செய்தார் அல்லது செய்ய முனைந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

மொத்தத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக இன்று அமெரிக்காவில் பல இடங்களில் எதிரொலிக்கிறது - தேசீய ரீதியில் தொலைக் காட்சியில் மற்றும் பல ஊடகங்களில்.


உங்கள் அபிப்பிராயம் என்ன?


No comments: