வலைப்பூவில் மாலன் எழுப்பிய கேள்விகளை இப்போது பார்க்கலாம் என்று நினைக்கிறேன்:
".....வலைப்பூ என்பது (personal) web log. ஒரு நபரின் நாட்குறிப்பின் பக்கங்களைப் போல. அதில் கவிதை இருக்கலாம். கவலை இருக்கலாம். ஒரு அனுபவம், வம்பளப்பு, கிசுகிசு, புலம்பல், ருத்ர தாண்டவம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். (நாம் எல்லா நாளும் ஒரே மனநிலையிலா இருக்கிறோம்?)ஆனால் எது இருந்தாலும் அதில் ஒரு அந்தரங்கத் தொனி, personal touch, இருக்க வேண்டும்."
ரொம்ப சரி. பின்னே பிரச்சனை எங்கே?
".... இப்படிதான் இருக்க வேண்டும்." என்று சொல்வதைத்தான் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வலைப்பூவில் நான் முதல் நாள் பதிவில் சொன்னதையேதான் மறுபடி வலியுறுத்த விரும்புகிறேன்.
" ஒரு வலைப்பூ எப்படி இருக்க வேண்டும், அதன் நியதிகள் நியமங்கள் என்ன அல்லது வலைப்பூக்களின் குணாதிசியங்கள் என்ன என்ற ஆராய்ச்சி அவசியமில்லை என்பது என் அபிப்பிராயம். வலைப்பூக்களின் சிறப்பே அவற்றின் சுதந்திரமும், Spontaneityயும் தான் என்பது என் கருத்து. இலக்கியம் போல இன்று வலைப்பூக்கள் ஒரு தனி மனிதரின் மன வெளிப்பாடாக உருவாகியிருக்கிறது." என்று கூறியுள்ளதை மீண்டும் இங்கு பதிக்கிறேன். அதே சமயம், எந்த ஒரு அவையிலும் பின்பற்ற வேண்டிய ஒரு அடிப்படை நாகரிகம் இருக்கிறது. இணையத்துக்கும் அது பொருந்தும். தனி மனிதர்களைத் தாக்குவதோ அல்லது வார்த்தை வன்முறைகளோ எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் இடம் பெறுவதைத் தவிர்க்கலாம். வலைப்பூக்கள் அந்தரங்கமானவைதான். என் குடிலில் எனக்கு தோன்றியதைப் பதிவது என் விருப்பம். ஆனால் ஒரு டைரியில் எழுதி என் பீரோவுக்குள் பூட்டி வைத்துக்கொண்டேன் என்றால் பிரச்சனையில்லை. எப்போது என் எண்ணங்களை வெளியே பிறர் பார்வைக்கு கொண்டு வருகிறோனோ அப்போது சில அடிபப்டை நாகரிகங்களை மனதில் கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
வலைப் பூவோ, வலைப்பதிவோ, வலைப் பக்கமோ, வலைத்தளமோ, இணையக் குழுக்களோ, எதுவாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதும் தன் கருத்துகக்ள் மற்றும் தன் எண்ணங்கள் பிறரை அடைய வேண்டும்; தான் பெற்ற அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் - it is basic urge of human beings to reach out and share.
ஒரு நிறுவனம் தனக்காக வலைத்தளம் ஆரம்பிக்கும்போது நிறுவனத்தைப் பற்றிய அறிமுகம், அதன் குறிகோள்கள், சரித்திரம், நோக்கங்கள் என்று பலவகை சமாசாரங்களைப் பதிந்து வைக்கும். வியாபாரம் விரிவுபடுத்த தொடர்புகள் சம்பந்தமான தகவல்களும் இருக்கும். பெரிய நிறுவனமாக இருந்தால் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள், வியாபார சம்பந்தம் உடையவர்கள் என்று தொடர்பு சுட்டிகளும், செய்திகளும் பக்கம் பக்கமாக இருக்கும்.
தனி மனிதர்கள் வலைப்பக்கம் / தளம் என்று பணம் கொடுத்து வைத்துக் கொள்கிறார்கள். பலருக்கு தங்கள் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்த இது ஒரு ஷோ கேஸ். சிலர் இதை வேறு விதங்களிலும் உபயோக்கிறார்கள் - உதாரணமாக தன் எண்ணங்களைப் பதிவு செய்ய. நான் ஒரு பெரிய நிறுவனத்தின் CEO என்றால் என் நிறுவன தளத்தில் ஒரு கடிதம் மூலம் என் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் வேறு சில தனிபட்ட எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த தளம் சரியாக இருக்காது என்று நினைத்தால் தனியாக எனக்கென்று ஒரு வலைப்பக்கம் / தளம் உருவாக்கி அதில் எனக்கு தோன்றியதைப் பதிவு செய்யலாம். அது அப்போது வலைப்பூ ஆகிறது. இந்த வலைப்பூவை ஒரு ஓசி இடத்தில் - blogspot போல - பதிகிறேனா அல்லது பணம் கொடுத்து எனக்கென்று ஒரு இடம் ஒதுக்கிக் கொள்கிறேனா என்பது வேறு விஷயம். என்னுடைய பிரதான தளத்திலிருந்து என் வலைப்பூ வேறுபட்டுள்ளது என்பதுதான் முக்கியம். இதைத்தான் மாலனும் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் நான் என் நிறுவன சம்பந்தமான விஷயங்களையும் வெளியிடலாம்; என் சொந்த விருப்பு வெறுப்புகளையும் மற்றும் கற்பனையையும் வெளியிடலாம். பரந்த இணையத்தில் இது என் மூலை. இதை என் விருப்பம்போல் போட்டோக்கள் போட்டோ, கார்டூன்கள் வரைந்தோ / கடன் வாங்கியோ அல்லது வேறு எப்படியோ அழகு படுத்துவதில் தவறென்ன? இவற்றையெல்லாம் செய்வதாலேயே என் வலைப்பூ ஒரு வலைத்தளமாகவோ, பக்கமாகவோ அல்லது ஒரு வலை இதழாகவோ மாறிவிடப்போவதில்லை. அப்படியே என் வலைப்பூவை நான் ஒரு வலை இதழ்போலவோ, வலைப்ப்பக்கம் போலவோ பாவிக்கிறேன் என்று வைத்துக் கொண்டாலும் அதில் என்ன தவறு? நான் முதலில் சொன்னதுபோல் இது என் மூலை. இதை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது என் முடிவல்லவா? இதில் ஏன் இலக்கணம் புகுத்த வேண்டும்?
அது என் சுதந்திரம். இதைத்தான் நான் வலியுறுத்துகிறேன். ஆனால் வலைப்பூக்களில் போட்டோக்கள் வெளியிடுவதை மாலன் ஆட்சேபிப்பதற்கு ஒரு காரணம் இருக்கலாம். சென்னை போன்ற இடங்களில் போட்டோக்கள் இறங்குவதற்கு வெகு நேரம் ஆகிறது. இது ஒரு பிரச்சனைதான். இதைத் தவிர்க்க பதிவாளர்கள் ஒரே பதிவில் நிறைய போட்டோக்கள் போடாமல் சாம்பிளுக்கு ஒன்று போட்டுவிட்டு மிச்சத்தை போட்டோக்களுக்கு என்றே தனியாக இருக்கும் பதிவுகளில் வெளியிடலாம். உதாரணமாக மதி செய்வதுபோல் fotolog.com உபயோகிக்கலாம். இதன் மூலம் வலைப்பூவில் உள்ள கட்டுரை இறங்கும் நேரத்தை போட்டோ முட்டுக் கட்டை போடுவதைத் தவிர்க்கலாம்.
வலைப்பூ ஆசிரியர்கள் வலைப்பூக்களை அலசுவதை விட்டுவிட்டு எதை எதையோ பேசுகிறார்கள் என்பது மாலனின் இன்னொரு குற்றச்சாட்டு. மதி வலைப்பூ ஆரம்பித்த போது வலைப்பூவின் ஒரு முக்கிய நோக்கம் மற்ற வலைப்பூக்களின் நிறை குறைகளை அலசுவது என்று குறிப்பிட்டிருந்தார். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இந்த அலசல் மட்டுமே செய்தால் மாணவர்கள் விடைத்தாளை அலசுவதுபோல் இருக்கும் என்பது என் அபிப்பிராயம். வலைப்பூக்களைப் பற்றியும் பொதுவான வேறு சில நாட்டு / உலக நடப்புகளையும் சேர்த்து அலசினால் சுவாரசியம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாலனின் கருத்துக்களை வெளியிட்டதும் இந்த நோக்கில்தான்.
இது போன்ற சமாசாரங்களைப் பகிர்ந்து கொள்ள தமிழ் வலைப்பதிவாளர்களின் யாஹ� குழுமம் இருந்தாலும் பத்ரி சொன்னதுபோல் ஒரு கூட்டு வலைப்பூ தேவை என்றே நினைக்கிறேன். இப்போது வலைப்பூக்களில் கருத்து பரிமாற்றத்திற்கு நிறைய இடமில்லை - "மறு மொழியில்" இரண்டு வரிக்கு மேல் பதிய முடிவதில்லை. ஆனால் ஒரு கூட்டு அமைப்பில் பலர் ஒரே சமயத்தில் தங்கள் பலவித சிந்தனைகளைப் பரிமாறிகொள்ள முடியும் - படித்தவற்றை எளிதாக ஒரு சுட்டி மூலம் லிங்க் கொடுத்து விடலாம். சொல்லப்போனால் வலைப்பூக்கள் இப்படிதான் ஆரம்பித்தன. படித்தவற்றையும், கண்களால் கண்டவற்றையும் பிறருக்கு சொல்ல சுட்டிகள் உப்யோகித்து தன் கருத்துக்களையும் பதியும் வழக்கம்.
மடலாற்குழுக்களைப் பற்றி மாலனின் கருத்துக்களில் எனக்கு ஆட்சேபணையில்லை. பெரிய கட்டுரையாக / கதையாக இருந்தால் வலைப்பூ ஆரம்பித்து சுட்டிகள் கொடுத்து விடலாமே? இந்தக் குழுக்களின் இலக்கணம் அல்லது வரை முறை அந்தந்த ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் என் வலைப்பூ நான் முடிவு செய்ய வேண்டிய விஷயம். வாசகர்களை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது என் தலைவலி. கற்றுக் கொள்வதும் பிழைகளைத் திருத்திக் கொள்வதும் / கொள்ளாததும் என் கையில்தான்.
மொத்தத்தில் வலைப்பக்கம் அல்லது தளம் என்பது ஏதோ தொழில் நுட்ப சமாசாரம் என்று ஒதுங்கியவர்கள் கூட இன்று வலைப்பூக்கள் என்று ஆரம்பித்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
பொதுவாக இலக்கியம் என்கிறோமே - இதில் இலக்கியம் முதலில் வந்ததா? அல்லது இலக்கணம் முதலில் வந்ததா? எனக்கு தெரியாது. ஆனால் என் ஊகம் - ஆதிகாலத்தில் மன வெளிப்பாடுகள் - expressions - முதலில் வெளி வந்திருக்க வேண்டும். திரும்பத் திரும்ப பாடப் பாட, சொல்ல சொல்ல, அதில் ஒரு முறை தோன்றியிருக்க வேண்டும். பின்னர் இது என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். இன்று வலைப்பூ அந்த ஆரம்ப நிலையில் இருக்கிறது. இலக்கணம் பின்னால் வரலாம் - வராமலும் இருக்கலாம். அதைக் காலம் முடிவு செய்யும்.
இப்போதுதான் துளிர்க்க ஆரம்பித்திருக்கும் இந்த இணைய சாதனத்தை இன்னும் சிறப்பாக நம்மவர்கள் பயன் படுத்த முடியும் என்றே நம்புகிறேன்.
Saturday, March 13, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment