Saturday, March 27, 2004

நம்ம ஊரில்மட்டும்தான் தேர்தலா? அமெரிக்காவிலும் இது தேர்தல் வருஷமாயிற்றே? அங்கே மறுபடி புஷ் வருகிறாரா இல்லை கெர்ரி வரப்போகிறாரா; இங்கே யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க இந்த வருஷம் சுவாரசியமாகதான் இருக்கப்போகிறது. இங்கே சென்னையில் அமெரிக்க தூதரகம் அவர்கள் தேர்தலை முன்னிட்டு அலசல்கள், விவாதங்கள் என்று ஒரு கூட்டத்தொடரை இந்த வாரத்தில் ஆரம்பித்துள்ளது.

முதல் கூட்டத்தில் சேஷன் ( இந்தியாவில் தேர்தல் என்ற உடனே அவர் ஞாபகம் வந்துவிட்டது போலும்) துவங்கிவைத்து பேசினார். நக்கல், கிண்டல் என்று வழக்கமான பேச்சு. அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு "தேர்தல்கள் இந்தியாவின் வெளி நாட்டு கொள்கையை எவ்விதம் பாதிக்கின்றன" என்பது.

" அவையோர் அவமதிப்பாக கருதவில்லையென்றால், இந்தத் தலைப்பில் நான் பேச வேண்டியது ஒரே வாக்கியத்தில் முடிந்து விடும்; தேர்தல்கள் இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை." என்று ஆரம்பித்தார். 700க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் இந்திய கட்சிகள் வெளிநாட்டு விவகாரங்களில் தேசீய உணர்வுடன் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன என்பது அவர் பேசியதின் சாராம்சம்.

ஆனால் பேச்சில் அவ்வப்போது இந்திய அமெரிக்க "சமீபத்திய" நட்பு பார்வையை சற்று அலசினார். அவருக்கு ஏற்றாற்போல் சமீபத்தில் Powell வேறு வந்து "Nato Alley" என்ற குட்டையைக் குழப்பிவிட்டுப் போய்விட்டார். நம்மவருக்கு பேச கேட்கவா வேண்டும்? அதேபோல் உலக வர்த்தக அரங்கில் அமெரிக்காவின் மேம்போக்கான கொள்கைகளை - கங்கூன் மாநாட்டில் விவசாய சலுகை போன்ற் விஷயங்களில் விட்டுகொடுக்காமல் பிடிவாதம் பிடித்தது, மற்றும் இந்தியாவைப் பாதிக்கும் வகையில் outsourcing தடுப்பு சட்டங்கள், இவற்றை கடுமையாக சாடினார்.

ஆனால் அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஹெய்ன்ஸ் விடுவாரா? சில முக்கியமான விவகாரங்களில் - அதாவது விவசாயம் போன்றவை - இந்தியா தாரளமயமாக்குதலையும் உலக மயமாக்குவதையும் விரைந்து தழுவ வேண்டும் என்று சொல்லிவிட்டு அதையும் நம் நலனுக்குதான் சொல்வதாகவும் கூறினார். " உஅலக்ச் சந்தையைத் தழுவ வேண்டும் என்று உங்கள் நலனுக்காதான் வலியுறுத்துகிறேன். எங்கள் நலனுக்காக இல்லை. In your interest only; not in our interest".

அவர் இதைக் கூறியபோது என்னுள் ஒரு குரல் : " அட. ரொம்ப சரியாச் சொன்னீங்க ஹெய்ன்ஸ். இதையேதான் நாங்களும் outsourcing விவகாரத்தில் வலியுறுத்துகிறோம். உங்கள் வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி விடுங்கள். உங்களுக்கும் கணிசமாக செலவு குறையும். உங்கள் பொருளாதாரம் மேம்படும். எங்கள் குழந்தைகளுக்கும் இங்கே வேலை கிடைக்கும். பின்ன என்ன இத்தனை சுலபமான 'win-win' தீர்வை விட்டுவிட்டு ஏதோ வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்று அடம் பிடிக்கின்றீர்களே...

ஆனால் சேஷன் சொன்ன ஒரு கார்டூனை வெகுவாக ரசித்தேன். ஒரு அமெரிக்க சிறுமி தன் அப்பாவிடம் சொல்ல்கிறாள்.

அப்பா: ஏன் அம்மா? ஹோம் வொர்க் செய்யவில்லையா?

சிறுமி: என் வேலையை இந்தியாவுக்கு outsource செய்துவிட்டேன் அப்பா!!

No comments: