Thursday, May 05, 2005

தினமும் படிப்பதிலும், பார்ப்பதிலும், கேள்விப்படுவதிலும் ஏதாவது மனதில் கருத்து தோன்றிக்கொண்டே இருக்கும் இல்லையா? பல சமயங்களில் எல்லாவற்றையும் எழுத நேரம் இருக்காது. ( சோம்பேறித்தனம் வேறு விஷயம்) ஆனால் இன்று இந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் இதைக் கட்டாயம் பதிய வேண்டும் என்று உடனே உட்கார்ந்துவிட்டேன். "அலைகளின்" Cannes Golden Lion விருது என்று அவ்வப்போது ஏதாவது விளம்பரத்தை சிலாகித்து சொல்வேன் இல்லையா?

என் இந்த வாரத்து தேர்வு இது. ஆனால் விளம்பரத்தின் சிறப்புக்காகவோ விளம்பர உத்திக்காகவோ இல்லை. ஆனால் அது முன்மொழியும் அந்த சிறப்பான மனித நேய யோசனைக்காக. இங்கே மனிதாபிமான என்ற வார்த்தையைத் தவிர்த்துள்ளேன். ஏனென்றால் உடல் ஊனமுற்றோர்களுக்காக உதவி செய்வது என்பது சில சமயம் "பரிதாபப்பட்டு செய்வது போல இருக்கும். அது அவர்கள் தன்மானத்தை பாதிக்கலாம். ஆனால் அவர்களின் திறமையை அங்கீகரித்து, அவர்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் வேலை தருவது என்பது இயற்கையால் பாதிக்கபப்ட்டவர்கள் மனம் நோகாது தன் சொந்தக் கால்களில் நின்று மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யும்தொரு நல்ல யோசனை. மனிதர்களை அவர்கள் திறமைக்காக மதிக்கும் சிறப்பான யோசனை. இந்தியாவில் பல நிறுவனங்கள் இன்று இப்படி உடல் பலவீனத்தைப் பெரிது படுத்தாமல் திறமைக்காக வேலை கொடுக்கின்றன. Gail அதில் ஒன்று. இந்த விளம்பரத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு உயர் அதிகாரி தன் சக அதிகாரியுடன் உரையாடுவதாக காண்பிக்கிறது. ஒருவர் physically challenged என்று பின்குறிப்பு குறிப்பிடுகிறது. இப்படிபட்ட நேர்மறையான முன் உதாரணங்கள், உடல் பாதிப்புகள் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு தடையே அல்ல என்ற தன்னம்பிக்கையை மற்றவர்களிடமும் பரப்பும்.

அதுசரி - இந்த வார்த்தைக்கு - physically challenged - தமிழில் என்ன சொல்லலாம்? உடல் ஊனமுற்றவர் என்ற வார்த்தையை உபயோகிக்க மனம் சங்கடப்படுகிறது.

ஆங்கிலத்தில் handicapped என்ற வார்த்தை இன்று உபயோகிக்கப்படுவதில்லை. இந்த handicap என்ற வார்த்தை எப்படி வந்ததாம் தெரியுமா? 18ம் நூற்றாண்டில் குதிரை ரேஸில் குதிரையின் வேகத்தைத் தடுக்க வாயில் கனமாக ஏதாவது கட்டித் தொங்க விடுவார்களாம். பிறகு 19 ம் நூற்றாண்டில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் எதற்கும் ஒரு வாய் வார்த்தையாக இப்படி சொல்ல ஆரம்பித்தார்கள். வெப்ஸ்டர் அகராதியில் hand in cap என்று விளக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. இயலாதவர்கள் கையில் தொப்பியை வைத்து தானம் கேட்கும் நிலையையும் இந்த வார்த்தை குறிப்பிட்டு இருக்கலாம். எப்படியிருந்தாலும், ஆங்கிலத்தில் இன்று handicapped என்று சொல்வது அநாகரிகம்.

Hirday Posted by Hello

No comments: