Wednesday, December 01, 2004

இங்கு வந்து இன்றுடன் இரண்டு வாரம் ஆகிறது. இந்த இடத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். சினிமாவில் / டிவியில் பார்த்துள்ளேன். அங்கு போய்தான் பாருங்களேன் -பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். சரி அப்படி என்னதான் இருக்கு இந்த இடத்தில் என்று ஒரு வழியாக வந்தும்விட்டேன். சரி என் முதல் அபிப்பிராயம் என்ன?
பலமுறை கேள்விபட்டும் பிம்பங்களைப் பார்த்தும் இருந்ததால் பிரமிப்பு இருக்கவில்லை. விமான நிலையத்தில் இறங்கியதும் முதலில் உறைத்தது சுங்கம் மற்றும் immigration வரிசைதான். அம்மாடி.. மிக நீளமாக இருந்த வரிசை இன்று முடிந்தால் போல்தான் என்று தோன்றியது. ஆனாலும், சரிதான் எவ்வளவு நீளமாக இருந்தால் என்ன? அதுதான் திறமையான நிர்வாகம் எங்கு திரும்பினாலும் என்று சொல்கிறார்களே, அதனால் வரிசை வேகமாக நகர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ம்..ஹ¤ம். சரியாக ஒரு மணி நேரம் ஆகியது. அதுவும் சொல்லிவைத்தாற்போல் நாங்கள் நின்றிருந்த வரிசையில் இருந்த அதிகாரி ஏனோ ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக தோன்றியது. இந்திய சுங்க / immigration பற்றி இனி அலுத்துக் கொள்ளக்கூடாது என்று முதல் அபிப்பிராயம் உதயம் ஆனது. ( அதற்கேற்றாற் போல் இங்கே உள்ளூர் செய்தித் தாளில் இன்று ஒரு உள்ளூர் வாசகர் கடிதம் எழுதியிருந்தார். இந்திய சுங்க /immigration சோதனைகள் எவ்வளவு திறமையாக /வேகமாக செயல்படுகின்றன என்று. எனக்கென்று இதெல்லாம் கண்களில் படுகிறதே?
சரி இப்போ புரிந்திருக்குமே எங்கே வந்து இறங்கியுள்ளேன் என்று? ஆமாம். அமெரிக்காவேதான். விஸா கிடைத்த பிறகு பயணத் திட்டம் விரிவாகப் போடலாம் என்று வெறுமே டிக்கெட் மட்டும் எங்கள் டிராவல் ஏஜண்டிடம் பதிவு செய்திருந்தோம். விஸா என்னவென்றால் கிடைத்தே விட்டது. அப்புறம் ஒரு வாரத்திற்குள் பயணம் - எல்லாம் மள மளவென்று ஆகிவிட்டது. ( அப்பாடி இங்கே அலைகளில் எட்டிப் பார்க்க முடியாதத்தற்கு விளக்கம் கொடுத்தாகிவிட்டது. எதை வைத்து விஸா கொடுக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. போன வருடம் கிடைக்கவில்லை. இந்தவருடம் பேட்டி எடுத்த அதிகாரி நல்ல மூடில் இருந்தார் என்று வைத்துக் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் எங்கள் இரண்டு மகன்களும் இங்கே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தோம். இருவரும் "பச்சைக் கார்டு" வைத்திருக்கிறார்களா என்று அந்த அமெரிக்க அதிகாரி, தூதரகத்தில் கொஞ்சம் கடுகடுவென்று கேட்ட விதத்தைப் பார்த்தால் சரி, நமக்கு இவர் கொடுக்கப்போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை - பெய்தால் ஒரே மழை என்ற ரீதியில் 10 வருடம் என்று போட்டுக் கொடுத்துவிட்டார். அதேபோல் இங்கே இறங்கியதும் immigration அதிகாரி "எவ்வளவு நாள் தங்கப் போகிறீர்கள்? திரும்பிப் போகும் டிக்கெட்டைக் காண்பியுங்கள்" என்றார். சரி, எண்ணி 6 வாரம் என்று முத்திரைக் குத்தப் போகிறார் என்று நினைத்திருந்தேன். பார்த்தால், 6 மாதம் என்று குத்தியிருக்கிறார். சரிதான் இனி அடிக்கடி அமெரிக்கா வர வேண்டியதுதான். ( டிக்கெட் மட்டும் மரத்தில் எங்காவது காய்க்கிறதா என்று பார்க்கிறேன் !)
அமெரிக்கா பதிவுகள் இன்னும் ஒரு மாதம் தொடரும் - டிசம்பர் 29 வரை. இங்கே நான் இருபது சூரிய நகரம் - Sunnyvale / Sanfransico. அதுசரி... இந்தப் பக்கம் இருக்கும் வலைப் பதிவாளர்கள் யார் யாரோ??!! சற்று தெரியப் படுத்தினால் சந்திக்க முடியுமா என்று பார்க்கலாம்.

3 comments:

Anonymous said...

ரொம்ப குறைவான நாட்களே இருக்க வந்துள்ளீர்கள்.தென்மேற்கு பக்கமாய் வருவதற்கு திட்டமிருந்தால் தெரியப்படுத்துங்கள்,எங்கள் நியு மெக்சிக்கொவுக்கு வந்து போகலாம் நீங்கள்.

வாசன் = tamil_amigo அட் யாஹூடாட் காம்

PKS said...

Hi Aruna, Welcome to US of A. Your are most welcome to North East (New York and New Jersey). Please prepare to be our guest when you visit this side. If you have plans, kindly write to me at pksivakumar at yahoo.com. Have a nice time. Thanks and regards, PK Sivakumar.

Aruna Srinivasan said...

Vaasan and PKS, thanks for your warm welcome. sure, I'll let you know when I visit New York.