Saturday, March 20, 2004

டிவியில் விசுவின் அரட்டை அரங்கம் ஓடிக்கொண்டிருந்தது. மாமியார் சுவாரசியமாக அதில் ஆழ்ந்திருந்தார். துணி காயப்போட்டுகொண்டிருந்த அந்தப் பெண் சட்டென்று ஒரு துணியைக் கீழே போட்டார். பின்னர் மாமியாரிடம் திரும்பி, சட்டை கீழே விழுந்துவிட்டது; போய் எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு கீழே போனார். கீழே போனவுடன் பக்கத்திலிருந்த ஒரு போன் பூத்தில் சென்று குடும்ப நண்பர் ஒருவருக்கு மட மடவென்று போன் போட்டார். "இனிமேலும் என்னால் தாங்க முடியாது. நல்ல வேளையாக என் பாஸ்போர்ட் வெளியில்தான் இருக்கிறது. என்னிடம் பணம் இல்லை. நான் வீட்டில் அணியும் இந்த உடையுடன் இப்படியே உங்கள் வீட்டுக்கு இப்போது நான் வந்துவிடுகிறேன். எப்படியாவது என்னை இந்தியாவுக்கு என் பெற்றோரிடம் அனுப்பிவிடுகிறீர்களா?" என்று கேட்டார். மறுமுனையில் ஆதரவாக பதில் வந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தன் பெற்றோரிடம் அவர் இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

என் தூரத்து உறவினர் பெண் ஒருவர் சமீபத்தில் துபாயிலிருந்து திரும்பி வந்திருக்கிறார் - ஒரேயடியாக தன் துபாய் வாழ்க்கைக்கும் மண வாழ்க்கைக்கும் முழுக்குப் போட்டுவிட்டு. இரண்டு வருடம் முன்பு நடந்த அவர் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். எல்லோரும் போல் அட்சதை போட்டு வாழ்த்தும்போது அவர் வாழ்க்கை இப்படி ஆகும் என்று யாருக்குத் தெரியும்? என்ன கதை என்கிறீர்களா? எல்லாம் வழக்கமான அதே கதைதான்; மனைவியைக் கொடுமைப்படுத்தும் கணவன். காரணம் அவள் அழகாக இல்லையாம்; இதென்ன கூத்து என்று தோன்றவில்லை?

உடலால், வார்த்தையால் பல கொடுமைகளுக்கு ஆளான கதை வேறொருவர் மூலம்தான் எனக்கு தெரிய வந்தது. என்னிடம் அந்தக் கதையைச் சொன்னவர் அந்தப் பெண்ணுக்கு மிக நெருங்கிய உறவினர் என்பதால் அவர் சொன்ன செய்தி உண்மையாகதான் இருக்க வேண்டும். அப்படியே மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக இருந்தாலும், அதில் ஓரளவேனும் உண்மை இருக்க வேண்டும். அந்த ஓரளவு உண்மையான சமாசாரம் கூட என்னால் திரும்ப சொல்லக் கூசும் வண்ணம் கொடுமையானது.

இந்த நிலையில் அந்தப் பெண் எப்படி 2 வருடம் பொறுத்துக்கொண்டு இருந்தார்? ஏன் முன்பே வரவில்லை - என்ற கேள்விக்கு வழக்கமான பதில்தான் வருகிறது. சமூக நிலை. 'அப்பா எத்தனை கஷ்டப்பட்டு திருமணம் செய்துவித்தார்? நான் யோசிக்காமல், என்னால் முடிந்ததை முயற்சி செய்யாமல், எப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஓடி வர முடியும்?" பண்புடன் வளர்க்கப்பட்ட பெண்ணிடமிருந்து வந்த பொறுப்புள்ள பதில்தான்.

ஆனால் எங்கேயோ தவறு என்று புரிந்தவுடன் வெளியே வர முயற்சிக்காமல் இது என்ன விவேகமற்ற தயக்கம் என்று ஒரு கோபம்தான் மேலோங்கியது. அந்தப் பெண்ணின் உயிருக்கே ஏதேனும் ஆகியிருந்தால்? புகுந்த வீட்டு கொடுமையில் இறந்தவர்கள் லிஸ்டில் இன்னும் ஒரு நம்பராக முடிந்திருப்பாரே?

தகராறு செய்யும் மாப்பிள்ளைகளை நிராகரித்து திருமணத்தை நிறுத்தும் பெண்கள் இருந்தாலும், இது மாதிரியும் நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிதர்சனம். கல்வி, விழிப்புணர்வு இவற்றுக்கெல்லாம் மேலே ஒரு சமூக உணர்வு இவர்களைக் கட்டிப் போடுகிறது. இவர் குடும்பத்தில் பெற்றோர் இவருக்கு ஆதரவாக, துபாயில் உள்ள இவரது கணவனின் மேல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர். ஆனால் சில குடும்பங்களில் பெற்றோரே நாலு பேர் என்ன சொல்வார்கள் என்று பயப்படுகிறார்கள்; அடித்தாலும் உதைத்தாலும் உன் இடம் புகுந்த இடம்தான் என்று சொல்லும் பெற்றோரைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன்.

அநியாயம் நடந்தால் எதிர் கொள்ள என்றுதான் தைரியம் வரும்? விழிப்புணர்வு என்பதெல்லாம் பேச்சோடு சரியா என்று ஒரு ஆயாசம் வந்து உட்காருகிறது. குடும்பம் என்றில்லை. பொதுவாகவே, நாலு பேர் என்ன சொல்வார்கள்; எல்லோரையும் போல் இருந்துவிட்டு போவோம்; என்கிற ரீதியிலேயே பெரும்பாலோர் உள்ளனர். இந்த "மந்தை" சுபாவத்தைவிட்டு வெளியே வந்தால்தானே வாழ்க்கை எவ்வளவு விசாலமானது; பல கோணங்கள் கொண்டது என்று புரியும் ?

No comments: