Sunday, March 29, 2009

ஒரு மணி நேரம்; 60 நிமிடங்கள்; 360 வினாடிகள்

மணிக்கணக்கில் மின்சாரத் தடை இருந்து பழக்கப்பட்டவர்கள்தாம் நாம். அதனால்
ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாம இருக்கிறது அப்படி ஒண்ணும் கஷ்டமான விஷயம் இல்லேதான். ஆனாலும் ஒவ்வொரு வினாடியும் எப்படி போகிறது, கடிகார முள் எப்படி நகருகிறது என்று நன்றாக கவனிக்க முடிந்தது - இந்த பூமிக்கான சில மணித்துளிகளில் :-)

தவிர, மின்சாரம் தடையின்றி கிடைக்க Inverter, ஜெனெரேடர் என்று வசதிகளுடன் பழகிவிட்ட இந்த நாளில் நாம்பளாகவே மின்சாரத்தை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கிறப்போ, அது கொஞ்சம் வித்தியாசம்தான்.

கப்யூடரிலிருந்து எல்லாத்தையும் அணைச்சிட்டு, இரண்டு மெழுகுவர்த்தியும் பனை ஓலை விசிறியுமா சோபாவில் உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தேன்... சே... இதென்ன பைத்தியக்காரத்தனம்/ இப்பதானே அணைச்சிட்டு வந்து உட்கார்ந்தோம்? டேபிளின் மேல் கையில் கிடைச்ச பத்திரிகையை எடுத்து புரட்ட ஆரம்பிச்சேன். ஹு..ஹும். மங்கலான வெளிச்சத்தில் படிக்க சுவாரசியமாகவே இல்லை. பத்திரிகையை மூடி வைத்தேன்.

ஆனா, ஒண்ணுமே செய்யாம ஒரு மணி நேரம் சும்மாவே எப்படி உட்கார்ந்து இருப்பது? அப்பதான் 24 மணி நேரமும், உபயோகமோ இல்லையோ ஏதோவொரு 'செய்கையில்' நாட்கள் ஓடிவிடுவது புரிந்தது. அந்த காலத்தில் முனுவர்களின் தவத்துக்கு கடவுள்கள் கேட்ட வரம் கொடுத்தாராம் என்றால், ஏன் மாட்டாராம்? ஒன்றும் செய்யாமல் ஒரு மணி நேரம் இருப்பதே பிரம்ம பிரயத்தனம் என்றால், நாட் கணக்கில் இருப்பது சூப்பர் சாதனை அல்லவா? இன்னிக்கு அப்படி யாராவது நாட்கணக்கில் "சும்மா" இருந்தால் ஒலிம்பிக் தங்க மெடலே கொடுத்தாலும் தகும்!!!

பனை ஓலை விசிறியை விசிறிக்கொண்டு என்ன செய்யலாம் என்று நோட்டம் விட்டபோது, போன் கண்ணில் பட்டது. ஆஹா.... போன் பேச வெளிச்சம் வேண்டாம் - யாரையாவது அரட்டைக்கு இழுக்கலாம் என்று எழுந்த போது, உள்ளே ஒரு அசரீரி. அதென்ன அப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாம? ஒன்றுமே செய்யாமல், யாருடனும் பேசாமல் ஆத்மார்த்தமாக சிந்தித்துக்கொண்டு ஒரு மணி நேரம் உன்னால் இருக்க முடியாதா?

ஹ்ம்ம்... உள்ளே எழுந்த சவாலை ஏற்றுக் கொண்டு பேசாமல் அமர்ந்தேன். ஆனால், உட்கார முடியவில்லை. எழுந்து நடந்தபோது ஜன்னல் வழியே சிறிது நேரம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆஹா... இது சுவாரசியம் என்று தோன்றியதில் பனை ஓலை விசிறி சகிதம் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு செட்டில் ஆகிவிட்டேன். வீட்டருகில் இருந்த மரம் சமீபத்தில்தான் விழுந்திருந்தது. ( மற்றொரு இழப்பு பூமிக்கு) இப்போ கூடத்து ஜன்னல் வெளியே பெட்ரோல் பங்கும், சாலை சந்திப்பும் நன்றாகவே தெரிந்தது. சரி; எத்தனை வாகனங்கள் சிவப்பு விளக்கை தாண்டுகின்றன என்று பார்க்கலாம். ஆஹா...அதிசயம்; எல்லா வாகனங்களும் கனக்கச்சிதமாக சிவப்பில் நின்று, பச்சையில் ஒழுங்கா போய்கிட்டு இருந்தது. சே... இப்படி சுவாரசியமில்லாம ஓட்டறாங்களே' னு நகரும் வாகனங்களையும் பெட்ரோல் போட இறங்கும் ஓட்டுனர்களையும் பார்த்தபடி மனம் எங்கோ மேய்ந்தபடி இருந்தது.

எத்தனை விதமான வண்டிகள்? மனிதர்கள்? - அவர்கள் ஓட்டும் / பயணிக்கும் வண்டிகள், அவர்கள் எண்ணங்களையும், கவலைகளையும், சந்தோஷங்களையும் சுமந்து போகின்றனவோ?

நம்மைத் தாண்டி வெளி உலகை கவனிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உணரும் அதே உணர்ச்சி மீண்டும் எழுந்தது; நானும் என் கவலைகள்/ மகிழ்ச்சிகள்/ என்று இருக்கும் "நான்' எவ்வளவு மிகச் சிறியது - insignificant - ஒரு விதமான முக்கியத்துவமும் இல்லாத - பிரமாண்டமான மக்கள் சமுத்திரத்தில் எத்தனை சிறிய ஒரு நீர்த் துளி... என்ற உணர்வு......

ரயில் பயணம் ஞாபகம் வந்தது. டில்லிக்கும் சென்னைக்கும் அடிக்கடி பயணம் செய்யும்போது இப்படி ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வெளியே "ஓடும்" உலகை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம். நீண்ட இரண்டு நாள் பயண அலுப்பே இதில் மறைந்துவிடும் என்பது மட்டுமல்ல. அந்த ரயில் ஜன்னல் நேரங்கள் என்னுடையவை - சிந்திக்க, அசை போட, திட்டம் இட, என்னைச் சுற்றி 'ஓடும்" உலகை கவனிக்க என்று... பல விதங்களில் அந்த ரயில் பயண தனிமையை ஆவலுடன் ஓரளவு எதிர்பார்ப்பதும் உண்டு.

இந்த 'பூமிக்கான மணித்துளிகள்" மீண்டும் என் ரயில் ஜன்னல் கணங்களை கொண்டு வந்து கொடுத்தாற்போல் இருந்தது.

ஆனாலும் ஒரு மணி நேரம் முடிந்து, ஸ்விட்சை தட்டி விளக்கு போட்டு, மெழுகுவர்த்தியை எனக்கு நானே ஹாப்பி பர்த்டே சொல்லி அணைத்து ( இவற்றை செஞ்ச வரிசையை கவனிக்கவும் - முதல்லே மின்சார விளக்கு போட்டுட்டு, அப்புறம்தான் மெழுகுவர்த்தியை நிறுத்தணும்....!!!) உடனேயே, "நான்" "என்" உலகிற்கு திரும்பின போது "அப்பாடா...." என்று சந்தோஷமாகதான் இருந்தது :-)

Saturday, March 28, 2009

பூமிக்கு ஒரு நன்கொடை

நன்கொடை 'னு செஞ்சோம் என்றால் நம்ம கையை விட்டு பணம் கொடுக்கணுமில்லையா? ஆனா இந்த நன்கொடை செஞ்சா நமக்கு பணம் வரும்படி....!! அதனாலே இந்த நன்கொடை இன்னிக்கு இரவு 8.30 லேர்ந்து 9.30 வரை செய்யப்போறேன். நீங்களும் செய்யலாமே...!!! பூமியை "காப்பாற்றிய" மாதிரியும் ஆச்சு - ஒரு மணி நேரம் மின்சார செலவும் மிச்சம்.... Money saved is money earned இல்லையா?!!! :-)

Sunday, March 01, 2009

ஆஸ்கார் விருதும், பலன் எதிர்பாரா உழைப்பும்

ஏ ஆர் ரஹ்மானின் ஆஸ்கார் விருது பாராட்டு மழையின் நடுவே நிறைய விமரிசனங்களும் பொழிந்து கொண்டுள்ளன - அமிதாப் பச்சனின் விமரிசனம் உள்பட. இந்தியா is the flavour of the day என்ற நிலையில், இந்திய களம் ஒன்று அமைத்து செய்தால் வெற்றி பெறும் என்று எழுதப்படாத விதி உருவாகியிருக்கிறது. அதுவும் இந்தியாவின் வறுமை / ஊழல் மற்றும் இதர நலிந்த பக்கங்கள் என்ற ரீதியில் படம் எடுத்தாலோ / புத்தகம் எழுதினாலோ ( புக்கர் விருதைப் பெற்ற அரவிந்த் அடிகாவின் White Tiger - ) நிச்சயம் வெற்றி என்று ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், விமரிசங்களுக்கப்பால், இந்தியர் ஒருவரின் திறமை உலகளவில் அங்கீகரிக்கப்ப்ட்டதில் நிச்சயம் நான் பெருமை கொள்கிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் முழுதும் மின்சாரம் பாய்ந்தாற்போல் ஒரு விறுவிறுப்பும், அடிப்படை மனித சுபாவங்களையும் படம் பிடித்து காட்டுகிறது என்று கேள்விபட்டேன்.

எப்போது ஒரு படைப்பு ஜாதி, நாடு, மொழி என்று விளிம்புகளைத் தாண்டி பலதரப்ப்ட்ட மக்களை சென்று அடைகிறதோ, அந்தப் படைப்பு நிச்சயம் உலக தரம் வாய்ந்தது. ரெஹ்மானின் இசை அதை சாதித்து இருக்கிறது என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ரெஹ்மானின் ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பகிர்ந்து கொள்பவர், பாடலாசிரியர் குல்சார். ரெஹ்மான் மழையில் இவரை அனேகம் பேர் மறந்து போனார்கள்!! டைம் ஆப் இந்தியாவில் அவரது பேட்டி குறிப்பிடத் தகுந்ததாக இருந்தது. ஸ்லம் டாக் என்ற பெயர், under dog என்று சொல்வது போலதான் என்கிறார். இந்தியாவின் வறுமையை படம் பிடித்து காண்பிப்பது சரியா என்ற கேள்விக்கு, அதிலென்ன தவறு என்று கேட்பவர், சத்யஜித் ரே பற்றியும் இப்படித்தானே சொன்னார்கள்' வறுமை என்பது வாழ்க்கையில் ஒரு அம்சம். இந்தப்படம், வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுகிறது; அவ்வளவுதான் என்கிறார். "These critics are missing the point that Slumdog, just like Pather Panchali, isn’t about poverty. It’s a slice of life. The best of cinema, like the best of literature worldwide, including Dickens, has portrayed poverty, because it’s a part of life. If you fail to see that, it’s your limitation. " என்பது இவரது கருத்து.

அர்த்தமுள்ள வாதம்.

சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்கும் அப்பால் ரெஹ்மான் சொல்லிய இரண்டு கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஆஸ்கார் விருதை பெற்றுக் கொண்டு அவர் கூறிய, " அன்பு, வெறுப்பு என்ற இரு பாதையில் நான் எப்போதும் அன்பைத் தேர்வு செய்தேன்...." என்ற வாக்கியம் இன்று பட்டி தொட்டிகளிலெல்லலம் முழங்குகிறது. வெறும் கவர்ச்சியான வாக்கியமாக இல்லாமல், அவர் அனுபவித்து, உணர்வு பூர்வமாக சொன்ன அந்த வார்த்தைகளின் புரிதல், பத்தில் ஒரு பங்கு பேரிடம் போய்ச் சேர்ந்தால் கூட போதும் - நம் சமூக வாழ்க்கையில் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும்.

இரண்டாவதாக அவர் சொல்லியது வெற்றியைத் தேடி உழைக்கும் பல இளைஞர்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

விருது கிடைக்க வேண்டும் என்ற எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இயல்பான தன்னுடைய ஆர்வத்திலும், உழைப்பின் மேலும் நம்பிக்கை வைத்து, கடமையே கண்ணாக உழைப்பது அவரது சுபாவம். "I’ve realised when you work without thinking about awards and money, it pays off” என்ற அவர் கருத்தில் வெற்றிகரமான வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் அடங்கியுள்ளது.

Tuesday, October 02, 2007

காந்திஜி & கஸ்தூரி பா

வளரும் காலத்தில் நமக்கு கிடைக்கும் சில வாசிப்புகள், சில சந்திப்புகள், சம்பவங்கள் மற்றும் அனுபவங்கள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி பல விதங்களில் நம் எண்ணங்களையும் கொள்கைகளையும் உருவாக்குகிறது அல்லவா? அந்த வகையில் காந்திஜியின் "சத்திய சோதனை" பள்ளியில் படிக்கும் காலத்தில் படித்தது. பின்னர், அப்பா 1963ல் சேவாகிராமம் போயிருந்தபோது வாங்கி வந்த "எமது பா" என்கிற கஸ்தூரி பா பற்றிய இரண்டு புத்தகங்கள் - (சுசீலா நய்யார் எழுதியது - தமிழாக்கம், கோ. கிருஷ்ணமூர்த்தி - சர்வோதயப் பிரசுரம் ) இன்றும் என் சிந்தனைகளின் வேரில் இவர்களின் தாக்கம் ஆழமாக இருக்கிறது. குறிப்பாக, கஸ்தூரி பா. காந்திஜியின் அதே அளவு பிடிவாதமும் கருணையும் கொண்டவர்.

சுய சரிதத்தில், பா விடம் தான் நடந்து கொண்ட கடுமையான தருணங்களை காந்திஜி எழுதியிருப்பதைப் படிக்கும்போது, " எப்படி காந்திஜி இந்த மாதிரி இருந்தார்!!" என்று எண்ணத் தோன்றியதுண்டு. ஆனால், தன் தவறுகளை அவர் வெளிப்படையாக சொல்லக் காரணம் - தன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒரு பக்கம்; மறு பக்கம் தன் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் என்றவர் தன் வாழ்க்கையில் தன் தவறுகள் மூலம் தான் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்கள் பிறருக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்ற சிந்தனையும் கூட.

காந்திஜியின் கொள்கைகளில் பா வும் சளைத்தவரில்லை. ஆனால் இன்று நினைக்கும்போது கஸ்தூரி பாவின் மற்ற குணங்களும் சுவாரசியமாக இருக்கின்றன. காந்திஜி போன்ற பிடிவாத, கோபக்காரராக இருந்த கணவருக்கு ஈடு கொடுத்து வாழ்க்கையை லாவகமாக வாழ்ந்தவர். அதே சமயம் தன் உரிமையை நிலை நாட்டுவதில் அசர மாட்டார். "எமது பா" என்ற புத்தகத்தில் பாவின் இந்த சுதந்திரத் தன்மையையும், தனக்குச் சரியென்று மனசில் பட்டதை கணவரிடம் அவ்வப்போது அழுத்தமாக எடுத்துச்சொல்வதும் வழக்கம் என்று சுசீலா நய்யார் குறிப்பிடுகிறார்.

"... அதிகம் எழுத்தறிவில்லாதிருந்தபோதும், அவர் (கஸ்தூரி பா) தன் சுதந்திரத்தின் மதிப்பை உணராதிருந்தவரல்ல என்பது தெளிவு... யாருக்கும் அஞ்சி தன் மனம்போல் நடவாமல் இருந்தவர் அல்ல..."

கல்யாணம் ஆன புதிதில் காந்திஜி தன் மனைவி அனுமதியின்றி எங்கும் வெளியில் போகக்கூடாது என்று கட்டுப்படுத்தியிருந்தார். "மனைவியின் தூய்மையை சந்தேகிக்க காரணம் எதுவும் இல்லை. ஆனால் பொறாமை காரணத்தை எங்கே தேடப்போகிறது?என் மனைவி எங்கே போகிறாள் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்...." என்ற ரீதியில் தன் பொறாமைக் குணத்தை சுயசரிதையில் விவரித்துள்ளார். ஆனால் கஸ்தூரி பா தான் போக விரும்பும் இடங்களுக்கு அவர் இஷ்ட்டப்படி போய்க்கொண்டுதான் இருந்தார். " நான் அடக்க அடக்க அவள் அதிகம் மீறிக்கொண்டு கிளம்பவே நான் அதிகம் ஆத்திரம் கொண்டேன்." காந்திஜி விவரிக்கிறார்.

தன் இஷ்ட்டப்படி பா வெளியே போய் வந்தாலும் கணவரின் ஆத்திரத்தையும் கோபத்தையும் பொறுமையாக சமாளித்தார்.

அன்று தன் பொறாமைக் குணத்தால் இப்படி மனைவியை அடக்கினாலும், பின்னர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் காலமும் வந்தது என்று விவரிக்கும் காந்திஜி, தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ".... கஸ்தூரிபாய் தன் இஷ்டம்போல் நடந்து கொண்டதில் குற்றம் ஏதும் இல்லை என்று நான் கருதுகிறேன். மனதில் கல்மிஷம் ஏதும் இல்லாத பெண் சுவாமி தரிசனத்திற்கோ, யாரையேனும் பார்க்கவோ போகும் விஷயத்தில் எதற்காகப் பிறருடைய உத்தரவுக்குப் பணிய வேண்டும்? நான் அவளுக்கு உத்தரவு இடலாமென்றால் அவள் மட்டும் ஏன் எனக்கு இடக்கூடாது? ஆனால் இந்த விஷயம் இப்போதுதான் புரிகிறது...."

இப்படிச் சின்ன சின்னதாக அவர்கள் இருவரின் வாழ்க்கைகளில் நிறைய பாடங்கள்.

அதேபோல் காந்திஜியின் அஹிம்சை வழி தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்தது என்பது சரித்திரம். உலகெங்கும் இன்று அஹிம்சை வழி பிரபலமாகிவிட்டது. அக்டோபர் 2 ந் தேதி, உலக அஹிம்சை தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐ. நா. சபை அறிவித்துள்ளது.

ஆனால் அவரது சுயசரிதையை ஆழமாகப் படித்தால் ஆரம்ப நாட்களிலேயே சில சம்பவங்களில் - குறிப்பாக இங்கிலாந்து போன விஷயத்தில் - இதற்கான மனோபக்குவம் அவருக்கு வந்துவிட்டது என்று புரியும்.

தென்னாப்பிரிக்காவுக்கு முன்னரே அஹிம்சை தத்துவத்தின் அறிகுறிகள் அவர் வாழ்க்கையில் ஏற்பட்டது எங்கே என்று பார்க்கலாம்.

அவர் வெளி நாட்டுப் பிரயாணம் செய்ததைக் குறித்து, அவர் சாதியினரிடையே பலத்த புயல் எழுந்தது. ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் காலத்தில் கடல் கடந்து பயணம் செய்வது கூடாது. அந்தக் கட்டுப்பாட்டை மீறி அப்படி யாராவது போனால் அவர்களை சாதியிலிருந்து வெளியேற்றுவதும் அவர்கள் உறவை மற்றவர்கள் துண்டிக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. காந்திஜிக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது.

ஆனால் இதை அவர் எதிர்கொண்ட விதமே தனி.

அவருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம் - சுய சரிதையிலிருந்து :

".... நான் வெளி நாட்டுப்பயணம் செய்ததைக் குறித்து என் சாதியாரிடையே எழுந்த புயல், இன்னும் இருந்து கொண்டே இருந்தது. அது, சாதியை இரண்டு கட்சிகள் ஆக்கிவிட்டது. இதில் ஒரு கட்சியினர் என்னை உடனேயே சாதியில் சேர்த்துக்கொண்டு விட்டனர். மற்றக் கட்சியினரோ, எனக்கு விதித்திருந்த சாதிக்கடுப்பாட்டை நீக்குவதில்லை என்று உறுதி கொண்டிருந்தனர். முதல் கட்சியாருக்குத் திருப்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என் சகோதரர் ராஜ்கோட்டுக்குப் போகும் முன்பு என்னை நாசிக்குக்கு அழைத்துச் சென்றார். அங்கே புண்ணிய நதியில் நீராடச் செய்தார். பிறகு ராஜ்கோட்டிற்குப் போனதும், சாதியாருக்கு ஒரு விருந்தும் வைத்தார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனல் என்னிடம் சகோதருக்கு இருந்த அன்போ எல்லையற்றது. அதேபோல் எனக்கும் அவரிடம் எனக்கு பக்தி உண்டு. ஆகையால் அவர் சொன்னதே சட்டம் என்று மதித்து அவர் விரும்பியபடியெல்லாம் யந்திரம்போல் செய்தேன். இவ்விதம் என்னை சாதியில் சேர்த்துக்கொள்ளும் பிரச்சனை ஒருவாறு தீர்ந்தது.

என்னைச் சாதியில் சேர்த்துக்கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நான் முயலவே இல்லை. அக்கட்சியின் தலைவர்களிடம் எனக்கு வெறுப்புத்தோன்றவும் இல்லை.அவர்களில் சிலர் என்ன வெறுத்தனர். ஆனாலும் அவர்கள் மனம் புண்படும் காரியம் எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். சாதிக்கட்டுபாடு சம்பந்தமான விதிமுறைகளையெல்லாம் மதித்து நடந்து கொண்டேன். அந்தக் கட்டுப்பாடுகளின்படி, என் மாமனார், மாமியார், தமக்கை, மைத்துனர் உட்பட என் உறவினர் யாரும் எனக்குச் சாப்பாடு போடக்கூடாது. ஆகையால் அவர்களில் யார் வீட்டிலும் நான் தண்ணீர் கூட குடிப்பதில்லை. இந்தக் கட்டுப்பாட்டை ரகசியமாக மீறிவிட அவர்கள் தயாராக இருந்தனர்.
பகிரங்கமாக செய்யாததை ரகசியமாக செய்வது என் இயல்புக்கே நேர் விரோதமானது.


இவ்விதம் என் மீது குறை கூறுவதற்கே கொஞ்சமும் இடம் கொடாமல் நான் நடந்து கொண்டதன் பலனாக எனக்குச் சாதித்தொல்லை ஏற்படுவதற்கே சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. அது மாத்திரம் அல்ல. என்னைச் சாதியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவனாக இன்னும் கருதிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என்னிடம் அன்போடும் தாராளமாகவும் நடந்து கொண்டார்கள். சாதிக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பாராமலேயே என் தொழிலிலும் அவர்கள் உதவி செய்தனர்.

இந்த நல்ல காரியங்களெல்லாம் என்னுடைய எதிர்ப்பின்மையின் பலனே என்பது எனது திட நம்பிக்கை. சாதியில் என்னைச் சேர்த்துக்கொண்டாக வேண்டும் என்று நான் கிளர்ச்சி செய்திருந்தால், சாதியை இன்னும் பல கட்சிகளாகப் பிரித்துவிட முயன்றிருந்தால், சாதியாருக்கு நான் ஆத்திரத்தை மூட்டியிருப்பின், அவர்களும் நிச்சயம் எதிர்த்துப் பதிலுக்கு பதில் செய்திருப்பார்கள். இங்கிலாந்திலிருந்து நான் திரும்பியதும் புயலிலிருந்து ஒதுங்கிவிடுவதற்கு பதிலாக, நான் கிளர்ச்சிச் சூழலில் சிக்குண்டு, பொய் நடிப்பை மேற்கொள்வதற்கு உடந்தையாகவும் இருந்திருப்பேன்..........."

சில நாட்கள் முன்பு புத்தக அலமாரியை ஒழுங்கு படுத்தும்போது இந்தப் புத்தகங்கள் கண்ணில் பட்டன. பக்கங்கள் மங்கிப் போயிருந்தாலும் தொட்டவுடன் பழைய ஞாபகங்களும் கூடவே எட்டிப் பார்த்தன. "சத்திய சோதனை" புத்தகத்தின் உள்பக்கம் என் அண்ணன் தன் பெயரை விதம் விதமாக எழுதிப்பழகியிருப்பான். கடந்து போன நாட்கள் மனதில் நிழலாட, புத்தகங்களைப் படிக்கலானேன்.

மீண்டும் அலமாரியில் வைக்கும்போது, அவ்வப்போது இப்படிப் பழையப் புத்தகங்களைப் புரட்டுவது அவசியமென்று தோன்றியது.

நம் வாழ்க்கையையே நின்று திரும்பிப்பார்ப்பது போல....

Friday, August 17, 2007

ஒரு தூரதிருஷ்டி பார்வையில்

மன்மோஹன் சிங் தளர்வதாக இல்லை; இடதுசாரியும் விடுவதாயில்லை. அரசைக் கவிழ்ப்பது நோக்கமில்லை என்று சொல்லும் இடதுசாரி, ஒரு வேளை "விட்டுகொடுத்து" விட்டாலும், அணு ஒப்பந்தம் அமுலுக்கு வந்தாலும் ஒப்பந்தக் காலமான 40 வருடம் ( கொசுறு 10 வருடக்காலமாம்) சொச்சத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நமது நாட்டில் அல்லது உலகளவில் வரும் என்று தெரியாது.

வெற்றிகரமாக - மன்மோஹன் சிங்க் நம்பிக்கை வைப்பது போல் -இந்தியாவுக்கு ஆதாயமாகவும் இருக்கலாம். அல்லது இடதுசாரி கவலைப்படுவது போல் நாம் அணு சோதனை செய்ய நேர்ந்தால், அதன் காரணமாக ஒப்பந்த முறிவும் ஏற்படலாம்.

Hyde Act காரணம் காட்டி அமெரிக்காவும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளலாம்; இந்தியாவும் தன் காரணங்களைச் சொல்லி எப்போது வேண்டுமானாலும் விடுபடலாம். ஒப்பந்த முறிவுக்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால், இதனால் விளைவுகள் என்ன? இரு நாடுகளுக்கும் பாதகங்கள் என்ன? முறிக்கும் நிலை வரை இரு நாடுகளுமே போகுமா? அப்படி நேர்ந்தால், அமெரிக்கா திருப்பித் தரச் சொன்னாலும் இந்தியா, தான் பெற்றுக்கொண்டவற்றை திருப்ப வேண்டிய அவசியமில்லா சூழ்நிலை என்ன, என்று பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் சொல்கிறார். "...Under a worst-case scenario where the U.S. ignores its obligation to ensure the continuous operation of Indian reactors, presumably citing the Hyde Act, India would be under no obligation to entertain an American request for the return of nuclear items...."

ஏன், எப்படி என்று இவர் இங்கே விவரிக்கிறார்.

மற்றொரு பக்கம், இப்படி வெளியிலிருந்து பெறப்படும் உதவிகள் மூலம் - அமைக்க இருக்கும் நான்கு புதிய அணு சக்தி ஆலைகள், இந்தியாவுக்கு மேலும் 30,000 MW சக்தி உற்பத்தி செய்யும் என்று நேற்று வந்த செய்தி கூறுகிறது. என் பார்வையில் இதுவும் ஒரு முக்கிய கோணம். 16 வது Electric Power Survey கொடுத்த அறிக்கையின்படி, 2000 -01 ல் மொத்தம் 1,01630 MW சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதில் நிலக்கரி மூலம் ( Thermal ) - 72,359 MW;
தண்ணீர் சக்தி மூலம் ( Hydel) - 25,142 MW;
அணு சக்தி மூலம் - 2,860 MW;
காற்று மூலம் (Wind power) - 1,269 MW.
( சூரிய சக்தி பெருமளவில் உற்பத்தி செய்யப்படவில்லை - அல்லது குறிப்பிடப்படவில்லை)

ஆக, உற்பத்தி முழுவதுமான கணக்கில் அணு சக்தி மூலம் கிடைத்தது வெறும் 3 சதவிகிதத்திற்கும் கீழ். இப்போது வெளியுதவிகள் மூலம் இந்த உற்பத்தி அதிகரிக்கலாம் - நேற்றைய செய்தியின்படி 30000 MW. இருந்தாலும் மொத்த உற்பத்தியில் அணு சக்தியின் பங்கு மிகக் குறைந்த சதவிகிதம்தான் தேறும்.

இந்த இத்தணூண்டு அளவு கிடைக்கும் சக்திக்காகவா ஒரு அரசாங்கமே ஊசலாடும் அளவு விவாதம் இடம் பெறுகிறது என்று தோன்றுகிறது. இதுக்காக ஏன் நம் அரசு உயிரைப் பிடித்துக்கொண்டு போராடுகிறது என்ற கேள்வி எழுகிறது. ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த விடைகளும், என் கேள்விகளும்.

இந்தியாவில் என்றல்ல; உலகம் முழுவதிலும் அணு மூலம் கிடைக்கும் சக்தி 3 சதவிகிதம் மட்டுமே. இயற்கையை மூலதனமாக வைத்து உருவாக்கப்படும் சக்திதான் பெரும்பாலும் இதுவரை உலகை இயக்குகிறது. நாளுக்கு நாள் சக்தியின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. சக்தியின் தேவை நமக்கு அதிகரிக்கும் அளவு இயற்கையும் வேகமாக வற்றாத ஊற்றாக நமக்கு சக்தியை அள்ளி அளிக்க வேண்டும்.

ஆனால் நிஜம் அப்படி இல்லை. இந்தியா உள்பட உலகெங்கிலும் இயற்கை மூலம் கிடைக்கும் சக்தி வறண்டு விடும் அபாயம் இருக்கிறது.
பெருமளவு தண்ணீர் மின்சாரம் உற்பத்தி செய்ய, பெரும் அணைகள் கட்ட வேண்டும் - பல மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களை இடம் பெயர்த்து செய்ய வேண்டிய அவசியம் - இது நடைமுறையில் கடினமான ஒன்று. மாற்று வழி - சிறு அணைகள் - அப்போதும் மக்கள் இடப்பெயற்சி அவசியம் - தவிர இப்படிபட்ட சிறு அணைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் கடுகளவே. நம் ராட்சச தேவைகளுக்கு பற்றாது. பெரும் வாளியை நிரப்ப, ஸ்பூனால் மொண்டுவிட்டு நிரப்பும் கதை. கடைசி பட்ச அபாயம், எதிர்காலத்தில் நீர் வறட்சியும் ஏற்படலாம். காற்றின் மூலம் கிடைக்கும் சக்தியும் மிகக் குறைச்சலே - ஆனால் இந்தக் கோணத்தில் அதிக பட்ச உற்பத்தி செய்யும் வழிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வது அவசியம்.

ஆனால் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உற்பத்தியில் ஒரு முக்கிய குறை - அவை சீசன் பொருத்தது எப்போதும் ஒரே சீராக இராது.

இயற்கை வழியாக சக்தி உற்பத்தி செய்யப்படும் மற்றொரு வழி - நிலக்கரி - அதாவது Thermal Power. இன்று இதன் மூலம்தான் அதிக பட்சம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் நிலக்கரி அட்சயப் பாத்திரம் இல்லை. ஒரு நாள் முழுக்க சுரண்டிவிடுவோம். அப்புறம்??

ஆக, நாளடைவில் இயற்கையும் வறண்டு, மனிதன் வேறு மாற்று வழிகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாற்று வழிகளில் ஒன்றுதான் அணு சக்தி. இப்போதிலிருந்தே இதையும் பலப்படுத்தி, இயற்கை மூலம் உற்பத்தி செய்வதை - இயற்கையைச் சுரண்டும் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி உபயோகித்தால், இயற்கை வழிகளை / வளங்களை இன்னும் சில காலம் இழுக்கலாம். அல்லது, இயற்கையும் கொஞ்சம் இளைப்பாறி, தன்னைப் புதுப்பித்துக்கொண்டு நமக்கு வளம் தரலாம்.

ஆக, நம் தேசீய / வெளியுறவு கொள்கைகளை பாதிக்காத ( பாதிக்கவில்லை என்று பிரதமர் உறுதியாகச் சொல்கிறார் ) வகையிலும், இதர சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கவனம் எடுத்துக்கொண்டும் அணு சக்தி உற்பத்தியை பெருக்க முடிந்தால் ஒரு தூரதிருஷ்டி பார்வையில் நமக்கு அது ஆதாயமே.

Wednesday, August 15, 2007

சுதந்திர தின வாழ்த்துக்கள்


60 வயது நிறைந்துவிட்டது.

60 வருட நிறை குறைகளை அலசும் பலவித செய்திகளைப் படித்துவிட்டு, நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதினாலும், காலையில் செங்கோட்டையில் பூக்களை சிந்தியபடி, அந்தக் கொடி கம்பீரமாகப் பறக்கத் தொடங்கிய அந்த ஒரு கணத்தில், மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி. அந்த முகம் தெரியாத "இந்தியா" என்ற உணர்வு - வெறும் அடையாளம் என்பதையும் மீறி மனதில் தாக்கும் அந்த உணர்வு தழைக்க, செழிக்க அமைதியாகப் பிரார்த்தனை.

அவ்வளவுதான். மற்றொரு வருடம் உருண்டோடுகிறது.

என்ன சாதித்துவிட்டோம் என்று குறைகளைப் பற்றி மட்டுமே நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி அகற்றி இன்னும் மேன் மேலும் எப்படி நாமும் வளர்ந்து பிறருக்கும் நல் உதாரணமாக இருக்கலாம் என்ற எண்ணங்களில் செயல்படுவோம்.

60 வருடங்களாக ஜனநாயகமாக வெற்றிகரமாக செயல்படுகிற அதே வேகத்துடன், நலிந்தோர் தழைக்கவும், பெருகி வரும் மக்கள் எண்ணிக்கை ஒரு பெரும் ஆக்கப்பூர்வமான சக்தியாக பரிமளிக்கவும் வழிகள் தேடுவோம்.
கிளைகளாக, விழுதுகளாக, உலகம் முழுக்கப் பரவியிருந்தாலும் இந்தியர் என்ற வேரில், உணர்வில் பெருமிதம் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Friday, August 10, 2007

அணு ஒப்பந்தம்

அணு ஒப்பந்தம் - சில சந்தேகங்கள்.

குமுதம் 15.8.2007 இதழில் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ( ஆயுத??!! - "அணு ஆயுத" என்று இந்தப் பத்தியில் உபயோகித்த வார்த்தையைப் பார்க்க நேர்ந்தால் அமெரிக்க காங்கிரஸ் முதலில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மறு வேலை பார்ப்பார்கள் :-) ) தொடர்பாக ஒரு பத்தியாளர் தன் வருத்தங்களை விவரித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சின் வலைப் பக்கத்தில் வைத்துள்ள இந்த
அணு ஒப்பந்தம் மொத்தம் 22 பக்கம். விஞ்ஞானம் அதிகம் தெரியாத எனக்கு பாதிக்கு மேல் சுத்தமாகப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் ஆங்காங்கே "மேய்ந்துவிட்டு" என்னதான் சொல்கிறார்கள்; இந்தியாவுக்கு என்ன ஆதாயம் / நஷ்டம் என்று ஏதாவது புரிகிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.

எனக்குப் புரிந்தவரையில் பெரும்பாலும் இதில் இந்தியாவுக்கு அனு(ணு!)கூலம் போல்தான் படுகிறது. இந்த ஒப்பந்தம் பற்றி முன்னாள் அணு சக்தி கமிஷனின் தலைவர், எம்.ஆர். சீனிவாசன் போன்ற விவரம் அறிந்தவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்தபோது மன்மோஹன் சிங் என்ன செய்யப்போகிறார் என்று நானும் என் பங்குக்கு இங்கே கவலையைப் பதிவு செய்திருந்தேன்.

அது பிரதமர் காதில் விழுந்துவிட்டது :-)

ஆனால் பலர் அப்படி நினைக்கவில்லை. பா.ஜ.க நாட்டை அடகு வைத்துவிட்டார் என்று சொல்வதை குமுதம் பத்தியாளர் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பகுதி அப்படி எண்ண வைக்கிறது என்று புரியவில்லை. குறிப்பாக, " இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விஷயங்களில் உலகளாவிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கும்போது இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.." என்று ஒரு அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக குமுதம் பத்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனக்குப் புரிந்தவரையில் மேலே சுட்டியில் உள்ள அணு ஒப்பந்தத்தில் இப்படி ஒரு அம்சம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று வெளியான ஒரு விரிவான பேட்டியில் தற்போதைய அரசின் Principal Scientific Advisor திரு ஆர். சிதம்பரம் "எல்லாம் சரியாகதான் இருக்கு" என்கிறார்.

தேவையில்லாமல் குழப்பிக்கொண்டு எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமாக பயன் இருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மக்களிடையே பீதியும் அவநம்பிக்கையையும் விழும் சூழ்நிலை உருவாகிறதா?

அல்லது உண்மையிலேயே எங்கேயோ "பொடி" இருக்கிறதா?

சரியான விளக்கங்கள், புரிதல்கள், இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். வரும் திங்கள் கிழமை இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும் என்கிறார்கள். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்........

பிறகு சேர்த்தது: - 11. 08. 07. ஒரு வாசகருக்காக நான் எழுதிய பதில் இங்கே முன் பக்கமும் இருந்தால் விளக்கங்கள் முழுமையாக இருக்கும் என்று தோன்றியதால் அதை இங்கே சேர்க்கிறேன்.

// நான் சொன்னதுபோல் விளக்கங்கள் /புரிதல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு சடுதியான பதில்: "ஆயுத" - கேள்விக்குறிக்கு காரணம் - இது அணு ஆயுத ஒப்பந்தம் அல்ல. Not Nuclear Weapons Deal - மாறாக ஒப்பந்தத்தின் தலைப்பே சொல்வதுபோல் - "Agreement for Cooperation Between the Government of India and the Government of the United States of America concerning peaceful uses of Nuclear Energy" - Nuclear Deal. அதாவது அணு சக்தியை அமைதியான வழியில் உபயோகிப்பதற்கான வழிமுறைகளில் ஒப்பந்தம். - அணு ஒப்பந்தம். "ஆயுதம்" இல்லை. நீங்கள் கவலை தெரிவித்திருக்கும் பல விஷயங்கள் இதில் சம்பந்தமேயில்லை என்று ஒப்பந்தத்தைப் படித்தால் புரியும். அமைச்சகம் முழுமையாக வெளியுட்டள்ளதா... "நுனிப்புலா" - அப்படி சரியான விவரங்கள் இல்லையென்றால் மக்கள் எங்கு போய் வழக்காடுவார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உலகின் ஒரு முக்கிய ஜனநாயக அரசின் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தம், முழுமையானதாக / அக்மார்க் அசலாகதான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கிடையேயான எல்லாவித அணு சம்பந்தமான ஒத்துழைப்புகளும் அமைதியான உபயோகங்களுக்கே - அதே சமயம் அவரவர் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு - ( இங்கேதான் சற்று விளக்கம் தேவைப்படுகிறது எனக்கு) பயன்படுத்தப்படும் என்று அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. Article 2 - Scope of Cooperation என்ற பகுதியைப் படியுங்கள். இதில் 4th clause: The Parties affirm that the purpose of this agreement is to provide for peaceful Nuclear cooperation and not to affect the unsafeguarded nuclear activities of either Party. Accordingly, nothing in this agreement shall be interpreted as affecting the rights of the Parties to use for their own purposes nuclear material, non - nuclear material, equipment, components, information or technology transferred to them pursuant to this Agreement. This Agreement shall be implemented in a manner so as not to hinder or otherwise interfere with any other activities involving the use of nuclear material, non - nuclear material, equipment, components, information or technology and military nuclear facilities produced, acquired or developed by them independent of this Agreement for their own purposes.என் புரிதல்: இந்த ஒப்பந்தப்படி நாம் அமெரிக்க உதவிகளைப் பெற்றுக்கொண்டோமானால், அவை வெறும் அமைதியான பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிப்பட வேண்டும். ஆனால் அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற உதவிகளின் / பொருட்களை / டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல், நாம் இத்தனை நாளும் செய்து வந்த அணு ஆயுத ஆராய்ச்சிகளின் மூலம் நாம் சொந்தமாக ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் /ஆராய்ச்சிகள் /டெக்னாலஜி மூலம் நம் "இஷ்டப்படி" நம் சொந்த உபயோகத்துக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாச் சொன்னா - நான் கொடுத்த சாமானை வைச்சு நீ ஆயுதம் செய்யாதே; நீயாகவே ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கிறதை வைச்சு நீ என்ன வேணா செஞ்சுக்கோ.... நான் குறுக்கிடலே. இப்படி எல்லா ஷ்ரத்துகளும் இரு நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் இருக்கிறது.//

ஒப்பந்தத்தில் உள்ள Article சிலவற்றை மேலே கோடிக்காட்டியுள்ளேன். இன்று, இன்னும் சில Articles, Anil Kakodkar, Chairman of the Atomic Energy Commission அளித்த இந்த பேட்டியில் இன்னும் விரிவாக அலசப்பட்டுள்ளது.