Sunday, May 20, 2007
மணியான பேட்டி.
".....எப்படி வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் போக்கு மாக்காக கேள்விகள் கேட்டாலும், என் வாயில் சொற்களைத் திணித்தாலும், எனக்குச் சரியென்று தோன்றுவதைத்தான் நான் சொல்லுகிறேன். நான் சொல்வதிலும் புதிதாக ஒன்றுமில்லை. எப்போதுமே நான் எங்கள் கட்சிக்குள், மற்றும் மந்திரிசபையின் ஆலோசனைக் கூட்டங்கள் என்று எல்லா இடத்திலும் பேசுவதைத்தான் சொல்கிறேன். - வெறும் பொருளாதார வளர்ச்சி என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு வரும் திட்டங்களினால் சாதாரண மனிதர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கும் வர்க்கத்தினர் மேலும் பணம் சேர்க்கதான் வழி வகுக்கின்றன. இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. பாதி வழியில் நாம் பாதையை மாற்றி நமக்கு / நம் தேசத்தின் சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நம் வழிகளை மாற்றிக்கொள்ளலாம். We must take a Midterm review and make Course Corrections....."
பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியளித்தாலும் இந்தியாவில் வளர்ச்சியின் பலன் சரியாக அனைவரையும் - அனைத்துதரப்பட்ட மக்களையும் சரியாகச் சென்றடைவில்லையோ என்ற கவலை நம்மில் பலருக்கு இருக்கலாம். சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் சரிவர கவனிக்கப்படவில்லை; கல்வி, சுகாதாரம், குடி நீர் வசதி போன்றக் குறியீடுகள் இன்னும் அதள பாதாளத்தில்தான் இருக்கின்றன' இந்த நிலை எப்போது மாறும்.... என்று நம்மில் பலர் கவலைப் படுகிறோம். ஏன் இவற்றை சரி செய்ய இன்னும் ஒரு குவியத்தோடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வியெழுகிறது.
இந்த சமயத்தில் சி.என்.என். ஐ.பி.என் நிகழ்ச்சியான சாத்தானின் வக்காலத்து - Devil's Advocate - நிகழ்ச்சியில் இன்று மணிசங்கர் ஐயரின் மணியான பேட்டி.
சில நாட்கள் முன்பு CII நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மேலே கூறியக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். உடனே மணி சங்கர் தன் அரசு / யு.பி.ஏ அரசை விமர்சிக்கிறார் என்று காது மூக்கு, மசாலா வைத்து அவரை மாட்டிவிடும் தொனியில் நம்ம கரண் தாப்பர் கேள்விகள் கேட்டாலும், மணி சங்கர் கொஞ்சம் கூட அசராமல் தன் நிலையை மிகப் பொறுமையாக வெளிப்படுத்தினார். கச்சிதமாகவும், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல் கரணின் கொக்கிகளையும், எலிப் பொறிகளையும் கையாண்ட விதம் சுவாரசியமாக இருந்தது.
மணி சங்கரின் கவலை மன்மோஹன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் இல்லாமல் இருக்காது. "Economic policies with a human face" என்று மன்மோஹன்ஜி சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே திருப்பிச் சுருட்டத் தேவையில்லை. வளர்ச்சி கட்டாயம் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். ஆனால் கூடவே பலன்கள் அனைவரையும் போய் அடையுமாறு பார்த்துக்கொள்ள வழிகள் கண்டுபிடிக்கும் திறமையும் அவர்களுக்கு உண்டு என்றல்லவா நம்புகிறோம்? எங்கே முக்கியத்துவம் - Priorities - கொடுக்க வேண்டும் என்பதில்தான் கவனம் சிதறிவிட்டது.
பாதிவழித் திருத்தங்கள் - course correction - அவசியம் என்று தோன்றுமிடங்களில் தயங்காமல் செய்வார்களா? அல்லது ஊதற சங்கைப் போட்டு உடைப்பார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அருணா,
திருத்தங்கள் செய்வார்களா தெரியாது. கட்டாயம் யோசிப்பார்கள்.
இழுத்தடிப்பார்கள்.
செலவு செய்வார்கள்.
அருணா,
பொதுவாகவே பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படை தேவைகள் தீர்க்கபடாததையும் ரொம்பவே குழப்பிக்கொள்கிறோம் என்றே தோன்றுகிறது. அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாததற்கு ஒழுங்கான vision இல்லாமல் short termக்குள் (5 வருட ஆட்சி முடியும் வரை) மக்களை திருப்திப்படுத்தி அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தக்க வைக்கலாம் என்னும் அரசியல்வாதிகளின் குறுகிய சிந்தனையே காரணமன்றி அதிகப்படியான கவனத்தை தொழில் வளர்ச்சிக்கும், உலகமயமாக்கலுக்கும் செலுத்துவதால் என்று நினைக்கிறீர்களா?? (அங்கேயும் ஏகப்பட்ட குளறுபடிகள்தான் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம்)
ஐடி வளர்கிறது விவசாயம் தேய்கிறது என்றால் விவசாயத்திற்கான கவனத்தை அதிகப்படுத்துவதுதான் சரியான தீர்வே ஒழிய ஐடியில் செலுத்தும் கவனத்தை குறைப்பதல்ல என்பது என் கருத்து..
நல்ல விரிவாய் உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து ...
வல்லி,
நமக்கிருக்கும் கவலை ஆள்பவர்களுக்கும் நிச்சயம் இருக்கும். கீழே விழுந்து, மேலே விழுந்து நாமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். வளர்ச்சி குறித்து பெருமைப்படும் அதே சமயம், நம்மை நாமே விமரிசித்துக் கொள்ளும்போது குறைகளை அகற்ற முடியும் என்று நம்புகிறேன்.
விக்கி,
விரிவாகக் கேட்டீர்கள். you asked for it :-) கொஞ்சம் ரொம்பவே பெரிய பதிலாகிவிட்டது!! இங்கே சிலச் சுட்டிகள் கொடூத்துள்ளேன்.
http://aruna52.blogspot.com/2003/10/blog-post_03.html - 03 அக்டோபர் 2003
http://aruna52.blogspot.com/2004/05/blog-post_13.html - 13 மே 2004
http://aruna52.blogspot.com/2004/05/blog-post_15.html - 15 மே 2004
http://aruna52.blogspot.com/2004/05/blog-post_30.html - 30 மே 2004
http://aruna52.blogspot.com/2004/06/blog-post_05.html - 05 ஜூன் 2004
தாராளமயமாக்கலின் / உலகமயமாக்கலின் / தனியார் முதலீடுகள் இவற்றின் முதல் ஆதரவாளர் நான் - மேலே உள்ள சுட்டிகளில் என் பழையப் பதிவுகளைப் படியுங்கள் - என் நிலை புரியும். இன்னும் மிகப் பழைய பதிவுகளில் ஜூன் 2003 ல் இவைக் குறித்து இருக்கின்றன - ஆனால் அவை எழுத்துரு மாறி உள்ளன. என்னிடம் இருந்த ஆவணங்கள் இப்போது கிடைக்கவில்லை.
இப்படிப் பல விதங்களில் இந்தியா கொள்கை சீர்திருத்தம் செய்யும்போது நாடு வேகமாக வளர்ச்சி பெறும்; நமது பல நெடுநாள் (chronic) பிரச்சனைகள் மறையும்; நமது வாழும் தன்மை உயரும் (standard of living) பரவலாக சுபிட்சம் வரும்; வளர்ந்த நாடு என்ற நிலையை அடையும்; என்று இப்படி பல நம்பிக்கைகள் உண்டு என்னிடம். ( கவனியுங்கள் - "உண்டு" என்று இன்னமும் நிகழ்காலத்தில்தான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இருந்தது என்று கடந்தகாலத்தில் சொல்லவில்லை )
ஆனால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தபடி வளர்ந்தாலும், மக்களின் அடிப்படை நலவாழ்வுக் குறியீடுகள் (Human Development Indicators - HDI ) நினைத்த அளவு வளரவில்லையே என்பதுதான் கவலை தருகிறது. ஏழ்மையின் வளர்ச்சி (poverty index) ஓரளவுக் குறைந்துள்ளது உள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மாத வருமானம் ரூ. 356க்குக் கீழே இருப்பவர்கள்தாம் ( நகரத்தில் ரூ. 538) ஏழை என்ற பிரிவில் வருகிறார்கள். இந்தக் கணக்கின்படி 1974-05ல் 54.9 சதவிகிதமாக இருந்த ஏழைகள் குறியீடு 2004 -05ல் 27.5 என்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் இந்த ரூ. 356 பஸ் காசுக்கே செலவாகிவிடும். பின் நாங்கள் எங்கே போவது பாக்கி செலவுகளுக்கு. நாங்கள் இன்னமும் ஏழைகள்தாம்" என்று சொல்கிறார் சட்டிஸ்கர் கிராமத்து ஆள் ஒருவர்.
ஏழ்மையின் குறியீடு குறைகிறது என்று புள்ளிவிவரம் கூறுவது சந்தோஷம்தான். ஆனாலும் ஆங்காங்கே உள்ளோர்க்கும் இல்லாதார்க்கும் உள்ள இடைவெளிகள் அகண்டு கொண்டே போவது கண்கூடாக நமக்குப் புலப்படுகிறதே! ராம ராஜ்யம் போல் அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டாம். ஆனால் குறைந்தபட்சம், இருப்போர் / இல்லாதோர் இந்த இடைவெளியைக் குறைக்க என்ன வழி என்று ஆராய வேண்டாமா?
எனக்குப் பொருளாதாரம் தெரியாது. HDI வளர என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பாகத் தெரியாது. ஆனால் இவை வளரவில்லை என்பதற்கு புள்ளிவிவரம் தேவையில்லை; கண்முன் தெரிகிறது யதார்த்தம்.
வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. உண்மை. ஆனால் இங்கேயும் ஒரு பெரிய இடைவெளி உள்ளது.
தேவையான வேலைகளுக்குத் தகுந்த பயிற்சி உடையவர்கள் இருப்பதில்லை.
கிராமத்திலிருந்து நகரங்களுக்குப் பிழைப்புக்காக வருபவர்களுக்குத் தகுந்த வேலை கிடைப்பதில்லை.
விளைவு? நகர்ப்புற ஏழைகள் விருத்தியாகிறார்கள். நகர்ப்புறக் குற்றங்கள் அதிகமாகின்றன. விவசாயம் இல்லாமல் வேறு தொழிலில் இணைய விரும்புவர்களுக்குத் தகுந்த பயிற்சியளித்து நகர்ப்புற வேலைகளுக்குத் தகுதியானவர்களாகச் செய்ய முடியும்.
பாதை போட, அல்லது ஒரு வளர்ச்சி திட்டம் என்று வரும்போது முதலில் இடிக்கப்படுவது குடிசைகள் - அவர்கள் இடம் மாற போதிய அவகாசம் கொடுத்து / மாற்று இடத்திற்கு ஏற்பாடுகள் செய்து - மாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லி செய்யும்போது அந்த வளர்ச்சியில் அவர்களும் ஒத்துழைப்பார்கள். அவர்கள் ஒத்துழைப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் இடிக்கப்படுவது குடிசைகள் - அத்து மீறும் பெரும் வணிகர்கள் மீது எப்போதாவதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பணத்தாலோ, அல்லது செல்வாக்கினாலோ பலம் பெற்றவர்கள், வளர்ச்சிப் பணித் திட்டங்களில் எந்த அளவு பங்கு பெறுகிறார்கள் என்பதும் முக்கியம். குடிசைவாசிகளிடம் காட்டும் அதே தீவிரத்தை இதர பெரும் வணிகர்களிடமும், பல நிலச் சொந்தக்காரர்களிடமும் காட்ட முடிந்திருந்தால் என்றோ நம் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு, நகர அமைப்பில் எத்தனையோ சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கும்.
கட்டுமானத் துறை மற்றும் விவசாயம் தவிர, அரசு கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. குறிப்பாகக் கல்வித்துறை - ஆரம்பக் கல்விக்கூடங்கள்/ இருக்கும் கல்விக்கூடங்களின் தகுதி மேன்மைப்படுத்தப்பட வேண்டும்; பயிற்சி நிலையங்கள் என்று எத்தனையோ வழிகள் உள்ளன. அதேபோல், சுகாதாரம் - ஒரு பக்கம் Super speciality ஆஸ்பத்திரிகள் பெருக்கம் - மறுபக்கம் வியாதிகளுக்கு கவனிப்பாரற்று குழந்தைகள், முதியவர்கள். அரசாங்க ஆஸ்பத்திரிகளின் நிலை - எதைச் சொல்ல? எதை விட?
மீண்டும் உறுதியாகச் சொல்லுகிறேன். தாராளமயமாக்குதல் மற்றும் உலக நாடுகளுக்கிடையே பரஸ்பரம் தடையில்லா வணிகம், இவை நமக்கு நெடுநாள் பார்வையில் பலனளிக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. மனித சுதந்திரம் தொட்டு எதுவானாலும், கட்டுப்படுத்தப்பட்ட எதுவும் வளர்ச்சியடையாது என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை.
வணிகம் விதிவிலக்கல்ல.
ஆனால் எதிலும் ஒரு முறை இருக்க வேண்டும்; ஒரு முதன்மை நியதி (priority) இருக்க வேண்டும்;
கிரமமாக இருக்க வேண்டும் வளர்ச்சி.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் செழிப்பாக இருந்து கொண்டு, மீதிப்பேர் வறுமையில் இருக்கும்போது, நாங்கள் எல்லோரும் எவ்வளவு செழிப்பாக இருக்கிறோம் என்று மார்தட்டினால் என்ன உணர்வு இருக்குமோ அப்படி இருக்கு நம் நிலை இன்று.
Inclusive Growth இருக்க வேண்டும் என்பதுதான் என் கவலை.
மணி சொன்னதில் முக்கியமானது: அரசாங்கங்கள் சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆனால் அவை பணக்காரர்களால் இயக்கப்படுகின்றன (Governments are elected by the masses, but run by the classes) இதைத்தான் ஹைஜாக் என்கிறார்.
உலகமயமாக்கலின் முக்கியமான, கவலைதரக் கூடிய பின் விளைவு என நான் நம்புவது, அது உள்ளூரை (உள்ளூர் மக்கள், கலாசாரம், வணிகம்) தேவையற்றதாக்கிவிடும் (Globalisation will render local inconsequential) என்பது. நந்திகிராமை விட நாஸ்டாக் முக்கியமானதாகிவிடும்.தேவையற்றதைப் புறக்கணிப்பது மனித இயல்பு. நம் கிராமங்கள், அங்குள்ள தொழில்கள்,அவை உற்பத்தி செய்யும் பொருட்கள், அந்த மக்களின் திறமைகள், அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள், அவர்களது வாழ்வாதாரங்கள், அவர்களது நம்பிக்கைகள், அவர்கள்து கலாசாரம் எல்லாம் புறக்கணிக்கப்பு உள்ளாகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க நம் அரசிடம் பணம் இருக்கும். ஆனால் நம் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த 100 கோடி கூட செலவிடப் பணம் இல்லை என்று அரசு சொல்லும். புறக்கணிப்பின் காரணமாக. வறுமை நுழைகிறது. அதன் முக்கியவிளைவு நம் கிராமங்களில் உள்ள மக்கள் அவர்கள் வசமுள்ள் அதிகாரங்களை இழக்கிறார்கள்.They are disempowered.
நகர்புற மக்கள் அவர்களைச் சுற்றி உள்ள உலகம் தேவையற்றதாகிவிட்டதால், தங்களைச் சுற்றி ஒரு செயற்கையான உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது புரிந்து கொள்ள சற்று சிரமமான விஷயம். ஒரு உதாரணம் தர முயற்சிக்கிறேன்.SMS எனப்படும் குறுஞ்செய்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.தகவல் தொடர்பு எத்தனை பரவலாகிவிட்டது, எளிதாகி விட்டது என குதூகலிக்கிறோம். ஆனால் அந்த SMS மூலம் என்ன பரிமாறிக் கொள்ளப்படுகிறது. Content என்று பார்த்தால், frivolous என்று சொல்லத் தக்க அற்ப விஷயங்கள்.நேருக்கு நேர் சந்திப்பது மனம் விட்டு உரையாடுவது, கருத்துக்களில் முரண்படுவது, விவாதிப்பது இவைதான் மனிதர்க்ளுக்கிடையே உறவு ஏற்பட ஆதாரமான விஷயங்கள்.இவை எதுவும் SMSல் நடப்பதாகத் தெரியவில்லை. செயற்கையான உறவுகளோடு செயற்கையான உலகில் வாழ்கிறோம். அதனால்தானோ என்னவோ உறவுகளையும் பிரசினைகளையும் செயற்கையாக சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களை விழுந்தடித்துக் கொண்டு பார்க்கிறோம். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேரடியாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத அரசியல்வாதிகளின் குடுமப்ச் சண்டை, சினிமா நட்சத்திரங்களின் திருமணம் அல்லது திருமண் முறிவு, கம்பெனிகள் ஒன்றையொன்று வாங்குவது அல்லது விழுங்குவது (acquisitions and mergers) இவை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிடுகின்றன. செயற்கையான பரபரப்பு, செயற்கையான வெற்றி, செயற்கையான உறவுகள், செயற்கையான சந்தோஷம் என யதார்த்தமான உலகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதைவிடக் கொடுமை அப்படித் தள்ளப்பட்டுவிட்டதைப் பற்றிய பிரஞ்கையோ, உறுத்தலோ இல்லாமல் வாழ்வது.
உலகமயமாக்கலைப் பற்றி விவாதிக்கும் போதெல்லாம் அதன் பொருளாதாரக் கோணத்தை மட்டுமே பார்க்கிறோம். அது ஏற்படுத்தியுள்ள அரசியல் கலாசார விளைவுகளைப் பற்றி அருணா போன்ற அறிவு ஜீவிகள் கூட் அதிகம் வாய்திறப்பதில்லை என்பதுதான் வருததமாக இருக்கிறது
மாலன்,
அறிவுஜீவி என்ற அடைமொழியைப் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். அறிவுஜீவியோ அல்லது அறியாஜீவியோ அல்லது அறிவில்லாஜீவியோ - ஏதோ ஒருவிதத்தில் ஜீவித்திருக்க விரும்பும் நான் ஏதோ ஒருவிதத்தில் நம் சமுதாயத்தின் மீது அக்கறை இருப்பதால்தான் மேலே உள்ளப் பதிவில் வாய் திறந்து இருக்கிறேன்.
// (Governments are elected by the masses, but run by the classes) //
இது நமது அரசின் செயல்பாட்டின் தவறு; தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உள்ள தவறு. இதற்கு உலகளாவிய ஒரு வணிக முறை என்ற கொள்கை எந்தவிதத்தில் தவறாக இருக்க முடியும்? கொள்கை அடிப்படையில் உலகளாவிய வர்த்தக முறை தவறு என்று இன்றும் நான் நினைக்கவில்லை. உலக நாடுகளிடையே பரஸ்பர கொடுக்கல் வாங்கல் பெரிய தீங்கல்ல. ஆனால் எதையும் தெரிந்து / ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதில்தான் பல தவறுகள் ஏற்படுகின்றன.
இன்றைக்கு எங்கே எந்த சீரழிவு ஏற்பட்டாலும் உடனே அதன் காரணத்தை "உலகமயமாக்கல்" என்ற ஒரு வார்த்தையின் மேல் சுமத்துவது வழக்கமாகிவிட்டது.
கலாசார சீரழிவுக்குக் காரணம் உலகமயமாக்கல்தான் என்று பொத்தாம்பொதுவாக அந்தக் கொள்கையை ஒரு scape goat ஆக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. செய்முறையில் / கொள்கைகளை நிறைவேற்றுவதில் - ஆயிரம் கோளாறுகள் இருக்கும்போது கொள்கையை நோவானேன்?
கிராமப்புறங்களில் இன்றும் முடைவது, கைவினைப் பொருட்கள் அல்லது இதர கைத்தொழில் சாமான்களுக்கு சந்தை இருக்கிறது - நகர்ப்புறங்களில். நெசவுத் தொழில் உட்பட. சந்தைப் படுத்ததான் சரியான வழிமுறைகள் இல்லை.
நம் அடிப்படை சக்திகள் அழியாமல் / நம் கலாசாரம் அழியாமல், அதே சமயம் பரந்த அளவில் உலக நாடுகளுடன் பரஸ்பர வர்த்தகப் பரிமாற்றம் நடக்ககூடாதா என்ன? அதற்குத் தேவையான Political Will இல்லை.
இதில் ஒரு Irony என்னவென்றால், ஒரு காலத்தில் தமிழக அரசர்கள் கடல் கடந்து பல நாடுகளில் வர்த்தக பரிமாற்றம் வெற்றிகரமாக செய்து கொண்டிருந்தனர். கலாசாரத்தையும் பாதுகாத்துக்கொண்டு - ஒரு படி மேலே போய், நம் கலாசாரத்தை அயல்நாடுகளில் படரவிட்டு - கொடிகட்டிப் பறந்தார்கள். நம் தலைமுறையிலோ, இன்னும் உள்ளே சுருங்க நினைக்கிறோம். எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு, நமக்குள்ளேயே முடங்கிக்கொள்ள நினைக்கிறோம். பிறருடன் கலக்காமல் தனியே தீவாய் இருக்க நினைக்கிறோம்.
முட்டுக்கட்டைப் போடப்படும் எந்த ஒன்றும் வளராது - நிச்சயம் வணிகம் வளராது.
செல்போன் தொல்லைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். தகவல் தொழில்நுட்பம் எப்படி சுலபமாகிவிட்டது என்று குதூகலிக்கிறோம் என்கிறீர்கள். இப்படி நாம் உடனுக்குடனே - தமிழில் - இணையத்தில் விவாதிக்க முடிவதே இதே தொழில் நுட்பத்தினால்தான்.
தொழில்நுட்ப விளைவால் ஆயிரம் நல்லதும் கெட்டதும் இருக்கும். டிவி என்ற ஊடகம் சிறப்பான தகவல் பரப்பு சாதனம். ஆனால் மனசையும், மூளையையும் குழம்ப அடிக்கும் ஆயிரம் விஷயங்களையும் சேர்த்தே வருகிறது. எது நல்லது எது தேவை எது தீயவை என்று பாகுபாடு அறிந்து தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது நம் பொறுப்பு - ஒரு சமுதாயத்தின் பொறுப்பு.
கிரஹாம் பெல்லையும், மார்கோனியையும் தினம் வாழ்த்திக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், என்னால் திரும்ப அவர்கள் காலத்துக்குப் போக முடியாது. புதிய தொழில்நுட்ப சேவைகள் என் வாழ்க்கையை எளிதாக்க முடிந்தால் - என் வாழ்க்கையில் ஒரு சுவாரசியத்தைக் கொடுக்க முடிந்தால் - அவற்றை வரவேற்கிறேன் - வியக்கிறேன்.
ஆனாலும் முடிந்தவரை "தீயதைப் பார்க்காதே; கேட்காதே; பேசாதே - என்று என் தொழில்நுட்ப சாமான்களுக்கு என்னால் தடை போடமுடியும் :-)
இதற்கு தான் கிராம மயமாக்கலை (கிராம சுயராஜ்யம்) அன்றே மகாத்மா வற்புறுத்தினார்.ஆனால் மன்மோகன்சிங்
போன்றவர்கள் அன்று விதைத்துவிட்டு
இன்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
விதுரன்
மணி சங்கர அய்யர் மணியான கருத்துக்களைத்தான் சொல்லியிருக்கிறார்.ஆயினும் நடை முறையில் எந்த அளவுக்கு சாத்தியம் ? ஒரு பக்கம் இடது சாரி நண்பர்கள் சொல்வதற்கெல்லாம் ஒத்துப்போகவேண்டிய நிற்பந்தம்.(ஏதோ அந்த CPA வேறு) மறுபக்கம்
உலக வ்ணிகக்கட்டுப்பாடுகள்.
பாவமாக இருக்கிறது. ஓரே வழி . நிதி அமைச்சகத்தையும் வணிக அமைச்சகத்தையும் CPM சார்ந்த நபர்களிடம் விட்டுவிட்டு அக்கடா என்று இருந்தால் சமாளிக்கலாம்
ஏழ்மையின் சதவிகிதம் குறைந்துவிட்டதாகக் கூறுவதை பலர்
ஏற்பதில்லை.ஆய்வுமுறைக்கோளாறே
காரணம்.
ஒருநாளைக்கு ஒரு USD எனும் அடிப்படையில் அனுகினால் சுமார் 45%
மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளாதாகக் கணக்கிடப் படுகின்றதே?
முன்னேற்றத்துக்கு ஒரே வழி ஜனத்தொகை வளர்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தான்.
Post a Comment