காட்சி - ஏதோ ஒரு அறையில்... உலகில் எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அவனுடைய பின் தலை முதலில் தெரிகிறது. நெருங்கிப் போகப் போக அவன் முன்னே இருக்கும் கணினி தெரிகிறது. வேகமாய், பட படவென்று கீ போர்டை அவன் தட்டும் ஒலி... சொல்லப்போனால் அந்த ஒலியைத் தவிர வேறு சப்தம் இல்லை. கணினி திரையில் விதம் விதமாக செய்திகள்/ எண்ணங்கள்/ விவரங்கள். அவன் கண்கள் கூர்ந்து மேய்ந்து கொண்டுள்ளன. கூடவே கைகள் பட படவென்று தட்டிக்கொண்டிருக்கின்றன.
திடீரென்று திரையில் ஒரு அறிவிப்பு. கணினி மின்சாரத் தடையினால் வேலை செய்வது நிற்கப்போகிறது என்று. அவன் முகம் பேயறைந்ததுபோல் ஆகிறது. சட்டென்று ஒன்றும் புரியாமல் மறுபடியும் அங்கும் இங்கும் கீ போர்டைத்தட்டுகிறான் - பதட்டத்துடன். பட்டென்று கணினி செயலிழந்துவிடுகிறது.
கூடவே அவனும்.
போதைப் பழக்கம் உள்ளவன் அது இல்லாமல் தவிப்பதுபோல் அவன் கைகள் நடுங்குகின்றன; முகம் வியர்த்து காலை நீட்டி கூரையைப் பார்த்துக் கொண்டு படுத்துவிடுகிறான். ஆனாலும் புரண்டு புரண்டு படுப்பவனுக்கு பிரமை தீரவில்லை. மறுபடி தூக்கிவாரிப்போட்டு எழுந்து உட்கார்கிறான். அறையைச் சுற்றிலும் பார்க்கிரான். கொத்துக் கொத்தாக செய்திதாள்கள். அனைத்திலும் ஒரே விதமான செய்தி -
technology world;
Terrorism of technology -
Technology swallows your life.
Man isolated.
இந்த ரீதியில் நிறைய செய்திகள். எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெறுமையாக அவற்றைப் பார்க்கிறான்.
மெல்ல அவன் முகத்தில் ஏதோ தீவிரம். அவன் விரல்கள் மெல்ல நகர்கின்றன. மறுபடி கீபோர்டில் வேகமாகத் தட்ட ஆரம்பிக்கிறான். எதிரே திரையில் ஒன்றுமில்லை - வெறும் இருட்டைத் தவிர. சற்று நேரம் கனமான அமைதி.
தொலைபேசி ஒலிக்கிறது. எடுத்துக் காதில் வைக்கிறான். " ஹலோ.... என்ன ஆளையே காணோ? சந்தித்து ரொம்ப நாள் போல ஆகிவிட்டது?" அந்த முனையில் நண்பன் யாரோ... இவன் பதில் பேசவில்லை. பேச முடியவில்லை. முயல்கிறான் ... ஹ்ஹ¤ம்.. முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தை / குரல் வரவில்லை.
அதிர்ச்சியடைந்து ஒரு காகிதத்தை எடுத்து I am...." என்று ஏதோ எழுத பார்க்கிறான். எழுத்தே மறந்துவிட்டாற்போல் இருக்கிறது. கோபத்துடனும் பதட்டத்துடனும் வேகமாக வெற்றுக் காகிதத்தில் கிறுக்குகிறான்.
தூக்கிப் போட்டுவிட்டு தலையில் கைவைத்தபடி அமர்ந்து விடுகிறான்.
நீண்ட அமைதிக்கு பின் சட்டென்று எங்கோ ஒரு குருவி கத்தும் ஓசை. தலை நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து அறைக் கதவைத் திறந்து பால்கனியில் நிற்கிறான்.
சட்டென்று வண்ணங்கள் தெரிகின்றன. நீல வானம்; கருத்த நீலத்தில் சுற்றிலும் மலைகள். கண்ணுக்கு எட்டியவரையில் பசுமை. காற்றில் செடி கொடிகள் ஆடும் ஓசை. தூரத்தில் எங்கோ சலசலக்கும் நீரின் சப்தம். கைகளைத் தலையில் அண்டக்கொடுத்து கட்டியபடி மூச்சை இழுத்துவிட்டு, புதிய காற்றை இழுத்து சுவாசித்து ரசிக்கிறான். முகத்தில் மெல்லிய கீற்றுப் புன்னகை.
சட்டையை மாட்டியபடி வெளியே நடக்க ஆரம்பிக்கிறான். தூரத்தில் சூரிய கிரணங்கள்; மலைகள் வானம் என்று ஒவ்வொன்றாக அவன் கண்களுக்குத் தெரிகின்றன. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாக ரசிக்கிறான். நடக்க நடக்க எதிரே ஒரு புது உலகம் விரிவதை உணர்கிறான்.
ஓடி ஓடி ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு ரசிக்கிறான். சலசலவென்று ஓடும் ஆற்றில் கால் நனைய நிற்கிறான் படுக்கிறான். முகத்தில் பளீரென்று நீரை வாரியடிக்கிறான். நீரைத் தொடும் விரல்களில் ஓடும் புத்துணர்ச்சியை ரசிக்கிறான். விரல்களை நீட்டி னீட்டி, ஆட்டி அசைத்து ரசிக்கிறான். தரையில் ஈர மண்ணைப் பிசைந்து மலை கட்டுகிறான். மண்ணில் படம் வரைய முற்படுகிறான். ஒரு சதுரம். கீழே ஸ்டாண்ட் போல. சே. மறுபடி கணினியின் படமல்லவா வரைகிறோம்? அழித்துவிட்டு வட்டம் வட்டமாக மலரின் படம் வரைகிறான். தன்னுடைய பூ படத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து வாய்விட்டு சிரிக்கிறான். தொண்டையிலிருந்து குரல் "எஸ்".......... என்று அழுத்தமாக வருகிறது. மீண்டும் "எஸ்....." தன் குரலைத் தானே ரசிக்கிறான்.
வண்ணங்கள் குலுங்கும் இயற்கையின் அழகை ரசிக்கும் அவனது பலவித பாவனைகள் freeze frame ல் காண்பிக்கப்படுகின்றன.
படம் முடிகிறது.
சுமார் 6 நிமிடங்கள் - அல்லது அதிக பட்சம் 10 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படம்.
பெயர் Elements. துஷார் பராஞ்ச்பாய் ( Thushar Paranjepe`) என்ற மென் பொருள் தொழில்முறையாளர் எடுத்தது. என்டிடிவியின் NDTV Profit சானலில் சினிமா கிளப் என்ற நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்றது. படம் முழுக்க ஒருவரி கூட இல்லை - நடுவில் வரும் தொலைபேசி நண்பனின் குரல் தவிர.
ஒற்றை வரியில் என் கருத்து.
அருமை.
Tuesday, April 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Neengal vivaritha vidham arumai... Adhai naanae paarthathupoal unargiraen...
Naanum oru menporul thuraiyil panipurivadhaal, ippadathin aazhthayum arthathaiyum nandragvae unara mudigirathu...
நியோடான்,
கருப்பு வெள்ளையிலிருந்து உலகின் / இயற்கையின் / வாழ்க்கையின் இதர வண்ணங்களையும் அனுபவிக்க இது ஒரு தூண்டுகோலாக இருந்தால் மகிழ்ச்சி.
Aruna
Post a Comment