சில சமயம் சில செய்திகள் நம் கண்களில் பட்டாலும் படிக்காமல் போய்விட நேரும் அப்படி எத்தனையோ தவறவிட்டுள்ளேன். அப்படிப்பட்டக் கட்டுரை ஒன்று இன்று என் கண்களில் பட்டது. நல்ல வேளை, இதைப் படிக்காமல் விட்டுவிடவில்லை என்ற எண்ணம் இதைப் படித்து முடித்ததும் தோன்றியது. அதிலிருந்து முடிந்த அளவு தமிழாக்கம் செய்து இங்கே கொடுக்கிறேன்.
நியூயார்க் டைம்ஸில் கருத்துப் பக்கத்தில் ஹெலன் கூப்பர் எழுதியது:
பெண்கள் வாழ லாயக்கற்ற இடங்களில் உலகத்திலேயே மிக மோசமான இடத்தில் வாழும் பெண்களின் ஒரு காத்திருத்தல்.
என் தாய் நாடான லைபீரியாவிலிருந்து காங்கோவில் உள்ள புகாவு என்ற இடத்திற்குப் போவது முடியாத காரியம். ஆப்பிரிக்காவில் எல்லா ஊர்களையும் போல, அடர்த்தியான காடுகளும், இடைவிடாத போர்களும் புழுதி மண்டிக்கிடக்கும் சாலைகளும் இந்த இரண்டு ஊர்களுக்குமிடையே போக்குவரத்தைக் கடினமாக்கிவிட்டிருந்தன.
இருந்தாலும் இரண்டு ஊர்களும் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்தன. சொல்லப்போனால், விமானத்தளம் என்று சொல்லப்பட்ட அந்தச் சிறிய ஒத்தையடிப் பாதைக் கணக்கில் இருந்த விமானத் தளத்தில் என் கால் பதித்தவுடனே, " ஆஹா, கடைசியில் ஒரு வழியாக நம்ம ஊருக்கு வந்துட்டாற் போல் இருக்கே" என்றுதான் புகாவு விமான நிலையத்தில் இறங்கியதும் தோன்றியது. இது ஒரு ஆறு மாதத்திற்கு முன் நடந்த விஷயம். ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையையும் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறும் விதங்களையும் பற்றி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அக்ரா, கானா, எதியோப்பியா, மேக்லே, கிஸ்மு, கென்யா என்று எந்த நாட்டுக்குப் போனாலும் வறுமையையும் ஊழலையும் மீறி, அங்கே இருந்த வளர்ச்சியும் செழுமையும் என் தாய் நாடான லைபீரியாவை விட எவ்வளவோ மேல் என்றுதான் எனக்குத் தோன்றியது.
அதாவது நான் புகாவிற்கு வந்து சேரும்வரை. ஏறக்குறையப் பாலைவனமான எதியோப்பியாவையும், கென்யாவையும் பார்த்தப் பிறகு, லைபீரியாவில் என் ஊரான மோன்ரோவியாவில் உள்ளதுபோல் அடர்ந்த மழைக்காடுகளும் வாழைமரங்களும் நாசியில் வந்து சுகமாகப் படரும் மழையின் ஈர மண் வாசனையுமாக புகாவு எனக்கு ஒரே பசுமையாகக் காட்சியளித்தது. மோன்ரோவியோவில் உள்ளதுபோலவே தேயிலைக் காடுகளும், மலைகளும் பள்ளத்தாக்குகளும் அந்த ஊரைச் சுற்றி இருந்தன.
அதேபோல், தொடர்ந்துப் போர்களினால் சீரழியப்பட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் ஏற்படும் ஒருவித ஆயாச உணர்வும் கூடவே ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சாலைகளில் வேறு வேலையெதுவும் இல்லாமல் வெட்டியாகக் குப்பைகளைக் கிளறும் காட்சி. இந்தக் கண்டத்தில் அடிக்கடி ஏற்படும் போரினால் வியாபாரம் இல்லாமல் குண்டுகளால் துளையிடப்பட்ட கட்டிடங்கள். எப்போதாவது கண்களில் தென்படும் வாகனக்கள் - 10 / 20 பேரை அடைத்துக்கொண்டு. அதுவும் பெரும்பாலும் ஐ நாவின் SUV வண்டிகள்.
ஆனால் இவற்றையெல்லாம் மீறி என்ன கவனத்தைக் கவர்ந்தது புகாவுவின் பெண்கள். ஊருக்குள் வண்டியில் செல்லும்போதே கண்களில் பட்ட இந்தப் பெண்களை நான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்துள்ளேன். முதுமையானப் பெண்கள் - முதுமையென்றால் ஆப்பிரிக்காவில் 35 வயது - முதுகில் பெரிய மூங்கில் பார்னக்களைச் சுமந்து கொண்டு சந்தையில் விற்க செல்லும் பெண்கள். சுமையுடன் மலையேறி குச்சி சேகரிப்பவர்கள். சாலையோரங்களில் பழங்கள், கொட்டைகள், அவித்த முட்டைகள் விற்பவர்கள்.
வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் வாளித் தண்ணீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த இளம் பெண்களும் தென்பட்டார்கள். 10 வயதுப் பெண் ஒருத்தி தூக்க முடியாமல் வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தாள். தன் 4 வயது தங்கையைக் குளிப்பாட்ட.
இந்த ஊர் பெண்கள் என் ஊர்ப் பெண்களின் பிரதிபலிப்புதான். எங்கள் லைபீரியாவில் இபப்டிப் பெண்கள் நிறையக் கஷ்ட்டப்பட்டுள்ளார்கள் - எதிரிக் கட்சிகளின் சண்டையில் மகன்கள் கடத்தப்படுவதைப் பார்த்தப் பெண்கள்; இந்த உட்பூசலில்களில் / சண்டைகளில் சென்ற கணவர்கள் வீடு திரும்பி வந்ததனால் எய்ட்ஸ் நோய் வரப் பெற்றப் பெண்கள்; உட்பூசல்களில் சண்டையிடும் ஆண்களினால் வன்புணரப்பட்டப் பெண்கள்; இப்படிப் பிறந்த குழந்தைகளையும் தோளில் சுமந்து கொண்டு, தலையில் தண்ணீர் தூக்கிக்கொண்டு நடையாக நடக்கும் / வேலைகளை மௌனமாகச் செய்யும் பெண்கள்; இத்தனை துயரிலும் மீனும் முட்டையும் விற்கும் பெண்கள்;
இந்தப் பெண்கள்தாம் சென்ற வாரம் ஓட்டுப் போடச்சென்றார்கள். ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்ட கால்பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் வீ ( George Weah) ஜெயிக்காவிட்டால் நாட்டில் அமைதி கிடையாஹ்டு என்று சவால் விட்டு மார்தட்டிய கட்சிக்காரர்களின் கூவலை இந்தப் பெண்கள் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.
அவர்களின் மிரட்டலையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, இந்தப் பெண்கள், 67 வயதான எலென் ஜான்ஸன் (Ellen Johnson-Sirleaf ) என்றப் பெண்ணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவராகும் முதல் பெண்மணி. உடனேயே, அந்தக் கால் பந்தாட்ட வீரர் ஜியார்ஜ் கும்பல் இந்தத் தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் இடம் பெற்றுள்ளன என்று குற்றம் சாட்டியது - சர்வதேசப் பார்வையாளர்கள் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லியபோதிலும் கூட - எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள ஆண்கள் இப்படியெல்லாம் ஒரு மாயையில் சிக்கியிருப்பது சகஜம்தான்.
ஹார்வேடில் படித்த ஒரு வங்கி அதிகாரியான எலென் ஜான்ஸன் என்ன சாதிப்பார் என்று எனக்குத் தெரியாது. ஒரு வின்னி மண்டேலாவைப் போல் ஆப்பிரிக்கப் பெண்களுக்குக் களங்கமேற்படுத்தியப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் 25 வருடம் போர்களினால் இந்த நாட்டை சீரழித்த ஆண்களுக்கு ஒருப் பாடம் புகட்டுவார் என்று தோன்றுகிறது.
லைபீரியாவில் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளி வர ஆரம்பித்த சமயத்தில், இந்த புகாவு நகரத்தில் நான் காரில் நுழையும்போது என் கண்களில் பட்ட ஒரு பெண் மட்டும் என் முன் பசுமையாக நிற்கிறாள். அவள் தன் 30 களில் இருக்கும் ஒரு வயதானவள். நான் அவளைப் பார்த்தபோது சூரியன் மறையும் அந்திப் பொழுதாக இருந்தது.
தன் முதுகில் பெரியக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு குந்து கொண்டு மலையின் ஏற்றத்தில் ஏறிக்கொண்டு இருந்தாள். பாரத்தில் அவளின் மார்பு கீழே விழுந்துவிடும் அளவு குனிந்து உச்சியில் இருந்த வீட்டை நோக்கி நடந்து கொண்டு இருந்தாள். அவள் பின்னே அவள் கணவன். இன்னும் அவளை வேகமாக நடக்க சொல்லி. அவன் கையில் ஏதுமில்லை. கையை வீசிக்கொண்டு முன்னே நடந்தான்.
இன்று திரும்பி புகாவுக்குச் செல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. சென்று அந்தப் பெண்ணிடம் லைபீரியாவில் நடந்ததைச் சொல்ல வேண்டும்; இந்தத் தேர்தலைப் பற்றி சொல்லிவிட்டு அவளிடம் நான் சொல்ல வேண்டும்; 'பெண்ணே.. உங்களுக்கும் இப்படி ஒரு காலம் வரும்' என்று.
Thursday, November 17, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
பத்திரிக்கையாளர் அருணாவுக்கு நன்றி. உங்கள் கண்ணில் பட்டு, அதை மொழிபெயர்த்து இங்கு இட்டதற்கு மீண்டும் மனமார்ந்த
நன்றி. ஐரோப்பியநாடுகளை ஒப்பிடும்போது, நாம் ஐம்பது ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறோம் என்றால் இவர்கள் இரண்டு நூற்றாண்டுகள்!
ஆஹா.. ஊரு ஒண்ணுகூடிடுச்சுப்பா!
அருணா,
இந்தப் பெண்களுக்கு விடிவுகாலமே வராதா?
Aruna,
Did you get my comment?
Tulsi,
//இந்தப் பெண்களுக்கு விடிவுகாலமே வராதா? // அதான் ஹெலன் அதையும் சொல்லிவிட்டாரே - லைபீரியாவை உதாரணம் காட்டி !!
Usha,
//Did you get my comment?//
no?!!
பிளாக்கரின் புது வடிவிற்கு மாறும்போது திடீரென்று 7 பின்னூட்டங்கள் அனுமதிக்கு காத்துக்கொண்டுள்ளன என்று டாஷ் போர்ட் அறிவிப்பு சொன்னது. அதெப்படி இருக்கும் என்று யோசனையுடன் திறந்தபோது விளம்பரக் குப்பைகளுக்கிடையே உஷாவிடமிருந்து ஒன்றும் வேறொரு அனானி பின்னூட்டமும் இந்த 2005 ம் ஆண்டு பதிவில் இருந்தது தெரிய வந்தது. இப்போது புரிகிறது அந்தப் பதிவில் " Aruna, Did you get my comment?" என்று கேட்டதன் அர்த்தம் ! இத்தனை நாள் எப்படி என் கண்களில் படவில்லை என்று புரியவில்லை!! முதன் முதலில் இருக்கும் உஷாவின் பின்னூட்டம் 14 மாதங்கள் தாமதமாக வெளியிடப்படுகிறது. மன்னிக்கவும் உஷா - சில நேரங்களில் சில தவறுகள்... இதெல்லாம் இணைய வாழ்க்கையில் சகஜம்தானே :-)
Post a Comment