பாலத்துக்குக் கீழே நிறைய தண்ணீர் சென்றுவிட்டது - தமிழ்மணம், தமிழ் நாடு இரண்டிலுமே - என்றுதான் ஒரு மாத இடைவேளைக்குப் பின் பதியும் என் இந்தப் பதிவை ஆரம்பிக்க வேண்டும். திருச்சி, தொட்டியம் அருகே கிராமத்துக்கு சென்றுவிட்டு சென்னைத் திரும்பிய மறு நாள் அங்கே எல்லாம் வெள்ளக்காடாக இருப்பதைப் பார்த்ததும் ஒரு நாள் தாமதமாக வந்திருந்தால் மாட்டிக் கொண்டிருப்போமே என்றுதான் தோன்றியது. நல்ல வேளைத் தப்பித்தோம் என்ற சுய நல உணர்வைத் தடுக்க முடியவில்லை.
இரண்டு மாதம் முன்புதான் அங்கே அமெரிக்காவில் நியூ ஆர்லின்ஸ் புயலைப் பார்த்துவிட்டு இங்கே வந்தால் இங்கே பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு வெள்ளம். படகுகளில் பெட்டிப் படுக்கைகளுடனும் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடனும் பயணம் செய்யும் மக்கள். ஊரிலிருந்து வந்தவுடன் வந்தவுடன் முதல் வேலையாக கிராமத்தில் இருக்கும் நண்பர்கள் வீட்டுக்குப் போன் போட்டு விசாரித்தபோது அவர்கள் குரலில் இருந்த கவலையும் பயமும் என்னையும் தொற்றிக்கொண்டது. நல்ல வேளையாக மறு நாள் தண்ணீர் சற்று வடிந்துவிட்டது என்று கேட்டதும் சற்று நிம்மதி. ஆனாலும் பாவம் அவர்களுடைய வாழைத்தோட்டங்களும் வயல்களும் நீரில் மூழ்கியிருக்கும். ஆனால் கையைப் பிசைந்து கொண்டு நிற்காமல் பலர் வெள்ளத்தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டதைப் பார்க்கும்போது அவர்கள் சுறுசுறுப்பைப் பாராட்டத் தோன்றியது. ஆனால் NDTV யின் செய்தியாளர்கள் செய்தியுடன் கூடிய சம்பாஷணைதான் கடுப்பை ஏற்றியது. நுபுர் பாசு, மாயா சர்மாவிடம், " சரி இனிமே அவர்கள் ( தமிழகமக்கள்) 'தண்ணீர் கொடுங்கள்' என்று கேட்கமாட்டாங்களே? " என்ற தொனியில் பேசியது அநாகரித்தின் எல்லை.
வெள்ளம் எங்கோ திருச்சி போன்ற மாவட்டங்களில் மட்டுமல்ல. பயங்கர மழையினால் சென்னையிலும் இன்று இதே கதைதான். பல இடங்களில் மின்சாரம் இல்லை. ( ஏதோ அதிர்ஷ்டவசமாக என் வீட்டில் இன்னும் மின்சார பகவான் கருணை இருக்கிறது.) சாலைகள் நிலை சொல்லவே வேண்டாம். தன்ணீர் நிரம்பி, மரங்கள் விழுந்து ஒரே குழப்பம்தான்.
மழை, வெள்ளம் இவற்றுக்கிடையே இந்த வாரம் ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது.
தற்போது இணையத்தின் வீச்சு, மற்றும் தாக்கம் இவைகளைப் பற்றியும், இணையத்தை சர்வதேச அளவில் ஏதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் பற்றியும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தகவல் சமூகத்தின் சர்வதேச உச்சி மாநாடு வரும் நவம்பர் மாதம் துனிசியா நாட்டின் ( வட ஆப்பிரிக்காவில் லிபியாவுக்கும் அல்ஜீரியாவுக்கும் மேலே இருப்பதாக இந்த வரைபடம் காண்பிக்கிறது ) தலைநகரான துனிஸ்ஸில் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டின் முதல் கட்டம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் 2003ல் நடந்தது. இந்த விஷயம் பற்றி மேலும் அறிய இங்கே பாருங்கள்.
இணையத்தின் ஆரம்ப கால வளர்ச்சிகள் அமெரிக்காவில் நிகழ்ந்தது என்பதால் அதைக் கட்டுபடுத்தும் அஸ்திரங்கள் தன்னிடமே இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதற்கு மற்ற உலக நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் உள்பட - ஆட்சேபம் தெரிவிக்கின்றன. இணையம் உலகெங்கும் பரவலாக படர்ந்து நிற்பதால் ஐ. நா சபையின் கண்காணிப்பிலோ அல்லது வேறு ஒரு சர்வதேச கண்காணிப்பாளரை ஏற்படுத்தியோ இணையம் ஒரு சர்வதேச கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் எதிர்பார்க்கின்றன. அப்படி சர்வதேச அமைப்பின் கைகளில் இணையத்தின் ஆதிக்கம் இருக்குமேயானால் வணிகம், பாதுகாப்பு என்று பல அம்சங்களிலும் பரவியிருக்கும் இணையத்தில் சுலபமாக ஓட்டைகள் ஏற்பட்டு இணையம் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும் என்று அமெரிக்கா சொல்லும் காரணத்தை மற்ற நாடுகள் நொண்டிச்சாக்காகதான் பார்க்கின்றன. அப்படி செய்தால் இணையத்தின் மீது தனக்கு இருக்கும் ஆதிக்கம் நீர்த்துப் போய்விடும் என்பதுதான் அமெரிக்காவின் முதல் கவலை ( - ICANN (Internet Corporation for Assigned Names and Numbers - என்ற இணைய விலாசங்கள் கொடுக்கும் முக்கிய அமைப்பு அமெரிக்காவில்தான் இருக்கிறது; தவிர பல இணையத் தொடர்புகளின் மூல சர்வர்களும் அங்கேதான் இருக்கின்றன -) என்று இதர நாடுகள் நினைக்கின்றன. இணையத்துக்கு அமெரிக்கா மட்டுமே மூலஸ்தானமாக இருக்கும் நிலை மாறி அமெரிக்காவுக்கு பதிலாக மற்றொரு மாற்று இணைய நிர்வாக அமைப்பு வர வேண்டும் என்ற கோரிக்கை வேகமாக வலுப்பெற்று வருகிறது. ஆரம்பித்தது அமெரிக்காதான் என்றாலும் இன்று இணையம் உலகமெங்கும் இன்றியமையாத தகவல் மையமாகிவிட்டதால் அமெரிக்கா இணையத்தின் மேல் தான் வைத்திருக்கும் "உரிமையை" (???) தளர விட்டுவிட வேண்டும் என்பது உலக நாடுகளின் கருத்து. அப்படி அமெரிக்கா ஆட்சேபித்தால் மாற்று அமைப்பு உருவாக வேண்டும் என்பது அடுத்த கட்ட சிந்தனை. வரும் மாநாட்டில் எப்படிபட்ட தீர்மானம் உருவாகிறது என்று பார்க்க வேண்டும். இணையத்தில் எல்லாவற்றுக்கும் மாற்று அமைப்பு தேடும் காலம் போலிருக்கிறது இது.
Thursday, October 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
மீண்டும் அமெரிக்காவா? ;-) சரி விடுங்கள் இதை வைத்துக் கொண்டு அமெரிக்கா அடுத்த பத்து வருடங்களுக்கு சண்டை போடலாம். இணைய உரிமைகளுக்காக அடுத்த நாட்டின் மீது போர் தொடுப்பதை அமெரிக்கா ஒரு சாக்காக சொல்லலாம் :-)))))))))
//கமலஹாசன் மை.ம.கா.ரா சொல்ற மாதிரி, 'அதெல்லாம் அப்படி அப்படியே வர்ரது' போல.. :) //
அட இதுதான் இதுதான் இதைதான் சொல்றது, மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே.
அட ஜெயஸ்ரீ, இத்தனை அடக்கம் கூடாதுங்க....:-) நாராயண் சொல்வதை இங்கே காப்பியெடுத்து ஒட்டிவிடுகிறேன்...
//மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே.
//
நாராயண், அமெரிக்காவை வம்பிற்கிழுக்காமல் எப்படி இருக்க முடியும்? :-) அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள் மாதிரி எல்லா விஷயத்துலேயும் அவங்க இருக்காங்களே...
//இணைய உரிமைகளுக்காக அடுத்த நாட்டின் மீது போர் தொடுப்பதை அமெரிக்கா ஒரு சாக்காக சொல்லலாம்//
மெல்லப் பேசுங்க புஷ் காதுலே விழுந்துடப்போகுது.... ஐடியாக் கொடுத்ததற்கு உங்களுக்கு ஓடி வந்து பரிசு கொடுத்துட்டுப்போகப்போகிறார். :-)
ராம்கி, மாரியம்மன் கோவிலுக்கெல்லாம் போகலை. ஊர்க்கோவில் மட்டும்தான் :-) அதுசரி... என்னாச்சு, பிளாக்கர் பெட்டியிலே போடாமே அங்கே ஹாலோ ஸ்கேன் பக்கம் வந்துட்டுப் போயிருக்கீங்க ..:-) ஹாலோ ஸ்கேனில் கருத்துப்பெட்டியைக் கொஞ்ச நாளைக்கப்புறம் காலி பண்ணிவிடுகிறார்கள். தவிர, இப்போது என் பதிலை ஏனோ அதில் போட முடியவில்லை. ஹாலோ ஸ்கேனுக்கு ஒரு வழியா மூட்டைக் கட்டி அனுப்பிவிட வேண்டுமோ? எதற்கும் ஒரு அவசரத் தேவைக்கு என்று வைத்துள்ளேன் :-)
அருணா
நலமா? புயலும் மழையும் பற்ரி நமக்கென்ன கவலை. சுனாமியையே சமாளித்துவிட்டோம். நாமென்ன அமெரிக்காவா காட்ரீனா, ரீடா, வில்மா, ஆல்பா என்று தடுமாறி நிலை குலைய?
பத்மா, உங்கள் தொனியில் உள்ளது sarcasm இல்லையென்று நம்ப ஆசைப்படுகிறேன் :-) ஒரு வேளை அப்படியிருந்தால், well, அமெரிக்காவில் குறைகள் தென்பட்டால், உலகில் இன்று இருக்கும் ஒரே வல்லரசு என்ற காரணத்தினால் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் நிறைவுகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. அதேபோல், இந்தியாவில் நன்றாக நடக்கும் விஷயங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. அதற்காக, இங்கே உள்ள குறைகளை gloss over செய்கிறேன் என்று அர்த்தமில்லை. இங்கேயுள்ள குறைகளைப் பற்றிதான் உலகமெங்கும் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்களே... நாம் உள்பட..... சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒரு உறவினர் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருவர் வாய் கூசாது சொன்னார் - " இந்தியா உருப்படவே உருப்படாது சார்.... என்ன ஒரு ஊழல், அரசியல்.... அங்கே பாருங்கள்; இங்கே பாருங்கள்.. என்று மற்ற உலக நாடுகளை உதாரணம் காட்டிப் பேசும்போது, எனக்கு கோபம் வரத்தான் செய்தது. "இப்படிப் பேசும் மனோபாவத்தினால்தான் நம்மிடம் உள்ள குறைகள் மட்டும் பூதாகாரமாக தெரிகின்றன." என்று ஒரு லெக்சர் கொடுத்துவிட்டுதான் நகர்ந்தேன். அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் ஜாக்கிரதையாக வாழைப்பழத்தோலியை பைக்குள் / குப்பைத்தொட்டிக்குள் வீசிவிட்டு செல்லும் நம்மவர்கள் சிலர், அதையே நம்ம பஸ்ஸ்டாண்டில் இறங்கியவுடன் சாலையில் வீசும் மனோபாவம் இது. மற்றவர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். உண்மைதான். ஆனால் நம்மிடம் ஒரு நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். நம் சுய மதிப்பு இப்படி இருக்கும்போது, நமது பலங்கள் நமக்குப் புரிவது சற்றுக் கஷ்டம்தான். சமீபத்தில் கியூபாவில் வில்மா தாக்கியபோது ஒரு உயிர்ச்சேதம் கூட இல்லை என்று படித்தேன். தகுந்த முன்னேற்பாடுகளும், பயிற்சியும் காரணம் என்று அந்தச் செய்தியில் இருந்தது. பாராட்டத்தான் தோன்றியது. தவறு எங்கேயிருந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவதும், நல்லது எங்கேயிருந்தாலும் அதைப் பாராட்டுவதும் நல்ல குணங்கள் என்று நான் நம்புகிறேன்.
உங்களின் இந்தப்பதிவைக்காட்டிலும், இந்தப்பதிவிலுள்ள உங்கள் பின்னூட்டங்கள் வெகுவாக ஈர்த்தது, நன்றி.
அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் ஜாக்கிரதையாக வாழைப்பழத்தோலியை பைக்குள் / குப்பைத்தொட்டிக்குள் வீசிவிட்டு செல்லும் நம்மவர்கள் சிலர், அதையே நம்ம பஸ்ஸ்டாண்டில் இறங்கியவுடன் சாலையில் வீசும் மனோபாவம் இது.
இங்கும் யாரும் பார்க்கலையான்னு பார்த்துட்டு வீசி எறிகிற பழக்கம் இருக்கின்றது, மின் தூக்கிகளில், ரோடுகளில், வீட்டுக்கட்டிடங்களின் தரைகளில் எச்சில் துப்பும் பழக்கம் (முதியவர்கள் மட்டுமல்ல, பல இளையர்களையும் பார்க்கிறேன்) இருக்கிறது. மின் தூக்கிகளில் சிலர் சிறுநீர் போகின்றனர் - சில மின் தூக்கிகளில் 'புகைப்படக்கருவி' பொருத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்புகளைப் பார்க்கிறேன். உங்களுக்குதெரியும் இது ஒரு Fine City என்று. அதனால் நான் சிங்கப்பூரில் இருக்கிறேனா, இந்தியாவில் இருக்கிறேனா என்றில்லை - நான் நானாக இருக்கவேண்டும். சென்றமுறை ஊருக்குச்சென்றபோது சாலையைக் கண்ட இடத்தில் கடக்க என்னால் இயலவில்லை (உயிர்பயம் இன்னொருபக்கம்:(, கண்ட இடத்தில் குப்பை போடவில்லை (ஆனால் புகைவண்டியில் செல்லும்போது சாப்பிட்டுவிட்டு எங்கே தூக்கிப்போடுவது என்று தெரியவில்லை:), அப்படி போட எத்தனித்த உடன்வந்த உறவினர்களையும் வேண்டாமென்று தடுத்திருக்கிறேன். இப்படி நாம், நமது வீட்டிலிருந்து ஆரம்பிப்போமே...
நன்றி.
//நான் சிங்கப்பூரில் இருக்கிறேனா, இந்தியாவில் இருக்கிறேனா என்றில்லை - நான் நானாக இருக்கவேண்டும்.//
அன்பு நீங்கள் சொல்வது மிகச்சரி. இந்த - குப்பையை எங்கே போடுவது - அனுபவம் எனக்கும் நிறைய ஏற்பட்டுள்ளது. பல பொது இடங்களில் சரியானபடி குப்பைத்தொட்டி இல்லையென்பது வாஸ்தவம்தான். குறிப்பாக, ஓடும் பஸ்ஸிலும், ரயில் வண்டியிலும். பொதுவாக நான் என்னுடன் எடுத்துச் செல்லும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொள்வேன் - என் கூட வருபவர்களும் அப்படியே. எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் எனக்கு நேரே ஜன்னலில் குப்பையை வீசினால் அன்றைக்கு அவர் என்னிடம் நன்றாக மாட்டிக்கொள்வார் :-) அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டு இனி பயணம் செய்யும்போது பிறருக்கும் எடுத்துச் சொல்லும்படி இன்னொரு வேண்டுகோள் கட்டாயம் இருக்கும். முன்பெல்லாம் இப்படி சொல்ல ஒரு பயம் இருக்கும் - உனக்கென்ன போச்சு என்று எகிர்வார்களோ என்று. ஆனால் பலர் நட்போடு இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்கிறார்கள். ரயில்களில் ( குறைந்த பட்சம் சமீபத்தில் நான் பயணித்தவற்றில் - ஒரு பெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்கும் இடையே இருக்கும் வெஸ்டிபுல்லில் அல்லது கைகழுவும் வாஷ்பேஸின் கீழ் ஒரு குப்பைத்தொட்டி இருக்கும். அடுத்த முறை கவனியுங்கள். பஸ்களிலும் இந்த வசதியை சீக்கிரம் ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஜெயஸ்ரீ,
//சாதாரண மக்கள் உணர்ந்து சொல்லத் தொடங்கியிருக்கறதுதான் பெரிய விஷயம்.//
இது கேட்க நிறைவாக இருக்கு. பொதுவாகவே சமூக நலனில் பொது மக்களின் பங்களிப்பு - participation - ஆங்காங்கே அதிகரித்துக்கொண்டு இருப்பது இந்தியாவும் முன்னேறும் நாள் அதிக தூரம் இல்லையென்று தோன்றுகிறது.
Aruna
I have heard Americans prasising India in Govt meetings, wholeheartedly. I have seen them congratulating Indians on Independance Day atleast in the meetings I had attended. On Jan 30, in a meeting at State of NJ, we were asked to observe silence for Gandhi during a meeting. Infact One lady representative in UN, appreciated all women movement that are taking place in India and told some of the fellow workers to follow their path. She is not an Indian. I am involved in some, but if I crticize even with good intentions, or write some hurdles we face from political offices in India, it is not welcomed. Indians(those who live in India) think I am not patriotic. Patriotism is like love, can not be measured.
Same way when any country face a problem, the poor suffer and media should have shown sensitivenes and concern and not mock at what happened? I did not see criticism but mockery at Katrina, and Rita.As a planner, now I am looking at those palns that failed and we are evaluating the situation. I think you might agree with me on the exaggerrated mockery at those time. Aprt from that I can write all work that is done behind the scene at UN, or at women rights group and say how thinsg are being done in India in many aspects. Infact if there is no political interference, Indian mid officials can do even much better job that what they do today.
பத்மா,
//Same way when any country face a problem, the poor suffer and media should have shown sensitivenes and concern and not mock at what happened? //
காட்றீனாப் பற்றிய என் பதிவில் எங்கே கேலி இருந்தது என்று புரியவில்லை. நீங்கள் சொல்லும் அதே ஒரு பொது அக்கறையுடன்தான் "எப்படி /ஏன் இப்படி ஆச்சு" என்ற என் எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தேன். பிறரை ஏளனம் செய்வது - அதுவும் சங்கடத்தில் இருப்பவர்களை, அல்லது நம்மிலும் எளியவர்களை, ஏளனம் செய்வது எனக்குத் தெரியாது. தொடர் ஈமெயிலிலும், சில பத்திரிகைகளிலும் தனிப்பட்ட சிலர் நீங்கள் சொல்வதுபோல் எள்ளிப் பேசியிருக்கிறார்கள். உண்மை. ஆனால் மீடியா கேலி செய்தார்கள் என்று ஒட்டு மொத்தமாக ஏன் கூற வேண்டும் என்றும் புரியவில்லை.
அருணா
நான் உங்கள் பதிவை பற்றியோ வலை பதிவர்கள பற்றியோ குறிப்பிடவில்லை. வாரபத்திரிக்கைகள், தினசரிகள் (ஆங்கிலம், தமிழ்) இவை இரண்டைபற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். நான் மீடியா என்று சொலவது பெருவாரியான மக்களை சேர்ந்தடையும் இவற்றை. சமீபத்தில் ஒருநாள் உலக அளவில் வரும் பத்திரிக்கைகளின் காட்ரீனா செய்திகளை சேர்த்து(எல்லா அலுவலகத்திலும் ஒரு PIO உண்டு) அதை ஆராய வேண்டி உழைத்து கொண்டிருந்த நண்பருக்கு உதவ எண்ணி நான் கொடுத்த சில செய்தி துணுக்குகள் இவற்றில் அடங்கும்.paaravin katturaiyum adakkam.
உங்கள் பதிவை குறிப்பிட்டு எழுதியதாக எனக்கு படவில்லை. அது நோக்கமும் இல்லை. தீபாவளி வாழ்த்துக்கள் அருணா
விளக்கத்திற்கு நன்றி பத்மா. இந்தியாவுக்கு இப்போதைய தேவை, ஒரு collective self confidence - a sense of "Do It" spirit - ஆரம்ப மழைத்துளி போல் ஆங்காங்கே இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. இது வலுத்துப் பெருத்த மழையாகப் பொழிய வேண்டும் என்ற ஆவல் எனக்குள் குமைந்து கொண்டு இருக்கிறது.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
யப்பா!
அருணா வந்தாச்சா.வாங்க வாங்க
தூவானமும்,மப்பும்,மழையுமா
மொத்தமா பொழியறீங்க.
பின்னூட்டங்களைத் தனி பதிவா வைக்கலாம் போல அன்பு சொன்னது போல்.
ஜெயஸ்ரீ,பத்மா.........ன்னு அமர்க்களம் தான் போங்க
இப்படியாவது பேசி மகிழ்ச்சியா இருக்கறாப்புல பண்ணிக்கலாம்.
// இப்படியாவது பேசி மகிழ்ச்சியா இருக்கறாப்புல பண்ணிக்கலாம்.//
அதுக்கென்ன மதுமிதா, செஞ்சுட்டாப் போச்சு :-)
தீபாவளி வாழ்த்துக்கள்.
Post a Comment