சரிதான் திருமதி ரேணுகா சௌத்ரி - இந்திய சுற்றுலா அமைச்சர் - இன்று ரொம்ப குஷியாக இருப்பார். - காரணம் இதோ:
Conde Nast Traveler என்ற சுற்றுலாப் பத்திரிகை வருடா வருடம் நடத்தும் "சுற்றுலாப்பயணிகள் தாங்கள் மிகவும் விரும்பும் சுற்றுலா இடம்" என்று தேர்ந்தெடுக்கும் போட்டி முடிவுகள் வெளி வந்துள்ளன. மிகவும் பிடித்த நாடுகள் என்ற வரிசையில் இந்தப் பத்திரிகையின் வாசகர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாடுகளில் 97.33% மதிப்பெண் பெற்று முதன்மையான இடத்தில் இருப்பது - நியூசிலாந்து. ( துளசி, கையைக் குடுங்க...:-)) அடுத்து, தாய்லாந்து (94.44), மூன்றாவது ஆஸ்திரேலியா (93.32%), அப்புறம் இதாலி(92.00).
ஐந்தாவது.....? வேற யார்? இந்தியாதான் (89.43%) !!! :-) அடுத்து பிரான்ஸ் 86.98 %, அப்புறம் USA 85.13 %, சிங்கப்பூர் 81.12%
முதல் இருபது என்ற வரிசையில் இந்தியாவின் இடம் 5 என்று பார்த்துவிட்டுதான் மேலே சொன்ன.... "ஒரு வினாடி.... etc..etc......" என்று ஒரே மகிழ்ச்சி.
தேர்வுக்கு எடுத்துக்கொண்ட முக்கிய அளவுகோல்களில் மூன்று - 1. இயற்கையழகு. 2. சுற்றுச்சூழல் 3. பாதுகாப்பு ( Safety).
இந்தியாவுக்கு இன்னும் பல வரிசைகளில் ( category) நல்ல மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஹோட்டல்களில் ஜெய்ப்பூரில் இருக்கும் Oberoi Rajvilas. 95.56% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் பகுதியில் முதல் இடம். சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற ராபில்ஸ் ( Raafles Hotel) கூட 89.52% பெற்று நான்காவது இடத்தில்.
இதைப் படித்தவுடன் "ஆஹா, நம்ம சுற்றுலா இடங்கள் பிரமாதமாக ஆகிவிட்டது போலிருக்கே என்று அப்படியே நம்பிவிடவும் முடியவில்லை. ஏனென்றால், தூசி படிந்த, உடைந்த அரும் பொருட்கள் உள்ள அருங்காட்சியகங்களும், விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் விட்டு வெளியே வந்தவுடன் இருக்கும் குழப்பங்களும் இன்னும் இது, அது என்று கண்களையும் மனசையும் உறுத்தும் குறைகள் பல இந்தியாவில் இருக்கதான் செய்கின்றன. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி இந்தியாவை உலகிலேயே மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்த வாசகர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் இருக்க வேண்டும்.
இந்தியாவின் Spa மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இந்த வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மிகவும் பிடித்த Spa வரிசையில் 97. 15% மதிப்பெண் பெற்று முதலிடத்தில் இருப்பது இமயமலைத்தொடரில் இருக்கும் ஆனந்தா Spa. ஆனால் பிடித்த நகரங்கள் வரிசையில் ஒரு இந்திய நகரம் கூட வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக மொத்தம் கூட்டு மதிப்பாக கிடைத்த மதிப்பெண்களை வைத்து தயாரித்த வரிசையில் முதல் நூறில் இந்தியாவின் இந்த ஆனந்தா Spa இரண்டாவது இடம். இதிலும் முதல் இடம் துளசி ஊர்தான்.) 45 வது இடத்தில் மறுபடி இந்தியா, மொத்த மதிப்பெண்படி நிற்கிறது.
இவற்றைத் தவிர, உள் நாட்டில் எளிதான பயண வசதிகள், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் நிறைய ஆகாய விமானத் தொடர்புகள் ( இந்தியாவின் உள்ளூர் விமான சேவையில் தனியார் துறையின் கவனிக்கத்தக்க பங்கை இங்கேக் குறிப்பிடாமல் இருக்க முடியாது) சினேகமான மக்கள் (!!)இவையெல்லாமும் காரணமாக இருக்கலாம் என்பது என் அவதானிப்பு.
எப்படியானாலும் எனக்கு இது சந்தோஷமான ஆச்சரியம்தான். முன்பெல்லாம் இயற்கையழகை இப்படி கொட்டி வைத்துக்கொண்டு இந்தியாவின் சுற்றுலா மூலம் வரும் வருவாய் பரிதாபமாக இருக்கிறதே என்று பக்கம் பக்கமாக எழுதிக் கடுப்பாகிப்போனப் பத்திரிகையாளர்களில் நானும் ஒருத்தி. ஒரு முறை சுற்றுலாத் துறை பற்றி செய்திக் கட்டுரை எழுதுவதற்காக டில்லியில் அன்றைய சுற்றுலா தலைமையதிகாரியாக இருந்தவரிடம் தகவல் சேகரிக்கும்போது அவர் கூறியதை இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது.
" இன்னும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க, நீங்க பாட்டுக்கு ஏன் அப்படி செய்யக்கூடாது? ஏன் இப்படி என்று ஏதாவது கேட்டுவிட்டு எழுதிவிடுவீர்கள். நாமும் செய்யலாம்தான். ஆனால் அப்புறம் ஏகமாக 'ஆகா, இந்தியா ஒரு சொர்க்கம்' என்று உலகத்தில் எல்லோரும் திரண்டு வருகிறார்கள் என்றே வையுங்கள். அப்படி ஆச்சுன்னா, இங்கே நம்பளாலே தாக்குப் பிடிக்க முடியுமா? நம்ப அடிப்படைக் கட்டுமானத்துறை - infrastructure - பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தால் தாங்குகிற மாதிரி இருக்கா? எல்லாம் ஓரளவு இப்போதைக்கு மித அளவில் இருந்தால் போதும். இருங்க... இப்போ நான் சொன்னதெல்லாம் off the record."
பின்னே, சுற்றுலாத் துறை தலைமை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர் வேறு எப்படி பேசுவார்?
சரி. இப்போது சில புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்:
- இந்த வருடம் இந்திய சுற்றுலாத் துறை 5 மில்லியன் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறதாம். 2000 ஆம் வருடம் இது 2.60 மில்லியனாக இருந்தது.
- 2003 ல் 15 சதவிகித வளர்ச்சி இருந்த இந்தத் துறை 2004 ல் 22 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது.
- வருவாயும் 2003 ல் 16 சதவிகித வளர்ச்சியாக இருந்தது 2004ல் 32 சதவிகித வளர்ச்சியாக மாறியுள்ளது.
- இந்தியாவின் GDP யில் பலதரப்பட்ட சேவை தொழில்கள் மூலம் ( Service Industry) 54.2 % வருவாய் வருகிறது. இதில் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைக்கு குறிப்பிடத் தகுந்த அளவில் பங்கு உண்டு.
- 2003-04 ல் சுற்றுலாத் துறை கொண்டு வந்த மொத்த வரவு ( Foreign exchange earnings ) US $ 3,533 மில்லியன்.
- ஆனாலும் உலகளவில் இந்தியாவின் சுற்றுலாத்துறையின் பங்கு - பயணிகள், மற்றும் வருவாய் - பரிதாப நிலையில்தான் உள்ளது. 0.4 சதவிகிதம் மட்டுமே. இதைக் குறைந்த பட்சம் 1 சதவிகிதத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று இந்திய அரசு முனைகிறது.
இந்தத் துறைகள் வளர்ச்சியடைவதில் ஒரு முக்கிய ஆதாயம் - சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சம்பந்தமான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளி நாட்டுக்குப் புலம் பெயர்ந்தோர் ஊருக்குப் போகும்போது அவர்கள் குடி பெயர்ந்த நாடுகளில் இருக்கும் வசதிகள் இந்தியாவிலும் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
பொரிமாத் தோண்டி கனவு காண்கிறேனோ?!
பி.கு: சொற்குற்றம், பொருட்குற்றங்கள், புள்ளி விவரக் குற்றங்கள், வாசகர்கள் சுட்டிக் காட்டியபின் நிதானமாகத் திருத்தப்படும் - தவறாக இருந்தால் :-) தினமும் பத்திரிகைகளில் வரும் Errata பகுதி போல :-)
5 comments:
எனக்கு பதினோராவது இடத்திலிருக்கும் நாட்டையிட்டுக் கவலைதான் வந்தது.
பதிவுக்கு நன்றி.
அருணா இந்தாங்க என் கை! உங்கப் பதிவைப்பார்த்துதான் எனக்கு விஷயமே தெரியும்.
அதான் முதலிடம்னு எல்லாம் சொல்லிட்டாங்கல்லே, நீங்க எப்ப வரப்போறீங்க?
நவம்பர் முதல் மார்ச் வரை அருமையா இருக்கும். குளிர் கொறைஞ்சுரும்.
இங்கே இயற்கை அழகுமட்டும்மில்லை. ச்சின்ன விஷயமெல்லாம் ஹிஸ்டாரிக் பாயிண்டுதான். கேப்டன் குக் ஒன் பாத்ரூம் போன இடத்துக்கும் கல்வெட்டு வச்சுருவாங்கன்னு கலாட்டா பண்றதுதான் நான்!
வசந்தன்,
இந்த முடிவுகளின் ஆரம்பத்தில் இருக்கும் தேர்வு நடத்திய விவரங்களில் இருக்கும் வரிகளைக் கவனித்தீர்களா? அதாவது குடுக்குற காசுக்குக் குறைவில்லாம சுற்றுலாக் காட்சிகள் வாரிவழங்கும் நாடு எது என்றால் இந்த வாசகர்கள் தேர்ந்தெடுத்தது பிடிவாதமாக எப்பவும் போல் இலங்கைதான். ("........while the country that offers the best value for money is, you are quite adamant, Sri Lanka (94.76)...." )
கவலைப்படாதீங்க. பதினோராவது நாடும் முதல் இடங்களில் வந்து விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
துளசி,
இருங்க, இப்பதான் சூரியன் மறைகிற இடத்திலே இருக்கேன். முதல் சூரியன் கிடைக்கிற இடத்துக்கு வர வேளை வராமப் போயிடுமா? :-)
//சின்ன விஷயமெல்லாம் ஹிஸ்டாரிக் பாயிண்டுதான்.//
நல்லாச் சொன்னீங்க. அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் கிழக்காசிய நாடுகள் என்று எல்லா நாடுகளுமே
சின்னச் சின்ன சரித்திரப் பின்ணணிகளைக் கூட வெளிச்சம் போட்டு / பெரிதாக விளம்பரப் படுத்திக் காண்பிப்பதில் முனைந்து நிற்கின்றன. இந்தியாவில் சரித்திரம் பாடப்புத்தகத்தில் மட்டுமே. அதுவும் சில சமயம் அரசியல்வாதிகளால் "மறு வாசிப்பு /பதிவு" செய்யும் பரிதாபத்தை என்ன சொல்ல?
///கவலைப்படாதீங்க. பதினோராவது நாடும் முதல் இடங்களில் வந்து விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.///
ஐயோ ஐயோ ஐயோ.
பதினோராவது இடத்தில இருக்கிறதுக்கே வயித்தெரிச்சல் தாங்க ஏலாமக்கிடக்கு.
இதுக்குள்ள இன்னும் முன்னுக்கு வருமெண்டு வயித்தில புளியக் கரைக்கிறியள்.
என்போன்றவர்களுக்கு (பொதுவாக தமிழர்களுக்கு என்றுகூடச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்) உல்லாசப் பயணத்துறையில் சிறிலங்காவின் பணப்பெருக்கம் ஒருபோதும் துளியும் விரும்பத்தகாத விடயமே.
இதன்பின் பலத்த அரசியல் உண்டு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயஸ்ரீ, வசந்தன்.
Post a Comment