"You don't need a shrine to feel the divine around you"
வளவளவென்று ஏதோ அரட்டை போய்க்கொண்டிருந்த அந்த இடத்தில் சட்டென்று ஒரு மௌனம் - ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே - நிலவியது. சொன்னது யாரோ தாடிவைத்த ஞானி அல்ல. கணினித் துறையில் ஆராய்ச்சிக்குப் படிக்கும் ஒரு மாணவி. போகிறபோக்கில் சொல்வதுபோல் சாதாரணமாக வார்த்தைகள் அவரிடமிருந்து இந்த வார்த்தைகள் வந்து விழுந்த மாதிரி இருந்தாலும் இப்படி ஆழமான கருத்து வெளிப்படுவதற்குப் பின்னால் நிறைய சிந்தனைகள் இருந்திருக்கின்றன என்று புரிந்தது.
புஷ்ஷின் புதுக் குழப்பமான, மனிதன் மற்றும் உலகின் ஆரம்பம் பற்றி, பரிணாம வளர்ச்சி பாடங்களுடன் கூடவே Intelligent Design பங்கு பற்றியும் பள்ளிக்கூட அறிவியல் வகுப்புகளில் சொல்ல வேண்டும் என்ற வலியுறுத்தலும், அதைத் தொடர்ந்து எழும்பியிருக்கும் சர்ச்சைகள் மற்றும் புஷ் விடுமுறையில் தங்கியிருக்கும் பண்ணை வீட்டுக்கு வெளியே ஈராக் போருக்கு எதிராக கூடாரமடித்து "விரதமிருக்கும்" தாய் சிண்டி, என்று பேச்சு எங்கோ போய் காஷ்மீரில் வந்து நின்றது. அப்போதுதான் அந்தப் பெண் அவர் குடும்பத்தின் கைலாச அனுபவத்தை விவரித்தார்.
சீனாவின் திபேத் ( இந்தப் பகுதி சீனாவைச் சேர்ந்ததாக இந்தியா ஏற்றுக்கொண்டுவிட்டபடியால் இப்படி கூறுவதுதானே சரி?) பகுதியில் இருக்கும் மானசரோவர் மற்றும் கைலாச மலைக்கு அவர் குடும்பம் சென்று வந்ததைப் பற்றி அங்கே மண்டியிருக்கும் இயற்கையழகை விவரிக்கும்போது, யாரோ கேட்டார்கள், " ஹிந்துக்களின் புண்னிய பூமி என்று நாம் போகிறோமே? அங்கே உள்ள கோவில் பெயர் என்ன? " என்று. " அங்கே ஏதும் கோவில் இல்லை. இமாலய மலையும் இயற்கை சுனைகளும்தான். யாத்திரை செல்கிறவர்கள் நம் கதைகளில் சொல்லப்படும் கைலாய மலை; சிவன் வாழும் இடம் என்று ஒரு நம்பிக்கையில்தான் போகிறார்கள்." என்றார். சொல்லிவிட்டு, ஒரு கனமான மௌனத்திற்குப் பின் ஆரம்பத்தில் சொன்ன வாக்கியத்தை நிறுத்தி நிதானமாக சொன்னார். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருந்திருக்கும்.
கைலாயம் என்றில்லை. எந்த இடத்திலுமே, பிரமாண்டமான இயற்கையழகின் நடுவே காற்றின் ஓசை மட்டுமே பரவி இருக்க, மௌனமாக நின்று வெளியே இருக்கும் பிரமாண்டம் நம் உள்ளும், புறமும் வியாபிக்க விட்டுவிட்டு இயற்கையுடன் ஒன்றாக கலக்கும்போது மனசில் தோன்றும் அபரிதமான அமைதி இருக்கே..... அது நிஜமாகவே Divine. அவர் சொல்வதை அன்று அனைவருமே ஆமோதித்து, உணர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
இவர் சொல்லும் இந்த மனோபாவம் இன்று பல இளைஞர்களிடம் காண்கிறேன். கடும் பனியில் ஊரே வெண் போர்வையில் இருக்க அமைதியான நடுநசிக்கு மேல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வீட்டுத் திரும்பும் போது அந்த அமைதியில் தன்னை மறப்பதாக ஒரு மாணவர் கூறினால், இன்னொருவர், Grand Canyan வரை நீண்ட வெற்று வெளியும் ஆகாசமுமே துணையாக அந்த அகண்ட வெளி தனக்குக் கோவில் போல புனிதமாக இருந்தது என்றார் இன்னொருவர்.
ஏன், எப்படி, ஏன் கூடாது என்று கேள்விகள் கேட்டு, சிந்தனைகளை வளர்த்து, தங்களுக்கு என்று வழியை நிர்மாணித்துக்கொள்ளும் இளைய தலைமுறையினர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.
சிந்திக்கும் மனிதர்களை உருவாக்கும் அஸ்திவாரமான கல்வித்துறையில் போய், கடிகாரத்தைத் திருப்பி வைக்கும் விதத்தில் புஷ் இப்படி ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்க வேண்டாம். பதிவுகளில் நிறைய பேர் இதைப் பற்றி அலசியாச்சு. நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இரண்டு நாள் முன்பு அந்த இளைஞர்களுடன் நடந்த சுவாரசியமான பேச்சு, மறுபடி சிந்தனையைத் தூண்டிவிட்டது. ஒருவிதத்தில் புஷ்ஷின் எண்ணம் சரியாக இருக்கலாம் - அதாவது, எல்லாவிதமான கோணங்களும், மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில். ஆனால் உத்தேசங்களுக்கும், அனுமானங்களுக்கும், தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் விஞ்ஞானத்தில் ஏது இடம்? மாணவர்களுக்கு மாற்றுக் கருத்துகள் தெரிந்திருக்க வேண்டுமென்றால் இந்தக் கருத்துக்கள் சரித்திர வகுப்பிலோ, பிலாஸபி வகுப்பிலோ விளக்கப்படலாமே? விஞ்ஞானத்தில் கையை வைக்க வேண்டாமே?
இதில் சுவாரசியமான விஷயம், புஷ் கிளப்பிவிட்ட இந்த சர்ச்சையைப் பற்றிய
சென்ற வாரக் கட்டுரையில் டைம் பத்திரிகை, நான்கு விஞ்ஞானிகளை " பரிணாம வளர்ச்சி மற்றும் கடவுள் இரண்டிலுமே ஒரே சமயம் நம்பிக்கை வைக்க முடியுமா" என்று கேட்டதற்கு, நான்கில் மூன்று விஞ்ஞானிகள் முடியும் என்று திட்டவட்டமாக பதிலளித்துள்ளனர். இவர்களில் Francis Collins, - இவர் National Human Genome research Institute, அமைப்பில் Director - சொல்லியிருக்கும் கருத்துக்களில் மேலே எடுத்துக் காட்டியுள்ள இளைஞர்களின் மனோபாவம் வெளிப்படுகிறது.
இவர் சொல்கிறார்: " காலம், இடம் கடந்து எங்கும் வியாபித்திருப்பதாக சொல்லப்படும் கடவுள், பரிணாம வளர்ச்சி என்ற ஒரு இயற்கையான முறை மூலம் உங்களையும் என்னையும் உலகத்தையும் உருவாக்கியிருந்தால் அது ஒரு பிரமாதமான செயல் திட்டம் இல்லையா? தவிர, அவருடைய செயல்களை நாம் இன்று கண்டுபிடிக்கும் திறமையையும் சந்தர்ப்பத்தையும் கொடுத்திருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் அது கொண்டாடப் பட வேண்டிய விஷயம். Human Genome Project க்கு நான் தலைமை வகிக்கிறேன்.... மனித DNA வில் அடங்கியிருக்கும் அத்தனை விஷயங்களும் வெளி வந்துவிட்டன. நான் ஒரு கிறிஸ்துவனும் கூட. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் என்னைப் பொறுத்தவரை ஒரு வழிபாடு. " என்று கூறும் இவர், முத்தாய்ப்பு வைத்தால்போல் சொல்லியிருக்கும் வார்த்தைகளில் ஆழம் இருக்கிறது. " விஞ்ஞானம் கடவுள் பற்றி நிச்சயமாக உண்டு இல்லை என்று நிரூபிக்க முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், வாழ்க்கையின் அர்த்தம் பற்றி அடிப்படைக் கேள்விக்கான பதில்கள் எனக்கு விஞ்ஞானத்தில் இல்லை. மாறாக, என்னை யோசிக்க வைப்பவை, சரி, தவறு என்று ஆராய்ந்து பாகுபாடு செய்யத் தெரிந்திருக்கும் மனிதனின் அபாரமான சக்தியும், கிறிஸ்துவின் நிஜமான சரித்திரம் சொல்லித்தரும் உண்மைகளும்தான்."
காலப் போக்கில் எந்த கோட்பாடுகளுமே கேள்விகளுக்குட்பட்டுப் பிறகு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படுகிறது. உலகம் தட்டையானது என்று ஆணித்திரமாக நம்பிய ஒரு சமுகம் காலப்போக்கில் ஆதாரங்களுடன் நிரூபணம் கிடைத்தபின்தான் எது உண்மை என்று புரிந்து கொண்டது. இன்று சத்தியம் போல் தோன்றுபவை நாளை மாறலாம். மனிதனின் ஞானம் இப்படிதான் படிப்படியாக விரிந்துள்ளது. இன்னும் எத்தனையோ கணக்கில் அடங்காத அளவு உண்மைகள் இயற்கையில் பொதிந்துள்ளன. காலப்போக்கில் விடைகள் வரும்.
ஆனால், நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதையும் விஞ்ஞானத்தையும் சேர்த்து குழப்பி....? ஹ்ம்ம்.....இங்கும் கல்வித்துறை அரசியல்வாதிகளிடம் பந்தாகிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.