Tuesday, July 05, 2005

ஒரு நடனக்கச்சேரி - வானில் !


வாய்ப்பு கிடைத்தால் சில விஷயங்களை நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் இருக்கும் இல்லையா? - தாஜ்மஹால், இமயமலைப் பகுதிகள், லே, (Leh), லடாக் போன்ற பகுதிகள், எகிப்தின் பிரமிட், டில்லியில் குடியரசு அணிவகுப்பு/ Beating the retreat என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இதில் அமெரிக்காவின் ஜூலை 4ந்தேதி பட்டாசு வாண வேடிக்கை ஏனோ என்னைப் பொறுத்தவரையில் இதுவரை இருந்ததில்லை.

ஆனால் இன்று San Jose நகரில் நேரில் பார்த்துவிட்டு வந்ததும் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் லிஸ்டில் சேர்க்க வேண்டிய விஷயம் என்று நினைத்துக் கொண்டேன். இங்கே மக்களின் வெளிப்படையான, இயல்பான தேச பக்தியும் ஆரவாரமும் ஒரு பக்கம் இருக்கட்டும். ( கூட்டமோ கூட்டம்.... மயிலாப்பூர் அறுபத்து மூவர் உற்சவ சூழல்தான்..... பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம் வண்டி உட்பட. வாண வேடிக்கை நடக்கும் மைதானத்தில் அவரவர் மடக்கு நாற்காலி, ஜமக்காளம் சகிதம் - சாலையோரத்தில்- உட்கார்ந்து விட்டார்கள்.

இரவு 9.30க் நிகழ்ச்சி என்று போட்டிருந்தது. 9. 12க்கு போயாச்சு. வானத்தையே பார்த்தபடி இருக்கையில் வாணவேடிக்கை வித்வான் மெல்ல சுரம் போட ஆரம்பித்தார். ஓரிரண்டு மேலே போய் வெடித்தது - கைதட்டல் தொடர.
கொஞ்ச நேரத்தில் இன்னும் ஓரிரண்டு வெடித்து சுருதி சரிபார்க்கப்பட்டது. சரியாக 9.30க்கு தேசிய கீதம் தொடங்கி முடிந்து உடனேயே வானத்தில் நடனக் கச்சேரி களைகட்டத் தொடங்கிவிட்டது. இங்கொன்றும் அங்கொன்றுமாக, சிதறும் வண்ண ஒளிக் கீற்றுக்கள் ஆரம்பித்தன. பல்லவி, அனுபல்லவி என்று படிப்படியாக வானத்தில் கச்சேரி நிஜமாகவே வர்ண ஜாலம் நடந்தது. அவ்வப்போது நடனமாடும் வர்ணக் கீற்றுக்களில் சிலவற்றுடன் ஒலியும் சேர்ந்து கொண்டது. 20 நிமிடம் கழித்து கடைசியில் கிளைமாக்ஸாக மள மளவென்று மேலே ஒளிர்ந்து வெடித்து ஒரு "தில்லானா" செய்தது பாருங்கள் - மனசில் மூச்சு முட்டும் குதூகலம் - breath taking. ஒரு வழியாக படிப்படியாக குறைந்து மங்களம் பாடி கச்சேரி முடிந்தது.

இந்த வாணவேடிக்கையின் பின் ஜம்பேலி என்ற பட்டாசு நிறுவனத்தின் உழைப்பு இருக்கிறது. ஜூலை 4 க்கு தேவையான பட்டாசுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் இது முதன்மையானது. இடம்: பென்சில்வேனியா மாகாணத்தில் நியூ கேசில்.

இந்த வாண வேடிக்கை எல்லாமே கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு நடன அமைப்புதான். ( choreography) மேலே சென்று வெடிக்கும் பட்டாசு எல்லாமே கணினி மூலம் நிரல் ( programme) செய்தபடி இயங்குகிறது. இவற்றில் இயங்கும் இசையும் இவ்வண்ணமே வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாமே கணினி மூலம் தானே இயங்கும்படி அமைக்கப்பட்டவை. ( fly by ராக்கெட் விட்டு, பல மில்லியன் வருஷங்களாக இருக்கும் வால் நட்சத்திரத்தை சைடில் நம்ம ஊர் தண்ணி லாரி மாதிரி வேண்டுமென்றே மெனக்கெட்டு மோதி இடித்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு - நேற்று நாசா, டெம்பிள் 1 என்ற வால் நட்சத்திரத்தை இடித்து நடத்திய அந்த மற்றொரு வாண வேடிக்கையைதான் குறிப்பிடுகிறேன் - இந்த கம்ப்யூடர் வாண வேடிக்கையெல்லாம் ஜூஜுபி இல்லையா?)

அந்டோனியோ ஜம்பேலி என்ற இதாலி நாட்டுக்காரர் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று வருடாவருடம் ஜூலை 4 அன்று 3500க்கும் மேற்பட்ட வாணவேடிக்கை நடத்துகிறது இந்த நிறுவனம். வெடி மருந்துகள் தயாரிப்பதிலிருந்து, பின்னர் வெடி மருந்து அடைக்கப்பட்ட பெரிய பெரிய குழாய்களை வரிசையாக மைதானத்தில் நிறுத்திவைத்து அவற்றை இயக்கி, மேற்பார்வைப் பார்த்து, கடைசியில் அவற்றை திரும்ப எடுத்து அடுக்கி அடுத்த வருடத்துக்குப் பத்திரப்படுத்துவது வரையில் சுமார் 3000 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக உயரம் சென்று வெடிக்கும் பட்டாசு தயாரித்து கின்னஸ் புத்தக்த்திலும் இந்த நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த "Thunder over Louisville" என்ற வாண வேடிக்கை கெண்டகி திருவிழாவில் ( kentucky Derby festival) பத்து கணினி மூலம், 3200 அடி பாலத்தின் மீதிருந்து இயக்கப்பட்டதாம்.

இவர்கள் தளத்தில் சென்று பாருங்கள். ஹ்ம்ம்.... சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் நினைவு வருகிறது.
அதுசரி. சுற்றுச் சூழல் - அது இதுவென்று ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா எப்படி இவ்வளவு பெரிய சுற்றுச் சூழலுக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு கொண்டாட்டத்தை தொடருகிறார்கள்?சுதந்திர தின பட்டாசு வெடிப்பது அவர்கள் பாரம்பரியம்; ஐதீகம். அதெல்லாம் விடக்கூடாது என்று இருக்குமோ? இருக்கலாம் எற்கனவே இங்கே கொழுந்துவிட்டு எரியும் தேசபக்தி இப்போ outsourcing மற்றும் உலகமயமாக்கல் சவால்களில் இன்னும் அதிகமாகவே உள்ளது. எக்கசக்க jingoism. தேசீயக் கொடியை மற்ற நாடுகளும் தயாரித்து அனுப்புகின்றனவாம். ஆனால் உள்ளூரில் தயாரித்த கொடிகளையே பயன்படுத்த வேண்டும் என்று பலர் விரும்புகிறார்களாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

"Be American Buy American" இந்த வாசகத்தை ஒரு டிவி நிகழ்ச்சியில் பார்த்தேன் !!!!

3 comments:

Sud Gopal said...

Oh,madam.
U must have had a wonderful time there in US of A.
That was a good article.me felt as if i had been there.

Anand V said...

The one I went to is not much different from what you wrote. Some pics I took of the fireworks I took arehere >a>

Aruna Srinivasan said...

உங்கள் கருத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி, சுதர்சன், ஆனந்த், கணேசன்.

ஆனால், கணேசன் மன்னிக்க வேண்டும்; தேசபக்தி பற்றிய உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. அமெரிக்கர்கள் இயல்பாக தேசபக்தியை வெளிக்காண்பிப்பதை விவரித்தேன். சரி. அதனால், இந்தியர்களின் தேச பக்தியைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அர்த்தமில்லை. தேசபக்தி, அன்பு, - என்று, இது போன்ற உணர்வுகளை எல்லாம் எந்த அளவு கோள் வைத்தும் மதிப்பிடமுடியாது. வெளிக்காட்டிக்கொள்வதில்லை என்பதால் நமக்கு தேசப்பற்று இல்லை என்று முடிவு கட்டுவது சரியல்ல. இன்னும் சொல்லப்போனால் என் கண்ணோட்டத்தில் பொதுவாக புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் தேசப்பற்று என்பதை சற்று கூடுதலாகவே வெளிக்காண்பிப்பது ஒரு பாரம்பரியமாகவே உருவெடுத்துள்ளது என்பது என் கருத்து / அவதானிப்பு. பரவலாக எல்லா நாடுகளையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்.

பொதுவாக ஒரு விஷயத்தை அங்கீகரிக்கும்போதோ அல்லது சிலாகிக்கும்போதோ வேறொன்றை தாழ்த்தியோ, குறைவாகவோ நினைக்கிறோம் என்று அர்த்தமில்லை.

தவிர, தேசபக்தி பற்றி எனக்கு நிறைய விடை தெரியாத கேள்விகள் உண்டு. அதைப் பற்றி பிறகு விரிவாக அலசுகிறேன்.