Tuesday, June 14, 2005

மரபுகளுக்கு அப்பால்...

பட்டமளிப்புவிழா என்றால் கறுப்பு கவுனை மாட்டிக்கொண்டு எல்லோரும் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு நம்ம மூளைக்கு எட்டாத சமாசாரமெல்லாம் பேசிக்கொண்டு இருப்பார்கள். சரி. இதுக்கு என்றே வந்தது என்னமோ வந்தாச்சு. கொட்டாவியை அடக்கிக்கொண்டு நமக்கு வேண்டிய தருணம் வரும்போது மட்டும் காமராவில் இரண்டு க்ளிக்கிகொண்டு வந்துவிடவேண்டியதுதான்.சரி என்ன உடை? வீட்டில் குட்டி ஆலோசனைகள். கணவர்: "மரியாதையாக சூட்டில் போனால்தான் நன்றாக இருக்கும்." " அதெல்லாம்வேண்டாம். எப்பவும்போல் சாதாரண உடை போதும்." இது மகன்கள். ஆனாலும் கணவருக்கு சமாதானமாகவில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் Formal Attire என்று டிரெஸ் கோட் இருக்குமே? என்று அவர் சொல்வதை இளைஞர்கள் சுத்தமாக Veto செய்துவிட்டார்கள். நல்ல வேளை. என்னை ஒன்றும்சொல்ல முடியாது. பத்துப் பாத்திரம் தேய்ப்பதிலிருந்து, மகாராணி எலிஸபெத்தின் தேநீர் விருந்து வரை - அதற்கு இன்னும் அழைப்பு இதுவரை வந்ததில்லை. யார் கண்டார்கள்? எனக்கு பாக்கி இருக்கும் வருடங்களில் நான் ஏதாவது எக்குத் தப்பாக சாதனை புரிந்து பக்கிங்ஹாம் பேலஸ் அழைப்பு வந்தாலும் வரும். அப்போது ஒரு வேளை சார்லஸ் மன்னராக இருப்பாரோ?:-) - எனக்கு எப்பவும் புடவைதான். அதனால் எனக்கு உடைப் பிரச்சனை எப்பவும் எழுந்ததில்லை.

ஒரு வழியாக பட்டமளிப்பு நடக்கும் திடலுக்குப் போயாச்சு. ஸ்டான்·போர்ட் வளாகத்தில் இருக்கும் அதன் பெரிய விளையாட்டு அரங்கம் - Stanford Stadium - பிரசித்தி பெற்றது என்றார்கள். World Cup Soccer மற்றும் Olympics நிகழ்ச்சிகள் நடக்கும் இடம். பட்டமளிப்பு உரை "ஆப்பிள்' கணினியின் நிறுவனர்களில் ஒருவரான Steve Jobs. விழா ஆரம்பிக்கும் நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்பு குட்டி விமானம் ஒன்று, ஒரு வால் பட்டத்தைத் தூக்கிக்கொண்டு வட்டமடிக்க ஆரம்பித்தது. அதில் எழுதியிருந்த வாசகம்: " Steve, don't be a mini Player. Recycle All E Waste". சுற்று சூழல் பாதுகாப்பு வாசகம். தினமும் கம்ப்யூடர்கள் மாறிக்கொண்டிருப்பதால் எக்கச்சக்கமாகத் தூக்கியெறியப்பட்டு எலக்டிரானிக் குப்பை அதிகரித்து சுற்றுச்சூழல் கெடுகிறதாம். இதைத் தடுக்க ஆப்பிள் போன்ற கணினி நிறுவனங்கள் பழைய மெஷின்களைத் திரும்பி வாங்கி recycle செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் சுற்று சூழல் இயக்கம் ஒன்றின் ஏற்பாடு இந்த விண்வெளி பானர்.

புல் வெளியில் நடுவே போடப்பட்டிருந்த மேடையின் அலங்காரத்தையும் சுற்று வட்டாரத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் திடலுக்குள் ஒரு வாசல் வழியாக கொடியுடன் ஊர்வலம் வர ஆரம்பித்தது. சரி விழா களைக்கட்டியாச்சு. அணி அணியாக புதுப் பட்டதாரிகள் நுழைவார்கள் என்று பார்க்க ஆரம்பித்த அடுத்த வினாடிகளில் சட்டென்று சலசலப்பு கண்ணில்பட்டது .உற்று நோக்கியபோது அணிகள் கலைந்து அவரவர் வேகமாகத் திடலுக்குள் தாறுமாறாக ஓடி வருவது தெரிந்தது. காலரியில் உட்கார்ந்திருந்த எங்களுக்கு ஒன்றும்புரியவில்லை. என்ன இது. இப்படி ஏன் வரிசையில்லாமல் ஓடி வருகிறார்கள் என்று குழம்பியபோது அடுத்து நிகழ்ந்ததெல்லாம் ஒரே ஆச்சரியம்.

புதுப் பட்டதாரிகள் அனைவரும் உள்ளே ஆரவாரமாக நுழைந்து அவரவர் இஷ்டத்துக்கு ஏறிக்குதித்து, நடனமாடிக்கொண்டு மைதானம் முழுவதும் ஜாலியாக ஓடி விளையாடத் தொடங்கினார்கள். ஓடி வந்தவர்கள் கையில் பலவித விளையாட்டு சாதனங்கள். சிலர் Frisbee விளையாட ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் வலையைக் கட்டி வாலிபால் தொடங்கினார்கள். இன்னும்சிலர் குட்டிக்கரணம் போட்டபடி ஓடிப்பிடித்துக் கொண்டும் சீண்டிக்கொண்டும் - இன்னொரு பக்கம் சிலர் உடைகளைக் களைய ஆரம்பித்தார்கள் !!! இங்கே நமக்குத் தூக்கிவாரிப்போட்டது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வெறும் உள்ளாடையுடன் Frisbee மற்றும் பந்து விளையாட்டுகள் ஆட ஆரம்பித்தார்கள். பட்டதாரி கவுன்கள் தரையில் பரிதாபமாக.
பலர் கைகளில் பலவித உருவங்களில் ஊதப்ப்பட்ட பலூன்கள் மற்றும் Floats. மீன்கள்,கார்கள் என்று டிசைன்கள். சத்தமும் பாட்டுக் கூத்தும் - சர்க்கஸ் கூடாரத்திலிருப்பதுபோல் இருந்தது. தேன் குடித்த நரி என்பார்களே... அப்படி ஒரு கலாட்டா.

இதன் நடுவில் காலரியில் இருக்கும் தங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், நண்பர்கள் இவர்களுக்கு கையை ஆட்டியபடி; செல்போனில் "நீ எங்கே இருக்கே? நான் இதோ.. " என்று கூவிக்கொண்டு.... ஒரே ரகளைதான். ஒவ்வொரு குழுவும் கையில் விதம் விதமாக பேனர்கள் - பெற்றோர், மற்றும் படிக்க உதவியவர்களுக்கு நன்றி அறிவிப்புகள். ஆனால் பலவற்றில் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி இருந்தது யோசிக்க வைத்தது. " Steve, give us jobs"; " Steve, Hire me"; " we have degrees; but no employement" இந்த ரீதியில்.
பலர் விதம் விதமாக முகமூடி மற்றும் Fancy உடைகளில் வந்திருந்தார்கள். நான்கு பட்டதாரிகள் அட்டையில் செய்த டாமினோக்களை மேலே மாட்டிக்கொண்டு டான்ஸ் செய்தவண்ணம் இருந்தனர். பின்னர் பார்வையாளர்கள் காலரி முன் வரிசையாக நின்றுவிட்டு திடீரென்று பொதுகடீர் என்று ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர் - சீட்டுக்கட்டால் ஆன வீடு சரியுமே அதுமாதிரி. இப்படி ஒன்று சரிந்தால் பின்னாடியே எல்லாம் சரிவதை Dominos effect என்பார்கள் இல்லையா? இந்தப் பட்டதாரிகள் இன்றைய சந்தை மற்றும் பொருளாதார நிலையை இப்படி சித்தரிக்கிறார்களாம் :-) இன்னொரு பக்கம் ஆறு பெண்கள் தலையில் தங்கள் கறுப்பு பட்டத்திற்கு மேல் வெள்ளை லேஸ் போட்டுக்கொண்டு நின்றிருந்தார்கள். அவர்கள் கையில் பிடித்திருந்த பேனரில் வாசகம். : " Just Married என்று எழுதி, Married என்பதை அடித்து மேலே Graduated" என்று திருத்தம் செய்து !! ஒரு பெண் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆரம்பித்த நிறுவனங்களில் ஒன்றான Pixer animation உருவங்களில் ஒன்றைத் தன் தலையிலிருந்த கறுப்புப் பட்டத்தின் மேல் வைத்திருந்தார்.

மொத்தத்தில் இந்தப் பட்டதாரிகள் செய்த குறும்புக்கு அளவில்லை. மேடையில் பல்கலைக் கழக தலைவர் உரை ஆரம்பித்தபின்னர் ஒருவழியாக அவரவர் தங்கள் மேலே பட்டதாரி அங்கியை மாட்டிக்கொண்டு தங்கள் இடத்தில் வந்தமர்ந்தனர். அமர்ந்தபின்னரும் தலையில் இருந்த பட்டத்தைத் தூக்கிப்போட்டுப் பிடித்து ஆட்டம். உள்ளாடைகளுடன் பந்து விளையாடியவர்கள் அப்படியே ஓடி வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர்.
முக்கிய விருந்தினர் ஸ்டீவ் ஜாப்ஸ் பேச ஆரம்பித்த பின்னர்தான் கறுப்பு அங்கியை மேலே அணிந்து கொண்டனர். அப்படியே... வெறும் உள்ளாடை மேலேயே !! அதோடில்லை. பட்டமளிப்பு உரையாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் கூட தன் பட்டமளிப்பு அங்கியின் கீழ் ஜீன்சும் காலில் சாதாராண செருப்பும்தான் அணிந்திருந்தாராம்.

Stanford University பட்டமளிப்பு விழா எப்போதுமே இப்படி Informal ஆக இருப்பதுதான் இங்கே சம்பிரதாயமாம். பொதுவாக அமெரிக்காவில் பட்டம் பெறுவதை " Walk" என்கிரார்கள். இங்கே இதை Wacky Walk என்பார்களாம். ஹ்ம்ம்.. நாங்கள் என்னடாவென்றால் என்ன உடை அணிவது என்று அரைமணி நேரம் விவாதித்திருக்கிறோம் !

மாணவர்கள் இத்தனை கலாட்டா செய்தாலும் ஸ்டிவ் பேசியதை மிகவும் ரசித்தார்கள். ஆப்பிள்காரர் பேச்சு உண்மையில் ரொம்ப சுவாரசியமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. சில பொன் துளிகள்:

  • நான் எந்தப் பட்டமும் பெற்றதில்லை. நான் ஒரு drop out. உண்மையில், பட்டமளிப்பு என்று நான் பங்கு கொள்ளும் விழா இதுவாகதான் இருக்கும்.
  • உங்களுக்கு எதுப் பிடிக்கிறதோ அதில் நம்பிக்கை வைத்து செய்யுங்கள். பிடித்தது எது என்று இன்னும் பிடிபடவில்லையென்றால் அது என்ன என்று தேடுங்கள். எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை என்று கிடைத்ததை வைத்துக் கொண்டு செட்டில் ஆகிவிடாதீர்கள். உள் மனசு சொல்வதைக் கேட்கப் பழகுங்கள். அதன்படி நடக்க முயலுங்கள்.
  • சென்ற வருடம் எனக்கு கான்ஸர் என்று முடிவானபின் என் வாழ்நாள் சில மாதங்களே என்றனர். அப்போதுதான் என் மனசில் நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி நிறைய இருப்பது புரிந்தது. வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் பொதுவான, நிச்சயமான ஒன்று இறப்பு. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று புரிந்து கொண்டால் நம்மில் இருக்கும் பாதி குழப்பங்கள் தீர்ந்துவிடும். நாளை இறந்துபோய்விட்டால் என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துக் கொண்டால் பல சாதனைகளை உங்களையறியாமலேயே செய்துவிடுவீர்கள்.
  • உங்களுக்கு என்று பாதை வகுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்று வாழ்க்கை குறிப்பிட்ட அளவுதான். அதையும் பிறர் சொல்படி வாழ்ந்து வீணாக்காதீர்கள். புள்ளிகள் வைப்பது முக்கியம். அவற்றை எப்படி இணைப்பது என்று குழம்பாதீர்கள். புள்ளிகள் வைத்துவிட்டால் கோடுகள் தானே வந்து சேரும்.

ஆரம்பத்தில் பட்டதாரிகள் செய்த ஜாலி அமர்க்களத்திற்கு நேர்மாறாக ஸ்டீவ் பேச்சு நெகிழ்வாக, மனசைத் தொடுவதாக அமைந்திருந்தது. தன் வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசினார். ஸ்டீவ் பிறந்தபோது அவரது தாய் அவரைத் தத்து கொடுத்துவிட்டார். குழந்தையாவது நன்றாக செழிப்பாக வளரட்டுமே என்ற எண்ணத்தில். தத்து கொடுக்கும்போது தன் மகன் ஒரு பல்கலைக் கழகப் பட்டதாரியாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. ஆனால் அவரை வளர்த்தப் பெற்றோர்களுக்கு இவரது கல்லூரி செலவு சுமையாக இருக்கும் என்று தோன்றியதாலும், கடனே யென்று ஏதோ படிப்பு படிக்க தான் விரும்பாததாலும் எட்டு மாதத்திலேயே படிப்பைப் பாதியில் விட்டார். ஆனாலும் தனக்குப் பிடித்த வகுப்புகள் சிலவற்றுக்கு போய்க்க்கொண்டிருந்தார். பழைய பாட்டில் விற்ற பணத்தைக் கொண்டு இந்த வகுப்புகளுக்குப் பணம் கட்டி, அருகில் இருந்த ஹரே கிருஷ்ணா கோவில் பிரசாதம் வயிற்றுப் பாட்டைக் கவனித்துக்கொண்டது. இவர் ஆவலுடன் சென்ற வகுப்புகளில் ஒன்று Calligraphy. எதிர்காலத்தில் அது எப்படி பயன்படும் என்று இவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பின்னால் மாகிண்டாஸ் உருவாக்கியபோது இந்த அறிவைப் பயன்படுத்திக் கொண்டார். "ஒரு வேளை நான் படிப்பை நிறுத்தியிருக்கவில்லையென்றால், அந்த Calligraphy வகுப்புக்கு சென்றிருக்கமாட்டேன். மாக்கிண்டாசுக்கு அற்புதமான வடிவமும் கிடைத்திருக்காது.


ரொம்ப சீரியஸான பேச்சுதான். சொல்லப்போனால் கம்ப்யூடர் உலகின் முக்கிய மும்ம்மூர்த்திகள் - Steve Jobs, Bill Gates, மற்றும் Oracle நிறுவனத்தின் Larry Ellison அனைவருமே படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கையே ஒரு பாடம்.


இருந்தாலும் கஷ்டப்பட்டுப் படித்து பட்டம் வாங்கியவர்களிடம் பேசும்போது " படிப்பு அவசியமில்லை" என்று பேசியது சரிதானா என்றும் தோன்றுகிறது. அவர் சொல்ல வந்ததை இளைஞர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே? ஏற்கனவே அவர்கள் பட்டங்களையும் கவுன்களையும் காற்றில் பறக்க விடும் மூடில் இருந்தார்கள். ஆனாலும் பட்டமளிப்பு விழாவின் சம்பிரதாயமான வாசகங்களில் ஒன்றான "உங்களுக்கு வழங்கபடுகிற இந்த பட்டத்தின் Rights, responsibilities and Privilages இவற்றை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள்" என்று பல்கலைக்கழக தலைவர் கூறியதும் அவர்கள் மனதில் பதிந்திருக்கும்.

இந்த rights, responsibility and privilages மந்திரம் இருக்கே, இது பொதுவாக எல்லோரும் - நாடு, மதம்,மொழி - கடந்த ஒரு வேதம்.
ஹ்ம்ம்.... கல்வி கற்பவர்களெல்லோரும் இந்த வேத வாக்கின்படி நிஜமாகவே நடக்க ஆரம்பித்தால்.....?! என் கண் முன் ஒரு ஆதர்ச உலகம் விரிகிறது - கனவில் :-)
"சுத்த போர்" என்று குரல் கேட்கிறதே... யாரங்கே...? அவரைக் கொண்டு திரும்ப கி.பி. 2000 சொச்சம் ஆண்டுகளில் விட்டுவிட்டு வாருங்கள். :-)

8 comments:

Anonymous said...

அன்புள்ள அருணா,

நல்ல பதிவு!!!!

//அப்போது ஒரு வேளை சார்லஸ் மன்னராக இருப்பாரோ?:-) //-

நோ ச்சான்ஸ்!!! கமீலாவைப் பண்ணிண்டதாலே சிம்மாசனம் போச்சு! வில்லியம்ஸ் தான்
அடுத்த ராஜான்னு இப்பவே கனஜோரா ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சாச்சு:-)// எனக்கு எப்பவும் புடவைதான். அதனால் எனக்கு உடைப் பிரச்சனை எப்பவும்
எழுந்ததில்லை//

ஆமாம். புடவைதான். ஆனா என்ன புடவை? அதுதானே பெரிய தலைவலி:-))))

என்றும் அன்புடன்,
துளசி.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருணா, நன்றாக விவரித்திருக்கிறீர்கள். இதமாய் இருக்கிறது.

அன்பு said...

அருமையான அனுபவம்... அதை அப்படியே பதியாமல் கூடுதல் தகவலோடு பதிந்திருக்கின்றீர்கள், நன்றி.

உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

Anonymous said...

சந்தைப் பொருளாதாரம் அதன் சொந்த வீட்டிலேயே 'குமட்டில் குத்து' வாங்க ஆரம்பித்திருப்பதை அறிய சந்தோஷம்.
மாலன்

Anonymous said...

சுவையான பதிவு.

நன்றி

அன்புடன்

ராஜ்குமார்

Anonymous said...

அருணா சிறப்பான பதிவு.. இதை அப்படியே எனது "நம்பிக்கை" குழுமத்தில் இட விரும்புகிறேன்.

NambikkaiRAMA said...

மேற்சொன்ன கமெண்த் என்னுடையதுதான். தொடர்ந்து இதைப்போன்ற பதிவை கொடுங்அக்ள் . வாழ்த்துக்கள்!

Aruna Srinivasan said...

செல்வராஜ், துளசி, அன்பு, மாலன், ராஜ்குமார், பாஸிடிவ் ராமா, நன்றி.

துளசி, நானும் முதலில் அப்படிதான் யோசித்தேன். ஆனால் ராஜரீதியாக சார்லஸ் அரசராக வரத் தடையேதுமில்லை என்று அவர்கள் திருமணம் சமயம் செய்தி வந்தது. ஆனால் காமிலா ராணியாக முடியாது. சார்லஸ் அரசராகும்பட்சத்தில், காமிலா, வேல்ஸ் இளவரசி என்று அழைக்கப்படுவாராம். ஆனாலும் ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரி. மக்கள் ஓட்டு வில்லியம்ஸ்க்குதான். :-)

மாலன், ரொம்ப சந்தோஷப்படாதீர்கள். இதெல்லாம் ஒரு சுழற்சி; அவ்வளவுதான் :-) இருந்தாலும் கஷ்டம் என்று வரும்போது, நான் மொத்தமாக, நாடு மொழி பேதம் இன்றி, மனிதர்கள் என்ற ரீதியில்தான் பார்க்கிறேன். கட்டுபாடுகளற்ற, பரஸ்பர புரிதலோடு கூடிய, உலகளாவிய வணிக முறையில் என் நம்பிக்கை இன்னும் சற்றும் குறையவில்லை. :-)