Friday, November 05, 2004

இன்னும் கொஞ்சம் தேர்தல் அலசல்

ஐந்தாவது முறையாக இந்தப் பதிவை ஏற்றுகிறேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. முதல் வரியும், கடைசி வரியும்தான் பதிவாகிறது.

அமெரிக்க தேர்தல் பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். என் வேலையை இவர் சுலபமாக்கி விட்டார். இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.
நேற்று ஹிந்துவில் வந்த Fear Was the Key என்ற கட்டுரை.


சுட்டி இங்கே.




தென்னாசிய பத்திரிகையாளர் அமைப்பு ( SAJA) நேற்றிரவு ஒரு வலை செமினார் நடத்தியது. இந்த அமைப்பின் முதல் வலை செமினார் இது. India Abroad பத்திரிகையாளர் ஆஸிஸ் ஹனீபா, SAJA நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன் இவர்களுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் பத்த்ரிகையாளர்களும் பங்கேற்றார்கள். உலகின் பல இடங்களிலிருந்தும் யார் வேண்டுமானாலு பங்கு கொண்டு கேள்வி கேட்கலாம். குறித்த நேரத்தில் என் கணினி வழியே பிசிரில்லாமல் ஸ்ரீநாத் னிவாசனின் குரல் 11.30(IST)க்கு வர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பேச்சாளர்கள் பொதுவாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ( ஜிண்டால் மற்றும் ஸ்வேதா) பற்றியும் எப்படி அதிக அளவில் இந்தியர்கள் அமெரிக்க அரசியலில் பங்கேற்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நேரம் விழித்திருந்து முழுதும் கேட்க முடியவில்லை. நான் தூங்கி விழும் முன் காதில் விழுந்த துண்டு விவரங்கள்.

1. கெர்ரிக்காக 400 / 500 இந்தியர்கள் உழைத்திருக்கிறார்கள்.
2. பாகிஸ்தானியரும் இந்தியர்களும் எவ்வளவு எலியும் பூனையுமாக இருந்தாலும் கெர்ரி வர வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள். ( வேறு என்ன? ஈராக் போர் எதிர்ப்புதான் காரணம்.)
3. புஷ் மன்மோஹன் சிங் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வரலாம். அப்படி வந்தால் பாகிஸ்தானும் எட்டிப் பார்ப்பாரா? அல்லது இந்தியாவுக்கு ஸ்பெஷல் வருகையா?
4. இந்தியர்கள் வாக்களித்த விதத்தை அலசிய ஒரு பத்திரிகையாளர் சொன்ன தகவல் - மூத்த தலைமுறை இந்தியர்கள் புஷ்ஷ¤க்கும், இளைஞர்கள் கெர்ரிக்கும் ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்தார். (ஹ்ம்ம்.. இந்திய இளைஞர்கள் எண்ணிக்கை பெரியவர்களைவிட குறைவாக இருந்திருக்கு போலிருக்கு) 5.இளைய தலைமுறை இந்திய பத்திரிகையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
6. outsourcing - H1B விஸா சமாசாரங்கள் பற்றி கவலைகளுக்கு தேவையில்லை. ஒருவர் சொன்னார் - H1B விஸா 90,000 க்கு அதிகரிக்க வேண்டும் என்று.

அவ்வளவுதான். ஈராக் போர் போன்ற சமாசாரங்கள்? ம்ஹ¤ம். சுத்தமாக அதெல்லாம் அவர்களுக்கு முக்கியமாக படவில்லை. அனுபவம் வாய்ந்த பத்த்ரிகையாளர் செமினாரில் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.

இந்த செமினாரை SAJA தளத்தில் கேட்கலாம்.

6 comments:

Boston Bala said...

இந்தியாவுக்கு மட்டுமா புஷ் வருகை... சான்ஸே கிடையாது.

ரவியா said...

//ஐந்தாவது முறையாக இந்தப் பதிவை ஏற்றுகிறேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. //

C.I.A ???

Aruna Srinivasan said...

ரொம்ப சரியாகச் சொன்னீர்கள் பாலா: ( டிவியில் வரும் வினா-விடை பாணியில் படிக்கவும் :-)

ரவியா, டுபியாவின் கழுகுப்பார்வை தேமெனென்று இந்தியாவில் ஒரு மூலையில் உட்கார்ந்து கீ போர்டைத் தட்டும் என் மேலெல்லாம் விழுமா என்ன? :-)

dondu(#11168674346665545885) said...

எனக்கு என்னவோ அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாக வருவதுதான் பிடித்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் வாய் கிழியப் பேசுவதோடு சரி. பதவிக்கு வந்ததும் ஒரே விளக்கெண்ணைதான். கென்னடியைப் பற்றி இந்தியர்கள்தான் நல்லக் கருத்து வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் அவருக்கு அந்த அளவு நல்லப் பெயர் இல்லை. இப்போதுதான் அவருடையக் காதல் லீலைகளைப் பற்றியும் அவர் குடும்பத்தினருடன் மேபியா தொடர்புகளும் தெரிய வருகின்றன. கிளின்டனின் லீலைகள் உலகறிந்ததே. நிக்சனின் வாட்டர்கேட் விவகாரம் கூட மற்ற (இந்தியா உள்பட) நாடுகளில் நடப்பதை விட அதிகம் கிடையாது. நம்மூர் இந்திரா காந்தி செய்யாததா? பிரான்ஸை சேர்ந்த ஒரு தலைவர் கூறினார்:"வாடர்கேட், நாங்கள் எங்கள் ஊர்களில் பலமுறை வாட்டர்கேட் செய்யப் பட்டுள்ளோம்" (Watergate! Nous avons été watergatés maintes fois.)

Aruna Srinivasan said...

Dondu,

புஷ்ஷின் பாலிஸிகளைப் பற்றிய இந்த சுட்டிகளை கொஞ்சம் நோட்டம் விடுங்கள்.

http://www.johnkerry.com/rapidresponse/w_environment.html

http://biz.yahoo.com/prnews/040929/dcw018_1.html?printer=1

http://www.ndsmcobserver.com/news/2004/03/29/Viewpoint/Students.Suffer.The.Effects.Of.Bushs.Educational.Policies-643554.shtml


இதெல்லாம் உள்ளூர்காரங்க கவலைகள் என்று விட்டுவிட்டாலும், என்னைப் பொறுத்தவரையில் அநியாயமாக ஈராக் மேல் பாய்ந்ததற்காகவே புஷ் போயிருக்க வேண்டும். மனிதாபிமானம் என்று ஒன்று உண்டு. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் பலவித விளைவுகளை ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஒன்று உண்டு. இவையெல்லாம் புஷ்ஷிடம் இல்லை. கென்னடி, கிளிண்டன் போன்றோர்க்கு இந்தியாவில்தான் மதிப்பு. உள்ளூரில் இல்லை என்று சொல்கிறீர்கள். இது ஒரு பொத்தாம்பொதுவான கண்ணோட்டம் - மதிலின் எந்தப் பக்கம் இருக்கிறோமோ அதைப் பொறுத்த கண்ணோட்டம். சில சதவிகித வித்தியாசங்களினாலேயே புஷ்தான் வேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள் என்றில்லை. சொல்லப்போனால் புஷ் தலைமையில் இருக்கும் அமெரிக்காவில் இருக்க விருப்பமில்லாமல், வெளியேற வேண்டும் என்று பல அமெரிக்கர்கள் நினைப்பதாக பாஸ்டனில் இருக்கும் என் அண்ணா பெண் கூறுகிறாள்.

dondu(#11168674346665545885) said...

நான் புஷ் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் கூறத் தயாராக இல்லை.
1964 தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லிண்டன் ஜான்ஸன் உத்தமர் போல "வியட்னாமிலிருந்து அமெரிக்கத் துருப்புகளை திரும்பப் பெறுவதே நலம்" என்றுப் பேசினார். குடியரசுக் கட்சி வேட்பாளர் பாரி கோல்ட் வாட்டரோ வட வியட்னாம் மீது குண்டு போடுவதுதான் சரி என்றுக் கூறினார்.
லிண்டன் ஜெயித்தார். நடந்தது என்ன? எல்லொருக்கும் தெரியும். வியட்னாம் யுத்தம் நிக்ஸன் காலத்தில்தான் முடிவுக்கு வந்தது. அதற்காக நிக்ஸன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுத்தார். அதே நிக்ஸன் வாட்டர்கேட் விவகாரத்தில் எல்லொராலும் கை விடப்பட்டு பதவி துறக்க நேரிட்டது.
வாட்டர்கேட் புளுகை விடப் பெரியப் புளுகைச் சொன்ன கிளின்டன் தப்பித்தார். அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா (கவுண்டமணி கூறுவது போல).
ஆகவே நான் அமெரிக்கர்கள் தரப்பிலிருந்து நோக்கிக் கூறுகிறேன். "குடியரசுக் கட்சியினர்தன் அதிபர் பதவிக்கு அதிகப் பொருத்தம்". என் அபிப்பிராயம் 51 சத விகித மக்களுக்கும் இத்தேர்தலில் இருந்திருக்கிறது. புஷ் ஜெயித்தார். அவ்வளவுதான்.