Monday, May 31, 2004

சரியாக ஒரு வருடம் முன்பு, 31.5.2003 அன்று என் முதல் பதிவு :-)

அலைகள்

கொந்தளிக்கும் அலைகளும்
அலைபாயும் கடலும்
கடலெனப் படர்ந்த வானமும்
வானமே எல்லை என்ற மனமும்
மனதில் துளிர்த்த எண்ணங்களும்
எண்ணங்கள் அளாவிய
அணு ஒவ்வொன்றும்
இவையாவும் ஒன்றேதானோ?

அருணா

Sunday, May 30, 2004

"பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு"

பத்ரி நேற்றைய பதிவுக்கு கொடுத்திருந்த பதிலுக்கு என் பதிலை இங்கே பதிகிறேன். மிக நீளமாக இருந்ததால் இது எளிதாக இருக்கும் என்று தோன்றிற்று.
பாண்டுகள் மூலம் பணம் திரட்டும் திட்டம் நல்லதுதான்.Infrastructure Bond மாதிரி, அல்லது வெற்றிகரமாக இருந்த Resurgent Bond மாதிரி பொது மக்களிடமிருந்து பணம் திரட்டலாம். பத்ரி சொல்வதுபோல் கறுப்பு பணம் வெளி வரவும் வழி செய்யலாம். சிதம்பரத்தின் முந்தைய பீரியடில் செய்தது போல் VDIS கூட ஓகே. ஆனால் இந்த மாதிரி கறுப்பு பணம் வெளிக்கொணர பாண்டுகள் உபயோகிக்கப்படுவது ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். இது ஒரு வழக்கமாகவே ஆகிவிடும். "இப்போ பதுக்கலாம்; அதுதான் ஏதாவது பாண்ட் திட்டம் வருமே அப்போது வெள்ளையாக்கிக்கொள்ளலாம்" என்ற ரீதியில் எண்ணம் உருவாகலாம்.

அதனால் அவசரத் தீர்வுகள் இல்லாமல், நெடுங்காலம் (Longterm) பயன் அளிக்கும் வண்ணம் ஏதாவது திட்டம் இருக்க வேண்டும். அதனால்தான் சிதம்பரத்தின் "முதலீடு" "பசி" நல்ல யோசனையாக தோன்றுகிறது. தனி மனிதர்கள் / professionals / ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் இவர்கள் ஒரு பயமின்றி பல துறைகளில் முதலீடு செய்யும் சூழ்நிலையை அரசு அமைத்துக் கொடுக்கலாம். எளிதான கடன் வசதி; ஊக்குவிப்புகள் (incentives) என்ற ரீதியில். உதாரணமாக தண்ணீர் இல்லாத இடங்களில் desalination வசதிகள் அமைக்கவோ, அல்லது நீர் வசதி மிக்க இடங்களில் இருந்து நீர் அல்லாத இடங்களுக்கு வினியோகிக்கும் அமைப்புகள் உருவாக்கவோ ( தண்ணீர் லாரிகள் அல்ல; வேறு முறையான longterm வினியோக முறை தீர்வுகள்) ஆங்காங்கே தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க்லாம். இவை ஒழுங்காக செயல்பட்டு மகக்ளை சென்றடைகிறதா என்று கவனிக்க ஒரு regulator இருக்கலாம். பலவித தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதுபோல.

தவிர, இந்த "பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு" என்ற திட்டத்திலும், கிட்டதட்ட disinvestment தொனி இருக்கிறதே? அதாவது, அரசு நிறுவனங்களின் பங்குகளை ஒரு சில குறிப்பிட்ட தனியாரிடம் குறிப்பிட்ட சதவிகிதம் பங்குகளை விற்பதற்கு பதிலாக, retail investorக்கு விற்பதால் பொது மக்கள் அவற்றில் பங்குதாரர்கள் ஆகின்றனர். இன்னொரு பக்கம் அரசும் பொது மக்களுமாக equity உண்டாக்கி புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். பொது மக்கள் பங்குதாரர்கள் ஆகும்போது effeciency accounatbility நிறையவே இருக்கும். இந்த effeciency விஷயத்திற்கு சிதம்பரம் சொல்லும் தீர்வு, நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசு முதலீட்டுடன் நிறுத்திக்கொண்டு தினசரி நிர்வாகத்தை professional managers சுதந்திரமாக கையாள வேண்டும் என்பது. இதுவும் செயலப்டுத்தக்கூடிய திட்டம். ஆனால் அரசு பிரதினிதிகள் கணிசமாக போர்டில் இருக்க வேண்டும் - நிர்வாகம் தடம் புரளாமல் கவனிக்க.

என் கருத்து, என் நம்பிக்கை என்னவென்றால், கார்கள் மற்றும் white goods எனப்படும் டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியுடன், தனியார் முதலீடு கட்டுமான துறைகளிலும் வரும்படியான climate ஐ, அரசு உருவாக்கினால் சமூக நல திட்டங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் - நெடுங்காலம் பயனளிக்கும் வகையில். ஆனால், முதலீட்டுக்கு பிற தொழில்கள் மாதிரி நிறைய லாபம் / வருமானம் இருக்காதே? அதற்கு வழி, User pays முறைதான் - நுகரும் வசதிகளுக்கு பணம் கொடுக்க இயலாத நுகர்வோர்களுக்கு அரசு சலுகை கொடுக்க வேண்டியதுதான். உதாரணமாக இன்று எத்தனை கார்பொரேஷன் பள்ளி¢களில் தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல் நவீன கல்வி திட்டங்கள் மற்றும் மாண்டிசேரி முறை கல்வி இருக்கிறதென்று தெரியவில்லை. எழுத்தறிவு கூடியிருக்கிறது என்று statistics சொல்கிறதே தவிர, கையெழுத்து போடத்தெரிந்தாலே 'எழுத்தறிவு" கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையாக கல்வி பயிலும் மாணவர்கள் எத்தனைபேர்? ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளில் கணிசமான சதவிகிதம் உயர் நிலைப் பள்ளி வரை கூட தாண்டுவதில்லை. பாதியிலேயே நின்று விடுகிறார்கள். பள்ளியிறுதியைத் தொடுபவர்கள் இன்னும் குறைவு. படிப்பைப் பாதியில் நிறுத்த ஒரு முக்கிய காரணம் கல்வி கற்கும் சூழ்நிலை. ஆசிரியர் அடிப்பார் என்று பள்ளிக்கு செல்வதை நிறுத்திய சிறுவர்கள் அதிகம். கார்பொரேஷன் பள்ளிகளில் 10 கணினிகளை வாங்கி போட்டுவிட்டால் மட்டும் போதாது. தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல் ஆர்வத்துடன் சொல்லித்தரும் ஆசிரியர்கள், வித்தியாசமான கல்வி பயிலும் முறைகள், என்று பலவித delivery விஷய்ங்கள் இருக்கின்றன. ஆகவே, விவசாயம், கட்டுமானம், கல்வித் துறை என்று எந்த சமூக நலத்துறை எடுத்துக்கொண்டாலும் முதலீடு ஒரு புறமென்றால், அதை சரிவர நிர்வகித்து அடைய வேண்டியவர்களை சரிவர அடையச் செய்வது பெரிய சாதனை.

Saturday, May 29, 2004

முதலீடு அமைச்சர்??

நிதி அமைச்சர் சிதம்பரம் walk the talk (ndtv) நிகழ்ச்சியில் சேகர் குப்தாவிடம், ரொம்பத் தீவிரமாக தங்கள் ஆட்சியின் பொருளாதார சீர்திருத்தங்களை விளக்கிக்கொண்டிருந்தார். ஏழைகள், மற்றும் நலிந்த துறைகளீல் மேல் அதிகம் கவனம் என்கிறீர்களே, என்ன இலவசமாக அள்ளி எடுத்துவிடப்போகிறீர்களா; திட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வரும் என்ற ரீதியில் கேட்கப்ட்ட கேள்விக்கு, நிதானமாக விளக்கினார். இலவசமாக ( Doling out) கொடுக்காமலேயே, வரிகளை சரியான முறையில் நிர்வகிப்பதன் மூலம் என்று சொன்னவர், எந்த வரிச் சுமையாக இருந்தாலும் அதைத் தாங்கக்கூடியவர்கள்மேல்தான் இருக்க வேண்டுமே தவிர, தாங்க முடியாதவ்ர்கள் மேல் மேலும் சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மக்களின் அடிப்படை வசதிகளில் செலவழிக்க வேண்டும் என்ற கருத்தில் என்ன தவறு இருக்க முடியும் என்ற அவர், உதாரணத்துக்கு தண்ணீர் பிரச்சனையைக் காட்டினார். " ஒரு Mission" ஆர்வத்துடன் இந்தத் தண்ணீர் பிரச்சனைக்கு வழி காண வேண்டும் என்று சொன்னபோது கொஞ்ச நாள் முன்பு இதே வார்த்தையை உபயோகித்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நான் எழுதியதைப் படித்துவிட்டார்(!!!!!!!!!- அட, ஏதோ கற்பனை பண்றதிலே என்னங்க கஷ்டம் ? :-) என்று சந்தோஷப்ப்ட்டேன்.

தான் ஒரு Investment Minister ( முந்தைய அரசின் Disinvestment அமைச்சுக்கு நேர் மாறாக !!!) என்று சொல்லிக்கொள்கிற இவர், தன் எல்லா பேட்டிகளிலும் புதிய அரசு தொழில் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தபோகிறது என்று சொல்லி வருகிறார். " நிறைய பேர் - இளைஞர்கள் தொழில்களில் நிறைய முதலீடு செய்வதைக் காண விரும்புகிறேன். இன்னும் நிறைய டாட்டாக்களும், பிர்லாக்களும் வர வேண்டும். இப்படி புதிதாக தொழில்கள் தொடங்க ஒரு பசி இருக்க வேண்டும். I want lot of youngman to have the hunger to start new ventures. If you have 10 business, don't sit with them; Go and start 11th one." இப்படி தொழில் அதிகமாவதுதான் வேலை வாய்ப்புகள் பெருக வழி செய்யும் என்று அவர் தீர்மானமாக நம்புகிறார். அவர் கருத்தில் நியாயம் உள்ளது.
இன்று இந்தியாவின் மொத்த வருமானத்தில் உற்பத்தி - manufacturing - மூலமாக வருவதைவிட சேவைகள் ( Service) மூலமே வருமானம் அதிகம். ஆனால் ஒரு ஸ்திரமான, முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி வளர்வது மிக முக்கியம்.

இந்த விதத்தில் பார்த்தால், இந்த கட்டுரை ஊக்கமளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் வால் மார்ட் தொடர் இந்தியாவிலிருந்து 1 பில்லியன் டாலர் பெறுமான உற்பத்திப் பொருட்களை வாங்குகிறதாம். உடம்பு துடைக்கும் துண்டிலிருந்து, ஆடைகள், துணிகள், ஷ¥, விலையுயர்ந்த டைமண்ட் கற்கள், இறால் ( Shrimps??) என்று நிறைய வாங்கி தங்கள் கடைகளில் விற்கிறதாம். திருப்பூர் பனியன்கள் மற்றும் இதர துணிகளுக்கு மேல் நாடுகளில் என்றுமே ஒரு மதிப்பு உண்டு. இன்று உலக வர்த்தக அரங்குகளில் திருப்பூர் நெசவு தொழில் பற்றி நிறையவே அலசப்ப்டுகின்றன. பஞ்சாபில் உள்ள பர்னாலா என்கிற துணிகள் வியாபாரம் செய்பவர் ரூபாய் 200 கோடிக்கு துணிகள் விற்று, வால் மார்ட் வழங்கும், சர்வதேச சப்ளையர் விருதை வாங்கியிருக்கிறார். அதுபோல் கான்பூர் ஷ¥ உற்பத்தியாளர்களுக்கும் நல்ல வியாபாரம். விலயுயர்ந்த கற்கள் விற்பனை சுமார் 400 மில்லியன் டாலர்கள். வழக்கமாக சர்வதே சந்தையில் ஹாங்காங் டைமண்ட்கள்தாம் விசேஷம். ஆனால் இன்று இந்திய டைமண்ட்களுக்கு சர்வதேச சந்தையில் விற்பனை கூடியதால் ஹாங்காங் வியாப்ர்ரம் எல்லாம் இந்தியாவுக்கு வந்துவிட்டதாக சொல்ல்கிறார்கள். உலகளாவிய வர்த்தக முறையின் அனுகூலங்கள். வெளி நாட்டு உற்பத்திகள் இந்தியாவுக்குள் வந்து நம் தொழில்கள் நசிக்கின்றன என்பதற்கு மாறாக, நம் உற்பத்திகள் வெளியே சென்று நம் உற்பத்தி பெருக ஒரு வாய்ப்பு. உற்பத்தி பெருகும்போது பொதுவாக ஒன்றை ஒன்று சார்ந்த பல பொருட்களின் தேவை அதிகமாகும். உற்பத்திகள் அதிகரிக்கும்போது வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும், வறுமை ஒழியும்.

Friday, May 28, 2004

இதுவல்லவோ தன்னம்மிக்கை ? !! :-)

Thursday, May 27, 2004

நேரு

இப்போதெல்லாம், சமீப காலமாக நேரு என்ற சொல்லே ஏதோ சொல்லக்கூடாத சொல் என்பது போல் இருக்கிறது. நாட்டில் எந்தப் பிரச்சனையானாலும் அவர் மேல், அவரது சோஷலிஸ கொள்கையின் மேல் பழி போடப்பட்டு வந்தது. ஆங்காங்கே தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் " எல்லாம் இந்த நேரு செய்த தவறு" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்லத் தெரியாத ஒரு கோபம் வரும். இதென்ன இப்படி கூசாமல் பேசுகிறார்களே என்று. இன்று இந்தர் மல்ஹோத்ரா நேருவைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியாகவும் யதார்த்தமாகவும் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தபோது அப்பாடா என்றிருந்தது.
இந்தக் கட்டுரையில் என்னை சிந்திக்க வைத்த விஷயங்கள்: மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் எளிதாக இருக்கவில்லை. குறைகள் இருக்கதான் செய்தன. ஆனாலும் இந்தக் கொள்கையைக் கைவிடுவதாக இல்லை. ஈந்த சமயத்தில்தான் Andre Malraux அன்றைய பிரான்ஸின் கலாசார அமைச்சர் நேருவிடம் கேட்டாராம்; " சுதந்திரம் அடைந்ததிலிருந்து அவருடைய மிகக் கடினமான வேலை எது என்று?" அதற்கு உடனே நேரு சொன்னாராம்: " நியாயமான தேசத்தை, நியாயமான முறையில் உருவாக்குவது" என்று சொல்லிவிட்டு, தொடர்ந்தாராம், " அதேபோல், மதங்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள ஒரு நாட்டை மத சார்பற்ற நாடாக மாற்றுவதும் கடினம்தான். அதுவும் அந்த மதங்கள் எந்த ஒரு தத்துவ நூல் அடிப்படையிலும் உருவாகாதபோது." என்றாராம்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடதுபோல், நேருவின் சில கொள்கைகளோ அல்லது அவற்றை பின்பற்றிய முறைகளிலோ தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தைக் கட்டி காத்ததில், நாட்டின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு வித்திட்டதில் என்று எத்தனையோ நன்மைகள் அவர் அரசாங்கத்தில் இருந்தன. இன்று இந்தியா ஒரு software Power " என்று புகழப்படுகின்றதென்ரால், அன்று அவர் IIT, Indian Institute of Science, Baba Atomic Research என்று விஞ்ஞான, தொழில் நுட்ப கல்விகளிலும், இதர தொழில் வளம் பெருக வழிகளிலும் முதலீடு செய்ததால்தான் இன்று நம் இந்தியர்களின் திறமை வெகுவாக உலகில் சிலாகிக்கப்படுகிறது.

ஒரு சமயம் Dean Achson என்கிற அமெரிக்க Secretary of State சொன்னாராம்: " உலகுக்கு இந்தியா மிக முக்கியம். இந்தியாவுக்கு நேரு மிக முக்கியம். ஒரு வேளை நேரு என்றொருவர் இருந்திருக்கவில்லையென்றால், அவரை எப்படியாவது உருவாக்கியிருக்க வேண்டும்" என்றாம். If he did not exist, then - as Voltaire said of God - he would have had to be invented".

பி.கு: இன்று நேருவின் 40 வது மறைவு தினம்.

Wednesday, May 26, 2004

ஹ்ம்ம்... வர வர.. எதற்குதான் மெளசு என்பது புரியாமல் போச்சு.

GMail என்று கூகில் அறிமுகப்படுத்தி இருக்கு இல்ல? அந்த G mail - ஈமெயிலுக்கு நல்ல டிமாண்ட் ஏறிக்கொண்டே போகிறதாம். இன்னும் பரிசோதனை நிலையில் இருக்கும் இந்த ஈ மெயில் நம்ம Blogger குடும்பத்துக்கு மூன்னுரிமை கொடுத்து வினியோகம் செஞ்சிருக்காங்க. தவிர இன்னும் வேறு சிலருக்கும் இந்த பரிசோதனை நிலை G mail உண்டாம். இதில் ஒரு giga byte அளவு உங்கள் கடுதாசிகளை சேமித்துக் கொள்ளலாம். மற்ற ஈ மெயில் சேவைகளில் வருவதுபோல், அப்பப்போ, உங்கள் தபால் பெட்டி நிறைந்துவிட்டது. என்று சிவப்பு கலர் எச்சரிக்கை வருவதைத் தடுக்கலாம். இந்த ஒரு giga byte என்ற அளவு, திடீரென்று ஏதோ ஒரு பிரச்சனையினால் 1000 மடங்கு அதிகமாகி, சென்ற வாரம் ஒரு terabyte அளவு இலவச இடம் கொடுத்துவிட்டதாம். குழப்பம் விளைவிக்கும் " பூச்சியை" (bug என்பதற்கு என்ன வார்த்தைதான் உபயோகிப்பது?) சரி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுசரி; இந்த giga & terabyte அப்படிங்கறது எல்லாம் சுமாரா எவ்வளவு இருக்கும்? நம்ம யாஹ¥ அல்லது ஹாட்மெயிலில் இப்போ 4 MB யும், 10 MBயுமாக இருக்கிறது. இந்த ஒரு tera byte ல 16 நாட்கள் விடாம DVD பார்க்கிற அளவு data சேமிக்கலாமாம். இந்த terabyte சமாசாரம் ஏதோ தெரியாம நேர்ந்து போச்சு என்று வைத்துக்கொண்டாலும் ஒரு giga byte கூட மற்ற ஈ-மெயில்களைவிட அதிகம்தான்.

அதனால் இப்போ இந்த gmail கிடைக்க நிறைய போட்டியாம். புதுசா ஏதாவது சந்தைக்கு வந்தால் இருக்கும் ஆர்வம் தவிர திருப்பதி free choultry மாதிரி, இதன் இலவச சேமிப்பு இடம் எக்கச்சக்கமாக இருப்பதும் ஒரு காரணம். இப்படி Gmail வைத்திருப்பவர்கள் இதை இணையத்தில் "விற்கவும்" ஒரு புதிய தளம் முளைத்துவிட்டது. இங்கே போனால் உங்கள் gmail கணக்கை எந்த விலையில் மாற்றிகொள்ளலாம் என்று நோட்டம் விடலாம். இந்த Gmail க்கு வந்துள்ள டிமாண்டைக் கிண்டல் செய்து வெளிவரும் நகைச்சுவை அறிவிப்புகளுக்கும் பஞ்சமில்லை. மாதிரிக்கு சில:

" ஒரு gmail கணக்கு கொடுப்பவர்களுக்கு கிராண்ட் கன்யானில், ( Grand Canyan) 200 டாலர் பெறுமான கழுதை சவாரி கிடைக்கும்.

" Gmail கொடுப்பவர்களுக்கு, தன் முதல் குழந்தையைக் கொடுத்துவிடுவதாக ஒரு அம்மையார் அறிவிப்பு" இந்த ரீதியில் அறிவிப்புகள் / கிண்டல்கள்/ ஜோக்குகள் என்று GMail திருவிழா களைக் கட்டிக் கொண்டிருக்கிறது. ஹ்ம்ம்... கலி முத்திப் போச்சுதான் !!

Saturday, May 22, 2004

புது டீம்; புது முகங்கள்.......

- நிறைய மைனாரிடி அல்லது பின் தங்கிய சமூகத்தினர்; நிறைய தமிழர்கள்; நிறைய இளைஞர்கள்; நிறைய பெண்கள்....? ம்... இதுதான் கொஞ்சம் இடிக்கிறது. 4 பெண்கள்தாம். ஆனாலும் 67க்கு 4 என்பது பரவாயில்லையோ?

எதைப் பற்றி சொல்கிறேன் என்று புரிந்திருக்குமே? வேறு என்ன? சற்றுமுன் பதவியேற்ற மன்மோஹன் மந்திரிசபைதான். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்து ஜனகணமன பாடும்போது இரண்டு பேர் - இரண்டு பேர் மட்டுமே - வாய்விட்டு பாடுவது கண்னில் பட்டது. ப. சிதம்பரம்; சுனில் தத்.

இன்று நான்; நாளை நீ; மறுபடி நான்; நாளை யாரோ - சக்கரம் சுழல்கிறது...... involve ஆகாமல் அசோகா ஹாலில் உள்ள சுவராக, தள்ளி நின்று பார்க்கும்போது இதுதான் தோன்றிற்று. சதுரங்க காய்கள் நகர்த்தப்படுவது மாதிரி ஆங்காங்கே முகங்கள் மாறுகின்றன. இடமும் நிகழ்ச்சிகளும் அதே.

சரி. புதிய மந்திரிகளுக்கு வாழ்த்துச்சொல்லுவோம். இந்தியா நிஜமாகவே ஒளிர ஆரம்பிக்கலாம். சாதாரண மக்களின், அடிமட்ட குடிமக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று நம்புவோம்.

Thursday, May 20, 2004

சிங்கப்பூர் வானொலி ஒலியில்...

...நான் கூறிய கருத்துக்களில் பரிக்கு இருக்கும் சந்தேகம் வேறு சிலருக்கும் இருப்பதால் இங்கே சற்று விரிவாக என் நிலையை தெளிவு படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

சோனியாவுக்காக ஓட்டு போட்ட மக்கள் இப்போது அவரில்லாமல் வேறு ஒருவர் பிரதமராக வருவதனால் பெருத்த ஏமாற்றமடையமாட்டார்களா என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு என் பதில், " ஓரளவு ஏமாற்றம் இருக்கலாம். ஆனால் பெருவாரியாக என்று சொல்ல முடியாது. பிஜேபி செய்ததுபோல் காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் எந்த தனிமனிதரையும் துக்கி வைத்தோ அல்லது தாழ்த்தியோ பிரசாரம் செய்யவில்லை. பொதுவாக, நாட்டை - பொது மக்களை பாதிக்கும் பிரச்சனைகளைதாம் முன் வைத்தார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண காங்கிரஸ¤ம் கூட்டணி கட்சிகளூம் முனையும் என்றுதான் மக்கள் ஓட்டு போட்டிருப்பார்கள். தவிர, இந்திய அரசியல் சாசனப்படி தேர்தல் முடிந்தபின், வெற்றி பெற்ற கட்சியின் எம் பிக்களால் பின்னர்தாம் பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்படுகிறார்." என்ற ரீதியில் என் பதில் இருந்தது.

அரசியல் சாசன சம்பிரதாயம் தெரிந்துதான் மக்கள் வாக்களித்து இருக்க மாட்டார்கள். நிறைய பேருக்கு தெரிந்து இருக்காது. வாஸ்தவம்தான். ஆனாலும் ஓட்டுப் போடும்போது வாக்காளர்கள் மனதில் என்ன இருந்தது என்பதை யாரால் திட்டவட்டமாக கூறமுடியும் - அவரவர் மனதைத் தவிர ? :-) எல்லாமே ஒரு ஊகம்; மனக்கணக்கு; psephology என்று சொல்லப்படுகிற ஒரு கணிப்புதான். அந்த மட்டில் நான் சொல்லியது என் கருத்து. சோனியா பிரதமர் ஆகாததில் காங்கிரஸ் தொண்டர்கள் மனம் ஒடிந்து இருக்கலாம். ஆனால் டிவியில் நீங்கள் பார்க்கும் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே இந்திய மக்கள் அல்ல. சோனியா பிரதமர் இல்லை என்றவுடன் பெருத்த ஏமாற்றமடைவதற்கு. காங்கிரஸ¤க்கு ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு சோனியா பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கும் என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் வாக்கு அதை மட்டுமே மனதில் கொண்டதல்ல; காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்ற ரீதியில்தான் அவர்கள் ஓட்டளித்திருப்பார்கள் என்பது என் கருத்து. தேர்தலில் ஓட்டுபோடும் வாக்காளர்களில் இரண்டு வகை உண்டு - ஒரு வகையினர், ஒரு கட்சி அல்லது ஒரு தலைவரிடம் விசுவாசமாக வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை வைத்து ஓட்டளிப்பவர்கள். இந்த கட்சி அல்லது தலைவர் விசுவாசம் கட்சி அல்லது தலைவர் போகுமிடமெல்லாம் போகும். அதனால் இந்த ஓட்டு வங்கி எண்ணிக்கை சாதாரணமாக ஒரே மாதிர்யாகதான் இருக்கும்.

இன்னொரு ரகம் அவ்வப்போது அந்தந்த சமூக சூழலை, வட்டார மற்றும் தேசீய பிரச்சனைகள் தங்களை பாதிப்பதற்கு ஏற்றார்போல் மாறி மாறி வாக்களிக்கும். இதுதான் அவ்வப்போது தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. நான் குறிப்பிட்டது இந்த வகை வாக்காளர்களை. சோனியா பிரதமராக வருவார் என்று நன்றாக அறிவார்கள். வந்தால் சந்தோஷப் படுவார்கள்; ஆனால் அவர்தான் வர வேண்டும் என்று மட்டுமே எண்ணி வாக்களித்திருக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் / சோனியா விசுவாசிகள் வேறு; தங்கள் பிரச்சனைகள்தாம் முக்கியம் என்று கருதி வாக்களிக்கும் பொது மக்கள் / வாக்காளர்கள் வேறு.

Wednesday, May 19, 2004

Oli Radio

Singapore's Radio Oli wanted some sound byets from me on the latest poltical developments. Checkout the audio here at 5.15 pm IST and the repeat at 5.15 am IST on 20th - tomorrow. If you are living in Singapore, tune in at Oli - 7.45 pm sg time today and 7.45 am sg time tomorrow, 20th. and let me know your feedback.
" இனி தேசம் டாக்டர் மன்மோஹன் சிங் கையில் பாதுகாப்பாக இருக்கும்". ஜனாதிபதியிடம் ஆதரவு கடிதங்களைக் கொடுத்துவிட்டு வந்ததும் சோனியா காந்தி கூறிய வார்த்தைகள்.

இன்றுதான் அவர் நிம்மதியாக தூங்குவார் என்று நினைக்கிறேன். முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. பத்த்ரிகையாளர்களிடம் அவர் முகம் மலர்ந்து தெளிவாக சிரித்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தால் அவர் எடுத்த முடிவு அவரைப் பொறுத்தவரை மிகச் சரிதான் என்று தோன்றுகிறது.

ராகுலும் டிட்டோ ! மிக நிம்மதியாக - சொல்லப்போனால் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். " ராகுல், உங்கள் திருமணம் எப்போ?" யாரோ நிருபர் சீண்டலான கேள்வி. " அதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. செய்தபின் உங்களுக்குக் கட்டாயம் தெரிவிக்கிறேன்" என்று அதே சீண்டல் தொனியில் பதில். இவரும் மந்திரிசபையில் அங்கம் வகிக்கப் போகிறதில்லையாம். ஆனால் 5 வருடம் குறித்து ஏற்பாராம். பிரதமராவதை யோசித்திருக்கிறீர்களா? சற்று தன்யங்கி, " இல்லை. ஆனால் பிரதமர் ஆக வேண்டும் என்று தினம் ஸ்பரணை செய்து கொண்டிருக்க முடியுமா என்ன? காலப் போக்கில் பிரதமராக வேண்டும் என்ற நிலை வந்தால் ஏற்றுகொள்வேன்." இந்த ரீதியில் இருந்தது அவரது பதில்.

ஏதோ இப்போதைக்கு அவர்களுடன் நாமும் சேர்ந்து சற்று நிம்மதி பெருமூச்சு விடுவோமே?

Tuesday, May 18, 2004

Some how this post gets deleted mysteriously several times. this is the fourth time I am posting this. What's happening on the blogger ? :-(

எங்கள் பெற்றோர் எங்களுடையவர்கள் என்று நினைத்ததேயில்லையே ?

கிட்டதட்ட நான் எதிர்பார்த்தேன். சோனியா இப்படிதான் முடிவு எடுப்பார் என்று. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட கொஞ்சம்
தாமதமாகதான் அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே அறிவிப்பார் என்று நினைத்தேன். காங்கிரஸ் இனி அவ்வளவுதான் என்றெல்லாம் கூறப்பட்டதை மீறி, கஷ்டப்பட்டு ஆறு வருஷமாக கட்சியை ஒழுங்குபடுத்தி நிலைக்க செய்து, இன்று தேர்தலிலும் வெற்றி பெற செய்த ஒருவரை, நன்றி; நீங்கள் இனி போகலாம்; என்று கூறுவதுபோல் இருக்கிறது வேறு ஒருவரை பிரதமாராக்குவது. இருந்தாலும் சோனியாவைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு அவர் விவேகமான முடிவுதான் எடுத்துள்ளார். இல்லாவிட்டால் அவரையோ நாட்டையோ நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். பொதுவாக மனித நேயம் உள்ளவர்; பெருந்தன்மையானவர் என்று நான் அவரைப் பற்றி நினைத்திருந்தது சரியாகதான் இருக்கிறது. ஆனால் முன்பு காங்கிரஸ் தலைவர் பதவியின் போதும் இப்படிதானே வேண்டாம் என்று ஒதுங்கியவரை அழுது அமர்க்களம் பண்னி ஏற்றுகொள்ள வைத்தார்கள்? எனவே இப்போவும் அவர் தன் முடிவை மாற்றிகொள்ளலாம் என்றும் சொல்லபப்டுகிறது. பிரியாங்காவும் இறுதியில் ஒரு கேள்விக்கு தன் தாய் "ஒரு வேளை மறுபரிசீலனை செய்யலாம்" என்று சொன்னதையும் கொஞ்சம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

ஆனால் என் ஊகம் சோனியா முடிவை மாற்றிகொள்ள மாட்டார் என்பதுதான். அவர் முகத்தில் தெரிந்த தீவிரம் அப்படியிருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் சோனியாவின் குடியுரிமை பற்றி என்றுமே சந்தேகம் இருந்ததில்லை. எந்த ஒரு விஷ்யத்திலும் - கல்வி மற்றும் சமூக அமைப்புகள் எதிலும் - ஒருவரின் பிறப்பின் காரணமாக அவர் discriminate செய்யப்படுவதை நான் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. Same holds for top posts of the country. நாட்டின் ரகசியங்களையோ அல்லது முக்கிய ராணுவ ரகசியங்களையோ மந்திரிகளோ அல்லது சேவைத் தளபதிகளோ தயக்கமில்லாமல் "பிரதமர்" சோனியாவுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று சில கேள்விகள் எழுகின்றன. இதற்கு என் பதில் at http://arunas.blogspot.com

சரி. சோனியாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

இந்த குழப்பம் நிறைந்த சம்யத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் பல சேனல்களில் பேட்டி காணப்பட்டார்கள். அதில் சல்மான் குர்ஷித் கூறுவதாக சொல்லப்பட்டது என்னவென்றால், ராகுலும் பிரியாங்காவும் தங்கள் தாயின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுவதால் அவர் பிரதமராக இருப்பதை விரும்பவில்லை என்று. இந்த குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒரு காங்கிரஸ் தலைவர் இப்படி அர்த்தமில்லாமல் கூறுகிறாரே என்று தோன்றிற்று. கூட்டம் முடிந்ததும் வெளியே தாழ்வாரத்தில் பிரியாங்காவையும் ராகுலையும் கேள்விக்கணைகள் தாக்கின. அதில் பிரியாங்கா கூறியது குறிப்பிடத்தக்கது:

கேள்வி: குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் சொல்வதை உங்கள் அம்மா கேட்பாரா? ( கிட்டதட்ட இந்த அர்த்தத்தில்).

பிரியாங்கா - ( சட்டென்று அடிபட்டாற்போன்ற முகத்துடன்) " நாங்கள் என்றுமே எங்கள் பெற்றோர் எங்களுடையவர்கள் என்று நினைத்ததே இல்லையே? We do not feel our parents belonged to us. Even when our father was killed and when he went without any security he didn't listen to us.

இந்தக் குழந்தைகளா அம்மா உயிருக்கு ஆபத்து என்று பயந்து பிரதமராவதைத் தடுப்பார்கள்? அப்படி நினைத்திருந்தால் அரசியலுக்கே வராமல் எங்கேயோ பாதுகாப்பாக வாழ்க்கை நடத்தியிருப்பார்களே?


Sunday, May 16, 2004

இளைஞர் மண்டேலா!!

2010ம் ஆண்டு உலகக்கோப்பையை நடத்த தென்னாப்பிரிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்வு அறிவிப்பு செய்யப்பட்ட அடுத்த வினாடி ஒரே உற்சாக வெள்ளம். அதையொட்டி நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை. அவரும் முகமெல்லாம் மலர்ச்சியாக, " இப்போது நான் 50 வயது இளைஞனைப் போல் உணருகிறேன்" என்று தன் உற்சாகத்தை எல்லொருடனும் பகிர்ந்து கொண்டார்.

என்ன சொல்ல வருகிறேனென்றால், 50 வயதானாலே "வயசாச்சு" என்று சொல்லத் தோன்றும் இந்த காலத்தில் 87 வயதாகும் நெல்சன் மண்டெலா 50 வயது 'இளைஞன் என்று சொன்னது சுவாரசியமாக இருந்தது. அது சரி; அவருடைய 87 வயதுக்கு 50 வயது இளமைதான். இருந்தாலும் வயது ஏற ஏற, 'வயதாகிவிட்டது' என்ற புலம்பல் இல்லாமல் மனதளவில் இளமையாக உற்சாகமாக இருப்பவர்களைப் பார்த்தால் நமக்கும் கொஞ்சம் உற்சாகம் தானே ஒட்டிக்கொள்ளாதா? இதுபோல்தான் என் தந்தைக்கு சென்ற வருடம் ஒரு அறுவை சிகிச்சை செய்யும்படி இருந்தது. பத்து நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக நார்மலுக்கு வந்த அவரை தினம் எப்படி இன்று முன்னேற்றம் என்று விசாரிப்பது என் வழக்கம். அப்போதைய உடல் நிலை குறித்து ஏதாவது சொல்வார். ஒரு நாள் சொன்னார். " எல்லாம் இப்போ சரியாக இருக்கு. ஆனால் என்ன.... என் நடைதான் சற்று மெள்ளமாக இருக்கு. பார், தாத்தா மாதிரி நடக்கிறேன்..." !! என்றார். அப்போது அவர் வயது, 87 !!

Saturday, May 15, 2004

டெமாகிரெடிக், கம்யூனிஸ்ட் இந்தியா?

தேர்தலுக்குப் பிறகு வரும் செய்திகளைப் பார்த்தால் அப்படி ஒரு பிரமை உண்டாகிறது. மாற்றி மாற்றி இடது சாரிகளின் anti reform ( No; we are not against reforms என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே) குரல்கள்தாம் ஒலிக்கின்றனவே தவிர காங்கிரஸின் அல்லது மற்ற கட்சி தலைவர்களின் குரல் காணோம். மன்மோஹன் சிங், மற்றும் சிதம்பரம் எல்லாம் எங்கே? பிரதமர் யார் என்று முடிவு செய்வதில் காங்கிரஸ் மூழ்கிக் கிடக்கும்போது அவசரம் அவசரமாக முதல் காரியமாக " disinvestment" பற்றி பேசி பங்குச் சந்தையை இப்படி தடாலென்று கீழே தள்ளியிருக்க வேண்டாம். பங்குச் சந்தை விழுவதும் எழுவதும் பெரிய விஷயமில்லை. இன்னொருமுறை தும்மினால் மேலே வந்துவிடும். இருந்தாலும் தொடர்ந்து முதலீட்டார்கள் நம்பிக்கை இழந்து வேகமாக முதலீடுகளை திரும்ப எடுத்துக்கொள்ளும் trend தான் கவலை தருகிறது. ஒரே நாளில் 605 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் காணாமல் போயிருக்கின்றன.

தேர்தல் முடிந்து மகக்ள் நம்பிக்கையை சம்பாதித்தாயிற்று. நல்ல காரியம். அடுத்தது, இப்போதைய அவசியம், முதலீட்டார்களின் நம்பிக்கையை நிலை நாட்டுவது. குறைந்த பட்சம் அவர்களை பயமுறுத்தாமல் இருக்கலாம். ஆரம்பித்தவுடன் பானையைப் போட்டு உடைப்பதுபோல் வணிக உலகில் எதிர்மறை விளைவிக்கும் எண்ணங்களைதான் எடுத்த எடுப்பில் அறிவிப்பு செய்ய வேண்டுமா?

பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடருவோம் என்று பேசுகிறவர்கள், முதலில் எல்லோருக்கும் நம்பிக்கைத் தரும் கொள்கைகளை அறிவித்து பின் தங்கிய வர்கத்தினர் மற்றும் வணிக உலகம் இரண்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்க ஆரம்பிக்கலாமே? விவசாயம் மற்றும் நெசவு என்று நலிந்த துறைகளில் அரசு முதலீடு அதிகரித்து வேலை வாய்ப்பு அதிகரிக்க வகை செய்யும் என்று ஏதாவது ஆக்க பூர்வமான அறிவிப்பாக தொடங்கியிருக்கலாமே?

உலகளாவிய வர்த்த்கம் நிலவும் இந்த நாளில் உலக அரங்கில் இந்தியாவைப் பற்றி ஒரு நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம். அதனால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்ட அறிவிப்புகள் வர வேண்டும்.

மன்மோஹன் சிங், சிதம்பரம் & Co - விரைவில் ஆஜர் ஆகும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் :-)

Thursday, May 13, 2004

தூவானம் !

மழை ஓய்ந்தாலும் தூவானம் இருக்கணுமே ? சில அசை போடல்கள்:

வெற்றி வந்து குவிந்தபோதும் சோனியா காந்தி வெகு நேரம் பத்திரிகையாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த போதும் பிடி கொடுக்காமல்தான் பேசினார்.

ஏன்?

என் மனதில் ஒரு "deja vu". காட்சி: 1998 ல் ராஷ்ட்டிரபதி பவன் முன் திறந்த வெளியில் தன்னிடம் தேவையான எம்.பிக்கள் இருப்ப்தாக 'letter of support' என்று படு நம்பிக்கையாக அறிவிப்பு செய்யும் காட்சி மனக்கண் முன் வந்து போனது.

இந்த முறை ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறாரோ?

***

1999 தேர்தலின்போது எழுதிய ஒரு குட்டி சமாசாரம்: இப்போதும் சரியாகவே இருக்கும் :-)

பங்கு சந்தையில் பங்குகளின் ஏற்ற இறக்கத்தை கணிக்கும் அளவுக்கு " Sensitive Index" என்று ஒரு குறியீடு
இருப்பதுபோல், இந்த தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைக்
கணிக்க ஒரு விசேஷ குறியீடு பயன்படுத்தப்பட்டது. அதுதான், "லட்டுகள் காட்டும் நம்பிக்கை சங்கேதம்"
(Laddoo Index of Confidence).....!! ஜெயித்தால் இனிப்பு வழங்க வேண்டாமா? அதற்காக கட்சிகள்
அனைத்தும் முன்ஜாக்கிரதையாக தங்கள் தங்கள் பங்குக்கு இனிப்பு கடைகளில் லட்டுகளுக்கு ஆர்டர்கள்
கொடுத்துவிட்டனர். எத்தனைக்கெத்தனை ஆர்டர்களின் மதிப்பு அதிகமோ அதற்கேற்றாற்போல் அவர்களின்
நம்பிக்கையின் அளவும் என்று குத்து மதிப்பாக பத்திரிகையாளர்களுக்குள் ஒரு கணிப்பு...!

****

ஒரு பேட்டியில் பிரமோத் மஹாஜனிடம் கேள்வி கேட்கபடுகிறது: " இந்த லோக் சபாவில் எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருப்பாரா?"

மஹாஜன்: " சொல்ல முடியாது. அவர் வயது, அவர் உடல் சக்தியைப் பொறுத்தது. அவரால் இந்த பளுவைத் தாங்க முடியுமா என்பது கேள்விதான்."

என் உள்ளே அசரீரி: " நன்றாயிருக்கிறதே? கட்சி வெற்றி பெற, அவர் வேணும் - வாஜ்பாய் factor - இப்போ அது நடக்கவில்லையென்றதும் அவரை ஓரம் கட்டிவிட வேண்டியதுதானா?"

***

NDTV யில் வாஜ்பாய் ராஜினாமா கடிதம் கொடுக்கப் போவதைக் காண்பித்தார்கள்: அம்பாசடர் காரை மட்டுமே பார்க்க முடிந்தது.யானால் அலசல்கள் நடுவில் நேற்று அவருடன் எடுத்த பேட்டி வந்தது. ஒரு கவிதை பாடச்சொன்னால் என்ன பாடுவீர்கள் என்ற கேள்விக்கு, " நிச்சயம் தோற்க மாட்டேன்; அப்படியே தோற்றாலும் யாருடைய எதிரியாகவும் இருக்க மாட்டேன்; எனக்கென்று தனியாக ஒரு புதிய பாதை வகுத்துக்கொள்வேன்" என்கிற ரீதியில் இருந்தது கவிதை. அதை அவர் சொல்லும்போது அந்த அமைதியான சிரிப்பும் கண்களில் ஒளியும்... !! மனதில் ஓர் ஓரத்தில் இரக்கம் கவ்விக்கொண்டது.

real gentleman;

So, let's give him a standing ovation. He desrves - for being the gentleman he is, if not for the blunders of his party.

மனதில் உறுதி வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்

இந்திய ஜனநாயகத்தையும் முகம் தெரியாத அந்த இந்தியன் என்பவரையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போங்கள்; எத்தனை விதமாக வேண்டுமானாலும் தங்கள் பெருமையைப் பீற்றிக்கொள்ளுங்கள் - ஆனால் எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்பதை இன்னொரு முறை திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். அதுவும் தமிழ் நாட்டைப் பற்றி - எதிர்பார்த்ததுதான் என்றாலும், இப்படியா ! சுத்தமாக துடைத்துவிட்டமாதிரியா! என்று மூக்கில் விரல் வைக்கும் அளவு அதிமுக அரசின் மேல் இருக்கும் எதிர்ப்பைக் காண்பித்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலோர் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் வெற்றிபெற்றுள்ள்தைப் பார்க்கும்போது, Obviously, the mob was / is furious என்றுதான் தோன்றுகிறது.

அது சரி; ஒன்று கவனித்தீர்களா? நேற்றைய என் 3 ஊகங்களில் இரண்டு சரியாகிவிட்டது :-) Landslide victory - அதாவது, தமிழ் நாட்டில்; அடுத்தது, தேசிய அளவில் சமத்தாக மக்கள் ஒரு கூட்டணிக்குப் பெரும்பான்மை கொடுத்துவிட்டார்கள் - நம்ம ஜனாதிபதிக்கு சிரமம் இல்லாமல் போய்விட்டது.

முடிவுகள் வெளிவர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு சுவாரசியமான trend வெளிப்பட்டது. இடதுசாரிகளின் முன்ணணி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போயிற்று. இதைப் பார்க்கும்போது மனதில் ஒரு கேள்வி. மக்கள் reform processக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ என்று. ஆனால் அப்படியும் தோன்றவில்லை. ஏனென்றால் காங்கிரஸ்தான் economic reforms ன் காரணகர்த்தாவே - அதேபோல், இடதுசாரி கோட்டையான மேற்கு வங்கமே economic reforms தேவை என்ற ரீதியில்தான் செயல்படுகிறது. அதனால், ஒட்டுமொத்தமாக reformsக்கு எதிரான வாக்களிப்பாக இது தெரியவில்லை. reformsன் பயன்பாடுகள் அடித்தள மக்களை சரியாக அடையவில்லை என்பதுதான் மக்களின் தீர்ப்பு சொல்லும் பாடம். செல் போனைவிட, கல்வி, சுகாதாரமும், சாலைகளும், குடிநீரும்தான்தான் முக்கியம் என்று சொல்லுகிறார்கள். ( என் உள்ளே அசரீரி: மிஸ்டர். குடிமகன்: " அட கடவுளே, தேர்தல் மாத்தி தேர்தல், இதை எத்தனை தடவை அய்யா சொல்வது? இந்த தலைவர் ஜனங்களுக்குப் புரியமாட்டேங்குதே :-( !! )

reform என்று சொல்லும்போது மக்களுக்கு அடிப்படை வசதிகள்/ அவர்கள் வாழ்க்கைத்தரம் உயர, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு என்ற ரீதியில் பொருளாதார புரட்சி அமையும்போதுதான் அரசு நமக்கு நல்லது செய்யும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொன்னதுபோல் பொருளாதார கொள்கைக்கு ஒரு human face இருக்க வேண்டும்.

தவிர, மாலனிடம் ஹிந்து ராம் சொன்னதுபோல் இது ஒரு pro democracy and pro secular தீர்ப்பு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஹிந்துத்வா வாதங்கள் மக்களிடம் செல்லவில்லை. அதேபோல் அடிதட்ட மக்கள் மேம்பட வழி செய்யாத எந்தப் பொருளாதார கொள்கையயும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதும் உண்மை. நாடும் வளம் பெற வேண்டும்; வளர்ச்சி வேண்டும்; வேலை வாய்ப்புகள் கூட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும். இதற்கெல்லாம் வழி செய்யும் வகையில் ஒரு பொருளாதாரக் கொள்கை இருக்க வேண்டும்.

மன்மோஹன் சிங் ( அட; வேறு யாராக இருக்கும்?) வேலை எளிதாக இருக்கப்போவதில்லை.

Wednesday, May 12, 2004

ஒரு விக்கெட் அவுட்; சரி. அப்புறம் ?

சந்திரபாபு நாயுடு தோற்றதற்கு காரணங்கள் இப்போ அலசப்படுகின்றன. இதில் சாய்நாத் சொல்வது பளிச்சென்று இருக்கிறது. சந்திரபாபு, கணினி, கார்பொரேட் என்று இருந்த அளவு, அடிமட்ட அளவில் அக்கறை காட்டவில்லை என்பது மட்டும் அல்ல; அவர் அப்படி உண்மை நிலை உணராமல் போனதற்கு, CEO என்று ஜால்ரா போட்டு அவரை எங்கேயோ கொண்டுபோய் தூக்கிவைத்துவிட்ட ஊடகங்களும் காரணம் என்கிறார் சாய்நாத். சரி என்றுதான் தோன்றுகிறது. Emperor has no clothes என்று சொல்பவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் நாயுடுகாருக்கு.

இவற்றைப் படிக்கும்போது என்னுள் ஒரு கற்பனை. நாளை மதியம் போல் இதே போல் இன்னொரு அலசல் குவியல் நம்மைத் திக்கு முக்காட வைக்கும். ஏன் தோற்றார்கள் என்று. அது யார் என்று தெரிய இன்னும் 24 மணி நேரம் குறைந்தது காத்திருக்க வேண்டும். அதற்குள் என் ஊகங்களை முன் வைத்துவிடலாம்.

மூன்று சாய்ஸ்:

1. கணிப்புகள் சொல்படி தொங்கு நாடாளுமன்றம்; ஜனாதிபதியும் கணிப்புகளை நம்புகிறார் போல; ஏற்கனவே சட்ட நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆரம்பித்துவிட்டார்.

2. எல்லா கணிப்புகளுக்கும் "பெப்பே" என்று அழகு காட்டிவிட்டு காங்கிரஸ் கூட்டணியோ அல்லது பாஜக கூட்டணியோ Landslide Victory !!!! ???? - (அப்படி ஒன்று இருக்கிறதா :-)

3. சமத்தாக ஏதோ ஒரு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து அப்துல் கலாமுக்கு நிம்மதி பெருமூச்சு விட ஒரு சான்ஸ்.

ஹ்ம்ம்.. இதைவிட வெண்டைக்காயாக எழுத முடியுமா என்ன? :-)

Monday, May 10, 2004

ஹ்ம்ம்ம்... ஓட்டு போடவும் கொடுப்பினை வேண்டுமோ? :-)

Google mail கிடைச்ச மாதிரி இருக்கு - என் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து, ஒட்டு போட்டுவிட்டு வந்தது. இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் கோபமாக திரும்பி வந்த வாக்காளர் பற்றிதான் நிறைய செய்திகள். தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ், ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் என்று பிரபலங்கள் பெயர் மற்றும் என் brother-in-law போன்ற சாதாரணர்கள் என்று நிறைய பேர் பட்டியலில் காணோம். ஹ்ம்ம்.. கொடுத்துவைத்த சில வாக்காளர்களில் பட்டியலில் நானும் என் கணவரும் இடம் பிடித்துவிட்டோம் போல :-)

பி.கு: அட..! Blogger.com தளம் பிரமாதமாக மாறிப்போயிருக்கே. புது லே அவுட் நன்றாகவே இருக்கு.

Friday, May 07, 2004

வலைப்பதிவாளர்கள் சார்பில் திசைகளுக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட வேண்டியதுதான். ஏனோ? படியுங்களேன், புரியும்.

Tuesday, May 04, 2004

கடந்த சில நாட்களாக காசியின் பதிவில் ஒரு விவாதம நடந்து இருக்கு. நான் கவனிக்காமல் இருந்துவிட்டேன். பிகேஎஸ் கொடுத்திருந்த சுட்டியை இப்போதான் சாஆஆஆஆவகாசமாக (!!) பார்த்தேன்! திண்ணையில் என் பெயரைப் பார்த்ததும், தூக்கிவாரிப்போட்டது. மற்றபடி சர்ச்சைக்குரிய பகுதியெல்லாம் காணோம். ( எடுத்துவிட்டார்கள் ?) இருந்தாலும், திண்ணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற வலைப் பதிவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று செல்வராஜ் ஒரு கேள்வி கேட்டிருப்பதால் என் எண்ணங்களைப் பதிவு செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

திண்ணைக் கட்டுரையில் நான் பார்த்தபோது மூன்று பதிவுகள்தாம் இருந்தன. அதனால் பாக்கி பதிவுகளை எப்படி வெளியிட்டு இருந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பொதுவாக - In Principle - காப்புரிமை போன்ற சங்கதிகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு சிம்பிளாக ஒரு கோணத்தில் பார்த்தால், வலைப்பதிவு டைரி மாதிரி என்றாலும் பொது பார்வைக்காகதானே எழுதுகிறோம்? அதனால் மேற்கோள்கள் / links கொடுப்பதில் தவறில்லை. ஆனால் முன்பின் விளக்கங்களுடன் மேற்கோள்கள் - சரியான hyperlinks கொடுத்து கட்டுரையில் நாம் சொல்ல வந்தது தெளிவாக இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. பிற இடங்களில் நாம் படிப்பதை நம் வலைப்பதிவுகளில் links கொடுப்பதுபோல் நம் வலைப்பதிவுகளும் பிற இடங்களில் மேற்கோள்களாக காட்டப்படுவதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

Having said that, இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எங்கேயோ தவறு நேர்ந்து விட்டது என்பது புரிந்தவுடன், தடாலென்று சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்பட்டிருக்கக்கூடாது. எப்போது பொது பார்வைக்காக வந்துவிட்டதோ அது அப்படியேதான் இருந்திருக்க வேண்டும். காசி சொல்வதுபோல் "திருத்தப்பட்டது" என்று அறிவித்து இருக்கலாம். அல்லது சரியான விளக்கங்கள் கொடுத்து விட்டு இருக்கலாம் - பிரிண்ட் பத்திரிகைகளில் செய்வதுபோல். இணையத்தில் வெளியிட்டாலும் பிரசுரத்துக்குரிய நெறி முறைகள் பின்பற்றப் பட வேண்டும் இல்லையா?

பி.கு: யூனிகோட் பற்றி காசி எழுதியிருந்த பதிவில் பின்னூட்டம் எண்ணிக்கை 40 என்று பார்த்துவிட்டு, அட, 40 பேர் ( சரி; 40 பதில்கள்:-) இருக்கே; அப்படி என்னதான் யூனிகோட் பற்றி அலசுகிறார்கள் என்று நுழைந்தேன் :-) முதலும் கடைசியும் தவிர, நடுவில் பெரிய ரகளையே அல்லவா நடந்திருக்கு - அதுவும் யூனிக்கோடிற்கு சம்பந்தமேயில்லாமல் :-)