சரிவுதான். ஆனாலும் இப்படி அதள பாதாள சரிவா!!
எட்டடிக்கு பத்தடி கூட இருக்க முடியாது. அவ்வளவு சின்ன அறை. அதில் தாறுமாறாக ஒரு படுக்கை. சுவற்றில் பிய்ந்து தொங்கும் "ஓவியத் துணி" (???) கட்டில் மேல் பெட்ஷீட் மற்றும் குப்பையாக துணிகள், பேப்பர்கள். தரையில் ஒரே குப்பை. துணிகள் - அப்படியே ஏறுமாறாக, அழுக்காக. அலமாரி மற்றும் ஒரு பெரிய மரப்பெட்டி திறந்தவாறு. அறையில் ஒரேயரு பொந்து - வெளிச்சம் வர.
இன்னொரு அறை - சமையலறையாம். நாலு கட்டைகளை வைத்து செய்யப்பட்ட மேடை ஒன்று. குப்பைத்தொட்டியைத்தவிர மற்ற இடங்களில் எல்லாம் ஒரே குப்பை. சாமான்கள் எல்லாம் சிதறி - கன்னாபின்னாவென்று ஒயர்களும் கழிவு நீர் குழாய்களும் இங்குமங்கும் இருக்கின்றன. அழுக்குப் பாத்திரங்கள் நிரம்பிய வாஷ் பேஸின் ஒரு மூலையில். அதிலிருந்து ஒரு ட்யூப். மேடையில் முட்டை வைக்கும் பேப்பர் டிரே. அரிகேன் லைட். டீத்தூள், வடிகட்டி என்று ஏதேதோ சாமான்கள் ஒரு ஒழுங்கில்லாமல். காயலான் கடையிலிருந்து பொருக்கி எடுக்கப்பட்டதுபோல் ஒரு அடுப்பு. அதன்மேல் அதற்கு மேல் பழைய கெட்டில் ஒன்று.
பளிங்கு மாளிகைகளில் சொகுசாக வாழ்க்கை நடத்திய சதாம் உசேன் பிடிபட்டபோது இருந்த இடத்தைப் டிவியில்/ படங்களில் பார்த்தபோது உங்கள் மனதில் எல்லாம் என்ன தோன்றிற்றோ தெரியாது. ஆனால் எனக்குள் எழுந்த கேள்வி என்ன தெரியுமா? ' இப்படி பரிதாபமாக இந்த மனிதர் கடைசியில் வாழ்க்கை நடத்தியுள்ளாரே... ஆமாம். இந்த அழுக்கு வாஷ்பேசின், அழுக்கு துணி மூட்டை, என்று இருக்கிறதே.... இதையெல்லாம் சுத்தம் செய்வது யார்? ( சரியான குடும்பத்தலைவியின் மூளையாச்சே! பின் எப்படி வேலை செய்யும்?) ஒரு வேளை தானே எதையோ சமைத்து சாப்பிட்டு, ( முட்டை அட்டையும் டீ வடிகட்டியும்தான் கதை சொல்கிறதே....!) எப்படியோ சமாளித்திருப்பாரோ? இந்த பொந்துக்குள் ஒளிந்திருக்கும்போது என்ன யோசித்துக்கொண்டிருந்திருப்பான்? சதாம் மனதுள் ஓடிய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? சதாம் வலைப்பூ எழுதும்போதுதான் இதெல்லாம் தெரியும் - புஷ் சதாமை உயிருடன் விட்டுவைத்திருந்தால்.
சரிவுதான். ஆனாலும் இப்படி அதள பாதாள சரிவா!! ஆனால் வேறு எப்படி இருந்திருக்க முடியும்?
Wednesday, December 17, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment