Friday, September 02, 2005

இயற்கையின் ஆவேசத்தில் அமெரிக்காவில் ஒரு ஆப்பிரிக்கா.

நம் இந்திய மாநிலங்கள் பலவற்றில் புயலும் வெள்ளமும் பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு, நியூ ஆர்லின்ஸைத் தாக்கிய காற்றினாவின் இழப்புகளை சரிகட்டுவது, அமெரிக்கர்களின் சாமர்த்தியத்திற்கும், செழிப்பிற்கும் ஜுஜுபி வேலை என்றுதான் முதலில் நினைத்தேன்.
ஆனால் இயற்கையின் ஆவேசத்திற்குப் பின் மனிதர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆச்சரியத்தைதான் கொடுக்கிறது. போதாதற்கு வெள்ளத்தடுப்புச்சுவர்கள் வேறு உடைத்துக் கொண்டு மேலும் வெள்ளம்.

மற்ற நாடுகளில் ஒரு கஷ்டம் என்றால் விழுந்தடித்துக்கொண்டு உதவிக்கு வரும் இந்த நாட்டில் இன்று "உதவி", "உதவி" என்ற குரல்கள் கேட்ட வண்ணம் இருக்கின்றன. கறுப்பர்களின் எண்ணிக்கை இந்த நியூ ஆர்லின்சில் அதிகம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதெப்படி சொல்லி வைத்தாற்போல் பாதிக்கபப்ட்டவர்களாக டிவியில் காண்பிக்கப்படுபவர்கள் அத்தனைபேரும் இவர்களாகவே இருக்கிறார்கள்? அடையாளத்துக்குக் கூட ஒரு வெள்ளை மனிதர்களைக் காணோம். இது புதிராகதான் இருக்கிறது. நியூ ஆர்லின்ஸிலிருந்து வரும் படங்களைப் பார்த்தால் அமெரிக்கா போலவே இல்லை. ஏதோ ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் உள்ள ஏழை நாடு ஒன்று போல இருக்கிறது என்று டிவி தொகுப்பாளர் ஒருவர் சொல்கிறார்.

நியூ ஆர்லின்ஸின் இன்றைய குழப்பத்திற்குக் காரணம் அமெரிக்க அரசாங்கம் தன் கவனத்தையெல்லாம் புதிதாக தீவிரவாதத்தை நோக்கி திருப்பியதால் இப்படிபட்ட இயற்கை சேதங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்து விட்டதுதான் முக்கியக் காரணம் என்கிறார்கள். இது உண்மையாகவும் இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

" கணக்குக் கற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் புஷ் சொல்லும் பொய்களை நம்பிக் கோட்டை விடுவோம்." என்று இன்று மெர்குரி நியூஸில் ஒரு பத்தியாளர் எழுதுகிறார். காரணம்? ஈராக் போரை இந்த சம்யத்தில் நிறுத்தினால் போரில் இறந்த 2000 சொச்சம் வீரர்களின் தியாகத்தைக் கேலி செய்வதுபோல் ஆகும் என்று புஷ் சொல்கிறார். அவர் கணக்கில் கொஞ்சம் வீக். நடந்துபோன நஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவுகள் எடுத்தால் எதிர்காலத்தில், பொருளாதார மற்றும் உயிர் நஷ்டங்கள் இன்னும் எவ்வளவு அதிகமாக ஆகும் என்று கணக்குப் போட வேண்டாமா என்கிறார் இவர்.

இப்படி ஈராக் போர், தீவிரவாதம் என்று மூர்க்கத்தனமாக கவனம் சென்றதில் சொந்த வீட்டில் நிகழும் சேதங்களுக்குத் தயாரான நிலையில் இருக்கத் தவறிவிட்டார்களோ?

புயல் வருவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஊரைக் காலி பண்ண சொல்லி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் அதே சமயம் புயல் வந்தபின் ஏற்படும் சேதங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் ஏற்பாடுகள் செய்திருக்க மாட்டார்களோ? குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் மருந்துகள்? நம் ஊரில் புயல் / வெள்ளம் வந்த அடுத்த நாளே ஹெலிக்காப்டரில் உணவுப் பொட்டலங்கள் விழத் தொடங்குமே என்று ஞாபகம் வருகிறது. இங்கே ஏன் உதவிக்கு இப்படித் தாமதம், எப்படி இப்படி ஒரு குழப்பம், என்று நிஜமாகவே புரியவில்லை.

வழக்கம்போல் வலைப் பதிவாளர்கள் நிறைய எழுதித் தள்ளுகிறார்கள். பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து ஒருவர் கார் பேட்டரி மூலம் தன் பதிவில் பதிந்துள்ளார்.

புயலில் பாதிப்பு பற்றி பகிர்ந்துகொள்ள இருக்கும் பல தளங்களில் ஒன்று இங்கே.

19 comments:

-/பெயரிலி. said...

நியூ ஓர்லியன்ஸ் நகர்மத்தியும் அதற்கு மிகவும் அருகாமையிலேயிருக்கும் இடங்களும் கறுப்பினத்தவர்கள் நிறைந்த பிரதேசங்கள். தவிர, வெளியூருக்குச் செல்ல வசதியில்லாமல், சுப்பர்டோமிலே தாங்கும/மிடம் தேடிதங்கவேண்டியநிலைக்கு நிர்ப்பந்தமான பொருளாதாரநிலையும் அவர்களினதாகவேயிருந்திருக்கின்றது

Aruna Srinivasan said...

நகரைவிட்டு ஓடிப்போக பொருளாதார நிலை இடமளிக்காதவர்களும், போக மனமில்லாமலோ அல்லது அலட்சியமாகவோ இருந்தவர்கள்தாம் இப்படி திண்டாடுகிறார்கள் என்று இந்தப் பதிவைப் போட்ட பிறகு படித்தேன், பெயரிலி. இருந்தாலும் Disaster Management இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. Thanks for dropping by :-)

-/பெயரிலி. said...

/இருந்தாலும் Disaster Management இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது/
அதில் மாற்றுக்கருத்தில்லை; ஆனால், நியூ ஓர்லியன்ஸின் உளநிலை எப்போதுமே இதுதான்; "புயல் நியூ ஓர்லியன்ஸைத் தாக்கவென வரும்; ஆனால், கடைசி நேரத்திலே கிழக்கே ஸ்லைடல்/ப்லொக்ஸி என்றோ மேற்கில் லாபியாட் என்றோ போய்விடும்." அதனால், வெளியே பொதுவாக, ஓர் அலட்சியமிருப்பதுமுண்மை; ஆறாண்டுகளாக, நானும் இதையே செய்துகொண்டிருந்தேன். பல்கலைக்கழவிடுதியிலேயே தங்கிவிடுவதுண்டு. இன்னொரு காரணம், ஓடும்போது, உள்நோக்கிப்ப்போகும், பெருஞ்சாலையிலேயே போகவேண்டும். அந்நேரத்திலே, போக்குவரத்துத்தாமதத்தினாலும், நேரடியாகப் புயலைப் போகும்வண்டியிலே எதிர்கொள்கிறநிலையும் ஏற்பட்ட நண்பர்களுண்டு.

இப்படியான நேரங்களிலே நியூ ஒர்லியன்ஸின் பிரெஞ்சு குவாட்டரிலே பெருமளவிலே உல்லாசப்பயணிகளுடன் நடக்கும் Hurricane party களும் உண்டு. ப்ரெஞ்ச் குவாட்டர் பேர்பன் வீதியின் பிரபல்யமான குடிக்கலவைக்கே ஹரிக்கேன் என்று பெயராக்கும்.

இந்த முறையும் அப்படித்தான் புயல் தலைக்கு வந்தது தலைப்பாகையென்று போயிருக்க, மூச்சு விடத்தொடங்க, ஏரி அணை உடைத்திருக்கிறது. நகரிலே வெள்ளையரும் பணக்காரரும் வசிக்கும் Garden District மிஸிஸிப்பி ஆற்றினை அண்டிய பகுதி; நகருக்கு ஏரித் திசையிலே பெரும்பாலோனோர் ஆபிரிக்க-அமெரிக்கர்கள். இந்தநிலையிலே பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரநிலை மந்தமானவர்கள்தான்.

/Thanks for dropping by :-) /
தங்கள் மொழியால் தன்யனான்;-)

Aruna Srinivasan said...

//ஆறாண்டுகளாக, நானும் இதையே செய்துகொண்டிருந்தேன். பல்கலைக்கழவிடுதியிலேயே தங்கிவிடுவதுண்டு. //

!!! அங்கேதான் இருந்தீர்களா ! நிறைய உள்ளூர் நிலையை விவரித்ததற்கு மிக்க நன்றி.

G.Ragavan said...

நியூ ஒர்லண்ட்சில் தானே ஆன் ரைஸ் என்ற எழுத்தாளரும் வசிக்கிறார்? அவருக்கு என்ன ஆனார்?

Alex Pandian said...

http://www.latimes.com/news/nationworld/nation/la-0831katrina_rescue-pg,0,1562937.photogallery?coll=la-home-headlines&index=2


http://www.latimes.com/news/nationworld/nation/la-090105katrina-pg,0,510796.photogallery?coll=la-home-headlines&index=2

these pictures and more in LATimes are highly disturbing

Hope the people get food and medicine quickly.

-/பெயரிலி. said...

/நியூ ஒர்லண்ட்சில் தானே ஆன் ரைஸ் என்ற எழுத்தாளரும் வசிக்கிறார்? அவருக்கு என்ன ஆனார்?/
அவருடைய வீடு ஒன்று நியூ ஓர்லியன்ஸின் மிக அழகான சாலைகளிலே ஒன்றான சார்ள்ஸ் வீதியிலே இருக்கின்றது. ஆனால், அவர் நியூ ஒர்லியன்ஸிலேயே தொடர்ந்து வசிக்கின்றாரா தெரியவில்லை. அவருடைய மகனும் தற்போது எழுத்தாளராகியிருக்கின்றார்; நியூ யோர்க்கிலிருந்து எழுதுகின்றார்.

நேற்று தொடர்வண்டியிலே வரும்போது ஆன் ரைஸின் The Vampire Armand இனை ஒருவர் எனக்கு முன்னால் நின்றபடி வாசித்துக்கொண்டிருந்தார். நிகழ்கால நியூ ஓர்லியன்ஸ் சம்பவங்களுடன் சேர்த்துப்பார்க்கும்போது கொஞ்சம் சங்கடமாகவிருந்தது. ஆன் ரைஸின் 'Interview with the Vampire' நியூ ஓர்லியன்ஸ் இடுகாட்டுக்கல்லறைகளிலேயே படம்பிடிக்கப்பட்டது. இக்கல்லறைகள், நியூ ஓர்லியன்ஸின் கடல்மட்டத்தின் கீழான நிலையினை ஒத்துநோக்கி, நிலத்துக்குமேலேதான் உடல்களைப் பெட்டிகளிலே வைக்கும்வண்ணம் குடும்பக்கல்லறைகளாக அமைக்கப்பட்டவை; நியூ ஓர்லியன்ஸின் உல்லாசப்பிரயாணிகள் கல்லறை பார்ப்பதையும் ஒரு நோக்காகக் கொண்டு வருவதுண்டு.

ஜாஸ் இசையின் குறிப்பிடத்தக்கவரிலே ஒருவரான fats domino இப்புயலோடு நியூ ஓர்லியன்ஸிலிருந்து காணாமற்போய்விட்டாரெனச் சொல்லப்பட்டது; ஆனால், இப்போது, காப்பாற்றியிருப்பதாகச் செய்தி வந்திருக்கின்றது.

நெடுங்காலநோக்கிலே பாதிக்கப்பட்டவர்களிலே, நியூ ஓர்லியன்ஸினை அடுத்த பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் அடங்குவார்கள்; துலேன் பல்கலைக்கழகம் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குத் திறக்கப்படுமாவெனத் தெரியவில்லை. மாணவர்களுக்கு மற்றைய பல்கலைக்கழகங்கள் (ரெக்ஸாஸின் ரைஸ், கூஸ்டன் பல்கலைக்கழகம், மஸாஸூசெட் மாநிலத்திலிருந்து துலேனிலே கற்கும் மாணவர்களுக்கு மஸாஸூசெட் பல்கலைக்கழகங்கள்) ஓரளவுக்கு தாங்கள் மாற்றுப்பல்கலைக்கழகங்களாகச் செயற்பட இசைந்திருக்கின்றன. ஆனால், பெரும்பாலான முதுநிலைமாணாக்கர்கள், வெளிநாட்டுமாணாக்கர்கள் - விசா, நிதி குறித்து பல்கலைக்கழகங்களினை நம்பியிருப்பவர்கள். இவர்களின் நிலைதான் குழப்பகரமாகவிருக்கும். முன்னர் போல இல்லாமல், எடுக்கும் ஒரு பாடத்தினை விருப்பமில்லாமலென்றோ தேவையில்லையென்றோ கைவிடுவதைக்கூட, உள்நாட்டுப்பாதுகாப்புப்பிரிவுக்குப் பல்கலைக்கழகமூடு அறிவிக்கவேண்டிய நிலையிலிருப்பவர்கள் இவர்கள். இவர்களுக்கிருக்கக்கூடிய நடைமுறைச்சிக்கல்கள் பல.

G.Ragavan said...

நன்றி பெயரிலி. எனக்கு நியூ ஓர்லண்ஸ் பழக்கமானதே Interview with vampire நாவலாலும் படத்தாலுந்தான். அது அங்குதான் படம் பிடிக்கப்பட்டதா என்பது தெரியாது.

வேம்ப்பயர் க்ரோனிகிள்ஸ் எழுதியவர் ஆன் ரைஸ். நான்கு புத்தகங்கள் படித்துள்ளேன். வேம்ப்பயர் அர்மாண்ட் ஆறாவது புத்தகம். ஐந்தாவது முடிக்காததால் ஆறாவது படிக்கவில்லை. ஐந்தாவது புத்தகம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் இன்னும் முடிபடாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நான் கேள்விப் பட்ட ஊரில் பலர் வீடிழந்து நிற்கின்றார்கள் என்று கேள்விப் படுகையில் வருத்தமாக இருக்கிறது. அவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வேண்டுகிறேன்.

பத்மா அர்விந்த் said...

அருணா
உங்கள் கட்டுரையை படித்தபின் இதுபோல இயற்கை/செயற்கை விபரீதங்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது பற்றி திட்டம் தீட்டுபவர் என்ற முறையில் சில வார்த்தைகள்.
1. மக்கள் தாங்களாகவே விரும்பினால் த்விர எதையும் திணிக்க முடியாது. நிறைய அமெரிக்கர்கள் ஊர்ப்பாசம் கொண்டு நான் வெளியேறமுடியாது. காப்பது அரசின் கடமை என்ற முரட்டுபிடிவாதம் கொண்டவர்கள். இதற்கு பல உதாரணங்கள் தர முடியும்.கதவை தாழிட்டு உறங்குங்கள் என்று சொன்னால் கதவை தாழிடுவதும் தாழிடாததும் எங்கள் விருப்பம். பாதுகாப்புதரவேண்டியது உங்கள் கடமை என்று சொல்லி வருடா வருடம் வன்முறைக்கு ஆளாகும் மாணவிகள் இங்கே அதிகம்.இதனால் ஆகும் செலவும் அதிகம்.
2. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ஒரு காவலர் அல்லது அரசு அலுவலரிடம் சொன்னால் உதவி கிடைத்திருக்கும். மாறாக வற்புறுத்தி செய்தால், காத்ரீனா தாண்டி போயிருந்தால் உடனே ஒரு வழக்கறிஞர் இது இனவெறி என்று முத்திரை குத்தி சண்டைக்கு இழுக்கமுடியும்.
3. அரசு பல துறைகளின் செலவீட்டை குறைக்க சொன்னது உண்மையே. ஆனால் இவை அமலுக்கு வர 2007 ஆகும். அதுவும் 2007 இல் 25%மும் பிறகு 25% என்றும் படிப்படியாக குறைக்க படும்.
4. உள்நாட்டு பாதுகாப்புக்கு தரப்படும் நிதியில் பலவேறு திட்டங்களும் தினசரி வாழ்க்கையை சீராக்கும் வண்ணாமும் பயன்படுத்தபடுகின்றன. அதிலும் நிதி குறைக்கப்படுள்ளது. இதில் செய்யப்படும் பல புது திட்டங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் பயன் படும். இது பற்றி எழுத தொடங்கி, நிறுத்திவிட்டேன்.
5. நியுஆர்லியன்ஸ்க்கு உதவிக்கு வர எங்களுக்கெல்லாம் அழைப்பு வந்திருக்கிறது. துரதிருஷ்டவசமாக என்னால் இப்போது செல்ல முடியாது. என் கணவர் வேலை செய்யும் நிறுவனமும் அங்கே தொலைபேசி, மற்றும் இணையதளம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
6. போரினால் பொருளாதரம் சீர்குலைந்தென்னவோ உண்மைதான். ஆனால் அது இது போன்ற அவசரநிலை நிதியை பாதிக்காது.
7. தன்னார்வத்துடன் வரும் பொருட்களையும் பரிசோதிக்காமல் வினியோகிக்க முடியாது.9/11 இல் சேர்ந்த பொருட்களே இன்னமும் பல குவிந்து கிடக்கின்றன.
திட்டங்கள் தீட்டுவதும் அது செயல்படும் முறையும் பரிசோத்திது குறைகளை நிவர்ந்தி செய்வது எல்லாம் எங்கள் அளவில் நடந்தாலும், அவசர துறைகள் (காவல், உளவு, மற்றும் ஹஸார்ட்) தங்களுடையை ஈகோ சண்டையில் சில விபரீதங்கள் ஏற்படுவதனால் குறைகள் ஏற்படும்

Aruna Srinivasan said...

1. It takes all kinds of people to make the world என்று சொல்வதுமாதிரி, இப்படி பொருளாதரப் பிரச்சனை மற்றும் ஊர்ப் பாசம் என்று தங்கி விடுபவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்த்து நிவாரணப் பணிகள் தயாராக இருந்திருக்கலாம். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் முன்னேற்பாடுடன் செயல்படுபவர்கள் இவர்கள் என்பதுதான் என் அபிப்பிராயம். எப்படி இங்கே கோட்டை விட்டார்கள்?

2.// அரசு பல துறைகளின் செலவீட்டை குறைக்க சொன்னது உண்மையே. ஆனால் இவை அமலுக்கு வர 2007 ஆகும். // அதாவது தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு நிதிப் பற்றாக்குறை காரணம் இல்லை என்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். மற்ற நாடுகளிலிருந்து வரும் உதவியையும் அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறது செய்திகள். அதனால் நிதி ஒரு பிரச்சனையில்லை. பின் சிக்கல் எங்கே என்பதுதான் என் ஆச்சரியம். ஒன்று, நிவாரணப் பணிகள் தயார் நிலையில் இல்லை. அல்லது நீங்கள் கடைசியில் வரியில் குறிப்பிட்ட - // அவசர துறைகள் (காவல், உளவு, மற்றும் ஹஸார்ட்) தங்களுடையை ஈகோ சண்டையில் சில விபரீதங்கள் ஏற்படுவதனால் குறைகள் ஏற்படும் // - காரணம். மூன்றாவது, நிதியும் உதவிகளும் இருந்தாலும் சரியான சமயத்தில், சரியான முறையில், தேவையானவர்களுக்குப் போய்ச் சேர முடியாமல் delivery / executing பிரச்சனைகள் உள்ளன. - இந்தியாவிலும் ஒரிஸா வெள்ளங்கள் சமயங்களில் இதுபோன்ற சங்கடங்கள் இருந்துள்ளன. ஆனால் அமெரிக்கா வேறு உலகம் என்று நினைத்தேன்.

அரசைக் குறை சொல்வது என் நோக்கமல்ல. காரணம் எதுவானாலும், ஏற்கனவே இயற்கையினால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையான சமயத்தில் உதவியில்லாமல் இருப்பதாக வரும் காட்சிகள் நிஜம். மனதை உலுக்குவதால் எழும் கேள்விகள் இவை. இது போன்று பல சங்கடங்கள் இந்தியாவில் நிகழும்போது நிர்வாகத்தை நாம் - ஏன் வெளி நாட்டு ஊடகங்களும் கூட - குறை சொல்வதில்லையா? காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். சாதாரணப் பிரஜை - எந்த நாடாக இருந்தாலும் - எதிர்பார்ப்பது தீர்வுதான்.

Aruna Srinivasan said...

அலெக்ஸ் பாண்டியன், ராகவன், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பெயரிலி, நிறைய செய்திகள் கூறியுள்ளீர்கள். நியூ ஆர்லின்ஸின் இசை மற்றும் கலை வித்தகர்கள் பற்றியும் டிவியில் கேள்விபட்டேன். அதேபோல் சென்ற தேர்தலில் ஜெயித்த இந்திய வம்சாவளி பாபி ஜிண்டாலின் வீடு கூட மூழ்கியது என்று நேற்று பேட்டியில் கூறினார். வெளியூர் சென்றிருந்ததால் இவர் குடும்பம் பிழைத்ததாம்.
லூசியானாவிற்கு, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான இவர் தன் சக மாநிலத்தவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளுக்கு தன் இணைய தளத்தில் பல குறிப்புகள் கொடுத்துள்ளார்.

Aruna Srinivasan said...

பத்மா,

மேலே உள்ள என் பதிலில், ஆரம்ப வரிகள் விடுபட்டுவிட்டன. மன்னிக்கவும். அவற்றை மீண்டும் இங்கே பதிந்துல்ளேன்.

"..நிவாரணப்பணிகளில் இருக்கும் சங்கடங்களை ரொம்பத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் பத்மா. மிக்க நன்றி. அமெரிக்கவிலிருந்து வித்தியாசமான வாழ்க்கை முறையிலிருந்து வந்தவள் என்பதால் எனக்குப் புரியாத விஷயங்களைதான் கேள்வியாக எழுப்பியிருந்தேன். உங்கள் விளக்கம் ஓரளவு நிலையை விளக்கினாலும் சில விஷயங்கள் இன்னும் சமாதானாமாகவில்லை..."

பத்மா அர்விந்த் said...

அருணா
மிக்க நன்றி. அமெரிக்கா தவறே இல்லாத சொர்க்கௌலகம் இல்லை. இங்கேயும் இந்தியாவை போலவே போடிகளும் அதிகார மோதல்களும் உண்டு. மக்கள் பலவிஷய்ங்களை அசாதரணமாக எடுத்து கொள்கிறார்கள். இன்னமும் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகம் இல்லை. மால்கள் திறந்து இருக்கின்றன. இதை பார்த்தாலே எத்தனை முன்சாக்கிரதை உணர்வு உண்டு என்பது புரியும். People wait for orders from higher up, same way as in India!
Before we deliver care, we need to get consent, we need cooperation from public, and we need to be so careful in executing those without hurting any feelings on race, religious grouds as well. We also have to make sure we ethnic needs are taken care off. This is an added burden.Common people need solution in a way they like it an d they want it in this country.

-/பெயரிலி. said...

/சென்ற தேர்தலில் ஜெயித்த இந்திய வம்சாவளி பாபி ஜிண்டாலின் வீடு கூட மூழ்கியது என்று நேற்று பேட்டியில் கூறினார். /
குடியரசுக்கட்சியின் சார்பிலே போட்டியிட்ட, பொபி ஜிந்தால் வெல்லவில்லை; தற்போதைய ஆளுநர் பிளாங்கோவிடம் தோற்றுப்போனார்.

பத்மா அர்விந்த் said...

அருணா
மறந்து விட்டேன். இங்கே stock National pileமருந்துகள் அவசரத்தேவைக்காக் இருக்கும்.மாதாமாதம் expiry ஆன மருந்துகள் நீக்கப்பட்டு புது மருந்துகள் சேர்க்க படும்.
salvation army, red cross soup kitchen இலவச உணவு தர தயார் நிலையில் உள்ளனர். அவசர நிலையில் செயல்பட்வேண்டிய protocol புதுப்பிக்கபடும். ஆனாலும் இயற்கைக்கு முன் அரசு இயந்திரங்கள் வேகமாக செயல் படுவதில்லைதான்.

வாசன் said...

அமேரிக்க குடிமகன் என்ற வகையில் சூறாவளி பற்றி எழுதியமைக்கு நன்றி. நான் எழுத வாய்ப்புகளில்லை.

சில குறிப்புகள்

நியு ஓர்லியன்ஸ் மக்கள் தொகையில் 67% கறுப்பர் எனும் போது, பாதிகப்பட்டோரிலும் பெரும்பான்மையினராக இருப்பது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

உதாரணமாக, நாளைக்கே இங்கே நானிருக்கும் நியு மெக்சிக்கொவில் ஏதாவது இயற்கை தொந்தளிப்பு நடந்தால், பா.படுவோர் பெரும்பாமையினர் ஹிஸ்பேனிக்ஸ் ஆகத்தான் இருக்க முடியும்.

பாபி ஜிண்டால் ஆளுநருக்கு தோற்றுப் போனார் ஆனால் லுயிசியனா மாநில - கீழவை உறுப்பினராக மத்திய நாடாளுமன்றத்திலுள்ளார்.


வாசன்

Aruna Srinivasan said...

பத்மா,
// இந்தியாவை போலவே போடிகளும் அதிகார மோதல்களும் உண்டு... People wait for orders from higher up, same way as in India! //

ஓரளவு வீட்டுக்கு வீடு வாசப்படி கதைதான் போலிருக்கு ! சற்று நேரம் முன்பு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த ( ஆனாலும் இது ரொம்ப லேட் ) புஷ்ஷிடம் ஒவ்வொரு துறை அதிகாரியும் நிலையைப் பற்றி விளக்கம் கொடுப்பதைப் பார்த்தேன். அவர்கள் சொலதையெல்லாம் கேட்டுவிட்டு அவர்களுக்கு பாராட்டி ஒரு ஷொட்டு கொடுத்துவிட்டு, கவலைப் படாதீர்கள் இந்த இடத்திலே புத்தம் புதிதாக ஒரு coast line உருவாகப்போகிறது என்று கையசைத்துவிட்டு சென்று விட்டார்.

பெயரிலி, வாசன், பாபி ஜிண்டால் பற்றியத் தகவலுக்கு நன்றி. சில விஷயங்கள் நினவில் தவறாகப் பதிந்துவிடுகின்றன :-)

Anonymous said...

பத்மா,
// இந்தியாவை போலவே போடிகளும் அதிகார மோதல்களும் உண்டு... People wait for orders from higher up, same way as in India! //

ஓரளவு வீட்டுக்கு வீடு வாசப்படி கதைதான் போலிருக்கு ! சற்று நேரம் முன்பு பாதிக்கப்பட்ட பகுதி

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

// ஆனாலும் இயற்கைக்கு முன் அரசு இயந்திரங்கள் வேகமாக செயல் படுவதில்லைதான்.//

தேன் துளி (பத்மா)
நீங்கள் சொல்லும் அரசு நடைமுறைச் (Protocol) சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அதுபோல் அமெரிக்காவில் எதற்கெடுத்தாலும் வழக்குப்போடும் அபாயமும் உள்ளது இல்லாமல் இல்லை. எனக்கு என்னமோ இதனை இன்னும் நன்றாக கையாண்டு இருக்கலாம் போல் தோன்றுகிறது.

சின்னக் குழந்தைகள் தண்ணி, பால் அடிப்படை உணவு இல்லாமல் துன்பபப்டும் படங்களைப் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.

புஷ் உதவி வருது வருது என்கிறார். நியு ஓர்லியன்ஸ் மேயரோ ஒன்னும் கைக்கு வரவில்லை. என்று விரக்தியுடன் பேசுகிறார். புஷ் (அமெரிக்க அரசாங்கம்) இதனை போர்க்கால அடிப்படையில் கவனிக்கவில்லை என்பது 100 % உண்மை.

இம்மாம் பெரிய ராணுவம் , விமானங்கள் (படை விமானங்கள் மற்றும் தனியார் விமானங்கள்) ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒரு மணி நேரத்தில் அடிப்படைத் தேவைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து இருக்கலாம்.

ஆயிரம் குறைகள் சொன்னாலும் சுனாமியின் போது இந்திய அரசாங்கம் குறிப்பாக தமிழக அரசு செயல் பட்ட அருமை.

-கல்வெட்டு