Monday, May 28, 2007

"ஹிட்ச் ஹைக்கர்" - புத்தகம்

பல ஆங்கில வார்த்தைகளுக்கு பொருத்தமாக தமிழ் வார்த்தை கிடைக்காது திண்டாடுவோம். அப்படித்தான் ஹிட்ச் ஹைக்கர் - என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன என்று சில சமயம் யோசித்து இருக்கிறேன்.

வழிப்போக்கன்? பாதசாரி? மனம் போனபடி பயணிக்கும் பயணி? ஓசி சவாரி??
எந்த வார்த்தையைப் போட்டால் சரியாக இருக்கும் என்று புரிந்ததேயில்லை.

ஆனால் லண்டனில் வழக்கறிஞராக இருக்கும் தமிழர் வினோத் ஜியார்ஜ் ஜோசப் எழுதிய "ஹிட்ச் ஹைக்கர்" ( Hitchhiker - by, Vinod George Joseph) என்ற நாவலைப் படித்தவுடன் ஒரு புது வார்த்தை தோன்றியது.

"கிடைத்த வாகனத்தில் சவாரிக்கும் பயணி!"

கச்சிதமாக ஒரு வார்த்தை கிடைக்காவிட்டாலும் இந்தக் கதையின் நாயகனைப் போல் பல மதங்களின் ஆக்கிரமிப்பில் மாட்டிக்கொண்டு தமக்கென்று ஒரு பாதையில்லாமல் வாழ நேருபவர்களை இப்படிக் குறிப்பிடலாம் என்று தோன்றியது.

கதையின் களம் தமிழகம் - ஜாதிகள் என்னும் நதிகள் சங்கமம் ஆகாமல் தனித்தனியே பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலை. இந்துவாக இருந்து கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பெற்றோர்கள் - தந்தை ஒரு சர்ச்சில் வாட்ச்மேன். சர்ச்சின் உதவியால் மகன் எபனேசர் பொறியியல் கல்லூரியில் படித்து மென்பொருள் வல்லுனராக உயருகிறான்.

கல்வியால் வாழ்க்கை நிலை உயர்ந்தாலும் சமூகத்தில் அவன் ஜாதியின் கண்களாலேயேப் பார்க்கப்படுகிறான். உயர்ஜாதி இந்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காயத்ரிக்கு அவன் மேல் சுரக்கும் பரிதாபமும், அவளுடைய தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளும் அவளுள் அவன் மேல் காதல் எனும் பிரமையைத் தோற்றுவிக்கின்றன. ஜாதியின் காரணமாக அவனை எதிர்க்கும் தன் குடும்பத்தை மீறி அவனைத் திருமணம் கொள்வதன் மூலம் தன் கொள்கைப்பிடிப்பை நிலை நாட்டலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அவளைக் கைப்பிடிக்கவென்றே மீண்டும் இந்துமதத்திற்கு மாறும் எபெனேசர் அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறான்.

புகழேந்தியாக மாறிய எபனேசரைத் தான் காதலிக்கவில்லை; எனவே அவனைத் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறாள். ஆனால் சர்ச் புகழேந்தியை மீண்டும் எபனேசராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறது.

ஆனால் எபனேசர் என்கிற புகழேந்தி இப்போது மதங்களுக்கப்பாற்பட்ட ஒரு சாதாராண மனிதனாக வாழ முடிவு செய்து மதங்களின் பிடியிலிருந்து வெகு தூரம் ஓடிவிடுகிறான்.

இதுதான் கதை.

பாத்திரப்படைப்பு மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப பகுதிகளில் எபனேசரின் பள்ளி மற்றும் வளரும் பருவங்களை விவரிக்கும் விதமாகட்டும் பின்னால் காயத்திரி அவள் குடும்பம், கொள்கைகள் என்று ஆழமான சிந்தனைகளை விவாதிக்கும் இடங்களாகட்டும் மெல்லியதாக நிலவும் ஒரு யதார்த்தம் நம்மைக் கதையுடன் ஒன்ற வைக்கிறது. இந்தக் கதையைப் படிக்கும் தமிழகத்தில் வளர்ந்த தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் ஆங்காங்கே தங்கள் பழைய நினைவுகளை நினைவுகூருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பாவனைகள், செயற்கையம்சங்கள் எதுவும் கலக்காத தெளிந்த நீரோடைபோல் செல்லும் எளிய நடை, நம் அடுத்தவீட்டில் நடப்பவற்றை பார்ப்பதுபோல் சுவாரசியமாகவும், யதார்த்தமாகவும் கொண்டுவந்து நிறுத்துகிறது.

ஆரம்ப கால - பள்ளி பருவ நிகழ்ச்சிகளை சற்று குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

மற்றபடி ஆழமான கருத்தைச் சொல்லும் எளிமையான கதை.

பதிப்பாளர்:

Books for ChangePrice - Rs.350 - US$ 22.
www.booksforchange.net

Sunday, May 20, 2007

மணியான பேட்டி.


".....எப்படி வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் போக்கு மாக்காக கேள்விகள் கேட்டாலும், என் வாயில் சொற்களைத் திணித்தாலும், எனக்குச் சரியென்று தோன்றுவதைத்தான் நான் சொல்லுகிறேன். நான் சொல்வதிலும் புதிதாக ஒன்றுமில்லை. எப்போதுமே நான் எங்கள் கட்சிக்குள், மற்றும் மந்திரிசபையின் ஆலோசனைக் கூட்டங்கள் என்று எல்லா இடத்திலும் பேசுவதைத்தான் சொல்கிறேன். - வெறும் பொருளாதார வளர்ச்சி என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு வரும் திட்டங்களினால் சாதாரண மனிதர்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டு, ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கும் வர்க்கத்தினர் மேலும் பணம் சேர்க்கதான் வழி வகுக்கின்றன. இப்போதும் ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. பாதி வழியில் நாம் பாதையை மாற்றி நமக்கு / நம் தேசத்தின் சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நம் வழிகளை மாற்றிக்கொள்ளலாம். We must take a Midterm review and make Course Corrections....."

பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியளித்தாலும் இந்தியாவில் வளர்ச்சியின் பலன் சரியாக அனைவரையும் - அனைத்துதரப்பட்ட மக்களையும் சரியாகச் சென்றடைவில்லையோ என்ற கவலை நம்மில் பலருக்கு இருக்கலாம். சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் சரிவர கவனிக்கப்படவில்லை; கல்வி, சுகாதாரம், குடி நீர் வசதி போன்றக் குறியீடுகள் இன்னும் அதள பாதாளத்தில்தான் இருக்கின்றன' இந்த நிலை எப்போது மாறும்.... என்று நம்மில் பலர் கவலைப் படுகிறோம். ஏன் இவற்றை சரி செய்ய இன்னும் ஒரு குவியத்தோடு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வியெழுகிறது.

இந்த சமயத்தில் சி.என்.என். ஐ.பி.என் நிகழ்ச்சியான சாத்தானின் வக்காலத்து - Devil's Advocate - நிகழ்ச்சியில் இன்று மணிசங்கர் ஐயரின் மணியான பேட்டி.

சில நாட்கள் முன்பு CII நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது மேலே கூறியக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். உடனே மணி சங்கர் தன் அரசு / யு.பி.ஏ அரசை விமர்சிக்கிறார் என்று காது மூக்கு, மசாலா வைத்து அவரை மாட்டிவிடும் தொனியில் நம்ம கரண் தாப்பர் கேள்விகள் கேட்டாலும், மணி சங்கர் கொஞ்சம் கூட அசராமல் தன் நிலையை மிகப் பொறுமையாக வெளிப்படுத்தினார். கச்சிதமாகவும், கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல் கரணின் கொக்கிகளையும், எலிப் பொறிகளையும் கையாண்ட விதம் சுவாரசியமாக இருந்தது.

மணி சங்கரின் கவலை மன்மோஹன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் இல்லாமல் இருக்காது. "Economic policies with a human face" என்று மன்மோஹன்ஜி சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே திருப்பிச் சுருட்டத் தேவையில்லை. வளர்ச்சி கட்டாயம் இருக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் அவசியம். ஆனால் கூடவே பலன்கள் அனைவரையும் போய் அடையுமாறு பார்த்துக்கொள்ள வழிகள் கண்டுபிடிக்கும் திறமையும் அவர்களுக்கு உண்டு என்றல்லவா நம்புகிறோம்? எங்கே முக்கியத்துவம் - Priorities - கொடுக்க வேண்டும் என்பதில்தான் கவனம் சிதறிவிட்டது.

பாதிவழித் திருத்தங்கள் - course correction - அவசியம் என்று தோன்றுமிடங்களில் தயங்காமல் செய்வார்களா? அல்லது ஊதற சங்கைப் போட்டு உடைப்பார்களா?