வருடம் 1995 - மே மாதத்தில் ஒரு நாள். சிங்கப்பூர் போன புதிது. மகன் பள்ளி அட்மிஷன், புது ஊரில் வாழ்க்கை என்று ஆரம்ப கால தடுமாற்றங்கள் இருந்த சமயத்தில் இந்திய தூதுவர் வீட்டில் ஒரு விருந்து. எல்லோருமே புது முகமாக தெரிந்த இடத்தில் புன்முறுவலை முகத்தில் படரவிட்டபடி ஜூஸ் கிளாசை வைத்துக் கொண்டு பேச்சுத் துணைக்கு ஆள் தேடியபோது என்னைப் போலவே ஆள் தேடிய முகம் கண்ணில் பட்டது.
பட்டுப்புடவையுடன் என்னைப்போலவே ஒரு தமிழ்ப் பெண். இருவரும் உடனேயே குப்பென்று ஆர்வத்துடன் பேச ஆரம்பித்துவிட்டோம். எங்கள் இருவரின் மகன்கள் ஒரே பள்ளி; ஒரே வகுப்பு - ஆனால் வேறு பிரிவுகள். டில்லியிலிருந்து நாங்கள் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்து இறங்கிய அதே நாளில்தான் அவர்களும் வந்துள்ளார்கள் - சென்னையிலிருந்து. எங்களுக்கு ஒரே சந்தோஷம் - புதிய ஊரில் ஒத்த அலைவரிசையில் நண்பர் கிடைத்த சந்தோஷம்.
அன்று ஆரம்பித்தது எங்கள் நட்பு. அங்கே இருந்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் வரை தினமும் இரண்டு தடவையாவது பேசாவிட்டால் எங்கள் நாள் முடியாது. அதன்பின் நான் டில்லிக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மாற்றி மாற்றி இருந்தபோதும் முடியும்போதெல்லாம் சந்திப்போம் - குறைந்த பட்சம் போன் அரட்டை நிச்சயம். பிறகு நான் டில்லியிலும் அவர் சென்னையிலும் இருக்கத் தொடங்கியபிறகு அவ்வப்போது போனில் - முடிந்தபோது நேரில் என்று நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
சில மாதங்கள் அவரவர் வேலையில் /குடும்பப்பொறுப்புகளில் மூழ்கி இருந்தாலும் எப்போதாவது போன் போடும்போது, எப்போதும் இருக்கும் அதே உற்சாகமும் அன்பும் துளிக்கூட குறைந்ததேயில்லை. 2001ல் நான் சென்னை வந்தபின்னரும் இந்த அன்பும் பிணைப்பும் தொடர்ந்தது. சில மாதங்களுக்கு ஒரு முறையாவது யாராவது ஒருவர் நினத்துக்கொண்டு திடீரென்று போன் போட்டு அரை மணி நேரம் பேசுவோம்.
ஆனால் கடந்த பல மாதங்களாக ஏனோ நான் அவருக்கு போன் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு முறை போன் போட்டபோது அடித்துக்கொண்டே இருந்தது. சரி எங்கேயோ வெளியே போயிருக்கிறார் என்று விட்டு விட்டேன். அவ்வப்போது நினவு வரும் - சரி நிதானமாக அப்புறம் பேசலாம் என்று நினைத்து காலம் போனது. ஏதோ அவரவர் வேலை குடும்பம் என்று இருக்கிறோம் என்ற அசட்டையாக இருந்துவிட்டேன். ஆங்கிலத்தில் taken for granted மனோபாவம்.
ஆனால் ஷோபா, இன்று காலையில் நீ குக்கர் வைத்துவிட்டு என்ன சமையல் செய்யலாம் என்று காபி குடித்தவாறே யோசிக்கும் அந்த ஒரு சில நிமிடங்களில் ஹார்ட் அட்டாக் வரும் என்று யாருக்கு தெரியும் ஷோபா? வாழ்க்கை இவ்வளவு அநித்தியமா? நிதர்சனம் முகத்தில் அறைந்தாற்போல் வலிக்கிறதே......
என் அன்புள்ள ஷோபனா ஜெயந்த் - என் மனது உனக்கு தெரியும். உன் பிரிவு மிகவும் வலிக்கிறது. ஆனால் உன் அருமையான தோழமை கிடைத்தது என் மனதுக்கு ஒரு நிறைவு.
Sunday, October 29, 2006
Subscribe to:
Posts (Atom)