Sunday, April 16, 2006

லோக் பரித்ரன்

இது... இது... இதைத்தான் எதிர்பார்த்தேன் ரொம்ப காலமாக......

"அனுபவம் பத்தாது. இவர்களால் என்ன செய்துவிட முடியும்? சிறு பிள்ளைகள்.... சுதந்திரப் போராட்டம் பற்றி / தியாகிகள் பற்றி தெரியுமா? தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? நம் மக்களைப் பற்றி என்ன தெரியும்? Green horns... அரசியலைப் பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?" என்றெல்லாம் பெரிய அரசியல்வாதிகளிடமிருந்து விமரிசனங்கள் வரலாம்.

ஆனால் இவர்களின் இந்த ஆர்வம் என்னை பிரமிக்க செய்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி உள்ளது. இன்னும் சிலர் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு பார்ப்பார்கள். ஆனால் யாருக்குப் போட்டு என்ன பிரயோசனம் நாம மாறவே போறதில்லே.... தேர்தலே ஒரு வேஸ்ட் என்ற ரீதியில் ஈசிச் சேரில் சாய்ந்து கொண்டு அல்லது டிவி பார்த்துக்கொண்டு ஓட்டுச் சாவடி பக்கமே போகாமல் வீட்டிலிருக்கும் ஒரு வர்க்கம் உண்டு. அது கணிசமான சதவிகிதம்.

" இந்த சதவிகிதம்தான் எங்களின் குறி" என்கிறார்கள் இவர்கள்.

அப்படிப் போடு !

படித்தவர்கள், திறமையுள்ளவர்கள், நண்பர்கள் சேர்ந்து ஆங்காங்கே வெற்றிகரமாக பலதுறைகளில் இறங்கும்போது ஏன் அரசியலில் / ஆட்சியில் குதிக்க தயங்குகிறார்கள் என்று தோன்றும். ஆக்கப் பூர்வமான சிந்தனையுள்ள பல இளைஞர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆர்வமாக உழைப்பதைப் பார்க்கும்போது இவர்கள் சக்தி பொது வாழ்வில் இன்னும் பரவலாக உபயோகப்படலாமே என்று தோன்றும்.

இதோ குதித்துவிட்டார்கள் இவர்கள்.

மனம் நிறைய வாழ்த்துவோம்.

பின்னர் சேர்த்தது:

லோக் பரித்ரன் பற்றி நான் எழுதியிருந்தது அப்படி ஒன்றும் அது சிலாகிக்க வேண்டிய நிகழ்வு அல்ல என்று சில விமரிசனங்களும் வந்தன. விமரிசகர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டம் என்கிற ஒரு பொதுத் தாகம் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு இழுத்தது. சுதந்திரம் பெற்றோம்; உன்னதமான அரசியல் தலைவர்களைப் பெற்றோம். பின்னர் சுதந்திர இந்தியாவில் எமர்ஜென்ஸி, மொழிப் பிரச்சனை, என்று பல விதங்களில் பொதுத் தாகங்கள் இளைஞர்களை பொது வாழ்விற்கு இழுத்தன. இன்று அப்படிப்பட்ட நாடு தழுவிய இன்னல் / crisis - குறிப்பாக சொல்லும்படி இல்லாவிட்டாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், மத/ஜாதி வேறுபாடுகள், என்று கண்ணுக்குத் தெரிந்தும் / தெரியாத ஆயிரமாயிரம் பிரச்சனைகள் ஊடுருவி நிற்கும் சமயத்தில் வருங்காலத் தலைவர்கள் என்ற கேள்வி நிரப்படாமலேயே வெற்றிடமாக இருக்கிறது.

இந்த நிலையில் குடும்பம் மற்றும் இதர பின்வாசல்கள் வழியே தலைவர்களாக உருவாவதை நாம் எதிர்க்கிறோம். சினிமா போன்ற அடித்தள மக்களிடம் சென்றடையும் "தலைவர்களை" நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இன மற்றும் ஜாதியின் பேரால் தலைவர்கள் உருவாகும் கலாசாரத்தை, இன்னும் ஜாதி பாகுபாடுகள் அதிகரிக்க காரணம் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்க்க நினைக்கிறோம்.

ஆக, தலைவர்கள் உருவாக இன்று பெரிதான / வலுவான ஒரு தூண்டுகோல் - சுதந்திரப்போராட்டம் அல்லது எமர்ஜென்ஸி போன்று - தூண்டுகோல் என்ன? குவியமாக ஒன்று இல்லை. ஆனால் பன்முனைத் தாக்குதல் நடத்த ஆயிரம் காரணங்கள் உள்ளன. பசி, ஏழ்மை, என்று ஒரு பக்கமும் அதீத செல்வம் என்று இன்னொரு புறமும் சமூக இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. ஊழல் நிர்வாகச் சீர்கேடுகளினால் இன்னொரு பக்கம் நாம் தினசரி வாழ்க்கையில் அல்லல்கள் பல சந்திக்க நேருகிறது. மக்களின் நடைமுறை வாழ்விற்கான அடிப்படை பிரச்சனைகளான நீர், சுகாதாரம், கல்வி என்று ஓட்டைகள் பல நிரப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் எந்த வாசலையாவது திறந்துவிட வேண்டாமா? ஆரோக்கியமான இளம் சக்திகள் பொது வாழ்வில் நுழைய?

இந்த எதிர்பார்ப்புதான் நான் இவர்களை ஆதரிப்பதற்கு காரணம்.

மீண்டும் பின்னர் சேர்த்தது

என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண்.

லோக் பரித்ரன் கட்சி உடைந்து விட்டது. முளைக்கும் முன்பே அழுகிய செடியாகிவிட்டது.

இவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமில்லை; இந்திய அரசியலின் தாக்கம் இங்கும் உள்ளது என்பது இப்போது புரிகிறது. மற்றபடி இளைஞர்களின் வரவை அரசியலில் ஆதரிக்கும் என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண் என்பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.

Tuesday, April 04, 2006

Elements - குறும்படம்.

காட்சி - ஏதோ ஒரு அறையில்... உலகில் எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கலாம்.


அவனுடைய பின் தலை முதலில் தெரிகிறது. நெருங்கிப் போகப் போக அவன் முன்னே இருக்கும் கணினி தெரிகிறது. வேகமாய், பட படவென்று கீ போர்டை அவன் தட்டும் ஒலி... சொல்லப்போனால் அந்த ஒலியைத் தவிர வேறு சப்தம் இல்லை. கணினி திரையில் விதம் விதமாக செய்திகள்/ எண்ணங்கள்/ விவரங்கள். அவன் கண்கள் கூர்ந்து மேய்ந்து கொண்டுள்ளன. கூடவே கைகள் பட படவென்று தட்டிக்கொண்டிருக்கின்றன.

திடீரென்று திரையில் ஒரு அறிவிப்பு. கணினி மின்சாரத் தடையினால் வேலை செய்வது நிற்கப்போகிறது என்று. அவன் முகம் பேயறைந்ததுபோல் ஆகிறது. சட்டென்று ஒன்றும் புரியாமல் மறுபடியும் அங்கும் இங்கும் கீ போர்டைத்தட்டுகிறான் - பதட்டத்துடன். பட்டென்று கணினி செயலிழந்துவிடுகிறது.

கூடவே அவனும்.

போதைப் பழக்கம் உள்ளவன் அது இல்லாமல் தவிப்பதுபோல் அவன் கைகள் நடுங்குகின்றன; முகம் வியர்த்து காலை நீட்டி கூரையைப் பார்த்துக் கொண்டு படுத்துவிடுகிறான். ஆனாலும் புரண்டு புரண்டு படுப்பவனுக்கு பிரமை தீரவில்லை. மறுபடி தூக்கிவாரிப்போட்டு எழுந்து உட்கார்கிறான். அறையைச் சுற்றிலும் பார்க்கிரான். கொத்துக் கொத்தாக செய்திதாள்கள். அனைத்திலும் ஒரே விதமான செய்தி -

technology world;
Terrorism of technology -
Technology swallows your life.
Man isolated.

இந்த ரீதியில் நிறைய செய்திகள். எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெறுமையாக அவற்றைப் பார்க்கிறான்.

மெல்ல அவன் முகத்தில் ஏதோ தீவிரம். அவன் விரல்கள் மெல்ல நகர்கின்றன. மறுபடி கீபோர்டில் வேகமாகத் தட்ட ஆரம்பிக்கிறான். எதிரே திரையில் ஒன்றுமில்லை - வெறும் இருட்டைத் தவிர. சற்று நேரம் கனமான அமைதி.

தொலைபேசி ஒலிக்கிறது. எடுத்துக் காதில் வைக்கிறான். " ஹலோ.... என்ன ஆளையே காணோ? சந்தித்து ரொம்ப நாள் போல ஆகிவிட்டது?" அந்த முனையில் நண்பன் யாரோ... இவன் பதில் பேசவில்லை. பேச முடியவில்லை. முயல்கிறான் ... ஹ்ஹ¤ம்.. முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தை / குரல் வரவில்லை.

அதிர்ச்சியடைந்து ஒரு காகிதத்தை எடுத்து I am...." என்று ஏதோ எழுத பார்க்கிறான். எழுத்தே மறந்துவிட்டாற்போல் இருக்கிறது. கோபத்துடனும் பதட்டத்துடனும் வேகமாக வெற்றுக் காகிதத்தில் கிறுக்குகிறான்.
தூக்கிப் போட்டுவிட்டு தலையில் கைவைத்தபடி அமர்ந்து விடுகிறான்.

நீண்ட அமைதிக்கு பின் சட்டென்று எங்கோ ஒரு குருவி கத்தும் ஓசை. தலை நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து அறைக் கதவைத் திறந்து பால்கனியில் நிற்கிறான்.

சட்டென்று வண்ணங்கள் தெரிகின்றன. நீல வானம்; கருத்த நீலத்தில் சுற்றிலும் மலைகள். கண்ணுக்கு எட்டியவரையில் பசுமை. காற்றில் செடி கொடிகள் ஆடும் ஓசை. தூரத்தில் எங்கோ சலசலக்கும் நீரின் சப்தம். கைகளைத் தலையில் அண்டக்கொடுத்து கட்டியபடி மூச்சை இழுத்துவிட்டு, புதிய காற்றை இழுத்து சுவாசித்து ரசிக்கிறான். முகத்தில் மெல்லிய கீற்றுப் புன்னகை.

சட்டையை மாட்டியபடி வெளியே நடக்க ஆரம்பிக்கிறான். தூரத்தில் சூரிய கிரணங்கள்; மலைகள் வானம் என்று ஒவ்வொன்றாக அவன் கண்களுக்குத் தெரிகின்றன. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாக ரசிக்கிறான். நடக்க நடக்க எதிரே ஒரு புது உலகம் விரிவதை உணர்கிறான்.

ஓடி ஓடி ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு ரசிக்கிறான். சலசலவென்று ஓடும் ஆற்றில் கால் நனைய நிற்கிறான் படுக்கிறான். முகத்தில் பளீரென்று நீரை வாரியடிக்கிறான். நீரைத் தொடும் விரல்களில் ஓடும் புத்துணர்ச்சியை ரசிக்கிறான். விரல்களை நீட்டி னீட்டி, ஆட்டி அசைத்து ரசிக்கிறான். தரையில் ஈர மண்ணைப் பிசைந்து மலை கட்டுகிறான். மண்ணில் படம் வரைய முற்படுகிறான். ஒரு சதுரம். கீழே ஸ்டாண்ட் போல. சே. மறுபடி கணினியின் படமல்லவா வரைகிறோம்? அழித்துவிட்டு வட்டம் வட்டமாக மலரின் படம் வரைகிறான். தன்னுடைய பூ படத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து வாய்விட்டு சிரிக்கிறான். தொண்டையிலிருந்து குரல் "எஸ்".......... என்று அழுத்தமாக வருகிறது. மீண்டும் "எஸ்....." தன் குரலைத் தானே ரசிக்கிறான்.

வண்ணங்கள் குலுங்கும் இயற்கையின் அழகை ரசிக்கும் அவனது பலவித பாவனைகள் freeze frame ல் காண்பிக்கப்படுகின்றன.

படம் முடிகிறது.

சுமார் 6 நிமிடங்கள் - அல்லது அதிக பட்சம் 10 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படம்.

பெயர் Elements. துஷார் பராஞ்ச்பாய் ( Thushar Paranjepe`) என்ற மென் பொருள் தொழில்முறையாளர் எடுத்தது. என்டிடிவியின் NDTV Profit சானலில் சினிமா கிளப் என்ற நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்றது. படம் முழுக்க ஒருவரி கூட இல்லை - நடுவில் வரும் தொலைபேசி நண்பனின் குரல் தவிர.

ஒற்றை வரியில் என் கருத்து.

அருமை.