Sunday, November 14, 2004

தீபாவளியன்று நடந்த காஞ்சி நிகழ்வு எனக்கு ஒரு ஷாக் இல்லை. பெரிய பெரியவர் இருந்த காலத்தில் அவர் மேல் எனக்கு பெரும் மதிப்பு இருந்ததுண்டு. குறிப்பாக கல்கியில் வெளி வந்த அவரது "அருள் வாக்குகள்" பல எனக்கு பல சம்யங்களில் ஒரு மன உறுதியைக் கொடுத்துள்ளன. ( எனக்கு பிடிக்காமல் இருந்த அருள் வாக்குகளும் உண்டு- அது வேறு விஷயம்.) பொதுவாக அவை மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைபடாமல் மனிதம் என்ற முறையிலேயே இருந்தன.

ஆனால் ஏனோ ஜெயேந்திரரை அப்படி மதிக்க தோன்றியதேயில்லை. பல சமயங்களில் அவரது போக்கு அவரது "துறவி" நிலைக்கு சம்பந்தமில்லாதது போல்தான் தோன்றியுள்ளது. அரசாங்க வழக்கறிஞர் கூறியதுபோல் நிறையபேர் உணரலாம் -"அந்தப் பதவியின் மேல் மிகுந்த மதிப்புண்டு. ஆனால் அதில் இருக்கும் நபர் மீதல்ல" என்று ஆணித்திரமாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் இந்த நிகழ்வு ஓர் ஆச்சரியம். வலைப்பதிவுகளில் நிறைய பேர் எழுதியதுபோல் சாதாரணர்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மீண்டும் துளிர் விடும்படி ஒரு நிகழ்வு. - (கடவுளே, கண் படாமல் இருக்க வேண்டுமே! அரசியல் குறிக்கிட்டு நீதி காணாமல் போகாமல் இருக்க வேண்டுமே??!!) குற்றம் இன்னும் கோர்ட்டில் நிரூபணம் ஆகாத வரையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு benefit of doubt கொடுக்க வேண்டுமென்பது மரபு. அதனால் வரும் நாட்களில் இது எபப்டி போகிறது என்று பார்க்கலாம்.

ஆனால் என் வருத்தமெல்லாம் இப்போ என்னவென்றால் பொதுவாக வெளி நாடுகளில் நிலவும் செழுமைக் குறித்து பேசும்போது அனேக இந்தியர்கள் பெருமையாக, " அங்கெல்லாம் நிறைய பணம் இருக்கு. சுத்தம் சுகாதாரம் எல்லாம் சரிதான்; ஆனால் நாம் ஆன்மீக பாதையில் நாம்தான் உலகுக்கே வழிகாட்டி. லௌகீக வாழ்வில் வேண்டுமானால் அவர்கள் தரம் உயர்ந்திருக்கலாம். ஆனால் நாம் அகத்தூய்மையில் மேம்பட்டு இருக்கிறோம்...." என்ற ரீதியில் பிரமாதமாக சமாதனம் சொல்லிக்கொள்வோம். இதே வாரம் சென்னையில் இன்னொரு சந்நியாசியும் கைது என்ற செய்தி வந்த இரண்டு நாளில் இந்தக் காஞ்சி மடம் செய்தி. அகமாவது? புறமாவது? எங்கே போய் முகத்தை வைத்துக்கொள்ள?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு எதை வேண்டுமானலும் யாரை வேண்டுமானாலும் நம்பும் மக்களை நினைத்தால் ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் பரிதாபமும்தான் எழுகிறது. புற்றீசல் போல் கிளம்பும் அதிக வட்டி நிதி நிறுவனங்கள் போல் self styled ஆன்மீகவாதிகளும் சமீபகாலமாக எக்கச்சக்கமாக முளைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பக்தர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள். பலமுறை உண்மை நிலைகள் வெளிப்பட்டபின்னும் ஏன் இப்படி மக்கள் விட்டில் பூச்சி மாதிரி விழுகிறார்கள்? என்ன தேடி இவர்கள் பின்னால் செல்லுகிறார்கள்? பணம்? செல்வாக்கு? மன அமைதி?

தங்கள் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் ஆராய்ந்து பாஸிடிவ் நோக்குடன் தீர்வு தேடுவதைவிட்டுவிட்டு - பிரச்சனையும் தீர்வும் தங்களுக்குள்ளேதான் இருக்கிறது என்பது புரியாமல் எதையோ நிழலைத் துரத்திக்கொண்டு போகிறார்கள் என்று தோன்றுகிறது. அதுவும் பல "குருமார்களின்" பக்தர்கள் தம் தம் குருதான் கடவுள் என்று நிஜமாக நம்பும்போது இவர்களை நினைத்து பரிதாபப்படாமல் என்ன செய்ய? இந்த ரீதியில் எத்தனை கடவுள்கள் இப்போது நடமாடிக்கொண்டிருக்கிறார்களோ? கணக்கெடுத்து மாளாது.

Tuesday, November 09, 2004

பத்திரிகைகளில் மற்றும் டிவியில் அல்லது பில் போர்ட்களில் வரும் விளம்பரங்கள் சில சட்டென்று நம் கவனத்தைக் கவரும்; சில, நெகிழ வைக்கும்; சில, வாய் விட்டு சிரிக்க வைக்கும்; இன்னும் சில அடக் கடவுளே, இப்படிக்கூடவா அபத்தமாக இருக்கும் என்று எண்ண வைக்கும்.

பல சமய்ங்களில் "அமுல்" பானர்கள் சட்டென்று ஒரு புன்முறுவலைக் கொண்டு வரும். "நீங்கள் எங்கே போனாலும் தொடர்ந்து வரும்" ஹட்ச் செல் போன் விளம்பரம் பார்த்து நெகிழாதவர்கள் இருக்க முடியுமோ? பல மணி நேர சினிமாக்களில், சீரியல்களில், குறும்படங்களில் அல்லது ஆயிரக்கணக்கான பக்கங்களிலும் சொல்லும் சேதிகளைக் கூட, சில வினாடிகளே ஓடும் விளம்பரப் படங்களில் சொல்லிவிடும் அந்த குவியம் இருக்கே, அது எனக்கு மிகவும் பிடிக்கும். Cannes Golden Lion என்ற விருது, விளம்பர உலகின் " நோபல்".

இன்றிலிருந்து அவ்வப்போது இப்படிக் கண்களில் படும் விளம்பரத் துண்டுகளை "அலைகளின் கோல்டன் லயன்" என்று இங்கே பதியலாம் என்று இருக்கிறேன்.
இந்த வரிசையை ஆரம்பித்து வைப்பது - "மதர்ஸ் ரெஸிபி" நிறுவனத்தின் அப்பளாம் விளம்பரம் ! பாரம்பரியம் மிக்க குடும்பம். அம்மா பெண்ணிற்கு எண்ணைக் குளியல் செய்து தலைவாரி, ஒரு முழம் பூவைத் தலையில் வைக்கிறாள். வாய்க்கு ருசியாக, எல்லாம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள் சாப்பாட்டு மேஜையில் தயாராக உள்ளன. சாப்பிட வருமுன் பேத்தி அப்பளாம் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள். அப்பளாம் சாப்பிட போட்டியிடும் பாட்டியிடம் சிரித்துக்கொண்டே நீட்டுகிறாள். அதைப் பாட்டி கடிக்கும்போது பேத்தியின் கண் பட படப்பதை ( அப்பளாம் "சத்தத்தில்" !!) க்ளோசப்பில் காட்டுகிறார்கள். அந்த ஒரு ஷாட் போதும். கலை நயம் மிக்க ஒரு ஷாட்டில் பொருளின் நேர்த்தி சொல்லப்பட்டு விடுகிறது.

இந்த வார அலைகள் கோல்டன் லயன் விருது.......... goes to " மதர்ஸ் ரெசிபி" :-)

Friday, November 05, 2004

இன்னும் கொஞ்சம் தேர்தல் அலசல்

ஐந்தாவது முறையாக இந்தப் பதிவை ஏற்றுகிறேன். என்ன ஆச்சு என்று தெரியவில்லை. முதல் வரியும், கடைசி வரியும்தான் பதிவாகிறது.

அமெரிக்க தேர்தல் பற்றி இன்னும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். என் வேலையை இவர் சுலபமாக்கி விட்டார். இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.
நேற்று ஹிந்துவில் வந்த Fear Was the Key என்ற கட்டுரை.


சுட்டி இங்கே.




தென்னாசிய பத்திரிகையாளர் அமைப்பு ( SAJA) நேற்றிரவு ஒரு வலை செமினார் நடத்தியது. இந்த அமைப்பின் முதல் வலை செமினார் இது. India Abroad பத்திரிகையாளர் ஆஸிஸ் ஹனீபா, SAJA நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீநாத் ஸ்ரீனிவாசன் இவர்களுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் பத்த்ரிகையாளர்களும் பங்கேற்றார்கள். உலகின் பல இடங்களிலிருந்தும் யார் வேண்டுமானாலு பங்கு கொண்டு கேள்வி கேட்கலாம். குறித்த நேரத்தில் என் கணினி வழியே பிசிரில்லாமல் ஸ்ரீநாத் னிவாசனின் குரல் 11.30(IST)க்கு வர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பேச்சாளர்கள் பொதுவாக இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ( ஜிண்டால் மற்றும் ஸ்வேதா) பற்றியும் எப்படி அதிக அளவில் இந்தியர்கள் அமெரிக்க அரசியலில் பங்கேற்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நேரம் விழித்திருந்து முழுதும் கேட்க முடியவில்லை. நான் தூங்கி விழும் முன் காதில் விழுந்த துண்டு விவரங்கள்.

1. கெர்ரிக்காக 400 / 500 இந்தியர்கள் உழைத்திருக்கிறார்கள்.
2. பாகிஸ்தானியரும் இந்தியர்களும் எவ்வளவு எலியும் பூனையுமாக இருந்தாலும் கெர்ரி வர வேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள். ( வேறு என்ன? ஈராக் போர் எதிர்ப்புதான் காரணம்.)
3. புஷ் மன்மோஹன் சிங் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வரலாம். அப்படி வந்தால் பாகிஸ்தானும் எட்டிப் பார்ப்பாரா? அல்லது இந்தியாவுக்கு ஸ்பெஷல் வருகையா?
4. இந்தியர்கள் வாக்களித்த விதத்தை அலசிய ஒரு பத்திரிகையாளர் சொன்ன தகவல் - மூத்த தலைமுறை இந்தியர்கள் புஷ்ஷ¤க்கும், இளைஞர்கள் கெர்ரிக்கும் ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்தார். (ஹ்ம்ம்.. இந்திய இளைஞர்கள் எண்ணிக்கை பெரியவர்களைவிட குறைவாக இருந்திருக்கு போலிருக்கு) 5.இளைய தலைமுறை இந்திய பத்திரிகையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
6. outsourcing - H1B விஸா சமாசாரங்கள் பற்றி கவலைகளுக்கு தேவையில்லை. ஒருவர் சொன்னார் - H1B விஸா 90,000 க்கு அதிகரிக்க வேண்டும் என்று.

அவ்வளவுதான். ஈராக் போர் போன்ற சமாசாரங்கள்? ம்ஹ¤ம். சுத்தமாக அதெல்லாம் அவர்களுக்கு முக்கியமாக படவில்லை. அனுபவம் வாய்ந்த பத்த்ரிகையாளர் செமினாரில் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்.

இந்த செமினாரை SAJA தளத்தில் கேட்கலாம்.

Wednesday, November 03, 2004

அமெரிக்க தேர்தல் ஒரு Cliff Hanger ?? இதற்கு தமிழில் என்ன சொல்லலாம்?

அப்பாடா.. ஒரு வழியாக அமெரிக்க தேர்தல் முடிந்.........! அட கஷ்டமே. முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது போலிருக்கே. தேர்தல் முடிந்த பிறகுதான் சுவாரசியமே தொடங்குகிறது என்று அவர்களும் கற்றுகொண்டுவிட்டார்கள் போல. சென்ற முறை ப்ளோரிடா என்றால் இந்த முறை ஒஹையோ. சென்ற முறை புஷ் இருந்த நிலையில் இன்று கெர்ரி. இந்த ரீதியில் ஒரு வேளை சென்ற முறை புஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம் மாதிரி இந்த முறை கெர்ரிக்கும் சான்ஸ் அடிக்குமோ?

எனக்குத் தெரியாது. அமெரிக்க தேர்தல் முறைகளை நன்கு தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் தேவலை. ஒரு லட்சத்து 75000 க்கு மேல் provisional ballots மூலமாக இன்னும் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்கிறார்கள். ஒஹையோ மாநில செயலாளர் நவம்பர் 15 தேதி ஆகும் என்கிறார். அதுவரை.....??!! அமெரிக்கர்கள் அப்படியெல்லாம் பொறுமையாக காத்திருப்பார்களா? பின்னே வேற என்ன செய்யமுடியும்?

சரி புஷ் திரும்பி வந்தாச்சு என்றே வைத்துக்கொள்வோம். கெர்ரிதான் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பார் என்று இந்திய ஊடகங்கள் கூறி வந்தன. திரும்பி வந்த புஷ் இந்தியாவுக்கு எவ்வளவு தூரம் அனுசரணையாக இருப்பார் என்று பார்க்க வேண்டும். சென்ற முறை புஷ் வென்றபோது அவரைப் பற்றி நிறைய ஜோக்ஸ் இணையத்தில் சுற்றின. குறிப்பாக அவரது IQ லெவல் பற்றி. புத்திசாலியோ இல்லையோ மக்கள் நம்பிக்கையைப் பெற்றவர் என்றுதான் இந்தத் தேர்தல் முடிவுகள் கூறுகிறது. இராக் போர், outsourcing, செப்டம்பர் 11 கோடிக்காட்டிய தீவிரவாதம், இவைகள்தாம் இந்த தேர்தலில் முக்கியமாக அலசப்பட்ட விஷயங்கள். குறிப்பாக ஈராக் போர். புஷ்ஷ¤க்கு மக்கள் ஆதரவு அளித்ததால் அமெரிக்கர்கள் ஈராக் போரை ஆதரிக்கிறார்களா? தெரியவில்லை. என் ஊகம் என்னவென்றால், அமெரிக்கர்களைப் பெரிதும் பாதித்த விஷயம் செப்டம்பர் 11. அந்த சமயம் புஷ் " we'll flush them out of holes" என்ற ரீதியில் ஒரு தேசீய உணர்வைத் தூண்டி மக்களிடம் ஒரு எழுச்சியை உருவாக்கியது பலருக்கு அவரிடம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம். தவிர என்னதான் இராக் போர் போன்ற வெளியுறவு சமாசாரங்கள் அலசப்பட்டாலும் அங்கே உல்ளவர்களுக்கு உள் நாட்டுப் பிரச்சனைகள்தாம் முக்கியமாக தோன்றியிருக்க்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவ்ரை அமெரிக்கா பின் தங்கவில்லை. மற்றபடி உள் நாட்டுப் பிரச்சனைகளான ஓரின திருமணம், அபார்ஷன், outsourcing, இப்படிபட்ட விஷயங்களில் கெர்ரியின் நிலைப்பாட்டைவிட புஷ்ஷின் நிலைப்பாடு மக்களிடம் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கலாம். அல்லது, பொத்தாம்பொதுவாக, "known devil" syndrome ஆக இருக்கலாம். சமீப காலமாக அமெரிக்க ஜனாதிபதிகள் இரண்டிரண்டு முறை இருக்கும் வழக்கம் இருக்கு போலிருக்கிறது. 1981 -89 ரீகன் தொடர்ந்து இருந்தார். நடுவில் புஷ்ஷின் அப்பா சீனியர் புஷ் நாலு வருடம் இருந்துவிட்டு போனபின், கிளிண்டன் வந்தார். இரண்டு முறை தொடர்ந்து வென்றார் - 1993-2001. இந்த ரீதியில் பார்த்தால் புஷ்ஷ¤க்கு இரண்டு தடவை ஒயிட் ஹவுஸ் வாசம் போலிருக்கு.

Monday, November 01, 2004

அட, மூன்று மாதம் ஓடியே போய்விட்டதே !!

ராஜா, பிரகாஷ் - மூன்று மாதம் விடுமுறை என்றால் பத்திரிகைதான் துவங்கப்போகிறேன் என்று என் மேல் இப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை வைத்துவிட்டீர்களே !! அதற்கு முதலில் நன்றி. ஆனால் உங்களை ஏமாற்றமடையச் செய்வதற்கு வருந்துகிறேன். அப்படி எல்லாம் பத்திரிகை தொடங்கும் அளவு இன்னும் தைரியம் (??!!) வரவில்லை.
பின்னே? மூன்று மாதம் அப்படி என்ன செய்வதற்காக விடுப்பு என்கிறீர்களா?

அதையேன் கேட்கிறீர்கள்? ரொம்ப நாட்களாக எனக்குள் ஓர் ஆசை. கதையெழுத வேண்டும் என்று. சொல்லப்போனால் 1972ல் ஜர்னலிஸம் கோர்ஸ் படித்தபோது செய்தி ரிபோர்டிங் தவிர புனைகதையெழுதவும் பயிற்சி இருந்தது. கோர்ஸ் முடிவில் சிறப்பு பாடமாக ரிபோர்ட்டிங் எடுத்துக்கலாமா அல்லது புனைகதையா என்ற கேள்வி எழுந்தபோது என் ஓட்டு பின்னதற்கே விழுந்தது. புனைகதையில் புலமை வந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் தேர்ச்சி பெற்றதாக ஒரு சர்டிபிகேட்டை வாங்கிவிட்டேன். அப்புறம் ஏதோ அவ்வப்போது எப்போதாவது எழுதி ·பெமினா, வுமன்ஸ் இரா (அட நிஜமாதாங்க...!!) என்று அனுப்பி "பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்" சீட்டுகளை வாங்கி சேர்த்துக்கொண்டிருந்தேன். இந்த சமயத்தில்தான் இதயம் பேசுகிறது பத்திரிகையில் (1986 என்று ஞாபகம்) ஒரு போட்டி அறிவிப்பு. ஜெயராஜ் வரைந்த ஒரு படத்தைப் போட்டு படத்துகேற்ற ஒரு சிறுகதை எழுத வேண்டும். அப்போது குழந்தைகளுடன் பாலக்காட்டிற்கு ( பெற்றோர்கள் அங்கே இருந்தனர் அப்போது) சென்றிருந்தேன். ஒரு பெண் ஒரு சிறுவனுக்கு தலைவாரிவிடுவதைப் போலிருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குள் சட்டென்று ஒரு கற்பனை உருவாயிற்று. உடனேயே அதை கதையாக எழுதி போட்டிக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றிவிட்டது. அவ்வளாவுதான். சட்டென்று எழுத ஒரு நல்ல பேப்பர் கூட உடனே அகப்படவில்லை. கையில் அகப்பட்ட கவரைப் பிரித்து (காகிதச் சிக்கனத்தில் காந்திஜி, ராஜாஜி இவர்களின் நேர் வாரிசு நான்தான் என்று நினைப்பு ) அப்படியே ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்துவிட்டேன். அரை மணியில் கதை ரெடி. அப்புறம் நல்ல பேப்பரில் நகலெடுத்து ஒரு 15 பைசா( அப்போல்லாம் அதான் விலை என்று நினைக்கிறேன்) கவரில் வைத்து என் டில்லி விலாசத்துடன் அனுப்பிவிட்டு டில்லிக்கும் போய் சேர்ந்துவிட்டேன்.

அப்புறம் சுத்தமாக மறந்தும் போயாச்சு. கொஞ்ச நாள் கழித்து அம்மாவிடமிருந்து ஒரு கடிதம். " உன் முதல் கதையே முதல் பரிசு கதையாக வெளிவந்தது பற்றி எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று எழுதியிருந்தார். எனக்கு ஒரு வினாடி சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. அப்புறம் மெள்ள உறைத்தது. உடம்பெல்லாம் பாய்ந்த ஒரு சந்தோஷம் இருக்கிறதே.... உங்களில் பலருக்கு இது புரியும்.

முதல் பரிசு முழுசாக ஐம்பது ரூபாய். என் எழுத்து எனக்கு சம்பாதித்து கொடுத்த முதல் வரும்படி. அடுத்த நாள் இதயம் பேசுகிறது பத்த்ரிகையிலிருந்து பரிசுத் தொகைக்கான காசோலையும் பிரசுரமான இதழ் ஒன்றும் தபாலில் வந்தது. அதோடில்லை. கூடவே அன்று தபால் பெட்டியில் நிறைய கடிதங்கள் - டில்லி விலாசம் கொடுக்கப்படிருந்ததால் நிறைய வாசகர்கள் நேரடியாக பாராட்டி எழுதியிருந்தார்கள். அட உன் கதைக்கு ரசிகர் கடிதங்கள் கூட (!!!) வந்துள்ளதே என்று குடும்பத்தில் அன்பான (!!) சீண்டல்கள் வேறு.
அடுத்த கதையெழுதிய அனுபவம் பூடானிலிருந்தபோது. தெரிந்த நேபாள குடும்பத்தில் நடந்த சம்பவத்தை வைத்து எழுதிய கதை - குமுதத்தில் வெளி வந்தது. அதுக்கும் ஜெயராஜ்தான் படம்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் எப்படியோ என் எழுத்து வண்டி பாதை மாறிபோய் பத்திரிகையுலகத்தில் திரும்பிவிட்டது. கதை எழுதுவது பக்கமே போகவில்லை. எழுதுவதாவது? செய்தித்துறையில் கவனம் அதிகரிக்க, அதிகரிக்க, கதைகள் படிப்பதே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோய் இன்று சுத்தமாக நின்றுவிட்டது. சமீபத்திய திசைகளில் குறிப்பிட்டுள்ள காணாமற் போனவர்களில் நானும் ஒருத்திதான்.

ஆனாலும் அவ்வப்போது அம்மா கேட்டுக்கொண்டிருப்பார். " நீ எப்போ கதை எழுதப்போகிறாய்" என்று. நானும் இதோ அதோ என்று சொல்லி வந்தேன். அவர் கேட்டது என் மனதிலும் சுழன்று கொண்டுதான் இருந்தது. அவருக்கு கதைகள் படிப்பதில் மிக ஆர்வம். அவருக்கு சம்பந்தமில்லாத கட்டுரைகளில் என் எழுத்து போகிறதே - அவரால் ரசிக்க முடியாமற் போகிறதே என்றும் தோன்றியிருக்கலாம். இதனால் நடுவில் ஒரு முறை சில வருடங்கள் முன்பு அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யவாவது ஒரு புனைகதை எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. அப்போது டில்லியில் இருந்த சமயம். மனதில் ஒரு கதை மேக மூட்டமாக தோன்ற, உடனேயே அம்மாவுக்கு போன் போட்டு " நானும் கதை எழுத முடிவு செய்துவிட்டேன்" என்று ஓர் அறிவிப்பு செய்து விட்டேன்.

அங்கேதான் ஆரம்பித்தது என் சங்கடம். அம்மாவிடம் எழுதிகிறேன் என்று பெரிதாக சொல்லிவிட்டேனே தவிர அது அவ்வளவு எளிதாக இல்லை என்று விரைவிலேயே புரிந்துபோய்விட்டது. சில வருடங்கள் கழிந்து அம்மா போனபின்னரும் என் கதை உருவாகும் அடையாளமேயில்லை. வழக்கமான - பழக்கமான - வேலைகளிலேயே கவனம் போனதே தவிர, ம்ஹ¤ம். நானாவது கதையாவது. எனக்கே நம்பிக்கை போய்விட்டது. ஆனால் அவ்வப்போது என் "கதை எழுதும் ஆர்வம்", நண்பர்களுடன் பேசும்போது வெளிப்படும்.
இந்த சம்யத்தில்தான் என் நண்பர்கள் இருவர் என்னைக் கதை எழுதச் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு கட்டி விட்டனர். விதம் விதமாக - கடிந்துகொண்டு, சீண்டலாக, ஆர்வம் பல காட்டி, அவர்கள் போட்ட அஸ்திரங்களில் நானும் ஒருவாறு அசைந்து, இரண்டு வருடம் முன்பு நிஜமாகவே நாவல் ஒன்று எழுதத் தொடங்கி விட்டேன் - இந்த முறை ஒரு உத்வேகத்துடன். அதாவது அப்படி நினைத்தேன். ம்ஹ்ம். என் சோம்பேறி புத்தி எங்கே போகும்? மறுபடி மனம் கொஞ்சம் கொஞ்சமாக கதையிலிருந்து நழுவி "பழைய குருடி..." கதையாகிற்று. அடி மனதில் ஒரு குறுகுறுப்பு மட்டுமே பாக்கி.
என் நண்பர்களுக்கே என் மேல் நம்பிக்கை போய்விட்ட சமயம், மனதில் மறுபடி கதையெழுதும் ஆர்வம் மெல்ல தலைத்தூக்கி பார்த்தது. இந்த முறை ஏமாறக்கூடாது என்று முடிவுகட்டிவிட்டேன்.

அதன் முதல் கட்டம்தான் வலைப்பதிவு பக்கம் காணாமல் போய்விடுவது. மூன்று மாதத்தில் என் நாவல் முடியும் என்று நான் கனவு காணவில்லை. ஆனால் தொடங்கி தேரை ஒரு பக்கமாக நகர்த்த ஆரம்பித்துவிட்டேனென்றால் அப்புறம் நகர்த்துவது எளிதாகும் என்பது என் எண்ணம்.

இப்போது ஓரளவு அதில் வெற்றி. தேர் நகர ஆரம்பித்துவிட்டது. போகும் திசையும் தெளிவாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் முடித்துவிடுவேன் என்று நம்பிக்கையும் வந்துவிட்டது. ஆனால் ஒரு ரோலர் கோஸ்டரில் போகும் அனுபவம் இது. எனக்கு ரொம்ப புதுசு. கதையெழுது என்று சொன்ன அம்மாவையும், அக்கறையாக என்னைத் தூண்டிய நண்பர்களையும் ( அவர்கள் யார் என்று என் நாவலின் முன்னுரையில் அல்லவா கூற வேண்டும்? - ஆக, முன்னுரைக்கு வந்துவிட்டேன் - நாவல் எழுதி முடித்துவிடுவேன் என்றுதான் தோன்றுகிறது ) நினைத்துக் கொள்கிறேன்.

இதன் நடுவில் என் மூன்று மாத 'விடுப்பு' முடிந்துவிட்டதால் இங்கே ஒரு விஸிட்.

வழக்கம்போல் அலைகள் இன்று முதல் வீசும். ஆனால் அவ்வப்போது காணமற்போய்விட்டால், எங்கே போய்விட்டேன் என்று இனி உங்களுக்குப் புரியும்.