Thursday, June 24, 2004

தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது....

ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் வாயை மூடிக்கொண்டு பயணம் செய்பவர்கள் எவ்வளவு பேர்? எனக்குத் தெரியாது. ஏனென்றால் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிடுவேன். சமூகம், அரசியல், ஏமாற்றும் ஆட்டோக்காரர்கள் ( இவர் ஏமாற்றாத ஆள் என்பதை உறுதி செய்து கொண்டு !!) என்றுமே மாற்றியமைக்கப்படாத மீட்டர், மீட்டருக்கு சூடு வைக்கும் டிரைவர்கள் ( அப்படின்னா என்ன என்று தெரியாதவர்கள் சென்னையில் காரில்லாமல் சுற்றும்படி வேண்டுகிறேன் - அதிகமில்லை, இரண்டு நாள் போதும்) இப்படி பேச்சு சுழன்று வரும்.

அன்று அந்த ஆட்டோ டிரைவர் சுவாரசியமாகப் பேசினார். பேச்சில் தெரிந்த முக்கிய விஷயங்கள் - அவர் படித்தது ப்ள்ஸ் 2 வரையில். அரசாங்க வேலைக்கு மிக முயன்றார்.ஆனால் கிடைக்கவில்லை. காரணம் இவருக்கு சிபாரிசு செய்ய யாருமில்லை !!!
"ஏதோ பரிட்சை எல்லாம் எழுதினேங்க. நல்லாத்தான் எழுதினேன். ஆனாலும் வேலைக்கு மனுப்போடும்போது எனக்கு ஏதும் சிபாரிசு இல்லீங்க. சிபாரிசு இல்லாமல் அரசு வேலை கிடைக்காதுங்க." நான் மேலும் குடைந்தபோது வந்த பதில். " பள்ளிக்கூடம் படிக்கும்போதே நிறைய ஆசிர்யர்கள் கோச்சிங் கிளாஸ் படிக்க சொல்கிறார்கள். அப்புறம் கோச்சிங் கிளாஸில் படிக்கும் தன் மாணவர்களுக்கு அந்த கோச்சிங் "பள்ளி" எப்படியோ வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் அந்த கோச்சிங்க் பள்ளிகளில் / கிளாஸ்களில் படிக்க நிறைய பணம் வேணுமே? நாம உழைச்சுப் படிச்சு படிச்சோம்/ நல்ல மார்க்கோடு பாஸ் பண்ணினோம் என்றாலும் எங்கே வேலை கிடைக்கிறது? அதான், இப்படி ஒரு ஆட்டோவை வாங்கிப் போட்டு ஓட்டுகிறேன். இதில் சொந்தமாக வேலை. ஓரளவுக்கு வருமானம். என் குடும்பத்துக்கு போதும்."

இவர் மனைவி இளம் நிலை பட்டப் படிப்பு முடித்து முதுநிலையைத் தொலைத் தொடர்பு கல்வியாகப் படிக்கிறார். " அவருக்காவது ஏதாவது அரசு வேலைக் கிடைக்குமா" என்று பார்க்கிறேன்" - ஆட்டோகாரர்.

ஒரு உறவினர் பெண். கணவர் வெளி நாட்டில். இவருக்கு இங்கே அரசு உத்தியோகம். காடாறு மாசம். நாடாறுமாசம் கதை. அவ்வப்போது 6 மாதம் "லீவு" எடுத்துக்கொண்டு வெளி நாட்டில் கணவருடன் குடித்தனம் பண்ணப் போவார் - குழந்தைகளுடன். இந்த திரிசங்கு கதை ஏன்? ஒரு வழியாக வேலையை விட்டுவிட்டு கணவருடனேயே வெளி நாட்டில் இருக்கக்கூடாதோ? " அதெப்படி முடியும்? அரசு வேலைக் கிடைப்பதே குதிரைக் கொம்பு. இந்த "பாதுகாப்பான" வேலையை விட்டுவிடமுடியுமா?" அன்தப் பெண்ணின் பதில். இந்த அரசு வேலையைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில் அவருக்கு கிடைத்த லாபம் - அவ்வப்போது கிடைக்கும் நீண்ட விடுப்பு - தனியார் துறையில் இப்படி முடியுமா?

இன்னொரு பக்கம். ஒரு குடும்ப நண்பர். ஏதோ வேலையாக அவரை அலுவலகத்தில் சந்திக்க வேண்டியிருந்ததால், அவர் எப்போ ஓய்வாக இருப்பார் என்று கேட்டேன். ஓய்வா? 10 மணியிலிருந்து 5 மணி வரை ஓய்வுதான் என்று சொல்லிவிட்டு "அரசு உத்தியோகம். என் விருப்பபடிதான் வேலை செய்வேன். என்ன யாரும் கேட்டுற முடியுமா என்று சொல்லி பெரிதாக சிரிப்பார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் அடிப்பது ஜோக்தான் என்றாலும் ஓரளவு அதில் உண்மையில்லாமல் இல்லையே? அதேபோல், டில்லியில் குளிர் காலம் வந்துவிட்டால், அரசு அலுவலகங்களில் பெரும்பாலான பெண் ஊழியர்கள் கையில் ஸ்வெட்டர் ஊசி/ நூல் இருக்கும். 10 மணி அலுவலக்ம் என்றாலும் 11 மணி வரை ( நடு நடுவே டீத் தண்ணி break லும் ) வெளியில் புல் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்தபடியே வேகமாக நிட்டிங் வேலை நடக்கும். ஆபீஸ் வேலையைப் பற்றி அவர்கள் முகத்தில் கவலையே இல்லை போலிருக்கும். தனியார் துறையில் இது முடியுமா?

இன்று மாறி வரும் தொழில் சூழ்நிலையில் போட்டி காரணமாக அரசு அலுவலகங்களிலும் வேலை ஏய்ப்பு குறைந்து உற்பத்தி திறன் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாலும், " ஸ்திர தன்மை" " வேலைப் பாதுகாப்பு" என்ற பெயரில் ineffeciency ஆதரிக்கப்படுகிற நிலை இன்னும் மாறவில்லை. இன்று தனியார் துறை மாற்றத்திற்கு யூனியன்களின் எதிர்ப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைத் திறமை சுமாராக இருந்தாலும் ஒரு "பத்திரம்" இருக்கிறதே? தனியார் கையில் மாறினால் அது போய்விடுமே? வேலையைத் தக்க வைத்துக்கொள்ள தன் திறமையை நிரூபிக்கும் வண்ணம் உழைத்தாக வேண்டுமே? " நீ எப்படி வேலை செய்தாலும் அரசு உத்தியோகத்தில் உன்னை அசைக்க முடியாது" " வேலை செய்யாமல் கை நிறைய சம்பளம். எங்கே கிடைக்கும் இப்படி?" அவ்வப்போது காதில் விழும் வார்த்தைகள் இவை. நம் மக்களின் மனோபாவம் இப்படி இருக்கும் வரையில் அரசு உத்தியோகத்திற்கு தனி மதிப்பும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

ஒரு பக்கம் இப்படி "மதிப்பு". இன்னொரு பக்கம், அரசு வேலைகள் குறைந்து கொண்டு வருகின்றன என்ற நிதர்சனம். இந்த நிலையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், வேலைத்திறன் உயர்ந்து உற்பத்தி தரம் உயரவும் ஒரே வழி, தனியார் முதலீடுகள் பல் வேறு துறைகளில் பெருகி வேலை வாய்ப்புகள் உண்டாக்கப்டுவதும், தனி மனித தொழிலுணர்வு ( entrepreneurship) ஊக்குவிக்கப்படுவதும் மட்டுமே சிறந்த வழி. வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆட்டோ ஓட்டத் தெரிந்தவர் ஆட்டோ வாங்கி தொழில் நடத்துகிறார். தையல் தெரிந்தவர் தையல் மிஷின் வாங்கி தொழில் நடத்தலாம். திறமையாக செய்தால் அவரே விரைவில் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியாக உருவெடுக்கலாம்.

தவறு எங்கே என்று தெரியவில்லை என்று வெங்கடேஷ் தன் பதிவில் குறிப்பிடுகிறார். தவறும் தீர்வும் ஒவ்வொரு தனிமனிதர் கையிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். In my opinion, the govt. need not be a provider of employment - but must be a facilitator of employment generation. மீன் கொடுக்க வேண்டுமா? அல்லது மீன் பிடிக்க கற்றுத் தர வேண்டுமா என்ற அடிபப்டை கேள்விதான் இங்கே. வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்படியான சூழலை ஏற்படுத்த வேண்டும். தொழில் தொடங்குபவர்களுக்கு/ உற்பத்தியைப் பெருக்குபவர்களுக்கு / வேலை வாய்ப்பை அதிகரிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வண்ணம் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

Monday, June 21, 2004

"இருந்தா சரி; இல்லாவிட்டாலும் OK"

நோரா ஜோன்ஸ் ஞாபகம் இருக்கிறதா? சென்ற வருடம் Grammy Awards ல் கை நிறைய ( நிறைய என்றால் நிஜமாகவே கைகொள்ளாமல் -இவர் விருது வாங்க மேடைக்கு ஏறுமுன் சூப்பர் மார்கெட்டில் செய்வதுபோல் ஒரு கூடையையும் கையில் கொண்டு சென்றிருக்க வேண்டும் !!! ) இவரது பேட்டி ஒன்று சமீபத்திய ஸ்பான் இதழில் படித்தேன். ( சுட்டியைக் கொடுக்கலாம் என்று இணையத்தில் பார்த்தால் அந்த பத்திரிகையின் சில கட்டுரைகள்தாம் அதன் இணையத்தளத்தில் திறக்க முடிந்தன. Anti-Diva என்ற தலைப்பிட்ட இந்தக் கட்டுரைத் திறக்க முடியவில்லை. ஒரு வேளை பின்னர் திறக்கலாம் - முயன்று பாருங்கள். மே /ஜூன் இதழ்.

btw,
The Original NYT link is here; Added later; thanks Dyno.

New York Times ன் கட்டுரையாளரான Rob Hoerburger, நோரா ஜோன்ஸ் மற்றும் அவரது இசைக்குழு நண்பர்கள் என்று பலரை நிறைய முறை சந்தித்து நிதானமாக செய்துள்ள இந்த பேட்டியில் நோராவின் எளிமையான, நேர்மையான சுபாவம் நன்றாக வெளி வருகிறது. Come Away with Me என்ற இவரது விருதுகள் வாங்கிய ஆல்பம் 17 மில்லியன் விற்பனையாகியுள்ளது. இப்படி பல சாதனைகள் புரிந்த ஒரு ஆல்பத்தைக் கொடுத்த இவரது அடுத்த பாடல்கள் எப்படியிருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்குமே? பல வெற்றியாளர்களுக்கு இந்த மாதிரி எதிர்பார்ப்பே ஒரு கவலையைக் கொடுக்குமே? நோரா ஜோன்ஸ் எப்படி இந்த உணர்வை எதிர்கொள்கிறார் என்பதுதான் பேட்டியின் நோக்கம். ஆனால் நோராவோ இதெல்லாம் பற்றி கவலைப் படுவதாகக் காணோம் என்கிறார் பேட்டியாளர். 24 வயதில் இப்படி ஒரு வெற்றி வந்து என்னைச் சேர்ந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அந்தப் பாடலை வாங்கியவர்களில் பத்தில் ஒரு பங்கினர் என் அடுத்தப் பாடலை வாங்கினால் கூட எனக்கு அதுவே மிகப் பெரிய திருப்தி. ஒரு படி மேலே போய் அந்தப் பழைய பாடலை வாங்கிய அத்தனைபேரும் இதையும் வாங்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? ஆனால் அப்படி இது விற்பனையாகவிட்டாலும் எனக்கு குறையில்லை. It would be great if all those people like this new record. But it's OK, if they don't." இவரது புதிய ஆல்பமும் நன்றாகவே இருக்கிறது; ஆனால் பழைய ஆல்பம் அளவு வெற்றி பெறுமா என்று தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார் கட்டுரையின் நடுவே.

பேட்டி முழுக்க நோராவின் இந்த acceptance குணம் - வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுகொள்ளும் மனப்பான்மை வெளிப்படுகிறது. ஆங்க்காங்கே தன் விருப்பத்தை வெளியிடுகிறார். பின்னர் கூடவே "இருந்தா சரி; இல்லாவிட்டாலும் OK" - என்று ஒரு சமாதானம்!! இவர் தெருவில் மேலும் கீழும் நடந்து சென்றாலும் யாருக்கும் எளிதில் அடையாளம் தெரியாத அளவு காமா சோமாவென்று ஒரு உடை அணிந்திருப்பராம். இருக்கும் வீடும் படு சிம்பிள். இவரும் இவரது இசைகுழு நண்பர்களும் கஷ்டப்பட்டுதான் உழைக்கிறார்கள். ஜாஸ் இசை சில சமயம் இவருக்கு பிடிக்காமலும் போயிருக்கிறது. " ஒரு சமயம் ரொம்ப போரடித்தபோது இசையை விட்டுவிடலாம் என்றுகூட தோன்றியிருக்கிறது. பிடித்த சில பாடல்களை மட்டும் பாடுவது; பாக்கி நேரங்களில் டேபிள் துடைத்து பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று தோன்றும்." என்று கூறுகிறார்.

Grammy வெற்றி இவரை மயக்கவில்லை. நிதர்சனம் உணர்ந்தவராக தெரிகிறார். பேட்டி காணும்போது வீட்டை நோட்டம் விட்ட பேட்டியாளர், Grammy விருதுகள் வெளியில் இல்லை என்பதைக் கண்டு அதைப் பற்றி கேட்டதற்கு, " ஓ, அவைகளை உள்ளே பீரோவில் இருக்கின்றன. I didn't want my friends to come over and say, " who does she think she is, Miss Grammy Whammy?" !! ஹ்ம்ம்.. பிழைக்கத் தெரியாத பெண். குழந்தைகள் ஸ்கூலில் எலுமிச்சம்பழ ஸ்பூன் ஓட்ட ரேசில் "கப்" வாங்கினாலே ஷோ கேஸில் பிரமாதமாக அலங்கரித்து வைத்து, அதை வருபவர்களிடமெல்லாம் காட்டி பெருமைப் பட்டுக்கொள்ளும் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்.

இவர் கூட வசிக்கும் இவரது Boyfriend, மற்றும் இவரது குழுவில் பாடல்களை எழுதும் அலெக்ஸாண்டர் இன்னொரு எளிமையின் அவதாரம். பேட்டியாளரும் இவர்களும் சேர்ந்து உணவு உண்டபின் தட்டுக்களை எடுத்துக்கொண்டு போனவரைப் பார்த்து நோரா, " பாத்திரம் கழுவுவது நன்றாக வரும் இவனுக்கு என்று ஜோக்கடிக்க, அதற்கு அலெக்ஸ், " நான் கழுவுகிறேன் என்பதால்தான் உங்களிடமிருந்து தட்டுக்களை பிடுங்கிக் கொண்டு போகிறேன். இப்படியே பேசி கொண்டு இருந்திர்ர்களானால் நான் அப்புறம் சுரண்டி சுரண்டிதான் கழுவ வேண்டி வரும்" என்று படு காஷ¤வலாக சொல்கிறார். எங்கள் வீட்டில் நாங்கள் அரட்டையடித்துகொண்டு சாப்பிடுவதுதான் நினைவுக்கு வந்தது. சாப்பிட்ட பின்னரும் டேபிளில் அரட்டை ஓயாது. இன்னும் உட்கார்ந்தால் தட்டைச் சுரண்டிதான் கழுவணும் என்று எழுந்திருப்போம். அந்த மாதிரி இருந்தது அலெக்ஸ் சொன்னது.

கடைசியில் விடை பெறும்போது கதவு வரை வந்து வழியனுப்பிய நோரா தன்னிடம் அந்தப் புது ஆல்ப்ம பற்றி கருத்து கேட்பார் என்று கட்டுரையாளர் எதிர்பார்த்தாராம். ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை. இவரே அதைப் பற்றி நோராவிடம் மறு நாள் கேட்டபோது, " I'm just not a needy person. I don't crave people's approval." என்றாராம் !! இன்னொரு கீதை உதாரணம். போகிற போக்கில் முக்கிய புள்ளிகளின் வாழ்க்கையில் கீதாசாரம் என்று நான் ஒரு தொடரே எழுதலாம் போலிருக்கிறது!

மொத்தத்தில் சுவாரசியமான பேட்டி. கிடைத்தால் படியுங்கள். சொல்ல மறந்துவிட்டேனே. நோராவின் அப்பா பற்றி பேட்டியாளர் ஒன்றுமே சொல்லவில்லையே என்று தேடினேன். கடைசியில் குறிப்பிட்டுவிட்டார். ஆனால் தந்தையின் புகழின் அடிப்படையில்தான் தாம் வெற்றி பெற்றதாக யாரும் சொல்லிவிடக்கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார். தந்தை யாரென்றுதான் உங்களுக்கு தெரியுமே. இந்த முறை கை தூக்குங்கள் என்று சொல்ல மாட்டேன் :-) No points for guessing the obvious. :-)

Thursday, June 17, 2004

Tim Berners - Lee

இந்த மனுஷரை நினைத்தால் ஏனோ பகவத் கீதையின் சாரம்தான் நினைவுக்கு வருகிறது. கடமையைச் செய். பலனை எதிர்பாராதே !

இன்று உலகமே இவர் கண்டுபிடித்த - உருவாக்கிய அமைப்பின் மீதுதான் மிகவும் சார்ந்து இருக்கிறது. 10 வருடம் முன்பு ஓர் பரிசோதனைச் சாலையில் இவர் ஆரம்பித்த அமைப்பு இன்று உலகெங்கும் பரவி அது இல்லாமல் செயல்பாடே இல்லாமல் உலகம் ஸ்தம்பித்துவிடும் என்று சொல்லும் அளவு வளர்ந்துள்ளது. இந்த அமைப்பு தோன்றுவதற்கு முன்னாலும் நிறைய தொழில் நுட்ப பரிசோதனைகளும் சோதனையோட்டங்களும் நிகழ்ந்திருந்தாலும் ஒரு குடையாக இது இப்படி உருவெடுத்தது பத்து வருடம் முன்புதான்.

இப்படிபட்ட ஒரு மனிதர் இன்று வரை பணத்திற்காக ஆசைப்படவில்லை. தன் உருவாக்கத்தின் மூலம் பணம் சம்பாதிக்க கருதவில்லை. பரவலாக மனித குலம் பயனடைய வேண்டும் என்பதே இவரை இயக்கியுள்ளது. எதிலும் ஒரு சொந்த லாபம் அலல்து வணிக நோக்குடன் - குறைந்த பட்சம் புகழ் பதவி என்ற நோக்கோடு செயல்படும் இன்றைய உலகில் இவர் இன்னும் ஒரு பல்கலைகழக மூலை ஒன்றிலிருந்துதான் செயல்படுகிறார். மனித சரித்திரத்தில் - தொழில் நுட்ப வளர்ச்சியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்ட இவருக்கு இன்று ஒரு வழியாக கௌரவம் கிடைத்துள்ளது.

இத்தனை நேரம் இவருக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்க வேண்டாமோ? பரவாயில்லை; வேறு முக்கிய விருது கிடைத்துள்ளது. " நூற்றாண்டின் மிகச் சிறந்த தொழில் நுட்ப" விருது கிடைத்துள்ளது தொகை - 1 மில்லியன் யூரோ - ( 1.2 மில்லியன் டாலர்.) பின்லாந்தில் நேற்று நூற்றாண்டின் தொழில் நுட்ப மாநாட்டில் வழங்கப்பட்டது.

ஆனால் வணிக நோக்குடன் நான் எதையும் உருவாக்கவிலை என்று நம் ஆள் அடக்கி வாசிக்கிறார். இப்போ சொல்லுங்கள் - நான் சொன்னது சரிதானே? பகவத் கீதையின் சாரம்??? ஆனால் யோசித்துப் பார்த்தால் உலகின் மிகப் பெரிய சாதனைகள் பல இந்த அடிப்படையில்தான் நிகழ்ந்துள்ளன என்று தோன்றுகிறது. அதாவது புகழையும் பணத்தையும் எதிர்பார்த்து சாதனைகள் நிகழவில்லை. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் "இதைச் சாதிக்க வேண்டும்" என்று ஒரு இலக்கை நோக்கி உலக நிகழ்வுகள் நடந்திருக்கவில்லை. தன்னிச்சையாக உள்ளூர ஏற்படும் ஓர் ஆர்வத்திலும் / உந்துதல்களே பல நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. புகழும் / பணமும் - பின்னர் தானாகவே வந்து ஒட்டிகொண்டவை - by products.

ஆனாலும் நாம் எதையோ தேடி / ஆசைப்பட்டு ஓடிக்கொண்டு இருப்பதைத் தவிர்க்க முடியவில்லையே!!!

பி.கு: அதெல்லாம் சரி. மேலே நான் எந்த உலக அமைப்பை பற்றி பேசுகிறேன் என்று தெரியாதவர்கள் கைத்தூக்குங்கள் ? :-)

Tuesday, June 15, 2004

குரல் வலைப் பதிவு

குரல் வலைப் பதிவு செய்ய நான் உபயோகித்த முறை:

முதலில் Blogspot ன் தளத்தில் குரல் வலைப்பதிவுக்கு ரிஜிஸ்டர் செய்தேன்.

அங்கு என் குரல் பதிவிற்காக ஒரு கணக்கு திறந்தவுடன், அந்த தளம் என்னை ஒரு அமெரிக்க நம்பர் - அஹ்டாவது நான் எந்தத் தொலைபேசியிலிருந்து குரல் பதிவு செய்யப்ப்போகிறேனோ அந்த தொலைபேசி எண்ணைக் கேட்டது. இது Primary number. இது ஒரு அமெரிக்க நம்பராக இருக்க வேண்டும் - ஆனால் இதிலிருந்துதான் பேச வேண்டும் என்பதில்லை. இது ஒரு சும்மா referecne க்குதான் என்று அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் என் மகனின் வீட்டு நம்பர் ( அமெரிக்கா) Primary எண்ணாக கொடுத்தேன்.

அடுத்து அந்த தளத்தில் கொடுத்துள்ள எண்ணுக்கு போன் செய்துணூங்கள் குரலைப் பதிவு செய்யலாம். அதில் உள்ள செய்வழிபாடு கட்டளைகளை சரியாக அப்படியே பின்பற்றினால் - தயார்.. உங்கள் குரல் உங்கள் வலைப் பதிவில் பதிவாகிறது.

இதில் Dial Pad செயலியின் வேலை என்ன என்றால், அதில் கொடுத்துள்ள 1-661-716- BLOG - இந்த BLOG என்பதை 2564 என்று எண் பதிவு செய்யுங்கள் அதாவது - 1 என்பது அமெரிக்க country code - 661716 2564 என்பது நாம் கூப்பிட வேண்டிய நம்பர் - என்ற நம்பருக்கு போன் செய்ய இந்த டையல் பாட் உபயோகித்து செய்யலாம். சாதாரணமாகவே நேரடியாக செய்தால் ISD பில் எக்கச்சகமாக ஏறுமே ??! அதனால் இந்த வழி.

Dial Pad எப்படி இறக்கிக்கொள்வது என்று www.dialpad.com என்ற தளத்திற்கு சென்றால் அங்கே கொடுக்கப்பாடுள்ள Internet phone செயலியை உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஒரு மாத சேவைக்கு $ 15. 300 நிமிடங்கள் பேசலாம். இந்த தொகையை உங்கள் Visa/ Master International credit card மூலம் செலுத்தலாம். ஒரு கடவுச் சொல்லை உபயோகித்து நீங்கள் சாதாரன தொலைபேசி மாதிரி பயன்படுத்தலாம். இவர்கள் நம்பர் அமெரிக்க நம்பர் என்பதால், நாம் அமெரிக்காவுக்கு போன் செய்தாலும் அமெரிக்காவுக்குள்ளே ஒரு உள்ளூர் பேச்சுக்கடணம் செலவுதான் ஆகும். நான் பொதுவாக என் மகன்களுடன் பேசுவதற்காக இந்த dialpad செயலியை உபயோகிப்பதால் இது எளிதாக இருந்தது.

முயன்று பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் குறிப்பாக கேள்வி கேளுங்கள். விளக்கம் தருகிறேன்.

Monday, June 14, 2004

this is an audio post - click to play



கிருபா சங்கர், இன்னும் உங்க பதிவுலே ஒலி பதிவு செய்ய நினைத்தவ்ர்களெல்லோரும் கேளுங்க. நம் ஊர்லேர்ந்தும் ஒலி பதிவு செய்யலாம்.டையல் பாட் என்கிற செயலியை உபயோகித்து !! எப்படின்னு இதோ சொல்லியிருக்கேன் கேளுங்க :-)
this is an audio post - click to play

Sunday, June 13, 2004

கண்ணாடி கூரை??

பெண்கள் அதிகமாக பல துறைகளில் இன்னும் பெருமளவு வர முடியாததற்கு (!!!???) ஆங்கிலத்தில் Glass ceiling என்று ஒரு பதம் உபயோகிப்பது வழக்கம் இல்லையா? வீட்டு வேலை மற்றும் ஆபீஸ் வேலை என்று இரட்டைக் குதிரை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் தடைகளையும் கஷ்டங்களையும் மீறி உயர்ந்த பதவிகளில் இருப்பதும் கூடவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் "இந்த மாதிரி வெளியுலகில் பெண்கள் தங்கள் திறமையை நிலை நாட்ட படும் கஷ்டங்கள் பற்றி கட்டுரைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இரண்டு நாள் முன்பு இங்கே இந்த ரீதியில் இன்னொரு கட்டுரை.

எல்லோரும் பெண்களைதான் " வீட்டு வேலை ஆபீஸ் வேலை என்று இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்களே தவிர, யாராவது வீட்டையும் ஆபீஸையும் எப்படி மேனேஜ் பண்ணுகிறீர்கள் என்று ஆண்களிடம் கேட்கிறார்களா என்று இவர் காய்கிறார்.

வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள சரியான ஆள் இல்லாதது பெண்கள் பெரும் பதவிகளில் அவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்லும் இவர் வேலை இருக்கும் இடத்தில் குழந்தை காப்பகம் மட்டும் போதாது என்று சொல்லி ஒரு புதுவித யோசனை சொகிறார். அதாவது, உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கார், மற்றும் இதர வசதிகளை அலுவலகம் கொடுக்கிறதல்லவா? அதைப் போல இந்த மாதிரி உயர் பதவியில் இருக்கும் பெண்களுக்கு ஆபீஸ் செகரடரி போல வீட்டு செகரடரியும் கொடுக்க வேண்டுமாம். இந்த வீட்டு செகரடரி, வீட்டில் எல்லா வேலைகளும் பார்ப்பாராம் - குழந்தைகளுக்கு நீச்சல் வகுப்புக்கு ( கராத்தே, பாட்டு அல்லது நடனம் என்று ஏதோ) அழைத்துச் செல்வது; தேவைப் படும்போது அவர்களுடன் செஸ் விளையாடுவது அவர்களுக்கு ஹோம் வர்க் சொல்லிக் கொடுப்பது; வீட்டில் வயதானவர்களை டாக்டரிடம் அழைத்துச் செல்வது ( சில சமயங்களில் நம் ரசனக்கேற்றவாறு இலக்கியமோ, சினிமாவோ பேசுவது!!) இந்த மாதிரி எல்லா வேலைகளும் செய்வாராம். அதனால் வீட்டைப் பற்றி கவலைப் படாமல் பெண்கள் ஆபீஸ் வேலையில் ஈடுபடலாம் என்பது இந்தக் கட்டுரையின் சாரம்.

இதைப் படித்தவுடன் தோன்றியது: வீட்டு செகரடெரியா? பரவாயில்லை. மனைவி/ தாய்/ அம்மா/ மாமியார்/ பாட்டி அல்லது தூரத்து உறவுகார அம்மா/ என்று பல ரூபங்களில் இந்தியாவில் வீட்டு விஷ்யங்களைக் கவனிக்கதான் ஆள் இருக்கிறார்களே!! என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் படித்த மற்றொரு கட்டுரை. ஆண்கள் நிறைந்த வங்கி உலகில் வெற்றி நடை போடும் ஒரு பெண் பற்றி. இந்தியாவின் முக்கிய கார்பொரேட் பெண்மணி. நைனாலால் கித்வாய் - ஹாங்காங் ஷாங்காய் வங்கியின் (HSBC) யின் தலைமை நிர்வாகி. சமீபத்தில் Fortune பத்திரிகை ஆசியாவில் சக்தி வாய்ந்த 50 பெண்களில் இவரையும் ஒருவராக தேர்வு செய்திருந்தது. Time பத்திரிகை இவரை உலகளவில் சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராகவும் Forbes பத்திரிகை இவரை உலகின் முதன்மை 50 பெண் அதிகாரிகளில் ஒருவராகவும் தேர்வு செய்துள்ளன.

டில்லி Lady Shri Ram கல்லூரியில் காலேஜ் விழாவுக்கு பல நிறுவங்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஆரம்பித்த இவரது திறமை பின்னர் ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் முதல் இந்திஅய்ப் பெண்ணாக ஒளிர்ந்து, 1982ல் ANZ Grindlays வங்கியில் சேர்ந்தவுடன் பிரகாசிக்கப் ஆரம்பித்தது. Morgan Stanley யின் இந்திய நிர்வாகத்திற்கு தலைமையாக இருந்து பல முக்கிய கார்பொரேட் நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்த இவரை HSBC 2002ல் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. இப்படி வர்த்தக உலகில் கொடி கட்டி பறந்தாலும் இவரது எண்ணம் பூமியில் காலூன்றி உள்ளது. பலவித சமூக நல அமைப்புகளில் கிராமபுற பெண்கள் முன்னேற்றம், மற்றும் digital divide பிரச்சனைகளை எப்படி குறைப்பது போன்ற விஷய்ங்களில் ஆலோசகராகவும் உள்ளார்.

நல்லது. இப்போ என்ன இவங்களைப் பற்றி என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. இப்படி பலவிதங்களில் வெற்றிகரமாக இருக்கும் நைனாலால் தன் வெற்றிக்கு ஒரு அடிபப்டை காரணம் தான் வீட்டைப் பற்றி நிம்மதியாக இருக்க முடிவதுதான் என்கிறார். " மற்ற மேலை நாடுகளைவிட இங்கே இந்தியாவில்தான் நமது பெண்களுக்கு சமூக அமைப்பு நிறைய வசதிகளை அளித்துள்ளது. முதலாவதாக பலவிதமான வித்தியாசங்கள் உள்ள வேலை அமைப்புகளில் பெண்களும் ஒரு அங்கம் என்ற புரிந்துணர்வு இங்கே உள்ளதால் பெண்கள் வேலையிடத்தில் எளிதாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, அம்மா, மாமியார், மச்சினர், அக்கா, தங்கை என்று நமது குடும்ப அமைப்பு விஸ்தாராமானது. எப்போ வேண்டுமானாலும் எந்தவிதமான உதவியும் நமக்கு நம் குடும்பத்தினரிடமிருந்து சுவாதீனமாக கிடைக்கும். இதெல்லாம் தவிர இருக்கவே இருக்கு வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆள் என்று. இந்த மாதிரி எல்லாம் வெளி நாட்டில் அபூர்வம்." என்று தன் வெற்றிக்கு தன்னைச் சார்ந்தவர்களை எளிதாக அடையாளம் காட்டும் இவரது சுபாவம் எனக்குப் பிடித்தது.

One Must dream, set goals, do one's best, and not worry about the result. Accolades that have come my way are endorsements that I am on the right course." இது, இவரது வெற்றியின் ரகசியம்.

வெளி நாட்டில் இதேபோல் உலகளவில் வர்த்தக உலகில் கொடி கட்டிப் பறக்கும் பெண்களில் குறிப்பிடத் தகுந்தவர், - Fortune பத்திரிகையி¢ன் உஅலகின் சக்தி வாய்ந்த 50 பெண்மணிகளில் முதன்மை சிலரில் ஒருவர் - Hewlett Packard ன் தலைமை அதிகாரி Carly Fiorina. HP யின் பார்சல் பகுதியில் பில்களைக் கூட்டிக் கழித்துக்கொண்டு சாதாரண அடிமட்ட தொழிலாளியாக ஆரம்பித்த கார்லி பியோரினா இன்று எப்படி அந்த நிறுவனத்திற்கே தலைமையதிகாரியாக உயர்ந்தார் என்பதை இங்கே படிக்கலாம். இந்தியாவைவிடவும் அமெரிக்காவில் பெண்கள் தலைமைப் பதவிகளை அடைவதில் நிறைய பெண் என்பதாலேயே நிறைய விமரிசனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதும் அங்கே உண்டு போலிருக்கிறது.

"love what you do, or don't do it........ it's about finding your soul and following it." என்று சொல்லும் இவருக்கு ஆசான், குரு, பின் புலம் உதவி எல்லாமே இவரது அம்மா. "என் பெற்றோர்கள், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் தங்கள் நம்பிக்கையிலும் தங்களுக்கு சரியென்று பட்டதை விடாப்பிடியாக பின்பற்றுவதிலும் அவர்கள் காட்டிய தீவிரம் என்னை வழி நடத்தியது. அவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் உயர்வு என்பது ஒரு மனிதனின் உயர்ந்த குணங்களேயாகும்."

Wednesday, June 09, 2004

ஒலி பதிவு.... !!! ??

இதென்னங்க ?! இப்போதான் Blogspot ல் கவனித்தேன். ஒலிப் பதிவு முறையையும் கொடுக்க ஆரம்பச்சிருக்காங்க. ஏற்கனவே இந்த ஒலி பதிவு பற்றி ஓரிரண்டு பதிவுகளில் படிச்சிருக்கேன். ஆங்கில பதிவு கிருபா ஷங்கர் இப்படி ஏதோ ஒலி நாடாவை பதிவு செய்திருந்தார். ஆனால் அதெல்லாம் இலவசமாக இருக்கவில்லை என்று ஞாபகம் :-) இப்போ இவங்க அதையும் இனாமாக கொடுத்திருக்காங்க போலிருக்கு. எழுதி பதிவு செய்ய நேரம் (!!!) இல்லையென்றால் பேசி பதிவு செய்து விடலாமே!! ஆனால் நம்ம வலைப்பதிவு தொழில் நுட்பகாரர்கள் யாரும் இன்னும் அதை சோதனை செய்யவில்லை என்று நினைக்கிறேன். ( ஆமாம் மைக்கை எடுத்து ஒலிப் பதிவு செய்வதற்கு எழுதுவதே மேலோ? அல்லது எழுதுவதிலும் அதை மற்றவர்கள் படித்து பின்னூட்டம் விடுவதிலும் உள்ள சுவை இந்த ஒலி நாடாவில் இருக்குமா? என்ற எண்ணமோ? எதுவானாலும் இருக்கட்டும். யாராவது முயற்சி செய்து ஒரு சோதனையோட்டம் செய்யுங்கள். குரல் வளம் மிக்கவர்கள் பாட்டே பாடிவிடலாம். - மதி பதிவில் அவ்வபோது நல்ல இசைகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளார். புகைப் படங்கள் சரி; இனி கொஞ்சம் குரலையும் கேட்கலாமே?!! :-) என்ன ரெடியா?

Saturday, June 05, 2004

15 வருடங்கள் முன்பு, தினாமன் சதுக்கத்தில்.

சீனாவில் நடந்த மாணவர்கள் கலவரம் / எழுச்சி. 15 வருடங்கள் முன்பு, தினாமன் சதுக்கத்தில். அன்று நடந்த கலவரங்களை நேரில் பார்த்துப் பதிவு செய்த பத்திரிகையாளர் Mike Chinoy நினைவுக்கு வருகிறார். அப்போது அவர் CNN க்கு பீஜிங் பிரிவுக்கு தலைமைப் பதவியில் இருந்தார். China Live என்ற அவர் புத்தகத்தில் 20 வருட காலம் சீனாவைப் பற்றி செய்திகள் சேகரித்து அனுப்பிய அனுபவமும் உள்ளது. ஆனால் அன்று - June 4th - அந்தச் சதுக்கத்தில் நடந்தவற்றை உடனுக்குடன் உலகுக்கு தெரியபப்டுத்திய பெருமை அவரையும் CNN க்கும்தான் தான் சேரும்.

இந்த கலவரம் எதற்கு நடந்தது என்றே இன்றைய மாணவர்களுக்கு தெரியாத நிலையில், இதைப் பற்றிய ஒரு கவனிக்க வேண்டிய செய்தி. இன்றைய இளைஞர்கள், இன்று பொருள் ஈட்டுவதிலும் தாங்கள் முன்னுக்கு வருவதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் என்கிறது இந்தச் செய்தி.

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில்....

....உலக வர்த்தக அமைப்பின் கோட்பாடுகளுக்கு கட்டுபட்டு இந்தியா ஏன் இறக்குமதி வரிகளைக் குறைக்கக்கூடாது, தடைகளை அகற்றக் கூடாது என்று வாதிக்கும் சுரேன், தன் பதிவில், Life & Debt என்ற விவரணப் படத்தைப் பற்றி மெய்யப்பன் பதிவில் இருந்ததைச் சுட்டியிருந்தார்.

ஜமைக்காவுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. We have our own checks and balances. We have a matured democracy with vibrant media to create public awareness. தவிர, நமது தொழில் துறை நன்கு காலூன்றி வளர்ந்து வருகிறது. ஜமைக்காவில் அப்படி அல்ல. அங்கே இன்னும் விவசாயத்தை அல்லது கனி வளங்களை அடிப்படையாக கொண்டதுதான் தொழில் துறை. உள்ளூர் உற்பத்தி அதிக வலுவில்லாத நிலையில் வெளி நாட்டு உற்பத்திகள் சந்தையை எளிதாக ஆக்கிரமித்துக்கொள்ள முடிகிறது. நம் ஊரிலோ ஏற்கனவே நல்ல உற்பத்திகள் சந்தையில் நிறைய உண்டு.

உலக வங்கி போன்றவை நம் மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க ஒரு வழி, கடன் வாங்கும் சூழ்நிலையைத் தவிர்ப்பதுதான். நமது மாநிலங்கள் அகலக் கால் வைக்கும் விதமாக சில சமயம் பெரிய திட்டங்கள் போட்டு கடன் வாங்க நேரும்போது இப்படிபட்ட கட்டுபாடுகளுக்கு ஆளாக நேருகிரது.

நமது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை அகற்றி, இருக்கும் வளங்களை ஓட்டையில்லாமல் சரியாக பயன்படுத்தும்போது, உலக வங்கி போன்றவற்றிடம் கடன் வாங்கும் அவசியத்தைக் குறைக்கலாம் - இன்று நமக்கு சுத்தமாக IMF கடன் இல்லை. RBIயின் Balance of Payment ஆவணத்தை எடுத்துப் பாருங்கள்; IMF என்ற குறியீட்டின் கீழே இருக்கும் 00 ( ஜீரோ) ஒரு மன நிறைவைத் தரும். நம் வரிகள் மீது IMF ஆதிக்கம் இன்று கிடையாது. வெளியே கடன் வாங்க வேண்டிய சூழலைத் தவிர்க்க முயல்வது ஒரு தொலை நோக்காக இருக்க வேண்டும். கடன் கொடுத்தவர்கள் போடும் ஆணைகளுக்கு தலை வணங்க வேண்டிய சூழலைத் தவிர்க்கலாம். அல்லது குறைக்கலாம். பணம் புரட்ட வேறு முறைகளை சிந்திக்கலாம். இங்கே உள்ள " பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு" பதிவையும் பாருங்கள்.

கடன் கொடுத்தவர்கள் கட்டுப்பாடுகள் போடுவது இயற்கை. ஆனால், கடன் கொடுத்தவர்கள் ஆணைகளுக்குக் கட்டுபப்டுவது வேறு. உலக வர்த்தக அமைப்புக்கு அதன் சம உரிமை உள்ள உறுப்பினராக கோட்பாடுகளுக்குக் கட்டுப்படுவது வேறு.

ஜமைக்காவில் நடப்பது முந்தையது. பின்னர் உள்ளது, நமக்கு மற்ற வளர்ந்த நாடுகளுக்கு சமமான உரிமை உள்ள ஒரு அமைப்பு. நம்மை ஏமாற்றுகிரார்கள் என்று உணர்வு பூர்வமாக முடிவெடுக்காமல், உண்மை நிலை என்ன, நம் தரப்பை எப்படி வலுப்படுத்தி எப்படி level playing field சூழ்நிலையை உருவாக்குவது என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். If the situation calls for a fight, let's do it; but not give up with out one.

ஆரோக்கியமான உலக வணிகத்திற்கு, சர்வதேச நாடுகள் ஒன்றுபோல் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்கும்படி செய்வதற்கு நமக்குத் தேவையானவை மூன்று முக்கிய அம்சங்கள்.

1. வளர்ந்த நாடுகளின் தொழில் முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு.

2. நம் கவலைகளை சரிவர உணர்ந்து, அவற்றை சர்வதேச அளவில் கவனம் பெறச் செய்ய நம்மிடம் வலுவான வாதிகள். காங்கூன் ஏன் தோல்வியடைந்தது என்று நினைக்கிறீர்கள்? வளரும் நாடுகளின் கூட்டணியின் ஒற்றுமைதான். வலுவாக தங்கள் பக்க வாதங்களை நிலை நாட்ட வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட இப்போதுதான் அதிகம் - as developed world increasingly turn protective against the heat built up by developing world. பேச்சு வார்த்தைத் தொடரப்பட வேண்டும். அழுகுணி ஆட்டம் ஆடும் நாடுகளைப் பற்றி முறையீடு செய்ய - Dispute Settlement அமைப்பு உள்ளது. இதைப் பற்றி சில ஆவணங்கள்:

2.

3.


பெரும்பாலான முறையீடுகள் வெற்றி பெறுகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தங்கள் தடைகளை அகற்றாமல் வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தடைகளை அகற்றச் சொல்கின்றன வளர்ந்த நாடுகள் என்பது மிகைப் படுத்தப்பட்ட வாதம் என்றும், தடைகள் அகற்றிய ஆரோக்கியமான உலக வணிகத்தில் வளரும் நாடுகளுக்கும் பயன் உண்டு என்றும் பொருளாதார நிபுணர் ஜகதிஷ் பகவதி இங்கே கூறுகிறார். பகவதி, சற்று மிகையாகவே வளர்ந்த நாடுகளுக்கு வக்காலத்து வாங்குவதாகத் தோன்றினாலும், " அவங்க- கொஞ்சம்தான்- protection- வைத்திருக்காங்க, நீங்க, - நிறைய" என்ற விதமான வாதம் சால் ஜாப்பு என்று தோன்றினாலும், எதிர் தரப்பு வாதத்தையும் கவனிப்பது, சரியான நிலையை உணருவதற்கு அவசியம் என்று நினைக்கிறேன். வளர்ந்த நாடுகளுக்கு அவர் சொல்லும் அறிவுரை குறிப்பிடத்தக்கது. " உங்கள் வரிகள் வளரும் நாடுகளை விடக் குறைவுதான் என்றாலும் சரி, அலல்து அமெரிக்கா இப்போது steel tariff and farm bill ல் செய்ததுபோல் "பாதுகாப்பு" முறைகளை உயர்த்தினாலும் சரி, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். பணக்கார நாடுகளான நீங்களே இப்படி செய்யும்போது, இப்போதுதான் தங்கள் protection முறைகளைத் தளர்த்த ஆரம்பிதிருக்கும் வளரும் நாடுகள் இந்த முயற்சியைத் தொடர தயக்கம் காட்டுவார்கள்." பகவதி, வளர்ந்த நாடுகள் வைத்திருக்கும் "வேளாண்மைப் பாதுகாப்பை" தகர்ப்பதற்கு வழிகளும் சொல்கிறார்.

உணர்ச்சிகரமாக அணுகாமல் நியாய / அநியாயங்களை உணர்ந்து, தொடர்ந்த பேச்சு வார்த்தைகள் ( பேரம்??) - பேச்சு வார்த்தைகள் மட்டுமே நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான வணிக சூழ்நிலையை உருவாக்கும்.

3. எல்லாவற்றிற்கும் மேலாக, நம் பொருட்களின் / சேவைகளின் தரத்தை உயர்த்துவது. நம்ம பொருள் பிரமாதமாக கணிச விலையில் இருக்கும்போது நான் ஏன் வெளிநாட்டுப் பொருளை வாங்குவேன்? "பாதுகாப்புகள்" நாம் வைக்காமலேயே, இறக்குமதி பொருட்களுக்கு இங்கே தானாகவே மதிப்பில்லாமல் / சந்தையில்லாமல் போனால் தேவையில்லாத இறக்குமதிகள் தானாகவே குறைந்துவிடும். பொதுவாகவே இந்திய நுகர்வோர்கள் தங்கள் சுவைகளை அவ்வளவு சீக்கிரம் மாற்றிகொள்ள மாட்டார்கள். வெளி நாட்டு உற்பத்தியாளர்கள் இந்தியாவுக்கு என்றே தங்கள் டிசைன்களை / படைப்புகளின் சுவையை நமகேற்றவாறு மாற்ற முயற்சிப்பதன் காரணம் இதுதான். நமக்கேத்தவாறு இல்லையென்றால் போணி ஆகாது. இது அவர்களுக்கும் புரியும். இந்திய மார்கெட்டைப் பற்றி ஆசைப் பட்டு இங்கே ஓடி வந்து கடை விரித்து, பின்னர் நம்ம நுகர்வோர்களைப் புரிந்து கொள்ளாமல் நஷ்டம் கண்டு கடையை மூடிய வெளி நாட்டு உற்பத்தியாளர்களும் உண்டு. எனவே நமது உற்பத்தியாளர்கள் தங்கள் தரத்தின் மூலம் போட்டிகளை வெல்ல முயல வேண்டும். சென்ற வருடம் சீனப் பொருட்கள் இங்கே வந்து நம் தொழில்கள் நசிந்தன என்று செய்திகள் வந்தன இல்லையா? ஆனால் சென்ற வருடம், சீனாவிலிருந்து இங்கு இறக்குமதி ஆனதைவிடவும் இங்கிருந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆனது அதிகம். இந்தியப் பொருட்கள் வந்திறங்கி சீனத் தொழில்கள் நலிந்தன என்று செய்திகள் வரவில்லை. Survival of the fittest.- but it is our responsibility to ensure that the rules are observed in a level playing field.

Thursday, June 03, 2004

அமெரிக்கப் பொருட்கள் சந்தையிழக்கின்றன??

கோகோ கோலா, நைக், மெக்டொனால்ட் போன்ற அமெரிக்க பொருட்கள் இந்தியாவுக்குள் வருவதை விரும்பாதவர்களா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி!! உலக சந்தையில் அமெரிக்கப் பொருட்களுக்கு மதிப்பு குறைந்து போய்விட்டன என்று ஒரு அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இதன் அறிக்கையின்படி, இதற்கு ஒரு காரணம் ஆங்காங்கே, ஆஸ்த்திரேலியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளில் உள்ளூர் தாயரிப்புகள் பெருகி அமெரிக்க பொருட்களுக்கு மார்கெட் இல்லாமல் போய்விட்டதாம். ஈராக் பிரச்சனையை அமெரிக்கா கையாண்ட விதமும் தற்போது வெளியான ஈராக் சிறைக் கைதியினர் நடத்தப்பட்ட விதத்தின் போட்டோக்களூம் கூட காரணமாக இருக்கலாமாம்.

அதுசரி; எப்படியோ, அமெரிக்க பொருட்கள் இறக்குமதி குறைந்து உள்ளூர் பொருட்களுக்கு சந்தை உருவானால் சரி என்று நினைக்கிறீர்களா? இருங்கள்; அவசரப்படாதீர்கள். The bad news is இந்த "அமெரிக்க பொருட்கள் மதிப்பு குறைந்து உள்ளூர் பொருட்கள் மதிப்பு உயர்ந்து" லிஸ்டில் இந்தியா காணோம் !! அதற்கு ஒரு ஆய்வாளர் விளக்கம்: " பொதுவாகவே, இந்திய நுகர்வோர்கள் சற்று சாவதானக்காரர்கள். இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அவர்கள் அசரமாட்டார்கள் !!!!" ஹ்ம்ம்... நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...