Friday, April 09, 2004

தேர்தலோ தேர்தல்......

கருத்துக்கணிப்புகளை ஒரு காலத்தில் எதிர்த்தவள் நான். தேர்தல் ஆணையம் சொல்லும் அதே காரணத்துக்காக - வாக்களிக்கும் முன் வாக்காளர்களிடம் ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று நானும் நம்பினேன். கருத்து சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால் பொது நன்மை என்று வரும்போது வாக்களிப்புகள் பாரபட்சமாக இருந்துவிட இந்த கணிப்புகள் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பது என் எண்ணம்.

தவிர, கணிப்புகளில் எடுத்துக்கொள்ளப்படும் சாம்பிள் வாக்காளர்கள் உண்மையில் வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்களார்கள் பிரதிநிதிகள் இல்லை என்பதும் என் அபிப்பிராயம். இந்த தேர்தல் கணிப்பு சமாசாரம் இந்தியாவில் என்றல்ல; பிற நாடுகளிலும் கூட ஒரு புதிராகவே இருந்து வருகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி. உண்மையில் சாவடிக்குச் சென்று வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதும் ஒரு காரணம். நம் நாட்டில் சுமாராக 670 மில்லியன் வாக்காளர்கள் என்று சொல்கிறார்கள். இதில் வாக்களைப்பவர்கள் சதவிகிதம் ஏறத்தாழ - 60 % என்று வைத்துக்கொண்டால் அமெரிக்காவில் 30 % மட்டுமே ! " நான் இந்தத் தொழில் ஆரம்பித்த காலத்தில் ( 1984) 65 சதவிகிதமாக இருந்தது இன்று முப்பதாக குறைந்துவிட்டது என்று அங்கலாய்க்கிறார் அமெரிக்க தேர்தல் கணிப்பு நிறுவனம் ஒன்றின் தலைவர் John Zogby. (ஆதாரம் : அமெரிக்க தூதரகத்தின் வெளியீடான Elections 2004"என்ற புத்தகம்.)

Psephology என்பது அறிவியல் பூர்வமான கணிப்பு முறை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றைய வாக்காளர்களின் சரியான எண்ணப்போக்குகளைக் கண்டுபிடிப்பதில் சில செயல்முறை சங்கடங்கள் உள்ளன. உதாரணமாக மதில் மேல் பூனையாக உள்ளவர்கள்; மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று சொல்பவர்கள் என்று பட்டியல் இடலாம். இந்த குறைகளுக்கு எல்லாம் இடம் வைத்துதான் கணிப்புகள் நடக்கின்றன. இருந்தாலும் வாக்காளர்களின் இறுதி முடிவுகள் பொதுவாக கணிப்பார்களை ஆச்சரியப்படுத்தும் விதத்திலேயே இருக்கின்றன.

இந்தக் காரணங்களாலும் கணிப்புகள் வாக்காளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைத்திருந்ததாலும் கணிப்புகள் வெளியிடப்படுவது பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. ஆனால் இப்போது கடந்த சில தேர்தல் முடிவுகளை கவனித்ததில் என் அபிப்பிராயத்தை மாற்றிகொள்கிறேன்.

காரணம் 1: கருத்துக்கணிப்புகள் எந்தவிதத்திலும் வாக்காளார்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் பல கணிப்புகளை அவர்கள் பொய்யாக்கியிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாங்கள் சொன்ன கணிப்பே சரி என்று அவரவர் சொல்ல ஆரம்பிப்பார்கள்; அல்லது இரண்டுக்கு ஒன்று தவறாக கணிப்பது சகஜம்தான் என்ற தோரணையில் விளக்கம் வரும்.
ஆக மொத்தத்தில், கணிப்புகள் எப்படியிருந்தாலும் வாக்காளர்கள் தங்களுக்குள் என்ன முடிவு செய்கிறார்களோ அது அவர்களுக்குதான் வெளிச்சம்.

காரணம் 2 : இந்த தேர்தல் கணிப்புகள், அலசல்கள் மக்களின் மனதைச் சரியாக உணர வைக்கிறதோ இல்லையோ, கட்சிகள் தங்கள் குறை நிறைகளை எடை போட உதவுகின்றன. கணிப்புகள் கடந்த காலத்தில் ஏன் தவறாயின அல்லது சரியாக இருந்தன என்று அலசுவது கட்சிகளுக்கு ஆக்கபூர்வமான சிந்தனைகளை அளிக்கலாம்.

காரணம் 3: அட; பலர் கையில் கொறிக்க வைத்துக்கொண்டு சுவாரசியமாக டிவியில் பார்க்க உட்கார்ந்துவிடுவார்களே! Pure Entertainmnet value at the cost of a few crores to the Indian exchequer. அதுதான் ஆயிரம் கோடியில் ஒரு திருவிழா என்று மாலன் சொல்லுகிறாரே :-)

அதுசரி; 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கிட்டு சமாசாரம் எல்லாம் இந்த பார்லிமெண்ட்டிலாவது கவனிக்கப்படுமா? தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விஷயம் போகிற போக்கில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் எவ்வளவு தூரம் இதில் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன என்பது கேள்விக்குறிதான். கட்சிகளுக்குள்ளேயே பெண்களுக்கு நிறைய இடம் கொடுக்கவில்லையே? தமிழ் நாட்டில், திமுக போட்டியிடும் 15 இடங்களில் மூன்று சீட்தான் பெண்களுக்கு கொடுத்துள்ளது. அதிமுக - 33 இடங்களில் 2 - பிஜேபி 7 இடங்களில் ஒன்றே ஒன்றுதான் காங்கிரஸ் - 10 இடங்களில் ஒன்றே ஒன்று. பார்லிமெண்டில் இவர்கள் என்ன செய்கிறார்களென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இருந்தாலும் பொதுவாகவே பெண்களுக்கு அரசியல் ஈடுபாடு குறைச்சலோ? சிங்கப்பூரில் இருந்தபோது சிங்கப்பூர் பெண்கள் ஏன் அரசியலில் அதிகமில்லை என்று எழுதிய என்
பழைய கட்டுரை ஒன்று இங்கே படியுங்கள்.
" குடும்பத்தை முதலில் கவனித்துவிட்டு பின்னர்தான் நாடும் அரசியலும் கவனத்தில் வருகின்றன பெண்களுக்கு - அதாவது அவர்களுக்கு சுமார் 40 வயதானபின். ஆண்களோ முப்பதுகளிலேயே அரசியலில் நுழைந்து விடுகின்றனர்." என்று ஒரு சிங்கப்பூர் பார்லிமெண்ட் ( முன்னாள்?) உறுப்பினர் கூறியுள்ளார். "..இன்று வேண்டுமானால் பெண் முதல்வர் என்பது இங்கே கற்பனைக்கெட்டாத விஷயமாக இருக்கலாம். ஆனால் இன்னும் 10 வருடங்கள் கழித்தும் இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரை எழுதி சரியாக 8 வருடம் ஆகிறது. இன்று அங்கே பெண்கள் அரசியலில் ஈடுபாடு காண்பிக்கிறார்களா என்று அங்கிருப்பவர்கள்தாம் தெரியப்படுத்தவேண்டும்.

No comments: