Wednesday, August 15, 2007

சுதந்திர தின வாழ்த்துக்கள்


60 வயது நிறைந்துவிட்டது.

60 வருட நிறை குறைகளை அலசும் பலவித செய்திகளைப் படித்துவிட்டு, நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதினாலும், காலையில் செங்கோட்டையில் பூக்களை சிந்தியபடி, அந்தக் கொடி கம்பீரமாகப் பறக்கத் தொடங்கிய அந்த ஒரு கணத்தில், மனதில் ஒரு ஆழ்ந்த அமைதி. அந்த முகம் தெரியாத "இந்தியா" என்ற உணர்வு - வெறும் அடையாளம் என்பதையும் மீறி மனதில் தாக்கும் அந்த உணர்வு தழைக்க, செழிக்க அமைதியாகப் பிரார்த்தனை.

அவ்வளவுதான். மற்றொரு வருடம் உருண்டோடுகிறது.

என்ன சாதித்துவிட்டோம் என்று குறைகளைப் பற்றி மட்டுமே நினைத்து வருந்தாமல், அவற்றை எப்படி அகற்றி இன்னும் மேன் மேலும் எப்படி நாமும் வளர்ந்து பிறருக்கும் நல் உதாரணமாக இருக்கலாம் என்ற எண்ணங்களில் செயல்படுவோம்.

60 வருடங்களாக ஜனநாயகமாக வெற்றிகரமாக செயல்படுகிற அதே வேகத்துடன், நலிந்தோர் தழைக்கவும், பெருகி வரும் மக்கள் எண்ணிக்கை ஒரு பெரும் ஆக்கப்பூர்வமான சக்தியாக பரிமளிக்கவும் வழிகள் தேடுவோம்.
கிளைகளாக, விழுதுகளாக, உலகம் முழுக்கப் பரவியிருந்தாலும் இந்தியர் என்ற வேரில், உணர்வில் பெருமிதம் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

6 comments:

தறுதலை said...

//60 வருடங்களாக ஜனநாயகமாக வெற்றிகரமாக செயல்படுகிற//

இதற்காத்தான் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அதற்காக ஆக்-15வரை ஒவ்வொரு ஆண்டும் காத்திருக்க வேண்டாம். எப்போதுமே பெருமையுடன் இருக்கலாம்.

மற்றபடி எல்லா மக்களுக்கும் விடுதலை என்பது இன்னும் வெகு தூரத்தில். ஆக்-15 என்பது அரசியல் அதிகாரம் ஒரு குழுவினரிடமிருந்து இன்னொரு குழுவிற்கு மாறிய நாள். அவ்வளவே.

.............
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

பாரதிய நவீன இளவரசன் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சீனு said...

வரலாற்றில் 60 வருடம் என்பது மிக மிக குறுகிய காலம். ஆனால் இந்த 60 வருடங்களில் நாம் சாதித்தது நிறைய (சைட் எஃப்பெக்ட் உள்பட). இருப்பினும் இந்தியர் என்பதில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நம் நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் ஜனநாயகம். இதற்காக நாம் நம் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம். அதை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். இதற்கு மிக முக்கிய காரணமான நேரு, பட்டேல் அம்பேத்கர் ஆகியோருக்கு நன்றிகள் பல. வாழ்க இந்தியா.

காட்டாறு said...

அருணா, உங்களுக்கு எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Aruna Srinivasan said...

தறுதலை, இளவரசரே, சீனு, மற்றும் காட்டாறு....

வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

பி.கு: புனைப்பெயர் சூடிக்கொள்வதில் பதிவர் வட்டத்தில் இருக்கும் கற்பனை வளம் - சும்மா சொல்லக்கூடாது; அமர்க்களம். ரசித்தேன்...:-)

Anonymous said...

போற்றி போற்றி
-----------------------------
சுதந்திரத்தின் விலை என்ன
அடிமை கொடுமை
சுதந்திரத்தின் மதிப்பு என்ன
அறியாது தெரியாது
அடிமையின் வலி என்ன
அறியாது தெரியாது
பிறகு எப்படி தெரியும்
அருமையும் பெருமையும்.

போராட்டம் கண்டதில்லை நாம்
சுகம் காணுகிறோம்
பெற்றோரை சொல்லும் போல்
அவர்களும் பெற்றோரே
ஈன்ற சுதந்திரத்தை நமக்காக்கி
பெற்றோராய் வாழ்த்தினர்
அவர்களை நினைவு கொள்வோம்
கர்வம் கொள்வோம்.