Wednesday, July 18, 2007

மலையும், காடும், நீரும், மரமும்

ஒரு போட்டோ எடுக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் / ஒரு நினைவில் நிற்கும் காட்சி என்று மனதில் ஒரு ஆர்வம் துளிர்க்கும். என்னைப் பொறுத்தவரையில் இயற்கைக் காட்சிகளில் என் காமிரா லென்ஸ் குறிவைப்பது பெரும்பாலும் - இது போன்ற ஒரு composition.

புகைப்படப் போட்டிக்கு


1. ஏற்காடு - ஜூன் 2007


2. லேக் டாஹோ ( Lake Tahoe - US) - ஜூலை 2006


ஊர் எதுவானாலும் மலையும், காடும், நீரும், மரமும் ஒரே கலவையில் உருவானதுதானே !! ஆனால் இரண்டாவது போட்டோவில் வானத்தின் நீலம் இன்னும் அழுத்தமாக விழுந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?

Thursday, July 12, 2007

பெயரிலி என்கிற ரமணீதரனுக்கு //முழுமையாகப் பத்து வசனங்கள் கோவிந்தசாமி பற்றியும் இணையத்தமிழ் வரலாற்றினையும் பற்றி அருணா அவர்களைச் சுடச் சுட முன்னாலே போய்த் திடீரென நின்று // கேட்க ஆசையாம். அவருக்காக இந்தப் பதிவு. அவர் பதிவிலும் போட்டுவிட்டேன். இது என் வசதிக்காக." ரமணீதரன், அப்படியெல்லாம் ரொம்பக் கஷ்டப்படாதீர்கள். தமிழ் கணினி, மற்றும் தமிழ் இணைய அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை. ஆனால், நா. கோவிந்தசாமி எப்படி முதன் முதலில் தட்டச்சு செய்த தமிழை வலையேற்றினார் என்பதற்கும், இணையத் தமிழின் பிதா என்று நான் கூறியதற்கும் ஆதாரம், இங்கே

என் மற்றொரு வலைப்பதிவில் பதிந்துள்ளேன். ஏழு கடல் தாண்டி அருணா ஸ்ரீனிவாசனைக் கேள்வி கேட்கும் சிரமம் உங்களுக்கு வேண்டாமே என்று எனக்கு நேரடியாக தெரிந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். எள்ளல், நக்கல் இவற்றுக்கு செலவழித்தது போக நேரம் பாக்கி இருந்தால், சிரமம் பார்க்காமல் இங்கேயும் எட்டிப் பாருங்கள். அதிலிருந்து ஒரு பகுதி:

"Today if you want to read Tamil messages on the Internet, they are transported in graphic mode. The Tamil letters are converted into graphic mode, called Graphic Interchange Format and you get the graphic images or the letters. But to communicate in the long run, this would be too troublesome and time consuming. The images take a lot of time in the conversion process. Text mode is the only solution"

என்று எகனாமிக் டைம்ஸிற்காக என் பேட்டியில் அவர் சொல்லியபோது, உலகின் இதர பகுதிகளிலும் இவ்வாறு தமிழ் எழுத்தை வலையேற்றும் முயற்சிகள் நடந்துவருவதையும் கூறினார். அதுவரையில் இணையத்தில் ஏற்றப்பட்ட தமிழ் எழுத்துக்கள் அப்படி GIF முறையில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தட்டச்சு செய்து நேரடியாக ஏற்ற பல முயற்சிகள் ஒரே சமயத்தில் நடந்து வந்தாலும் 1995ல் முதன் முதலில் "தட்டச்சு செய்து" நேரடியாக ஏற்றப்பட்ட தமிழ் கோவிந்தசாமியுடையது என்ற வகையில் அவர் தமிழ் இணையத்தின் பிதா என்று நான் குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை.

மனமிரூந்தால் இதையும் படியுங்கள்.

ஒருவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்ட பதிவில் அவருடைய நினைவுகளைப் பற்றி நாமறிந்த சிறு குறிப்பைப் பகிர்ந்து கொள்வது மனித இயல்பு. ஒரு வேளை நான் இணையத் தமிழ் ஆர்வலர்கள் என்று கட்டுரை எழுத நேர்ந்தால் நிச்சயம் பலரின் பங்காற்றல்கள் பற்றியக் குறிப்புகள் அதில் இருக்கும்.

இருந்தாலும், இன்று நீங்கள். நாளை இன்னும் வேறு யாருக்காவது இணையத் தமிழ் வரலாறு பற்றியோ அதில் பங்காற்றியவர்களைப் பற்றியோ சந்தேகம் எழலாம். அவர்களைப் போன்றவர்களுக்காக திரு கல்யாணசுந்தரம், மற்றும் முரசு நெடுமாறன், போன்ற நான் சந்தித்த ஆர்வலர்களின் அனுபவங்களையும், செய்திக் கட்டுரைகளையும் - என் கையில் கிடைத்தவரையிலும் - மேலே ஆரம்பத்தில் கொடுத்த சுட்டியில் கொடுத்துள்ளேன். மற்றவர்களைப் பற்றி அறிந்ததுண்டு - சிலருடன் கருத்து பரிமாற்றமும் உண்டு - ஆனால் சந்தித்ததில்லை.

நன்றி.

Friday, July 06, 2007

மொழிபெயர்ப்பு

கூகுள் தேடல்களில் அடிக்கடி " translate this page " என்ற குறிப்பு தென்படும். - ஜப்பானிய, சீன மொழிகளில் உள்ள கோப்புகளின் சுட்டிகள் வரும் இடங்களில்.

இதுபோல் தமிழ் கோப்புகளும் தானாகவே மாற்றப்படுகின்றனவா? இல்லையென்றால் ஏன்?

இது போல் தானாகவே மொழிபெயர்ப்பு செய்யும் தொழில் நுட்பம் தமிழுக்கு இருக்க வேண்டும். இருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். இல்லையென்றால், உலகம் முழுக்க பரவி, விரிந்து இருக்கும் தமிழ் மென் பொருளாளர்களே, இந்த வசதியை விரைவில் கொண்டுவர வழி செய்ய முடியுமா?

Sunday, July 01, 2007

8

ஹ்ம்ம்... நானும் களத்தில் இறங்கியாச்சு.

எட்டு போட உங்களையும் அழைத்து இருக்கிறேன் என்று "கூகிள் சாட்டில்" பத்மா தெரிவித்தவுடனேயே மனதில் தோன்றிய எண்ணம் அடக்கடவுளே !! மாட்டிக்கிட்டேனா என்றுதான் :-) சாதனை ஒன்றுமேயில்லையே என்று ஓடிவிடலாம் என்பதுதான் reflex reaction :-) ( எட்டை எழுதி முடிக்கும்போது - ராதா ஸ்ரீராமும் கூப்பிட்டுட்டாங்க)

ஒவ்வொருமுறையும் யாராவது இப்படி அழைக்கும்போதும் நழுவறது நல்லதில்லேன்னு உள்ளே ஒரு குரல். ( துளசி... வேறு ஒரு வரிசை விளையாட்டில் உங்கள் அழைப்பும், அன்று சில காரணங்களால் என் இயலாமையைச் சொன்னதும் நினைவு வருகிறது - மீண்டும் மன்னிக்கவும்.) சரி. மாட்டுனதுதான் மாட்டுனோம்.... ஒழுங்கா கொடுத்த வேலையைச் செய்து, நான் பெற்ற இந்த இன்பம் (!!) இன்னும் எட்டு பேரையும் அடையட்டும் என்ற எண்ணத்தில் சுய தம்பட்டத்தில் துணிந்து இறங்கிவிட்டேன்!

நாம் எவ்வளவுதான் சாதாரணமானவர்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் மனம் நிறைந்த அனுபவங்கள் இல்லாமல் இருக்காது. அதனால் சாதனை என்று இல்லாவிட்டாலும் இதம் தரும் அனுபவங்கள் என்ற வகையில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுவதால் - இதோ என் வரிசை.

1. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிறகு ஐரோப்பிய தொண்டூழிய நிறுவனங்களின் ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவராக வேலைப் பார்த்த தந்தையுடன் கிராமங்களில் ஜீப்பில் சென்று அவருடைய மொபைல் கிளினிக்கில் என் சகோதரனுடன் சேர்ந்து உதவுவது, தீபாவளிப் பண்டிகை - மத்தாப்பு ( பட்டாசு பயம் தெளிய ரொம்ப வருஷம் ஆச்சு) புது உடை/மருதாணி /வளையல் சமாசாரங்கள், பனாரஸில் ( இன்று வாரணாசி) இருந்த என் அக்காவும் அவள் குழந்தைகளின் வருடாந்திர வருகை போன்றவை என் சிறு வயது உற்சாகங்கள் என்றால், வளர்ந்தபின் கல்லூரி நாட்களில் சின்னச் சின்ன சந்தோஷங்கள் - முதன் முதலில் மேடையில் பேசிய அனுபவம் (முழுசாக 5 நிமிடம்!!); சராசரி மாணவி என்ற விதத்தில் பரிட்சைகள் பாஸ் செய்ததே ஆனந்தம்தான் ( முதல் ரேங்க் வாங்கவேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லாத "எளிமையான" சுபாவம் :-) சின்னச் சின்ன விளையாட்டுப் போட்டிகள் - சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட்டாக சேர்ந்து ஏதேதோ வேலைகள்.... எல்லாமே உற்சாகம் தரும் அனுபவங்கள்...

2. பின்னர் கல்லூரி படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த சில நாட்களில் ஹிந்து பேப்பரில் யதேச்சையாகக் கண்களில் பட்ட ஒரு விளம்பரம் - பம்பாயில் ( அப்போது அது பம்பாய்தான்) இருந்த பிரிட்டிஷ் இன்ஸ்டிட்யூட் என்ற கல்வி நிறுவனத்தின் ஜர்னலிஸம் கோர்ஸ் - தபால் மூலம். உடனே மனதுள் ஒரு ஆர்வம் துளிர்விட்டது. பெற்றோரிடம் கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னேன். உடனேயே அம்மா ஏன் இவ்வளவு யோசிக்கிறாய். உனக்கு ஆர்வம் இருந்தால் படியேன்; செலவைப் பற்றி கவலைப்படாதே, என்றார்கள். அன்று ஒரு சந்தோஷம்.

3. ஒரு குடும்பத்தலைவியின் வாழ்க்கையில் குடும்பம் - குழந்தைகள் - வீடு - ஒரு முக்கியப் பகுதி. கணவர் மட்டும் சம்பாதிக்கும் பல குடும்பங்களைப் போல வீட்டு நிர்வாகம் / குழந்தைகள் / இதர வெளி வேலைகள் என்று இரூந்த அன்றைய என் சுழற்சியில் சாதனை ஏதும் இல்லை என்று பிறருக்கு தோன்றலாம். ஆனால், வீட்டு வேலைகளிலும் சுணக்கம் அலுப்பு ஏதுமில்லாமல் சுவாரசியமாக, ஒவ்வொரு வேலையையும் ரசித்து, இயல்பாக செய்யும் அளவு ஒரு ஈடுபாடு இருந்தது ஒரு சாதனை என்று எனக்கு இந்த "வயதான" (??) காலத்தில், இப்போது தோன்றுகிறது!

4. என் மற்றொரு பகுதி எழுத்து. அன்று திக்கித்திணறி பத்திரிகையாளர் தொழிலுக்குப் படித்துவிட்டாலும் பிள்ளையார் சுழி போட பதிமூன்று வருடங்கள் கழித்துதான் நேரம் கிடைத்தது. 1987ல் டில்லியிலிருந்து பூடானுக்கு மாறிய சமயம் தில்லியில் உள்ள NCERT அமைப்பின் Women's Studiesதுறையிலிருந்து பதின்ம வயதினருக்காக ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுத அழைப்பு வந்தது. இந்தியமொழிகளில் நவீனங்களில் பெண்களின் வளர்ச்சி / முன்னேற்றம் / மாற்றம் படிப்படியாக எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய ஆராய்ச்சித் தொகுப்பிற்காக "தமிழ் நவீனங்களில்பெண்கள்" பற்றி ஆங்கிலத்தில் எழுத ஒரு வாய்ப்பு. அந்த வேலையை எடுத்துக்கொண்டு பூடான் போய்விட்டேன். தட்டச்சு சுத்தமாகத் தெரியாமல் கையால் எழுதி பின்னர் புதிதாக ஒரு டைப்ரைட்டர் வாங்கித் தடவித் தடவி கணவர் உதவியுடன் கற்றுக்கொண்டு மூன்று வருடத்தில் புத்தகத்தை ( Portrayal of Women in Tamil Fiction - NCERT - 1993) முடித்தது என் எழுத்தின் முதல் சந்தோஷம். சின்னப் புத்தமென்றாலும், அந்த சந்தோஷத்தின் பின்னால் தூணாக நின்றவர்கள், அதன் ஆராய்ச்சிகளில் உதவிய இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் ஆசிரியர் என்.எஸ் ஜகன்நாதனும், அன்றைய இந்தியா டுடே ஆசிரியர் மாலனும், என் எழுத்தில் நம்பிக்கை வைத்து வேலையை என்னிடம் கொடுத்த அன்றைய NCERT - Women's Studies முனைவர் இந்திரா குல்ஷ்ரேஷ்டாவும்.

5. பின்னர், "இதயம் பேசுகிறது" பத்திரிகைப் போட்டி ஒன்றில் முதல் பரிசாக வெளிவந்த கதையும் அந்த ஒருப் பக்கக் கதைக்கு நாலு பக்க அளவில் வந்த வாசகர்கள் கடிதக்குவியலும் (!!!), மற்றும் எதிர்வீட்டில் இருந்த நேபாளியப் பெண்ணின் அனுபவம் என் பேனாவில் வெளிப்பட்டு குமுதத்தில் இன்னொரு சிறுகதையாக வெளிவந்த அனுபவம், பின்னர் புத்த மதமும் இந்து மதமும் என்று பெங்களூர் டெக்கான் ஹெரால்டில் எழுதிய ஒரு ஆய்வுக் கட்டுரை என்று ஏற்பட்ட சின்னச் சின்ன எழுத்து சந்தோஷங்கள் டில்லி திரும்பியபின் அடங்காத வேட்கையாயிற்று.

6. உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ரிப்போர்டர் வேலைக் கிடைத்தபோது... ம்.. ஜென்ம சாபல்யம் என்று தோன்றியது. ஆனால் கொஞ்ச நாள்தாம். சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் வலுத்தது. செய்திக் கட்டுரை எழுதும் யோசனைகளை எடுத்துக்கொண்டு பத்திரிகை அலுவலகங்களின் மேல் படையெடுப்பு தொடங்கியது. ஒவ்வொரு முயற்சி வெற்றியடையும்போதும், வாராவாரம் - சில சமயம் தொடர்ந்து சில நாட்கள் எங்காவது என் செய்திக் கட்டுரைகள் வந்துகொண்டேயிருக்க, அது ஒரு மாதிரி சந்தோஷம். தினம் தினம் கெடுவிற்குள் கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகரிக்க, ஆர்வமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்கள், ஒவ்வொரு துறையிலும் இருக்கும் நுணுக்கங்கள் என்று வாழ்க்கையையே பிரமிப்பாக உணர்ந்த நேரங்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத பல்வேறு துறைகளைப்பற்றி அறிந்து கொள்ளும்போதும், அவற்றில் இருக்கும் நிபுணர்களை சந்திக்கும்போதும் ஒவ்வொரு முறையும் "கற்றது கைமண் அளவு...." வாக்கியம் உள்ளே ஒலிக்க, கைமண் என்ன...சுண்டுவிரல் நகக்கணு அளவுகூட நம்மிடம் இல்லையென்ற நிஜம் தாக்க, மனசில் ஒரு பிரமிப்பும், பணிவும் குடியேறிய அற்புதமான அனுபவங்கள் அவை! ஒவ்வொருக் கட்டுரையும் ஒரு அனுபவம்.

7. கொடுக்கப்பட்ட வேலைகளைக் குறித்த நேரத்தில் கொடுத்து, 'நட்சத்திர சுயேச்சைப் பத்திரிகையாளர் என்று பத்திரிகையாசிரியர்களால் அன்பாக அழைக்கப்பட்டதும் இதம் தரும் அனுபவம் - ஒவ்வொரு முறையும் என் கட்டுரைகளை யாராவது பாராட்டும்போதும் மனம் நிறைந்து, முகம் மலர்ந்த பெற்றோர்; ஆரம்ப நாட்களில் ஒரு முறை ஹிந்துவில் வெளிவந்த என் கட்டுரையை எடுத்துக்கொண்டு என் உறவினர் ஒருவர் 'நம்ம குழந்தை எழுதியிருக்காடா' என்று பேப்பரை உறவினர்களிடம் காண்பித்த பாசம்; பின்னர் சில வருடங்கள் கழித்து, சிங்கப்பூரில் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் முதல், "அமைச்சர்கள் மாநாடு" ( First Ministerial Conference of WTO) போன்ற பல முக்கிய நிகழ்வுகளில் எகனாமிக் டைம்ஸின் சுயேச்சை நிருபராக செயல்பட்ட அனுபவம்; சிங்கப்பூர் தமிழ் முரசில் எழுதியப் பத்திகள் தங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்துவதாக நேரிலும் போனிலும் சொல்லிய இளைஞர்கள்; மற்றொரு சமயம் ஒரு மாநாட்டில் அடையாளம் கண்டுகொண்டு என்னிடம் பேச வந்த வாசகர் ஒருவர் சட்டென்று கையிலிருந்த பேனாவை எடுத்துக்கொடுத்து ' உங்களுக்கு ஏதேனும் கொடுக்க விரும்புகிறேன் - இப்போது இதுதான் இருக்கிறது' என்று கொடுத்த அன்பு; மனதுக்கு இதமான சினேகிதங்கள் /ஊறவுகள்/குடும்பம்/ விசாலமாக, சுயமாக சிந்திப்பவர்களாக வளர்ந்துள்ள மகன்கள் என்று இப்படி சின்னச் சின்னதாக நிறைவுகள்........

8. கூட்டிக் கழித்து பார்க்கும்போது முடிந்தவரையில் வெறும் கொள்கையாக இல்லாமல் நேர்மையை யதார்த்தமான வாழ்க்கைமுறையாக வாழ முடிகிற வாழ்க்கையும், எந்தவித நெருடல் இல்லாத மனமும், எழுத ஆரம்பித்துள்ள புத்தக வேலைகளும் மனதை நிறைக்க, தனிப்பட்ட முறையில் "குறையொன்றும் இல்லை....." என்றுதான் தோன்றுகிறது.

உபரியாக மறக்க முடியாத அனுபவங்களில் - சிறுவயதில் பள்ளியிலிருந்து மழையில் நனைந்தபடி வீட்டுக்குச் செல்வதற்குள் மூச்சுத் திணறியது; பின்னர் அதேபோல் ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும்போது மழையில் நனைய நேரிட்டால் அதேபோல் மூச்சுத் திணறலும் சிறு வயது ஞாபகமும் விடாமல் வருவது; ( ஒரு முறை பஸ்சிலிருந்து இறங்கி டில்லி டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்துக்குள் போவதற்குள் காற்றும் மழையும் வலுத்து, காற்றில் குடை பறக்க, உடல் தொப்பமாக நனைந்து, கட்டிடத்துள்ளே நனைந்தபடியே சென்ற என்னை எல்லோரும் பார்க்கும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க முடியாமல், உடை சிறிது காயும் வரையில் ரிசப்ஷனிலேயேக் காத்திருந்துவிட்டு, பின்னர் சந்திக்கச் சென்ற எடிட்டரைப் பார்த்து ( "சே... என்ன மழை..." என்று தர்மசங்கடமாக அசடு வழிந்து...) ஹ்ம்ம்.... இன்றும் மழை வந்தால் ஒரே உதறல்தான் - முடிந்தவரையில் வெளியில் மாட்டிக்காம பார்த்துக்கொள்வேன்! தூரத்தில் வானத்தில் ஒரு துளி மேகம் என்றால் அம்மா குடையில்லாமல் வெளியே நகரமாட்டேனே!

மற்றொரு அனுபவம் - சென்னைக்கு வந்த புதிதில், சமையலறையில் கிரைண்டரைப் போட்டுவிட்டு மும்முரமாக எகனாமிக் டைம்ஸ¤க்கு அன்றைக்கு கொடுக்க வேண்டிய கட்டுரையில் மூழ்கி, கிரைண்டர் போட்டதையே மறந்து, அது சூடாகி, பற்றி எரிந்து குபுகுபுவென்று எரிந்து புகை வீடெல்லாம் நிரப்ப, மெள்ள நான் வேலை செய்து கொண்டிருந்த அறையில் "வாசனை" வரும்போது, 'என்ன இது பக்கத்து வீட்டில் என்ன செய்கிறார்கள்... ஏதோ எரியற வாசனை வருதே என்று "யோசித்து" இன்னும் சில நிமிடங்கள் கழிந்து வாடைத் தாங்காமல் வெளியே வந்தால் - அய்யோ கடவுளே இதென்ன... எங்கேயிருந்து இப்படி நெருப்பு என்று தவித்து - ஓடிப்போய் பார்த்து - உடனே பயந்து சமையலறையைவிட்டு வெளியே வந்து நின்று - ஒரு கணம் என்ன செய்வது ஸ்தம்பித்து போய் ( அதன் அர்த்தம் அன்றுதான் முழுமையாகப் புரிந்தது) உடனே சுதாரித்துக்கொண்டு - தீவிரமாக மனக்கணக்கு போட்டேன் - ஆபத்து என்றால் முதலில் பாதுகாக்கப்படவேண்டியது உயிர் - அய்யோ - உள்ளே என் ஒன்றுவிட்ட பெரிய மாமனார் ( 80 சொச்சம் வயது) தூங்குகிறாரே... ஓடி அவரை எழுப்பி - வெளியே நிக்கவைத்துவிட்டுவிட்டு பக்கத்துவீடுகளில் காலிங் பெல் அடித்து "நெருப்பு நெருப்பு" என்று சப்தம்போட்டுவிட்டு - மீண்டும் சமையலறை ஓடி வந்து கிரைண்டர் ஸ்விட்சை அணைக்கச் சென்றவள் - என்றைக்கோ செய்திருந்த புண்ணியத்தில் அதைத் தொடாமல், நகர்ந்து வாசலில் மெயினை முதலில் அணைத்துவிட்டு - அதற்குள் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒருவர் ஒருவராக வந்து வாளி வாளியாகத் தண்ணீர் பிடித்து அணைத்து - தடுமாற்றத்தில் தீயணைப்புக்கு போன் செய்வதாக நினைத்துக்கொண்டு 100ம் நம்பருக்கு ( அது அவசரப் போலீஸ் இல்லையோ) போன் செய்து - தீயணைப்பு நம்பர் சமயத்தில் வேலை செய்யவில்லை என்று திட்டிக்கொண்டு நடுவில் கணவர் ஆபீஸ், நண்பர்கள் என்று கூப்பிட்டு அவர்களை தீயணைப்பு அலுவலகத்துக்குப் போன் போடச்சொல்லி ( நெருப்பு அணைந்த பின் வந்தனர்) - ஹ்ம்ம்.. நிகர லாப, நஷ்டம் - கணவரும், துபாயிலிருந்து வந்திருந்த என் கணவரின் ஒன்று விட்ட சகோதரனுமாக சேர்ந்து கன்னங்கரேலென்று புகை படிந்த அறைகளைக் கழுவியது; என் முழங்கால் வலி அதிகமானது; நெருப்பு பற்றிய கிரைண்டர் இருந்த மேடைக்குக் கீழே காஸ் சிலிண்டர் வெடிக்காமல் பேராபத்திலிருந்து தப்பியது நிச்சயம் கடவுளின் குறுக்கீடு என்று என் நம்பிக்கை இன்னும் ஆழமானது; கிரைண்டரின் முழு உருவமும் மறைந்து இரண்டு கற்கள் மட்டும் நின்றது; கொசுறாக, அருகில் இருந்த மர ஸ்டேண்ட் கருப்பு பொடியாக நின்றது.

அடுப்பில் வைத்துவிட்டு வேறு வேலையில் மூழ்கும் சாதனையில், குழம்பு வைக்கும் கல்சட்டியை, குழம்பு வற்றிக் கல் இரண்டாக உடையச் செய்ததும் ( அடுப்பில் வைத்துவிட்டு, டில்லி லஜ்பத் நகர் மார்கெட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வரும் வரைக்கும் குழம்புடன் சேர்ந்து கல்லும் கொதித்துக்கொண்டிருந்தது) ரசம் வைக்கும் ஈயச்சொம்பை, ஒரு மணி நேரம் கழித்து வந்து அடுப்பின் அடியிலிருந்து 10 கிராம் அளவு ஈயமாக எடுத்த அனுபவமும் உண்டு. ( அய்யோ, ரசச் சொம்பைக் காணோமே.. என்ற தேடல் வேறு...)என் அடுப்பில் பாலை வைத்துவிட்டு - யார் வீட்டிலோ பாலைத் தீய விடுகிறார்கள்; வாசனை வருகிறது என்று வேறு வேலையில் மூழ்கியிருந்த இருந்த 'சாதனை'யும் உண்டு!

இனி, நான் அழைக்க விரும்பும் எட்டு பேர்..... மன்னிக்கவும் ஒன்பது பேர்..... யாராவது முன்னாலேயே எட்டு போட்டிருப்பாங்களோ அல்லது யாராவது தன்னடக்கமா மறுத்துவிடுவார்களோ என்ற நினைப்பில் ஒரு நம்பர் அதிகமா கூப்பிட்டு விட்டேன்!! இன்னும் எட்டு பேர் அழைக்க ஒரு லிஸ்ட் இருக்கு - வேறு யார்கிட்டவாவது அவங்க மாட்டறாங்களான்னு பார்க்கலாம் :-)

மாலன்
பாலாஜி பாரி
தாரா
நாராயண்
தருமி
தமிழ் சசி
செல்வராஜ்
மீனாக்ஸ்
தாணு

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்