Monday, May 28, 2007

"ஹிட்ச் ஹைக்கர்" - புத்தகம்

பல ஆங்கில வார்த்தைகளுக்கு பொருத்தமாக தமிழ் வார்த்தை கிடைக்காது திண்டாடுவோம். அப்படித்தான் ஹிட்ச் ஹைக்கர் - என்ற வார்த்தைக்கு தமிழில் என்ன என்று சில சமயம் யோசித்து இருக்கிறேன்.

வழிப்போக்கன்? பாதசாரி? மனம் போனபடி பயணிக்கும் பயணி? ஓசி சவாரி??
எந்த வார்த்தையைப் போட்டால் சரியாக இருக்கும் என்று புரிந்ததேயில்லை.

ஆனால் லண்டனில் வழக்கறிஞராக இருக்கும் தமிழர் வினோத் ஜியார்ஜ் ஜோசப் எழுதிய "ஹிட்ச் ஹைக்கர்" ( Hitchhiker - by, Vinod George Joseph) என்ற நாவலைப் படித்தவுடன் ஒரு புது வார்த்தை தோன்றியது.

"கிடைத்த வாகனத்தில் சவாரிக்கும் பயணி!"

கச்சிதமாக ஒரு வார்த்தை கிடைக்காவிட்டாலும் இந்தக் கதையின் நாயகனைப் போல் பல மதங்களின் ஆக்கிரமிப்பில் மாட்டிக்கொண்டு தமக்கென்று ஒரு பாதையில்லாமல் வாழ நேருபவர்களை இப்படிக் குறிப்பிடலாம் என்று தோன்றியது.

கதையின் களம் தமிழகம் - ஜாதிகள் என்னும் நதிகள் சங்கமம் ஆகாமல் தனித்தனியே பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலை. இந்துவாக இருந்து கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பெற்றோர்கள் - தந்தை ஒரு சர்ச்சில் வாட்ச்மேன். சர்ச்சின் உதவியால் மகன் எபனேசர் பொறியியல் கல்லூரியில் படித்து மென்பொருள் வல்லுனராக உயருகிறான்.

கல்வியால் வாழ்க்கை நிலை உயர்ந்தாலும் சமூகத்தில் அவன் ஜாதியின் கண்களாலேயேப் பார்க்கப்படுகிறான். உயர்ஜாதி இந்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காயத்ரிக்கு அவன் மேல் சுரக்கும் பரிதாபமும், அவளுடைய தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளும் அவளுள் அவன் மேல் காதல் எனும் பிரமையைத் தோற்றுவிக்கின்றன. ஜாதியின் காரணமாக அவனை எதிர்க்கும் தன் குடும்பத்தை மீறி அவனைத் திருமணம் கொள்வதன் மூலம் தன் கொள்கைப்பிடிப்பை நிலை நாட்டலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அவளைக் கைப்பிடிக்கவென்றே மீண்டும் இந்துமதத்திற்கு மாறும் எபெனேசர் அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறான்.

புகழேந்தியாக மாறிய எபனேசரைத் தான் காதலிக்கவில்லை; எனவே அவனைத் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறாள். ஆனால் சர்ச் புகழேந்தியை மீண்டும் எபனேசராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறது.

ஆனால் எபனேசர் என்கிற புகழேந்தி இப்போது மதங்களுக்கப்பாற்பட்ட ஒரு சாதாராண மனிதனாக வாழ முடிவு செய்து மதங்களின் பிடியிலிருந்து வெகு தூரம் ஓடிவிடுகிறான்.

இதுதான் கதை.

பாத்திரப்படைப்பு மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப பகுதிகளில் எபனேசரின் பள்ளி மற்றும் வளரும் பருவங்களை விவரிக்கும் விதமாகட்டும் பின்னால் காயத்திரி அவள் குடும்பம், கொள்கைகள் என்று ஆழமான சிந்தனைகளை விவாதிக்கும் இடங்களாகட்டும் மெல்லியதாக நிலவும் ஒரு யதார்த்தம் நம்மைக் கதையுடன் ஒன்ற வைக்கிறது. இந்தக் கதையைப் படிக்கும் தமிழகத்தில் வளர்ந்த தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் ஆங்காங்கே தங்கள் பழைய நினைவுகளை நினைவுகூருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பாவனைகள், செயற்கையம்சங்கள் எதுவும் கலக்காத தெளிந்த நீரோடைபோல் செல்லும் எளிய நடை, நம் அடுத்தவீட்டில் நடப்பவற்றை பார்ப்பதுபோல் சுவாரசியமாகவும், யதார்த்தமாகவும் கொண்டுவந்து நிறுத்துகிறது.

ஆரம்ப கால - பள்ளி பருவ நிகழ்ச்சிகளை சற்று குறைத்து இருக்கலாம். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

மற்றபடி ஆழமான கருத்தைச் சொல்லும் எளிமையான கதை.

பதிப்பாளர்:

Books for ChangePrice - Rs.350 - US$ 22.
www.booksforchange.net

2 comments:

Radha Sriram said...

looks like an interesting one.thanks for the intro

Radha

Aruna Srinivasan said...

ராதா,

கதையைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல். பொதுவாகவே நமக்குத் தெரிந்த களம் என்றால் ஒரு சுவாரசியம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தவிர, நாம் ரசித்தவை / ரசிக்காதவை பிறர் கருத்தில் எப்படி வெளிப்படுகிறது என்று அறியும் ஆவல். சினிமா பார்த்துவிட்டு வந்து பின்னர் விமரிசனம் படிப்பதுபோல :-)