Friday, April 13, 2007

கேள்விகள் ஆயிரம்

இந்த வார விகடனில் மதன்:

கேள்வி: ரவீந்திரநாத் தாகூரைவிட வீறுகொண்ட தேசப்பற்றுடன் எழுச்சி மிக்க பாடல்களை எழுதிய பாரதியார், தாகூரைப்போல இந்திய முழுவதிலும் புகழ் பெற முடியாமைக்குக் காரணம் என்ன?

பதில்: தயவுசெய்து மன்னியுங்கள்...புகழைப் பொறுத்தவரையில் தாகூரோடு ஒப்பிட்டால், 'பாவம், பாரதி' என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இறந்தபிறகு புகழ் அடைந்தவர் பாரதி. இருந்தபோதே புகழ் பெற்றவர் தாகூர். காந்திஜி, நேரு மட்டுமல்ல... உலகளாவிய இலக்கிய மேதைகள் எஸ்ரா பவுண்ட், யீட்ஸ், ரோமேய்ன் ரோலண்ட், ரஷ்ய இலக்கிய மேதை பாஸ்டர்நாக் ( நோபல் பரிசு வாங்கியவர்) போன்றவர்களெல்லாம் தாகூருக்கு நெருக்கமானவர்கள். ...............ரஷ்ய மொழியில் தாகூரின் எழுத்துக்களை மொழி பெயர்த்தவர் பாஸ்டர் நாக்! நம்முடைய 'ஜன கண மன...' மட்டுமல்ல, 'அமர் ஸோனார் வங்காள..' என்று துவங்கும் அவருடைய கவிதையை தேசீய கீதமாக பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டது. ஆக இரண்டு நாடுகளுக்கு தேசீய கீதம் எழுதியவர் தாகூர் மட்டுமே! 1930 ல் ஐன்ஸ்டீனும் தாகூரும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள். புகழ் பெற்ற அந்த உரையாடலை 'நியூயார்க் டைம்ஸ்' முழுப்பக்கம் வெளியிட்டது. ஏழு முறை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் செய்தார் தாகூர் அந்நாட்டுத் தலைவர்களெல்லாம் அவருக்கென்று நேரம் ஒதுக்கினார்கள்..................... தாகூருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உச்சக்கட்டம்! தமிழ் மண்ணில் பிறந்து வாடிய பாரதி எங்கே? இதற்காக நாம் வெட்கப்பட வேண்டாமா?

பத்திரிகையில் உள்ள பதில் முழுக்க இங்கே பதியவில்லை. நடு நடுவே புள்ளிகளுடன் இடைவெளிவிட்டுப் பதிந்துள்ளேன்.

பாரதியார் இருந்தவரையில் அனேக சிரமங்கள் அனுபவித்தார் என்பதும்; ஏழ்மையில் இறந்தார் என்பதும்; என்பது மதன் சொல்வதுபோல் நாம் வெட்கப்படும் - கசக்கும் உண்மை.

இன்றும் நம்மில் பலர் பல திறமைகளோடு குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார்கள். ஒரு சிறிய வட்டத்தை மீறி அவர்கள் திறமை வெளியுலகுக்குத் தெரிவதில்லை.

பல நாட்களாக என்னுள் ஓடும் கேள்விகள் மீண்டும் இன்று தலைதூக்கின.
தமிழர்கள் ஆகிய நாம், நம்முள் இருக்கும் திறமையானவர்களைப் பாராட்டி வெளி உலகுக்கு அறியச் செய்வதில் தவறுகிறோமா? வெளியுலகுக்கு இருக்கட்டும்; திறமையானவர்களை விசாலமான மனதுடன் நமக்குள்ளேயே கூட அங்கீகரிக்கவும் தயங்குகிறோமோ? அல்லது, நமக்கு நம்மைப் பற்றி / நம் திறமைகளைப் பற்றி 'மார்கெடிங்' செய்யும் திறமை அவ்வளவாக போறாதோ? நமக்கு மக்கள் தொடர்புத் திறமை ( Public Relations) குறைச்சலோ? அல்லது நாம் அவ்வளவு தன்னடக்கம் உள்ளவர்களா? நம் திறமைகள் பரந்த அளவில் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று முனையாமல் இருக்கிறோமோ? என்றுமே குடத்திலிட்ட விளக்காக இருப்பதில் நமக்கு திருப்தியோ?

மதனின் பதில் மட்டுமல்ல, சில நாட்கள் முன்பு மற்றொரு செய்தியும் இந்தக் கேள்விகளைக் கொண்டு வந்து என் முன் நிறுத்தியது. சமீபத்தில் கூகுள், ஹிந்தி Transliteration வசதியை டூல் பாரில் கொடுத்துள்ளது. அட, நாம்தான் முரசு அஞ்சல், கலப்பை, சுரதா என்று சளைக்காமல் பதிந்து கொண்டு இருக்கோமே என்கிறீர்களா? ஆனாலும் பிளாக்கரில் தமிழை ஏன் காணோம்?!! இரண்டு வருடம் முன்பு இந்திய மொழிகளில் தமிழில்தான் அனேக வலைப்பதிவுகள் இருந்ததாக ஞாபகம். இன்றைய நிலை தெரியாது. ஆனாலும் பன்மொழி வலைப்பதிவுகளில் கவனம் செலுத்தும் கூகிள் தமிழை மறக்கலாமோ? அல்லது தினம் ஒரு புது ஐடியாவோடு நம் முன் நிற்கும் கூகிளில் ஒரு தமிழர் கூட இல்லையா? - அல்லது..... சரி; முந்தைய பாராவை மறுபடி படியுங்கள்.

Disclaimer 1: தாகூரின் பெருமையை / திறமையைப் பற்றி இங்கே மாற்றுக்கருத்து இல்லை. நம்மை நாமே குறைவாக மதிப்பிடும் தாழ்வு மனப்பான்மையும் இல்லை. இது ஒரு சுய அலசல் முயற்சி மட்டுமே.
Disclaimer 2: ஒரு வேளை பிளாக்கரில் தமிழ் transliteration வசதி இருந்து எனக்கு அது தெரிந்திராவிட்டால், கடைசி பாராவை மன்னிக்கவும். இங்கே அதைக் குறிப்பிட்டால் நானும் தெரிந்துகொள்வேன். பிறருக்கும் உபயோகமாக இருக்கலாம்.

Wednesday, April 04, 2007

ஏப்ரல் 1

எங்கே நிஜத்தைச் சொல்லுங்க... யாரெல்லாம் இதைப் படிச்சுட்டு வீட்டுக்கு அட்டைப் பெட்டி தினம் தினம் வரும்'னு நம்புனீங்க?


அடக் கடவுளே..... நான் நம்பிட்டேங்க :-) ஹ்ம்ம்... போட்டிப் போட்டுக்கொண்டு இந்த இணைய ஜாம்பவான்களெல்லாம் வியாபாரம் செய்ய புதுசு புதூசா உத்தியைக் கொண்டு வராங்களா... நானும் ஒரு பொட்டியை வரவழைக்கலாமா'ன்னு உண்மையிலுமே யோசனை செய்ய ஆரம்பித்து விட்டேன் !

யார் கண்டா? இதுவும் கூடிய சீக்கிரம் உண்மையானாலும் ஆகலாம்....! போற போக்கிலே ஏப்ரல் 1 ந் தேதி விளையாட்டுக்கு விஷயமே இல்லாமல் எல்லாமே சாத்தியம்'ங்கற நிலை வந்துடும் !