Monday, January 30, 2006

கவனித்தது, பாதித்தது, ரசித்தது.

கவனித்தது

மகாத்மா காந்தியின் நினைவு நாள். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான காந்தி சமாதியில் அஞ்சலி. நாற்காலிகளின் முன் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி மன்மோஹன் சிங் வைஷ்ணவ ஜனதோ மற்றும் ரகுபதி ராகவ ராஜாராம், பாட்டுகளுக்குக் கூடவே பாடியது, வாயசைப்பில் தெரிந்தது. கூடவே, அவர் அருகே இருந்த மூதாட்டி நன்றாகவேத் தூங்கிக்கொண்டிருந்ததையும் காமிராப் பார்த்துவிட்டது. இந்த மாதிரி பொது நிகழ்ச்சிகளில் வருபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அல்லது காமிராக்காரர்கள் தங்கள் லென்ஸைக் கொஞ்சம் அதட்டி வைக்க வேண்டும். கன்னா பின்னாவென்று சுற்றக்கூடாதென்று.

நிகழ்ச்சியில் அதிகம் கூட்டம் காணோம். அதுவும் விவிஐபிகள் உட்காரும் இடத்தில் தரையில் வெண் மெத்தைப் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இல்லாதிருத்தல் மூலம் சிறப்பு கவனத்தை ஈர்த்தவர் சோனியா காந்தி. ( Conspicuous by absence). இந்தக் காந்தி அந்தக் காந்தியை எப்படி மறந்தார்? காந்திஜி காங்கிரஸ் அமைப்பின் தூணாக, மக்களிடையேத் தூண்டுகோலாக / தேசத்தின் தந்தையாக இருந்தாரே தவிர எந்தப் பதவியிலும் கடைசிவரை இருக்கவில்லை. காங்கிரசில் அவர் சாதாரண உறுப்பினராகக் கூட பதிந்திருக்கவில்லை என்கிறது சரித்திரம். அதனால் protocol எதுவும் இல்லை என்பதால் இன்றைய காங்கிரஸ் தலைவர் அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லையோ?

ம்ஹ¤ம். எங்கேயோ இடிக்கிறது. தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்கிற ஒருவர் தேசத்தின் தந்தையாகக் கருதப்படுபவரின் நினைவு அஞ்சலியில் பங்கு பெற வேண்டாமா?

பாதித்தது

கேரளாவில் பெண்கள் நிறைய முன்னேறியுள்ளார்கள் என்று சென்ற வாரம் சசி தாரூர் பத்தியில் எழுதியதை ஆட்சேபித்துப் பலர் அவரைக் கேள்விக்கணைகளில் மாட்டுகிறார்கள். பெண்கள் தனியாக நடமாடமுடியாத அளவு பெண்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகிறது இங்கே. என்ன முன்னேற்றம் வாழ்ந்தது?" என்கிற ரீதியில் மனதை உருக்கும் விவரங்கள்.

ரசித்தது

என்டிடிவியில் இருந்து வெளியேறி ராஜ்தீப் சர்தேசாய் CNN - IBN ல் சேர்ந்தபின் " சபாஷ், சரியான போட்டி.." என்று கைத்தட்டுகிறார் ஊடகங்கள் பற்றி பத்தி எழுதும் செவந்தி நைனான்.

"...போட்டிப் போட்டுக்கொண்டு சுவாரசியமான நிகழ்ச்சிகளை வாரி வழங்குகிறார்கள். இவ்வளவு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை ( Constructive programmes) ஒரே சமயம் பார்த்து அலுத்துப்போய், எங்காவது Zoom சேனலுக்குப் போய் பூஜா பேடி, குட்டை ஆடை அணிந்து கொண்டு அரசியல்வாதிகளையும் போலீஸ்காரர்களையும் பேட்டி காணுவதைத் தேடிப்போய்விடுவோம் போலிருக்கு - ஒரு மாறுதலுக்கு" என்று சதாய்க்கிறார்.

Saturday, January 28, 2006

2020 பார்வை

இன்று CNN IBN ல் ஒரு நிகழ்ச்சிப் பார்க்க நேர்ந்தது. All the President's Children.

குடியரசு தினத்தை ஒட்டி, ஜனாதிபதி அப்துல்கலாமுடன் நிறைய பள்ளி மாணவர்களை அழைத்துப் பேச வைத்துள்ளார்கள். ஸ்ரீநகர், கௌஹாத்தி, போபால் என்று பல இடங்களிலும் வீடியோ தொடர்பு ஏற்படுத்திப் பேச வைத்துள்ளார்கள். சுவாரசியமாக இருந்தது.

மாணவர்களோடு உரையாடுவது எப்போதுமே ஜனாதிபதிக்குப் பிடித்த விஷயம் என்பதை அவரே பல முறை கூறுவது வழக்கம். தில்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள பரந்த இடத்தில் மேடைப் போட்டு இந்த இளையத் தலைமுறைக் கூட்டம். நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. மாணவர்கள் சரமாரியாகக் கேட்டதில் சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் கூறிய ஒரு பதில்: (கேள்வி என்ன என்பது சரியாக நினைவில்லை) " அரசியல் என்பது கொஞ்சம் அரசியல் - நிறைய நாட்டுக்கான வளர்ச்சி வேலைகள் என்று இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் 30 சதவிகிதம் அரசியலிலும், பாக்கி 70 சதவிகிதம் வளர்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் என்றவர் அதோடு நிறுத்தாமல், தொடர்ந்து "ஆனால் நிறைய அரசியலும் வளர்ச்சி வேலைகள் குறைச்சல் சதவிகிதம் என்று இருந்தார்களென்றால்...." என்று சிரித்தபடியே, கண்களில் குறும்பும் மிளிர, இழுத்தார். Tongue in Cheek Observation? :-)

ஒரு மாணவர் கேட்டார். ஜனாதிபதியான பின் நீங்கள் நினைத்தவற்றை நிறைவேற்றியுள்ளீர்களா? அப்துல்கலாம்: " இரண்டு விஷயங்கள் திருப்தியாக நிறைவேறியுள்ளன. ஒன்று என் 2020 திட்டப்படி இந்தியா வளர்ந்த நாடாக ஆக வேண்டும் என்ற என் கனவை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இரண்டாவது, நிறைய இளஞர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். இளைஞர்களிடம் நான் நம்பிக்கை வைப்பதற்கு மூன்று காரணங்கள். ஒன்று, அவர்களுக்கு பொதுவாகவே நம்பிக்கை அதிகம். செய்ய முடியும் என்ற நம்பிக்கை. இரண்டாவது, அவர்கள் மனதில் இன்னும் நிறைய பாதிப்புகள் ஏற்படாமல், மனதில் அதிகம் பாரபட்சம் ( Bias) இல்லாமல் இருக்கிறார்கள். மூன்றாவது அவர்களின் உற்சாகம். முன்னேற்றத்திற்கு உற்சாகம் மிக அவசியம். அது இளைஞர்களிடம் இருக்கிறது." கேட்க நிறைவாக இருந்தது.

இன்னொரு முக்கியமான கேள்வியும் பதிலும். ஒரு மாணவிக் கேட்டார். "பலவிதக் கலாசாரங்கள் வெளியிலிருந்து எங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்போது எப்படி இந்தியா தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு உலக அரங்கில் முன்னேறவும் முடியும்?" ஜனாதிபதியின் பதில் சற்று ஆழமாக, வித்தியாசமான அவதானிப்பாக இருந்தது. " நீங்கள் எப்படிபட்டக் கலாசாரத்தில் சூழ்ந்திருந்தாலும் நம் மரபணுவிலேயே ஒரு நெறி இருக்கிறது. There is a genetic value in our system. வெளியில் - நடை உடைகளில் எவ்வளவுதான் மாறினாலும், இந்தியர்களுக்கு என்று இருக்கும் இந்த மரபணு நெறிகள் நமக்கு சரியான / வெற்றிகரமானப் பாதையை வகுக்கும்."

Genetic value system ? சிந்திக்கத் தூண்டிய ஒரு கோணம்.

ஊழலை ஒழிக்க அவர் சொல்லும் வழி: " 50 மில்லியன் வீடுகள் / குடும்பங்கள் இருக்கின்றன என்று வையுங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உங்களைப் போன்ற குழந்தைகள் தங்கள் அப்பா /அம்மாவிடம் " லஞ்சமே வாங்காதீர்கள்" ஊழல் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தால் பெரியவர்கள் மனம் திருந்த மாட்டார்களா? என்ன குழந்தைகளா, வேண்டுகோள் விடுப்பீர்கள்தானே?" என்று கேட்டவுடன், வழக்கம்போல் மாணவர்கள் கோரஸாக ஆமாம் போட்டார்கள். குழந்தைகள் என்றில்லை. சில சம்யம் பெரியவர்கள் கூட்டத்திலும் இப்படி கேள்வி கேட்டு கோரஸாக பதில் வாங்கும் அவரது ஸ்டைல் நமக்கு இன்று நன்றாகவே பழகிவிட்டது.

விளம்பர இடைவேளையில் அப்துல்கலாம் Quotes காண்பித்தார்கள். என்னைக் கவர்ந்த ஒன்று: "சிந்தித்தல் என்பது உங்களுடைய முதன்மையான முதலீடாக / சொத்தாக இருக்க வேண்டும். சிந்திக்காமல் செயல்படும் எந்தத் தனிமனிதரும், எந்த நிர்வாகமும் முன்னேறவே முடியாது."

இளைஞர்களிடையேயும் அப்துல்கலாம் என்றால் ஒரு அபிமானம் இருக்கவே செய்கிறது. அவரது வார்த்தைகள் மட்டும் இளையத்தலைமுறையினரிடம் முழுமையாக சென்றடையுமானால் 2020 வருடத்திற்குள், 2020 பார்வை சாத்தியமே.

Friday, January 27, 2006

அன்றும் இன்றும்

இதைத்தான் - அல்லது இது போன்று ஏதாவது ஒரு கட்டுப்பாட்டைத்தான் - அன்றே எதிர்பார்த்தேன்.

ஆனால் நிர்வாகிகள் என்ன செய்ய முடியும் என்று அன்று பலர் வாதிட்டனர். ஒரு சிலர் புரியாமல் பேசுகிறேன் என்ற தொனியில் கூட கருத்து வெளியிட்டனர். இந்தக் குறைகளைத் தமிழ்மணத்திடம் முறையிடுவதில் அர்த்தமில்லை என்றார்கள்.

இன்று I stand vindicated.

சுட்டிகளில் உள்ள முழு விவாதங்களையும் படியுங்கள். அன்றைய நிலை விளங்கும்.

Monday, January 16, 2006

வடிகால்கள்......??

உஷாவின் பதிவில் இருந்த கொசுவத்திச் சுருள், எனக்குள்ளும் நிறையப் பழைய ஞாபகங்களைக் கிளப்பிவிட்டது. பூடானின் உறைபனியில் வராந்தாவில் கைகள் உறைய உறையக் கனு வைத்துவிட்டு மறு நாள் எடுக்கப் போகும்போது பனிக்கட்டியாக உறைந்த இலைகளை எடுக்க முடியாமல் போனது... ஆப்பிரிக்காவில் பத்திரிகைக் கட் அவுட் பொம்மைகள் வைத்துக் கொலு வைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஸ்காட்லாந்த் "மாமிக்கு" தாம்பூலம் கொடுத்தது, என்று வரிசையாக ஏதேதோ நினைவுகள். ஆனால் இவற்றின் ஊடே மனசில் உஷாவைப் போல் கேள்வி. எப்பாடுபட்டாவது, பழக்கத்தை விடாமல், சம்பிரதாயமாகவேனும் நம் மனதில் பண்டிகைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறதே, ஏன்? பண்டிகைகள் கொண்டாடவில்லையென்றால் நம் சம்பிரதாயங்களிலிருந்து வழுவுகிறோம் என்று ஒரு உறுத்தலா? பழக்கங்களை விட்டுவிட்டால், நாம் பிறந்த வேரின் Identity யை இழந்து விடுவோம் என்ற பயமா?

புலம் பெயர்ந்தவர்களின் அடுத்தத் தலைமுறையினரின் பண்டிகைக் கொண்டாடும் மனோபாவம் எப்படியிருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.... பண்டிகைகள் கொண்டாடுவது ஒரு வாழ்க்கை முறை. ஒரே மாதிரியாக இல்லாமல், ஒரு சின்ன எதிர்பார்ப்பு, புத்தாடை, - உணவு, சுத்தம் செய்தல், அலங்கரித்தல் என்று சின்ன சின்ன வேலைகள் வாழ்க்கையில் கொஞ்சம் மாறுதலைக் கொடுக்கின்றன. ஒரு விதத்தில் இது ஒருப் புத்துணர்வையும் கொடுக்கலாம். இந்த மாதிரி சின்ன சந்தோஷங்களை இந்தத் தலைமுறையினர் இழக்கிறார்களா - அல்லது இன்றையக் கால ஓட்டத்தில் - மாறுதலுக்கு பல வடிகால்கள் இருக்கும்போது, பண்டிகைகளின் மூலம் புத்துணர்வும், மாறுதலும் தேவையில்லை என்று தோன்றுமோ?

கருத்துக்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 11, 2006

பதிக்க ஒரு விஷயம்

எதிரில் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிறுப்பு ஒன்றிலிருந்து யாரோ சற்று உரக்க பேசுவது கேட்டது. இன்னொரு குரல் கேட்கவில்லை. சரி யாரோ தொலைபேசியில் பேசுகிறார்கள் என்று எண்ணினேன். என் வேலையெல்லாம் முடிந்து சுமார் இரண்டு மணி நேரம் பொறுத்து அறை பக்கம் வந்தபோது இன்னும் அந்த குரல் அதேபோல் கேட்ட வண்ணம் இருந்தது. இத்தனை நேரம் தொலைபேசியில் பேச்சா என்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது எதிர் மாடியில் உள்ளவர் ஒரு கண்னி முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. ஓ.. .., இணையத்தில் வெளி நாட்டில் இருகும் உறவினருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்து போனது.
சென்னை விரைவில் ஒரு வயதானவர்கள் வசிக்கும் நகரமாகிவிடும் என்று ஒரு நண்பர் ஜோக்கடித்தார். அவர் அப்படி சொல்வதற்கு காரணம் வெளி நாடுகளில் குடியேறும் இளைஞர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே இங்கேதான் அதிகம்.

பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்க இங்கே பெற்றோர் இப்படி தினம் ஈ மெயில் இணையத் தொலைபேசி என்று நாளை ஓட்டுவது சகஜமாகிப் போன ஒன்று. று மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் பிள்ளைகளிடம் று மாதம் இருந்துவிட்டு வருவார்கள். நடுவில் பிள்ளைப் பேறு செய்ய என்று அம்மாக்கள் வேறு மாற்றி மாற்றி பெறு கால பணியில் செல்வதுமுண்டு. ( அமெரிக்க தூதரகத்தில் இதற்கு “பேறு கால விஸா” என்றே வேடிக்கையாக சொல்வதுண்டாம்.)

ஆனால் வெளி நாட்டில் வெகு காலம் இருக்க பலருக்குப் பிடிக்கவில்லை. “அங்கே ஏதோ தங்ககூண்டில் இருப்பஹ்டு போல் உள்ளது. எல்லோரும் வேலைகு போன பின் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் அங்கே ஒரு fossil அதாவது உறைந்த உயிரினம் மாதிரி. ஏதோ அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக உட்கார்ந்திருகும் உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பேச நிறைய மனிதர்கள் வேண்டும். அதான் இங்கே வந்தால்தான் எனக்கு சரியாகிறது”. என்று சொல்பவர்கள் பலர்.
இதில் இன்னொரு கோணம் என்னவென்றால் வெளி நாட்டிலேயே பல வருடம் இருப்பவர்களுக்கு இங்கிருந்து போகும் பெற்றோர் அல்லது உரவினருடன் அதிகம் பகிர்ந்து கொள்ள ஒன்றுமிருப்பதில்லை. அவரவர் தங்கள் வாழ்க்கை முறையில் இருந்து விடுவதால் என்றோ சேரும்போது சிந்திக்கும் சிந்தனையில் வாழ்முறையில் என்று நிறைய இடைவெளி வந்து விடுகிறது. இதைத் தவிர்க்க ஒரு முக்கிய வழி தொடர்ந்து ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருக்க வேண்டும். தொலைபேசியில் இன்று பேசுவது சுலபமாகிவிட்டது. அடிக்கடி எண்ணங்களையும், தங்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், புகைப்படங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும்போது உறவுகளில் ஒரு சங்கடமான இடைவெளி விழாமல் இருக்கும்.

பின் குறிப்பு:

எப்போதோ எழுதிய ரொம்பப் பழைய பதிவு. ஆனால் புதிதாக வேறொன்று எழுத நேரமில்லை. புதுக் கருவிப்பட்டை, நிரல் துண்டு போன்ற சமாசாரங்களையெல்லாம் நிதானமாகப் படித்துவிட்டு, என் பக்கத்திலும் பொறுத்திய பின் ஒரு சோதனைப் பதிவு பதிக்க விஷயம் தேடினபோது அகப்பட்டது இது :-)

இப்பவும் சரியாகத் தெரியவில்லையென்றால் உதவித் தேட வேண்டியதுதான்.

Friday, January 06, 2006

"கஹானி...."

சில நாட்கள் முன்பு ஒரு கைவேலைகள் மற்றும் கலைப் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்றிருந்தேன். வீட்டிலேயே ஒரு பகுதியைக் கடையாக வைத்திருந்தார்கள். பொருட்களை வாங்கியப் பின் அந்தக் கடையின் சொந்தக்காரர் இன்னொரு பகுதியில் அவர்கள் பொம்மைகளாலும் இதர கைவேலைப் பொருட்களாலும் அமைத்திருந்த ஒரு ராமாயணக் காட்சிக்கு அழைத்துச் சென்று காட்டினார். குட்டிக் குட்டியாக பசுமையான வனமும், மலர்களும், ஆசிரமும் என்று அருமையாக இருந்தது. பெரிதாக ஒரு ஹனுமார் பொம்மை. மிகத் தேஜஸ¤டன் விளங்கிய இருவர் அவரைச் சங்கிலியால் கட்டி இழுத்துக் கொண்டு காட்சியளித்தனர். பின்னால் ஒரு குடிசை வாசலில் இருந்தப் பெண்மணி சீதைப் போலிருந்தது. ராமாயணக் காட்சி என்று அவர் முன்பே சொல்லியிருந்ததால் அந்தப் பெண் பொம்மை, சீதை என்று யூகிப்பதில் சிரமமில்லை. உடனே சட்டென்று மற்ற இரு ஆண்களும் ராம லக்ஷ்மணன் என்று மனம் யோசிக்கும்போதே சற்று நெரடியது. ராமாயணத்தில் ஹனுமாரை ராம லக்ஷ்மணர்கள் கட்டிப் போட்டதே கிடையாதே? இதென்ன கதை என்று தோன்றியது. எங்கள் முகத்தில் இருந்த கேள்விக்கு சிரித்தவாறு அவர் விடையளித்தார். அதெப்படிங்க இவர்கள் ராம லக்ஷ்மணர்களாக இருக்க முடியும்? ஹனுமாரைவிட இந்த உருவங்கள் சிறியவர்களாக இருக்கிறார்கள் பாருங்கள்." என்ற பின் புரிந்தது.

ஓ, இவர்கள் லவனும் குசனும் ! பிறகு கவனிக்கும்போது அவர்கள் பின்னால் ஒரு அலங்கரித்தக் குதிரையும் இருந்தது. அசுவமேதயாகக் குதிரை. சட்டென்று கதைப் புரிந்துவிட்டது. ஆனால் என் கூட வந்த மகனுக்குப் புரிய சற்று நேரம் ஆயிற்று. அவனுக்குத் தெரிந்த ராமாயணம் "அமர்சித்திரக் கதா" போன்ற சிறுவர் கதைப் புத்தகங்கள். ஆனால் பெரும்பாலானக் கதைப் புத்தகங்களில் இதிகாசங்கள் விரிவாக முழுவதும் இருப்பதில்லை.
சிறுவர்களுக்கு ஏற்றப் புத்தகங்களுக்கு இன்றும் பஞ்சம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் இந்தப் பஞ்சம் தமிழில் மிக அதிகம் என்று தோன்றுகிறது. இதிகாசங்களை விட்டால், தற்காலச் சிறுவர்களின் கற்பனைக்கும், ஆற்றலுக்கும் தீனி போடும் வகையில் புத்தகங்கள் அதிகம் கிடையாது. சென்னையில் இப்போது புத்தக கண்காட்சி நடை பெறுகிறது. கடைகளை அலசினால், இந்த நிலையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.

இப்போது இந்தச் சிந்தனையெல்லாம் இங்கே தோன்றக் காரணம், சென்ற வருடம் பாஸ்டனில் தொடங்கப்பட்ட ஒரு சிறுவர் பத்திரிகைப் பற்றி படித்ததுதான். இது, சிறுவர்களுக்காக, சிறுவர்களால், சிறுவர்களைப் பற்றி மூன்று இந்தியத் தாய்மார்களால் தொடங்கப்பட்ட ஒருப் பத்திரிகை. இன்று ஊடகத்துறையில் பலரது ஆர்வத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

" கஹானி" என்ற இந்திப் பெயரில் வரும் இந்தப் பத்திரிகையில் பெரும்பாலும் சிறுவர்கள் எழுதுகிறார்கள். பெரியவர்களும் சிறுவர்களுக்காக எழுதுகிறார்கள்.

வெளி நாடுகளில் வாழும் /வளரும் பல குழந்தைகள் பல்வேறு கலாசாரங்களுக்கிடையே குழம்பாமலும், வெளி நாட்டு சூழலில் தங்கள் பின்னணியைக் கண்டு கலங்காமல் யதார்த்தமாக வளரவும் உதவும் எண்ணத்துடன் இந்தப் பத்திரிகைத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையை இணையத்தில் மேலாக ஒரு கண்ணோட்டம் விட்டேன். சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர் புத்தகங்கள் எழுதும் பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளார்கள். ஹாரிப்பாட்டர், எனிட் பிளைட்டன் போன்ற புத்தகங்கள் சிறுவர்கள் கவனத்தை ஆட்க்கொண்டிருக்கும்போது, இது போன்ற பத்திரிகைகள் நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான முயற்சி.


வெளி நாட்டில் வாழும் தமிழ்ச் சிறுவர்களுக்காக, தமிழில் இது போல் என்று, யார் தொடங்கப்போகிறார்கள் !??

தவிர, இங்கேயும் - தமிழ்நாட்டிலும் - சிறுவர்கள் புத்தகங்கள் / பத்திரிகைகள் அதிகம் காணோம். எனக்குத் தெரிந்தது கல்கி குழுவினரின் கோகுலம் ஒன்றுதான் பத்திரிகை. அந்தக் காலத்து அம்புலிமாமா என்றோ காணாமல் போய்விட்டது. ஆங்கிலத்திலும் கூட அவ்வளவாகக் காணோம். இன்று விதம் விதமாக தொழில் ரீதியாக, niche - பத்திரிகைகள் - வாகனங்களுக்கு, ரியல் எஸ்டேட், வணிகம் என்று பலவித துறை சார்ந்தப் பத்திரிகைகள் வாளர்ந்து வருகின்றன. பெண்களுக்கு என்று இருக்கும் ரகங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் சிறுவர்களுக்கு என்று / இளைஞர்களுக்கு என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

எதிர்கால சமுதாயத்தின் மீது நாம் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

Sunday, January 01, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
இரவுக்குப் பின்னே விடியல் வராமலேயா போய்விடும்? இதோ இன்னொரு விடியல் :-)

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

மிக்க நட்புடன்

அருணா