Sunday, July 16, 2006

ஜிவி

" மேக் டொனால்டில் வரிசை வரிசையாக பீட்ஸா செய்வதைப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும் ? எவ்வளவு விலை? எவ்வளவு ருசி ..... இந்த ரீதியில்.

ஆனால் இவருக்கு என்ன தோன்றிற்று? நம் ஆஸ்பத்திரியில் இந்த முறையைப் பயன்படுத்தி கண் ஆபரேஷன் செய்து ஏழைகளுக்கு இலவசமாக கண் பார்வை பெற உதவலாமே என்று. விளைவு. மதுரையில் தான் சிறிய அளவில் உருவாக்கிய அந்த கண் ஆஸ்பத்திரியில் இப்படி வேகமாக பெருமளவில் செய்யும் உத்தியைப் பயன்படுத்தி பல ஏழைகளுக்கு இலவசமாக காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தார்.
இத்தனைக்கும் அவர் கண் வைத்தியம் படிக்க ஆரம்பித்தபோது ஆர்திரிடீஸ் நோயால் விரல்கள் பாதிகக்ப்பட்டிருந்தன. ஆனாலும் ஒரு தீர்மானத்தோடு மென்மையான இந்த அறுவை சிகிச்சை செய்ய விரைவிலேயே பழக்கிக் கொண்டுவிட்டார்.

சிங்கப்பூர் ஆங்கில இதழ் ஒன்றிற்காக அவரை 6 வருடம் முன்பு மதுரையில் அவரை நான் பேட்டி காண சென்றபோது அவரது வயது 82. காலை 8 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். அவரது அறையில் காத்துக்கொண்டிருக்கும்போது கதவைத் திறந்து கொண்டு அவர் உள்ளே வரும்போது மணி சரியாக எட்டு. அரை மணி நேரம் என்று சொல்லியிருந்த பேட்டி ஒன்றரை மணி நேரம் நீண்டது. பொறுமையாக லாஸிக் அறுவை சிகிச்சை பற்றி விளக்கியதோடல்லாமல், மேல் விவரங்களுக்கு தான் இணையத்திலிருந்து தினமும் சேகரிக்கும் தகவல்களை உதவியாளரை விட்டு நகலெடுத்து கொடுக்கச் சொன்னார். "காலையில் என் முதல் வேலை இணையத்தைக் குடைந்து சமீபத்தில் என்ன என்ன முன்னேற்றங்கள் இந்த துறையில் இருக்கின்றன என்று பார்ப்பதுதான்." என்று சிரித்தவாறே கூறினார். பேட்டி சம்பந்தமாக முன்னும் பின்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டபோதும் நேரடியாக தானே பதிலளித்த அருமையான மனிதர்.

சில விமர்சகர்கள் அந்த நிறுவனத்தின் அருமையான நிர்வாக முறைகளை கெட்டிக்கார வியாபார உத்தி என்று சொல்வதுண்டு. ஆனால், தன் சகோதரி டாக்டர் நாச்சியார் மற்றும் அவரது கணவர் நம்பெருமாள்சாமி அவர்களுடன் இணைந்து ஆரம்பித்த அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இன்று பல ஏழைகளுக்கு கோவில் என்பதில் சந்தேகமில்லை.

பலரைப்போல எனக்கும் தாமதமாகதான் அவரது மறைவு தெரிய வந்தது. அன்பான டாக்டர் ஜிவி என்கிற ஜி. வெங்கிடசாமி அவர்களை நினைவு கூற இந்த பதிவு. அவரது முழு பேட்டியையும் இங்கே படிக்கலாம்.

பின் குறிப்பு: ஏதோ ஞாபகத்தில் ஜி. வெங்கிடசாமி என்பதற்கு பதிலாக - கோவிந்தசாமி என்று பிழையாக எழுதியிருந்தேன். பிழைக்கு மன்னிக்கவும்