Monday, January 16, 2006

வடிகால்கள்......??

உஷாவின் பதிவில் இருந்த கொசுவத்திச் சுருள், எனக்குள்ளும் நிறையப் பழைய ஞாபகங்களைக் கிளப்பிவிட்டது. பூடானின் உறைபனியில் வராந்தாவில் கைகள் உறைய உறையக் கனு வைத்துவிட்டு மறு நாள் எடுக்கப் போகும்போது பனிக்கட்டியாக உறைந்த இலைகளை எடுக்க முடியாமல் போனது... ஆப்பிரிக்காவில் பத்திரிகைக் கட் அவுட் பொம்மைகள் வைத்துக் கொலு வைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஸ்காட்லாந்த் "மாமிக்கு" தாம்பூலம் கொடுத்தது, என்று வரிசையாக ஏதேதோ நினைவுகள். ஆனால் இவற்றின் ஊடே மனசில் உஷாவைப் போல் கேள்வி. எப்பாடுபட்டாவது, பழக்கத்தை விடாமல், சம்பிரதாயமாகவேனும் நம் மனதில் பண்டிகைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறதே, ஏன்? பண்டிகைகள் கொண்டாடவில்லையென்றால் நம் சம்பிரதாயங்களிலிருந்து வழுவுகிறோம் என்று ஒரு உறுத்தலா? பழக்கங்களை விட்டுவிட்டால், நாம் பிறந்த வேரின் Identity யை இழந்து விடுவோம் என்ற பயமா?

புலம் பெயர்ந்தவர்களின் அடுத்தத் தலைமுறையினரின் பண்டிகைக் கொண்டாடும் மனோபாவம் எப்படியிருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.... பண்டிகைகள் கொண்டாடுவது ஒரு வாழ்க்கை முறை. ஒரே மாதிரியாக இல்லாமல், ஒரு சின்ன எதிர்பார்ப்பு, புத்தாடை, - உணவு, சுத்தம் செய்தல், அலங்கரித்தல் என்று சின்ன சின்ன வேலைகள் வாழ்க்கையில் கொஞ்சம் மாறுதலைக் கொடுக்கின்றன. ஒரு விதத்தில் இது ஒருப் புத்துணர்வையும் கொடுக்கலாம். இந்த மாதிரி சின்ன சந்தோஷங்களை இந்தத் தலைமுறையினர் இழக்கிறார்களா - அல்லது இன்றையக் கால ஓட்டத்தில் - மாறுதலுக்கு பல வடிகால்கள் இருக்கும்போது, பண்டிகைகளின் மூலம் புத்துணர்வும், மாறுதலும் தேவையில்லை என்று தோன்றுமோ?

கருத்துக்களை வரவேற்கிறேன்.

8 comments:

ramachandranusha said...

அருணா, சம்பிரதாயம் மீறக்கூடாது என்பதைவிட, என்னைப் போன்றவர்களுக்கு பழைய நினைவுகளை, சந்தோஷங்களைப் புதுப்பிக்க ஒரு சந்தர்ப்பம். பிள்ளைகளிடம் இதை எதிர்ப்பார்க்க முடியாது. அவர்களுக்கு புது பண்டிகைகள், கொண்டாடடங்கள் உருவாகும்.
நவீனமாக்கல்/ உலகமயமாக்கலின் இன்னொரு பரிணாமம் இது. இதை இழப்பு என்று நாம் சொல்லலாம், அவர்களுக்கு தெரியாது, ஆக இழப்பு அவர்களுக்கு இல்லை.

ஒன்றரை அடி நீளத்துக்கு வெட்டிக்க வேண்டியது :-)
பிறகு வாய் ஓரமெல்லாம் புண்ணாகி திட்டு வாங்குவது. அதனாலோ என்னவோ பற்கள் இன்னும் வலுவாய் உள்ளது. ஆனால் கரும்பு திங்க இயலாது. காரணம் பத்து வருடத்திற்கு முன்பு,
கம்பனியில் இலவசமாய் பற்களை சோதித்தார்கள். அந்த டாக்டர், பின் பல், சொத்தை பிடுங்க வேண்டும் என்று சொல்லி, படு ஸ்ட்ராங்கான பல்லை பிடிங்க முயல, முடியாமல் வாயை நன்றாக திற என்று பாடாய் படுத்தி ஒரு வழியாய் நாலைந்து பீசாய் எடுத்தார். இதில் கொடுமை என்னவென்றால், பல் சொத்தை என்பது அவர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது.

அன்றிலிருந்து கொஞ்சம் அதிக கடுமையாய் எதையாவது கடித்தால் முகத்தின் பக்கவாட்டில் வலி வரும்.

Aruna Srinivasan said...

//உலகமயமாக்கலின் இன்னொரு பரிணாமம் இது. இதை இழப்பு என்று நாம் சொல்லலாம், அவர்களுக்கு தெரியாது, ஆக இழப்பு அவர்களுக்கு இல்லை.//

இதென்னவோ ஓரளவு சரிதான் உஷா. ஒரு விஷயம் தெரியாமலேயே இருக்கும்போது இழப்பு என்பதற்கே அர்த்தமில்லை. ஆனாலும் நம் பார்வையிலேயே பார்க்கும்போதும் உலகமயமாக்குதலின் இழப்பு என்று சொல்வதை விட, எல்லைகளில்லாமல் ஒரு Melting Pot ஆக இன்றைய சமுதாயம் கலந்து விரிகிறது என்று சொல்லலாமோ?

துளசி கோபால் said...

அருணா,

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் வீடுகளில் குறைஞ்சுபோய், கம்யூனிட்டி விழாவா வந்துருமுன்னு நினைக்கிறேன்.
இப்பப் பாருங்க ,எங்க தமிழ்ச்சங்கத்துலே பொங்கல் விழா இந்த சனிக்கிழமை( ஜனவரி 21)தான்!

உஷா,
//இலவசமாய் பற்களை சோதித்தார்கள். அந்த டாக்டர், பின் பல், சொத்தை பிடுங்க வேண்டும் என்று ....//

உஷா இது தேவலையே. இங்கே பல்சொத்தைப் பிடுங்கணுமுன்னா நம்ம 'சொத்தை'யே பிடுங்கிருவாங்க:-)

Aruna Srinivasan said...

துளசி,

//இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் வீடுகளில் குறைஞ்சுபோய், கம்யூனிட்டி விழாவா வந்துருமுன்னு நினைக்கிறேன்.
//

எல்லா விஷயத்திலேயும் பொதுவா ஒரு நேர்மறைக் கோணத்தைப் பார்க்கும் உங்கள் அணுகுமுறை ஒரு சிறப்பான குணம். தொடருங்கள் :-)

Anonymous said...

I am not sure how to type in Tamizh.

No question that the younger generation, of which I am a part of, is missing out on enjoying such traditional festivals. I think the following are the reasons:

How many families celebrate festivals in their true senses?

How many families take pains and efforts to teach their children a little bit about their tradition and culture?

We are fighting a much broader problem here. Most of us think higher education and ultimately a high-salary-fetching job should be the child's primary focus and fail to teach the child much about "us".

But I sincerely feel celebrating these festivals, beyond giving you a let-out to your constrained routines, gives you a sense of Indian-ness and defines your identity to a certain extent.

I will keep watching out for your comments!

revathi n. said...

aruna enn pennun chicago kuliril anil varattume endruthaan Kanu vaikkiraal.annavum thambiyum nanraaga irukkanum,kudumbam sezhikkanum engira positive thoughts.Ithellaam class eduthaavathu solli kodukka vendum.thank you for these touching words.

தாணு said...

பொங்கல் வாழ்த்துக்கள். இன்றைய தலைமுறையினர் பண்டிகைகள் பற்றி அறிந்து கொள்ளாததால் அவர்களுக்கு இழப்பு என்ற உணர்வு இல்லைதான். ஆனால் அவர்களுக்கு உணரவைக்க முடியாததால் நமக்குள் வரும் இழப்பும், வெறுமையும் அதிகம். நான் கல்லூரியில் படித்த காலங்களில் அநேக பண்டிகைகளுக்கு ஊர் செல்ல முடியாமல் போய்விடும்,அப்போதெல்லம் இழந்துவிட்டதாகத் தோணியதில்லை. ஆனால் இன்று என் குழந்தைகளுடன் இருக்கும்போது அந்தந்த பண்டிகைகளின் சின்ன வாசனையாவது அவர்களுக்கு வர வேண்டுமென்பதில் சின்ன பிடிவாதமே இருக்கிறது. துளசி அளவு நளபாகம் தெரியாவிட்டாலும், கார்த்திகைக்கு கொழுக்கட்டை, விநாயகர் சதூர்த்திக்கு மோதகம், பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல்னு ஏதோ ஒண்ணு கிளறிவிடுவேன். பலகாரத்தைவிட அந்த பண்டிகையின் தொடர்பு எதில் உள்ளது என்று மறுபடி மறுபடி உணரவைக்க. அதில் மதமோ சடங்குகளோ திணிக்கப்படுவதில்லை. என் குழந்தையின் சிறுவயது போட்டோக்களைப் புரட்டிப் பார்க்கும்போது வரும் நெகிழ்வான உணர்வுதான் பண்டிகையின் கொண்டாட்டங்களும்.

Aruna Srinivasan said...

ரேவதி, தாணு, மற்றும் அனானி ( பெயரைச் சொல்லி இருக்கலாமே?) கொண்டாட்டங்களின் மத அல்லது சடங்குகள் ரீதியான பார்வைகளுக்கப்பால், பொதுவாக வாழ்க்கையை ரசிக்கும் கண்ணோட்டத்தில் உங்கள் சிந்தனைகள் இருப்பது சந்தோஷத்தைத் தருகிறது. கொண்டாட்டங்களின் அடிப்படை நோக்கமும் அதுதான் - பொதுவாக வாழ்க்கையை ரசிக்கவும் உறவுகள் மேம்படவும், சுற்றுச்சூழல் அருமையை உணர்ந்து கொள்ளவும் என்று பலவித நோக்கில் பண்டிகைகளின் நோக்கம் இருக்கும். திருமணம் மற்றும் இதர சடங்குகளின் போது அனுசரிக்கப்படும் சம்பிரதாயங்களில் உறவுகளின் முக்கியத்துவம் ஒவ்வொரு சடங்கிலும் வெளிவரும் - சகோதரனுக்கு, அத்தைக்கு, மாமாவுக்கு என்று ஒவ்வொரு உறவுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். அனைவரும் சேர்ந்து இணைந்து வாழ்க்கையை நடத்த இவை சங்கேதங்கள் எனலாம்.

இன்றைய சூழ்நிலையில் வெறும் சடங்காக அல்லது தெய்வக்குத்தம் என்றெல்லாம் பயப்படாமல், ஒவ்வொரு விழாவும் நம் பரஸ்பர உறவுகளைச் செழிக்கச் செய்யும் தூண்டுகோலாக நினைத்துச் செய்யலாம். அல்லது இவைகளுக்கு இணையாக இன்றைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான முறைகளையும் ஆரம்பிக்கலாம். அடிப்படை நோக்கம், வாழ்க்கையை அதன் யாதார்த்தங்களை உணர்ந்து இயற்கையின் ஓட்டத்துடன் இயன்றவரை ஒட்டி வாழ்வதுதான்.