Friday, January 06, 2006

"கஹானி...."

சில நாட்கள் முன்பு ஒரு கைவேலைகள் மற்றும் கலைப் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்றிருந்தேன். வீட்டிலேயே ஒரு பகுதியைக் கடையாக வைத்திருந்தார்கள். பொருட்களை வாங்கியப் பின் அந்தக் கடையின் சொந்தக்காரர் இன்னொரு பகுதியில் அவர்கள் பொம்மைகளாலும் இதர கைவேலைப் பொருட்களாலும் அமைத்திருந்த ஒரு ராமாயணக் காட்சிக்கு அழைத்துச் சென்று காட்டினார். குட்டிக் குட்டியாக பசுமையான வனமும், மலர்களும், ஆசிரமும் என்று அருமையாக இருந்தது. பெரிதாக ஒரு ஹனுமார் பொம்மை. மிகத் தேஜஸ¤டன் விளங்கிய இருவர் அவரைச் சங்கிலியால் கட்டி இழுத்துக் கொண்டு காட்சியளித்தனர். பின்னால் ஒரு குடிசை வாசலில் இருந்தப் பெண்மணி சீதைப் போலிருந்தது. ராமாயணக் காட்சி என்று அவர் முன்பே சொல்லியிருந்ததால் அந்தப் பெண் பொம்மை, சீதை என்று யூகிப்பதில் சிரமமில்லை. உடனே சட்டென்று மற்ற இரு ஆண்களும் ராம லக்ஷ்மணன் என்று மனம் யோசிக்கும்போதே சற்று நெரடியது. ராமாயணத்தில் ஹனுமாரை ராம லக்ஷ்மணர்கள் கட்டிப் போட்டதே கிடையாதே? இதென்ன கதை என்று தோன்றியது. எங்கள் முகத்தில் இருந்த கேள்விக்கு சிரித்தவாறு அவர் விடையளித்தார். அதெப்படிங்க இவர்கள் ராம லக்ஷ்மணர்களாக இருக்க முடியும்? ஹனுமாரைவிட இந்த உருவங்கள் சிறியவர்களாக இருக்கிறார்கள் பாருங்கள்." என்ற பின் புரிந்தது.

ஓ, இவர்கள் லவனும் குசனும் ! பிறகு கவனிக்கும்போது அவர்கள் பின்னால் ஒரு அலங்கரித்தக் குதிரையும் இருந்தது. அசுவமேதயாகக் குதிரை. சட்டென்று கதைப் புரிந்துவிட்டது. ஆனால் என் கூட வந்த மகனுக்குப் புரிய சற்று நேரம் ஆயிற்று. அவனுக்குத் தெரிந்த ராமாயணம் "அமர்சித்திரக் கதா" போன்ற சிறுவர் கதைப் புத்தகங்கள். ஆனால் பெரும்பாலானக் கதைப் புத்தகங்களில் இதிகாசங்கள் விரிவாக முழுவதும் இருப்பதில்லை.
சிறுவர்களுக்கு ஏற்றப் புத்தகங்களுக்கு இன்றும் பஞ்சம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் இந்தப் பஞ்சம் தமிழில் மிக அதிகம் என்று தோன்றுகிறது. இதிகாசங்களை விட்டால், தற்காலச் சிறுவர்களின் கற்பனைக்கும், ஆற்றலுக்கும் தீனி போடும் வகையில் புத்தகங்கள் அதிகம் கிடையாது. சென்னையில் இப்போது புத்தக கண்காட்சி நடை பெறுகிறது. கடைகளை அலசினால், இந்த நிலையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.

இப்போது இந்தச் சிந்தனையெல்லாம் இங்கே தோன்றக் காரணம், சென்ற வருடம் பாஸ்டனில் தொடங்கப்பட்ட ஒரு சிறுவர் பத்திரிகைப் பற்றி படித்ததுதான். இது, சிறுவர்களுக்காக, சிறுவர்களால், சிறுவர்களைப் பற்றி மூன்று இந்தியத் தாய்மார்களால் தொடங்கப்பட்ட ஒருப் பத்திரிகை. இன்று ஊடகத்துறையில் பலரது ஆர்வத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

" கஹானி" என்ற இந்திப் பெயரில் வரும் இந்தப் பத்திரிகையில் பெரும்பாலும் சிறுவர்கள் எழுதுகிறார்கள். பெரியவர்களும் சிறுவர்களுக்காக எழுதுகிறார்கள்.

வெளி நாடுகளில் வாழும் /வளரும் பல குழந்தைகள் பல்வேறு கலாசாரங்களுக்கிடையே குழம்பாமலும், வெளி நாட்டு சூழலில் தங்கள் பின்னணியைக் கண்டு கலங்காமல் யதார்த்தமாக வளரவும் உதவும் எண்ணத்துடன் இந்தப் பத்திரிகைத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையை இணையத்தில் மேலாக ஒரு கண்ணோட்டம் விட்டேன். சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர் புத்தகங்கள் எழுதும் பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளார்கள். ஹாரிப்பாட்டர், எனிட் பிளைட்டன் போன்ற புத்தகங்கள் சிறுவர்கள் கவனத்தை ஆட்க்கொண்டிருக்கும்போது, இது போன்ற பத்திரிகைகள் நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான முயற்சி.


வெளி நாட்டில் வாழும் தமிழ்ச் சிறுவர்களுக்காக, தமிழில் இது போல் என்று, யார் தொடங்கப்போகிறார்கள் !??

தவிர, இங்கேயும் - தமிழ்நாட்டிலும் - சிறுவர்கள் புத்தகங்கள் / பத்திரிகைகள் அதிகம் காணோம். எனக்குத் தெரிந்தது கல்கி குழுவினரின் கோகுலம் ஒன்றுதான் பத்திரிகை. அந்தக் காலத்து அம்புலிமாமா என்றோ காணாமல் போய்விட்டது. ஆங்கிலத்திலும் கூட அவ்வளவாகக் காணோம். இன்று விதம் விதமாக தொழில் ரீதியாக, niche - பத்திரிகைகள் - வாகனங்களுக்கு, ரியல் எஸ்டேட், வணிகம் என்று பலவித துறை சார்ந்தப் பத்திரிகைகள் வாளர்ந்து வருகின்றன. பெண்களுக்கு என்று இருக்கும் ரகங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் சிறுவர்களுக்கு என்று / இளைஞர்களுக்கு என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

எதிர்கால சமுதாயத்தின் மீது நாம் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

5 comments:

Unknown said...

Its thot provoking blog...
Running a magazine invloves commercial factors. Do u think its viable to run a childrens magazine without incurring loss... forget the profits.

நிலா said...

அருணா, 2004 - ஏப்ப்ரல் மாதம் எனக்கு தனிப்பட்ட வகையில் அன்லிமிடட் என்கிற தொண்டு நிறுவனத்திடமிருந்து தமிழ் குழந்தைகளுக்காகு 5 மாதாந்திர செய்தி மடல்கள் தயாரிக்க நிதியுதவி கிடைத்தது. அந்த உதவியோடும் நிலாக்குழுவின் உதவியோடும் செய்திமடலுக்குப் பதிலாக பூஞ்சிட்டு என்ற 5 சிறுவர் இதழ்கள் தயாரித்தோம். அவற்றை நிலாச்சாரலில் வலையேற்றமும் செய்தோம். இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

http://www.nilacharal.com/download/index.html

மிக நல்ல வரவேற்பு. உலகின் பல பாகங்களிலிருந்தும் குழந்தைகள் எழுதினார்கள். இரு சிறுமிகள் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்கள்

நிதியுதவி செய்த நிறுவனம் இதழின் தரத்தைப் பாராட்டி மேலும் ஒரு வருடத்துக்கு நிதியுதவி அளிக்க முன் வந்தது. ஆனால் எனக்கு முழு நேரப் பணியோடு சேர்த்து தனியாக அச்சுக்கும் விநியோகத்திற்கும் ஓடிக் கொண்டிருக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் அப்போது சரியான உதவி கிடைக்கவில்லை. அதனால் என்னால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியமல் போஇவிட்டது.

இப்போதும் ஏதேனும் தமிழ் அமைப்புகள் முன்வந்தால் நிதி உதவி வாங்குவதும் விநியோகிப்பதும் வெகு சுலபம். நானும் தொடர்ந்து கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.
இப்போதைக்கு நிலாச்சாரலில் சிறுவர் பகுதி மூலம் இளம் படைப்பளிகளை ஊக்குவித்து வருகிறோம்:
http://www.nilacharal.com/poonchittu/poonchittu_index.html

ஆறு வயதுக் குழந்தைகூட கதை எழுதியிருக்கிறது.

நிலா said...

நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் இங்கு எனக் குறிப்பிட்டது லண்டனை. இபோதும் நிலாக்குழுவில் நான் மட்டுமே லண்டனில்.

தெளிவாகக் குறிப்பிடாததற்கு மன்னிக்கவும்

Yagna said...

அருணா, நானும் இந்த குழந்தைகளுக்கான படைப்புகளை பற்றி வேறு சில காரணங்களுக்காக நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கூறும் கருத்துக்கள் மிக சரியானவை. இந்த 'சுட்டி விகடன்' நல்லா ஓடுதுன்னு கேள்விப்பட்டேனே. 'கஹானி'க்கு நன்றி.

Aruna Srinivasan said...

தேவ், வணிக ரீதியில் நிச்சயமாக இது ஒரு சவால்தான் - ஆனால் இப்போதைக்குதான். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் என்று ஒன்று உண்டே? சிறுவர்களைக் கவரும் விதத்தில், தயாரிக்கும் விதத்தில் பல விஷய்ங்களை அக்கறையுடன் உள்ளடக்கி ஒருப் பத்திரிகை வெளி வந்தால் - அதுவும் குழந்தைகள் / இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டால், வணிக ரீதியில் லாபம் காணாவிட்டாலும் ஓரளவு சமாளிக்கலாம். குறைந்த பட்சம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் வரலாம். " நான் ஒரு காம்ப்ளான் பையன்" விளம்பரம் போல. விட்டால், என் கற்பனை இன்னும் ஒரு படி மேலே போகும் - " அம்மா இந்த ப்ராண்ட் சோப்பு வாங்குங்கள்; எண்ணை வாங்குங்கள்; இந்தத் துணிக்கடைக்குப் போகலாம்....." என்று சிறுவர்கள் பெற்றோரை நச்சரிக்கத் தொடங்குவார்கள்; அந்தந்த விளம்பரங்களும் இந்தச் சிறுவர்கள் பத்திரிகைகளைத் தேடி வரும் (!!!!!!) பின் என்ன? வணிக ரீதியாக சமாளிக்க முடியாதா என்ன? முதலில் ஆழம் தெரியாத ஆற்றில் இறங்க ஒரு மனோதிடமும், எடுத்த காரியத்தை வெற்றியாக்கும் / உழைக்கும் மனப்பான்மையும் வேண்டும். இது எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும். ஆனால் பத்திரிகை வெளிவரும் தொழிலுக்கு கொஞ்சம் / சரி, நிறையவே தன்னார்வத் தொண்டு மனப்பான்மை வேண்டும்.

தவிர, இன்றும் பல Main strem ஊடகங்கள் கூட முழுக்க முழுக்க லாபமாக இருக்கு என்று யார் சொன்னார்கள்? பல ஊடகங்களின் அதிபதிகளுக்கு அவர்களுடைய ஊடகங்கள் பணம் சம்பாதிக்கும் முக்கியமான தொழிலல்ல. ஆனாலும் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். - அதற்கு காரணங்கள் பல. இதில் வரும் நஷ்டங்களை இதரத் தொழில்களில் வரும் லாபம் ஈடுபடுத்தி விடும். அதுபோல், சிறுவர் பத்திரிகையையும் காசு சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டும் நடத்த முடியாது. பல வித சக்திகள் உள்ளவர்கள் - பண பலம், ஆள் பலம் என்ற வகையில் - இதை ஒரு உபத் தொழிலாக மட்டுமே நடத்த முடியும். குறைந்த பட்சம் இன்றைய சூழ்நிலையில். மேலே சொன்ன என் கற்பனை பலித்தால் ஒரு வேளை அந்த மாதிரி விளம்பரங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவாயைப் பொழியும் காலமும் வரலாம் !! நம்பிக்கை மட்டும் இருந்தால் என்னதான் நடக்காது? பெரும் தொழிலதிபர்கள் / ஊடகத் துறையில் ஏற்கனவே பல கால்கள் வைத்திருக்கும் போது சிறுவர்கள் பக்கமும் கொஞ்சம் கவனம் திரும்பலாமே?

நிலா, உங்கள் சுட்டிகளைப் படித்தேன். மிக நல்ல காரியம்; பாராட்டத்தக்க முயற்சி. சிறுவர்களைக் கவரும் வண்ணம் தயாரிப்பது உண்மையில் வெகுக் கடினம். நீங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இந்தத் திசையில் பயணிக்க வாழ்த்துக்கள்.

யக்ஞா, அடடே... சுட்டி விகடனை மறந்துவிட்டேன். இன்னும் சிலவும் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். பத்து அல்லது பதினைந்து வருடங்கள் முன்பு இந்தியா டுடே வெளியிடும் லிவிங் மீடியா நிறுவனம் " Target" என்ற சிறுவர் பத்திரிகையை நடத்தி வந்தது. வெகுவாக சிறுவர்களைக் கவர்ந்த ஒருப் பத்திரிகை. அதன் ஆசிரியர் பெயர் ரோஸலிண்ட் வில்சன். சிறுவர் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு நிறுத்தி விட்டார்கள். இந்தியாவில் தரமான குழந்தைகள் இலக்கியம் / பத்திரிகைகள் இவற்றுக்கு பெருமளவு பங்களித்தவர். லிவிங் மீடியா, பின்னர் டீன்ஸ் டுடே என்று ஆரம்பித்தார்கள். அதுவும் நஷ்டம் கையைக் கடித்ததால், இழுத்து மூடப்பட்டுவிட்டது. இங்கே பின்னூட்டத்தில் தேவ் சொல்லியிருப்பது சரிதான். லாபம் வேண்டாம்; நஷ்டத்தில் மூழ்காமல் இருப்பதே பெரிய விஷயம். ஆனால் லாபம் தரும் தொழில் என்ற நோக்கோடு மட்டும் பார்த்தால் இன்னும் பல வருடங்களுக்கு சிறுவர்கள் பத்திரிகை / புத்தகம் என்பதையெல்லாம் மறந்து விட வேண்டியதுதான்.