Monday, December 18, 2006

இமாலயத்தில் ஒரு சிம்மாசனம்

என் பழைய - 1986 - 89 - ஆல்பத்திலிருந்து சில படங்கள்.
பூடானின் தலைநகரம் திம்புவின் ஒரே பிரதான வீதி. ( உலகிலேயே டிராபிக் சிக்னல் இல்லாத ஒரே தலைநகரம்). கடல் மட்டத்திலிருந்து 7656 அடி உயரத்தில் உள்ளது.

________________________________

திம்புவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான டிசைனில் - பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு இருக்க இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அழகான பூக்களும் - புத்த மத அடையாளங்களும் பல நிறங்களில் வரையப் பட்டிருக்கும். இங்கே பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் ஒரு சிறப்பு - அவை யாவும் ஆணிகள் இல்லாமலேயே எழுப்பப்பட்டுள்ளன.
____________________________________


திம்புவின் Central Business District
________________________________


ஒரு பனிப்படர்ந்த மலையின் மேலே..... நின்று கொண்டிருப்பது? சாட்சாத் நானேதான் :-)
________________________________


குறுக்கும் நெடுக்கும் சள சளவென்று குளுமையாக ஓடிக்கொண்டிருக்கும் "திம்பு சூ". சூ என்றால் ஜோங்கா (Dzonka) மொழியில் நதி.
_________________________________ஒரு தேசீய அணி வகுப்பு. தேசீய மற்றும் மத சம்பந்தமான விழாக்களில் இபடி பொது இடங்களில் அணிவகுப்பு அல்லது பாரம்பரிய நடனங்களில் மக்கள் பங்கு கொள்வது சகஜம். பெண்களுக்கு இங்கே முன்னுரிமை. பெண் வழி வாரிசு முறை. ஆணும் பெண்ணும் ஒன்றுக்கும் மேற்பட்டோரை மணப்பது இயல்பான வழக்கம் இந்த சமூகத்தில். குழந்தைகள் பிறந்த பின்பு திருமணம் செய்துகொள்வதும் உண்டு. இங்கே இவை இயல்பான சமூக வழக்கம். இன்று ஓரளவு மாறி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
______________________________________மோரீஷியஸ் அதிபர் 1986ல் பூடானுக்கு வருகை தந்தபோது.

_________________________________________

வில், அம்பு விளையாட்டு முக்கிய தேசீய விளையாட்டு. ஞாயிற்றுக் கிழமையானால் அவரவர் வில், அம்பு சகிதம் மைதானம் பக்கம் கிளம்பிவிடுவார்கள். பாரம்பரிய உடை அவசியம். ( கனமாக, நடுக்கும் குளிருக்கு இதமாக நன்றாகதான் இருக்கும்). உல்லாசப்பயணிகள் வருகை கட்டுப்படுத்தபட்டு உள்ளது. இதர நாடுகளில் பாரம்பரியம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை கவனித்து, மன்னர் தீர்மானமாக தன் நாட்டின் இயற்கையும் பாரம்பரியமும் அழிந்து விடாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது.

_________________________________

ஞாயிறு தோறும் கூடும் சந்தை - காய்கறிகளிலிருந்து, குளிர் உடைகள், மற்றும் வீட்டுக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் சந்தையில் பேரம் பேசி வாங்கலாம்.

அதுசரி, ஏன் திடீரென்று பூடான் படங்கள் இங்கே?


நேற்றைய செய்தி: பூடானின் அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக் தன் மகனுக்கு அரியணையை கொடுத்துவிட்டார்.

"முக்கியமான" கொசுறு செய்தி: புதிய அரசர் நாம்கேல் வாங்சுக், திம்புவில் லுங்டன்ஜாம்பா (Lungtenzampa Junior High School ) பள்ளியில் என் இளைய மகனின் வகுப்புத்தோழன்(ர்). :-)

மனம் பின்னோக்கி அசைபோட...... விளைவு - இந்த படங்கள். இந்த டிஜிடல் காலத்திலும், 1970களில் வாங்கிய யாஷிகா காமிராவிற்கு இணை இல்லை - என்னைப் பொறுத்தவரையில் :-)

Wednesday, December 13, 2006

பந்தா இல்லாத சிந்தனையாளர்

" எனக்கு பதினைந்து வயதாக இருக்கும்போது என் அம்மாவிடம் சொன்னேன். " நான் பெரியவனாக ஆனதும் என்னவாக ஆகப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டேன். ஒரு எழுத்தாளாராகதான் ஆகப்போகிறேன்."

என் அம்மாவுக்கு உடனே கவலை வந்துவிட்டது. " என் செல்லமே... உன் அப்பா ஒரு இஞ்சினீயர். ரொம்ப யதார்த்தமானவர். வாழ்க்கையைப் பற்றியும் உலகைப் பற்றியும் தீர்க்கமான பார்வை கொண்டவர். அதுசரி. ஒரு எழுத்தாளர் ஆவது என்றால் என்ன அர்த்தம் என்றாவது உனக்கு புரியுமா?"

" இதில் புரிய என்ன இருக்கு? எழுத்தாளர் என்றால் புத்தகங்கள் எழுதுபவர்."

" உன் மாமா ஒரு டாக்டர். அவர் கூட புத்தகங்கள் எழுதுவார். நீ கூட உருப்படியா ஒரு இஞ்சினீயருக்கு படி. அதன் பின் நீ எப்போ வேணுமானாலும் புத்தகம் எழுதலாம்."

" இல்லேம்மா... நான் ஒரு எழுத்தாளனாக வேண்டும். புத்தகங்கள் எழுதும் இஞ்சினீயராக இல்லை."

" சரி. நீ எப்போவாவது ஒரு எழுத்தாளரை சந்தித்து இருக்கிறாயா?"

"இல்லயே... வெறும் போட்டோக்களில்தாம் பார்த்து இருக்கிறேன்."

"சரிதான். எழுத்தாளர் என்றால் என்னன்னு கூட தெரியாம எழுத்தாளன் ஆகணும்னு ஆசைப்பட்டாயானால் அதெப்படி?" என்று சொல்லிவிட்டார்.

அம்மா கேட்ட கேள்விகளுக்கு விடை தேடி நான் ஒரு எழுத்தாளன் ஆக என்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். 1960களின் ஆரம்பத்தில் என் ஆராய்ச்சிகளின் முடிவில் எனக்கு தெரிய வந்த தகுதிகள்:

  1. ஒரு எழுத்தாளனின் முதல் தகுதி அவர் மூக்குக்கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். தலை வாராமல் எப்போதுமே கலைந்து இருக்க வேண்டும். சீப்பையே பார்த்து இருக்கக்கூடாது. முகத்தில் எப்போதும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு சிடு சிடுவென்று எதைப் பற்றியாவது குறை சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும். பாதி நேரம் முகத்தில் சோகம் அப்பி இருக்க வேண்டும். வாழ் நாளில் பெரும்பகுதி ஏதாவது ஒரு மதுபான கிளப்பில் இவரைப் போலவே தலை கலைந்த சிடு சிடுவென்ற சக எழுத்தாளர்களுடன் எதைப் பற்றியாவது விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டும். ரொம்ப "ஆழமான" சமாசாரங்கள் பேசுவார். எப்போதுமே அவரிடம் தன்னுடைய அடுத்த புத்த்தகத்துக்கான பிரமாதமான ஐடியா இருக்கும் ஆனால் சமீபத்தில் வெளி வந்த தன் புத்தகம் அவருக்கு பிடிக்காது.

  2. அவரது சம காலத்து தலைமுறையினரால் புரிந்து கொள்ள முடியாதவராக இருப்பது ஒரு எழுத்தாளனின் தலையாய கடமையாகும். பெரிய விஷயங்களை புரிந்து கொள்ளாத ஒரு தலைமுறையில் தான் பிறந்து விட்டோம் என்பதில் அவருக்கு கடுகளவும் சந்தேகமில்லை. தப்பித்தவறி தான் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டோமானால் தான் ஒரு "மேதை" என்று தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவருக்கு தெரியும். எழுதியதை திருத்தி பலமுறை மாற்றி எழுதுவார். நம்மைப்போல் சாதாரண மனிதர்கள் அகராதியில் 3000 வார்த்தைகள் உபயோகித்தோமானால் நம்ப எழுத்தாளர் இதில் ஒன்றைக் கூட உபயோகிக்க மாட்டார்; ஏனென்றால் நம்ம ஆள் சாதாரணமானவர் இல்லையே? அகராதியில் இன்னும் பாக்கி 189,000 வார்த்தைகள் இருக்கின்றனவே... அவற்றையெல்லாம் பிரயோக்கிக்காமல் என்ன எழுத்தாளன் அப்புறம்?

  3. ஒரு எழுத்தாளர்தான் மற்றொரு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கூட அவருக்கு சக எழுத்தாளர்கள் மேல் ஒரு கடுப்பு இருக்கதான் செய்யும். சரித்திரத்தில் இடம் பிடிக்க தன்னுடன் போட்டியிடுகிறார்களே? ஆக மொத்தம் நம்ம எழுத்தாளரும் அவரது சகாக்களும் உலகிலேயே ரொம்ப குழப்பமான புத்தகம் எழுதுவதில் முனைந்துள்ளார்கள். யார் ஜெயிக்கிறார்களோ அவர் " யாருமே புரிந்து கொள்ளவே முடியாத" புத்தகம் எழுதிய பெருமையை வென்றவர்.

  4. ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதற்கு நம் எழுத்தாளர் சில வார்த்தைகளை எடுத்து விடுவார் - semiotics, epistemology. neoconcretism ... என்று வாயில் கூழாங்கல்லைப் போட்டு பயிற்சி செய்து உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். மற்றவர்களுக்கு அதிர்ச்சியளிக்க வேண்டுமென்றே, திடீரென்று "ஐன்ஸ்டின் ஒரு முட்டாள்" என்பார். அல்லது " டால்ஸ்டாய் பூர்ஷ்வாக்களின் கோமாளி" என்று விமரிசிப்பார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சியாக இருக்கும். இருந்தாலும் இந்த "செய்தி" சூடு பிடிக்க தொடங்கும். Relativity என்ற சித்தாந்தம் சுத்த உளறல் ; டால்டாய் ரஷ்யாவின் மேட்டுகுடியினரின் ஆதரவாளர் என்ற ரீதியில் எல்லோரும் பேசத் தொடங்குவார்கள்.

  5. யாராவது பெண்ண்ணின் கவனம் தன் பக்கம் திரும்ப, அறிமுகத்தின் போது தான் ஒரு எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வார். மேஜையில் கைதுடைக்கும் நாப்கின் மீது ஏதாவது "கவிதை" கிறுக்குவார். நம்புங்கள். இந்த யுக்தி பிரமாதமாக வேலை செய்யும்.

  6. இவருடைய பின்புலம் காரணமாக பத்திரிகைகளில் இலக்கிய விமர்சகர் வேலை இவருக்கு எளிதாக வந்து சேரும். உடனே சக எழுத்தாள நண்பர்களின் புத்தகங்களை தாராளமாக பாராட்டி எழுதுவார்.....

  7. என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற யாராவது கேட்டுவிட்டால் போதும்; யாருமே கேள்விப்பட்டிராத புத்தகத்தின் பெயரைக் கூறுவார்.

  8. பொதுவாக நம்ம எழுத்தாளருக்கும் அவரது சகாக்கள் அனைவருக்கும் பிடித்த ஒரே புத்தகம், ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய " Ulysses" இந்த புத்தகத்தை பற்றி மட்டும் எந்த எழுத்தாளரும் தப்பித்தவறி கூட குறை சொல்லி விமர்சித்துவிட மாட்டார்கள். ஆனால் எவராவது இதில் என்னதான் இருக்கிறது என்று கேட்டுவிடக் கூடாது. ஏனென்றால் இந்த புத்தகத்தை இவர் படித்துள்ளாரா என்று சந்தேகிக்கும் அளவு பதில் சொல்ல திணறிப் போய் விடுவார்.


இப்படியெல்லாம் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை என் அம்மாவிடம் போய் சொன்னேன். கேட்டுவிட்டு - " நீ இஞ்சினீயர் ஆவதே சுலபம் போலிருக்கு. தவிர, முக்கியமாக நீ மூக்குக் கண்ணாடி அணிவதில்லை. அதனால் இந்த வேலை உனக்கு சரிவராது." என்றார்.


ஆனாலும், கலைந்த தலையும், சட்டை பாக்கெட்டில் Gauloise சிகரெட்டும் தவிர என் கையில் ஒரு நாடகக் கதை இருந்தது - ( " நான் பார்த்த மேடை நாடகங்களிலேயே இதுவரை இத்தனை அபத்தமானதை பார்த்ததேயில்லை" என்று ஒரு விமர்சகர் " நல்ல வார்த்தை" அருளியிருந்தார். ) - மேதாவிப் புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன்; அந்த "Ulysses" புத்தகத்தையும் படித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன்.


இந்த சமயத்தில்தான் ஒரு மேடைப் பாடகர் தன் பாடல்களுக்கு ஏற்ற மாதிரி கவிதைகள் எழுதித்தரச் சொன்னார். வருவாய் வரும் வழி புரிந்ததும் எழுத்தாளனாக சரித்திரத்தில் இடம் பெறும் ஆராய்ச்சி, ஆசையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு நானும் இதர சாதாரண மக்களைப் போல் பிழைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.


இப்படி நான் தேர்ந்தெடுத்த வழியால், சட்டை மாற்றுவதைவிட வேகமாக வேலைகள் மாறி பல ஊர்கள் நாடுகள் மாறினேன். அப்படி ஆற்று நீரோட்டமாக பலவிதங்களில் ஓடிய என் வாழ்க்கையில் நான் கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபங்கள்தாம், இதோ அடுத்து வரும் பக்கங்களில்....."


பாலோ கோல்ஹோ ( Paulo Coelho)


இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவராக கருதப்படும் Paulo Coelho எழுதிய " Alchemist " என்ற புத்தகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை படித்ததில்லை. அவர் "Ulysses" பற்றி சொல்வதுபோல் ஒரு பாலோ கோல்ஹோ படிக்காமல் நாமெல்லாம் எப்படி எழுத்து துறையில் இருக்க முடியும் என்று தோன்றியதுண்டு. ஒரு முறை புத்தகக்கடையில் மேய்ந்து கொண்டிருக்கும்போது அந்த புத்தகத்தை வாங்க எடுத்துவிட்டு திரும்பும்போது அவரது புதிய புத்தகமான " Like the Flowing River " கண்ணில் பட்டது. உடனே அதை வாங்கிவிட்டேன். அதில் இருந்த முன்னுரைதான் மேலே உள்ள பகுதி.


எழுத்தாளர்களை இவ்வளவு சதாய்க்கும் ( இது தமிழ் வார்த்தைதானே!! மூலம் அறிய ஆவல்!) பாலோ கோல்ஹோ இன்று பெரிய எழுத்தாளர். உள் பக்க அட்டையில் உள்ள அவரது படத்தில், முகத்தில் மூக்குக் கண்ணாடியில்லை; தலை கலைந்து இருக்கவில்லை ( முடி இருந்தால்தானே? முக்கால் வழுக்கை :-) ) மற்றபடி அவரது எழுத்து நம்மைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு நன்றாகவே புரிகிறது. ஒரு நண்பருடன் நம் வீட்டு கூடத்தில் உட்கார்ந்து பேசுவது போல் எளிய, இயல்பான, ஒரு அந்நியோன்னமான நடை.. படிக்கும்போது அகராதியைத் தேட வேண்டாம். சொல்லும் விஷயங்களில் பளீரென்று அனுபவம் பேசுகிறது; தத்துவங்கள் - வாழ்க்கையின் பல நிதர்சனங்கள் அனாயாசமாக, அதே சமயம் "காவியுடை" அணியாமல் வந்து விழுகின்றன. பந்தா இல்லாத சிந்தனையாளர். சிந்திக்க வைக்கும் - இதம் அளிக்கும் சிந்தனைகள்.


மற்றபடி எழுத்தாளர்களுக்கான "தகுதிகள்" அவரது ஆராய்ச்சியின்படி அவருக்கு இருக்கிறதோ இல்லையோ, முன்னுரையில் உள்ள அவரது கையெழுத்துக்கு நிறையவே இருக்கிறது. வாங்கிப் படித்துதான் பாருங்களேன்.

Sunday, October 29, 2006

நிதர்சனம்

வருடம் 1995 - மே மாதத்தில் ஒரு நாள். சிங்கப்பூர் போன புதிது. மகன் பள்ளி அட்மிஷன், புது ஊரில் வாழ்க்கை என்று ஆரம்ப கால தடுமாற்றங்கள் இருந்த சமயத்தில் இந்திய தூதுவர் வீட்டில் ஒரு விருந்து. எல்லோருமே புது முகமாக தெரிந்த இடத்தில் புன்முறுவலை முகத்தில் படரவிட்டபடி ஜூஸ் கிளாசை வைத்துக் கொண்டு பேச்சுத் துணைக்கு ஆள் தேடியபோது என்னைப் போலவே ஆள் தேடிய முகம் கண்ணில் பட்டது.

பட்டுப்புடவையுடன் என்னைப்போலவே ஒரு தமிழ்ப் பெண். இருவரும் உடனேயே குப்பென்று ஆர்வத்துடன் பேச ஆரம்பித்துவிட்டோம். எங்கள் இருவரின் மகன்கள் ஒரே பள்ளி; ஒரே வகுப்பு - ஆனால் வேறு பிரிவுகள். டில்லியிலிருந்து நாங்கள் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்து இறங்கிய அதே நாளில்தான் அவர்களும் வந்துள்ளார்கள் - சென்னையிலிருந்து. எங்களுக்கு ஒரே சந்தோஷம் - புதிய ஊரில் ஒத்த அலைவரிசையில் நண்பர் கிடைத்த சந்தோஷம்.

அன்று ஆரம்பித்தது எங்கள் நட்பு. அங்கே இருந்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் வரை தினமும் இரண்டு தடவையாவது பேசாவிட்டால் எங்கள் நாள் முடியாது. அதன்பின் நான் டில்லிக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மாற்றி மாற்றி இருந்தபோதும் முடியும்போதெல்லாம் சந்திப்போம் - குறைந்த பட்சம் போன் அரட்டை நிச்சயம். பிறகு நான் டில்லியிலும் அவர் சென்னையிலும் இருக்கத் தொடங்கியபிறகு அவ்வப்போது போனில் - முடிந்தபோது நேரில் என்று நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

சில மாதங்கள் அவரவர் வேலையில் /குடும்பப்பொறுப்புகளில் மூழ்கி இருந்தாலும் எப்போதாவது போன் போடும்போது, எப்போதும் இருக்கும் அதே உற்சாகமும் அன்பும் துளிக்கூட குறைந்ததேயில்லை. 2001ல் நான் சென்னை வந்தபின்னரும் இந்த அன்பும் பிணைப்பும் தொடர்ந்தது. சில மாதங்களுக்கு ஒரு முறையாவது யாராவது ஒருவர் நினத்துக்கொண்டு திடீரென்று போன் போட்டு அரை மணி நேரம் பேசுவோம்.

ஆனால் கடந்த பல மாதங்களாக ஏனோ நான் அவருக்கு போன் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு முறை போன் போட்டபோது அடித்துக்கொண்டே இருந்தது. சரி எங்கேயோ வெளியே போயிருக்கிறார் என்று விட்டு விட்டேன். அவ்வப்போது நினவு வரும் - சரி நிதானமாக அப்புறம் பேசலாம் என்று நினைத்து காலம் போனது. ஏதோ அவரவர் வேலை குடும்பம் என்று இருக்கிறோம் என்ற அசட்டையாக இருந்துவிட்டேன். ஆங்கிலத்தில் taken for granted மனோபாவம்.

ஆனால் ஷோபா, இன்று காலையில் நீ குக்கர் வைத்துவிட்டு என்ன சமையல் செய்யலாம் என்று காபி குடித்தவாறே யோசிக்கும் அந்த ஒரு சில நிமிடங்களில் ஹார்ட் அட்டாக் வரும் என்று யாருக்கு தெரியும் ஷோபா? வாழ்க்கை இவ்வளவு அநித்தியமா? நிதர்சனம் முகத்தில் அறைந்தாற்போல் வலிக்கிறதே......

என் அன்புள்ள ஷோபனா ஜெயந்த் - என் மனது உனக்கு தெரியும். உன் பிரிவு மிகவும் வலிக்கிறது. ஆனால் உன் அருமையான தோழமை கிடைத்தது என் மனதுக்கு ஒரு நிறைவு.

Friday, September 01, 2006

What is missing?

"...ரொம்ப வயலண்ட் படம்... யோசிச்சு சொல்லுங்க, வரணுமா என்று..." என்று குடும்பத்தில் இருக்கும் இளைய தலைமுறைகள் பெரிசுகளை கொஞ்சம் எச்சரித்தார்கள். அதனால் என்ன.. இந்த காலத்துலே எந்த படத்துலேதான் டிஷ்யூம்..டிஷ்யூம் இல்லேன்னு? கேள்வி கேட்டு கிளம்பியாச்சு.

முதல்லே ஒரு விரலைப் பாத்தப்போ " சரி.. இதோட போச்சு.. " 'பயங்கரக் காட்ச்சிகள்' என்று நினைத்தேன். ... ஒரு அரை மணி பொறுத்து புரிந்து போச்சு... பாக்கி 2 மணி நேர சொச்சம் எந்த ரேஞ்சுலே இருக்கப்போகிறதென்று.

ஆனாலும் ஒரு நம்பிக்கை... கமல் படமாச்சே... கொஞ்சமாவது Fun அல்லது ஒரு ஆழம் இருக்குமே என்று.....ஹ¥ம். எந்தப் படத்துலேயும் சரி.... கடைசியிலே என்ன ஆகும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஏதோ ஒரு பயங்கர சஸ்பென்ஸ்... யார் இப்படி திட்டம் போட்டாங்க... ஏன்... என்ற கேள்விகளுக்கு விடையைத் தேடி காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இடைவேளைக்கு முன்னேயே சஸ்பென்ஸ் சுத்தமா போச்சு. குற்றவாளி தெரிந்து போனதும் சுவாரசியம் போய்விட்டது.

த்ரில்லர் என்றால், கதையில் ஒரு plot... அழுத்தம், ஆழம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். தவிர, திரில்லர் என்றாலும் ஒவ்வொரு கொலையையும் graphic ஆக காண்பிக்காமல் ஆங்காங்கே ஒரு subtlity இருந்திருக்கலாம்.

சொல்வதைவிட, சொல்லாமல் விடுவது கலை.

'பயங்கர' காட்சிகளைத் தவிர்த்து பார்த்தாலும் ஆழமாக ஒரு Plot, இருந்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. Flat ஆக இருந்த மாதிரி பட்டது எனக்கு. " Motive, Mr. Watson...?" என்று கேட்க வேண்டும் போல ஒரு உணர்வு. ஒரு psycho படம் is not my cup of tea. ( கதையை கேட்டுவிட்டு சினிமாவுக்கு போவது என் வழக்கமில்லை).

ஆனால் ஆங்காங்கே சில காட்சிகளில் தெரியும் சமூக அக்கறை - எ.கா: ஜெயிலில் அந்த இரு கைதிகள் நடத்தப்பட்ட முறை குறித்து காவல் துறை அதிகாரிகளை டிசிபி ராகவன் கண்டித்து கேட்கும் இடம் - அவசியம் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் என்று தோன்றியது. Psychos எப்படி உருவாகிறார்கள் என்ற முறையில் இது ஒரு அலசப்பட வேண்டிய சப்ஜெக்ட். ஆனாலும் something is still missing.

அதனால் என்ன....? "வேட்டையாடு, விளையாடு" பெரிய வெற்றிப் படம்; வசூல் பிய்த்துக்கொண்டு போகிறது என்று சொல்கிறார்கள். வாழ்த்துக்கள் :-)

பி.கு: மதுமிதாவின் "சுபாஷிதம்" புத்தகத்திற்கு முக்கிய ரோல் :-) வாழ்த்துக்கள் மதுமிதா !!

Sunday, July 16, 2006

ஜிவி

" மேக் டொனால்டில் வரிசை வரிசையாக பீட்ஸா செய்வதைப் பார்த்தால் நமக்கு என்ன தோன்றும் ? எவ்வளவு விலை? எவ்வளவு ருசி ..... இந்த ரீதியில்.

ஆனால் இவருக்கு என்ன தோன்றிற்று? நம் ஆஸ்பத்திரியில் இந்த முறையைப் பயன்படுத்தி கண் ஆபரேஷன் செய்து ஏழைகளுக்கு இலவசமாக கண் பார்வை பெற உதவலாமே என்று. விளைவு. மதுரையில் தான் சிறிய அளவில் உருவாக்கிய அந்த கண் ஆஸ்பத்திரியில் இப்படி வேகமாக பெருமளவில் செய்யும் உத்தியைப் பயன்படுத்தி பல ஏழைகளுக்கு இலவசமாக காடராக்ட் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தார்.
இத்தனைக்கும் அவர் கண் வைத்தியம் படிக்க ஆரம்பித்தபோது ஆர்திரிடீஸ் நோயால் விரல்கள் பாதிகக்ப்பட்டிருந்தன. ஆனாலும் ஒரு தீர்மானத்தோடு மென்மையான இந்த அறுவை சிகிச்சை செய்ய விரைவிலேயே பழக்கிக் கொண்டுவிட்டார்.

சிங்கப்பூர் ஆங்கில இதழ் ஒன்றிற்காக அவரை 6 வருடம் முன்பு மதுரையில் அவரை நான் பேட்டி காண சென்றபோது அவரது வயது 82. காலை 8 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். அவரது அறையில் காத்துக்கொண்டிருக்கும்போது கதவைத் திறந்து கொண்டு அவர் உள்ளே வரும்போது மணி சரியாக எட்டு. அரை மணி நேரம் என்று சொல்லியிருந்த பேட்டி ஒன்றரை மணி நேரம் நீண்டது. பொறுமையாக லாஸிக் அறுவை சிகிச்சை பற்றி விளக்கியதோடல்லாமல், மேல் விவரங்களுக்கு தான் இணையத்திலிருந்து தினமும் சேகரிக்கும் தகவல்களை உதவியாளரை விட்டு நகலெடுத்து கொடுக்கச் சொன்னார். "காலையில் என் முதல் வேலை இணையத்தைக் குடைந்து சமீபத்தில் என்ன என்ன முன்னேற்றங்கள் இந்த துறையில் இருக்கின்றன என்று பார்ப்பதுதான்." என்று சிரித்தவாறே கூறினார். பேட்டி சம்பந்தமாக முன்னும் பின்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டபோதும் நேரடியாக தானே பதிலளித்த அருமையான மனிதர்.

சில விமர்சகர்கள் அந்த நிறுவனத்தின் அருமையான நிர்வாக முறைகளை கெட்டிக்கார வியாபார உத்தி என்று சொல்வதுண்டு. ஆனால், தன் சகோதரி டாக்டர் நாச்சியார் மற்றும் அவரது கணவர் நம்பெருமாள்சாமி அவர்களுடன் இணைந்து ஆரம்பித்த அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இன்று பல ஏழைகளுக்கு கோவில் என்பதில் சந்தேகமில்லை.

பலரைப்போல எனக்கும் தாமதமாகதான் அவரது மறைவு தெரிய வந்தது. அன்பான டாக்டர் ஜிவி என்கிற ஜி. வெங்கிடசாமி அவர்களை நினைவு கூற இந்த பதிவு. அவரது முழு பேட்டியையும் இங்கே படிக்கலாம்.

பின் குறிப்பு: ஏதோ ஞாபகத்தில் ஜி. வெங்கிடசாமி என்பதற்கு பதிலாக - கோவிந்தசாமி என்று பிழையாக எழுதியிருந்தேன். பிழைக்கு மன்னிக்கவும்

Monday, May 08, 2006

Exit Poll

Exit Poll கணிப்புகள்

திமுக கூட்டணிக்கு :

ஸ்டார் நியூஸ் - 175

டைம்ஸ் நௌ - ஹன்ஸா - 150

சிஎன்.என் - ஹிந்து - 157 -167

அனேகமாக அனைவருமே சில வாரங்கள் முன் வெளியிட்டக் கருத்துக்கணிப்பில் வெவ்வேறு விதமாக சொல்லியிருந்தார்கள். நடுவில் என்னவாகியிருக்கும்? எப்படி மாற்றம் நிகழ்ந்திருக்கும்? கணிப்புகளும் ஜோசியம் போல்தான் என்பது என் கருத்து. விஞ்ஞானபூர்வமாக என்று இவற்றின் ஆதரவாளர்கள் சொன்னாலும் முடிவு / கணிப்பு தவறாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இருந்தாலும் கணிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழக மக்கள் மனதில் தேர்தல் ஆரம்பிக்கும் சமயம் இருந்த எண்ணங்களுக்கும் முடிவில் ஓட்டுச்சாவடிக்குப் போகும்போது இருந்த சிந்தனைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்திருக்கும் என்பது மட்டும் புரிகிறது. இலவச அறிவிப்புகளில் - அறிவித்தவை, அறிவித்த விதம், அறிவித்தவர்களின் மனோபாவம், அறிந்திருக்கும் அணுகுமுறைகள், இவற்றில் இதற்கான விடை இருக்கிறதோ? அல்லது வழக்கம்போல் மாற்றம் வேண்டி போடப்பட்ட வாக்குகளா?

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பிலிருந்து எல்லோருடைய கூவல்களும் - சப்தங்களும் மறைந்து, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து மக்கள் மனசுக்குள் யோசித்து, போடும் கணக்குதான் கடைசியில் மோட்சம் என்பது நிரூபிக்கப்படுகிறதோ?

11 ந் தேதி காலை 11 மணிக்கு இன்னும் எவ்வளவு மணி நேரம் இருக்கிறது ? :-)

பி.கு: தமிழ்மணத்தின் exit poll கிட்டதட்ட இதே முடிவைக் காண்பிப்பதால் தமிழ் வலைப்பதிவாளர்கள் தமிழக மக்களின் சரியான பிரதிபலிப்பு ( representative?) என்று எடுத்துக்கொள்ளலாமோ?

Sunday, April 16, 2006

லோக் பரித்ரன்

இது... இது... இதைத்தான் எதிர்பார்த்தேன் ரொம்ப காலமாக......

"அனுபவம் பத்தாது. இவர்களால் என்ன செய்துவிட முடியும்? சிறு பிள்ளைகள்.... சுதந்திரப் போராட்டம் பற்றி / தியாகிகள் பற்றி தெரியுமா? தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? நம் மக்களைப் பற்றி என்ன தெரியும்? Green horns... அரசியலைப் பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?" என்றெல்லாம் பெரிய அரசியல்வாதிகளிடமிருந்து விமரிசனங்கள் வரலாம்.

ஆனால் இவர்களின் இந்த ஆர்வம் என்னை பிரமிக்க செய்தது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி உள்ளது. இன்னும் சிலர் மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு பார்ப்பார்கள். ஆனால் யாருக்குப் போட்டு என்ன பிரயோசனம் நாம மாறவே போறதில்லே.... தேர்தலே ஒரு வேஸ்ட் என்ற ரீதியில் ஈசிச் சேரில் சாய்ந்து கொண்டு அல்லது டிவி பார்த்துக்கொண்டு ஓட்டுச் சாவடி பக்கமே போகாமல் வீட்டிலிருக்கும் ஒரு வர்க்கம் உண்டு. அது கணிசமான சதவிகிதம்.

" இந்த சதவிகிதம்தான் எங்களின் குறி" என்கிறார்கள் இவர்கள்.

அப்படிப் போடு !

படித்தவர்கள், திறமையுள்ளவர்கள், நண்பர்கள் சேர்ந்து ஆங்காங்கே வெற்றிகரமாக பலதுறைகளில் இறங்கும்போது ஏன் அரசியலில் / ஆட்சியில் குதிக்க தயங்குகிறார்கள் என்று தோன்றும். ஆக்கப் பூர்வமான சிந்தனையுள்ள பல இளைஞர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆர்வமாக உழைப்பதைப் பார்க்கும்போது இவர்கள் சக்தி பொது வாழ்வில் இன்னும் பரவலாக உபயோகப்படலாமே என்று தோன்றும்.

இதோ குதித்துவிட்டார்கள் இவர்கள்.

மனம் நிறைய வாழ்த்துவோம்.

பின்னர் சேர்த்தது:

லோக் பரித்ரன் பற்றி நான் எழுதியிருந்தது அப்படி ஒன்றும் அது சிலாகிக்க வேண்டிய நிகழ்வு அல்ல என்று சில விமரிசனங்களும் வந்தன. விமரிசகர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.

ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்டம் என்கிற ஒரு பொதுத் தாகம் இளைஞர்களை பொது வாழ்க்கைக்கு இழுத்தது. சுதந்திரம் பெற்றோம்; உன்னதமான அரசியல் தலைவர்களைப் பெற்றோம். பின்னர் சுதந்திர இந்தியாவில் எமர்ஜென்ஸி, மொழிப் பிரச்சனை, என்று பல விதங்களில் பொதுத் தாகங்கள் இளைஞர்களை பொது வாழ்விற்கு இழுத்தன. இன்று அப்படிப்பட்ட நாடு தழுவிய இன்னல் / crisis - குறிப்பாக சொல்லும்படி இல்லாவிட்டாலும், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், மத/ஜாதி வேறுபாடுகள், என்று கண்ணுக்குத் தெரிந்தும் / தெரியாத ஆயிரமாயிரம் பிரச்சனைகள் ஊடுருவி நிற்கும் சமயத்தில் வருங்காலத் தலைவர்கள் என்ற கேள்வி நிரப்படாமலேயே வெற்றிடமாக இருக்கிறது.

இந்த நிலையில் குடும்பம் மற்றும் இதர பின்வாசல்கள் வழியே தலைவர்களாக உருவாவதை நாம் எதிர்க்கிறோம். சினிமா போன்ற அடித்தள மக்களிடம் சென்றடையும் "தலைவர்களை" நாம் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இன மற்றும் ஜாதியின் பேரால் தலைவர்கள் உருவாகும் கலாசாரத்தை, இன்னும் ஜாதி பாகுபாடுகள் அதிகரிக்க காரணம் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்க்க நினைக்கிறோம்.

ஆக, தலைவர்கள் உருவாக இன்று பெரிதான / வலுவான ஒரு தூண்டுகோல் - சுதந்திரப்போராட்டம் அல்லது எமர்ஜென்ஸி போன்று - தூண்டுகோல் என்ன? குவியமாக ஒன்று இல்லை. ஆனால் பன்முனைத் தாக்குதல் நடத்த ஆயிரம் காரணங்கள் உள்ளன. பசி, ஏழ்மை, என்று ஒரு பக்கமும் அதீத செல்வம் என்று இன்னொரு புறமும் சமூக இடைவெளி விரிந்து கொண்டே போகிறது. ஊழல் நிர்வாகச் சீர்கேடுகளினால் இன்னொரு பக்கம் நாம் தினசரி வாழ்க்கையில் அல்லல்கள் பல சந்திக்க நேருகிறது. மக்களின் நடைமுறை வாழ்விற்கான அடிப்படை பிரச்சனைகளான நீர், சுகாதாரம், கல்வி என்று ஓட்டைகள் பல நிரப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் எந்த வாசலையாவது திறந்துவிட வேண்டாமா? ஆரோக்கியமான இளம் சக்திகள் பொது வாழ்வில் நுழைய?

இந்த எதிர்பார்ப்புதான் நான் இவர்களை ஆதரிப்பதற்கு காரணம்.

மீண்டும் பின்னர் சேர்த்தது

என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண்.

லோக் பரித்ரன் கட்சி உடைந்து விட்டது. முளைக்கும் முன்பே அழுகிய செடியாகிவிட்டது.

இவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமில்லை; இந்திய அரசியலின் தாக்கம் இங்கும் உள்ளது என்பது இப்போது புரிகிறது. மற்றபடி இளைஞர்களின் வரவை அரசியலில் ஆதரிக்கும் என் ஆவலில் / எதிர்பார்ப்பில் மண் என்பதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான்.

Tuesday, April 04, 2006

Elements - குறும்படம்.

காட்சி - ஏதோ ஒரு அறையில்... உலகில் எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கலாம்.


அவனுடைய பின் தலை முதலில் தெரிகிறது. நெருங்கிப் போகப் போக அவன் முன்னே இருக்கும் கணினி தெரிகிறது. வேகமாய், பட படவென்று கீ போர்டை அவன் தட்டும் ஒலி... சொல்லப்போனால் அந்த ஒலியைத் தவிர வேறு சப்தம் இல்லை. கணினி திரையில் விதம் விதமாக செய்திகள்/ எண்ணங்கள்/ விவரங்கள். அவன் கண்கள் கூர்ந்து மேய்ந்து கொண்டுள்ளன. கூடவே கைகள் பட படவென்று தட்டிக்கொண்டிருக்கின்றன.

திடீரென்று திரையில் ஒரு அறிவிப்பு. கணினி மின்சாரத் தடையினால் வேலை செய்வது நிற்கப்போகிறது என்று. அவன் முகம் பேயறைந்ததுபோல் ஆகிறது. சட்டென்று ஒன்றும் புரியாமல் மறுபடியும் அங்கும் இங்கும் கீ போர்டைத்தட்டுகிறான் - பதட்டத்துடன். பட்டென்று கணினி செயலிழந்துவிடுகிறது.

கூடவே அவனும்.

போதைப் பழக்கம் உள்ளவன் அது இல்லாமல் தவிப்பதுபோல் அவன் கைகள் நடுங்குகின்றன; முகம் வியர்த்து காலை நீட்டி கூரையைப் பார்த்துக் கொண்டு படுத்துவிடுகிறான். ஆனாலும் புரண்டு புரண்டு படுப்பவனுக்கு பிரமை தீரவில்லை. மறுபடி தூக்கிவாரிப்போட்டு எழுந்து உட்கார்கிறான். அறையைச் சுற்றிலும் பார்க்கிரான். கொத்துக் கொத்தாக செய்திதாள்கள். அனைத்திலும் ஒரே விதமான செய்தி -

technology world;
Terrorism of technology -
Technology swallows your life.
Man isolated.

இந்த ரீதியில் நிறைய செய்திகள். எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெறுமையாக அவற்றைப் பார்க்கிறான்.

மெல்ல அவன் முகத்தில் ஏதோ தீவிரம். அவன் விரல்கள் மெல்ல நகர்கின்றன. மறுபடி கீபோர்டில் வேகமாகத் தட்ட ஆரம்பிக்கிறான். எதிரே திரையில் ஒன்றுமில்லை - வெறும் இருட்டைத் தவிர. சற்று நேரம் கனமான அமைதி.

தொலைபேசி ஒலிக்கிறது. எடுத்துக் காதில் வைக்கிறான். " ஹலோ.... என்ன ஆளையே காணோ? சந்தித்து ரொம்ப நாள் போல ஆகிவிட்டது?" அந்த முனையில் நண்பன் யாரோ... இவன் பதில் பேசவில்லை. பேச முடியவில்லை. முயல்கிறான் ... ஹ்ஹ¤ம்.. முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தை / குரல் வரவில்லை.

அதிர்ச்சியடைந்து ஒரு காகிதத்தை எடுத்து I am...." என்று ஏதோ எழுத பார்க்கிறான். எழுத்தே மறந்துவிட்டாற்போல் இருக்கிறது. கோபத்துடனும் பதட்டத்துடனும் வேகமாக வெற்றுக் காகிதத்தில் கிறுக்குகிறான்.
தூக்கிப் போட்டுவிட்டு தலையில் கைவைத்தபடி அமர்ந்து விடுகிறான்.

நீண்ட அமைதிக்கு பின் சட்டென்று எங்கோ ஒரு குருவி கத்தும் ஓசை. தலை நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து அறைக் கதவைத் திறந்து பால்கனியில் நிற்கிறான்.

சட்டென்று வண்ணங்கள் தெரிகின்றன. நீல வானம்; கருத்த நீலத்தில் சுற்றிலும் மலைகள். கண்ணுக்கு எட்டியவரையில் பசுமை. காற்றில் செடி கொடிகள் ஆடும் ஓசை. தூரத்தில் எங்கோ சலசலக்கும் நீரின் சப்தம். கைகளைத் தலையில் அண்டக்கொடுத்து கட்டியபடி மூச்சை இழுத்துவிட்டு, புதிய காற்றை இழுத்து சுவாசித்து ரசிக்கிறான். முகத்தில் மெல்லிய கீற்றுப் புன்னகை.

சட்டையை மாட்டியபடி வெளியே நடக்க ஆரம்பிக்கிறான். தூரத்தில் சூரிய கிரணங்கள்; மலைகள் வானம் என்று ஒவ்வொன்றாக அவன் கண்களுக்குத் தெரிகின்றன. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாக ரசிக்கிறான். நடக்க நடக்க எதிரே ஒரு புது உலகம் விரிவதை உணர்கிறான்.

ஓடி ஓடி ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு ரசிக்கிறான். சலசலவென்று ஓடும் ஆற்றில் கால் நனைய நிற்கிறான் படுக்கிறான். முகத்தில் பளீரென்று நீரை வாரியடிக்கிறான். நீரைத் தொடும் விரல்களில் ஓடும் புத்துணர்ச்சியை ரசிக்கிறான். விரல்களை நீட்டி னீட்டி, ஆட்டி அசைத்து ரசிக்கிறான். தரையில் ஈர மண்ணைப் பிசைந்து மலை கட்டுகிறான். மண்ணில் படம் வரைய முற்படுகிறான். ஒரு சதுரம். கீழே ஸ்டாண்ட் போல. சே. மறுபடி கணினியின் படமல்லவா வரைகிறோம்? அழித்துவிட்டு வட்டம் வட்டமாக மலரின் படம் வரைகிறான். தன்னுடைய பூ படத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து வாய்விட்டு சிரிக்கிறான். தொண்டையிலிருந்து குரல் "எஸ்".......... என்று அழுத்தமாக வருகிறது. மீண்டும் "எஸ்....." தன் குரலைத் தானே ரசிக்கிறான்.

வண்ணங்கள் குலுங்கும் இயற்கையின் அழகை ரசிக்கும் அவனது பலவித பாவனைகள் freeze frame ல் காண்பிக்கப்படுகின்றன.

படம் முடிகிறது.

சுமார் 6 நிமிடங்கள் - அல்லது அதிக பட்சம் 10 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படம்.

பெயர் Elements. துஷார் பராஞ்ச்பாய் ( Thushar Paranjepe`) என்ற மென் பொருள் தொழில்முறையாளர் எடுத்தது. என்டிடிவியின் NDTV Profit சானலில் சினிமா கிளப் என்ற நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்றது. படம் முழுக்க ஒருவரி கூட இல்லை - நடுவில் வரும் தொலைபேசி நண்பனின் குரல் தவிர.

ஒற்றை வரியில் என் கருத்து.

அருமை.

Sunday, February 19, 2006

அன்பே சிவம்

நேற்று இந்தப் படம் பார்த்தவுடன் மனசில் நிறைய சிந்தனைகள் ஓடிற்று. பதிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் படம் முடிந்து மனசு சற்றுக் கனமாக இருக்கும்போது ஒன்றுமே எழுதத்தோன்றாமல் தூங்கிப்போய்விட்டேன். இன்று இந்தப் படம் பற்றி இரண்டுபேர் - பிரகாஷ், தருமி - ( பிறகு சேர்த்தது, டோண்டுவும் - கொஞ்சம் தாமதமாகதான் டோண்டுவின் பதிவைப் பார்த்தேன்.) என்னைப்போலவே அனுபவித்து பார்த்தவர்கள் எழுதியுள்ளார்கள். எனக்கும் இரண்டு வரியாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. இதோ என் கருத்து. மூன்று வாக்கியங்களில் :

அன்பே சிவம் படம் பார்த்தேன். இதுவரைப் பார்க்காதவர்கள் கட்டாயம் டிவிடி வாங்கிப் பாருங்கள்; ஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான அன்பே - அன்புதான் - அன்புமட்டுமேதான் - சிவம், விஷ்ணு, பிள்ளையார், ஜீஸஸ், அல்லா, ............ ..... ..... .... என்று புரிவதற்காகவாவது ! ( பாக்கிக் கடவுளர்கள் பெயர்களை அவரவர் நிரப்பிக்கொள்ள இடம் விட்டிருக்கேன்.) :-)

Monday, January 30, 2006

கவனித்தது, பாதித்தது, ரசித்தது.

கவனித்தது

மகாத்மா காந்தியின் நினைவு நாள். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான காந்தி சமாதியில் அஞ்சலி. நாற்காலிகளின் முன் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி மன்மோஹன் சிங் வைஷ்ணவ ஜனதோ மற்றும் ரகுபதி ராகவ ராஜாராம், பாட்டுகளுக்குக் கூடவே பாடியது, வாயசைப்பில் தெரிந்தது. கூடவே, அவர் அருகே இருந்த மூதாட்டி நன்றாகவேத் தூங்கிக்கொண்டிருந்ததையும் காமிராப் பார்த்துவிட்டது. இந்த மாதிரி பொது நிகழ்ச்சிகளில் வருபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அல்லது காமிராக்காரர்கள் தங்கள் லென்ஸைக் கொஞ்சம் அதட்டி வைக்க வேண்டும். கன்னா பின்னாவென்று சுற்றக்கூடாதென்று.

நிகழ்ச்சியில் அதிகம் கூட்டம் காணோம். அதுவும் விவிஐபிகள் உட்காரும் இடத்தில் தரையில் வெண் மெத்தைப் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இல்லாதிருத்தல் மூலம் சிறப்பு கவனத்தை ஈர்த்தவர் சோனியா காந்தி. ( Conspicuous by absence). இந்தக் காந்தி அந்தக் காந்தியை எப்படி மறந்தார்? காந்திஜி காங்கிரஸ் அமைப்பின் தூணாக, மக்களிடையேத் தூண்டுகோலாக / தேசத்தின் தந்தையாக இருந்தாரே தவிர எந்தப் பதவியிலும் கடைசிவரை இருக்கவில்லை. காங்கிரசில் அவர் சாதாரண உறுப்பினராகக் கூட பதிந்திருக்கவில்லை என்கிறது சரித்திரம். அதனால் protocol எதுவும் இல்லை என்பதால் இன்றைய காங்கிரஸ் தலைவர் அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லையோ?

ம்ஹ¤ம். எங்கேயோ இடிக்கிறது. தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்கிற ஒருவர் தேசத்தின் தந்தையாகக் கருதப்படுபவரின் நினைவு அஞ்சலியில் பங்கு பெற வேண்டாமா?

பாதித்தது

கேரளாவில் பெண்கள் நிறைய முன்னேறியுள்ளார்கள் என்று சென்ற வாரம் சசி தாரூர் பத்தியில் எழுதியதை ஆட்சேபித்துப் பலர் அவரைக் கேள்விக்கணைகளில் மாட்டுகிறார்கள். பெண்கள் தனியாக நடமாடமுடியாத அளவு பெண்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகிறது இங்கே. என்ன முன்னேற்றம் வாழ்ந்தது?" என்கிற ரீதியில் மனதை உருக்கும் விவரங்கள்.

ரசித்தது

என்டிடிவியில் இருந்து வெளியேறி ராஜ்தீப் சர்தேசாய் CNN - IBN ல் சேர்ந்தபின் " சபாஷ், சரியான போட்டி.." என்று கைத்தட்டுகிறார் ஊடகங்கள் பற்றி பத்தி எழுதும் செவந்தி நைனான்.

"...போட்டிப் போட்டுக்கொண்டு சுவாரசியமான நிகழ்ச்சிகளை வாரி வழங்குகிறார்கள். இவ்வளவு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை ( Constructive programmes) ஒரே சமயம் பார்த்து அலுத்துப்போய், எங்காவது Zoom சேனலுக்குப் போய் பூஜா பேடி, குட்டை ஆடை அணிந்து கொண்டு அரசியல்வாதிகளையும் போலீஸ்காரர்களையும் பேட்டி காணுவதைத் தேடிப்போய்விடுவோம் போலிருக்கு - ஒரு மாறுதலுக்கு" என்று சதாய்க்கிறார்.

Saturday, January 28, 2006

2020 பார்வை

இன்று CNN IBN ல் ஒரு நிகழ்ச்சிப் பார்க்க நேர்ந்தது. All the President's Children.

குடியரசு தினத்தை ஒட்டி, ஜனாதிபதி அப்துல்கலாமுடன் நிறைய பள்ளி மாணவர்களை அழைத்துப் பேச வைத்துள்ளார்கள். ஸ்ரீநகர், கௌஹாத்தி, போபால் என்று பல இடங்களிலும் வீடியோ தொடர்பு ஏற்படுத்திப் பேச வைத்துள்ளார்கள். சுவாரசியமாக இருந்தது.

மாணவர்களோடு உரையாடுவது எப்போதுமே ஜனாதிபதிக்குப் பிடித்த விஷயம் என்பதை அவரே பல முறை கூறுவது வழக்கம். தில்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள பரந்த இடத்தில் மேடைப் போட்டு இந்த இளையத் தலைமுறைக் கூட்டம். நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தது. மாணவர்கள் சரமாரியாகக் கேட்டதில் சில விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் கூறிய ஒரு பதில்: (கேள்வி என்ன என்பது சரியாக நினைவில்லை) " அரசியல் என்பது கொஞ்சம் அரசியல் - நிறைய நாட்டுக்கான வளர்ச்சி வேலைகள் என்று இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் 30 சதவிகிதம் அரசியலிலும், பாக்கி 70 சதவிகிதம் வளர்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் என்றவர் அதோடு நிறுத்தாமல், தொடர்ந்து "ஆனால் நிறைய அரசியலும் வளர்ச்சி வேலைகள் குறைச்சல் சதவிகிதம் என்று இருந்தார்களென்றால்...." என்று சிரித்தபடியே, கண்களில் குறும்பும் மிளிர, இழுத்தார். Tongue in Cheek Observation? :-)

ஒரு மாணவர் கேட்டார். ஜனாதிபதியான பின் நீங்கள் நினைத்தவற்றை நிறைவேற்றியுள்ளீர்களா? அப்துல்கலாம்: " இரண்டு விஷயங்கள் திருப்தியாக நிறைவேறியுள்ளன. ஒன்று என் 2020 திட்டப்படி இந்தியா வளர்ந்த நாடாக ஆக வேண்டும் என்ற என் கனவை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இரண்டாவது, நிறைய இளஞர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். இளைஞர்களிடம் நான் நம்பிக்கை வைப்பதற்கு மூன்று காரணங்கள். ஒன்று, அவர்களுக்கு பொதுவாகவே நம்பிக்கை அதிகம். செய்ய முடியும் என்ற நம்பிக்கை. இரண்டாவது, அவர்கள் மனதில் இன்னும் நிறைய பாதிப்புகள் ஏற்படாமல், மனதில் அதிகம் பாரபட்சம் ( Bias) இல்லாமல் இருக்கிறார்கள். மூன்றாவது அவர்களின் உற்சாகம். முன்னேற்றத்திற்கு உற்சாகம் மிக அவசியம். அது இளைஞர்களிடம் இருக்கிறது." கேட்க நிறைவாக இருந்தது.

இன்னொரு முக்கியமான கேள்வியும் பதிலும். ஒரு மாணவிக் கேட்டார். "பலவிதக் கலாசாரங்கள் வெளியிலிருந்து எங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்போது எப்படி இந்தியா தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு உலக அரங்கில் முன்னேறவும் முடியும்?" ஜனாதிபதியின் பதில் சற்று ஆழமாக, வித்தியாசமான அவதானிப்பாக இருந்தது. " நீங்கள் எப்படிபட்டக் கலாசாரத்தில் சூழ்ந்திருந்தாலும் நம் மரபணுவிலேயே ஒரு நெறி இருக்கிறது. There is a genetic value in our system. வெளியில் - நடை உடைகளில் எவ்வளவுதான் மாறினாலும், இந்தியர்களுக்கு என்று இருக்கும் இந்த மரபணு நெறிகள் நமக்கு சரியான / வெற்றிகரமானப் பாதையை வகுக்கும்."

Genetic value system ? சிந்திக்கத் தூண்டிய ஒரு கோணம்.

ஊழலை ஒழிக்க அவர் சொல்லும் வழி: " 50 மில்லியன் வீடுகள் / குடும்பங்கள் இருக்கின்றன என்று வையுங்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள உங்களைப் போன்ற குழந்தைகள் தங்கள் அப்பா /அம்மாவிடம் " லஞ்சமே வாங்காதீர்கள்" ஊழல் செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தால் பெரியவர்கள் மனம் திருந்த மாட்டார்களா? என்ன குழந்தைகளா, வேண்டுகோள் விடுப்பீர்கள்தானே?" என்று கேட்டவுடன், வழக்கம்போல் மாணவர்கள் கோரஸாக ஆமாம் போட்டார்கள். குழந்தைகள் என்றில்லை. சில சம்யம் பெரியவர்கள் கூட்டத்திலும் இப்படி கேள்வி கேட்டு கோரஸாக பதில் வாங்கும் அவரது ஸ்டைல் நமக்கு இன்று நன்றாகவே பழகிவிட்டது.

விளம்பர இடைவேளையில் அப்துல்கலாம் Quotes காண்பித்தார்கள். என்னைக் கவர்ந்த ஒன்று: "சிந்தித்தல் என்பது உங்களுடைய முதன்மையான முதலீடாக / சொத்தாக இருக்க வேண்டும். சிந்திக்காமல் செயல்படும் எந்தத் தனிமனிதரும், எந்த நிர்வாகமும் முன்னேறவே முடியாது."

இளைஞர்களிடையேயும் அப்துல்கலாம் என்றால் ஒரு அபிமானம் இருக்கவே செய்கிறது. அவரது வார்த்தைகள் மட்டும் இளையத்தலைமுறையினரிடம் முழுமையாக சென்றடையுமானால் 2020 வருடத்திற்குள், 2020 பார்வை சாத்தியமே.

Friday, January 27, 2006

அன்றும் இன்றும்

இதைத்தான் - அல்லது இது போன்று ஏதாவது ஒரு கட்டுப்பாட்டைத்தான் - அன்றே எதிர்பார்த்தேன்.

ஆனால் நிர்வாகிகள் என்ன செய்ய முடியும் என்று அன்று பலர் வாதிட்டனர். ஒரு சிலர் புரியாமல் பேசுகிறேன் என்ற தொனியில் கூட கருத்து வெளியிட்டனர். இந்தக் குறைகளைத் தமிழ்மணத்திடம் முறையிடுவதில் அர்த்தமில்லை என்றார்கள்.

இன்று I stand vindicated.

சுட்டிகளில் உள்ள முழு விவாதங்களையும் படியுங்கள். அன்றைய நிலை விளங்கும்.

Monday, January 16, 2006

வடிகால்கள்......??

உஷாவின் பதிவில் இருந்த கொசுவத்திச் சுருள், எனக்குள்ளும் நிறையப் பழைய ஞாபகங்களைக் கிளப்பிவிட்டது. பூடானின் உறைபனியில் வராந்தாவில் கைகள் உறைய உறையக் கனு வைத்துவிட்டு மறு நாள் எடுக்கப் போகும்போது பனிக்கட்டியாக உறைந்த இலைகளை எடுக்க முடியாமல் போனது... ஆப்பிரிக்காவில் பத்திரிகைக் கட் அவுட் பொம்மைகள் வைத்துக் கொலு வைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஸ்காட்லாந்த் "மாமிக்கு" தாம்பூலம் கொடுத்தது, என்று வரிசையாக ஏதேதோ நினைவுகள். ஆனால் இவற்றின் ஊடே மனசில் உஷாவைப் போல் கேள்வி. எப்பாடுபட்டாவது, பழக்கத்தை விடாமல், சம்பிரதாயமாகவேனும் நம் மனதில் பண்டிகைக் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறதே, ஏன்? பண்டிகைகள் கொண்டாடவில்லையென்றால் நம் சம்பிரதாயங்களிலிருந்து வழுவுகிறோம் என்று ஒரு உறுத்தலா? பழக்கங்களை விட்டுவிட்டால், நாம் பிறந்த வேரின் Identity யை இழந்து விடுவோம் என்ற பயமா?

புலம் பெயர்ந்தவர்களின் அடுத்தத் தலைமுறையினரின் பண்டிகைக் கொண்டாடும் மனோபாவம் எப்படியிருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.... பண்டிகைகள் கொண்டாடுவது ஒரு வாழ்க்கை முறை. ஒரே மாதிரியாக இல்லாமல், ஒரு சின்ன எதிர்பார்ப்பு, புத்தாடை, - உணவு, சுத்தம் செய்தல், அலங்கரித்தல் என்று சின்ன சின்ன வேலைகள் வாழ்க்கையில் கொஞ்சம் மாறுதலைக் கொடுக்கின்றன. ஒரு விதத்தில் இது ஒருப் புத்துணர்வையும் கொடுக்கலாம். இந்த மாதிரி சின்ன சந்தோஷங்களை இந்தத் தலைமுறையினர் இழக்கிறார்களா - அல்லது இன்றையக் கால ஓட்டத்தில் - மாறுதலுக்கு பல வடிகால்கள் இருக்கும்போது, பண்டிகைகளின் மூலம் புத்துணர்வும், மாறுதலும் தேவையில்லை என்று தோன்றுமோ?

கருத்துக்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 11, 2006

பதிக்க ஒரு விஷயம்

எதிரில் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிறுப்பு ஒன்றிலிருந்து யாரோ சற்று உரக்க பேசுவது கேட்டது. இன்னொரு குரல் கேட்கவில்லை. சரி யாரோ தொலைபேசியில் பேசுகிறார்கள் என்று எண்ணினேன். என் வேலையெல்லாம் முடிந்து சுமார் இரண்டு மணி நேரம் பொறுத்து அறை பக்கம் வந்தபோது இன்னும் அந்த குரல் அதேபோல் கேட்ட வண்ணம் இருந்தது. இத்தனை நேரம் தொலைபேசியில் பேச்சா என்று ஜன்னல் வழியே எட்டி பார்த்தபோது எதிர் மாடியில் உள்ளவர் ஒரு கண்னி முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது புரிந்தது. ஓ.. .., இணையத்தில் வெளி நாட்டில் இருகும் உறவினருடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்து போனது.
சென்னை விரைவில் ஒரு வயதானவர்கள் வசிக்கும் நகரமாகிவிடும் என்று ஒரு நண்பர் ஜோக்கடித்தார். அவர் அப்படி சொல்வதற்கு காரணம் வெளி நாடுகளில் குடியேறும் இளைஞர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே இங்கேதான் அதிகம்.

பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்க இங்கே பெற்றோர் இப்படி தினம் ஈ மெயில் இணையத் தொலைபேசி என்று நாளை ஓட்டுவது சகஜமாகிப் போன ஒன்று. று மாதத்திற்கு ஒரு முறை இவர்கள் பிள்ளைகளிடம் று மாதம் இருந்துவிட்டு வருவார்கள். நடுவில் பிள்ளைப் பேறு செய்ய என்று அம்மாக்கள் வேறு மாற்றி மாற்றி பெறு கால பணியில் செல்வதுமுண்டு. ( அமெரிக்க தூதரகத்தில் இதற்கு “பேறு கால விஸா” என்றே வேடிக்கையாக சொல்வதுண்டாம்.)

ஆனால் வெளி நாட்டில் வெகு காலம் இருக்க பலருக்குப் பிடிக்கவில்லை. “அங்கே ஏதோ தங்ககூண்டில் இருப்பஹ்டு போல் உள்ளது. எல்லோரும் வேலைகு போன பின் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள் அங்கே ஒரு fossil அதாவது உறைந்த உயிரினம் மாதிரி. ஏதோ அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக உட்கார்ந்திருகும் உணர்வு ஏற்படுகிறது. எனக்கு பேச நிறைய மனிதர்கள் வேண்டும். அதான் இங்கே வந்தால்தான் எனக்கு சரியாகிறது”. என்று சொல்பவர்கள் பலர்.
இதில் இன்னொரு கோணம் என்னவென்றால் வெளி நாட்டிலேயே பல வருடம் இருப்பவர்களுக்கு இங்கிருந்து போகும் பெற்றோர் அல்லது உரவினருடன் அதிகம் பகிர்ந்து கொள்ள ஒன்றுமிருப்பதில்லை. அவரவர் தங்கள் வாழ்க்கை முறையில் இருந்து விடுவதால் என்றோ சேரும்போது சிந்திக்கும் சிந்தனையில் வாழ்முறையில் என்று நிறைய இடைவெளி வந்து விடுகிறது. இதைத் தவிர்க்க ஒரு முக்கிய வழி தொடர்ந்து ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருக்க வேண்டும். தொலைபேசியில் இன்று பேசுவது சுலபமாகிவிட்டது. அடிக்கடி எண்ணங்களையும், தங்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், புகைப்படங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும்போது உறவுகளில் ஒரு சங்கடமான இடைவெளி விழாமல் இருக்கும்.

பின் குறிப்பு:

எப்போதோ எழுதிய ரொம்பப் பழைய பதிவு. ஆனால் புதிதாக வேறொன்று எழுத நேரமில்லை. புதுக் கருவிப்பட்டை, நிரல் துண்டு போன்ற சமாசாரங்களையெல்லாம் நிதானமாகப் படித்துவிட்டு, என் பக்கத்திலும் பொறுத்திய பின் ஒரு சோதனைப் பதிவு பதிக்க விஷயம் தேடினபோது அகப்பட்டது இது :-)

இப்பவும் சரியாகத் தெரியவில்லையென்றால் உதவித் தேட வேண்டியதுதான்.

Friday, January 06, 2006

"கஹானி...."

சில நாட்கள் முன்பு ஒரு கைவேலைகள் மற்றும் கலைப் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்றிருந்தேன். வீட்டிலேயே ஒரு பகுதியைக் கடையாக வைத்திருந்தார்கள். பொருட்களை வாங்கியப் பின் அந்தக் கடையின் சொந்தக்காரர் இன்னொரு பகுதியில் அவர்கள் பொம்மைகளாலும் இதர கைவேலைப் பொருட்களாலும் அமைத்திருந்த ஒரு ராமாயணக் காட்சிக்கு அழைத்துச் சென்று காட்டினார். குட்டிக் குட்டியாக பசுமையான வனமும், மலர்களும், ஆசிரமும் என்று அருமையாக இருந்தது. பெரிதாக ஒரு ஹனுமார் பொம்மை. மிகத் தேஜஸ¤டன் விளங்கிய இருவர் அவரைச் சங்கிலியால் கட்டி இழுத்துக் கொண்டு காட்சியளித்தனர். பின்னால் ஒரு குடிசை வாசலில் இருந்தப் பெண்மணி சீதைப் போலிருந்தது. ராமாயணக் காட்சி என்று அவர் முன்பே சொல்லியிருந்ததால் அந்தப் பெண் பொம்மை, சீதை என்று யூகிப்பதில் சிரமமில்லை. உடனே சட்டென்று மற்ற இரு ஆண்களும் ராம லக்ஷ்மணன் என்று மனம் யோசிக்கும்போதே சற்று நெரடியது. ராமாயணத்தில் ஹனுமாரை ராம லக்ஷ்மணர்கள் கட்டிப் போட்டதே கிடையாதே? இதென்ன கதை என்று தோன்றியது. எங்கள் முகத்தில் இருந்த கேள்விக்கு சிரித்தவாறு அவர் விடையளித்தார். அதெப்படிங்க இவர்கள் ராம லக்ஷ்மணர்களாக இருக்க முடியும்? ஹனுமாரைவிட இந்த உருவங்கள் சிறியவர்களாக இருக்கிறார்கள் பாருங்கள்." என்ற பின் புரிந்தது.

ஓ, இவர்கள் லவனும் குசனும் ! பிறகு கவனிக்கும்போது அவர்கள் பின்னால் ஒரு அலங்கரித்தக் குதிரையும் இருந்தது. அசுவமேதயாகக் குதிரை. சட்டென்று கதைப் புரிந்துவிட்டது. ஆனால் என் கூட வந்த மகனுக்குப் புரிய சற்று நேரம் ஆயிற்று. அவனுக்குத் தெரிந்த ராமாயணம் "அமர்சித்திரக் கதா" போன்ற சிறுவர் கதைப் புத்தகங்கள். ஆனால் பெரும்பாலானக் கதைப் புத்தகங்களில் இதிகாசங்கள் விரிவாக முழுவதும் இருப்பதில்லை.
சிறுவர்களுக்கு ஏற்றப் புத்தகங்களுக்கு இன்றும் பஞ்சம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் இந்தப் பஞ்சம் தமிழில் மிக அதிகம் என்று தோன்றுகிறது. இதிகாசங்களை விட்டால், தற்காலச் சிறுவர்களின் கற்பனைக்கும், ஆற்றலுக்கும் தீனி போடும் வகையில் புத்தகங்கள் அதிகம் கிடையாது. சென்னையில் இப்போது புத்தக கண்காட்சி நடை பெறுகிறது. கடைகளை அலசினால், இந்த நிலையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.

இப்போது இந்தச் சிந்தனையெல்லாம் இங்கே தோன்றக் காரணம், சென்ற வருடம் பாஸ்டனில் தொடங்கப்பட்ட ஒரு சிறுவர் பத்திரிகைப் பற்றி படித்ததுதான். இது, சிறுவர்களுக்காக, சிறுவர்களால், சிறுவர்களைப் பற்றி மூன்று இந்தியத் தாய்மார்களால் தொடங்கப்பட்ட ஒருப் பத்திரிகை. இன்று ஊடகத்துறையில் பலரது ஆர்வத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

" கஹானி" என்ற இந்திப் பெயரில் வரும் இந்தப் பத்திரிகையில் பெரும்பாலும் சிறுவர்கள் எழுதுகிறார்கள். பெரியவர்களும் சிறுவர்களுக்காக எழுதுகிறார்கள்.

வெளி நாடுகளில் வாழும் /வளரும் பல குழந்தைகள் பல்வேறு கலாசாரங்களுக்கிடையே குழம்பாமலும், வெளி நாட்டு சூழலில் தங்கள் பின்னணியைக் கண்டு கலங்காமல் யதார்த்தமாக வளரவும் உதவும் எண்ணத்துடன் இந்தப் பத்திரிகைத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பத்திரிகையை இணையத்தில் மேலாக ஒரு கண்ணோட்டம் விட்டேன். சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர் புத்தகங்கள் எழுதும் பல எழுத்தாளர்களும் எழுதியுள்ளார்கள். ஹாரிப்பாட்டர், எனிட் பிளைட்டன் போன்ற புத்தகங்கள் சிறுவர்கள் கவனத்தை ஆட்க்கொண்டிருக்கும்போது, இது போன்ற பத்திரிகைகள் நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான முயற்சி.


வெளி நாட்டில் வாழும் தமிழ்ச் சிறுவர்களுக்காக, தமிழில் இது போல் என்று, யார் தொடங்கப்போகிறார்கள் !??

தவிர, இங்கேயும் - தமிழ்நாட்டிலும் - சிறுவர்கள் புத்தகங்கள் / பத்திரிகைகள் அதிகம் காணோம். எனக்குத் தெரிந்தது கல்கி குழுவினரின் கோகுலம் ஒன்றுதான் பத்திரிகை. அந்தக் காலத்து அம்புலிமாமா என்றோ காணாமல் போய்விட்டது. ஆங்கிலத்திலும் கூட அவ்வளவாகக் காணோம். இன்று விதம் விதமாக தொழில் ரீதியாக, niche - பத்திரிகைகள் - வாகனங்களுக்கு, ரியல் எஸ்டேட், வணிகம் என்று பலவித துறை சார்ந்தப் பத்திரிகைகள் வாளர்ந்து வருகின்றன. பெண்களுக்கு என்று இருக்கும் ரகங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் சிறுவர்களுக்கு என்று / இளைஞர்களுக்கு என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

எதிர்கால சமுதாயத்தின் மீது நாம் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

Sunday, January 01, 2006

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
இரவுக்குப் பின்னே விடியல் வராமலேயா போய்விடும்? இதோ இன்னொரு விடியல் :-)

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

மிக்க நட்புடன்

அருணா